நன்றி! நன்றி! நன்றி! தோழமைகளே!
கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்து, வெற்றிகரமாக எனது அடுத்த கதையை முடித்து இருக்கிறேன்.
உங்களுடைய தொடர் ஆதரவு தான் இதை எனக்கு சாத்தியமாக்கி இருக்கிறது.
முந்தைய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த Likes மற்றும் Comments அனைத்திற்கும் Loads Of Thanks!
உங்கள் தொடர் ஆதரவை எதிர்நோக்கி...
நட்புடன்,
கிருஷ்ணப்ரியா நாராயண்
மடல் - 30
ஒரு பொன் அந்தி மாலைப் பொழுது அது. இளம் சூட்டில் சூரியன் இதமாக வருடிக் கொண்டிருந்தான்.
பார்த்துப் பார்த்து இரசித்து ஒரு மிகப் பெரிய கோலத்தை வீட்டின் வாயிலில் போட்டு முடித்திருந்தார் ராஜம் பேத்தியை மணக்கோலத்தில் வீட்டிற்குள் வரவேற்க.
மராமத்து வேலைகள் முடிந்து வர்ணம் பூசி, வாழை மரத் தோரணங்கள் கட்டி அவர்களது வீடு புதுக்கோலம் பூண்டிருந்தது.
இரு தினங்களுக்கு முன்புதான் சென்னையிலே மிகக் கோலாகலமாக அவளுடைய திருமணம் நடந்து முடிந்திருந்தது.
ராஜதிற்கு நல்லபடியாக அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு, அவர் உடல்நலம் தேறிச் சற்று இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகுதான் மல்லிகாவை அவருக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினாள் ஸ்வரா.
அவளை நேரில் பார்த்ததும் பெரும் அதிர்ச்சி எல்லாம் அடையவில்லை ராஜம். ஊர் உலகமே அவள் இறந்து விட்டதாக நம்பினால் கூட அந்தப் பெற்ற தாயின் உள்ளுணர்வுக்குத் தெரிந்தே இருந்தது அங்கே இறந்து கிடந்தது தன் மகள் இல்லை, எங்கோ காணாமல் போய்விட்டாள் என ஊரே தேடிக்கொண்டிருக்கும் மரிக்கொழுந்து என.
ஆனால் அந்த உண்மையை உலகத்துக்குச் சொல்லி தன் மகளுக்கு ஒரு தீங்கை ஏற்படுத்த அந்தத் தாய் தயாராகவே இல்லை.
இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் தன் மகள் உயிரோடாவது இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தார். இதே எண்ணத்தில் வேறொரு தாயும் நிம்மதியாக வாழ்ந்துவிட்டு போகட்டுமே எனத் தன் பாவத்துக்கு ஒரு நியாயமும் கற்பித்துக் கொண்டார்.
எங்கிருந்தாலும் தன் மகள் எந்தக் குறையும் இல்லாமல் நல்லபடியாக இருக்க வேண்டும் என்கிற பிரார்த்தனை மட்டும் அந்தத் தாய்க்கு ஒவ்வொரு நொடியும் மனதிற்குள் இருந்து கொண்டே இருந்தது.
இப்படி ஒரு உன்னதமான நிலையில் அவளை மறுபடி பார்த்தப்பொழுது அவரது உள்ளம் மகிழ்ச்சியில் விம்மியது.
மகளைப் பார்த்த தெம்புடன் மகனும் ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றிப் பெற்றுவிட்டான் என்கிற மகிழ்ச்சியும் சேர்ந்துகொள்ள அவரது உடல்நிலை சீக்கிரம் முன்னேற்றம் அடைந்து உற்சாகமாக நடமாடத் தொடங்கினார்.
அதன் பிறகு ராஜத்தை அழைத்துக் கொண்டு மல்லிகாவும் நன்காட்டூர் வந்து, தம்பிகள் அவர்களுடைய மனைவிமார்கள் பிள்ளைகள் தங்கை தங்கையின் கணவர் அவளுடைய மகன், மகள் மருமகன் என எல்லோரையும் சந்தித்து மிகவும் மகிழ்ந்து போனாள்.
