மாயா-1
சென்னை புறநகர் பகுதி,
டிசம்பர் 14,
டிசம்பர் மாதத்தில் கூட வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்க மனித நடமாட்டமே இல்லாத அந்த முக்கிய நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் வேகமாக வண்டிகள் மட்டுமே பறந்து கொண்டிருக்கும் நண்பகல்வேளை; தன் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் நந்தா.
ஏதோ ஒரு வாடை நாசியில் துளைக்க, வண்டி அவன் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கி அதிவேகமாக பாய்ந்த நொடி கண்கள் இருட்டத் தொடங்க காட்சிகள் இரண்டிரண்டாக, அவன் பார்த்த அந்த உருவம்! ‘அவளாஆஆஆ?’
மருத்துவமனையில் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நண்பனைக் காண வந்தான் அவன், வீரா - வீரசெல்வன்.
நல்ல உயரமும் மாநிறமுமாக சற்று பருமனான உடல்வாகுடன், அணிந்திருந்த உடை, கடிகாரம், ஷூ என அனைத்திலும் நிரம்பி வழியும் செல்வச்செழுமையுமாக அந்த அறைக்குள் நுழைந்தவன், நண்பனின் கை பற்றி, “நந்தா! என்ன நடந்நதுடா?” என்று கேட்க, அவசரமாக அவன் கைகளை தட்டிவிட்டவனின் கண்களில் அதீத மிரட்சி!
‘உன்னால்தானே’ எனும் பார்வை!
துன்பத்துடன் அவன் இறுதியாக உச்சரித்த பெயர் வீராவை குலைநடுங்க வைத்தது.
அது ‘யாமினி!’
***
தன் நண்பனின் அகால மரணத்தால் அவன் மனம் உலைக்கலனாய் கொதித்துக் கொண்டிருந்தது.
ஒரு மூன்று மணி நேரத்திற்கு முன் தன்னிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றவன் இப்பொழுது சடலமாக!
அந்த நேரம் அவனுக்குத் தெரியாது அது வெறும் ஆரம்பம்தானென்று.
***
மருத்துவமனையை விட்டு வெளியே வந்த வீரா அவசரமாக அந்தப் பகுதி ஆய்வாளர் செல்வத்தை தன் பேசியில் அழைக்க அதை ஏற்றவர், “சாரி மிஸ்டர் வீரா, இப்பதான் ஹாஸ்பிடல்ல இருந்து தகவல் வந்தது.
நந்தா கேஸ்தான் விசாரிச்சிட்டு இருக்கேன்; முடிஞ்சா நாளைக்கு ஸ்டேஷன் வாங்க பேசலாம்; அதுகுள்ள போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்சும் வந்துடும்” என்று கூற, “சரி” என்ற ஒற்றை வார்த்தையுடன் அழைப்பைத் துண்டித்தான் அவன்.
அடுத்தநாள் அவன் காவல்நிலையம் செல்வதற்கு முன்பே அவனை அழைத்த செல்வம், “உங்க ஃபிரண்டுக்கு ஏற்பட்டது ஆக்சிடண்ட்தான், போஸ்ட்மார்டம் ரிபோர்ட்ல அவர் டிரக் கன்ஸ்யூம்பண்ணியிருக்கார்னு தெளிவா வந்திருக்கு. போதைல வண்டி ஓட்டியிருக்கார். ஸோ எதபத்தியும் கவலைபடாதீங்க வீரா” என்று கூறவே மேற்கொண்டு ஏதும் பேசாமல் அங்கிருந்து சென்றான் வீரா.
***
அதே நேரம் வண்டலூர் உயிரியல் பூங்காவின் எதிர் புறமாக அமைந்திருக்கும் உணவகத்தின் முதல் தளத்தில் உட்கார்ந்து கண்ணடி தடுப்பின் வழியே ஜீ.எஸ்.டீ சாலையில் ஊர்ந்து செல்லும் போக்குவரத்தை எதோ யோசனையுடன் வெறித்தபடி தட்டிலிருந்த உணவை அளைந்து கொண்டிருக்கும் அவளின் நிலவு போன்ற முகத்தில் நிலைத்திருந்தன ஜெய்யுடைய கண்கள்!
