காதல்-15
காலாவதியான மருந்துகளை மறு புழக்கத்தில் விட்ட மோசடிக்குப் பின் அபிமன்யு தான் இருக்கிறான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து வைத்திருந்தான் கண்ணன்.
அதில் அவன் வேண்டுமென்றே சிக்க வைத்திருந்த அரவிந்தனையும் அனுபமாவையும் அவனாகவே காப்பாற்றியதில் கட்டாயம் ஏதோ உள்நோக்கம் இருக்கும் எனத் திட்டவட்டமாக நம்பினான் கண்ணன்.
அதில் அவர்களே அறியாமல் அவர்களை அவன் சிக்க வைத்திருக்கிறான் எனும்போது அவர்களை எளிதாக விடுவித்ததற்குப் பின் மிக ஆழமான நோக்கம் இருக்கவேண்டும் என்பதும் அது என்னவாக இருக்கும் என்பதும் அவனால் ஓரளவிற்கு அனுமானிக்க முடிந்தது.
அதுவும் சொல்லாமல் கொள்ளாமல் அனுபமா குழந்தையுடன் வந்து இறங்கவும் அவன் அனுமானம் மேலும் உறுதியானது.
அனுபமா அங்கே வந்திருப்பது கீதா மூலமாகத் தெரியவரவும், அவள் வந்த அன்று, 'உடனே என்னோட பிளாட்டுக்கு வா; முக்கியமா பேசணும்' என்ற ஒரு குறுஞ்செய்தியை ராதாவுக்கு அனுப்பினான் கண்ணன்.
கண்ணனிடமிருந்து அப்படி ஒரு செய்தி வரவும் வியப்பு மேலிட அவனைக் காண அங்கே வந்தாள் ராதா.
அவளுக்காகவே காத்திருந்தவன், "வா ராதா!" என அவளை அழைக்க, இயல்பாக வரவேற்பறை 'சோபா'வில் போய் உட்கார்ந்தாள் அவள்.
"நீ இங்க வந்திருக்கிறது உங்க அக்காவுக்கு தெரியாதில்ல" என அவன் சிறு பதற்றத்துடன் கேட்க, அதை மனதிற்குள் குறித்துக்கொண்டவள், அவனுடைய அந்த வித்தியாசமான செய்கையில் குழம்பியவளாக, "அக்காவுக்கு மட்டும் இல்ல; அம்மாவுக்குக் கூட தெரியாது.
அவளை ஏர்போர்ட்ல இருந்து ஆத்துக்கு அழைச்சிண்டு வந்து விட்டுட்டு மீராவை பார்க்கலாம்னு கிளம்பினேன்.
உங்க மெசேஜை பார்த்துட்டு இங்க வந்துட்டேன்" என்றாள் ராதா.
"நல்லதா போச்சு" என்றவன், "ஒரு முக்கியமான விஷயம் பேசணும்! நீ இதை எப்படி எடுத்துப்பேன்னு புரியல' என்ற பீடிகையுடன் தொடங்க, இடை புகுந்தவள்
"அதைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை; நீங்க சொல்லவந்ததை சொல்லுங்கோ" என்றாள் அவள் வெடுக்கென்று.
"நீ எப்ப ராதா என்னை புரிஞ்சிக்க போற? நான் எது பேசினாலும் இப்படி குதர்க்கமா பதில் சொல்ற" எனக் அவன் ஆயாசத்துடன் கேட்க,
"நான் ஏன் கண்ணன் உங்களை புரிஞ்சிக்கணும்.
தினமும் எத்தனையோ பேஷண்ட்ஸை பாக்கரீங்கோ.
தனக்கு என்ன பிரச்சனைன்னு கூட சொல்லத் தெரியாத சின்ன சின்ன குழந்தைகளுக்கெல்லாம் ட்ரீட்மெண்ட் குடுக்கறீங்கோ.
எல்லாரோட சைக்காலஜியும் அனலைஸ் பண்ண தெரிஞ்சவாளாலதான் ஒரு சக்ஸஸ்ஃபுல் டாக்டரா இருக்க முடியும்.
அப்படி இருக்கும்போது என் மனசுல என்ன இருக்குன்னு மட்டும் புரியாத மாதிரி நீங்க நடந்துண்டா நான் அதை நம்பணும் இல்ல?" என அவள் பொரிய,
"உன் மனசைப் பத்தி மட்டும் வக்கணையா பேசரியே; நீ யாரோட மனசையாவது பார்த்தியா ராதா" எனக் கேட்டான் அவன்.
