காதல்-11
கண்ணன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்த சமயம்...
"அது என்ன மூணு நாளா அண்ண ஆகாரம் இல்லாம கிடந்து விசனபட்டுண்டு இருக்கறது?
டாக்டர் படிப்பு படிக்க முடியலைன்னா நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி வேற எதாவது படிப்பை படிக்கறதுதானே!
உனக்கு கீழ ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காளோல்லியோ. நான் அவாளை பத்தி கவலை படுவேனா; இல்ல உன்னை பத்தி கவலை படுவேனா?
கழனில பூச்சி மருந்து தெளிக்க ஆளை வர சொல்லியிருக்கேன்; அங்க போய் ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடறேன்.
போ; போய் தீர்த்தாமாடிட்டு (நீராடிவிட்டு) கோவிலுக்கு போய் சன்னதியைத் திறந்து வை!
கொஞ்ச நேரத்துல மடப்பள்ளி வேலையை முடிச்சிட்டு சித்தியா வந்து திருமஞ்சனம் பன்றேன்னு சொல்லியிருக்கான்.
பெருமாள் சேவிக்க மெட்ராஸ்ல இருந்து சேஷுவும் அவரோட ஆம்படையாளும் வரப்போறா!
மத்தது இல்லேன்னா கூட நமக்கு இருக்கவே இருக்கு சன்னதி கைங்கர்யம்.
ஜான் கல்லை கழுவினா முழம் சாதம்னு சொல்லுவா!
இதுதான் நம்மக்கு விதிச்சது.
இதுதான் நமக்கு நிரந்தரம்! புரிஞ்சிக்கோ!"
அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு மிகக்குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் கை நழுவிப் போயிருக்கத் தனியார் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைக்கும் அளவிற்கு குடும்ப பொருளாதாரம் இடம் கொடுக்காமல் போகவும் ஏமாற்றத்தில் மனதிற்குள்ளேயே மறுகிக்கொண்டிருந்த கண்ணனைத் தேற்றும் வழி தெரியாமல் அவனை கடிந்துக்கொண்டு அங்கிருந்து சென்றார் ராகவன்.
அந்த இரண்டு கட்டு வீட்டின் ரேழி எனப்படும் பகுதியில் இருக்கும் திண்ணையில் தளர்ந்துபோய் படுத்திருந்தவன் அவரை எதிர்த்து கேள்வி கேட்டு பழக்கமில்லாத்தால், 'ஏன் பா! நம்மள மாதிரி இருக்கறவா டாக்டருக்கு படிக்க கூடாதா? என்னை விடக் கம்மியா மார்க் வாங்கினவாளுக்கெல்லாம் மெடிக்கல் சீட் கிடைச்சிருக்கு; நான் என்ன பாவம் பண்ணேன்; நன்னாத்தானே ஸ்ரத்தையா படிச்சேன்; இப்படி பேசறீங்களே!’ என மனதிற்குள்ளேயே கேள்விகேட்டுக்கொண்டு, அப்பாவின் சொல்லைத் தட்ட இயலாமல் எழுத்து குளிக்கச் சென்றான் கண்ணன்.
அவனைப் பொறுத்தவரை நினைவு தெரிந்த நாளிலிருந்து தான் ஒரு மருத்துவனாக ஆக வேண்டும் என்பது அவனது லட்சியம்.
வெறும் லட்சியம் என்பதையும் தாண்டி அது அவனது கனவு, பேச்சு, மூச்சு, உயிர் என அனைத்துமாக இருந்தது.
அவர்கள் கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை மட்டுமே இருக்க, அங்கிருந்து பல கிலோமீட்டர் கடந்து வந்தவாசியில் போய் பன்னிரண்டாம் வகுப்பை முடித்திருந்தான் அவன்.
பள்ளிப்படிப்பையும் தாண்டி வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் மருத்துவம் சார்ந்த புத்தகங்களை நூலகத்திலிருந்து கொண்டுவந்து படிப்பான் அவன்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் தன்னை ஒரு மருத்துவனாகவே கற்பனை செய்துக்கொண்டிருகவனுக்கு திடீரென்று அது தனக்குக் கிட்டவே கிட்டாது என்கிற நிலை வந்துவிட அதைக் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை அந்த சிறு பிள்ளையால்.
