காதல்-22
கடைக்காப்பு
வெளியில் அதுவும் தூரத்திலிருந்து பார்க்கும்போதே அவனைப் பதைபதைக்க வைத்த அந்த நெருப்பு நெருக்கி வர வர அவனைத் தீண்டாமலேயே சுட்டெரித்தது.
அவன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த பொழுதே சிறு கூட்டம் கூடிவிட்டிருந்தது.
அதில் ஒருவர் தீ அணைப்பு வாகன உதவிக்கு அழைப்பு விடுதிருப்பது தெரியவும் அவனுடைய இரு சக்கர வாகனத்தை வேகமாகச் செலுத்திக்கொண்டு உள்ளே வந்தான் கண்ணன்.
அங்கே யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் போக அவனது இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறிக்கொண்டிருந்தது.
அவன் அருகில் நெருங்க நெருங்க அங்கே இருந்த ஜன்னல் வழியாக ஏதேதோ வந்து விழவும் ஒரு நம்பிக்கை துளிர்த்தது அவனுக்கு.
அதற்குள் அவன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி அந்த இடத்தை நெருங்கிவிடக் கடைசியாக வந்து விழுந்த பேனாவைத் துல்லியமாக 'கேட்ச்' பிடித்தவன் உள்ளே இருப்பது ராதாதான் என்பதை உறுதியாக நம்பினான்.
ஆனாலும் அவள் நிலை அச்சத்தை மட்டுமே கொடுக்க, அந்த அறையை ஆராய்ந்தவன் அந்த கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் கண்ணன்.
வள்ளலார் பாடியது போல் 'கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தரு'வாக அவளைத் தேடி வந்தவனைக் கொடியாகப் பற்றிக்கொண்டாள் ராதா.
நொடியும் தாமதிக்காமல் அவன் அவளை வெளியே இழுத்துக்கொண்டு வர, அவனுடைய கையை உதறிவிட்டு வேகமாக ஓடியவள் தான் தூக்கி எறிந்த ஆவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சேகரிக்க அவனும் தன் கரங்களை அவளுக்குக் கொடுக்க, கூடுமான வரையில் அனைத்தையும் பத்திரமாக மீட்டெடுத்தனர் இருவரும்.
அங்கே எரிந்துகொண்டிருந்த நெருப்பின் ஜுவாலையில் கிளம்பிய தீ பொறிகளும் சிறு சிறு கங்குகளும் அதற்குள்ளாகவே அவர்களைக் கொஞ்சம் பதம்பார்த்திருந்தன.
அதுவரை அசராமல் அனைத்தையும் சேர்த்தெடுத்தவள் எதையோ தேட, அது கிடைக்காத ஏமாற்றத்தில் அவளது கண்களில் நீர் கோர்த்தது.
"என்ன ராதா! இன்னும் என்ன பிரச்சனை" என் பதறினான் அவளது நாயகன்.
"இல்லன்னா! அந்த பென் கேமரா! அறிவுகெட்டத்தனமா அதையும் தூக்கி எறிஞ்சுட்டேன்! காணும்!" என்றாள் அவள் துயரமும் ஏமாற்றமும் கலந்த குரலில்.
அடுத்த நொடித் தன் சட்டைப் பையில் வைத்திருந்த அந்த கருவியை எடுத்த கண்ணன் அதை அவளது முகத்திற்கு நேராக ஆட்ட, ஓ மை பெருமாளே!" என்றவாறு அவனை வந்து அணைத்துக்கொண்டாள் ராதா.
அவன் இதயம் பட படவென அடித்துக்கொள்ள, அதை உணர்ந்தவள், அவனிடமிருந்து சற்று விலகி அவன் கையை அவன் மார்பினில் வைத்து அழுத்தியவாறு, "இதுக்கு பேர் என்ன கண்ணன்!
இது எந்த ஹார்மோன் செஞ்ச வேல" என்று கேட்க, அந்த நேரத்திலும் அவள் இப்படி குறும்பாக அதே சமயம் ஆவலும் எதிர்பார்ப்புமாக பேசவும் மெல்லிய புன்னகை படர்ந்தது அவன் முகத்தில்.
"இதுதான் கண்ணன் அன்பு!
எந்த வித ரத்த சம்பந்தமும் இல்லாத நமக்குள்ள உண்டாகியிருக்கற இந்த அன்புக்குப் பேர்...
காதலில்லாமல் என்னவாம்!
இங்க எரியற இந்த அக்னி சாட்சியா சொல்லுங்கோ" என அவள் விடாப்பிடியாகக் கேட்க, "காதல்...தான்! ராதா! கதலேதான்" என்றான் அவன் கிண்டல் தொனிக்க!