என்றைக்குமே அவள் வல்லரசுவைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை. நடந்த தவறில் அறியாமையால் என்றாலும் கூடதான் செய்த பிழையும் கலந்தே இருக்கவே, அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு வரவில்லை. இன்னும் சொல்லப்போனால், அப்படி ஒருவன் தன் வாழ்க்கையிலிருந்தான் என்பதான அவனுடனான நினைவுகளைச் சுத்தமாகத் துடைத்தெறிந்திருந்தாள்.
ஆனால் தன்னைப் பெற்றவனின் மீது மட்டும் கட்டுக்கடங்காத கோபம் இன்று வரை கணன்று கொண்டே இருக்கிறது. அந்த மனிதனை அவள் மன்ன்க்கத் பார்க்கவில்லை.
அவள் மட்டுமில்லை, கணவனை ஏற்கனவே மனதளவில் விலக்கிவைத்திருந்தாலும் ‘இனி தன் காலம் முழுவதும் மல்லியுடன்தான்’ என்ற முடிவுக்கு வந்துவிட்ட ராஜமும் அவரை விட்டு விலகி வெகு தூரம் சென்றுவிட்டார். குணாவுக்கு சட்டப்படியான தண்டனை எதுவும் கிட்டாமல் போனாலும் கூட மனைவி மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டுவிட்டதால் செத்த பாம்பின் நிலைதான் அவருக்கு.
குணா, என்று ஸ்வராவை நேரில் பார்த்தாரோ அன்றே அவருக்கு உள்ளுக்குள்ளே ஏதோ பதைபதைப்பு உருவாகி இருந்தது. காரணம் அவள் அச்சு அசலாக இள வயது ராஜத்தின் சாயலில் இருந்தாள்.
உண்மையில் அவளை நேரில் பார்த்த தினம் ராஜதிற்கு ஏற்பட்ட உணர்வும் கூட அதுதான். ஆனால் அவளுடைய வாழ்நாளில் தன்னுடைய பிம்பத்தை முழுமையாக ஒரு முறை கூட அவள் கண்ணாடியில் பார்த்ததில்லை. தன்னுடைய சிறு வயது முகமே அவளுடைய நினைவிலிருந்து மறைந்து போயிருந்தது. அதனால்தான் ஸ்வராவை அவளால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
அவள் தன் பேத்தி என்று தெரிந்த பிறகு ராஜம் அடைந்த பேருவகையை வார்த்தையால் விவரிக்க முடியாது. தன்னுடைய அத்தனை துயரத்தையும் தன் குலதெய்வத்தைப் போல அன்று கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண் இன்று தன் வாழ்க்கையின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் திரும்பக் கொண்டு வந்திருக்கிறாள் என்றால் அவளை எந்த அளவுக்கு இந்த மனுஷிக்குப் பிடித்துப் போயிருக்கும்?
அதுவும் வல்லரசுவுக்கும் வேலுச்சாமிக்கும் அவள் எழுதியிருந்த தீர்ப்பு இந்த மனுஷியை மிகவும் பெருமையாக உணரச் செய்தது.
தனக்கே தெரியாமல் தன் பெயரில் ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமே உருவாகி இருக்கிறது என்றால் அது சும்மாவா?!
காலம் யாரையும் கடைசி வரை கஷ்டத்திலேயே வைப்பதில்லை என்பதை முற்றிலுமாக உணர்ந்தார் ராஜம்.
இதெல்லாம் ஒரு பக்கம் நடந்தேறிக் கொண்டிருக்க, சக்தியின் அம்மா விசாலாட்சி ஒருநாள் மல்லிகாவை நேரில் வந்து சந்தித்து தன் மகனுக்கும் ஸ்வராவுக்குமான திருமணத்தைப் பேசி முடித்தாள்.
