Maathini-Yaamini 6*
மாயா-6
அந்த உதவி பேராசிரியர் பணி பிடித்துத்தானிருந்தது யாமினிக்கு.
அன்று ஒருமுறை அந்த நரேனை நேரில் பார்த்ததுடன் சரி, அதன்பிறகு அவனைச் சந்திக்கும் தொல்லை நேரவில்லை அவளுக்கு.
எனவே கொஞ்சம் இலகுவாகவே உணர்ந்தாள் அவள்.
சேர்ந்து இரண்டு தினங்கள் மட்டுமே அவள் வேலைக்குச் சென்றிருக்க, அதற்குள் பொங்கல் பண்டிகை காரணமாக ஐந்து நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
பண்டிகையைக் கொண்டாட மாதினியும் ஊருக்கு வந்துவிட, வீடே புது கோலம் பூண்டிருந்தது.
எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இன்றளவும் ரத்தினம் தாத்தாவின் வீட்டில் கறவைகளையும் காளைமாடுகளையும் கட்டி பராமரித்து வருவதால் பெரும்பொங்கலை விட மாட்டுப்பொங்கல் அவர்கள் வீட்டில் விசேஷமாகக் கொண்டாடப்படும்.
இந்த வருடக் கொண்டாட்டங்களுக்குப் பெரியவர்கள் ஜெய் குடும்பத்தையும் அழைத்திருக்க, பொங்கலன்று மாலையே அகிலா மற்றும் ஸ்ரீதரன் இருவருடனும் அங்கே வந்திருந்தான் அவன்.
அவர்கள் வீட்டு புழக்கடையில் அமைந்திருக்கும் மாட்டுக்கொட்டகையில் மாதினியும் யாமினியும் ஒரு காளையின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டிக்கொண்டிருக்க, யாருடைய கருத்தையும் கவராவண்ணம் யாமினியைத் தேடிக்கொண்டு அங்கே வந்த ஜெய், அன்று இருவருமே புடவையில் இருக்கவும், 'இவர்களில் யார் யாமினி' என்ற குழப்பத்துடனேயே அவர்களை நெருங்க, பின் நீளமான கூந்தலை பார்த்து அவனுடையவளை அடையாளம் கண்டுகொண்டான்.
அவளைப் பார்த்த மகிழ்ச்சியில் அவன் அவர்களின் அருகில் வர, கோபமாகச் சீறியது அந்தக் காளை.
அவன் பயந்து சற்று பின்வாங்க, அதைப் பார்த்து சிரித்த மாதினி, "இந்த காளையை அடக்கினாத்தான் எங்க வீட்டுல பெண்ணை கொடுப்பாங்க.
அதுக்குதான் தாத்தா உங்க எல்லாரையும் இங்க இன்வைட் பண்ணியிருக்கார்!" என்று தீவிரமாக சொல்ல, அந்த காளையுடைய உயரத்தையும் அதன் முதுகிலிருந்த திமிலையும் அதன் கொம்புகளையும் பார்த்து முதலில் சற்று அதிர்ந்தவன், மாதினியின் உதட்டில் தவழ்ந்த விஷம புன்னகையிலும் யாமினியின் கண்கள் காட்டிய எச்சரிக்கையிலும் சுதாரித்தவனாக, "என்ன மிஸ்டர் காளை! வரீங்களா ரெண்டுபேரும் சண்டை போடலாம்!
நான் ஜெயிச்சாத்தான் எனக்கு யாமினியை கொடுப்பாங்களாம்.
ஒரு வேளை நீங்க ஜெயிச்சிட்டா உங்களுக்கு மாதினியை கட்டி கொடுத்தாலும் கொடுப்பாங்க!" எனச் சொல்ல,
என்னவோ அவன் சொன்னது புரிந்த மாதிரி அதன் கொம்புகளைச் சுற்றி கட்டியிருந்த சலங்கை ஒலிக்க மாடு தலை அசைக்கவும், "பார்றா! காம்படிஷன் ரொம்ப டஃப்பா இருக்கும் போலிருக்கே!
மாடு உன்னை கட்டிக்க ரெடியா இருக்கற மாதிரி வேற தெரியுது!" என்றவன், "அப்படினா இவங்க மிஸ்ஸஸ் காளை; ரைட்!' என அவன் மேலும் கிண்டலில் இறங்க, அதற்கும் அந்த காளையன் தலை ஆட்டவும் கலகலவென சிரித்தாள் யாமினி.
அதில் காண்டானவள், "லூசு! நீ ஒண்ணும் பூம் பூம் மாடு கிடையாது! உழவு மாடு எரும!" என்று மாட்டைக் கடிந்துகொள்ள, "என்ன இது எருமையா! எருமை இப்புடி..யா இருக்கும்?" என்றான் ஜெய் தீவிரமாக.
"எங்க வீட்டுக்கு கெஸ்ட்டா வந்திருக்கீங்களேன்னு பார்க்கறேன்! இல்லனா இந்த பெயிண்டை உங்க மூஞ்சிலயே கொட்டிட்டு போயிட்டே இருப்பேன்!" என்று சொல்லிவிட்டு, கையில் வைத்திருந்த 'பெயிண்ட்' டப்பாவை தொப்பென்று கீழே வைத்துவிட்டு, "நீயும்; உன்னோட இந்த காளையுமா சேர்ந்து இந்த எருமைக்கு பெயிண்ட்ட பூசுங்க!" என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டை நோக்கிப் போனாள் மாதினி.
"என்ன வக்கீலாம்மா! உங்களால என் கூட ஆர்க்யூ பண்ண முடியலையா?" என அவன் அவளை மேலும் வம்புக்கு இழுக்க, மறுபடியும் அவர்களை நெருங்கி வந்தவள், "மனுஷங்க கூடத்தான் ஆர்க்யூ பண்ணுவேன்" என அவள் சொல்ல, "அப்படினா என்னை தேவன்.. யக்ஷன் அப்படிங்கற!" என விடாமல் அவன் தொடர, "ப்ளீஸ்! விட்ருங்க!" என இருவருக்கும் பொதுவாக யாமினி ஜாடை செய்ய, அவளுடைய தவிப்பை உணர்ந்து அமைதியாக உள்ளே போனாள் மாதினி.
"இங்க ஜல்லிக்கட்டு உண்டா?" என அவன் சந்தேகமாக இழுக்க "ஐயோ இது ஒண்ணும் ஜல்லிக்கட்டு மாடு இல்ல ஜெய்; இது உழவு மாடு!
எங்க ஊர்ல ஜல்லிக்கட்டெல்லாம் கிடையாது. அவ சும்மா விளையாட்டா உங்களை ஓட்டிட்டு போறா!" என யாமினி விளக்கமாகச் சொல்லவும், ஒரு பெருமூச்சு விட்டவன் "ப்பா; இவளை எப்படி உங்க வீட்டுல சமாளிக்கறாங்க?" என ஜெய் கேட்க,
தலையைச் சாய்த்து அவனை ஒரு பார்வை பார்த்தவள், " உங்க வீட்டுல எப்படி உங்கள சமாளிக்கறாங்களோ அப்படித்தான்!" என அனாயாசமாகச் சொல்ல, "அடிப்பாவி! அக்காவுக்கு சப்போர்ட்டு!" என அவன் சொல்லவும்,
"இல்லையா பின்ன? அதுவும் உங்க ரெண்டுபேரையும் சேர்த்து இப்ப நான் சமாளிக்கணும்!" என அவள் சலிப்பாகச் சொல்