காதல்-16
அந்த அரவிந்தனுடன் அவனை ஒப்பிட்டு அவள் பேசவும், அவனுடைய பொறுமை காற்றில் பறக்க, "ஏய் யாரை யாரோட கம்பேர் பண்ற" என அவன் குரல் உயரவும், அதில் கொஞ்சம் மிரண்டாலும், "பின்ன அவர் அனுவை லவ் பண்றேன்னு சொல்லி அவளை மெடிக்கல் படிக்க விடாம பண்ணார்.
நீங்கோ என்னை லவ் பண்ண மாட்டேன்னு சொல்லி என்னை மெடிக்கல் படிக்க விடாம பண்ணிடீங்கோ; அந்த விஷயத்துல ரெண்டுபேரும் ஒண்ணுதான?" என்றாள் ராதா உள்ளே போன குரலில்.
"ரொம்ப ஓவரா பேசற ராதா.
என்ன என்னை கில்டியா பீல் பண்ண வெக்க பாக்கறியா?
'கண்ணனுக்கு கோவமே வராது! அவன் மிஸ்டர் கூல்'னு எல்லாரும் சொல்லுவா.
என்னையே கோப பட வெக்கற பெருமை உன்னை மட்டும்தான் சேரும்!" என எள்ளலாகச் சொன்னவன் அவள் கண்களைப் பார்த்துக்கொண்டே, "உண்மையா சொல்லு!
நான் உன்னை லவ் பண்ண ஒத்துக்கலன்னுதான் நீ மெடிக்கல் படிக்கலையா?
அந்த கோவத்துலதான் கண்ணை மூடிண்டு போய் உங்க அத்திம்பேர் சொன்ன கோர்ஸில் சேர்ந்தியா?" எனக் கேட்டான் அவன் குற்றம் சாட்டும் குரலில்.
அந்த கேள்வியில், "அது; வந்து; கண்ணன்!" என அவள் தடுமாற,
"எனக்குத் தெரியும் ராதா!
மெடிக்கல் போற அளவுக்கு ப்ளஸ் டூல உன்னோட மார்க் இல்ல!
காரணம் என்ன தெரியுமா?
அப்ப உன் புத்தி புல்லு மேய போயிருந்தது?
அதுக்கு பிறகுதானே நீ ரியலைஸ் பண்ணி; மறுபடியும் நன்னா படிக்க ஆரம்பிச்ச!
மெடிக்கல் சம்பந்தமா படிக்கற ஆசைலதான போய் மைக்ரோ பயாலஜி சேர்ந்த?"
என அவன் கேட்டுக்கொண்ட போக, மறுத்துப் பேச இயலாமல் மௌனம் காத்தாள் அவள்.
"போனா போகட்டும் விடு ராதா!" என்றவன், "இவ்வளவு வருஷம் ஆகியும் உன் வைராக்கியம் மாறல இல்ல!
உன் அன்பு ரொம்ப பியூரானது ராதா!
அது எனக்கு நன்னாவே புரியர்து.
அதனால உனக்காக யோசிச்சுதான் என்னோட சின்ன தாத்தாவை விட்டு உங்க அப்பாகிட்ட பேசச் சொன்னேன்!
இவ்வளவு நாள் எனக்காக காத்துண்டு இருந்த இல்ல!
இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இரு!
உங்க அப்ப நமக்கு சாதகமாத்தான் பதில் சொல்வார்" எனக் கண்ணன் சொல்ல தனக்காக யோசித்து அவனுடைய கொள்கையிலிருந்து அவன் கொஞ்சம் இறங்கி வந்திருப்பது புரிந்தது அவளுக்கு.
அவன் அவளுடைய அப்பாவின் மேல் அளவு கடந்த மரியாதை வைத்திருக்கிறான் என்பது நன்றாகவே தெரியும் அவளுக்கு.
அதற்காக தன் உயிரைவிட மேலாக மதிக்கும் மருத்துவ தொழிலையே விட்டுக்கொடுக்க முன்வந்தான் என்றால், என்னதான் செய்யமாட்டான் அவன் என்று தோன்ற தன் பக்க தவறுகள் உறைத்தது அவளுக்கு.
"சாரி கண்ணன்! உங்க அளவுக்கு எனக்குப் பக்குவம் இல்ல" என முணுமுணுப்பாக அவள் சொல்லவும், "அதை கொஞ்சம் வளர்த்துக்கோ! அதுதான் எல்லாருக்கும் நல்லது" என்றவன் "நான் இதையெல்லாம் பேச உன்னை இங்க வர சொல்லல.
பேச வேண்டிய விஷயத்தை விட்டுட்டு என்னென்னவோ பேசிண்டு இருக்கோம்" என்றான் அவன்.
