top of page
Writer's pictureKrishnapriya Narayan

Maathini-Yamini [Final]

மாயா-12


சற்று நேரத்திற்கு முன் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த ஒருவன் இப்பொழுது உயிருடன் இல்லை என்ற செய்தி வீராவை அதிர்ச்சியின் விளிம்பில் கொண்டு நிறுத்தியிருந்தது.


அங்கே வந்துகொண்டிருந்த பொழுது அவனது வாகனம் விபத்துக்குள்ளாகி, அந்த இடத்திலேயே பிரபுவின் உயிர் பிரிந்தது என்ற செய்தி அவனுக்கு வந்திருக்க, அந்த அதிர்ச்சி விலகாமல் நரேனை நோக்கிப் போனவன் அந்த தகவலை அவனிடம் சொன்னான்.


அதற்கு அவன், "ப்ச்! கொஞ்சம் பார்த்து நிதானமா வண்டியை ஓட்டிட்டு வந்திருக்கலாம் அவன்" என அலுப்பாகச் சொல்லிவிட்டு, "இப்ப யார் எனக்கு சிந்துஜாவை அரேஞ் பண்ணுவாங்க" என சர்வசாதாரணமாகக் கேட்க, உள்ளுக்குள்ளே கொதித்துப் போனான் வீரா.


"சின்னவரே! நம்ம ஆள் இன்னொருத்தன் செத்து போயிருக்கான், உங்களுக்குக் கொஞ்சம்கூட வருத்தமாவே இல்லையா?" எனக் கேட்டான் அவன்.


ஏற்கனவே இரண்டுபேரை இழந்த நிலையில் அவனுக்கு வலது கரமாகச் செயல்பட்டவன் இல்லாமல் போன துயர் அவனுக்கு இருக்கவே செய்தது.


மற்றொருபக்கம் துயரத்தைக் காட்டிலும் பயம் அவன் மனதைச் சூழ்ந்துகொண்டது.


சதா இறப்பதற்கு முன் யாமினின் ஆன்மாதான் பழிவாங்குகிறது என அவன் சொன்னதை, அதுவும் அவளைத் தான் நேரில் பார்த்ததாகவே அவன் சொன்னதை அன்று நம்பாமல் போனவனால் இன்று நம்பாமல் இருக்க இயலவில்லை.


அதுவும் அன்று காலை அந்த பெண் மாதினி பிரபுவை சர்வ சாதாரணமாகத் தூக்கி வீசியதைப் பார்த்தவன் அதிர்ந்தே போனான்.


அனைத்தும் சேர்ந்து மனதை ஆட்டிப்படைக்க நரேனின் இந்த அலட்சியம் கொடுத்த கோபத்தில் அவன் அப்படி கேட்கவும், "இதுல வருத்தப்பட என்ன இருக்கு?


பணத்துக்காகத்தான நீங்க எல்லாரும் என் கூட இருக்கீங்க?


அந்த பணத்தைத் தூக்கி எறிஞ்சா இவனை மாதிரி, உன்னை மாதிரி இன்னும் நூறு பேர், ஆயிரம்பேர் எனக்கு கிடைப்பாங்க!


இதுல சென்டிமென்ட்ஸ் அண்ட் பெர்சனல் பாண்டிங் எதுக்கும் இடமே இல்ல" என்றான் நரேன் ஒரு அலட்சியமான திமிருடன்.


அவன் சாதாரண நிலையிலிருந்தால் தேன் தடவிய வார்த்தைகள் வந்திருக்கும்.


பிரபுவின் மரணத்திற்காகத் துக்க நாடகம் கூட ஆடியிருப்பான்.


ஆனால் அவனுக்குள் இறங்கியிருந்த போதை அவனது உண்மையான முகத்தை வீராவுக்கு காண்பித்தது.


ஓரளவுக்கு அவனைக் கணித்து வைத்திருந்தாலும் இந்த அளவுக்கு ஒரு மோசமான நடத்தையை அவனிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை வீரா.


தானும் ஒன்றும் அவ்வளவு நல்லவன் இல்லையென்றாலும் நரேனுக்கு அதி விசுவாசமானவன் அவன்.


அந்த விசுவாசம் நொறுங்கி தூள் தூளாக ஆகிக்கொண்டிருந்தது.


அவனிடம் மேற்கொண்டு பேச விரும்பாமல் மௌனமாக அங்கிருந்து சென்றான் வீரா.


'சிந்துஜா ஸ்ரீ' எனத் தொடங்கி எதோ குளறலாக அந்த நரேன் உளறிக்கொண்டிருப்பது அவன் செவிகளில் ஒலித்துத் தேய்ந்து போனது.


***


அடுத்த நாள் காலை ஜெய் மாதினியின் கைப்பேசி எண்ணிற்கு அழைக்க அந்த அழைப்பு ஏற்கப்படவில்லை.


மறுபடி இரண்டு முறை முயன்றும் அழைப்பு ஏற்கப்படாமல் போகவே அதில் அச்சம் மேலோங்கச் சாந்தா பாட்டியின் எண்ணிற்கு அழைத்தான் அவன்.


"குட் மார்னிங் மாப்ள! " என உற்சாகமாகவே ஒலித்தது பாட்டியின் குரல்.


