காதல்-14
உணவை முடித்துக்கொண்டு ராதாவும் அபிமன்யுவும் அங்கிருந்து கிளம்பவே மணி மூன்றைக் கடந்திருந்தது.
ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர் இருவரும்.
பேசிக்கொண்டிருந்தனர் என்பதை விட, அவளது படிப்பு குறித்து, அவளது ஆராய்ச்சி குறித்து, அவர்கள் நிறுவனம் நடத்திய போட்டிக்காக அவள் எழுதியிருந்த கட்டுரை குறித்து என அவன் அவளிடம் விதவிதமாக கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தான் அபிமன்யு.
அதற்கெல்லாம் அவள் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் எச்சரிக்கை உணர்வு மேலோங்க. அவ்வளவே!
உடனே கண்ணனை நேரில் காண வேண்டும் என்ற ஆவல் மட்டுமே அவளுக்கு மேலோங்கி இருக்க, ஒரு நிலைக்கு மேல் 'ஐயோ! பெருமாளே! மொக்க தாங்க முடியலையே!
இவன் நம்மள இப்போதைக்கு விடமாட்டான் போலிருக்கே" என மனதிற்குள் புலம்பவே தொடங்கிவிட்டாள் ராதா.
மாறி மாறி மனதில் ஏற்படும் உணர்வுகளை முகத்தில் காண்பிக்காமல் அவனுக்கு முன்னால் உட்கார்ந்திருப்பது வேறு வெகு கடினமாக இருந்தது அவளுக்கு.
அனைத்திற்கும் காரணமான அனுவின் மேலும் அரவிந்தன் மேலும் அவ்வளவு கோபம் வந்தது.
ஒரு வழியாக அவன் கிளம்பலாம் என்று சொல்லவும் அவள் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை.
ஆனாலும் அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அதையும் குலைத்தான் அவன்.
அவளை அவர்கள் இல்லத்தில் இறக்கி விடுவான் என எண்ணி அவள் அவனது வாகனத்தில் ஏற, அது கடற்கரைச் சாலை நோக்கிப் பயணிக்கவும் கொஞ்சம் மிரண்டுதான் போனாள் அவள்.
"எங்காத்துக்கு போற வழி இது இல்ல மிஸ்டர் அபிமன்யு" என அவள் கொஞ்சம் பதட்டத்துடன் சொல்ல, அவள் முகத்தில் தெரிந்த மிரட்சியை ரசித்துக்கொண்டே, "உங்க ஆத்துக்கு போற வழி எதுன்னு கூட்டிட்டு வந்த எனக்கு தெரியாதா பேபி!" என்றவன், "நீதான என்னோட கம்பெனில ஜாயின் பண்ண சம்மதிச்ச" என அவன் வெகு இயல்பாகக் கேட்க, "அதுக்கென்ன இப்ப" என்றாள் அவள் சற்று எரிச்சலுடன்.
"அதுக்காகத்தான் போறோம்! பட் என் கிட்ட இப்படி சிடுசிடுன்னு பேசினா அது எனக்கு பிடிக்காது! கொஞ்சம் மைண்ட்ல வெச்சுக்கோ" என எச்சரிக்கும் தொனியில் ஆனாலும் புன்னகை மாறாமல் அவன் சொல்ல, அவனுடன் வாதிட விரும்பாமல், "சாரி" என முணுமுணுப்பாகச் சொன்ன ராதா, "பட் இப்ப எங்க போறோம்" எனக் கேட்டாள் தன் எரிச்சலை மறைக்க முயன்றவாறு.
"ஏ அண்ட் பீ ஃபார்மாஸோட கார்ப்பரேட் ஆபீசுக்கு! அங்க உடனே நீ ஜாயின் பண்ற மாதிரி ஒரு லெட்டர் ரெடி பண்ண சொல்றேன்!
அண்ட் உன் ஃப்ரெண்ட் யாரோ சொன்ன இல்ல; அவங்களை நாளைக்கு ஆபிஸ்ல வந்து எங்க ஜென்ரல் மானேஜரை பார்க்க சொல்லு.
ரெண்டு பேரும் மண்டேல இருந்து வர மாதிரி பிரிப்பர் பண்ணிக்கோங்க" என்றான் அவன் கொஞ்சம் கட்டளை போல.
மறுக்கும் நிலையில் இல்லாமல் அவன் சொல்லுவதற்கெல்லாம் உடன்பட வேண்டியதாக இருந்தது அவளுக்கு.