"என்ன மாதி! இன்னும் என்ன யோசனை!
முதல் ஸ்டெப் பர்பெக்டா முடிச்சிட்டோம் இல்ல!
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு!" என அவன் சொல்ல, "நோ ஜெய்! இதுக்குள்ள எல்லாம் என்னால ரிலாக்ஸ் ஆக முடியாது!
நாம நினைச்சதை மொத்தமா செய்து முடிச்சாதான் எனக்கு நிம்மதி!
அதுவரைக்கும் நான் இப்படித்தான் இருப்பேன்!
ப்ளீஸ் என்கூட சேர்ந்து நீங்களும் கஷ்டப்படாதீங்க!
நானே பார்த்துக்கறேன்!" என அவள் சொல்ல, "மாதினி!" எனக் கோபத்துடன் அழைத்தவன், "உன்னோட உளறலை இதோட நிறுத்திக்கோ!" என்றான் கடுமையாக.
"என்ன நான் சொன்னது உங்களுக்கு உளறலா தெரியதா!" என அவள் அதே கோபத்துடன் சீற, 'உருவத்துல வேணா இவ அவளை மாதிரி இருக்கலாம்! ஆனா குணத்துல இவ வேற!
இதே இப்படி குரலை உயர்த்தி பேசினா அவ அழுதே இருப்பா!' என்ற எண்ணத்துடன் அவளது முகத்தைப் பார்த்தவன், 'அவளோட கண்ணுல எனக்கான காதல் தெரியும்!
ஆனா இவளுக்கு அதுல ஒரு தீ இருக்கு!
அவளோட முகம் எப்பவுமே மென்மையை பூசி இருக்கும் இவளோடது மாதிரி இரும்பா இறுகி இருக்காது!
அவதான் என்னோட நிஜம்!
இவ அவளோட நிழல்!
ரெண்டுபேரும் என்னைக்குமே ஒண்ணா ஆக முடியாது' என்ற எண்ணத்துடன் விழிகளை மூடிக்கொண்டான் ஜெய்.
அவன் கண்களுக்குள் வந்து நிறைந்தாள் அவள் - அவனுடைய யாமினி!
அவனுடைய முகத்தில் தோன்றிய கலவையான உணர்ச்சிகளை உள்வாங்கியவளாக, "ப்ளீஸ் ஜெய்! என் கிட்ட யாமினியை தேடாதீங்க!
அவ வேற! நான் வேற!
என்கிட்ட மட்டும் இல்ல அவளை வேற யார் கிட்டேயும் தேடாதீங்க!
அவ கிடைக்க மாட்டா! உங்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சமா இருக்கும்!
உங்களோட இந்த மனநிலையை மாத்திக்கிட்டு உங்க அம்மா அப்பா பார்த்து வெச்சிருக்கும் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க!
அதுதான் அவளோட ஆன்மாவுக்கு அமைதியைக் கொடுக்கும்!
அவ விஷயத்தை நான் பார்த்துக்கறேன்!" உணர்ச்சியற்ற குரலில் யாமினி சொல்லிக்கொண்டிருக்க, "நான் என்ன பண்ணனும்னு நீ சொல்ல தேவை இல்ல!
உன் தங்கைக்காக நீ என்ன செய்யணும்னு நினைக்கிறியோ தாராளமா செய் நான் தடுக்கல.
அதே மாதிரி என் யாமினிக்காக நான் செய்ய நினைக்கறத தடுக்கற உரிமை உனக்கு இல்ல!
உன்னை தனியா விட்டுட்டு நான் என் வாழ்க்கையை பார்த்துட்டு போனால் யாமினியோட ஆன்மா என்னை மன்னிக்கவே மன்னிக்காது!" எனக் கோபத்துடன் கடுமையாகச் சொன்னவன், 'பேரர்' வைத்துவிட்டுப் போன 'பில்'லை சரிபார்த்து சில ரூபாய் நோட்டுகளை வைத்து அந்த அட்டையை மூடிவிட்டு அவளைத் திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து சென்றான் ஜெய் கிருஷ்ணா!