அவன் முதன்முறை நன்காட்டூர் வந்த பொழுதே அவனுடைய அப்பாவின் உறவை உதறியிருந்தான் என்பதை அவள் மூலம் அறிந்துகொண்டனர். மகனுக்காக தானும் அவனுடனேயே வந்துவிட்டார் அந்தப் பெண்மணி.
நடப்பது நிஜம்தானா என ஸ்வராவாலேயே நம்ப முடியவில்லை. இந்த உண்மையெல்லாம் தெரிந்த பிறகுதான் அவள் சக்தியுடன் முகம் கொடுத்தே பேசினாள் எனலாம்.
அவனுடைய அம்மா வந்து பேசிவிட்டுப் போன பிறகு ஒரு நாள் அவளைப் பார்க்க அவர்கள் வீட்டிற்கே வந்தான் சக்தி. அவளுடன் தனியே பேச வேண்டும் என்று அவளை அவர்கள் வழக்கமாக போகும் தனியார் கடற்கரை விடுதிக்கு அழைத்துச் சென்றான்.
மெல்லியதாக மழைத் தூறிக் கொண்டிருக்கும் ஒரு ரம்மியமான மாலை நேரமது.
தன்னை மணக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக அவனுடைய மொத்த அடையாளத்தையும் துறந்து பரம்பரை சொத்துக்கள் மொத்தத்தையும் தூக்கி எறிந்து விட்டு அவளுக்காக ஓடி வந்திருக்கும் அவனை நினைத்து அவள் மனம் முழுவதும் பெருமை கொண்டது.
'ஆடூஉ குணங்கள்' என அம்மா சொன்னதில் பெருமளவுக்குப் பொருந்திப்போய் அவர் சொன்ன ஆண்களின் வரிசையில் இணைத்துவிட்டானே!' என்பதாகப் பூரித்துப் போய் மனம் முழுவதும் மத்தாப்பாய் மலர, மனதின் மகிழ்ச்சியை வார்த்தைகளாகக் கோர்த்து அவனைப் பாராட்டிப் பேசக் கூட இயலாத நிலையிருந்தாள்.
கடல் அலைகள் காலை நனைக்க, கையோடு கைகோர்த்தபடி அமைதியாக இருவரும் நடக்க, அவள் தானாக வாய் திறந்து பேசுவாள் என்று பொறுத்துப் பொறுத்து பார்த்தவன் அது நடக்காமல் போகவும் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அவளுடைய எலும்புகள் நொறுங்கும்படி வன்மையாக அணைத்து அவளுக்குத் தண்டனைக் கொடுத்தான். அதில் 'சக்தி' என்று அவள் முனக, தண்டனை அவளது இதழ்களுக்கு இடம் மாறியது.
நேரம் செல்லச் செல்ல அவனது மார்பிலேயே தஞ்சம் புகுந்தவள், "எப்படி சக்தி இது எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு நீ வந்த?" என்று தாங்க மாட்டாமல் கேட்க, "ஹேய், எனக்கு இந்த விஷயத்துல ஒரு குருநாதர் இருக்காரு யூ நோ?" என்றான் புருவத்தை உயர்த்தி.
"இஸ் இட்!" என அவள் வியந்த பாவனையில் கிண்டலாகக் கேட்க,
"யா… ஈவன் உனக்கும் தெரிஞ்ச ஆளுதான்" என்று அவன் சொல்லவும், கேள்வியாக அவள் ஏறிட,
"பிரின்ஸ் ஹேரி… அவர தெரியாதா உனக்கு? இங்கிலாந்து ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்மா… எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, அந்த ஃபேமிலியை விட்டு வெளியில் வந்து, பிரின்சஸ் மேகன் கூட அவரோட லவ் லைஃப்காக ஒரு சாதாரண ஆள் போல வேலை செஞ்சு சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காரு. அதெல்லாம் கம்பேர் பண்ணும் போது நான் ரொம்ப சாதாரண ஆளு" என்று இலகுவாகவே அவன் சொல்ல, காதலுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
சசி, சரோஜா உட்பட தொடக்கம் முதலே அவர்களுடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் அன்பான மக்களும், பொக்கிஷம் போல அவளது வாழ்க்கையில் நீண்டிருக்கும் அவளுடைய தாய் வழி சொந்தங்களும் சூழ, பகலவன் திலகா, ஜீவானந்தம் போன்ற இளைய தலைமுறை குதூகலத்துடன், அல்லிக்கொடி, ராஜம் தலைமையில் அவளுடைய அம்மாவும் மாமியாரும் முன் நின்று நடத்த, மிகவும் விமர்சையாக நடந்து முடிந்தது ஸ்வரா-சக்தி திருமணம்.
