top of page

Kadhal Va..Radha? 18

காதல்-18


கண்ணன் தன்னை கொஞ்சம் சுதாரித்துக்கொள்ள எடுத்துக்கொண்ட நொடிகள் கூட பொறுக்காமல், கண்களில் பொங்கிய கண்ணீரை தன் துப்பட்டாவில் துடைத்துக்கொண்டே, "எனக்கு அட்வைஸ் மழையா பொழிஞ்சீங்களே; என்னைக்காவது என் மனசுல என்ன இருக்குன்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தீங்களா?"


பொரிய ஆரம்பித்தாள் ராதா.


அவன் மௌனமாக அவள் பேச இடம் கொடுக்க, "அனு கல்யாணம் ஆனப்ப எனக்கு அவ்வளவு விவரம் போராதுதான்; ஆனா வளர வளர நடந்ததெல்லாம் புரிய ஆரம்பிச்சுது!


நீங்க இங்க வந்த அப்பறம்; எங்க குடும்பத்துல ஒருத்தரா சகஜமா இருக்கவும் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சுது.


ஆனா அது காதலெல்லாம் இல்ல!" அவள் கொஞ்சம் நொடிந்துகொள்ளவும், புன்னகை அரும்பியது கண்ணனுக்கு.


அதை உணர்ந்து அவள் ஒரு நொடி நிறுத்த, அவன் அவளை ஆழ்ந்து கவனிப்பது புரியவும் தொடர்ந்தாள் ராதா.


அப்பாவோட உசரத்துக்கு மாப்பிளைங்கற முறைக்கு அத்திம்பேருக்கு அவர் மரியாதை கொடுக்கும்போதெல்லாம்; அதுவும் அப்பாகிட்ட அவர் ஓவரா கெத்து காமிக்கும்போதெல்லாம் அப்படியே எனக்கு பத்திண்டு வரும்.


"நான் ப்ளஸ் ஒன் முடிச்ச வருஷம் அனு இங்க வந்திருந்தா ஞாபகம் இருக்கா" அவள் கேட்க மௌனமாய் தலை அசைத்தான் கண்ணன்.


"அப்பத்தான் அவாளுக்காக கிறீன் கார்ட் அப்ளை பண்ணியிருக்கறத பத்தி சொன்னா அவ.


'என்னக்கா இப்படி சொல்ற; நீ அங்கேயே செட்டில் ஆயிட்டா நம்ம அம்மா அப்பா ரொம்ப வருத்தப்படுவா இல்ல!


ஃப்யூச்சர்ல நாமதானே அவாளை பார்த்துக்கணும்'னு கேட்டேன்.


'அதுக்காக நாங்க இங்கேயே இருந்துட முடியுமா?


இனிமேல் எங்களால இந்த ஊருல இருக்கவே முடியாது ராதா!


ரொம்ப ஹாட்! ரொம்ப பொல்யூஷன்!


எப்படா எங்க ஊருக்கு போகப்போறோம்னு இருக்கு!


அம்மா அப்பா வேணா அங்க வரட்டும்'னு ரொம்ப செல்பிஷா பேசினா அனு!


அது எங்கயாவது நடைமுறைக்கு ஒத்து வருமா சொல்லுங்கோ!


அப்பாவுக்குதான் நம்ம ஹாஸ்ப்பிட்டல்னா உசுராச்சே!


அதை விட்டுட்டு அவர் எங்கயாவது போவாரா!


மனசுக்குள்ள சுள்ளுனு குத்தித்து கண்ணன்!


அப்பதான் எக்காரணம் கொண்டும் அம்மா அப்பாவை விட்டுட்டு எங்கயும் போகக்கூடாதுன்னு மனசுக்குள்ள ஒரு வைராக்கியம் உண்டாச்சு!


ஆனா உங்களை அப்பாவோட பார்க்கும்போதெல்லாம் அப்படி ஒரு குட் பீஃல் வரும் எனக்கு!


அத்திம்பேர் மாதிரி இல்லாம எனக்கு வர ஹஸ்பண்ட் உங்களை மாதிரி அம்மா அப்பாகூட ஒரு பிள்ளை மாதிரி இருந்தா எப்படி இருக்கும்னு தோணும்!" சொல்லும்போதே பெருமிதம் பொங்கியது ராதாவுக்கு.