அவனது செய்கையைப் பார்த்து மென் புன்னகை ஒன்று மலர்ந்தது மாதினியின் முகத்தில்.
***
அவளிடம் அப்படி கோபமாகப் பேசிவிட்டு வந்துவிட்டானே ஒழிய அவனுடைய அந்த செயல் அவனுக்கு வருத்தத்தையே கொடுத்தது.
ஏனோ அவளை மறுபடி அழைத்து சமாதானமாகப் பேச அவனது 'ஈகோ' அவனை அனுமதிக்கவில்லை.
அந்த ஒரு சிறு உரசல் இல்லாமல் இருந்திருந்தால் கூட அவளாகவே அழைத்திருப்பாள். ஆனால் இப்பொழுது அவள் அழைக்கவே மாட்டாள் என்பது உறுதியாக விளங்க அடுத்த நாள் காலை வரை பொறுத்தவன், அவளை கைப்பேசியில் அழைக்க, அதை ஏற்றாலும் எதிர் முனையில் அவள் அமைதி காக்கவும், 'திமிரு பிடிச்சவ! நான்தான் இறங்கி வந்து போன் பண்ணிட்டேன் இல்ல! என்னன்னு கேட்டா குறைஞ்சா போயிடுவா!' என்ற எண்ணம் தோன்ற, தொண்டையை செருமிக்கொண்டு, "எங்க இருக்க?" எனக் கேட்டான் ஜெய்.
"ஹை கோர்ட்ல!" என்றவள், "ஒரு மொக்க ஹியரிங்! சீனியர் என்னை அட்டண்ட் பண்ண சொல்லிட்டார்!
எப்படியும் முடிய மத்தியானம் ஆயிடும்னு நினைக்கறேன்!" என்றாள் மாதினி எதுவுமே நடக்காதது போன்று.
"சும்மாதான் கேட்டேன்!" என்று அவன் அழைப்பைத் துண்டிக்க, தோளைக் குலுக்கியவாறு அவளுடைய சக 'ஜுனியர்' மனோகருடன் அவளது பணியைக் கவனிக்கச் சென்றாள் மாதினி பி.ஏ.பி.எல். ஹானர்ஸ்.
சென்னையிலேயே புகழ் பெற்ற வழக்கறிஞர் கோதண்டராமனின் 'ஜூனியர்'களில் ஒருத்தி.
மதியம் அவள் நீதிமன்றத்தை விட்டு வெளியில் வரும்பொழுது அங்கே இருக்கும் டீ கடையில் போடப்பட்டிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்து தேநீரைப் பருகியவாறு கைப்பேசியை குடைந்துகொண்டிருந்தான் ஜெய்.
அவள் அவனுக்கு அருகில் வந்து நிற்கவும் அதைக் கூட கவனிக்கவிடாமல் 'பப்ஜி' அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, மாதினி கோபமாக அவனது கைப்பேசியைப் பிடுங்கவும் அதில் எரிச்சலுற்று நிமிர்ந்தவனின் முகம் அப்படியே மென்மையாக மாறிப்போனது.
பிங்க் நிற பார்டருடன் கூடிய வெள்ளை புடவையுடன் பிங்க் நிற கலம்காரி ப்ளௌஸ் அதற்கு மேலும் அழகு சேர்க்க, அவள் கழுத்தில் அணிந்திருந்த வழக்குரைஞர்கள் அணியும் வெள்ளை நிற பட்டி அவளுக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுக்க அருகில் நின்றவளை, முதன்முதலாக இப்படிப் பார்க்கவும் பேச்சற்று போனான் ஜெய்!
