top of page
Writer's pictureKrishnapriya Narayan

Kadhal Va..Radha 5

காதல்-5


எந்த வித உணர்ச்சிகளையும் முகத்தில் வெளிக்காண்பிக்காமல், 'நீ சொன்ன விஷயம் என் செவிகளிலேயே ஏறவில்லை; அது என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை' என்பதுபோல தன் கைப்பேசியை குடைய ஆரம்பித்துவிட்டான் கண்ணன்.


அவனது அந்த அலட்சியப் போக்கில் கடுப்பான ராதாவால் கோபத்தில் பற்களை மட்டுமே கடிக்க முடிந்தது.


அதே கோபத்துடன் மருத்துவமனையின் வாயிலில் அவனை இறக்கிவிட்டவளின் வாகனம் சீற்றத்துடன் பறந்தே போனது.


பின் உள்ளே நுழைந்தவன் நேராக சேஷாத்ரியிடம் சென்றான்.


அவனைப் பார்த்ததும், "வாடா கண்ணா!" என்றவர், "ஒரு சர்ஜரி இருக்கு; இன்னைக்கு என் கூட இருக்கியா?" என அவர் கேட்க, "ஓகே குரு!" என்றவன், அவன் அன்று பரிசோதித்த அந்த சிறுவனைப் பற்றி விளக்கிவிட்டு, "அவனோட பேரன்ட்ஸ் உங்களை மீட் பண்ண வருவா! உங்களுக்கு ஓகேன்னா சர்ஜரி ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்" என்றான் அவன்.


"நீ சொன்னா சரிதான்!" என்று தன் சம்மதத்தை ஒரே வரியில் சொல்லிவிட்டார் அவர்.


அதற்கு புன்னகைத்தவன், "நாளைக்கு கேஸ் எதுவும் இல்ல; அதனால ஆஃப் எடுத்தாகலாமான்னு பாக்கறேன் குரு!" என்றான் கண்ணன்.


"என்ன அம்மா அப்பா ஊர்ல இருந்து வாறாளா?" என அவர் கேட்க, "ஆமாம் குரு! மைத்ரேயீ சீமந்தம் வறதில்ல? அதுக்கு வரிசை சாமானெல்லாம் வாங்கணும்" என அவன் சொல்ல, "அப்ப கண்டிப்பா நீ போய்ட்டு வா" என்றார் அவர்.


"அவா கிளம்பறது தெரிஞ்சதும் சின்ன தாத்தாவும் கூடவே வரேன்னு சொன்னாராம்!


தகவலை உங்க கிட்ட சொல்லிட்டேன்!


அப்பறம், 'தாத்தா வந்திருக்கார்; நீ என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா'ன்னு நீங்க என்மேல கோப படக்கூடாது" என அவன் சொல்ல, "ஓஹ்! தாத்தாவும் வாறாரா?


அப்ப அவசியம் அவரை வந்து பார்க்கணுமே!" என்றவர், "எவ்வளவு பெரிய விஷய ஞானிடா அவர்; 'நல்லாரைக் காண்பதுவும் நன்றே'ன்னு சொல்லி இருக்காளோல்லியோ.


பெரியவாளை தரிசனம் பண்றதே நல்லதுடா கண்ணா!" என்றார் அவர் மனதிலிருந்து.


அதற்குள் அவர்களுடைய கடமை அவர்களை அழைக்க, அதை நோக்கிப் போனார்கள் இருவரும்.


***


அறுவை சிகிச்சை முடிய அதிக நேரம் எடுக்க, அனைத்தும் முடிந்து கிளம்ப நேரம் ஒன்பதைக் கடந்திருந்தது.


சேஷாத்திரியுடைய வாகனத்தைச் செலுத்திக்கொண்டு அவருக்குத் துணையாக அவருடைய அகத்திற்கு (வீட்டிற்கு) வந்தான் கண்ணன்.


வரவேற்பறை 'சோஃபாவில்' தாடையில் கையை முட்டுக்கொடுத்தவாறே 'உர்ர்'ரென உட்கார்ந்திருந்தாள் ராதா. அருகில் உட்கார்ந்து கைப்பேசியில் எதையோ குடைந்தவண்ணம் இருந்தார் கீதா.