"என்ன பாட்டி! உங்க பேத்தி போன எடுக்க மாட்டேங்கறா?" என அவன் எதார்த்தமாகக் கேட்க, "ஓஹோ! அதான் எனக்கு போன் பண்ணியிருக்கீங்க!' என சற்று கிண்டலாகச் சொன்னவர், "அவ பொங்கல் வெச்சுட்டு இருக்கா மாப்ள! அதான் போன எடுக்கல!" என்றார் அவர்.


உள்ளே நிம்மதி பரவ, கொஞ்சம் சிரிப்புடன், "இப்ப அவ எப்படி இருக்கா பாட்டி?" என அவன் கேட்க, "நீங்க ஊருக்கு கிளம்பின உடனே ரூமுக்குள்ள போய் பூட்டிட்டு படுத்தவதான்! இன்னைக்கு விடியகாலைலதான் எழுந்து வந்தா!


இப்ப நல்லாவே சுறுசுறுப்பா பொங்கல் வெச்சிட்டு இருக்கா" என்றார் அவர்.


ஆனால் கிடைத்த இடைவேளையைப் பயன்படுத்தி யாமினியாக அவள் அங்கிருந்து பறந்துபோய் திரும்பவந்ததை அறியவில்லை ஒருவருமே!


அதனால் அங்கே மகிழ்ச்சி மட்டுமே குடியிருந்தது.


***


அவனது நிழலாக இருந்தவனின் மரணம் கொடுத்த வலியில் இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் தவித்த வீரா, அன்று காலை பிரபுவின் உடலைப் பெற்றுக்கொள்ள அரசு பொது மருத்துவமனையில் உள்ள 'மார்ச்சுவரி'க்கு வந்திருந்தான்.


பிரேதப் பரிசோதனை முடிந்த்தும் பிரபுவின் உடலைப் பெற்று, உடனிருந்து ஆம்புலன்சில் ஏற்றிவிட்டு அவன் திரும்ப, அவனை நோக்கி வந்த பிரபுவின் அப்பா அவனது சட்டையைக் கொத்தாகப் பிடித்து, "உன்னாலதான அவனுக்கு இந்த நிலைமை? இந்த மோசமான பிழைப்பை விட்டுடுன்னு சொன்னா கேக்கலையே அவன்.


உன் மேல இருக்கற விசுவாசத்தாலதான் இப்படி உயிரை விட்டான்" என அவனை உலுக்கி எடுத்தார்.


அப்பொழுது அங்கு வந்த செல்வம் அவரை சமாதானப் படுத்தி அமரர் ஊர்தியுடன் அனுப்பி வைத்தார்.


பின் வீராவைத் தனியாக அழைத்துச் சென்றவர், “இப்ப நடந்ததும் ஆக்சிடண்ட் போலத்தான் இருக்கு; கொலைதான்னு நிரூபிக்கற மாதிரி எந்த எவிடன்சும் கிடைக்கல; அவங்க எல்லாருமே ஏற்கனவே ட்ரக் அடிக்ட்ஸ் வேற; அது போஸ்ட்மார்டம்ல நல்லாவே தெரியுது” என்று கூற,"இல்ல மிஸ்டர் செல்வம்; அது ஆக்சிடென்டனா அந்த பர்டிகுலர் இடத்துலயே அந்த ஆக்சிடெண்ட்ஸ் நடக்க என்ன காரணம்?" என கேட்டான் வீரா.


அதற்கு என்ன பதில் சொல்வது என புரியாமல் அவர் அவனை ஏறிட, "இது அந்த யாமினியோட வேலை சார்.


அவதான் பழிவாங்கறா! சதா சொன்ன போதே நான் இதை நம்பலை; ஆனா நடக்கறதையெல்லாம் பார்க்கும்போது என்னால நம்பாம இருக்க முடியல" என்றான் அவன்.


"இப்ப என்ன செய்யலாம்னு இருக்கீங்க வீரா?


வேணா இந்த குறி சொல்றவங்க; பேய் ஓட்றவங்க இப்படி யார்கிட்டயாவது போகலாமா?" என எரிச்சல் குரலில் செல்வம் எகத்தாளமாகக் கேட்கவும்,


"என்ன சார்! என்னை பார்த்தால் கிண்டலா இருக்கா?" என உறுமியவன், "நான் அப்ரூவரா மாறிடலாமான்னு பாக்கறேன்!


அப்பகூட அவ என்னை விடுவாளான்னு தெரியல' என்று முடித்தான் வீரா.


அரண்டுதான் போனார் செல்வம் .


"யோவ்! உயிரோட இருக்கணும்னு எண்ணமே இல்லையா உனக்கு?" என மரியாதை பன்மையை எல்லாம் கைவிட்டவராகப் பதறிய செல்வம், "நீ மட்டும் அப்படி செஞ்ச; அந்த பொண்ண கொளுத்தின மாதிரி நம்ம ரெண்டு போரையும் உசுரோட கொளுத்திடுவார் சின்னவர்! நீ கொஞ்சம் அடங்கு!" என அவனை எச்சரிக்கும் தொனியில் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.


***


சற்று நேரத்திற்கெல்லாம் நரேனுடைய வீட்டிற்கு வந்தவர், வெகு பவ்வியமாக அவனுடைய அப்பா செல்வகுமாருக்கு முன்பாக நின்றிருந்தார் செல்வம்.


பிரபல அரசியல் கட்சியில் அடிமட்டத்திலிருந்து மேலே வந்து அமைச்சராக இருந்தவர் அவர்.


பல தொழில்களைத் தொடங்கி அவற்றிலும் வெற்றி கண்டவர்.


உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கும் அவரிடம் நடந்துகொண்டிருக்கும் அனைத்தையும் சுருக்கமாகச் சொன்னவர், "அய்யா எவ்வளவோ வார்ன் பண்ணி பார்த்துட்டேன்;


நான் சொல்ற எதையும் நம்ம சின்னவர் கேக்கறாப்பல இல்ல.


அவர் சொல்றத எல்லாத்தையும் அப்படியே கண்ணை மூடிட்டு செய்ய அந்த வீரா இருக்கறதால, அந்த துணிச்சல்லதான் எல்லாத்தையும் செஞ்சிகிட்டு இருக்கார்.


ஆனா இப்ப வீரா என்னடான்னா அப்ரூவரா மாறப்போறதா சொல்றான்.


ஏற்கனவே அந்த பொண்ணு யாமினிய கொலை செய்ய சொன்னதால நம்ம சின்னவர் மேல அவனுக்கு கொஞ்சம் வருத்தம்.


இப்ப அது அதிகமாகியிருச்சு போல இருக்கு.


இதனால எல்லாருக்குமே பிரச்சனைதான் வரும்!


உங்க உடல்நிலை இப்படி இருக்கும்போது இதையெல்லாம் வந்து சொல்ல வேண்டாம்னு நினைச்சேன்.


ஆனா சொல்லாம இருந்தாலும் தப்பா போயிடுமோன்னு பயமா இருக்கு! அதனாலதான் உடனே வந்து சொல்லிட்டேன்!


தப்பா இருந்தா மன்னிச்சிருங்க!" என முடித்தார் அவர்.


அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ளவே இங்கே வந்து இவ்வளவு தூரம் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது புரிய, அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர் உணர்ச்சி துடைத்த முகத்துடன், 'போ' என்பதுபோல் ஜாடை செய்யவும் இயலாமையுடன் அங்கிருந்து அகன்றார் செல்வம்.


உடனே அவருடைய உதவியாளரை அழைத்த செல்வகுமார், "அந்த வீரா நம்பர் உன்கிட்ட இருக்கா" என்று அதிகாரமாகக் கேட்க, "இருக்குங்க அய்யா" என்றார் அவருடைய உதவியாளர்.


'கால் பண்ணு' என அவர் ஜாடை செய்ய அடுத்த நொடி வீராவை அழைத்தவர், "அய்யா உங்க கிட்ட பேசணுமாம்; லையன்லேயே இருங்க கொடுக்கறேன்" என்று சொல்லிவிட்டு அலைபேசியை அவரிடம் கொடுக்க, யோசனையுடன், "சொல்லுங்க அய்யா! நல்லா இருக்கீங்களா" எனக் கேட்டான் அவன்.


"ஏன் உசுரோட இருக்கோம்னு நினைக்கற அளவுக்கு நல்லா இருக்கேன்" என அவர் பதில் சொல்ல மௌனம் காத்தான் வீரா.


"நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிருச்சு போலிருக்கு" என்றவர், "இனிமேல் நீ நரேனுக்காக எதுவும் *டுங்க வேண்டாம்!


"மொதல்ல இங்க இருந்து கிளம்பி கொஞ்ச நாள் நம்ம ஏற்காடு கெஸ்ட் ஹவுஸ்ல போய் இரு.


நான் சொன்ன பிறகு இங்க வந்தா போதும்" என அவர் முடிவாகச் சொல்ல, "அய்யா!" என இழுத்தான் அவன்.


"நீ எதுவும் பேச வேண்டாம்; நாளைக்கே கிளம்பிடு!' என்று கட்டளையாக ஒலித்தது அவர் குரல்.


மறுத்துப் பேச துணிவின்றி வேறு வழியில்லாமல் அவன், "சரிங்க அய்யா" என அதற்கு ஒப்புக்கொண்டான்.


“ஏய் இனிமேல் இந்த போன் வேணாம், உனக்கு யூஸ் பண்ண வேற போன் தர சொல்றேன்; இப்பவே வந்து வாங்கிக்கோ” என்று அவர் கூற, "சரிங்கய்யா!" என்றான் வீரா ஒரே வார்த்தையாக.


அதைத் தவிர வேறு வாய்ப்பே இல்லை என்ற நிலையில் வீட்டிலிருந்து கிளம்பினான் அவன்.


மாயா-13


யாமினியைப் பற்றிய பயம் வேறு புத்தியைப் பேதலிக்கச் செய்துகொண்டே இருந்தது.


முதலில் யார் யார் மீதோ ஏற்பட்ட கோபம் பின் தன் மீதே உண்டானது அவனுக்கு.


அவனுடைய இந்த இழிவான பாதையில் எத்தனையோ பெண்களைக் கடந்து வந்திருக்கிறான்.


ஆனால் அந்த பெண் யாமினியை ஏனோ மிகவும் பிடித்துப்போனது அவனுக்கு.


நேர்மையாக அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என எண்ணினான்.


நரேன் சொன்னதற்காக மட்டும் அவன் அவளைக் கொல்ல எண்ணவில்லை.


'எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இருக்கு! என அவள் சொல்லும்போதே வன்மம் சிறு தீ பொறி போலத் தோன்றி இருந்தது அவன் மனதில்.


அதை ஊதி பெரிதாகியது, 'அவளால உனக்கு எந்த பிரயோஜனமும் இல்ல' என நரேன் சொன்ன வார்த்தை.