அவள் கைப்பேசியை அவனது முகத்திற்கு நேராக ஆட்டி, "இது என்ன நான் வந்ததை கூட கவனிக்காம கிட்டிஷா இப்படி கேம் விளையாடிட்டு இருக்கீங்க!" என அவள் கிண்டலாகக் கேட்க,
'ம்ம். மேடம் பெரிய மகாராணி! வந்த உடனே நாங்க எழுந்து நின்னு மரியாதை செலுத்தணும்!" ஜெய் அவள் சொன்ன அதே ராகத்துடன் அவளுக்குப் பதில் கொடுக்கவும் அவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த மனோகருக்குச் சிரிப்பு வந்துவிட அதை அவன் மிக முயன்று அடக்குவதைக் கவனித்த ஜெய், "நீ போ! நான் இதோ வந்துடறேன்!" என்றவாறு மனோகருடைய தோளில் கையை போட்டுக்கொண்டு, "சொல்லுங்க சகோ! என்ன அப்படி ஒரு சிரிப்பு!" என ரகசிய குரலில் கேட்க, "நம்மளால செய்ய முடியாததை மத்தவங்க செய்யும்போது வர குதூகலம்தான் சகோ!" என்றான் அவன்.
"ரொம்பவே பாதிக்கப்பட்ட மாதிரி தெரியுதே!" என ஜெய் கிண்டல் குரலில் கேட்க, "ப்ச். இவ வந்ததுக்கு பிறகு எங்க சீனியர் கே.ஆர் சாருக்கு நாங்கல்லாம் வேண்டாதவங்களாக மாறி போயிட்டோம்!
எப்ப பாரு 'மாதி! மாதி!'ன்னு அவளையே எல்லாத்துக்கும் கூப்பிட்டுட்டு இருக்காரு.
கேட்டா 'என் குருவோட பேத்திடா அவ! பிறக்கும்போதே பிரில்லியண்ட் வக்கீல்'னு கவுண்டர் வேற!" என்று உதடு பிதுக்கினான் அவன்!
அவர்களை வினோதமாகப் பார்த்தவள், "என்ன குசுகுசுன்னு பேச்சு! எவ்வளவு நேரம் உங்களுக்காக வெயிட் பண்றது!" என அவள் அவர்களை அழைக்க, "இல்ல இந்த கேவலமான டீயை எப்படி குடிக்கிறீங்க!
கேஸ் ஆர்க்யூமென்ட் பண்ணும்போது பாதியில வயித்தை கலக்கினா என்ன செய்வீங்கன்னு கேட்டுட்டு இருந்தேன்" என ஜெய் சொல்ல அடப்பாவி என்று மனோகர் சிரிக்க, தன்னை மறந்து கலகலவென சிரித்தாள் மாதினி!
அந்த சிரிப்பில் கூட அவன் தேடிய யாமினி அவனுக்குக் கிடைக்காமல் போக ஏமாற்றம் படர்ந்தது ஜெய்யின் முகத்தில்.
அதைச் சட்டென மறைத்தவன், "முக்கியமான வேலை எதாவது இருக்கா மாதி!" என அவன் கேட்க, "இல்ல; முதல்ல போய் சீனியரை பார்த்து அவர்கிட்ட இன்னைக்கு கேஸ் டீடெயில்ஸ் அப்டேட் பண்ணணும்; அவ்ளோதான்!" என அவள் சொல்ல, "அதை மனோ கூட செய்யலாம் இல்ல!" என அவன் கேட்கவும், "ம்; செய்யலாமே" என அவள் மனோகரைப் பார்க்க, "நல்லா வருவீங்க ரெண்டுபேரும்! கே.ஆர் சார்கிட்ட என்னை கோத்து விடறீங்களே இது நியாயமா?!
நீ தான் பயங்காரம்னு பார்த்தேன்! உன் ஆளு அதைவிட பயங்கரம்! ஆத்தா என்னை விட்டுடு!" என அவன் உண்மையான நடுக்கத்துடன் சொல்ல, "என்னா..து ஜெய் என் ஆளா! கொன்னுடுவேன் கொன்னு!