இதோ இன்று அவர்களுடைய பூர்வீக இந்தக் கிராமத்து வீட்டில் அவர்களுக்கான விருந்து தடபுடலாக ஏற்பாடாகி இருக்க, அவர்களை வரவேற்கத் தயாராக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார் ராஜம்.
அவர் மட்டுமா, "பாத்தியாடி காலம் போன காலத்துல இந்த ராஜத்துக்கு வந்த வாழ்வ, பட்டுப் புடவை என்ன? கல்லு வெச்ச தோடென்ன? எட்டுக்கல்லு பேசரி என்ன? அட்டிகையும், கை நிறைய வளையலும் என்ன? இவ புதுப் பொண்ணா இல்ல இவ பேத்தியா?" என வம்பு பேசியபடி அந்தப் புதுமண தம்பதியரை வேடிக்கை பார்க்கும் ஆவலில் ஊரே காத்திருந்தது.
ஒன்றன்பின் ஒன்றாக கார்கள் அணிவகுத்து வந்து நிற்க, தாய்மாமன்களும் மாமிகளும் சித்தியும் சித்தப்பாவும் அவர்கள் பெற்ற மக்களும் கூடி நின்று வரவேற்க, அவர்களுடனே சேர்ந்து ஒப்புக்குச் சப்பானியாக குணாவும் நின்றிருக்க, மல்லிகா, அல்லிக்கொடி, விசாலாட்சி, பகலவன், சீராளன் சாந்தா என ஒரு படையே இறங்கி வீட்டிற்குள் செல்ல, தங்க ஜரிகை வேய்ந்த பட்டுப் புடவை உடுத்தி, மிதமான அலங்காரத்துடன் ஸ்வரா காரில் இருந்து இறங்க, மற்றொரு பக்கமாக இறங்கிச் சுற்றி வந்து அவளது கரம் பிடித்து நின்றான் பட்டு வேட்டி சட்டையில் பாங்காகத் தோற்றமளித்த சக்தி.
மனம் முழுவதும் மகிழ்ச்சிக் கூத்தாட ஆலம் சுற்றி அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு, அதை எடுத்து வந்துதான் போட்ட கோலத்தின் நடுவில் ஊற்றிவிட்டு அவர்கள் பின்னோடே அந்த வீட்டிற்குள் சென்றார் ராஜம் அவர்களை உபசரிக்க.
தேற்ற ஆளில்லாத அவருடைய அழுகைகளையும், ஆற்றாமைகளையும் எத்தனை எத்தனையோ துயரங்களையும் பார்த்து சலித்துப்போய், மௌன சாட்சியாக நின்ற அந்த வீடு… அந்தப் பெண்மணியின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் ஒரு சேர அன்றுதான் பார்த்து… இரசித்து… மகிழ்ந்தது!
முற்றும்
Very touching story
But what happened to Vallarasu and his family?
Matured style of writing also.
Best and hearty wishes to the writer.
Arumaiyana story.
Wowww!!!.... solla vaarthaiye illaa.... fantabulous storyyy!!... reality ah romba azhaga sollitinga!!!... loved ur way of writing and ur thoughts!!... first story ungalodathu padikiren!!... u become one of myyyy fav writers!!... innum neraiya neraiya ezhuthunga!!.. More to go!!... best wishes for ur future endeavors👌🏻😍💖
Nice story..