உள்ளே நுழையவும் மகளுடைய அந்த கோலத்தைக் கண்டவர், "ராதா! இப்ப எந்த கப்பல் கவுந்துபோச்சுன்னு இப்படி கன்னத்துல கை வெச்சிண்டு உக்காந்திருக்க!" எனச் சற்று கடிவதுபோல் கேட்டார் சேஷாத்திரி.


"ப்ச்... நானும் இதையேதான் சொல்லிண்டு இருக்கேன்னா! எங்க காதுல வாங்கறா" என்ற கீதா, "நாளைக்கு யாரோ ஃப்ரண்ட்டோட கல்யாணமாம்; ஏதோ தீம் ட்ரெஸ்சிங்காம்; இப்பதான் அந்த மீரா மெஸேஜ் பண்ணியிருக்கா; புடைவைக்கு மேட்சிங்கா ஃபேஷன் ஜூவல்லரிலாம் ஏதோ வாங்கணுமாம்!


நம்மது பக்கத்துலன்னா இந்த விஜய் கலெக்ஷன்ஸ் இருக்கில்ல? அங்கதான் கிடைக்கும்.


இப்பவே போய் வாங்கப் போறேன்னு கிளம்பினா.


மணி பத்தாயிடுத்து தனியா போகாதடின்னு சொன்னேன். அதுதான் இப்படி உர்ன்னு உட்கார்ந்துண்டு இருக்கா.


இத்தன்நேரத்துக்கு கடையை சாத்தி இருந்தாலும் சாத்தியிருப்பாளோல்லியோ.


இருக்கிறது எதையாவது எடுத்துப் போட்டுண்டு போகப்படாதா?


அதைச் சொன்னா இப்படி காந்தாரி வேஷம் போட்றா இவ" என மகளைப் பற்றிக் குற்றப்பத்திரிகை வாசித்தார்.


"பா... எல்லாரும் தீம் டிரஸ் அண்ட் மேக்கப்போட வருவா.


நான் மட்டும் ஆட் ஒண் அவுட் மாதிரி நிக்கணும்.


சொன்னா அம்மா புரிஞ்சுக்க மாட்டேங்கறா?" என எதிர் வாதம் செய்தாள் மகள்.


யாருக்காகப் பேசுவது என்ற குழப்பத்தில் சேஷாத்திரி பரிதாபமாகக் கண்ணனைப் பார்க்க, அவர்கள் இருவரது வாக்குவாதத்தைப் பார்த்ததும் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றிருந்தான் அவன்.


"மாமி உங்க பொண்ணை உடனே கிளம்ப சொல்லுங்கோ! அவளுக்குத் துணையா நான் போறேன்! ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாம்!" எனக் கண்ணன் சொல்ல, "ப்ச்... பாவம்டா நீ! கர்த்தாலேந்து இங்கயும் அங்கேயுமா அலைஞ்சுண்டு இருக்க! நீ ஆத்துக்கு போய் ரெஸ்ட் எடு!" என்றார் மாமி.


ராதாவுக்குமே அது புரிய, "பரவாயில்ல; எனக்காக யாரும் கஷ்டப்படவேண்டாம்!" என்றாள் அவள் அறை மனதுடன்.


"ப்ச்... மாமி பிகு பண்ணாம உடனே வரச்சொல்லுங்கோ! நீல்கிரீஸ்ல கொஞ்சம் திங்ஸ் வாங்கவேண்டி இருக்கு! எப்படியும் பதினொண்ணு வரைக்கும் திறந்திருக்கும்; அப்படியே அதையும் முடிச்சிடுவேன்!" எனக் கண்ணன் சொல்ல, பந்தைப்போலக் குதித்து 'சோஃபா'விலிருந்து எழுந்தவள் அவளது அறை நோக்கிப் போனாள். வரும்பொழுது அடுத்தநாள் உடுத்தவேண்டிய புடவை அடங்கிய பையுடன் வந்தவள் வேகமாகச் சென்று 'ரிமோட்' சாவியின் மூலமாக அவளுடைய வாகனத்தை திறந்துவிட்டு அதன் அருகில் நின்றாள்.


