top of page

Kadhal Va..Radha? 3*

காதல்-3


சொல்லிவிட்டு கிளம்பலாம் எனச் சேஷாத்ரியை தேடி சாப்பாட்டு அறைக்குள் கண்ணன் நுழைய, அங்கே இருந்த நிலைக்கண்ணாடியில் தன் பிம்பத்தை ஆராய்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த ராதாவைக் காணவும் அவனுடைய முகத்தில் விஷம புன்னகை அரும்பியது.


அடக்கப்பட்ட சிரிப்புடன், "குரு நான் கிளமபிறேன்" என அவன் சொல்ல, உணவு மேசைக்கு இணையாகப் போடப்பட்டிருந்த இருக்கையில் போய் அமர்ந்தவாறு, "டேய் கண்ணா! சாப்டுட்டு போடா!" என அவர் சொல்ல, "பரவால்ல குரு! நான் ஆத்துக்கு போய் குளிச்சிட்டு டிஃபன் எதாவது பண்ணி சாப்டுக்கறேன்!" என்றான் அவன்.


அதைக் கேட்டுக்கொண்டே அங்கே வந்த கீதா, "கிழிச்ச! குக்கர் வெக்க சோம்பேறித்தனம் பட்டுண்டு அறையும் குறையுமா எதாவது பழத்தை சாப்டுட்டு படுத்துப்ப! சித்த இரு" என அவனை அக்கறையாகக் கடித்துக்கொண்டு, "டீ ராதா! தளிகை உள் மேடைல இட்லி வார்த்து வெச்சிருக்கேன்! கூடவே தக்காளி சட்னியும் இருக்கு! ஒரு டப்பால போட்டு அவன்கிட்ட குடு!" என மகளைப் பணித்தவாறு கணவருக்கு உணவை பரிமாறினார்.


உண்மைதான்! இருக்கும் அலுப்புக்கு அப்படியே போய் விழலாம் போலிருந்தது அவனுக்கு. அவருடைய அக்கறை கண்டு நெகிழ்ந்தவன், "தேங்க்ஸ் மாமி!" என்று சொல்லிவிட்டு வரவேற்பறை நோக்கி அவன் போக, அவனை முறைத்துக்கொண்டே அடுக்களை நோக்கிச் சென்றாள் ராதா.


வரவேற்பறை 'சோஃபா'வில் அமர்ந்திருந்த கண்ணனுக்கு அருகில், பையுடன் கூடிய 'ஹாட் பேக்' ஒன்றை ராதா கொண்டுவந்து வைத்துவைக்க, கைப்பேசியில் ஏதோ விளையாடியவாறே, "ரொம்பல்லாம் ஆராய்ச்சி பண்ணாத; நீ அப்படியே உங்க அம்மா சாயல்தான்!


அதுல டவுட்டே இல்ல! ஆனா நான் சொன்னது உன்னைப் பத்தி இல்ல!" என அவன் தீவிரமாக சொல்ல, அவனை முறைத்தவள், "உங்க கண்டுபிடிப்புக்கு தேங்க்ஸ்; நான் ஒண்ணும் அந்த ஆராய்ச்சில இறங்கல! உங்களுக்காக இங்க யாரும் உருகல! நீங்க கிளம்பலாம்" எனச் சட்டென அவள் சொல்ல, "அப்பறம் ஏன் கண்ணாடி பார்த்த" என அவன் கேட்க, அதில் எரிச்சலுற்று ,"கண்ணன்!" என அவள் பற்களை கடிக்கவும், "தேங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் கண்ணன்.


'இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எத்தனை நாளைக்கோ' என ஆயாசமாக இருந்தது அவளுக்கு.


***


கூடத்தில் உட்கார்ந்து வலி நிவாரணி தைலத்தை முழங்காலில் தடவிக்கொண்டிருந்தார் ஆனந்தி.


அருகில் ஊஞ்சலில் ஒருக்களித்துப் படுத்திருந்தாள் மைத்ரேயி.


அருகிலிருந்த கைப்பேசி ஒலிக்கவும் அதனை எடுத்து காதில் பொருந்தியவர், "சொல்லுடா கண்ணா!" என்று கூற அவரது குரலிலிருந்த களைப்பை உணர்ந்தவன், "இன்னைக்கு வேலை ஜாஸ்தி இல்ல மா" என்று கேட்க, "அதுக்கென்ன பண்ணமுடியும்! நம்மாத்து பங்க்ஷன்! நாமதான எல்லாத்தையும் கவனிக்கணும்! இத்தனைக்கும் சித்தப்பாவும் சித்தியும் ரொம்பவே ஹெல்ப் பண்ணா! அதிருக்கட்டும் நீ சாப்டியா" என அவர் கேட்க, "ஆச்சுமா! இட்லி தக்காளி சட்னி! கீதா மாமி கொடுத்தனுப்பினா!" என்றவன் "பங்க்ஷன் எப்படி நடந்ததும்மா!" எனக் கேட்டான் அவன்.


"ரொம்ப நன்னா நடந்துதுப்பா! நீ இல்லைங்கற ஒரே ஒரு குறைதான்" என அவர் அந்த குறை மேலோங்கச் சொல்ல, "ரொம்ப நாளைக்கு முன்னாடியே பிக்ஸ் பண்ண ஆபரேஷன்மா!