காதல்-4
கண்ணனின் குரலில் பக்கென்று ஆனது ராதாவுக்கு. தான் இங்கே இருப்பதை தெரிந்துகொண்டுதான் கேட்கிறானோ என்ற ஐயம் தலை தூக்க, "ம்.. என்ன கேக்கறீங்கோ; புரியல" என்றாள் அவள் உள்ளே போன குரலில்.
'என்ன இப்படி பம்மறா நம்ம ஆட்டம் பாம்' என்ற எண்ணம் தோன்ற, "ப்ச்... நான் இங்க வந்து பத்து நிமிஷம் ஆச்சு; குழந்தைகள்லாம் வேற உனக்காக வெயிட் பண்ணிண்டு இருக்கா? இப்ப எங்க வந்துண்டு இருக்க நீ" என்றான் கண்ணன் விளக்கமாக. அவன் குரல் மென்மையாக மாறியிருந்தது.
அரவிந்தனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே, "நான் உங்களைத் தாண்டி எங்கேயும் போகமாட்டேன் கண்ணன். இப்ப கூட உங்க பக்கத்துலயேதான் இருக்கேன் கண்ணன்! இன்னும் பத்து நிமிஷத்துல அங்க வந்துடுவேன்! நீங்க கோவிச்சுக்காதீங்கோ கண்ணன்!
பசங்க கிட்ட நான் சாரி சொன்னேன்னு சொல்லுங்கோ கண்ணன்!" என வார்த்தைக்கு வார்த்தை வேண்டுமென்றே 'கண்ணன்' போட்டு ராதா அவனுக்குப் பதில் சொல்ல, முதல் படரும் கடுமையை மிக முயன்று மறைத்தான் அரவிந்தன்.
'யார் அது!' என்பது போல் கேள்வியாக அபிமன்யு அவனைப் பார்க்க, ராதாவை அருகில் வைத்துக்கொண்டு எதுவும் சொல்லத் தயங்கியவாறு சலனமில்லாமல் முகத்தை வைத்திருந்தான் அரவிந்தன்.
பின்பு தன் பார்வையை அபிமன்யுவிடம் திரும்பியவள், "சாரி மிஸ்டர் அபிமன்யு!" என்று சொல்லிவிட்டு, "நைஸ் டு மீட் யு" என்றாள் ராதா.
"ஹை; ஹலோ; நைஸ்னு ஆரம்பிக்கவேண்டிய நம்ம கான்வர்சேஷன் உனக்கு வந்த போன் காலால சாரில ஸ்டார்ட் ஆயிடுச்சு இல்ல!" என அவன் புன்னகைக்க, "சாரி! நான் பேசறதுக்கு முன்னாடியே நீங்க பேச ஆரம்பிச்சுடீங்க இல்ல" என அவள் தீவிரமாய் கேட்க, "பட் நீ சாரீல தான ஆரம்பிச்ச! இப்ப மறுபடியும் ஒரு சாரி!" என அவன் விடாமல் பதில்கொடுக்க, அவன் அவளை ஒருமையில் அழைத்ததில் எரிச்சலுற்றவள், "சாரி! நீங்க ஏன் இப்படி பீல் பண்றீங்கன்னு எனக்கு உண்மையாவே புரியல" என்றாள் அவள் வேண்டுமென்றே மற்றுமொரு 'சாரியை' சேர்த்து.
உடனே அபிமன்யுவின் முகம் இருண்டு போக, அதை உணர்ந்து உள்ளுக்குள்ளேயே குமுறினான் அரவிந்தன்.
அவை எதையும் கண்டுகொள்ளாமல் "ஓகே அத்திம்பேர்! நான் உடனே கிளம்பனும். உங்களுக்கு டைம் கிடைக்கும்போது ஆத்துக்கு வாங்கோ!" என்று சொல்லிவிட்டு, "சாரி மிஸ்டர் அபிமன்யு! நாம இன்னொருநாள் ஃப்ரீயா மீட் பண்ணலாம்! பை!" என அவனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் ராதா!