அவளைப் பின்தொடர்ந்து கண்ணன் அங்கே வந்ததும், "நீங்க டிரைவ் பண்றீங்களா? இல்ல நானே பண்ணட்டுமா?" என அவள் கேட்க, "உனக்கு துணையாதான் நான் வரேன்னு சொன்னேன்! உனக்கு ட்ரைவரா இல்ல" என குதர்க்கமாகச் சொன்னவன், காருக்குள் உட்கார, உதட்டைக் கோணியவாறு வாகனத்தைக் கிளப்பினாள் ராதா.


கழுத்தை அப்படி இப்படியுமாக திருப்பி கையால் நீவி விட்டுக்கொண்டான் கண்ணன். 'ஓ... கழுத்துவலியாலதான் அய்யா கார் ட்ரைவ் பண்ணமாட்டேனு சொல்லிட்டாரா? ப்ச்... பாவம்; ரொம்ப நேரம் நின்னுண்டே ஆபரேஷன் பண்ணியிருப்பர்' என மனதிற்குள் இளகினாலும் அதை வெளிக்காண்பிக்கவில்லை அவள்.


பின்பு கைப்பேசியில் அவன் ஏதோ ஒரு தொடர்பைத் தேர்ந்தெடுத்து அழுத்த, "ஹரே சொல்லுங்கோ டாக்டர்! இந்த நேரத்தில என்னை கூப்பிட்டிருக்கீங்கோ" (இது சேட்ஜி சொல்ற 'ங்கோ') என எதிர்முனை உற்சாகத்துடன் அந்த அழைப்பை ஏற்கவும், "பாய்! இப்ப வந்தா உங்க ஷோரூம் திறந்திருக்குமா!' எனக் கேட்டான் கண்ணன்.


"நீங்கோ வாங்கோ ஜீ! உங்களுக்காக திறந்துவெக்கொ சொல்றேன்!" என்றது மறுமுனையில் ஒலித்த குரல்!


"ரொம்ப தேங்க்ஸ்! இன்னும் பத்து நிமிஷத்துல அங்கே இருப்பேன்!" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் கண்ணன்.


அவள் செவிகளை எட்டிய பாதி உரையாடலிலேயே நடப்பது புரிய, சின்னதாக புன்னகைத்துக்கொண்டாள் ராதா.


இதழ் விரியா அந்த சிரிப்பை உணர்ந்தவனுக்கும் புன்னகை தொற்றிக்கொண்டது.


***


சொன்னதை போலவே பத்து நிமிடத்தில் அவர்கள் அந்த 'விஜய் கலெக்ஷன்ஸ்' கடையை அடைய, வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றனர் இருவரும்.


இவர்களுக்காக அங்கேயே காத்திருந்த, மைதா மாவில் செய்த 'சோளா பூரி' போன்ற புசுபுசுவென்ற தோற்றத்துடன் நடுத்தர வயதிலிருந்த கௌதம் ஸ்நேகமான புன்னகை முகத்துடன், "வாங்கோ டாக்டர்! நீங்க நம்ம கடைக்கு வந்ததுல ரொம்பொ சந்தோஷம்! வாங்கோ மேடம்" என அவர்களை வரவேற்றார்.


"உங்க பொண்ணு இப்ப எப்படி இருக்கா?" என கண்ணன் அக்கறையுடன் அவரை விசாரிக்க, "உங்க புண்ணியத்துல சோட்டு நல்லா இருக்குதூ டாக்டர்" என்றார் அவர் உற்சாக குரலில்.


அப்பொழுது அங்கே அணைத்து வைக்கப்பட்டிருந்த மின் விளக்குகளையெல்லாம் ஒவ்வொன்றாக ஒளிரச் செய்துகொண்டிருந்தார் உடன் இருந்த பணியாளர் ஒருவர்.