"அதை மறந்துட்டேன் பாருங்கோ! சொல்லுங்கோ கண்ணன் என்ன முக்கியமான விஷயம்" எனக் கேட்டாள் ராதா தன் முகத்தைத் துடைத்துக்கொண்டு.
"உங்க அக்கா இப்ப இங்க எதுக்காக வந்திருக்கான்னு யோசிச்சியா?" எனக் கேட்டான் அவன்.
"ஆமாம் கண்ணன்! எனக்கும் அதே யோசனைதான்' என அவள் பதில் கொடுக்க, "மைத்து பூச்சூட்டல் அன்னைக்கு உங்க அத்திம்பேர் போன் பண்ணியிருந்தாரே ஞாபகம் இருக்கா?' என அவன் கேட்க, கொஞ்சம் யோசித்தவள், "ஆமாம்; எனக்குதானே கால் பண்ணார்.
நான்தானே அப்பா கிட்ட கொடுத்தேன்" என்றாள் அவள்.
"அன்னைக்கு அரவிந்தன் அண்ணா ஒரு வரனைப் பத்தி பேசினார்; அது ஞாபகம் இருக்கா உனக்கு?" என அவன் கேட்க,
"ஆமாம்! அப்பாதான் அதுல இன்ட்ரெஸ்ட் இல்லனு தெளிவா சொல்லிட்டாரே" என்றாள் அவள்.
"அது யாருக்கா இருக்கும்னு ஐடியா இருக்கா"
அவன் கேள்வியில் திகைத்தவள், "அதான் அந்த அபிமன்யுவுக்காக இருக்கும்னு அன்னைக்கு ஒரு நாள் சொன்னீங்களே!" என்றாள் ராதா.
"அவனுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒரு எண்ணம் இருக்கணும்.
அதனாலதான் உன்னையும் அவனையும் நேரா மீட் பண்ண வைக்க அரவிந்தன் அண்ணா உன்னை அன்னைக்கு அங்க வரச் சொன்னார்" என அவன் சொல்ல,
"அன்னைக்கே இந்த மாதிரி சொன்னீங்கோ இல்ல!" என்றவள் "அதான் அப்பா எடுத்த எடுப்பிலேயே வேணாம்னு சொல்லிட்டாரே.
இப்ப அதை பத்தி என்ன பேச்சு" என அவள் கேட்க, "அன்னைக்கு நீ என்ன சொன்ன? " எனக் கேட்டான் அவன்.
"என்ன சொன்னேன்? ஞாபகம் இல்ல' என வேண்டுமென்றே அவள் சொல்ல, அதில் பற்களை கடித்தவன், "அவன் வந்து பெண் கேட்டல் உடனே ஓகேன்னு சொல்லிடுவேன்னு சொன்ன இல்ல?
அநேகமா உங்க அக்கா அத்திம்பேர் மூலமா பெண் கேட்டு வருவான்!
ஐ மீன் எமோஷனல் ப்ளாக்மெயில் பண்ணுவான்.
அப்படி வந்தால் மறுத்து பேசாம சம்மதம்னு சொல்லிடு" என அவன் அலட்டிக்கொள்ளாமல் சொல்ல,
அரண்டுபோனவள், "என்ன விளையாடறீங்களா?" என பதட்டத்துடன் கேட்கவும், "ஏன் ராதா! கரும்பு தின்ன கூலியான்னு நீதான கேட்ட!
இப்ப இப்படி பேக் அடிக்கற?" என்றான் கண்ணன் கிண்டலாக.
"அது அன்னைக்கு உங்களை சும்மா சீண்டி பார்க்க அப்படிச் சொன்னேன்.
ஆனா உங்களோட ரியாக்ஷனை பார்த்துட்டு நான் கடுப்பானதுதான் மிச்சம்" என நொடிந்துகொண்டாள் ராதா.
அதில் வாய் விட்டுச் சிரித்தவன், "பீ சீரியஸ் ராதா!
அவன் உங்க அக்கா அத்திம்பேரை வெச்சு குருவை கார்னர் பண்ண முயற்சி பண்ணுவான்.
அவனோட டார்கெட் நம்ம ஹாஸ்பிடல்.
ஏன்னா ஈ.ஏன்.டீல சிட்டிலயே நம்ம ஹாஸ்ப்பிட்டால்தான் ரேட்டிங்க்ல ஃபர்ஸ்ட் இருக்கு.
அது அவனோட கண்ணை உருத்திண்டே இருக்கும் போலிருக்கு!
மோர் ஓவர் உன்னை அவனுக்கு ஏனோ பிடிச்சிருக்கு!
அதனாலதான் ஒரே கல்லுல ரெண்டு மங்காவை அடிக்க பாக்கறான்!" எனக் கண்ணன் விளக்கமாகச் சொல்லக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது ராதாவுக்கு.