மறுபடியும் வந்து விழுந்த அந்த 'சாரி'யில் அரவிந்தன் சங்கடமாக அபிமன்யுவை பார்க்க, "இவளை பார்த்தால் நீ சொல்ற அளவுக்கெல்லாம் இன்னசண்டா தெரியல!
நீ சொன்னதால அவ மைக்ரோ பயாலஜி படிப்பை வேணா சூஸ் பண்ணியிருக்கலாம்; அதுவும் விவரம் புரியாத வயசுலதான்;
அதுக்காக நீ சொல்றங்கற ஒரே காரணத்துக்காக அவ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பான்னு எனக்கு தோணல.
ஏன்! உன் மாமனார் எடுத்த எடுப்பிலேயே வேண்டாம்னு சொல்லலையா என்ன?" என அபிமன்யு கேட்க,
"அப்படி இல்ல; அவருக்கு எப்பவுமே என் மேல ஒரு நல்ல அபிப்ராயம் கிடையாது; அதனால அப்படி சொல்லியிருப்பார்.
ஆனா ராதா அப்படி இல்ல" என்றான் அரவிந்த்.
"அப்படினா அவ போன்ல ஏன் அந்த மாதிரி பேசினா" என ஏறிய குரலில் அபிமன்யு கேட்க, "ப்ச்... நான்தான் இன்டைரக்ட்டா கண்ணனை மட்டந்தட்டிப் பேசி அவளை அப்படிப் பேச வெச்சுட்டேன்!" எனச் சலிப்பாகச் சொன்னான் அரவிந்த்.
"ஆமாம் யாரு அந்த கண்ணன்" என அபிமன்யு கூர்மையாகக் கேட்க, "வேற யாரு அந்த ஆனந்த கிருஷ்ணன்தான்; இவங்க எல்லாருக்கும் கண்ணன்" என்றான் அரவிந்த்.
"ஓ!" எனக் கொஞ்சம் அதிகமாக வியந்தான் அபிமன்யு.
"போன மாசம் நியூ டெல்லில நடந்த ஒரு மெடிக்கல் கான்ஃபரன்ஸ்ல அவனை ஒரு தடவ பார்த்திருக்கேன்.
ரொம்ப ஷார்ப்பான ஆளு! பயங்கர புத்திசாலி!" என வஞ்சனையாக அவனைப் புகழ்ந்தவன், "யு நோ சம்திங்! மெடிசின்ஸ் சிலதுல இருக்கற பிரச்னையை பத்தி ராதா ப்ரெசென்ட் பண்ணியிருந்த அந்த ஆர்டிகிள்ல அவ ஹைலைட் பண்ணியிருந்த விஷயங்கள் சிலதை அந்த கான்ஃபரன்ஸ்ல அந்த ஆனந்த கிருஷ்ணன் பேசினான்.
ஒரே மாதிரி இருக்கேன்னு நான் கூட யோசிச்சேன்! பட் ரெண்டும் ஒண்ணுதான்னு இப்ப இல்ல புரியது" என்றான் அவன் ஒரு இகழ்ச்சியான குரலில்.