அவன் சிந்தை முழுதும் அந்த பாதிப்பே நிரம்பியிருக்க வீட்டின் பின்கட்டிலிருந்த குளியலறையில் குளித்துவிட்டு வெளியில் வந்தான் அவன்.
அப்பொழுதென்றுபார்த்து, பாதி உபாயோகப்படுத்திவிட்டு வைத்திருந்த வெள்ளை நிற துணிகளை வெளுக்கப் பயன்படும் 'க்ளோரின் பிளீச்' அவனது கண்களில் பட, மூளை மரத்துப்போன நிலையிலிருந்தவன் வேறு எதையுமே கொஞ்சமும் சிந்திக்காமல், அதை அப்படியே ஒரே மிடறில் குடித்துவிட்டு அந்த 'பாட்டில்'லை வீசி எறிந்தான்.
அவனுடைய அப்பா சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் எதிரொலிக்கவே, நாவும் தொண்டையும் எரியத்தொடங்கியதைக்கூடப் பொருட்படுத்தாமல், ஒரு வைராக்கியம் தலை தூக்கக் கொடியில் உலர்ந்துகொண்டிருந்த நான்கு முழம் வேட்டியை இடையில் அணிந்துகொண்டு, ஒரு துண்டை அதன்மேல் கட்டிக்கொண்டு, அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நியமங்களை முடித்துக்கொண்டு நேராக அவர்கள் பரம்பரையாக கைங்கரியம் செய்துவரும் கரியமாணிக்க வரதர் சன்னிதி நோக்கிப் போனான் அவன்.
அந்த சிறு கிராமத்திலிருக்கும் சிறிய பழமையான கோவில் அது.
அந்த கோவிலுக்கென்று கொஞ்சம் நிலங்கள் மட்டும் இருந்தது.
அதில் வரும் வருமானத்தின் மூலம்தான் அங்கே நித்திய பூஜைகளும் சில முக்கிய உற்சவங்களும் நடக்கின்றன.
பிறந்தநாள் திருமணநாள் என அத்தி பூத்தாற்போன்று யாராவது அந்த பெருமாளைத் தரிசிக்க வந்தால் உண்டு.
மற்றபடி தினமும் அந்த கோவிலுக்கு வருபவர் எவரும் இல்லை.
உற்சவ சமயங்களில் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் கூட்டம் இருக்கும் அவ்வளவே.
வருமானம் இல்லாத கோவிலை அறநிலையத்துறை கூட கண்டுகொள்வதில்லை என்பது கசப்பான உண்மை.
உலகையே ரட்சிக்கும் பரம்பொருளாக இருந்தாலும் கூட செல்வாக்கு மிக்கவராய் இருந்தால் மட்டுமே அவரை சுற்றி கூட்டமும் கோலாகலமும் இருக்கும் போலும்.
அந்த கோவில் மூலமாகப் பெரிதாக எந்த வருமானமும் அவர்களுக்கு இல்லை என்றாலும் அப்பாவும் தாத்தாவும் கட்டிக் காத்த மரபை விட்டு விலக மனமின்றி ராகவன் அந்த கோவிலின் ஆராதனை பொறுப்பை ஏற்றிருக்க வரதன் அவருக்குத் துணை நின்றார்.
கண்ணனுடைய அப்பா ராகவன் மற்றும் அவனது சித்தப்பா வரதன் இருவருக்கும் பொதுச் சொத்துக்களாக அவர்கள் இருக்கும் வீடும் மற்றும் கொஞ்சம் விளைநிலங்களை இருக்கின்றன.
அதில் வரும் வருமானத்தை மட்டுமே நம்பி அவர்களுடைய அழகான அந்த கூட்டுக்குடும்பம் இருக்கிறது.
மனதில் எந்த ஒரு சிந்தனையுமில்லாமல் பழக்கம் காரணமாக அனிச்சை செயல்போல கோவிலை அடைந்தவன் வீதியில் இருக்கும் கருங்கல்லினால் ஆன கருட கம்பத்தைச் சாஷ்டாங்கமாகச் சேவித்தான்.