கண்ணனுக்குமே.


"ஆனா நாளடைவில் உங்கள மாதிரிங்கறது போய், ஏன் அது நீங்களாவே இருக்கக்கூடாதுன்னு தோண ஆரம்பிச்சுது!


அதுவும் நீங்க விலகி ரொம்ப தூரம் போகவும்! எதையோ பறிகொடுத்த பீஃல்.


சர்வ நிச்சயமா அது உங்க மேல ஏற்பட்டிருந்த காதலாலதான் கண்ணன்!


ஒரு கட்டத்துல பொறுக்க முடியாம போனதாலதான் உங்களை தேடி வந்தேன்!" என்றவள், "நீங்க கூடவே இருந்து திட்டிண்டே சொல்லிகுடுத்திருந்தா கூட நான் ப்ளஸ்டூல நல்ல மார்க் வங்கியிருந்திருப்பேன்!


ஆனா இருக்கற நாளெல்லாம் கூடவே இருந்துட்டு நான் போர்ட் எக்ஸாம்க்கு பிரிப்பர் பண்ணும்போது ஏன் கண்ணன் என்னை விட்டுட்டு போயிடிங்கோ!?"


அவளுடைய கேள்வியில் திடுக்கிட்டான் கண்ணன்.


ஒவ்வொருவருக்கும் அவவரவர் நியாயம் என்ற ஒன்று இருக்கக்கூடும் என்பதை எப்படி மறந்தான்.


சேஷாத்ரியின் துன்பத்தை உணர்ந்தவனுக்கு ராதாவின் மனது ஏன் புரியாமல் போனது?!


அனுவுடன் அவளை ஒப்பிட்டு அவளையும் ஏன் அவன் தவறாக நினைத்தான்?!


வயதுகோளாறு என்று எண்ணினானே! இப்பொழுது இவள் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவான்?!


முதன்முறையாக அவளுக்கு முன் தலை குனிந்தான் கண்ணன்.


அதையும் பொறுக்க முடியவில்லை அவனுடைய ராதையால்!


"பரவாயில்ல விடுங்கோ! உங்களுக்கும் அப்ப மெச்யூரிட்டி இல்ல! அதுதான் காரணம்!" அவனுக்காகச் சமாதானம் சொன்னாள்.


அவன் தலையைச் சாய்த்துக் கிண்டலான ஒரு பார்வையை அவள் மேல் வீச, நாக்கை கடித்தவள், 'நல்லதா பேசறதா நினைச்சிண்டு தப்பா சொல்லிட்டோமோ' என்ற எண்ணத்துடன் "சாரி!" என்றாள்.


"எனக்கா மெச்யூரிட்டி இல்லன்னு சொன்ன?" என எகத்தாளம் வழிந்தோடக் கேட்டவன், "நான் அப்ப பாதி டாக்டர் மா! கொஞ்சம் அதிகமா மெச்யூர்டா இருந்ததாலதான் ஹாஸ்டலுக்கு போனேன்!" என்று சொல்லிவிட்டு, "நம்ம ஒருத்தரை லவ் பண்றோம்னு வெச்சுக்கோ; அவாளை பார்த்த உடனே நம்ம ஹார்ட் அப்படியே படபடன்னு அடிச்சுக்கும்!


கன்னங்கள் சூடேறும்!


உள்ளங்கை வேர்க்கும்!


அப்படியே ஒரு ம்... பரவசம் உடம்பு முழுக்க ஓடும்!


இன்னும் என்னென்னவோ பண்ணும்!


இதெல்லாம் பீல் பண்ணி இருக்கியா?" எனக் கேட்டான் கண்ணன்!


காதல் என்ற எண்ணம் மனதில் புகுந்த பின் அவனை பார்க்கும் பொழுதெல்லாம் ஏற்படும் உணர்வுகள்தான்!


அதுவும் ஆரம்பத்தில் இந்த படபடப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்ததே!


ஆனாலும் இதை அவன் நேரடியாகக் கேட்கும் பொழுது என்ன பதில் சொல்ல முடியும் அவளால்.


