top of page

Kadhal Va..Radha! 19

காதல்-19


அடுத்த இரண்டாவது நாளில் தேர்த்துறை கரிய மாணிக்க பெருமாள் சன்னதியில் சாஸ்திர சம்பிரதாயம் எதையும் குறைக்காமல் ஆனால் எளிமையாக நடந்து முடிந்தது கண்ணன் ராதா திருமணம்.


கண்ணனுடைய குடும்பம் அவனுடைய சின்னத்தாத்தா பாட்டி மற்றும் அவனுடைய தங்கைகள் இருவருடைய குடும்பம் என வெகு சிலர் மட்டுமே கலந்துகொண்டிருக்க, தங்கள் குடும்பத்திலிருந்து ஒருவரை கூட அழைக்கவில்லை சேஷாத்ரி.


மகளைப் பத்திரமாகக் கண்ணனின் கையில் ஒப்படைப்பது மட்டுமே ஒரே குறிக்கோளாக இருந்தது சேஷாத்ரி கீதா தம்பதியருக்கு.


மேலும் இந்த திருமணம் பற்றிய செய்தி கொஞ்சம் வெளியில் கசிந்தாலும் மூத்த மகளின் வாழ்க்கையை அது பாதிக்கும் என்பதும் ஒரு காரணம்.


கண்ணனுடைய தங்கைகளான மைத்ரேயி மற்றும் சின்மயிக்குதான் அண்ணனின் கல்யாணத்தை விமரிசையாக நடத்த முடியவில்லையே என கழுத்து மட்டும் குறை.


இதில் அவர்களுடைய புக்ககத்து மனிதர்கள் முணுமுணுப்பு வேறு!


ஆனாலும் விட்டுக்கொடுக்காமல் முந்தைய தினம் அரக்கு நிற ஒன்பது கஜம் கூரை புடவை, திருமாங்கல்யம், மெட்டி, நாத்தனார்கள் வாங்கும் விளையாடல் தட்டு சாமான்கள் எனக் கடை கடையாக ஏறி இறங்கி பார்த்துப் பார்த்து வாங்கிவந்திருந்தனர் இருவரும்.


திருமங்கல்ய தாரணம் முடிந்து புதுமணத் தம்பதியர் சின்னத்தாத்தா பாட்டியின் கால்களில் விழுந்து சேவிக்க, "ரெண்டு பேரும் நான்னா இருங்கோ!" என்று சில மந்திரங்களைச் சொல்லி தாத்தா அவர்களை ஆசிர்வதித்தவர், “உன் கல்யாணத்தை அஞ்சு நாள் கல்யாணமா பண்ணனும்னு நினைச்சேன்!


ஆச்சா போச்சான்னு இப்படி நடந்துபோச்சு!” என அலுத்துக்கொண்டார் தாத்தா.


"பரவாயில்லை விடுங்கோன்னா!" என்ற பாட்டி கண்ணனை நோக்கி, "டேய் கண்ணா! கல்யாணம்தான் பிளான் இல்லாம நடந்துபோச்சு!


ஆனா சீமந்தத்தை நன்னா க்ராண்டா எல்லாரையும் கூப்பிட்டு பண்ணனும்!


அதுக்கு காலாகாலத்துல ஏற்பாடு பண்ணுங்கோ!" என விவகாரமாகச் சொல்ல, சங்கடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் கண்ணனும் ராதாவும்!


அடுத்த சில மணிநேரத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் செல்லவேண்டிய சூழ்நிலையில் இந்த பேச்சு ஒருசேர பயத்தைக் கொடுத்தது இருவருக்கும்!


தாத்தாவுக்கும், ஆனந்தி மற்றும் ராகவனுக்கும் மட்டுமே உண்மை நிலவரம் தெரியும்.


மற்ற அனைவரிடமும் ஜாதகம் தோஷம் என மழுப்பலான ஒரு காரணத்தைச் சொல்லித்தான் அந்த கல்யாணத்தை நடத்தி முடித்தனர்.