அந்த கோவிலின் முக்கிய வாயில் ஏற்கனவே சுத்தம் செய்வதற்காகத் திறந்துவைக்கப்பட்டிருக்க, அதனைக் கடந்து உள்ளே சென்றான் அவன்.
அகண்ட கருங்கல்லினால் ஆன அதன் படியை மிதிக்காமல் காலை அகற்றி அவன் ஒரு எட்டு வைக்க வயிற்றுக்குள் சுரீர் என்றது.
அதைப் பொறுத்துக்கொண்டு உள்ளே சென்றவன், மூன்று முறை கைகளைத் தட்டிவிட்டு,
கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வாஸம்த்யா ப்ரவர்ததே |
உத்திஷ்ட நர்ஸார்தூல கர்தவ்யம் தைவமாஹ்னிகம் ||
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ |
உத்திஷ்ட கமலாகாந்த த்ரைலோக்யம் மங்களம் குரு ||
என முணுமுணுத்தவாறே கையில் கொண்டுவந்திருந்த பெரிய சாவியைக் கொண்டு சன்னதியின் மரத்தாலான கதவோடு இணைந்திருந்த பூட்டை திறந்து உள்ளே நுழைய, அந்த அதிர்வில் கதவில் கோர்க்கப்பட்டிருந்த மணிகள் ஓசை எழுப்பின.
கர்பகிரஹத்தையும் அதற்கு முன்பாக இருந்த சிறிய மண்டபத்தையும் தூய்மைப் படுத்தியவன் பின் தண்ணீரில் கைகளைச் சுத்தம் செய்துகொண்டு ஸ்ரீதேவி பூமிதேவி சகிதம் அங்கே எழுந்தருளியிருந்த கரியமாணிக்க வரதரின் மூலவ உற்சவ விக்கிரகங்களின் மேல் இருந்த வாடிய மலர்களை எடுத்து ஓரமாக இருந்த கூடையில் போட்டான்.
அதற்குள் அங்கே வந்த வரதன், "கண்ணா! போய் கிணத்துல இருந்து கொஞ்சம் ஜலம் தூக்கிண்டு வந்து கொடுப்பா! அப்புறம் மடப்பள்ளில திருமஞ்சனத்துக்கு தேவையான சாமானெல்லாம் இருக்கு; அதையும் கொண்டு வா" என்று சொல்ல அனைத்தையும் செய்துமுடித்தவன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல், கோவிலை ப்ரதக்ஷிணம் செய்து சுற்றி வருவதற்காக போடப்பட்டிருக்கும் நடைபாதையில் ஒரு ஓரமாகப் போய் சுருண்டு படுத்துக்கொண்டான்.
சில நிமிடங்களில் ராகவன் கோவிலுக்குள் வர, அவருடன் சேஷாத்ரியும் கீதாவும் பள்ளிப் பருவத்திலிருந்த ராதாவும், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்கள் பூர்விகமாக அந்த ஊரில் குடிகொண்டிருக்கும் பெருமாளைத் தரிசிப்பதற்காக அங்கே வந்திருந்தார்கள்.
எல்லோர் கவனமும் தெய்வ ஆராதனையில் இருக்க, அங்கே படுத்திருந்த கண்ணனை யாரும் கவனிக்கவில்லை.
மடப்பள்ளியிலிருந்து பிரசாதங்களைக் கொண்டுவரும் பொருட்டு வெளியில் வந்த வரதனின் கண்களில் தெய்வாதீனமாக விழுந்தான் கண்ணன்.
துணுக்குற்றவராக அவனை நெருங்கியவர், "கண்ணப்பா! ஏன் ராஜா இங்க வந்து படுத்துண்டு இருக்க?" எனக் கேட்டுக்கொண்டே தமையனின் மகனைத் திருப்ப, முகமெல்லாம் வியர்த்துபோய் அவன் வலியில் துடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவர், "ஐயோ! கண்ணா! என்னடா பண்றது! ராஜா! என்னடா ஆச்சு! தேள் பாம்பு எதாவது கடிச்சுடுத்தா?" என்று பதற, அவரது குரல் கேட்டு மற்ற அனைவரும் அங்கே ஓடி வந்தனர்.
