காதல்-2
ராதா அழைத்தவுடன் அவளை பின் தொடர்ந்து செல்ல அவனது 'ஈகோ' இடம்கொடுக்காமல், அந்த மருத்துவமனையின் முதல் தளத்தில் இருக்கும் அவனது பிரத்தியேக அறைக்கு வந்தவன், அதை ஒட்டி அமைந்திருந்த ஓய்வறைக்குள் சென்று தன்னை தூய்மைப் படுத்திக்கொண்டு ஒரு 'டீ-ஷர்ட்'டுக்கு மாறி பின் அவனது இருக்கையில் வந்து அமர்ந்தான் கண்ணன்.
ஒலித்த கைப்பேசியை எடுத்து அவன் காதில் பொறுத்த, "டேய் கண்ணா ஃப்ரீயா இருந்தா உடனே வாடா! சாப்பிடலாம்" என்றார் எதிர் முனையில் பேசியவர்.
ராதாவும் அங்கே இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில், "இல்ல குரு; எனக்கு பசிக்கல; அடுத்த கேஸ் பாக்கறதுக்குள்ள கொஞ்சம் ஹைபர்னேட் ஆகிக்கறேன்!" என்றான் அவன் அவரை தவிர்க்கும் பொருட்டு.
“பரவாயில்ல வா! உன் தங்கை பூச்சூட்டலுக்கு மாமி போய்ட்டு வந்திருக்கா!
அப்பொ உங்கம்மா புளியோதரை கொடுத்தனுப்பி இருக்கா!
உன் சித்தப்பா பண்ணதாம்! கமகமன்னு அவ்ளோ அருமையா இருக்குடா!
காரசேவை வாயில போட்ட உடனே கரையரதுடா கண்ணா!
ஜாங்கிரி அருமையோ அருமை! வா வா சாப்பிடலாம்!" என ஒலித்த அக்கறை நிரம்பிய குரலில் வீண் பிடிவாதம் பிடிக்கத் தோன்றாமல், "தோ வந்துடறேன் குரு!" என்று சொல்லி புன்னகையோடே அந்த அழைப்பைத் துண்டித்தான் கண்ணன்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவனது குருவான 'டாக்டர்.சேஷாத்திரி'யின் முன் உட்கார்ந்திருந்தான் அவன்.
அறுபதை நெருங்கும் வயது. அளவான உயரம். நன்றாக வழுக்கை விழுந்த தலை. இருந்த கொஞ்சம் சிகையும் வெள்ளை வெளேர் என வெளுத்திருக்க, அமைதி ததும்பும் ஞானத்தின் களை பொருத்திய அவருடைய முகம் அவரது அகத்தை அப்படியே பிரதிபலிக்க, நெற்றியில் சிறியதாக வைத்திருந்த செந்தூரம் அவரது மலர்ந்த முகத்துக்கு மேலும் தேஜஸை கொடுத்தது.
சென்னையிலேயே புகழ்பெற்ற காது மூக்கு தொண்டை நிபுணர் அவர்.
அவரும் கூட அப்பொழுதுதான் ஒரு அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு வந்திருந்தார்.
அந்த மருத்துவமனையை அவர் சொந்தமாகத் தொடங்கி, இப்பொழுது அதற்கு வயது முப்பது.
முதலில் அடையாற்றிலிருந்த அவரது அப்பாவுக்குச் சொந்தமான அந்த இடத்தில் மிகச் சிறிய 'கிளினிக்;காக அவர் அதைத் தொடங்கி பின் நான்கு தளங்களை கொண்ட அதி நவீன மருத்துவமனையாக அதை வளர்த்து விட்டிருக்கிறார் அவர்.
அதுமட்டுமில்லாமல் தமிழ் நாட்டில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகள் சில இவருடைய திறமையை அடிக்கடி பயன்படுத்திக்கொள்வதும் உண்டு.
அவரது தொழிலைப் பொறுத்த மட்டும் மிகச்சிறந்த கைராசிக்காரர்; நேர்மையாளர்; ஒரு நல்ல மனிதாபிமானி.
ஆனால் மற்றவர் எளிமையாக அணுக முடியாத ஒரு பிடிவாதக்காரர்.