நாணத்துடன் தலை குனிந்தாள் ராதா!


அவள் சிவந்த முகத்தை ரசித்தவன், "யப்! இதேதான்! இதைத்தான் சொன்னேன்!


இதுக்கு காரணம் என்ன ராதா" என அவன் வெகு எதார்த்தமாகக் கேட்க,


"லவ்! எக்ஸைட்மன்ட்! வேற என்ன?" என முணுமுணுத்தாள் அவள்!


சத்தமாக வாய் விட்டுச் சிரித்தவன், "மைக்ரோ பயாலஜிஸ்ட் மேடம்! இது ஒரு சாதாரண பதில்!


பயாலஜிக்கல் ரீசன் என்னன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்கோ!" என அவன் விடாமல் கிண்டல் இழையோடக் கேட்க, அவனைப் பார்த்து தன் கண்களை அகல விரித்தாள் ராதா!


சட்டென என்ன சொல்வதென்று புரியாமல் அவள் தடுமாறுவது அவனுக்கு உற்சாகத்தைக் கொடுக்க, "பிரோமோன்ஸ் பத்தி தெரியும் இல்ல?" அவன் கேட்க, புன்னகைத்தவள், "இந்த லவ் ஸ்டோரீஸ்ல் எல்லாம் வரும் இல்ல, 'அவனுக்கான பிரத்தியேக வாசனை; அவளுக்கான பிரத்தியேக வாசனை'ன்னு அந்த மாதிரி தனிப்பட்ட பிரத்தியேக வாசனையை ஒவ்வொருத்தருக்கும் கிரியேட் பண்ற ஒரு பாடி கெமிக்கல்!


முக்கியமா இது அவாளோட இணையை அட்ராக்ட் பண்ணும்!


பிறந்த குழந்தை கூட தன் தாயை உணர இந்த ஸ்மெல்தான் காரணம்" என அவள் 'எனக்குதான் தெரியுமே!' என்கிற ரீதியில் அவனைப் பெருமையாகப் பார்க்க, "பிரமாதம் போ!" என அவளைப் புகழ்ந்தவன், "இதுதான் கண்டதும் காதலுக்குக் காரணம்! தெரியும் இல்ல" என்றான் அவன்.


காதலுக்கு அறிவியல் விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும் அவளது நாயகனை, கன்னத்தில் கைவைத்து தலை சாய்த்து வைத்த கண் வாங்காமல் சிறு சலிப்புடன் அவள் பார்த்துக்கொண்டே இருக்க, அத்துடன் நிறுத்தாமல், "சரி.. ப்ரெயின்ல ரிவார்ட் நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் என்னன்னு சொல்லு பார்க்கலாம்?" என அவன் அடுத்ததைக் கேட்க, அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது தெளிவாக மண்டையில் உறைக்கவும், "டொபமைன்!" எனப் பற்களைக் கடித்தாள் அவள்.


அடக்கப்பட்ட சிரிப்புடன், "ப்ச்.. எதுக்கு டென்ஷன் ஆற?" என அவளை வம்பிழுத்துக்கொண்டே, "இந்த டோபமைன்ங்கற ஹார்மோன் இருக்கு இல்ல அதுதான் இந்த பரவச நிலைக்குக் காரணம்!


அப்பறம் அட்ரினலைன் இருக்கில்ல அட்ரினலைன் அந்த ஹார்மோன்தான் ஹார்ட் படபடன்னு அடிச்சுக்க காரணம்!


காதலை தூண்ட ஆண்களுக்கு டெஸ்டோஸ்டெரின் பொண்ணுங்களுக்கு ஈஸ்ட்ரோஜென்”


அப்பறம் இருக்கவே இருக்கு நோர்பைன்பிரின்.


அது வேலையைக் காட்ட ஆரம்பிக்கும்!


தூக்கம் தொலைஞ்சே போகும்!


அப்பறம் ஆக்சிடாக்சின் அதாவது காதல் ஹார்மோன்; ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ஏற்படும் உணர்வுரீதியான பிணைப்பில் ஆரம்பிச்சு எக்கச்சக்க வேலையை செய்யும்.