அதில் காதலும் கலந்திருக்க!
அந்தத் தீ காயங்கள் கூட அவர்களைப் பாதிக்கவில்லை இருவரின் மனமும் மகிழ்ந்து குளிர்ந்திருந்ததால்.
அந்த ஆவணங்கள் அனைத்தையும் அவளது துப்பட்டாவில் கட்டி பத்திரமாக தன் 'பைக்'கின் முன்பக்கத்தில் வைத்துக்கொண்டு அவன் அதைக் கிளப்ப, காற்றுக்கும் இடம் கொடுக்காமல் அவனை அணைத்தபடி அவள் உட்காரவும், பொறாமையில் தடைபோட நினைத்த அந்த காற்றைக் கிழித்துக்கொண்டு சீறி பாய்ந்தது அந்த வாகனம்.
அவளுக்குப் பின்னால் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைக்க அவர்களுக்கு எதிர்புறமாக வேகமாக வந்துகொண்டிருந்தது ஒரே ஒரு தீ அணைப்பு ஊர்தி.
***
'கடற்கரைச் சாலையில் உள்ள ரசாயன கிடங்கு ஒன்றில் தீ விபத்து' என ஒரு வரி செய்தியாக இலகுவாக மூடி மறைக்கப்பட்டுக்கொண்டிருந்தது பல உயிர்களைச் சுலபமாகப் பறித்துச்சென்ற போலி மருந்து மோசடிகள்.
ஒரே ஒரு நாளுக்கு மேல் அதைப் பற்றி ஒரு செய்தியும் இல்லாமல் போக ஆசுவாசமாக தன் வார இறுதியை அனுபவித்துக்கொண்டிருந்தான் அபிமன்யு.
அந்த கிடங்கு தீக்கிரையானதற்குப் பின் ராதா வீடு திரும்பவில்லை, அவளைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி அவனுக்கு வந்திருக்க, அவள் உயிரோடிருக்க வாய்ப்பே இல்லை என்ற நிம்மதியிலிருந்தான் அவன்.
அவனுக்குத் தெரியாது அவள் இப்பொழுது அவளுடைய நாத்தனாரின் குட்டி மகளை தன் மடியிலிருந்து கீழே இறக்காமல் கொஞ்சிக்கொண்டிருக்கிறாள் என்று.
நடு நடுவே கண்ணனையும்!
ஆனால் அவனுடைய அந்த நிம்மதி மேலும் ஒரு நாள் கூட நீடிக்காமல் போனதுதான் அவனது துரதிர்ஷ்டம்.
கைப்பேசி திரையில் அபிமன்யு அந்த கிடங்கையும் ராதாவையும் அழிக்கச் சொன்னது அப்படியே காணொளியாக மாறியிருக்க அத்துடன் சேர்ந்து, ''டைத்திலின் கிளைகோல்' அந்த கிடங்கிலிருந்ததற்கான காணொளி ஆதாரம், பல குழந்தைகளின் உயிரைப் பறித்த இருமல் மருந்தைத் தயாரித்த போலி நிறுவனத்திற்கும் அபிமன்யுவுக்கும் இருக்கும் சம்பந்தம் என்ன, அங்கே காலாவதியான மருந்துகள் எப்படி புதிதாக மாற்றப்படுகிறது, எப்படி வெவ்வேறு நிறுவனங்களின் பெயரில் அந்த விற்பனைகள் நடக்கிறது என்பதும், கூடவே அதற்குத் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பீ.டீ.எப் ஆக இணைக்கப்பட்டு, அவை அனைத்தையும் தெளிவாக விளக்கும் குறும்படம் ஒன்று அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு 'ட்ரெண்டிங்' ஆகியிருந்தது.
அத்துடன் ஒரே நாளில் (முனைவர்) டாக்டர் அனுராதா ஆனந்த கிருஷ்ணனும் 'ட்ரெண்டிங்'கில் இருந்தாள் அவளது துணிச்சலான செயலால்.
அபிமன்யு குற்றவாளி என பகிரங்கமாக நிரூபிக்கப்பட்டிருக்க, இ.பி.கோ வில் இருக்கும் பல்வேறு பிரிவிலும் பதினைந்திற்கும் மேலாக வழக்குகள் அவன் மேல் பதிவுசெய்யப்பட்டது.
நம் நாட்டில் மிகப்பெரிய அளவில் குற்றம் செய்பவர்கள் வெட்கமின்றி நடமாடுவது ஒன்றும் புதிதில்லை என்பதுபோல், அமெரிக்காவில் இருந்துகொண்டே கைலாஸா மாதிரி ஒரு குட்டி தீவை விலைபேசிக்கொண்டிருதான் அவன் தண்டனைகளிலிருந்து தப்பி ஒளிந்துகொள்ள.