இந்த உலகில் யாராவது ஒருவருக்கு மட்டும் அவர் கட்டுப்படுவர் என்றால் அது கண்ணனுக்கு மட்டும்தான்.
***
"உன்னை விட்டுட்டு சாப்பிட மனசு வரலடா கண்ணா! அதான் கூப்பிட்டேன்!" என்றவர், "ராதாம்மா! கண்ணனுக்கும் ஒரு இலையைப் போடு!" என்று சொல்ல, அவனுக்கு நேராக வாழை ஏடு ஒன்றை அவள் விரிக்க, தானே அதில் புளியோதரை பரிமாறினார் சேஷாத்திரி.
"பரவாயில்ல குரு! நானே போட்டுக்கறேன்!" என்றவன் அதைச் சுவைக்க, "எப்படிடா இப்படி பண்றார்? நீ பண்ணதுன்னு சொல்லிப் போனவராம் கொண்டுவந்தியே அது இந்த அளவுக்கு டேஸ்ட்டா இல்லடா?" எனச் சொல்லிக்கொண்டே அதைச் சுவைத்துச் சாப்பிட்டார் அவர்.
அதற்குப் புன்னகையைப் பதிலாகக் கொடுத்தவன், "நான் டாக்டர்தானே! என்ன இருந்தாலும் சித்தப்பா பரிசாரகர் இல்லையா?!"(சமையல் கலைஞர்) எனக்கேட்டான் கண்ணன் கொஞ்சம் கிண்டலாக.
அதற்கு இடி இடி என சிரித்துக்கொண்டே, "பேச்சுல கெட்டிக்காரன்டா கண்ணா நீ!" என அவனைப் பாராட்டினார் சேஷன்.
பற்றிக்கொண்டு வந்தது ராதாவுக்கு.
"அப்பா நான் ஒருத்தி இங்க இருக்கேன்! உங்க சிஷ்ய பிள்ளையை கொஞ்சறதுல அதை மறந்துடாதீங்கோ!" என ராதா சொல்ல, "அவனை சொன்னா உனக்கு ஏன் புகையறது! நீயும் எதாவது இப்படி பண்ணு; உன்னையும் கொஞ்சிட்டு போறேன்!" என்றவர் ,"நீயும் வேணா சாப்பிட்டு பாரு!" எனச் சொல்ல, "நான் ஆத்துலயே சாப்பிட்டுட்டேன்!" என்றாள் ராதா.
அதற்குள் அவள் கைப்பேசி இசைக்க, அதில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்ததும் அதிர்ந்தவள், "தோ! வந்துடறேன்!" என்று சொல்லிவிட்டு தனியே போனவள் சில நொடிகளில் திரும்ப வந்து, தயங்கியவாறே, "ப்பா! அத்திம்பேர் பேசறார்! ஏதோ முக்கியமான விஷயமாம்!" என்று சொல்ல, 'எதுக்கு இப்ப போனை என் கிட்ட கொடுத்த' என்பதுபோல் அவளை ஒரு பார்வை பார்த்தவர் அதை வெடுக்கன்று அவள் கையிலிருந்து பறித்தவாறே, "முக்கியமான விஷயமா இல்லன்னா இந்த நேரத்துல ஏன் போன் பண்ண போறான்" என முணுமுணுத்தவர், "சொல்லுங்கோ மாப்ள! என்ன முக்கியமான விஷயம்?" எனக் கேட்டார் சேஷாத்திரி வரவழைக்கப்பட்ட நிதானத்துடன்.
ம்;
ம்ஹும்;
அப்டியா?
பாக்கலாம்;
யோசிக்கணும்;
ராதாவுக்கு இப்ப கல்யாணம் பண்ற உத்தேசம் இல்ல மாப்ள!
தப்பா நினைக்காதீங்கோ; அந்த பேச்சு மட்டும் இப்ப வேண்டாம்!
எனக்கு தெரியும் எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்க்கணும்னு!
ஆகட்டும்;
என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார் அவர்.
அவரது முகம் கோபத்திலும் யோசனையிலும் சிவந்து போய் இருந்தது.
அதன் பிறகு அந்த உணவு ருசிக்கவில்லை அவருக்கு.