மகனைப் பார்த்துப் பதறிய ராகவன், "ஐயோ! கண்ணா! என்னடா பண்ணிட்ட!
ஆதங்கம் தாங்காம அப்பா ஏதோ சொல்லிட்டண்டா!
அதுக்காக இப்படி பண்ணிட்டியா" என கதறவும், ஒரு மருத்துவராக அவனைப் பரிசோதித்த சேஷாத்ரி, "அவனுக்கு வாயெல்லாம் வெந்துபோயிருக்கு!
உடனே ஹாஸ்பிடலுக்கு கொண்டு போறதுதான் நல்லது" என்று சொல்லிவிட்டு, "கீதா! நீ ராதாவை அழைச்சிண்டு போய் ரங்கா மாமா (கண்ணனின் சின்ன தாத்தா) ஆத்துல இரு! நான் இவனை ஹாஸ்பிடலுக்கு கூட்டிண்டு போறேன்" என்றவர் யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் ஒடிசலான தேகத்தில் நொறுங்கிப்போயிருந்த அந்த பதின்ம வயது பாலகனை தன் கைகளிலேயே ஏந்திக்கொண்டு தான் வந்த காரிலேயே அவனை போட்டுக்கொண்டு ராகவனை உடன் அழைத்துக்கொண்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தார்.
அவர்கள் மருத்துவமனையை நெருங்குவதற்கு முன்பாகவே அவனது நிலை ஓரளவுக்குப் புரிந்தது சேஷாத்ரிக்கு.
அவன் 'க்ளோரின் ப்ளீச்'ச்சை உட்கொண்டிருப்பது அவன் தூக்கி எறிந்த பாட்டில் மூலமாகத் தெரிந்துபோனது.
நல்ல வேளையாக அது தீரும் தறுவாயிலிருந்ததால் அவனுடைய சித்தி ராஜி அதில் தண்ணீர் கலந்து வைத்திருக்கவும் அதன் பாதிப்பு கொஞ்சம் குறைவாக இருக்க, தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டான் கண்ணன்.
சிகிச்சை முடிந்து தெளிவான நிலைக்கு வர முழு இருபத்திநான்கு மணி நேரம் தேவைப் பட்டது கண்ணனுக்கு.
அதுவரை அங்கிருந்து நகரவில்லை சேஷாத்ரி.
ராகவன் அனந்தி இருவருக்குமே அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது அந்த மனிதரைப் பார்த்து.
தன் மூத்த மகள் அனுபமாவை மருத்துவராக்கிப் பார்க்கவேண்டும் என்ற ஆசையிலிருந்தார் அவர்.
ஆனால் அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் பிடிவாதமாக பீஏ இசையில் போய்ச் சேர்ந்தாள் அவள்.
அத்துடன் நிற்காமல், மூன்றாம் ஆண்டு படிக்கும்பொழுதே அரவிந்தனை காதலிக்கிறேன் என்று அவள் வந்து நிற்கவும் வேறு வழி தெரியாமல் அவனுக்கே அவளைத் திருமணம் செய்து கொடுக்கவேண்டியதாக ஆகிப்போனது.
மனம் நொந்துபோய் இருந்தவர் நிம்மதியைத் தேடி கோவிலுக்கு வந்திருந்தார்.
எல்லா வாய்ப்புகளும் இருந்தும் அதை உதறித் தள்ளிவிட்டுப் போன மகளை எண்ணி கண்ணனை அவளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார் சேஷாத்ரி.
நீண்ட நாட்களாக ஒரு மகன் இல்லையே என்ற ஏக்கத்திலிருந்தவரின் கண்களுக்கு அவன் ஒரு மகனாகவேத் தெரிந்தான்.
கண்ணனின் மனநிலையை நன்கு உணர்ந்தவருக்கு அவனை மருத்துவராக்கிப் பார்க்கும் ஆசை மனதிற்குள் துளிர்த்தது.
Comments