அந்த வார்த்தைகள் இவனைத் தூண்டி விடவே அவன் அழகாகப் பயன்படுத்தினான் என்பதை அப்பொழுது உணரவில்லை வீரா!


ஆனால் இப்பொழுது அது உறைத்தது அவனுக்கு.


இதுவரை நரேன் போன்ற ஒருவனுக்காக எவ்வளவு கீழ்த்தரமான காரியங்களைச் செய்துகொண்டிருந்தோம் என்ற எண்ணம் தோன்றி அவனது குற்ற உணர்ச்சியை மிகைப் படுத்தியது.


அப்பொழுது பெட்ரோல் வாடை வருவது போல் தோன்ற, பயத்துடன் காரிலிருந்து இறங்கி அதன் 'பெட்ரோல் டேங்க்'கை அவன் சோதிக்க, எல்லாமே சரியாக இருக்கவே மறுபடியும் வாகனத்தில் ஏறி அவன் அதைக் கிளப்ப, அது பழுதாகி இருந்தது.


மறுபடியும் திறந்துகொண்டு கீழே இறங்கலாம் என அவன் முயற்சி செய்ய, அந்த காரின் கதவு திறக்க இயலாத வண்ணம் 'லாக்' ஆகி இருக்கத் தீயில் கருகும் வாடை அவனது நாசியை நிறைத்தது.


மூச்சுக்குப் போராடியவன் ஜன்னல் கண்ணாடிகளைத் திறக்க முற்பட அதுவும் அவனை கைவிட்டது.


தூரத்தில் மின்னல் போன்ற ஏதோ ஓர் ஒளி அவனை நோக்கி வருவது போலே தோன்ற பீதியில் உறைந்தே போனான் வீரா.


அந்த ஒளி உருவம் அவனை நெருங்கி வர, அலறினான் அவன்! "யா.. மி.னீஈஈஈஈ!"


அந்த ஒளி அவனது காரின்மீது பட்ட அதே நொடி அது தீக்கிரையானது வீராவுடன் சேர்ந்து.


***


மகனுக்காகவும் வீராவுக்காகவும் காத்திருந்தவர் அவர்கள் இருவருமே வராமல் போக ஓய்ந்தே போனார் செல்வகுமார்.


நெடு நேரக் காத்திருப்புக்குப் பிறகு நள்ளிரவில் திருடன் போல வீட்டிற்குள் நுழைந்த நரேன் நேராக அவனுடைய அறை நோக்கி போக, "சின்னவரே! ரொம்ப நேரமா அப்பா உங்களை பார்க்கணும்னு காத்துட்டு இருக்காரு!' என அவனைத் தடுத்தார் அவருடைய உதவியாளர்.


"காலைல பாக்கறேன்னு சொல்லுங்க! ரொம்ப டயர்டா இருக்கு" என்றான் அவன் ஒரு அலட்சியத்துடன்.


"இல்ல சின்னவரே! உங்களைக் கண்டிப்பா வந்து பார்க்கச் சொன்னார்" என அவர் உள்ளே போன குரலில் சொல்ல, ஏதோ சிடுசிடுத்துக்கொண்டே அவனது அப்பாவின் அறை நோக்கிப் போனான் அவன்.


அவன் உள்ளே நுழைந்ததும் கோபத்துடன் கத்தி தீர்த்தவர் மறுத்து அவன் பேசிய எதையும் காதில் வாங்காமல், "சிங்கப்பூர் போக உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் பிளைட் டிக்கட் அரேஞ் பண்ண சொல்லியிருக்கேன்;


ஏர்லி மார்னிங் மூணு மணிக்கு பிளைட்!


நீ முதல்ல கிளம்பற வழியைப் பாரு.


ஒரு மூணு மாசத்துக்கு உன் மாமியார் வீட்டில இரு. எதுவா இருந்தாலும் அப்பறம் பார்த்துக்கலாம்' என்றார் கட்டளையாக.


"அப்பா! காலேஜ்; மத்த பிசினெஸ் எல்லாம் பார்க்கணும்" என அவன் இழுக்க, "இப்ப ஒரு வருஷமாதான நீ இதையெல்லாம் கவனிச்சுக்கற; இவ்வளவு நாள் நான்தானே பார்த்துட்டு இருந்தேன்; எல்லாம் எனக்கு தெரியும்" என்றவர், "மறுத்து பேசினா மொத்த ப்ராபர்டீசையும் உங்க அக்காவுக்கும் மாப்பிள்ளைக்கும் கொடுத்துடுவேன்! ஜாக்கிரதை" என அவனை எச்சரிக்க, அந்த மிரட்டல் மட்டுமே வேலை செய்தது அவனிடம்.


விருப்பம் இல்லாமல் போனாலும் அவருடைய நிர்ப்பந்தத்திற்கு இணங்கினான் நரேன்.


அவன் அங்கிருந்து செல்லவும், அப்பொழுது சரியாக செல்வகுமாருடைய உதவியாளருடைய கைப்பேசி ஒலிக்க, அது கொடுத்த தகவலில் பேய் அறைந்தாற் போன்று ஆனார் அவர்.


வீரா விபத்தில் இறந்துபோனதாக அவருக்குத் தகவல் வந்திருந்ததே அதற்கு காரணம்.