கண்ணன் ராதா இருவரின் முகம் இருண்டுபோய் இருக்க ஒரு அசத்திய மௌனம் குடி கொண்டிருந்தது அங்கே.
நாகரிகம் கருதி கண்ணன் எதுவும் கேட்காமல் இருக்க பொறுக்க முடியாமல், "என்னவாம்பா?" என்றாள் ராதா.
"அவன் சொன்ன அளவுக்கு முக்கியமா ஒண்ணுமில்லம்மா! இதையெல்லாம் எடுத்துண்டு நீ கிளம்பு" என்றவர், ஏதோ நினைவு வந்தவராக, "உனக்கு படிப்பு இன்னும் எவ்ளோ நாள் மா இருக்கு?" என்று கேட்க, "ஹார்ட்லி சிக்ஸ் மந்த்ஸ்! ஏன் ப்பா கேக்கறீங்கோ?" என்றாள் ராதா.
"ஒண்ணும் இல்ல சும்மாதான்?" என்றார் அவர் தன் உணர்வுகளை மறைத்தவாறே.
அவள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்ப, கூடவே கண்ணனும் கிளம்ப எத்தனிக்கவும் ராதா அறியாவண்ணம் 'நீ போகாத' என ஜாடை செய்தார் சேஷாத்திரி.
ராதா அங்கிருந்து கிளம்பிவிட, "சொல்லுங்க குரு; என்ன பிரச்சினை?" எனக் கேட்டான் கண்ணன்.
"அந்த 'ஏ அண்ட் பீ குரூப்ஸ்!' இருக்கில்ல?" அவர் கேட்டதுமே கண்ணனின் முகம் மேலும் இருண்டது.
"அது இருக்கு! ஆனா அதுக்கும் நமக்கும் அரவிந்தன் அண்ணாவுக்கும் என்ன சம்பந்தம்" என அவன் ஆழமாகக் கேட்கவும், "அவாளோட லேப்ஸ் அண்ட் ஸ்கேனிங் சென்டர் இருக்கோல்லியோ! அதோட பிரான்ச்ச நம்ம ஹாஸ்பிடல்ல அனெக்ஸ் பண்ணலாம்ணு கேக்கறாளாம்" என்றார் சேஷாத்திரி.
"யாரு இப்படி ஒரு ந..ல்ல ஆஃப்பர நமக்கு கொடுத்தாதாம்!" என அந்த நல்ல..வில் அழுத்தம் கொடுத்துக் கண்ணன் கேட்க,
"அதோட ஃபௌண்டர் மஹாதேவன் இருக்காருல்ல; அவரோட சன்தான். அவன் நம்ம அரவிந்தனோட பிரெண்டாம்.
அவன்தான் இப்படி கேட்டிருக்கான்!" என்றார் சேஷு.
"நீங்க என்ன நினைக்கறேங்கோ குரு?" எனக் கண்ணன் கேட்க, "நம்ம லேப் அண்ட் ஸ்கேனிங் அப்டேட்டட்டா இல்ல இல்லையா?
செஞ்சா என்னன்னுதான் தோன்றது?" என்றார் அவர்.
"வேண்டாம் குரு! அப்பறம் கூடாரத்துக்குள்ள தலையை நுழைச்ச ஒட்டகம் கதையா ஆயிடும்!
மெதுவா நம்ம ஹாஸ்பிடலையும் கார்ப்பரேட் ஆக்கிடுவா!
உங்களால ஜீரணிச்சுக்க முடியாது.
இப்ப இருக்கறவா கிட்ட ஒரு ரேட் இல்லாதவா கிட்ட அவளால முடிஞ்சதுன்னு வாங்கிண்டு இருக்கோம்!
ட்யூட்டி டாக்டர்ஸ் நம்ம இஷ்டப்படிதான் அப்பாயிண்ட் பண்றோம்.
நம்ம மெடிக்கல் ஷாப்ல ஜெனெரஸ் மெடிசின்ஸ் எல்லாம் லாபம் இல்லாம கொடுத்துண்டு இருக்கோம்.
சர்ஜரி பண்ண, சமயத்துல நீங்களோ நானோ பீஸ் கூட வாங்கறதில்ல.