***
அவர்கள் பிரச்சனை ஓய்ந்ததில் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர் அனுபமாவும் அரவிந்தனும்.
ராதா கண்ணன் திருமணம் பற்றி எந்த ஒரு அபிப்பிராயமும் சொல்லவில்லை அவர்கள்.
சொல்லும் நிலையிலும் அவர்கள் இல்லை என்பதுதான் உண்மை.
தந்தை கொடுப்பதாகச் சொன்ன சொத்துக்களை மறுபேச்சில்லாமல் பெற்றுக்கொண்டு அமெரிக்கா கிளப்பினாள் அனுபமா.
அடுத்துவந்த நாட்களில் மைத்ரேயியின் குழந்தைக்குப் பெயர்சூட்டும் வைபவமும் அவர்கள் தேர்த்துறை அகத்தில் நல்லபடியாக நடந்து முடிந்திருந்தது.
கண்ணனும் ராதாவும் முன் நின்றுதான் அனைத்தையும் செய்து முடித்தனர்.
ஒரு வழியாக எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்திருக்க, அவர்கள் திருமண வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்போவதாக ஆரம்பித்தார் கீதா.
மேலும் மருத்துவமனையைக் கண்ணனின் பெயரில் மற்றும் ஏற்பாட்டில் சேஷாத்ரி ஈடுபட்டிருப்பது அவனுக்குத் தெரியவும் இரண்டு ஏற்பாடுகளையும் மறுத்தான் கண்ணன்.
அந்த வரவேற்பிற்காக அவர்கள் செலவு செய்யவிருக்கும் தொகையை முதல் நன்கொடையாகக் கொண்டு 'அனுகிரஹா சேரிட்டபிள் ட்ரஸ்ட்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கலாம் என்று அவன் சொல்ல, ராதாவும் அதையே விரும்பவும், அதற்கு உடன்பட்டனர் சேஷாத்ரி கீதா இருவரும்.
கூடவே அவர்களுடைய மருத்துவமனையையும் அந்த அறக்கட்டளையுடன் இணைத்துவிடலாம் என்ற அவனது முடிவையும் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர் இருவரும்.
மேலும் அவனுடைய நீண்டநாள் விருப்பப்படி தேர்த்துறையில் ஒரு சிறிய மருத்துவமனையை ஏற்படுத்தும் முனைப்பில் அவன் இறங்க, சின்னத்தாத்தா அதற்கு அவருடைய இல்லத்தையே கொடுத்துவிட்டார்.
அங்கே மருத்துவமனை அமைக்கும் வேலையும் செம்மையாகத் தொடங்கியது.
***
கீதா சேஷாத்ரியின் இல்லம் அவர்களுடைய (உறவினர்களால்) பந்துக்களால் நிறைந்திருந்தது.
ஆனந்தகிருஷ்ணனின் அகமுடையாள் சௌபாக்கியவதி அனுராதாவுக்குச் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்க, புண்யாகவசனம் முடிந்து குழந்தைக்குத் தொட்டிலிடும் வைபவம் நடந்துகொண்டிருந்தது.
அனுபமாவும் ராதாவும் குழந்தையாக இருக்கும்போது உபயோகப் படுத்திய தொட்டில் புதுப்பிக்கப்பட்டிருக்க, "மன்னி! உங்க கூரை புடவை எங்க இருக்கு" எனக் கேட்டாள் கண்ணனின் இரண்டாவது தங்கை சின்மயி.
அவள் நிறைமாத கர்ப்பிணியாயிருக்க, "நீ ஏன் சின்னு கஷ்டப்படற; இரு" என்றவள் மெதுவாகத் தானே எழுந்திருக்க எத்தனிக்க, அதற்குள் அதை எடுத்துவந்த கீதா அந்த புடவையைத் தொட்டிலில் விரித்தார்.
"டீ மைத்து! இந்த சுண்டலை நாலு மூலைலயும் வெய்" என ஆனந்தி சிறு சுண்டல் மூட்டைகளை கொடுக்க அப்படியே செய்தாள் மைத்ரேயி.
அதற்குள், "டீ மைத்து! வேப்பிலை காப்பு பண்ணிண்டு வந்தியே எங்க?
அத்தை காப்பெல்லாம் எங்க?
எடுத்துண்டு வந்து வை" என மருமானை கொஞ்சவிடாமல் அவளை விரட்டினார் ஆனந்தி.
அவள் அனைத்தையும் கொண்டுவந்து அங்கே இருந்த தாம்பாளத்தில் வைக்க, நெல்லை பரப்பி தயார் செய்தாள் சின்மயி.