கட்டி அணைச்சுக்கணும்ங்கற ஆசையில் ஆரம்பிச்சு செக்ஸுவல் பீலிங் வரைக்கும்; கணவன் மனைவிக்குள்ள இருக்கும் அன்யோன்யத்துல இருந்து ஒரு தாய்க்கு குழந்தை மேல வர பிணைப்புக்கும்... அதுக்கு இணையாக அப்பாவுக்கு தன் பிள்ளை மேல வர பிணைப்புக்கும் இந்த ஹார்மோன்தானே கரணம்" என அவன் சொல்ல, நொந்தேபோனாள் அவள்.


அவளும் நுண்ணுயிர்களைப் பற்றி அயர்ச்சி செய்துகொண்டிருப்பவள்தானே.


அவன் சொன்ன அறிவியல், உயிரியல் ரீதியான விளக்கங்களை மறுக்கவும் முடியவில்லை.


"ஐயோ! க்ளாஸ்ரூம் லெக்ச்சர்ல உட்கார்ந்துண்டு இருக்கற ஃபீல்!" என அலுத்துக்கொண்டவள், "கண்ணன் டாக்டரா இருக்கலாம்; ஆனா நீங்க இப்படி அநியாயத்துக்கும் டாக்டரா இருக்க கூடாது!


இப்படியே எல்லாத்தையும் பார்த்தால் நாம ஒரு இயல்பான வாழ்க்கை வாழ முடியுமா?" என அவள் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க, "இதைத்தாண்டீ நானும் சொல்ல வரேன் லூசே! நானும் சாதாரண மனுஷன்தானே!? என்றவன்,


“'இவன் டாக்டர்; இவனுக்கு நம்மளை பத்தி நன்னாவே தெரியும்; அதனால நம்ம வேலையை இவன் கிட்ட காட்டக்கூடாதுன்' னு இந்த ஹர்மோனேல்லாம் என்னை சும்மா விட்டு வெச்சுதா என்ன?" என தன் நிலையை மறைக்காமல் சொல்லிவிட்டு, "உன் ஃப்ரெண்ட்ஸ்லாம், 'கண்ணன் உன் பாய் ஃப்ரெண்டா'ன்னு கேட்டான்னு சொன்னியே அப்ப எனக்கும் இந்த படபடப்பெல்லாம் உண்டாச்சு!


அது உனக்குத் தெரியுமா?


அந்த காதல் ஹார்மோன் முழுசா என்ட்ட வேலையை காட்ட ஆரம்பிக்கவும், எனக்குத் தெளிவா புரிஞ்சு போச்சு!


இதெல்லாம் கட்டுப்படுத்தற விஷயமா சொல்லு!


என்னால மைத்துவோடையும் சின்னுவோடையும் உன்ன கம்பேர் பண்ண முடியல!


என் மேலேயே எனக்கு பயம் வந்துடுத்து! அதான் பயந்து ஹாஸ்டலுக்கு ஓடி போனேன்!" என விளக்கமாகச் சொல்ல,


"அப்படினா நம்மளோட; இல்ல இல்ல என்னோட இந்த ஆத்மார்த்தமான பீலிங்க்ஸுக்கு காரணம் வெறும் ஹார்மோன்ஸ்தான்! நமக்குள்ள காதலே இல்லன்னு சொல்றீங்களா?" என அனைத்தும் புரிந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவள் கேட்க,


"காதல் இல்லாத காமம் உண்டு ராதா! ஆனா காமம் இல்லாத காதல் உண்டா சொல்லு?


உண்மையை சொல்லனும்னா எல்லா உயிருக்கும் பொதுவான இந்த காமத்துக்கு மனுஷன் கண்டுபிடிச்ச பாலிஷ்ட் ஆர் ஸ்வீட் கோட்டட் நேம்தான் காதல்!


இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தெரிஞ்சோ தெரியாமலோ நமக்குள்ள ஒரு ஸ்ட்ராங் பாண்டிங் உண்டாகிப்போச்சு ராதா!