அதை பார்த்ததும், "சாரி கௌதம் பாய்! நேரம் கெட்ட நேரத்துல வந்து உங்களை டிஸ்டர்ப் பண்றேன்!" என அவன் சொல்ல, "நீங்கோ அப்படியெல்லாம் சொல்லக்கூடாது டாக்டர்!" என்றவர், "இன்னும் கடைய லாக் பண்ணல! இப்போதான் லைட்லாம் ஆஃப் பண்ணாங்கோ!" என்றார்.


பின் அங்கே இருந்த பணியாளரை அழைத்தவர், "ஏய் புக்ராஜ்! இவங்களுக்கு என்னா வேணுமோ காட்டு!" என்று சொல்ல, கையில் கொண்டுவந்திருந்த புடவையை வெளியில் எடுத்தவள், "இதுக்கு மேட்ச்சா பிங்க் கலர் ஸ்டோன்ஸ் வெச்ச கஜலக்ஷ்மி நெக்லஸ் இருக்கா!" என்று கேட்க, அதை எடுத்துக் காண்பித்தார் அவர்.


அத்துடன் நிற்காமல் அதற்கு இணையாக ஜிமிக்கி வளையல்கள் என்று ஒவ்வொன்றாக அவள் தேர்ந்தெடுக்க, 'தங்கமும் வைரமுமா வாங்கி இழைச்சு வெச்சிருக்கா இவளோட அம்மா! இவ என்னடான்னா இந்த அலுக்கு பிலுக்கை இப்படி பொறுக்கி எடுத்துண்டு இருக்கா! இதுக்கே சம்பாதிக்கிற பணம் மொத்தம் காலி ஆயிடும் போல இருக்கே!' என்று எண்ணிச் சிரித்துக்கொண்டான் அவன்.


ஆனாலும் அவற்றின் விலை பத்தாயிரத்தைத் தாண்டவும் வாய் பிளந்தான் கண்ணன்.


அனைத்தையும் அவள் தேர்வு செய்து முடித்த பிறகு, அதற்கான தொகையைச் செலுத்த அவள் கடன் அட்டையை நீட்டவும், "ஐயோ! நம்ம டாக்டர் கிட்ட போய் நான் பணம் வாங்குவனா!" என அவர் மறுக்க, வற்புறுத்தி அதை வாங்கச்செய்தான் கண்ணன்.


அதன் பின் இருவரும் கௌதம் பாய்க்கு நன்றி தெரிவித்துவிட்டு வெளியில் வந்தனர்.


பின் அருகிலிருந்த 'சூப்பர் மார்க்கெட்'டிற்கு சென்று ஆனந்தி கேட்டிருந்த சில பொருட்களை வாங்கிக்கொண்டு வாகனத்தை நோக்கிச் சென்றனர் இருவரும்.


"நானே ட்ரைவ் பண்றேன்" என்று சொன்ன கண்ணன் ஓட்டுநர் இருக்கையில் போய் உட்கார, அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தவள், "யார் அவர்" என்று கேட்க, அவளது கேள்வி புரியாதவனாக, "மொட்டையா யார் அவர்னா? யாரை பத்தி கேக்கற?" எனக் கேட்டான் கண்ணன்.


"அதான் அந்த கௌதம் பாய்! அவர் அப்பாவோட பேஷண்டா என்ன?" என அவள் கேட்க, "இல்ல; என் பேஷண்டோட அப்பா" என்றான் அவன் கிண்டலாக.


"கண்ணன்!" என அவள் அவனை முறைக்க, "நிஜமாத்தான்! இவரோட டாட்டருக்கு நான்தான் ஒரு சர்ஜரி பண்ணேன்" என்றவன், "குட்டி பொண்ணு ராதா!


அவளுக்கு ரெட்ரோபெரஞ்சியல் ஆப்சஸ்னு ஒரு ரேர் கண்டிஷன்!


அது என்னனா; தொண்டைல கொஞ்சம் பெரிய சீழ் கட்டி!அதுவும் பீவர் வேற அதிகமா இருந்துது.


ப்ராப்பரா ட்ரீட் பண்ணலேன்னா அது எக்ஸ்போஸ் ஆகி அந்த சீழ் விண்ட் பைப்; லங்ஸ் எல்லாத்துலயும் போயிடும்; லைஃப் ரிஸ்க் அதிகம்!