அவனது முக மாற்றத்தை உணர்ந்து, 'என்ன?' என்பதுபோல் செல்வக்குமார் கேட்க, "வீரா இங்க வந்துட்டு இருக்கும்போது அவனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. ஸ்பாட் அவுட்டாம்; இன்ஸ்பெக்டர் செல்வம் போன் பண்ணாரு' என அந்தத் தகவலை அவரிடம் சொன்னான் அவன் தயக்கத்துடன்.


அதிர்ச்சியில் தன் நெஞ்சை நீவி விட்டுக்கொண்டே, "நல்லவேள நரேன் இங்க இல்ல!" என்றவர், "அவனுக்கு இந்த தகவல் இப்போதைக்கு தெரிய வேண்டாம்! செல்வத்துக்கிட்ட சொல்லி வீராவோட செல்போனை சுவிட்ச் ஆப் பண்ணிட சொல்லு" என்று அந்த பிரச்னையை தற்காலிகமாக மூடி மறைத்தார் அவர்.


அது எதையும் அறிந்துகொள்ளாமல் சில மணி நேரத்தில் சிங்கப்பூர் நோக்கி பயணப்பட்டான் நரேன்.


***


அவளுடைய வேலை காரணமாக அவள் சென்னைக்குச் செல்லவேண்டும் என மாதினி பிடிவாதம் பிடிக்க, மறுக்க வழி இன்றி அதற்கு ஒப்புக்கொண்டனர் பெரியவர்கள் அனைவரும்.


அவளைத் தனியே விட விரும்பாமல் அவளுடைய அம்மா அப்பா இருவரும் அவளுடன் மாம்பலத்திற்கே வந்துவிட ஜெய் ஏதும் மறுத்துக் கூறவில்லை.


ஆனால் யாமினி வார்த்தையாக அவள் 'பிப்ரவரி பதினான்கு' வரை அவளைக் கொன்றவர்களுக்குக் கெடு வைத்திருக்கிறாள் என்பது தெரிந்ததால் ஏதேதோ காரணங்களைச் சொல்லி திருமணத்தை மூன்று மாதங்கள் தள்ளிப் போட்டிருந்தான் அவன்.


பொங்கலன்று அவளைப் பார்த்ததுதான். அதன் பிறகு மாதினியை அவன் சந்திக்க முயலவே இல்லை.


எப்பொழுதாவது அவளுடன் கைப்பேசியில் பேசுவதுடன் சரி.


அந்த நாட்களில் யாமினியின் ஆளுகைக்குள் இல்லாமல் இருந்த மாதினிக்குத்தான் சற்று ஏமாற்றமும் குழப்பமுமாகவே இருந்தது.


ஜெய்யிற்கு அந்த திருமண ஏற்பாட்டில் குறிப்பாக அவள் மேல் விருப்பம் இல்லாத காரணத்தால்தான் அவன் அப்படி நடந்துகொள்கிறான் என்றே நம்பினாள் அவள்.


அவளது தொழிலில் அவள் தன்னை முழுவதுமாக புதைத்துக்கொண்ட போதிலும் நாட்கள் நத்தை வேகத்தில் ஊர்வதுபோல்தான் இருந்தது அவளுக்கு.


அவனுடைய ஆட்டத்தை மொத்தமாக ஒடுக்கி நரேனை வீட்டு சிறையில் இருப்பதுபோலவே வைத்திருக்க ஏற்பாடு செய்திருந்தார் செல்வகுமார்.


அதனாலேயே முழுதாக ஒரு மாதம் கூட அவனால் சிங்கப்பூரில் தாக்குப்பிடிக்க இயலவில்லை.


என்னதான் வீராவின் மரணம் பற்றிய செய்தி அவனுக்குத் தெரியாமல் அவர் பார்த்துக்கொண்டாலும் சில தினங்களுக்குள்ளாகவே ஏதோ ஒரு விதத்தில் அது அவனுக்குத் தெரிந்துதான் போனது.


ஆனால் யாமினியின் ஆன்மா பழிவாங்குகிறது என்பதை அவன் நம்பத் தயாராக இல்லை.


அதற்குப் பின்னால் அவளைப் போன்றே இருக்கும் மாதினிதான் இருக்கிறாள் என்ற முடிவுக்கு வந்தவன் சிங்கப்பூரிலிருந்தபடியே அவனுக்கு நம்பிக்கையாக ஆட்கள் மூலம் அவளைப் பற்றிய தகவல்களை அறிந்துகொண்டான்.


அவளுக்கு ஜெய்யுடன் திருமணம் நிச்சயம் ஆகி இருப்பதும் தெரிய வர, அவனைத்தான் யாமினி திருமணம் செய்து கொள்வதாக இருந்தாள் என்பதும் கூட தெரிந்தது.


ஜெய்யுடன் சேர்ந்துகொண்டு அவள்தான் சிந்துஜாஸ்ரீக்கும் உதவினாள் என்பது வேறு சேர்ந்துகொள்ள அவர்கள் இருவரையும் கொல்லவேண்டும் என்ற அளவிற்கு உச்சபட்ச ஆத்திரம் உண்டானது அவனுக்கு.


செல்வகுமாருக்குத் தெரியாமல் அங்கிருந்தபடியே அவர்களைத் தீர்த்துக்கட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்தான் நரேன்.


***


பிப்ரவரி 13...


ஜெய்கிருஷ்ணாவை சந்திக்க அவனுடைய வீட்டிற்கே வந்திருந்தாள் மாதினி.


அவனுடன் பேச முயன்று, அவனை நேரில் சந்திக்க முயன்று தோற்றுப்போனவள் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அவனைத்தேடி அங்கே வந்தாள்.