வேறு வழி இல்லாமல் மிக முயன்று பொறுமையை கடைப்பிடித்துக்கொண்டிருந்தாள் ராதா.
"அப்பா அபிமன்யு; இன்னைக்கு இதோட நிறுத்திக்கோ! அப்பறம் வரது வரட்டும்னு நான் என் சுய ரூபத்தை காட்ட வேண்டியதா போயிடும்! நீ தாங்க மாட்ட' என மனதிற்குள்ளேயே அவனுக்கு எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருந்தவள், அதையெல்லாம் வெளியில் காண்பிக்காமல் புன்னகை முகமாக உட்கார்ந்திருந்தாள்.
சில நிமிடங்களில் அவர்கள் அவனது அந்த அலுவலகத்தை அடைய, வாகன நிறுத்தத்தில் காரை நிறுத்தியவன், யாரையோ கைப்பேசியில் அழைத்து, "சரண்! நான் இப்ப நம்ம ஆபிஸ்ல தான் இருக்கேன். ஐ டிண்ட் பிரிங் மை அக்சஸ் கார்ட். சென்ட் சம்படி" என அவன் கட்டளையாகச் சொல்லிவிட்டு வேக நடையுடன் அங்கிருந்து செல்ல, 'கடவுளே! சீன் தாங்க முடியலையே' என அவனை மனதிற்குள்ளேயே எகத்தாளம் செய்துகொண்டே அவனைப் பின்தொடர்ந்து கிட்டத்தட்ட ஓடினாள் அவள்.
அவர்கள் நுழைவு பகுதியை நெருங்கும்பொழுது அவர்களை நோக்கி ஓடி வந்த ஒரு பெண், "குட் ஈவினிங் மிஸ்டர் அபி" என்ற முகமனுடன் தன் கையில் வைத்திருந்த 'அக்சஸ் கார்ட்' மூலம் அவர்கள் உள்ளே செல்ல உதவி செய்தாள்.
அவனைப் பார்த்ததும் அங்கே பணியிலிருந்த காவலாளியில் தொடங்கி அலுவலக பணியாளர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் மாறியதையும் மிரட்சியும் தெரிந்தது.
அதி ஆடம்பரத்துடன் இருந்தது அவனுடைய அந்த அலுவலகம்.
மின் தூக்கி மூலம் மூன்றாவது தளத்தை அடைந்து 'அபிமன்யு பரத்வாஜ் - சீ.ஈ.ஓ' என பொன்னிற எழுத்துக்கள் மின்னிய பலகையைத் தாங்கிய கதவைத் தள்ளிக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தவன், "வெல்கம் டு மை கிங்டம்!" எனப் பெருமையுடன் அவளை உள்ளே அழைத்தான்.
பின் அங்கே இருந்த இருக்கையைக் காட்டி அவளை அமரச் சொன்னவன் தன் இடத்தில் போய் அமர்ந்தான் அபிமன்யு.
அவனுடைய அலுவலகம் அவளுக்கு மிரட்சியைக் கொடுக்க, தயக்கத்துடன் போய் அமர்ந்தாள் ராதா!
உடனே அங்கே இருந்த 'இன்டர்காம்' மூலம், "சரண்! கேன் யு கம் டு மை கேபின் நௌ" என அவன் தன் கட்டளையைப் பணிவுடன் சொல்லிவிட்டு ராதாவை நோக்கி, "எங்க ஆபிஸ் எப்படி இருக்கு!
நீயே சொல்லுவேன்னு பார்த்தேன்!" எனக் கேட்டான் ஒரு வித எதிர்பார்ப்புடன்.
"யா! ரொம்ப நன்னா இருக்கு!
ஆக்சுவலி ஐ ஆம் ஸ்பீச் லெஸ்" என்றாள் அவள் உண்மையாகவே தன் மனதில் நினைத்ததை.
கதவு தட்டப்படும் ஒலியில், "யா.. கம் இன் சரண்!" என்று அவன் சொல்ல உள்ளே நுழைந்தவரிடம், "ப்ளீஸ் பீ சீட்டெட்" என்று சொல்ல அவர் அமரவும், "மீட் மிஸ்டர் சரண்! நம்ம கம்பெனியோட ஜீஎம்" என்றவன், "மிஸ் ராதா!" என அறிமுக படுத்த, அவர் மரியாதை நிமித்தம், "ஹலோ" என்று சொல்லும்போதே, "கோயிங்க் டு பீ மிஸர்ஸ் அபிமன்யு" என்றான் அபிமன்யு.