சர்ஜரி மட்டும்தான் ஒரே ஆப்ஷன்ங்கற நிலைமையில் கொஞ்சம் க்ரிட்டிக்கல் ஸ்டேஜ்லதான் அந்த பாப்பாவை நம்ம ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்தா.


கட் ஓபன் பண்ணி ஆபரேஷன் பண்ணா தொண்டை கிட்ட அந்த தழும்பு கடைசிவரைக்கும் இருந்திருக்கும்.


அதனால லாப்ராஸ்கோப்பிலதான் பண்ணேன்.


கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் அந்த சர்ஜரி பணவேண்டியதா இருந்தது.


யூ பிலீவ் இட் ஆர் நாட், கிட்டத்தட்ட பிஃப்ட்டி எம்எல் பஸ் ட்ரெயின் பண்ணேன்!


அந்த குழந்தை இப்ப சூப்பரா இருக்கா!


அந்த சந்தோஷம்தான் அவருக்கு!" என்றான் கண்ணன் தன் திறமையால் உண்டான கர்வத்துடன்.


அவன் சொல்லச்சொல்ல அவ்வளவு பெருமையாக இருந்தது ராதாவுக்கு!


மகிழ்ச்சியில் கண்களின் ஓரம் நீர் துளிர்க்க, தன் துப்பட்டாவால் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டவள், அவனைப் பார்த்து "தெறமதான் போங்கோ!" என்றாள் இயல்பாகச் சொல்வதுபோல!


அவன் மேற்கொண்டு ஏதும் கேள்வி கேட்டுவிட இடம் கொடுக்காமல், 'ம்யூசிக் ஸிஸ்ட'தை அவள் பாடவிட,


'கிருஷ்ணா... ஜனார்த்தனா! ஹரி கிருஷ்ணா ஜனார்த்தனா!' என அந்த பாடல் தொடங்கவும் வழக்கம்போல அதை நிறுத்துவதற்காக அவன் கை நீள, பட்டென அந்த கையை அடித்தவள், "இந்த பாட்டை நீங்க இன்னைக்கு ஃபுல்லா கேக்கறீங்கோ சொல்லிட்டேன்!" என்றாள் ராதா.


'பிசாசு' என முணுமுணுத்தவாறே அவன் விழிகள் அவளை முறைக்க அவனது அந்த கரம் 'கார் ஸ்டியரிங்'கை நோக்கி திரும்பச்சென்றது.


யதுநந்தனா கிருஷ்ணா! மதுசூதனா!


கோபிகா வல்லபா! ராதா ரமணா!


என அந்த பாடல் தொடர, அதற்குள் அவர்களுடைய வீடு வரவும், அவள் இறங்கிக்கொள்ள, "நான் உன் காரை எடுத்துண்டு போறேன்! நாளைக்கு எங்காத்துக்கு வரும்போது எடுத்துக்கோ!" என்று சொல்லிவிட்டு வாகனத்தை வேகமாகக் கிளப்பிக்கொண்டு போனான் கண்ணன்!


நந்த கோபாலா! கோபால பாலா முரளிதரா!


ராதே கோபாலா! நந்தன பாலா! ஷ்யாமசுந்தரா!


கிருஷ்ணா! கிருஷ்ணா! கிருஷ்ணா! என அந்த கண்ணனின் நூறு பெயர்களும் கொஞ்சமே கொஞ்சம் ராதையுமாக அந்த பாடல் தொடர அந்த அனுராதாவே அந்த பாடலை பாடியது போன்ற எண்ணத்துடன் தன்னை மறந்து அதன் இனிமையில் கலந்தான் கண்ணன்.


***


அடுத்த நாள் காலை நல்ல நேரமாகப் பார்த்துக் கிளம்பி தி.நகர் சென்றவர்கள் மைத்ரேயியின் சீமந்தத்திற்கு தேவையான புடவை மற்ற பொருட்களையும் வாங்கி வந்தனர்.