"ச்ச... அப்டியல்லாம் இல்ல அபி! அதுங்க ரெண்டும் எப்பப்பாரு எலியும் பூனையுமா சண்டை போட்டுண்டே இருக்கும்!" என அரவிந்த் சொல்ல, "சான்ஸே இல்ல! அவங்க எலியும் பூனையும் இல்ல, டாம் அண்ட் ஜெர்ரி! ஒருத்தர் இல்லாம இன்னொருத்தர் இல்ல; எனக்கு அப்படித்தான் தோணுது! இப்ப அவன்கூட அவ போன்ல பேசினதை கேட்ட இல்ல?" என அவன் கேட்க, "நான்தான் சொல்றேனே; என்னை வெறுப்பேத்த அப்படி பேசியிருக்கா!" என அரவிந்தன் அதையே திரும்பச்சொல்ல,
"இருக்கவே இருக்காது; அவனை அவளுக்கும் பிடிக்காதுன்னா அவ அப்படி பேசி இருக்க மாட்டா!" என்றவன், "வாட் எவர் இட் இஸ்! இது வரைக்கும் அவ எப்படி வேணா இருந்துட்டு போகட்டும். பட் இனிமேல் அவ எனக்கு மட்டுமே சொந்தமாகணும்; அதை விட இம்பார்ட்டண்ட் அந்த ஹாஸ்பிடல் ஏன் கைக்கு வரணும்! அதுக்காக நான் எந்த எல்லை வரைக்கும் வேணாலும் போவேன்!" என அந்த அபிமன்யு சொல்ல, அவனுடைய உயரம் புரியவே உள்ளுக்குள்ளே குளிரெடுத்தது அரவிந்தனுக்கு.
***
சில மாதங்களுக்கு முன் இணையத்தளம் மூலமாக 'மைக்ரோ பயாலஜி' துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருக்கும் மாணவர்களுக்காகத் தற்கால மருந்துகளைப் பற்றி ஒரு கட்டுரைப் போட்டியை நடத்தியது அபிமன்யுவின் 'ஏ அண்ட் பீ ஃபார்மா' மருந்து நிறுவனம் ஆனால் வேறு ஒரு பெயரில்!
அதில் சிறந்ததாகத் தேர்வாகி அவனது பார்வைக்கு வந்த ஐந்து கட்டுரைகளில் ராதா எழுதியிருந்த கட்டுரையும் அடக்கம்.
அதில் தற்கால மருந்துகளில் உள்ள அபாயங்களைப் பற்றிய உண்மைகளை அவள் அதிகம் கையாண்டிருக்க, அதில் அதிர்ந்தவன், அவளைப் பற்றிய தகவல்களைத் தேடி எடுக்க, அவள் சேஷாத்ரியுடைய மகள் என்பதும், அவனுடைய பள்ளி நண்பன் அரவிந்த்துடைய மனைவியின் தங்கைதான் என்பதும் அவனுக்கு தெரிய வந்தது.
அவளுடைய புகைப்படங்களைப் பார்த்தே அவளிடம் மயங்கிப்போனவன், அவளை எப்படியாவது தன் துணையாக்கிக்கொள்ளவேண்டும் என எண்ணினான் அபிமன்யு.
அதற்கு மற்றும் ஒரு வலுவான காரணமாக அமைந்தது சேஷாத்ரியின் 'அனுகிரஹா ஈ.என்.டீ ஸ்பெஷாலிட்டி சென்டர்' மருத்துவமனை.
***
அவர்கள் இருவரும் தங்கள் உரையாடலை முடித்திருந்த அதே நேரம் காது கேளாத வாய் பேச இயலாத சின்னஞ்சிறு மலர்களுக்குரிய சிறப்புப் பள்ளியான 'ரோஸ் கார்டன்'னுக்குள் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினாள் ராதா.
அவளைப் பார்த்தவுடன் வித விதமாக ஒலிகளை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தவாறு ஓடிவந்தனர் சில சிறுவர் சிறுமியர்.
அதற்குள் ஜாடையிலேயே அவர்களிடம் ராதா, "எப்படி இருக்கீங்க!" எனக் கேட்க, 'அருமை' என்பதுபோல் அபிநயத்துடன் பதில் அளித்தன அந்த மலர்கள் அத்தனையும்.
அவளுடைய அக்கா அனுபமாவுடன் இணைந்து சில வருடங்கள் பரதம் கற்றிருக்கிறாள் ராதா.
அந்த மௌன பூக்களுடன் அவள் சைகை மொழியில் உரையாடும் பொழுது அவளது கண்களும் முகமும் கைகளும் காட்டும் அபிநயம், வெறும் சங்கேதமாக மட்டும் இல்லாமல் ஒரு உயிர்ப்புடன் நாட்டியம் ஆடுவது போலவே இருப்பதாலோ என்னவோ அந்த பிள்ளைகளுக்கு அவளை நிரம்பவே பிடிக்கும்.