அவனுடைய அம்மா அப்பா இருவரும் திருமண பத்திரிகைகள் கொடுக்க அவர்களுடைய சொந்த ஊருக்குச் சென்றிருக்க ஜெய் மட்டும் வீட்டில் தனிமையிலிருந்தான்.


அவள் அங்கே வருவது இதுதான் முதன்முறை இல்லை என்றாலும், லேசாக இருள் பரவத் தொடங்கியிருந்த அந்த மாலை நேரத்தில் அவளை அங்கே எதிர்பார்க்கவில்லை அவன்.


அன்றைய தேதி வேறு அவனுக்குள் அதிர்வை ஏற்படுத்த அவள் மாதினியாக இருக்கிறாளா இல்ல யாமினியாக வந்திருக்கிறாளா என்ற கேள்வியுடனேயே அவளை எதிர்கொண்டான் அவன்.


பெயரைக்கூடக் குறிப்பிடாமல், "என்னம்மா இந்த நேரத்துல வந்திருக்க?" என அவன் வெகு ஜாக்கிரதையாகக் கேட்க, அவன் தன் பெயரைச் சொல்லக்கூட விரும்பவில்லை என்றே தோன்றியது மாதினிக்கு.


"ஜெய்! நீங்க இப்படி பிஹேவ் பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல ஜெய்!


என்னை பிடிக்கலைன்னா; பிடிக்கலன்னு ஓப்பனா சொல்லிடுங்க!" என்றவள், "எல்லாரும் மனசு கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல; இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்" என்றாள் அழுத்தமாக.


"லூசு மாதிரி உளறாத; நான் கொஞ்சம் பிசி; அவ்வளவுதான்" என்றான் அவன் உணர்வற்ற குரலில்.


ஓரளவுக்கு மேல் பேசவும் தயக்கமாக இருந்தது அவனுக்கு.


"ப்ச்... நேர்ல வந்தாலாவது எதாவது சொல்லுவீங்கன்னு பார்த்தேன்; போன்ல பேசற மாதிரி அளந்துதான் பேசறீங்க! நான் இங்க வந்ததே வேஸ்ட்! நடக்கறது நடக்கட்டும்; பை" என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியில் வந்தாள் மாதினி.


அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது அவனுக்கு.


அவள் வாகனத்தில் போய் உட்கார்ந்துகொண்டு அதைக் கிளப்ப எத்தனிக்க, "இந்த நேரத்துல நீ தனியா போக வேண்டாம்!


இரு நானும் வரேன்" என்றான் அவன் அக்கறை தொனிக்க.


"ஒண்ணும் வேண்டாம்; எங்க வீட்டுக்கு போக எனக்கு வழி தெரியும்" என முறுக்கிக்கொண்டாள் அவள்.


ஆனால் அவளுடைய மஞ்சள் நிற வாகனம் அங்கிருந்து கிளம்ப மறுத்து அவளுக்கு எதிராகச் சதி செய்ய, அத்துடன் அவள் போராடுவதைப் பார்த்துப் புன்னகை அரும்பியது ஜெய்க்கு.


"வெயிட் பண்ணு; இதோ வந்துடறேன்" என்றவன் உள்ளே சென்று அவனது இருசக்கர வாகனத்தின் சாவி மாறும் தலைக் கவசத்துடன் வந்தான்.


அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், "நான் கால் டேக்ஸி சொல்லிட்டு போய்க்கறேன்" என்று அவள் பிடிவாதமாக காரிலேயே உட்கார்ந்திருக்க, "ப்ச்.. ரொம்ப ஸீன் போடாத; நானே உன்னை ட்ராப் பண்ணிட்டு என் மாமியார் கையால டின்னர் சாப்டுட்டு திரும்ப வரேன்!" என்றான் அவன் கிண்டலுடன்.


அவனது அந்த பேச்சில் கோபம் கொஞ்சம் தணிய அவளுடைய காரை பூட்டிவிட்டு அவனுக்குப் பின்னால் வந்து உட்கார்ந்தாள் அவள்.


அவனுடைய வாகனம் சீறிக்கொண்டு கிளம்பியது.


மாயா-14


ஆளரவமற்ற அந்த சாலையில் அவனுடைய வாகனம் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்க அதிவேகமாக அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த லாரியை பார்த்து பயந்துபோய், "ஜெய்!" என்ற அலறலுடன் அவன் தோளை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள் மாதினி.


அப்பொழுது தவறான திசையில் வேகமாக தங்களை மோதுவது போல் வந்த அந்த கருங்கல் ஜல்லி ஏற்றிவரும் லாரியைக் கண்ட ஜெய் சற்று தடுமாற, அருகே இருந்த பள்ளத்தில் போய் வாகனத்துடன் விழுந்தனர் இருவரும்.


கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி திசைமாறி தன் கட்டுப்பாட்டை இழந்து 'மீடியன்'இல் போய் மோதி நின்றது.


ஜெய்யின் இடதுகையில் பலமாக அடிபட்டிருக்க, மாதினியின் கால்மேல் பைக் விழுந்திருக்கவே பயங்கரமாக வலி ஏற்பட்டது அவளுக்கு.


அந்த லாரியை ஓட்டி வந்தவன் 'ஸ்டியரிங்'கின் மேல் சாய்ந்து அந்த நொடியே இரத்த வெள்ளத்தில் உயிரை விட்டிருந்தான்.