"அதனால என்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து; சீதனமா நம்ம ஹாஸ்பிடலையும் எழுதி குடுக்க சொல்லுவீங்கோ போலிருக்கே!
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல" என அவள் படபடக்க, "ப்ச்.. இது மட்டும் இல்ல ராதா!
இதுல உங்க அக்காவும் இப்ப சிக்கிண்டு இருக்கா!
அவளை இதுல இருந்து பத்திரமா வெளியில கொண்டுவரதும் முக்கியம்.
இல்லன்னா அது உங்க அம்மா அப்பாவை ரொம்ப பாதிக்கும்!
மேலோட்டமா பார்த்தால் இது உங்க குடும்ப பிரச்சனை மாதிரி இருந்தாலும், இது ஒரு சோஷியல் காஸ்!
எக்ஸ்பயரி ஆன மெடிசின்சை மறுபடியும் புதுசா பேக் பண்ணி சேல் பண்ணியிருக்கான்!
அதனால நம்ம கண் எதிர்லயே ஒரு உயிர் போயிருக்கு!
நாம் இதை பார்த்தும் பார்க்காமல் சும்மா இருக்கறது சரியா சொல்லு!
இதுக்கு அவனுக்குச் சரியான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டாமா?" என அவன் பொறுமையாக எடுத்துச்சொல்ல, அதிலிருக்கும் உண்மை புரிந்து மௌனமானாள் ராதா.
"அதனால நான் சொல்ற மாதிரி செய்!
இப்படி ஒரு டிமாண்ட் அவன் முன் வெச்சா, அமைதியா சரின்னு சொல்லிடு!
அப்பறம் என்ன பண்ணலாம்னு நான் சொல்றேன்!" என அவன் சொல்லவும், அவள் பதில் பேசாமல் இருக்க, அவள் முகமும் தெளிவில்லாமல் இருக்க, "ராதா! நான் இருக்கேன்!
கவலை படாதே!
நாம சேர்ந்துதான் இதை சரி பண்ணனும்" என அவன் சொல்ல அதற்கு மௌனமாகத் தலை அசைத்து தன் சம்மதத்தைச் சொன்னவள், 'பெருமாளே! அந்த மாதிரி அவன் அப்பாவை மிரட்டக் கூடாது' என்ற பிரார்த்தனையுடன் அங்கிருந்து கிளம்பினாள் ராதா.
ஆனால் ஓரிரு நாட்களுக்குள்ளேயே அனுபமா அப்படி ஒரு நிபந்தனையை அதாவது மறைமுக மிரட்டலை கீதாவிடம் முன் வைக்கவும் அதிர்ந்துதான் போனாள் ராதா.
அன்று அனுபமா பேசியதையும் அதற்கு சேஷாத்ரியும் கீதாவும் சொன்ன பதிலையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தான், அவனுடைய குருவின் மடிக்கணினி பையை உள்ளே வைக்க வந்த கண்ணன்.
அங்கே இருந்த பதட்டமான சூழ்நிலையில் ராதாவைத் தவிர வேறு ஒருவரும் அவனைக் கவனிக்கவில்லை.
ராதா அவனைப் பார்த்துவிட்டதை உணர்ந்து 'நீ பேசு!' என அவன் அவளுக்குக் கண்களால் ஜாடை செய்ய நிதானமாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, "வேண்டாம் கா; நீ உன் உயிரை விட வேண்டாம்.
நான் அந்த அபிமன்யுவை கல்யாணம் பண்ணிக்கறேன்!
அப்பா அந்த ஹாஸ்பிடலை அவன் பேருக்கு மாத்தி குடுப்பா!
அதுக்கு நான் பொறுப்பு.
இப்ப நீ போய் நிம்மதியா தூங்கு" எனக் கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் சொல்லிவிட்டு, தன் கைப்பேசியில், 'இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்குமே' என ஒரு குறுஞ்செய்தியைக் கண்ணனுக்கு அனுப்பிவிட்டு, அவனது மன்னிப்புகோரும் பார்வையைப் பதிலாகப் பெற்றுக்கொண்டு, "அப்பா! சாப்பிட வாங்கோ! இப்ப இதை பத்தி எதுவும் பேச வேண்டாம்!
நாளைக்கு கார்த்தால முடிவு பண்ணிக்கலாம்!" என்றவாறு உள்ளே சென்றாள் ராதா.
ஆனால் அவளுடைய மனதிற்கு ஒவ்வாத அந்த செயல்களை செய்வதற்காக கண்ணனிடம் ராதா விதித்த நிபந்தனையால் ஆடித்தான் போனான் கண்ணன்.
Comments