Kadhal Va..Radha?! 20
காதல்-20
ராதா திருமணத்திற்குச் சம்மதம் சொல்லிவிட்டாள் என்பதை அரவிந்தன் மூலம் அறிந்தவுடன், அதை நம்பவே இயலவில்லை அபிமன்யுவால்.
மருத்துவ உலகில் இந்த உயரத்தை அடையச் செய்த செயல்களினால் கண்ணுக்குத் தெரியாத பல எதிரிகளை உருவாக்கி வைத்திருந்தான் அவன்.
அதனால் அவன் மேல் காழ்ப்புணர்ச்சியில் எத்தனையோபேர் இருக்கக்கூடும்.
எனவே எப்பொழுதுமே ஒரு எச்சரிக்கை உணர்வோடுதான் இருப்பான் அவன்.
அதே உணர்வு தலைதூக்க ராதாவின் விஷயத்தில் அவன் மனதில் ஓரத்தில் சிறு சந்தேகம் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருந்தது.
அவனுடைய மிரட்டலுக்காகப் பயந்து அவள் இந்த திருமண ஏற்பாட்டிற்குச் சம்மதித்திருக்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை அவனது அறிவு.
அவன் அவளைத் தனிமையில் சந்தித்த அன்று அவள் முகத்தில் தெரிந்த தெளிவும் அவள் பேச்சில் தொனித்த உறுதியும்தான் காரணம்.
அடுத்த நாளே ராதாவின் கைப்பேசி அழைப்புகள் முதல் அவளுடைய ஒவ்வொரு சிறு அசைவையும் தன்னுடைய கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தான் அபிமன்யு.
ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் அவள் கண்ணனை நேரிலும் சரி தொலைப்பேசியிலும் சரி தொடர்புகொள்ளாமல் இருக்க, சற்று ஆறுதலாக இருந்தது அவனுக்கு.
அனுகிரஹா மருத்துவமனை தன் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் முதல் வேலையாகக் கண்ணனை அதிலிருந்து நீக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தான்.
கண்ணன் விஷயத்தில் அவனால் உடனே ஒரு முடிவை எடுக்க இயலவில்லை.
காரணம் சேஷாத்ரி.
மூத்த மகள் மற்றும் மாப்பிள்ளையை வைத்து அவரை அதிகம் மிரட்ட இயலாது.
நடப்பது நடக்கட்டும் என அவர் விட்டுவிட வாய்ப்பிருக்கிறது.
திருமணம் முடியட்டும் மொத்தமாக கவனித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையிலிருந்தான் அவன்.
அபிமன்யுவை பொருத்தமட்டும் அவனுடைய திட்டப்படி ஆனால் உண்மையில் கண்ணனின் திட்டப்படி அவனுடைய நிறுவனத்தில் ராதாவும் மீராவும் பயிற்சிக்காக இணைந்தனர்.
பொதுவாக அவர்கள் நிறுவனத்தில் கொடுக்கப்படும் 'இன்டென்ஷிப்' பயிற்சிகள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கே இருக்கும்.
இவர்கள் இரண்டுபேரும் ஆராய்ச்சி படிப்பில் இருக்கவே அவர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக அந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லியிருந்தான் அபிமன்யு.
அந்த பயிச்சி அவனை பொறுத்தவரைக்கும் ஒரு கண்துடைப்பு என்பது புரிந்தது அவளுக்கு.
அவன் எண்ணப்படி திருமணம் முடியும்வரை அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அவன் இந்த பயிற்சியை பயன்படுத்திக்கொண்டான் என்பதை உணர்ந்தே இருந்தாள் ராதா.
அவர்கள் அந்த வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னமே அவர்கள் இருவருடைய கைப்பேசிகளையும் அவர்களுடைய பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டியதாக இருந்து.
அவர்களுடைய கைப்பைகளும் சோதனைகளைக் கடந்தே உள்ளே அனுமதிக்கப்பட்டது.
இதில் அபிமன்யுவுக்கு ராதாவின்மேல் இ