அந்த நிமிடம் ஜெய் உணர்ந்த உண்மை அவனைச் சிலிர்க்க வைத்தது.


மெள்ள எழுந்து அவளுடைய கால்மேல் சரிந்து கிடந்த 'பைக்'கை முயன்று தூக்கி நிறுத்தியவன், அவளை தன் தோளில் சாய்த்து உட்காரவைக்க, "ஜெய்! என முனகலாக ஒலித்தது அவளுடைய குரல்.


"யாமு! நீதான்னு எனக்கு தெரியும்!" என்றான் அவன் வியப்பு விலகாமல்.


அவளது முகத்தில் மெல்லிய புன்னகை படர, "ஐ லவ் யு ஜெய்!" என முனகினாள் அவள்.


"தெரியும்!" என்றவன், "ஆனா நீ மாதினியை இப்படி யூஸ் பண்றது தப்பு யாமு" என அவன் சொல்ல, "தெரியும்! ஆனா அவளைத் தவிர வேற யாராலயும் எனக்கு ஹெல்ப் பண்ண முடியாது ஜெய்" என்றாள் அவள் கோபமாக.


"எப்பதான் அவளை நீ விடுவ" என அவன் கேட்க, "என் நோக்கமெல்லாம் நிறைவேறின பிறகு!" என்றாள் அவள் பிடிவாதம் தொனிக்க.


"ஆனா அவளுக்கு இப்ப ட்ரீட்மெண்ட் கொடுக்கணுமே" என அவன் சொல்ல, "இல்ல என்னால அவளை விட முடியாது" என்றாள் அவள் பிடிவாதமாக.


"இல்ல யாமு! நீ என்னை லவ் பண்றது உண்மைனா இப்ப நீ அவளை விட்டு போயே ஆகணும்" என்றவன், "அந்த நரேன் மட்டும்தான இருக்கான்! அவனுக்கு நாங்க தண்டனை வாங்கி கொடுக்கிறோம்!


நீ அமைதியா போயிடு யாமு" என்றான் அவன் மென்மையாக.


"என்னால உங்களை விட்டுட்டு போகமுடியதே" என்றாள் அவள் கேவலாக!


"வேண்டாம்! நீ என்னை விட்டுப் போக வேண்டாம்! நீ மறுபடியும் எனக்கு மகளா பிறந்து வா!


வாழ் நாள் ஃபுல்லா நான் உன்னைப் பத்திரமா பார்த்துக்கறேன்" என்று சொல்லி அவளது உச்சியில் அவன் இதழ் பதிக்க, மாதினியின் கண்களிலிருந்து உருண்ட கண்ணீர் மணிகளில் யாமினியின் சம்மதம் புரிந்தது அவனுக்கு.


மொத்தமாக மயங்கி அவன் மடியிலேயே சரிந்திருந்தாள் மாதினி.


உடனே அவன் கைப்பேசியை இயக்க, இருவரும் சற்று நேரத்திற்கெல்லாம் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். ஜெய்கிருஷ்ணாவிற்கு கையில் சிறிய அடி மட்டுமே ஆனால் மாதினியின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர்.


ஜெய், குமரேஷை அழைத்து விபத்து பற்றித் தெரிவிக்கச் சற்று நேரத்திற்கெல்லாம் அங்கே வந்தார் அவர் ஸ்வர்ணாவுடன்.


சில மணி நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்து மாதினி மருந்துகளின் உதவியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அந்தக் கனவு...


நரேன் வேகமாக தன் காரை செலுத்திக் கொண்டிருக்க, நெருப்பில் கருகும் வாடை அவன் நாசியைத் துளைக்க, மூச்சுவிட இயலாமல் தடுமாறியவனின் கையில் கார் தன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகப் பாய்ந்தது.


அவன் கண்களில் மிரட்சி; அவன் உதடுகள் தானாக உச்சரித்து, "யாஆஆஆமினீஈஈஈஈ! என்னை விட்டுடு" என.


"நான் உனக்கு என்னடா பாவம் செஞ்சேன்? என்னை ஏன் கொன்ன? சொல்லுடா!" என யாமினியின் குரல் உருமலாக ஒலிக்க, அச்சத்தில் தொண்டை வறண்டுபோய் கடினமாக, "எனக்கு உன்னைப் பார்த்ததுமே ரொம்ப பிடிச்சு போச்சு!


ஆனா அந்த வீரா உன்னை லவ் பண்றதா வந்து என் கிட்ட சொன்னான்!


அதோட வேலண்டைன்ஸ் டே அன்னைக்கு உன்னை ப்ரபோஸ் வேற செஞ்சான்!


அப்படி இருக்கும்போது உன்னை நான் டார்கெட் பண்ணா தேவையில்லாம அவனை பகைச்சுக்க வேண்டி இருக்கும்!


என்னை பொறுத்தவரைக்கும் அவன் ஒரு பொன் முட்டை இடுற வாத்து!


அதனால அவனை பகைச்சுக்க விரும்பல!


அதே சமயம் உன்னையும் அவனுக்கு விட்டுக்கொடுக்க என் மனசு இடம் கொடுக்கல.


உனக்கு கல்யாணம்னு வேற சொல்லவும் வெறி அதிகமாச்சு.


எனக்கு இல்லாதது அவனுக்கும் இல்ல வேற யாருக்கும் கிடைக்கக்கூடாதுன்னு நினைச்சேன்!