தேவை இல்லாம எந்த டெஸ்டோ ஸ்கேனிங்கோ பண்றதில்ல!
எல்லாமே கெட்டுப்போயிடும் குரு!
விஷப்பரீட்சை வேண்டாம்னு தோன்றது!
இது என்னோட அபிப்ராயம்! அப்பறம் உங்களோட இஷ்டம்.
உங்க குடும்பத்துல என் யோசனையால ஒரு பிரச்சனை வரக்கூடாது!" என நீளமாகச் சொல்லி முடித்தான் கண்ணன்.
"இந்த ஆனந்த கிருஷ்ணனோட வாக்கு எனக்கு அந்த அசரீரி வாக்கு மாதிரி! நீ சொன்னா நான் மாட்டேன்னா சொல்லப்போறேன்!
மாப்பிளை கிட்ட வேண்டாம்னு சொல்லிடரேண்டா கண்ணா!" என்றார் அவர் நிறைவுடன்.
உள் நோயாளி; புர நோயாளி; அறுவை சிகிச்சைகள் என அவர்களுடைய நேரம் பறக்க, இரவு மணி ஒன்பதை நெருங்க திருவான்மியூரில் இருக்கும் அவருடைய பங்காளாவிற்குள் காரை ஓட்டி வந்து நிறுத்தினான் கண்ணன்.
வீட்டிற்குள் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்க அந்த சத்தம் வெளியிலேயே கேட்டது.
காரிலிருந்து இறங்கி சேஷாத்திரி உள்ளே செல்ல, கைப்பேசியில் ஒரு அழைப்பு வரவும், அதை ஏற்று அங்கேயே நின்றான் கண்ணன்.
அந்த வீட்டின் வரவேற்பறை வஞ்சியர்களால் நிரம்பி இருந்தது.
அதாவது ராதாவின் தோழியர் அங்கே வந்து அரட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அவளுடைய அப்பாவை கண்டதும் எல்லோரும் எழுந்து நிற்க, "நீங்க உக்காருங்க, நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண விரும்பல. யூ கேரி ஆன்" எனச் சொல்லிவிட்டு அவரது அறை நோக்கிப் போனார் சேஷாத்திரி.
"ஹேய் ராது! எங்கடி அந்த ஹாண்ட்சம்! இன்னைக்கு இங்க வரமாட்டாரா?" என அதில் ஒருத்தி ஏமாற்ற குரலில் கேட்க, சரியாக அப்பொழுது அவனது குருவினுடைய 'லேப்டாப் பாக்'கை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் கண்ணன்.
வேலை அதிகம் இருக்கும் நாட்களில் அவரை தனியே விட மாட்டான் அவன்.
உடன் வீடு வரைக்கும் வந்து விட்டுச்செல்வான்.
அதை ராதாவும் நன்கு அறிவாள்.
பேச்சு ஸ்வாரஸ்யத்தில் மற்ற பெண்கள் கவனிக்காமல் போனாலும் அவனது வரவை உணர்ந்த ராதா, "உன்னோட ஹண்ட்ஸம் இன்னைக்கு வரலன்னு நினைக்கறேன்!
ஆமாம் இப்ப என்ன அவரை பத்தின பேச்சு" என ராதா கேட்க, "எல்லாம் அவரோட தரிசனத்துக்காகத்தான் வேறென்ன!" என்றாள் இன்னொருத்தி.
"ராதா உண்மையிலேயே உனக்கும் அவருக்கும் சம்திங் சம்திங் எதுவும் இல்ல இல்ல" என முதலில் பேசியவள் கேட்க, "நத்திங் நத்திங்! எதுவுமே இல்ல மீரா!" என்றாள் ராதா.
"இல்ல ரெண்டு பேருக்கும் பேர்ல கூட அவ்வளவு பொருத்தம் இருக்கே!" என மீரா இழுக்கவும், "உன் பேர் கூடத்தான் மீரா! கண்ணனுக்கு மீரா! பொருத்தமாதான இருக்கு!
நான் வேணா உனக்காக கண்ணன் கிட்ட பேசட்டுமா?" என ராதா கேட்க, "ப்ளீஸ்! ப்ளீஸ்! ஒரு இண்ட்ரோ குடுடி போதும்!