ராதாவுக்கு உடன் பிறந்த சகோதரன் இல்லாததால், குழந்தையின் பெயரை நெல்லில் எழுத, மைத்ரேயியின் கணவர், அம்மான் ஸ்தானத்தில் மனையில் உட்கார்ந்தார்.
அவர் கண்ணனைப் பார்த்து, "என்ன பேர் டிசைட் பண்ணியிருக்கீங்கோ?" என்று கேட்க, "அநுத்தமன்!" என்றான் கண்ணன் குரலில் பெருமை இழையோட.
அதற்குள் இடைபுகுந்த சின்னத்தாத்தா, "மாப்ள! முதல் பேரா 'கரிய மாணிக்க வரதன்'ன்னு எங்க ஊர் பெருமாள் பேரை எழுதுங்கோ" என்றார் கெத்தாக.
"ரெண்டாவதா 'சாரங்கன்'னு எழுதுங்கோ; என்னோட அப்பா பேர்" என தன் ஆசையை வெளிப்படுத்தினர் சேஷாத்ரி.
வரிசையாக மூன்று பெயர்களும் எழுதப்பட, குழந்தையை கைகளில் அள்ளியவர், அவன் அணிந்திருந்த உடையை கழற்றவிட்டு அவனை நெல்லில் விடத் தயாரானார் ஆனந்தி.
"ஏண்டி! இந்த பழக்கத்தை விட மாட்டிங்களா! குழந்தையை அழவிட்டு வேடிக்கை பாக்கணுமா?" எனச் சண்டைக்குக் கிளம்பினார் ராகவன்.
"குழந்தை அழுதா நல்லதுதான்; தப்பில்லடா ராகவா!" என சின்னப்பாட்டி சொல்லிக்கொண்டிருக்க, குனிந்து தன் மேல் உத்திரியத்தை (அங்கவஸ்திரம்) பிரித்து நெல்லின்மேல் போட்டவர், "குட்டிக் கண்ணனை இப்ப விடுங்கோ!" என்றார் சேஷாத்ரி.
ஆனந்தி ஒரு மெல்லிய மஞ்சள் கயிறை குழந்தையின் இடையில் அறைஞ்சான் கயிறாக அணிவித்தார்.
பின் அத்தைகள் இருவரும் மருமானுக்கு நெற்றியில் மை எழுதி, உடலை உறுத்தாமல் இருக்கும் விதமாகப் பார்த்துப் பார்த்து அவர்கள் வாங்கி வந்திருந்த உடையை அவனுக்கு அணிவித்து, பின் வேப்பிலை காப்பை பிஞ்சு கைகளிலும் கால்களிலும் அணிவித்து கூடவே கைகளில் பொன்னாலான காப்பையும் கால்களில் வெள்ளி தண்டைகளையும் அணிவித்தனர்.
கீதாவின் கண்கள் ஆனந்தத்தில் குளமாக தான் வாங்கி வைத்திருந்த தங்க சங்கிலியை பேரனுக்கு அணிவித்து, பாலாடையிலிருந்த பாலை அவனுக்குப் புகட்டினார் அவர்.
கல்யாணம் எளிமையாக நடந்திருந்தாலும், அவர் ஆசைப்பட்டபடி தன் சின்ன மகளுக்கு பூச்சூட்டல், சீமந்தம் என அனைத்தையும் சிறப்பாகச் செய்து, முதல் பிரசவத்தையும் நல்லபடியாகப் பார்த்துவிட்டார் அவர்.
பேரன் பிறந்ததில் அளவுகடந்த சந்தோஷத்திலிருந்தார் சேஷாத்ரி.
அவர் தன்னை 'மாப்பிள்ளை' என்று அழைக்க அனுமதிக்கவே இல்லை கண்ணன்.
அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்குமே அவருடைய அருமை சிஷ்யன்தான் அவன்.
இப்படி பட்ட சின்ன சின்ன சந்தோஷங்களுக்காக ஏங்கிக்கொண்டிருந்தவரின் ஆசைகளைப் பூர்த்திசெய்யவே வந்து பிறந்திருக்கிறான் அவருடைய பேரன்.
பின் அந்த இளந்தளிரைத் தொட்டிலில் விட, அவன் சிணுங்கவும், பாடத்தொடங்கினர் அவனது அத்தைகள் இருவரும்.
தென்னிலங்கை கோண் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்!
கன்னிநன்மா மதில் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ!
கண்ணன் காதலுடன், தாய்மையின் பூரிப்பிலிருந்த ராதாவின் முகத்தைப் பார்க்க, அங்கே இன்பம் பொங்கி பிரவாகித்துக்கொண்டிருந்தது.
コメント