இதை சொன்னதுக்காகவே நீ போய் கேஸ் டீடெய்ல்ஸ் எல்லாத்தையும் அவர் கிட்ட ஒப்பிச்சிட்டு வா!
மீ எஸ்கெப்!" என அவள் மனோவிடம் சண்டைக்குக் கிளம்ப,
"சில் மாதி! பாவம் அவனை ஏன் கலாய்க்கற! நீ போன்ல அவர்கிட்ட பேசிட்டு மனோவை அங்க அனுப்பு!" என அந்த பிரச்சினைக்கு முடிவு சொன்ன ஜெய், "முக்கியமா ஒருத்தங்களை பாக்க போகணும் மாதி! டைம் வேஸ்ட் பண்ணாத!" என மெல்லிய குரலில் அவளிடம் சொன்னான்!
"பைக்ல தான வந்திருக்கீங்க?" என அவள் கேட்கவும், "ம்; ராயல் என்பீல்ட்" என அவன் கெத்தாகச் சொல்ல, "அப்ப சாவியை கொடுங்க!" என அவள் அதிகாரமாகச் சொல்லவும், "ஏய் வர வர என்னை ரொம்பவே டாமினேட் பண்ற நீ!
பைக்கை கொடுக்க மாட்டேன்!" என்றான் அவன் பிடிவாதமாக.
"ப்ச்! சாரீ கட்டிட்டு இருக்கேன் ஜெய்!
என்னால பைக்ல கம்பர்டபுலா உக்காந்துட்டு வர முடியாது! என்னோட கார்லயே போகலாம்!" என அவள் சொல்ல, "என்ன உன் கார்லயா!" என அவன் சங்கடமாக நெளியவும், "நீங்கல்லாம் ஆடில போறவங்க! என் காரை பார்த்தால் இப்படித்தான் தோணும்!" என அவள் உள்ளே போன குரலில் சொல்லவும், "ப்ச்; என்ன பேச்சு பேசற நீ!" என்றவன் தன் பைக் சாவியை மனோகரிடம் நீட்டியவாறே, "நீங்க என் பைக்ல போங்க! நான் ஈவினிங் உங்க ஆபீஸ்க்கு வந்து அதை எடுத்துக்கறேன்!" என்றான் ஜெய்.
ஒரு உற்சாக துள்ளலுடன் அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து ஓடியே போனான் மனோகர்.
"உங்களுக்கெல்லாம் அந்த பைக் பேஷன்! மனோ மாதிரி பசங்களுக்கு அது ட்ரீம்!' என மாதினி சொல்லவும் ஆமோதிப்பாகத் தலையை ஆட்டினான் ஜெய்!
அந்த வளாகத்தை ஒரு சுற்று சுற்றி வந்து வாகன நிறுத்தத்தை அடைந்து அவளுடைய காரை நெருங்கவே அரை மணி நேரம் பிடித்தது அவர்களுக்கு.
மங்களகரமான அழகிய மஞ்சள் நிறத்திலிருந்த அவளுடைய குட்டி நானோவை அடைந்து அதன் முன் கதவை அவள் திறக்க, "அப்ஜக்ஷன் மை லார்ட்!
லேடிஸ் ட்ரைவிங்ல எல்லாம் நான் உட்கார்ந்துட்டு வரமாட்டேன்; நான் ட்ரைவ் பண்றேன் நீ உக்காந்துட்டு வா!" என அவன் வீம்புடன் சொல்ல,
"அப்ஜக்ஷன் சஸ்டைன்ட்! உங்களை மாதிரி ஆண் ஆதிக்கம் பிடிச்ச ஒருத்தர் ட்ரைவரா வரதுல எனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்ல!" என அவள் சட்டெனப் பதில் கொடுக்க, அந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காதவன், வெடுக்கென்று சாவியை அவள் கைகளிலிருந்து பறித்து, ஓட்டுநர் இருக்கையில் போய் உட்கார்ந்தான் அவன்.