"நான் யார் மனசை பார்க்கணும்?
நான் ஆசைபட்டேன்னு சொன்னா அப்பா அம்மா என்ன வேண்டாம்னா சொல்ல போறா?
கட்டாயம் சம்மதிப்பா!
அதுவும் உங்களை எப்படி வேண்டாம்னு சொல்லுவா? என அவள் அலட்டிக்கொள்ளாமல் கேட்க,
"நீ பிடிவாதம் பிடிச்சா கட்டாயம் சம்மதிப்பா! இல்லனு நான் சொல்லவே இல்லையே!
வெட்டறேன் குத்தறேன்னு கிளம்பாம தானே முன்னாடி நின்னு இந்த கல்யாணத்தை நடத்தியும் வெப்பா!
ஆனா மனசு நொந்துபோய் அதை செய்வா!
புரிஞ்சிக்கோ!
என்ன கேட்ட; 'உங்களை எப்படி வேண்டாம்னு சொல்லுவா?'ன்னா.
நீ கவனிக்கலையா ராதா
அன்னைக்கு என்னோட சின்ன தாத்தா உங்க அப்பாகிட்ட எனக்காக உன்னை பொண்ணு கேட்டாரே.
உடனே சம்மதனு உங்க அப்பா சொல்லல!
ஏன்.. அதுக்கு உங்க அப்பா இதுவரைக்கும் கூட பதில் சொல்லலையே; ஏன்?"
அவன் இப்படி கேட்கவும் பதில் சொல்ல இயலாமல் மௌனமானாள் ராதா.
"அவர் மேல தப்பில்ல ராதா!
அப்பாங்கற ஸ்தானம் அப்படி!
என்னதான் நான் அவர் மனசுக்கு நெருங்கினவனா இருந்தாலும்; என்னோட பின்னணியை பத்தி கொஞ்சம் யோசிக்கத்தான் தோணும்" என்றவன், "உங்க அக்கா விஷயத்துல அவர் ரொம்பவே தோத்துப்போயிட்டார் ராதா!
அந்த வயசுல உனக்கு அதை புரிஞ்சுக்கற பக்குவம் இல்ல.
ஆனா இப்ப கூடவா?" என அவன் கேட்க, மௌனமாகத் தலை குனிந்தபடி நின்றிருந்தாள் அவள்.
"பெண் குழந்தையோ ஆண் குழந்தையோ; பிள்ளையை பெத்தவாளுக்கு, 'என் பிள்ளை என் பேச்சைத் தட்டமாட்டா'ங்கற பெருமை இருக்கும்.
அதை தப்புன்னு சொல்ல முடியாது.
அவாளோட கல்யாணத்தைப் பத்தி அம்மா அப்பாவுக்கு ஒரு கனவு இருக்கும்.
அதுவும் பெண்ணை பெத்தவாளுக்கு ஒரு பயம் உள்ளுக்குள்ள இருந்துண்டே இருக்கும்.
நானும் ரெண்டு தங்கைகளுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கேன் ராதா!
எனக்கு இந்த மனநிலை புரியும்.
அந்த மாதிரி நேரத்துல உங்க அக்கா பண்ண மாதிரி; தானே ஒருத்தனை தேர்ந்தெடுத்துண்டு இவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு வந்து நின்னா அவா நிலைமை என்னவா இருக்கும்?
எவ்வளவு கம்பீரமானவர் ராதா உங்க அப்பா!
அவரோட விருப்பத்துக்கு மாறா அனு அரவிந்தை கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னப்ப அவரோட ஈகோ எவ்வளவு அடி வாங்கி இருக்கும்?
உங்க அம்மா ஒரு யதார்த்தவாதி.
உங்க அம்மா மட்டும் இல்ல எல்லா பெண்களுமே அப்படித்தான்.
இல்லனா கல்யாணம் ஆனதும் பெத்தவா கூட பிறந்தவா எல்லாரையும் விட்டுட்டு வேற ஒரு புது குடும்பத்துல புது சூழ்நிலைல வந்து தன்னை மொத்தமா இணைச்சுக்க அவளால முடியுமா!
அதனால உங்க அம்மா அதை லைட்டா எடுத்துண்டு இருந்திருக்கலாம்.
ஆனா உங்க அப்பா உள்ளுக்குள்ள எவ்வளவு உடைஞ்சு போயிருக்கார்னு உங்க யாருக்காவது தெரியுமா?