இந்த பிணைப்பை நம்ம ஆயுசுக்கும் லாங் லாஸ்டிங்கா கட்டி வெக்கற சக்தி நம்மளோட காதல் ஹார்மோன்; அதாவது ஆக்சிடாக்சினுக்கு உண்டு!


இதை இத்தனை வருஷத்துல நான் நன்னாவே உணர்ந்துட்டேன்!


அப்படி பார்க்கும்போது காலம் காலமா நம்ம மனித சமுதாயம் போற்றி புகழ்ந்துண்டு இருக்கும் தெய்வீக காதல் நமக்குள்ளயும் சர்வ நிச்சயமா இருக்கு!


எப்பவும் இருக்கும்!


ஆனா சூழ்நிலை உணர்ந்து அதைக் கட்டுப்படுத்தி வெச்சுண்டு இருந்தேன்.


நம்பி உங்க அம்மாவும் அப்பாவும் என்னை உங்காத்துக்குள்ள விட்டதுக்கு; நான் வேற எப்படி நடந்துண்டு இருக்கணும்னு நீ நினைக்கற!


அவா அங்க என்னை மட்டும் நம்பலடி! உன்னையும்தானே முழுசா நம்பினா!


அதை நாம நாசம் பண்ணலாமா? நீயே சொல்லு!


இப்ப உங்க அப்பா அவர் வாயாலேயே ராதா கண்ணனுக்குதான்னு சொல்லிட்டார்!


உங்க அம்மாவுக்கும் பரிபூரண சம்மதம்!


எங்காத்துல அம்மா அப்பா தாத்தான்னு எல்லாருக்கும் சம்மதம்!


இந்த நிறைவு கிடைச்சிருக்குமா சொல்லு?!" அவன் கேட்டுக்கொண்டே போக, அவன் மனதை உணர்ந்தவளின் அவள் கண்கள் குளமானது!


"அப்படினா உங்களுக்கும் ஆரம்பத்துல இருந்தே இப்படி ஒரு பீலிங் இருந்துதா?


அதை உள்ளுக்குள்ள வெச்சுண்டேதான் இவ்வளவு ஸீனையும் போட்டீங்களா?


நீங்க கண்ணன் இல்ல; கல்லுளிமங்கன்!


சரியான அழுத்தக்காரன்!" எனச் செல்ல கோபத்துடன் அவள் ஓடி வந்து அவன் மார்பில் தஞ்சம் புக, தயக்கத்துடன் அவளை அணைத்தவன், "ராதா! இதுவும் இந்த ஆக்சிடாக்சின் பண்ற வேலைதாண்டி!


ஆனா இதுக்கு நமக்கு இன்னும் லைசன்ஸ் கிடைக்கல!" என்றான் கண்ணன் கிரங்கிய நிலையில்.


"கிடைக்கும் ன்னா.. கிடைக்கும்! இன்னும் ரெண்டே நாளைக்குள்ள கிடைக்கும்" என அவள் தன் நாணத்தை மறைத்துக்கொண்டு சொல்ல, "ஏன்னாவா! அதுக்குள்ள இதெல்லாம் ரொம்ப ஓவர் டீ" என்றான் அவன் அவளை மெள்ள விடுவித்துக்கொண்டே.


"ஆமாம், ஏன்னானுதான் சொல்லுவேன்! அது என்னோட உரிமை ம்கும்!" என்றாள் அவள் நிறைந்த பூரிப்புடன்.


சொன்னதுபோல் இரண்டே தினங்களில் அவனிடம் அவளுடைய உரிமையை நிலைநாட்டினாள் ராதா!


ஆயிரம்தான் காதல் என்பது அவன் சொன்னதைப்போல 'ஹார்மோன்'களின் நாட்டியமாக இருந்தாலும், 'ஐ லவ் யூ!' என்ற மூன்று சொற்களை அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களிடம் அந்த காதல் காட்டாற்று வெள்ளமென கரை புரண்டுகொண்டிருந்தது.


அந்த அபிமன்யு என்ன வேறு யார் வந்தாலும் அதற்கு அணையிட முடியாது.


அனைத்தையும் தகர்த்தெறியும் கண்ணன் ராதாவின் காதல் பெரு வெள்ளம்.


0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page