Madhini-Yamini! 2
மாயா-2
அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் மென்காதலுடன் கரை நனைக்கும் கடல் அலைகளுடன் அன்றைய சூர்யோதயம்!
அந்த உடைந்த பாலத்தினின்று பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
ஒளிக் கற்றைகளை வாரி இறைத்துக்கொண்டு ஆதவன் புறப்பட, அவனுடைய கிரணங்கள் மாதியினியின் முகத்தில் தெறித்து வர்ண ஜாலங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தது.
முந்தைய தினம் சிந்துஜாஸ்ரீயிடம் பேசிமுடித்து விடைபெற்று வெளியில் வந்ததும், வேதனையின் சாயல் அளவுகடந்து அவளுடைய முகத்தில் படிந்திருக்க, இறுகிப்போயிருந்தாள் மாதினி.
மயிலாப்பூரில் உள்ள அவளுடைய அலுவலகத்தில் அவளுடன் போய் இறங்கும் வரையிலும் கூட அவளது முகம் கொஞ்சமும் மென்மையுறவில்லை.
ஏனோ அவளுடைய அந்த முகம், யாமினியின் நினைவை அதிகம் மேலெழுப்பி ஜெய்யுடைய உறக்கத்தைக் கெடுத்திருந்தது.
மனதில் ஒரு பொறி தோன்ற, அது நடு நிசி என்பதும் அவன் நினைவில் இல்லை. அந்த நேரத்தில் தான் ஒரு பெண்ணை அழைக்கிறோம் என்பதும் அவனுக்கு நினைவில்லை. நொடிக்குள் அவளது கைப்பேசியின் கதவைத் தட்டியிருந்தான் ஜெய்.
முதல் ஒலியிலேயே "சொல்லுங்க ஜெய்!" எனத் தெளிவாக ஒலித்த அவளுடைய குரல் அவளுமே உறங்கவில்லை என்பதை அவனுக்குத் தெரிவிக்க, "ஏம்மா தூங்கலையா!" என்றான் மென்மையாக.
"ப்ச்.. தூக்கம் வரல ஜெய்! மனச என்னவோ அழுதிட்டு இருக்கு!
அதான் ஒரு கேஸை ஸ்டடி பண்ணிட்டு இருக்கேன்!" என்றாள் அவள்.
அவளுடைய நினைவையுமே யாமினிதான் ஆக்கிரமித்திருந்தாள் என்பது புரிந்தது அவனுக்கு!
"எங்க என்னன்னு எந்த கேள்வியும் கேக்காத; நாளைக்கு ஏர்லி மார்னிங் அரௌண்ட் பைவ்; ரெடியா இரு! உன்னை வந்து பிக் அப் பண்ணிக்கறேன்!" அவன் சொன்ன விதத்தில் மறுக்கத் தோன்றவில்லை அவளுக்கு.
அதிகாலை வீட்டின் வாயிலிலேயே தயாராகக் காத்திருந்தவளைத் தனது காரிலேயே அங்கே அழைத்து வந்திருந்தான்.
'சூரியன் உதிச்சா தாமரை மலருமாமே! இன்னைக்குத்தான் நேரில் பார்க்கறேன்!' என ஜெய் சொல்ல,
"கடல்ல தாமரையா! அது இங்க எங்க இருக்கு ஜெய்!" அவள் உண்மையாகவே வியந்துபோய் கேட்க, அவனது கைப்பேசியின் கேமராவை 'செல்ஃபி மோட்'இல் போட்டு அவளுக்கு அருகில் வந்து நின்று கொண்டு ஒரு க்ளிக் செய்தவன், "இதோ இங்க!" என அந்த திரையைக் காட்ட அவளது முகம் மேலும் மலர்ந்தது.
"ஜெய்!" எனப் பொய் கோபத்துடன் அழைத்தவள், "தேங்க்ஸ் ஜெய்! உண்மையாவே இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு!" என்றாள் அவள் ரசனையுடன்.
"இதை ப்ரோக்கேன் பிரிட்ஜ்னு சொல்லுவாங்க!" என்றவன், "வாலி படத்துல சோனான்னு ஒரு சாங் வரும் இல்ல; அதை இங்கதான் ஷூட் பண்ணியிருப்பாங்க!
அதுமட்டும் இல்ல நிறைய படம் இங்க ஷூட் பண்ணி இருக்காங்க.