அவனது உயரத்திற்கும் உடற்கட்டிற்கும் அந்த இருக்கை மிகச் சிறியதாக இருக்க, அதன் மேற்பகுதி வேறு அவன் தலையில் இடிப்பதுபோல் ஒரு பிரமையை அவனுக்கு ஏற்படுத்த, கால்களை நீட்டி அதை இயக்குவது அவனுக்குச் சுலபமாக இருக்காது என்று தோன்றவும், சாவியை அவளிடம் கொடுத்துவிட்டுச் சுற்றி வந்து உடலைக் குறுக்கி முன் இருக்கையில் அமர்ந்தவன், "உன் கார்! நீயே ஓட்டு தாயே!
உன்னை மாதிரி ஒரு ஆல்ஃபா சிங்கப்பெண் காரை ஓட்டினா பக்கத்துல உக்காந்துட்டு வரதுக்கு கொடுத்து வெச்சிருக்கணும் என்று அவன் தன் நிலையை மறைத்துக்கொண்டு பெருந்தன்மையாகச் சிரித்துக்கொண்டே சொல்ல அவன் சொன்ன பாவனையில் அவள் வெடித்துச் சிரிக்கவும், இருவரின் சிரிப்பொலியுடன் சேர்ந்து சீறிக்கொண்டு கிளம்பியது அந்த வாகனம்.
***
அவன் சொன்னதுபோல் போரூர் பைபாஸ் சாலையை நோக்கி வாகனத்தை மாதினி செலுத்த, "வெயிட்! வெயிட்! இந்த இடம்னுதான் நினைக்கறேன்; கொஞ்சம் இரு" என்றவன் இறங்கிச் சென்று அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்துவிட்டுத் திரும்ப வந்தான்.
பின் "லெஃப்ட்ல திரும்பு" என அவன் சொல்ல அவள் வாகனத்தைச் செலுத்தவும், ஒரு ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பை நெருங்க, "இங்கதான்; வெளியிலேயே ஓரமா காரை பார்க் பண்ணு!" என அவன் சொல்ல, வீதியிலே ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு அவனுடன் அந்த குடியிருப்பின் உள்ளே சென்றாள் மாதினி.
மின் தூக்கி மூலம் அதன் எட்டாவது தளத்தை இருவரும் அடைய, வீட்டின் வரிசை எண்ணைச் சரிபார்த்து அருகே சென்று அதன் அழைப்பு மணியை ஜெய் அழுத்த, வந்து கதவைத் திறந்தாள் அங்கே வேலை செய்யும் பெண்.
அந்த 'ட்யூப்லெக்ஸ்' வகை 'ஃப்ளாட்'டை நோட்டமிட்டவாறு, "சிந்துஜாஸ்ரீ வீடு!" என அவன் இழுக்க, "இதுதான் உள்ள வந்து உட்காருங்க சார். வாங்க மேடம்" என அவர்களை வரவேற்றவள், “எங்க மேடம்ம கூப்பிடறேன்!" என்று சொல்லவிட்டு அந்த பெண் மாடிப்படி நோக்கிப் போக, அங்கே சுவரில் மிகப் பெரிதாக மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தவிட்டு, "ஜெய் இவங்கள எங்கயோ பார்த்திருக்கேனே!" என யோசித்தவள், "ஹேய்! ஃபேமிலி பன்ச் லேம்ப் டீவீ சீரியல்ல நடிக்கறவங்க இல்ல!" என அவள் ஆச்சரியம் கலந்த குரலில் கேட்க,
"என்ன; ஃபேமிலி பன்ச் லேம்பா!" என அவன் புரியாமல் கேட்க, "அதான் குடும்ப குத்துவிளக்கு! அந்த சீரியல் பேர்" என அவள் அதற்கு விளக்கம் கொடுக்க, தலையில் அடித்துக்கொண்டவன், "நீ சீரியல் எல்லாம் கூட பார்ப்பியா?" என ஜெய் ஒரு மாதிரி குரலில் கேட்க, "ஐ...ய!" என்றவள், "ஊருக்கு போனா எப்பவுமே இதுதான் ஓடிட்டு இருக்கும்! பெரியம்மாவுக்கும் சாந்தா பாட்டிக்கும் இதையெல்லாம் பார்க்கலன்னா தூக்கமே வராது!" என அவள் சொல்ல, படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்தாள் அந்த சிந்துஜாஸ்ரீ!
