top of page

Kadhal Va..Radha? 12

காதல்-12


"உன்னோட மார்க்கை பார்த்தேன்; இந்த கிராமத்துல இருந்து படிச்சுட்டு இவ்வளவு மார்க் வாங்கி இருக்க; ரியலி யு ஆர் கிரேட்!" என்றார் சேஷாத்திரி கொஞ்சம் இயல்புக்குத் திரும்பியிருந்த கண்ணனிடம்.


அவரது குரல் கேட்டு படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து புன்னகைத்தான் அவன்.


ஆனாலும் அதில் ஜீவனே இல்லாமலிருந்தது.


"ஒரு உயிரோட மகத்துவம் தெரியாமலிருக்கற நீயெல்லாம் டாக்டருக்கு படிச்சு என்ன பண்ண போற?" அவர் வெகு தீவிரமாகக் கேட்கவும் அவன் முகம் இருண்டுபோனது.


உடனே அவன் தந்தையின் முகத்தைப் பார்க்க, "கேக்கறேரோல்லியோ! பதில் சொல்லு" என்றார் அவர்.


தன்னுடைய இந்த செய்கையால் அவர் எந்த அளவுக்கு உடைந்துபோயிருக்கிறார் என்று புரிந்தது கண்ணனுக்கு.


ஆனாலும் தன் மன உணர்வுகளை வார்த்தைகளாய் கோர்த்து எப்படி அவர்களுக்கு உணர்த்துவது என்பது அவனுக்குப் புரியாமல் போக அவை கண்ணீராய் ஊற்றெடுத்தது.


மகனுடைய கண்ணீரைப் பார்த்துப் பொறுக்கமுடியாமல், "இவன் குழந்தைல இருந்தே எதுக்கும் பிடிவாதம் பிடிச்சு அழுது நான் பார்த்ததில்ல.


ஆனா இப்ப இந்த அளவுக்கு போயிருக்கான்னா என்ன சொல்ல?


இவன் ஆசைப் பட்ட படிப்பைப் படிக்க வெக்கற வசதியைப் இந்தப் பெருமாள் எனக்குக் கொடுக்கலையே" என தேய்ந்துபோன குரலில் வருந்தினார் ராகவன்.


இயலாமையில் அவர் கண்களில் நீர் துளிர்க்கத் தோளில் போட்டிருந்த அங்கவஸ்திரத்தால் கண்களைத் துடைத்துக்கொண்டார் அவர்.


"ஆனா அந்த வசதியை எனக்குக் கொடுத்து என்னை இங்க அனுப்பி வெச்சிருக்காறே அந்த பெருமாள்" என்ற சேஷாத்ரி கண்ணனைப் பார்த்துக்கொண்டே, "அதுக்குள்ள அவசரப்பட்டு இந்த பையன் இப்படி ஒரு வேலை செஞ்சு வெச்சிருக்கானே" என்று சொல்லிவிட்டு, "ஏன்பா கண்ணா! நீ பண்ண வேலையால ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிருந்தா உனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமலேயே போயிருக்குமே" என்று சொல்ல, அவன் கண்கள் பிரகாசம் அடைந்தன.


"என்ன சொல்றீர் ஸ்வாமின்?" என ராகவன் பரவசத்துடன் குதூகலிக்க, ஒரு மிகப் பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொன்ன சேஷாத்ரி, "அதோட சேர்பெர்சன் டாக்டர் தேவகி என்னோட கிளாஸ் மெட்.


அவ அப்பா காலத்துல ஆரம்பிச்ச ஹாஸ்பிடலை பின்னாளில் மெடிக்கல் காலேஜா மாத்தினா!


ஏதாவது எமெர்ஜன்சி; சர்ஜன்ஸ் யாரும் அவைலபிளா இல்லன்னா சிச்சுவேஷனை ஹாண்டல் பண்ண அவ என்னைத்தான் கூப்பிடுவா!