மத்ததெல்லாம் நானே பார்த்துக்கறேன்!' என மீரா சொல்ல, கண்ணனைப் பார்த்துக்கொண்டே அலட்சியமாக, "கண்டிப்பா கொடுக்கறேன்! நீ சீக்கிரம் ப்ரபோஸ் பண்ணனும்! ஓகேவா?" என்றாள் ராதா.
அவர்கள் பேச்சு போகும் திசை பொறுக்காமல் வேகமாக உள்ளே நுழைந்தவன், அந்த மீராவை நெருங்கி, "ஹை! ஐ ஆம் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன்!
இப்ப வரைக்கும் முரட்டு சிங்கிள்!
இப்ப நீ பேசிட்டு இருந்த வரைக்கும் பார்த்தால் உனக்கு என் மேல ஒரு இன்ட்ரெஸ்ட் இருக்குன்னு தோணுது.
ஒண்ணு பண்ணு நாளைக்கு வெள்ளி கிழமை! நாள் நல்லா இருக்கு!
உங்க ஜாதகத்தை கீதா மாமி! அதான் ராதா அம்மா! அவங்க கிட்ட கொடுத்துடு;
மேட்சிங் பொருந்தி வந்தா ஃபர்தரா ப்ரொசீட் பண்ணலாம்" என்றான் கண்ணன் தீவிரமாக.
மீரா அதிர்ச்சியாக ராதாவைப் பார்க்க, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு அந்த பெண்கள் அசடு வழிய, அதில் ஒருத்தி, "ராதா பை! ரொம்ப லேட் ஆயுடுச்சு! நாங்க கிளம்பறோம்!" என்று சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து செல்ல, மற்ற பெண்களும் தெறித்து ஓடியே போனார்கள்.
"கண்ணன் ஏன் இப்படி பண்ணீங்க?" என ராதா பல்லை கடிக்க,
"வேற என்ன பண்ணுவானாம்! பீ.ஹெச்.டீ பண்ற பொண்ணுங்களாடி அவாள்ளாம். என்ன பேச்சு பேசறா? நம்ம கண்ணனா இருக்கவே கொண்டு ஒழுக்கமா பேசி இருக்கான்!" என ராதாவின் அம்மா கண்ணனுக்குப் பறித்துக்கொண்டு வர, "கூட்டணி சேர்ந்தாச்சோல்லியோ இனிமேல் என் டெபாசிட் காலி!" என நொடிந்துகொண்டு அங்கிருந்து சென்றாள் ராதா.
உடனே கண்ணனிடம் ரகசியமாக, "டேய் கண்ணா! அந்த மீராவை நிஜமாவே உனக்கு பிடிச்சிருக்கா?" என கீதா கேட்க, "சாச்ச! அதெல்லாம் இல்ல மாமி! நான் சும்மா சீண்டினேன்!" எனக் கண்ணன் சொல்ல, "அவளுக்கென்னடா குறை! நான்னா லட்சணமாதான இருக்கா?" என மாமி கேட்க, "ப்ச்.. ஆயிரம் இருந்தாலும் உங்க லட்சணத்துக்கு ஈடாகுமா!
உங்களை மாதிரியே ஒரு பொண்ணு கிடைச்சா கண்ணை மூடிண்டு ஓகே சொல்லிடுவேன் மாமி" என அவன் சொல்ல அதில் உச்சி குளிர்ந்தே போனார் மாமி!
அதை மறைந்திருந்து கேட்டுக்கொண்டிருந்த ராதா அங்கே இருந்த கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்க்க, அப்பொழுது சேஷன் அவளைக் கடந்து செல்லவும் அவரை அழைத்தவள், "அப்பா! நான் அம்மா ஜாடையா இல்ல உங்க ஜாடையா?" எனக் கேட்டாள் ராதா.
அன்புடன் மகளை பார்த்தவர் அவளது கூந்தலை வருடியவாறு, "நீ எங்க அம்மா; அதான் ஜானகி பாட்டி ஜாடைடி குழந்த!" என்றார் சேஷாத்திரி ஆதூரமாக.
எதிர்பாராத அவருடைய அந்த பதிலில் நொந்தே போனாள் ராதா!
Nice update