அகத்தில் (வீட்டில்) கண்ணனுடைய சின்ன தாத்தாவுக்குத் துணையாக ராகவன் தங்கிவிட, அம்மா ஆனந்தி, மைத்ரேயியுடன் அவனுடைய சின்ன பாட்டியையும் உடன் அழைத்துப் போய் அவர்கள் முழு திருப்திக்குப் பொருட்களை வாங்கி வந்தான் கண்ணன்.


வந்ததும் மதிய உணவை உண்டு முடித்து அனைவரும் ஓய்வாக உட்கார்ந்திருக்கத் தாத்தா கையுடன் கொண்டுவந்திருந்த அவரது ரத்தப் பரிசோதனை அறிக்கைகளைப் பார்த்தவன், "தாத்தா எல்லாமே நார்மலா இருக்கு! சுகர் கூட உங்க வயசுக்கு நார்மல்தான்!" என கண்ணன் சொல்லிக்கொண்டிருக்க அவனது கைப்பேசி ஒலித்தது.


எடுத்து, "சொல்லுங்கோ குரு!" என்று சொல்ல, "கண்ணா இப்ப வந்தா தாத்தாவை பார்க்கலாமா?" என அவர் கேட்க, "ஒரு செகண்ட் இருங்கோ!" என்றவன், "தாத்தா என்னோட குரு உங்களை பார்க்கணுமாம்! இப்ப வரலாமான்னு கேக்கறார்" என்று தாத்தாவை கேட்டான் கண்ணன்.


"இதெல்லாம் கேட்கணுமா? பேஷா வரச்சொல்லுடா" என்றார் அவர்.


அதை அவன் அவனுடைய குருவிடம் சொல்ல, அடுத்த அரைமணி நேரத்தில் மகள் மற்றும் மனைவி சகிதம் அங்கே வந்தார் சேஷாத்திரி!


ஆனந்தி பெண்கள் இருவரையும் வரவேற்க, "ஸ்வாமின்! ஏள்ளா" (எழுந்தருள்க) என அவரை வரவேற்றார் ராகவன்.


இன்முகமாக, "எல்லாரும் க்ஷேமம்தானே!" எனச் சேஷாத்திரி கேட்க, "பெருமாள் அனுகிரஹத்துல எல்லாரும் க்ஷேமம்!' எனப் பதில் அளித்தார் ராகவன்.


அவரை பார்த்ததும் தாத்தா இருக்கையிலிருந்து எழ முற்பட, ஓடி வந்து தடுத்தவர், "அபச்சாரம்! பெரியவா என்னைப் பார்த்து எழுந்துக்கப்டாது!" என்றவர் மனைவியிடம் ஜாடை செய்ய, "மா மைத்து ஒரு தட்டு கொண்டு வா" என்றார் கீதா.


"இரு மைத்து நானே எடுத்துண்டு வரேன்!" எனத் தளிகை அறை நோக்கிப் போனாள் ராதா.


அதை தாத்தாவின் கண்கள் கூர்மையாய் எடைபோட, பாட்டியிடம் ஜாடை செய்தார் அவர்.


ராதா திரும்ப ஒரு தாம்பாளத்துடன் வர, வாங்கி வந்திருந்த ஆப்பிள்களையும் கூடவே சில உலர் பழங்களையும் புஷ்பத்தையும் அதில் வைத்து தாத்தா பாட்டியிடம் கொடுத்து மூவரும் அவர்களை வணங்கிச் சேவிக்க, சேஷாத்திரி அபிவாதனம் சொல்லவும், (அவரவர் கோத்திரம் , அவர் எந்த வேதத்தைச் சார்ந்தவர் முதலியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லும் தங்களைப் பற்றிய சிறு introduction) காதை தீட்டிக்கொண்டு அதைக் கேட்ட தாத்தா ஆனந்தி கொண்டுவந்து நீட்டிய அட்சதையை அவர்கள் மீது தூவி, "சதமானம் பவதி சதாயுஷ் புருஷ சதேந்த்ரிய ஆயுஷ் யேவேந்திரியே, ப்ரதி திஷ்டதி! சர்வாபீஷ்ட சித்திர் அஸ்து" என ஆசிர்வதித்தார்.