அந்த வார்த்தை அவள் செவிகளில் நாராசமாய் ஒலித்தது.
'நான் எப்பவோ மிஸர்ஸ் ஆனந்த கிருஷ்ணன் அயிட்டேன் டா! எப்பவும் என் பேர் உன் பேரோட சேராது' என மனதிற்குள் கருவியவள் சரணைப் பார்த்து சிறிதாகப் புன்னகைத்தாள்.
"இவங்க இப்ப மெடிக்கல் மைக்ரோ பயாலஜில பி-ஹெச்-டி பண்ணிட்டு இருக்காங்க.
ஃபியூச்சர்ல நம்ம ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் டிபார்ட்மெண்ட்டோட மொத்த பொறுப்பையும் கவனிக்கப்போறவங்க இவங்கதான்.
பட் இப்போதைக்கு கொஞ்ச நாள் இங்க ட்ரைனியா இருக்கப்போறாங்க.
இவங்க ஃப்ரெண்ட் ஒருத்தங்களும் இவங்க கூடவே ஜாயின் பண்ண போறாங்க.
ஸோ உங்களுக்கு தேவையான டீடைல்ஸ் எல்லாம் வாங்கிட்டு இவங்கள கைட் பண்ணுங்க.
நம்ம நார்மல் ப்ரோடோகால் ஃபாலோ பண்ணிக்கோங்க.
நான் இன்னும் டூ ஆர் த்ரீ டேஸ்ட்தான் இங்க இருப்பேன்.
அதுக்குள்ள எல்லா ஃபார்மாலிடீசும் முடிச்சிருங்க" என்றான் அவன் உத்தரவாக.
ஸ்யூர், ஓகே, கண்டிப்பா என்ற வார்த்தைகளைத் தவிர வேறெந்த பதிலும் பேசவே இல்லை சரண்.
அவன் முடிந்தது என்பதுபோல் ஒரு பார்வை பார்க்க, அங்கிருந்து சென்றார் அவர்.
"இந்த ஆபிஸ்ல அகௌண்ட்ஸ் அண்ட் ஹெச் ஆர் மட்டும்தான் பார்க்கறோம்.
ப்ரொடக்ஷன் சம்பந்தப்பட்ட எல்லா ஆக்டிவிட்டீசும் பாக்டரியோடவே அன்னெக்ஸ் ஆகி இருக்கும்.
ஆர் அண்ட் டீயும் அங்கதான் இருக்கு.
ஜாயின் பண்ணிட்டு ஸ்லோலி ஒவ்வொண்ணா கத்துக்கோ" என்று முடித்தான் அவன்.
சரி என்று அவள் தலையாட்ட, கேள்வியாக அவளைப் பார்த்தவன், "அன்னைக்கு கெஸ்ட் ஹவுஸ்ல பார்த்த ராதா மாதிரி இல்லையே.
அன்னைக்கு அந்த பேச்சு பேசின; இன்னைக்கு என்னடான்னா எல்லாத்துக்கும் தலையை ஆட்டிட்டு இருக்க" என அவன் சந்தேகத்துடன் இழுக்க, "நீங்க சரியான முறையில் அப்ரோச் பண்ணி இந்த கல்யாண ஏற்பாட்டை பண்ணியிருந்தீங்கன்னா நானும் கொஞ்சம் இயல்பா இருந்திருப்பேன்.
இப்படி என்னோட அக்காவை வெச்சு மிரட்டி இந்த கல்யாணத்தை நடத்த பாக்கறீங்க.
நான் வேற எப்படி நடந்துக்க முடியும்" என அவள் சாதுரியமாக அவன் கேட்ட கேள்வியை அவன் பக்கமே திருப்ப, "வெல்; ஐ டோன்ட் பாதர்; நீ இப்படியே இருந்துட்டா எப்பவுமே உனக்கு நல்லது.
மத்தபடி எனக்கு உன்னை பிடிச்சிருக்கு; சோ உன்னை ரொம்ப கேர் பண்ணுவேன்" என்றான் அவன் திமிராகவே.
"மண்ணாங்கட்டி; நீ என்னடா என்னை கேர் பண்றது; கேர் அப்படிங்கற வார்த்தைக்கு அர்த்தம் என்னனு உனக்கு தெரியுமா? அப்படினா கண்ணன்னு அர்த்தம்' என எண்ணியவள், "ப்ளீஸ்! என்னைச் சீக்கிரம் ஆத்துல கொண்டுபோய் விட்டுடுங்கோ; எனக்கு ரொம்ப தலை வலிகர்து" என்றாள் ராதா மேற்கொண்டு பேச்சைத் தொடர விரும்பாமல்.