எனக்கு தெரியும் ராதா!
அவர் தன்னோட மனக்குறையை யார் கிட்ட போய் சொல்லுவார்னு நீங்க என்னைக்காவது நினைச்சு பார்த்திருக்கீங்களா?
நான் வயசுல அவரோட ரொம்ப சின்னவன்தான்!
ஆனா பலதடவை அவரோட இந்த வேதனையையெல்லாம் என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்கார் ராதா!
அனுபமா ப்ளஸ் ஒன் படிக்கும்போதே அரவிந்த்தோட பழக ஆரம்பிச்சிருக்கா.
எங்க அவ மெடிக்கல் படிச்சா தன்னை விட்டுட்டு போயிடுவாளோன்னோ இல்ல அவ தன்னை விட ஒரு படி மேல இருக்கறதை விரும்பாமையோ அவளை பிரைன்வாஷ் பண்ணி வேற படிக்கற மாதிரி பண்ணியிருக்கான் அவன்.
இதெல்லாம் உனக்குத் தெரியுமா?
இதெல்லாம் புரியாம அவனை கல்யாணம் பண்ணிண்டு போய் இப்ப என்ன சாதிச்சுட்டா உங்கக்கா?
கேட்டா இதுக்கெல்லாம் பேரு தெய்வீக காதல்! ம்.
லவ்வாம் லவ்வு!
அது நம்மள பத்தி மட்டுமே நினைக்க வெக்கற ஒரு சுயநல உணர்வு.
மத்தவா யாரும் நம்ம கண்ணுக்கு தெரியவே மாட்டா!
நீயும் அதையே செய்யணும்னுதான கங்கணம் கட்டிண்டு இருக்கியா?
ஆனா என்னால அப்படி இருக்க முடியாது ராதா!
ஒரு அப்பாவா அவர் தோத்து போறது உனக்கு வேணா சாதாரணமா இருக்கலாம்.
ஆனா எனக்கு உயிர் கொடுத்து கிடைக்கவே கிடைக்கம போயிடுமோன்னு நான் ஏங்கின கல்வியை எனக்கு கொடுத்து அவரோட ஹாஸ்பிட்டல்லயே; அதுவும் அவருக்கு சமமான ஸ்தானத்தை கொட்த்திருக்கற என்னோட குரு தோத்து போறதுல எனக்கு இஷ்டம் இல்ல.
அதுவும் அவர் முழுசா நம்பற என்னால?" என்றான் கண்ணன் வைராக்கியத்துடன்.
அவனது வார்த்தைகள் ஒரு பக்கம் பெருமிதத்தைக் கொடுத்தாலும் மறுபக்கம் அவனுடைய பாராமுகம் வேதனையை கொடுக்க, “எல்லாம் சரி; நானும் இதையெல்லாம் ஒத்துக்கறேன்.
ஆனா உங்களுக்கு என் மேல அன்பில்ல காதல் இல்லன்னும் நீங்க சொல்லவே இல்லயே!” என அவனது நாடியை பிடித்ததைப்போல கேட்டவள், அவன் இறுகிய முகத்துடன் மவுனம் காக்கவும்,
"சரி! எப்படியும் நீங்க அதை மனசார ஒத்துக்கப் போறதில்ல! அதனால இல்லன்னே வெச்சுக்கலாம்.
பின்ன ஏன் கண்ணன் நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?"
அவனைப் பார்த்துக்கொண்டே அவள் கூர்மையாகக் கேட்க, "இப்பதானே சின்னவ கல்யாணம் முடிஞ்சுது.
இனிமேல்தான் அதைப் பத்தி யோசிக்கணும்.
மோர் ஓவர் நீ வர வரனையெல்லாம் தட்டி கழிச்சிண்டு இப்படி அடங்காபிடாரித்தனமா நிக்கறதாலயும்தான்.
நீ உங்க அப்பா பார்த்து சொல்ற ஒருத்தனை கல்யாணம் பண்ணிண்டு செட்டில் ஆகி இருந்தன்னா நானும் கல்யாணம் பண்ணிண்டு இருப்பேனோ என்னவோ" என்றான் கண்ணன் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.
அந்த வார்த்தைகளைத் தாங்க முடியாமல் அவள் கண்களில் நீர் கோர்க்க, தன் ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், "உங்களுக்கும் என்னோட அத்திம்பேருமும் எந்த வித்தியாசமும் இல்ல கண்ணன்" எனச் சீறினாள் அவள்.
Comentarios