Kadhal Va..Radha?! 21
காதல்-21
சரியாக இரண்டு மணி நேரத்திற்கு முன்...
'இப்படித் தயங்கிக் கொண்டே நிற்பது சரிவராது' என்ற எண்ணத்துடன் அந்த 'கேட்'டை கொஞ்சமாகத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள் ராதா.
ஆள் நடமாட்டமே இன்றி அந்த வளாகம் முழுதும் புதர் மண்டி கிடந்தது.
அவள் சிறிது முன்னேறி செல்லவும், சற்று முன் உள்ளே சென்ற அந்த ’ட்ரக்’ அங்கே ஓரமாக நிருத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதை ஓட்டி வந்த ஓட்டுநரும் ‘க்ளீன’ரும் அதன் அருகில் நின்று புகை பிடித்தவாறு ஏதோ பேசிக்கொண்டிருக்க, அவர்கள் உரையாடலைக் கவனிக்கும் பொருட்டு, சத்தம் எழுப்பாமல் கொஞ்சம் அருகில் சென்று நின்றாள் அவள்.
"இவனுங்களுக்கு இதே வேல!
ரிட்டன் ஆன ஸ்டாக் தான.
அந்த அட்ரஸ்ல தான இன்டென்ட் போட்டிருக்கானுங்கன்னு அந்த ஃபாக்டரிக்கு போனா இங்க அனுப்புவானுங்க.
சரி எப்படியும் இங்கதான் அனுப்புவானுங்கன்னு நேரா இங்க வந்தா அங்க போடான்னுவானுங்க.
ஆக மொத்தம் இவனுங்களுக்கு நம்மள லோல் பட வெக்கணும்.
இப்ப இங்க இருக்கற சூப்பரைசர வேற பிடிச்சிட்டு தொங்கணும்.
அவன் எப்ப வந்து தொலைப்பானோ"
புலம்பித் தள்ளினான் அந்த ஓட்டுநர்.
'ரிட்டன் ஸ்டாக்' என்ற வார்த்தையில் செவிகள் கூர்மை பெற அவளுடைய விழிகள் வியப்பில் விரிந்தன.
"அண்ணே! எதாவது தப்புத் தண்டா பண்றானுங்களா?" என மற்றவன் சற்று விவகாரமாகக் கேட்க, "பின்ன! அவ்வளவு பெரிய ஃபாக்டரியும் கோடோணும் வச்சிருக்கறவன் ஏன் இப்படி ஒதுக்குப்புறமா ஒரு குடோன்ல சரக்கை எறக்க சொல்ல போறான்!
என்ன செய்யறானுங்களோ; அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்!" என்றான் அவன் அலுப்பு மேலிட.
"அப்படின்னா தெரிஞ்சேதான் இதை செய்யறியாண்ணே" என அந்த இரண்டாமவன் கேட்க, "நம்ம ட்ரைவர் வேலைய பாக்கறோம்!
அதை செஞ்சிட்டு போயிட்டே இருக்கனும்!
மேல மூளைய கசக்க கூடாது" என்றான் அந்த ஓட்டுநர்.
அதற்குள் அவனுடைய கைப்பேசி ஒலிக்க, "சொல்லு சாரு! எங்க இருக்க?" எனக் கேட்டான் அவன்.
"சரி வா சாரு! நான் ஸ்டோர் ரூமாண்ட வண்டியை போட்டுக்கினு நிக்கறேன்" என்று அந்த ஓட்டுநர் அழைப்பை துண்டித்து பின் அந்த வாகனத்தை கிளப்ப அவனுக்கு அருகில் போய் உட்கார்ந்துகொண்டான் மற்றவன்.
அந்த வாகனம் குறைவான வேகத்துடன் உள்நோக்கிச் செல்லவும், தானும் அது சென்ற திசையில் நடக்கத்தொடங்கினாள் ராதா.
அவள் கொஞ்சம் வேக எட்டுகளுடன் நடந்துகொண்டிருக்க, ஒரு இரு சக்கர வாகனம் வருவதைக் கவனித்தவள், அங்கே இருந்த மரத்திற்குப் பின் பதுங்கியவாறு நின்றாள்.
அந்த வாகனம் வேகமாக அவளைக் கடந்து சென்றுவிட, ஓட்டமும் நடையுமாக அதை நோக்கிப் போனாள் ராதா.