ஆமோதிப்பாக அங்கிருந்து கிளம்பியவன் சில நிமிடங்களில் அவளை அவர்கள் இல்லத்தில் இறக்கி விட்டுவிட்டுச் சென்றான் அபிமன்யு.
ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது ராதாவுக்கு.
***
வேகமாக அவர்கள் அகத்துக்குள் நுழைந்தவள் நேராக அவளுடைய அறைக்குள் போய் புகுந்துகொண்டாள் ராதா.
கலவரம் மண்டிக் கிடந்த மகளுடைய முகத்தைப் பார்க்க வேதனையாக இருந்தது அவளுக்காக வரவேற்பறையிலேயே காத்திருந்த கீதாவுக்கு.
அவளிடம் எதுவும் கேட்கவும் சங்கடமாக இருக்க அவர் அப்படியே உட்கார்ந்திருக்கவும் சில நிமிடங்களில் வேறு உடைக்கு மாறி அங்கே வந்தாள் ராதா.
அவள் எங்கோ செல்வதற்காகக் கிளம்பி இருப்பது புரியவும், "இப்பத்தானடி உள்ள நுழைஞ்ச; அதுக்குள்ள எங்க கிளம்பற?" என அவர் பதற்றமடைய, "ம்.. நேரில் போய் உன் மாப்பிளைய உண்டு இல்லைனு பண்ணப்போறேன்!
இருக்கு அவருக்கு" என்று சொல்லவிட்டு, "மா.. நான் ஃபுல்லா சாப்டுட்டேன்; ஸோ கவலை படாத! சீக்கிரம் வந்துடறேன்!
அப்பா வந்தா நான் பத்திரமா வந்துட்டேனு சொல்லிடு" என்று சொல்லிவிட்டுக் ராதா அங்கிருந்து சென்றுவிட, அவசரமாக கைப்பேசியை எடுத்தவர், "சுனாமி உங்காத்துக்கு வந்ததுண்டு இருக்கு! கண்ணா உன் சமர்த்து" எனக் குறுஞ்செய்தியை அவர் அனுப்ப, "நான் பார்த்துக்கறேன் மாமி..யாரே" என அவனிடமிருந்து பதில் வந்தது.
அவனது அந்த பதிலில் அவரது பதற்றமெல்லாம் காணாமல் போகப் புன்னகைத்துக்கொண்டார் கீதா.
***
கீதாவின் குறுஞ்செய்தியைப் பார்க்கும்வரை சோம்பலுடன் உட்கார்ந்திருந்தவன், எழுத்து போய் முகத்தை அலம்பிக்கொண்டு ராதாவின் வருகைக்காகக் கதவைத் திறந்துவைத்தான்.
பின் அடுக்களைக்குள் நுழைந்தவன் பாலை காய்ச்சி, 'காஃபி'க்கு தயார் செய்துவிட்டு வந்து வரவேற்பறை 'சோஃபா'வில் அமரவும் புயலென ராதா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
மெலிதாக உண்டான புன்னகை அவளைப் பார்த்ததும் பெரிதாக விரிய, "லன்ச் அமர்க்களம் போல இருக்கு; போட்டோல்லாம் பிரமாதம்" என்றான் கண்ணன் அவளைச் சீண்டும் விதமாக.
"சொல்ல மாட்டீங்கோ பின்ன! தெரியாமத்தான் கேக்கறேன்! இதுக்கெல்லாம் நான்தான் கிடைச்சேனா!" எனக் கோபமாக ஆரம்பித்து கண்ணீர் குரலில் முடித்தாள் ராதா.
அவளது கலக்கத்தைக் காண முடியாமல், வேகமாகப் போய் கதவை தாளிட்டவன் அதில் அப்படியே சாய்ந்தவாறு தன் கைகளைப் பெரிதாக விரிக்க, "கண்ணன்!" என்றவாறு ஓடி வந்து அவன் மார்பில் புதைந்துகொண்டாள் ராதா.
அன்றைய நாள் முழுவதும் அவள் அடைந்த சங்கடங்கள் அனைத்தும் கண்ணீராக மாறி அவன் மார்பை நனைத்தது.
அவளை அமைதிப்படுத்தும் விதமாக கண்ணனுடைய விரிந்த கைகள் அவனது ராதையை உரிமையுடன் சிறை செய்தன!
Comments