கண்ணனுக்குமே!
அவள் வேண்டாம் என அவன் ஒதுங்கிப்போனாலும் அவனை அவளிடம் இழுத்துவரும் சக்தி அவளது அந்த கண்களுக்கு உண்டு.
அந்த பள்ளியை நடத்தும் தொண்டு நிறுவனத்தில் சேஷாத்திரியும் ஒரு முக்கிய உறுப்பினர்.
முன்பெல்லாம் மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் அங்கே வந்து பிள்ளைகளைப் பரிசோதித்துவிட்டுப் போவார் அவர்.
இப்பொழுது வயது காரணமாக அவரால் அதைச் செய்ய முடியாமல் போக, ஒருவருடமாக அந்த கடமையைத் தனதாக்கிக்கொண்டான் கண்ணன்.
உதவிக்காக முன்பு தந்தையுடன் அங்கே வந்தவள் இப்பொழுது கண்ணனுக்காக வருகிறாள்.
என்னதான் மென்மையாக நடந்துகொண்டாலும் அவனிடம் ஒரு சிறு பயமும் தயக்கமும் உண்டு அந்த பிள்ளைகளுக்கு.
அதுவும் அவர்களுடைய காதில் அணிந்திருக்கும் செவித்துணை கருவியை மட்டும் அவன் தொட்டுவிட்டால் போதும் அவ்வளவுதான்.
ஊரையே கூட்டிவிடுவார்கள்.
ராதா மட்டும் உடன் இல்லை என்றால் அந்த பிள்ளைகளை அவனுக்கு அருகில் அழைத்துவருவதே பெரும் சவாலாக இருக்கும் அங்கே இருக்கும் ஆசிரியர்களுக்கு.
ராதாவின் விஷயத்தில் கல்லைப் போல இருந்தவன் அவள் அந்த பிள்ளைகளிடம் காட்டும் அன்பிலும் அக்கறையிலும்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டிருக்கிறான் அவன்.
தூரத்திலிருந்து தன்னை மறந்து அவளை ரசித்துக்கொண்டிருந்த கண்ணன் தன் தலையைச் சிலுப்பி அந்த எண்ணத்தை ஓரம் தள்ளினான்.
அவனைப் பார்த்துவிட்டு அவள் அங்கே வரவும், "ப்ச்... வந்ததே லேட்டு; இதுல இன்னும் டிலே பண்ற!" என அவனுடைய இயல்பிற்கு மாறாக அவளிடம் சிடுசிடுத்தான் கண்ணன் தன் மனதை மறைக்க.
அதைக் கண்டுகொள்ளாமல் அங்கே இருக்கும் ஆசிரியரின் துணையுடன் ஒவ்வொரு பிள்ளைகளாக அவனிடம் அவள் அழைத்துவர, அவளுடைய உதவியுடன் அவர்களிடம் பேசியவாறே அவர்களைப் பரிசோதித்தான் அவன்.
சில மணித்துளிகள் கரைந்த பிறகு அங்கே வந்த வேலையை அவன் செல்வனே செய்து முடித்திருக்க, அங்கே இருந்த ஆசிரியரை அழைத்து சில தகவல்களைச் சொன்னவன், சரி வா போகலாம் என ராதாவை அழைத்தான்.