தீர்காயுசோட தீர்க்க சுமங்கலியா இருக்கணும்! குழந்தைக்குச் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்!' என வாய் நிறைய வாழ்த்தினார் பாட்டி.


பெரியவர்களின் நிறைந்த ஆசியில் மகிழ்ந்தனர் சேஷாத்ரியும் கீதாவும்!


அதன் பின் சம்பிரதாய உபசரிப்புகள் பொதுவான பேச்சுக்கள் என இருக்க, மைத்ரேயிக்காக வாங்கி வந்திருந்த பொருட்களை கீதாவிடம் காண்பித்துக்கொண்டிருந்தார் ஆனந்தி.


தோழியின் திருமணத்திற்குச் சென்று வந்தவள், கீதா அழைக்கவும் அதே உடையிலேயே அதுவும் முந்தைய தினம் கண்ணனுடன் சென்று வாங்கிவந்த அணிகளை அணிந்து அப்படியே அங்கே வந்திருந்தாள் வேண்டுமென்றே! அவன் காணவேண்டும் என்றே!


ஆனால் கண்ணனின் பார்வை மறந்தும் அவளிடம் திரும்பாமல் போக உள்ளுக்குள்ள அந்த கடுகடுப்பில் இருந்தவள், அதன்பின் தானும் அவனைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.


பார்த்துக்கொண்டிருந்த சீமந்தத்திற்காக வாங்கி வந்திருந்த ஒன்பதுகஜம் புடவையின் நிறமும் அதன் வடிவமைப்பும் அவளை வெகுவாக கவர, "மாமி! புடவை சூப்பர்!"என்றவள் தன் அன்னையைப் பார்த்து, "மா! இதே மாதிரி ஆறுகஜத்துல கிடைச்சா எனக்கும் ஒண்ணு வாங்கிண்டு வா" என்று சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டிருந்த தாத்தா, "எதுக்கு ஆறு கஜத்துல வாங்கணும்! நல்லபடியா கல்யாணம் குதுரட்டும் இதே மாதிரி ஒன்பதுகஜமாவே வாங்கலாம்!' என்றவர், 'ஏன் பா சேஷா! இன்னும் ஏன் இவ கல்யாணத்தை தள்ளிப்போட்டுண்டே போற!" எனச் சேஷாத்திரியிடம் கண்டனமாகக் கேட்டார்.


'என்ன பண்றது ஸ்வாமின்! படிப்பு படிப்புனு அதையே காரணமா சொல்லிண்டு இருக்கா! இன்னும் அஞ்சாறு மாசத்துல முடிஞ்சிடும்! வரன் வந்துண்டுதான் இருக்கு! சீக்கிரமா முடிக்கணும்" என்று சேஷாத்திரி பதில் சொல்ல,


"நான் கேக்கறேன்னு தப்பா நினைக்காத; பேசாம உன் பொண்ணை எங்க கண்ணனுக்கே கொடுத்துடு!


எங்கண்ணா பேரன்றதால சொல்லல! ஊர் உலகத்துல நீ எங்க போய் தேடினாலும் இப்படி ஒரு மாப்பிளை உனக்கு கிடைக்க மாட்டான்!!" என கேட்க எண்ணியதை நேரடியாகக் கேட்டேவிட்டார் தாத்தா.


ராகவனும் ஆனந்தியும் மின்சாரம் தாக்கியதுபோல் அதிர்ந்துபோக, மகிழ்ச்சி கொள்ளைகொண்டது கீதாவுக்கு.


அவருக்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் உணர்வற்ற முகத்துடன் சேஷாத்திரி மகளின் முகத்தைப் பார்க்க, குழப்பமும் பயமும் அங்கே படர்ந்திருந்தது.


அந்த நொடி கண்ணன் ராதா இருவரின் பார்வையும் ஒரே நேர் கோட்டில் சந்தித்துக்கொள்ள அவள் கண்களில் நிறைந்திருந்த நிம்மதியை கண்டுகொண்டான் அவன்!

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page