அதனாலதான் உன்னை கொல்லச் சொன்னேன்.


அந்த நேரத்துல பயத்துல கொஞ்சமும் யோசிக்காம வீராவும் அதுக்கு ஒத்துக்கிட்டான்" என்றான் நரேன் தன்னை மறந்து!


"உன்னை மாதிரி அளெல்லாம் இந்த உலகத்துல வாழக் கூடாது!" என அவள் கர்ஜிக்க, அடுத்த நொடி அந்த கார் பற்றி எரியத் தொடங்கியது.


***


மறுநாள் காலை மிகவும் தாமதமாக மயக்கத்திலிருந்து கண் விழித்த மாதினி அங்கிருந்த ஜெய்யை கண்டு புன்னகைக்க, "ஒரு குட் ந்யூஸ்" என்றவாறு தன் கைப்பேசி திரையை அவளிடம் காண்பித்தான் அவன்.


அதில் ஒளிர்ந்த முக்கியச் செய்தி அவளை அதிசயிக்க வைத்தது.


'இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் முன்னாள் அமைச்சர் செல்வகுமாரின் மகன் நரேன் பலி!


விமான நிலையத்திலிருந்து வீடு நோக்கிச் செல்லும்பொழுது விபத்து நடந்ததாகத் தெரிகிறது!' என்ற அந்தச் செய்தியைப் பார்த்தவள் வியப்பு மேலிட,“ஜெய் அந்த ஆக்சிடன்ட்ட நான் பார்த்தேன்; கனவுல!


அந்த இடத்துல யாமு இருந்தா! இதை நம்பவே முடியல!" என்றாள் மாதினி.


யாமினியின் மரணத்திற்கு அந்த நரேன்தான் காரணம் என்ற உண்மையுடன் சேர்த்து யாமினி மூலம் அவன் அறிந்த அனைத்தையும் அவளிடம் விளக்கமாகச் சொல்லி முடித்தான் ஜெய்.


“லீகல் டெர்ம்ஸ்ல மென்ஸ் ரியா (Mens rea)ன்னு சொல்லுவோம்; அதாவது குற்றம் செய்யத் தூண்டும் ஒரு மனநிலை;


எவ்வளவு வக்கிரமான மனநிலையிலிருந்தால் அவளை அப்படி எரிச்சு கொன்னிருப்பான் அந்த பாவி.


அவனுடைய குற்றமுள்ள நெஞ்சுதான் இந்த விபத்துக்குக் காரணம்” என்றவள் "யாமுத்தான் இதையெல்லாம் செஞ்சான்னு என்னால நம்ப முடியல" என்றாள் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல்.


“இல்ல மாது! யாமு இருக்கா! நான் அவளைப் பார்த்தேன்!. நேற்று நமக்கு ஆக்சிடென்ட் நடந்தப்ப அவதான் நம்ம உயிரை காப்பாத்தினா" என்றான் ஜெய் வியந்த குரலில் அவளுக்கு அதைப் புரிய வைக்கும் நோக்கத்துடன்.


அதில் உணர்ச்சிவசப்பட்டுப் போனவள், "அவளைப் போய் நம்ம கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்களே!" என மேற்கொண்டு பேச இயலாமல் தன் சகோதரியின் பிரிவை எண்ணி கதறி அழத் தொடங்கினாள் மாதினி!


எந்தவித தயக்கமும் இல்லாமல் அவளை தன் மார்போடு அணைத்தவன், "அவ நம்மளவிட்டு எங்கயும் போகமாட்டா மாது! நம்ம கூடவேதான் இருப்பா!" என்றான் அவன் அவளை அமைதிப்படுத்தும் விதமாக!


அவனது வார்த்தைகளில் அவள் மனம் அங்கே சற்று அமைதியடைய அவனுடைய அணைப்பு அவன் மனதை அவளுக்கு புரிய வைத்தது.


அந்த நெகிழ்ச்சியுடன், "எத்தனை பெண்களோட வாழ்க்கையில் அந்த ஹாப்பி பில்ஸை வெச்சு விளையாடி இருக்கானுங்க இல்ல!


இவனெல்லாம் இந்த உலகத்துல வாழ தகுதியே இல்லாதவன்.


ஒரு வேளை இதெல்லாம் எனக்கு முன்னாலே தெரிஞ்சிருந்தால் இவனுங்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்கணும்னு மட்டும்தான் நினைச்சிருப்பேன்!


அப்ப கூட இவனுங்களுக்கு தண்டனை கிடைக்குமான்னு தெரியாது.


ஆனா யாமினி தர்மப்படி அவங்க எல்லாரையும் தண்டிச்சிருக்கா!


இப்ப நிச்சயமா அவளோட ஆன்மா சாந்தி அடையும்!" என்று அந்த வார்த்தைகளை உணர்ந்து சொன்னாள் மாதினி!


காற்றாய் வந்து தன் சகோதரியின் உயிர் காத்து இருளில் கலந்த யாமினி அவர்களை பார்த்து அங்கே புன்னகைகத்துக் கொண்டிருந்தாள்.


மருத்துவமனையின் அந்த அறை முழுதும் மகிழம்பூவின் மணம் சூழ்ந்து அவளை உணர்த்தியது மாதினிக்கு.


மாதினியின் மனம் நிறைந்தது.


யாமினியின் மனம் அமைதி அடைந்தது.


முழுமை அடைந்தாள் மாயா!

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page