ஒப்பனைகள் எதுவும் இன்றி கண்களில் கரு வளையம் சூழ்ந்து, நோய்வாய் பட்டவள் போன்ற தோற்றத்துடன் அவளைக் காணவும், மிக ஆடம்பர அலங்காரத்துடன் தொலைக்காட்சியில் பார்த்தவள்தானா இவள் என்ற அதிர்ச்சி உண்டானது மாதினிக்கு.
மாதினி ஆராய்ச்சியுடன் அவளை பார்க்க, ஜெய்யை பார்த்துப் புன்னகைத்த சிந்துஜா, "நீங்கதான் அகிலாம்மா சன்னா!" என வெகு மரியாதை நிரம்பிய குரலில் கேட்க, "ம்; இப்ப எப்படி இருக்கீங்க?" என அவன் நலம் விசாரிக்க, "உங்க அம்மா புண்ணியத்துல பீலிங் பெட்டெர்!" என அவள் சொல்லவும், "யூஷுவலா அம்மா அவங்களோட பேஷண்ட்ஸ் பத்தி எதுவும் வீட்டுல பேச மாட்டாங்க!
ஆனா கான்பிடென்ஷியலா நீங்க ஒரு லாயர் வேணும்னு கேட்டிருந்தீங்களாம். அதனால அம்மா சொன்னாங்க" என்றவன்,
"இவங்கதான் லாயர் மாதினி! கே.ஆர். அசோசியேட்ஸ் கோதண்டராமன் சார் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க; அவரோட ஜுனியர்.
எல்லாத்துக்கும் மேல ஃபேமஸ் கிரிமினல் லாயர் சிவராமன் சாரோட பேத்தி!" என மாதினியை அவன் அறிமுகப் படுத்த, எழுந்தே நின்றுவிட்டாள் சிந்துஜா.
"மை காட்! சிவராமன் சார் எவ்வளவு பெரிய லெஜண்ட்! நேர்மையான கேஸ்லதான் வாதாடுவார்னு கேள்விப்பட்டிருக்கேன்!
சார் எப்படி இருகாங்க மேம்!" என அவள் நேரடியாக மாதினியிடம் விசாரிக்க, "நல்லா இருக்கார். ஏஜ் காரணமா எங்க வில்லேஜுக்கே போயிட்டார் தாத்தா!" என்றாள் மாதினி.
"இப்படி பட்ட ஒரு இக்கட்டான நேரத்துல உங்கள மீட் பண்ணது என்னோட நல்ல நேரம்னுதான் நினைக்கறேன் மேம்!" என அவள் தழுதழுக்க,
அவளுக்கு அந்த பெண்ணிடம் ஒரு அனுதாபம் ஏற்பட, "என்ன ப்ராபளம் சொல்லுங்க! நான் எதாவது செய்ய முடியமான்னு பாக்கறேன்!" என்றாள் மாதினி.
அதற்குள் இடை புகுந்த ஜெய், "மாது! நம்ம யாமி மர்டர்க்கும் இவங்க பிரச்சினைக்கும் எதாவது வகையில கனெக்ஷன் இருக்கும்னு தோணுது! அதான் உன்னை நேரா இங்க கூட்டிட்டு வந்தேன்!" என்றவன், "சாரி மிஸ் சிந்துஜாஸ்ரீ!" என அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டு, "இவங்க 'ஹாப்பி பில்ஸ்' அடிக்ஷனுக்காகத்தான் அம்மா கிட்ட ட்ரீட்மெண்ட்க்கு வந்தாங்க" என்றான் ஜெய்.
அதிர்ச்சியில் பேச்சற்று போனாள் மாதினி!
(மிரட்டுவாள் மாயா!)
Comentários