அதில் அவள் அவனைக் கேள்வியாய் பார்க்க, கைப்பேசியை அழுத்தி அவர்கள் வழக்கமாக அழைக்கும் ஓட்டுநரை அழைத்தவன், "குமார்! ரோஸ் கார்டன் ஸ்கூல் இருக்கில்ல; அங்க என் கார் இருக்கு. வாட்ச்மேன் கிட்ட சாவியை கொடுத்துட்டு போறேன்; நேர ஊருக்கு போய் அம்மா அப்பாவை அழைச்சிட்டு வந்துடு!" என்றவன், எதிர் முனையில் உள்ளவனது சம்மதமான பதிலுக்கு, "சரி; நிதானமா ஓட்டிட்டு வாப்பா! தங்கைக்கு இது ஏழாவது மாசம்" எனச் சொல்லிவிட்டு ,"பேமெண்ட் அவங்களை வீட்டுல விட்டுட்டு வாங்கிக்கோ!" எனச் சொல்லி அந்த அழைப்பைத் துண்டித்தான் அவன். 'நான் உன் கூடத்தான் வரப்போறேன்!' என்ற ராதாவுக்கான செய்தியும் அதில் அடங்கியே இருந்தது.
அவள் வாகனத்தை உயிர்ப்பிக்க அவளுக்கு அருகில் உட்கார்ந்தவன், "நேர ஹாஸ்பிடலுக்கு போ!" என்றான் சகஜ பாவத்தில்.
வேறு எந்த கேள்வியும் கேட்காமல் அவள் மிதமான வேகத்தில் வண்டியைச் செலுத்த முக்கிய சாலையை அடைந்ததும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது அந்த வாகனம்.
"ப்ச்! ரெண்டு தூறல் விழக்கூடாது; அதுக்குள்ள ட்ராபிக் ஜாம்! சிக்ஸ் குள்ள போகணும்; ஓபி பேஷன்ட்ஸ் வேற வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க" என சலித்தவாறே அவன் 'ம்யூசிக் சிஸ்ட'த்தை உயிர்ப்பிக்க, 'ராகா' என ஆங்கிலத்தில் சேமிக்கப்பட்டிருந்த ஒரு 'ஃபோல்டர்'ரை அவன் 'க்ளிக்' செய்யவும், நாக்கை கடித்துக்கொண்டாள் ராதா.
'கண்ணன் வந்து படுகின்றான் காலமெல்லாம்' என சின்னக்குரல் சித்ராவின் குரல் உருக, ஏனோ அவன் சட்டென்று அடுத்த பாட்டிற்குத் தாவினான்.
'கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா'
அவளை முறைத்துக்கொண்டே அவன் அம்புக்குறியை அழுத்த,
'சின்னக்கண்ணன் அழைக்கிறான்...
ராதையை பூங்கோதையை...
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி' என அடுத்தப் பாடல் ஒலிக்க, அதில் கடுப்பானவன் 'எஃப் எம்'முக்கு மாற அதிலும்,
"ராதை மனதில்... ராதை மனதில்...
என்ன ரகசியமோ...
கண் ரெண்டும் தந்தி அடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க..." என அவனைக் கிண்டல் செய்யவும் அதை அணைத்தேவிட்டான் அவன்.
உடனே ஒரு அடக்கப்பட்ட சிரிப்புடன் அதை மறுபடியும் உயிர்ப்பித்தவள் வேறு ஒரு பாடலை தேர்ந்தெடுக்க,
'பிரமத வனம் வேண்டும்!
ரித்து ராகம் சூடி!
சுப சாயானம் போலெ..
தெளி தீபம் களி நிழலின் கைக்கும்பில்...
நீரயும்போல் என்...’ மலையாளத்தில் தொடர்ந்த ஜேசுதாசின் குரலில் அவன்மனம் ஒருநிலை பட, தன்னை எந்த அளவுக்கு புரிந்துவைத்திருக்கிறாள் அவள் என வியந்தே போனான் கண்ணன்.
அந்த பாடலில் தன்னை மறந்திருந்தவன் ஏதோ நினைவு வரவும், அதன் ஒலியைக் குறைத்துவிட்டு, "நாம இன்னைக்கு செக் பண்ணோம் இல்ல; அதுல அந்த சாதிக்னு ஒரு பையனுக்கு ஆப்ரேஷன் பண்ணா இம்ப்ரூவ்மென்ட் வர சான்செஸ் இருக்கு;
அடுத்த ஃப்ரீ ஆப்ரேஷன் அவனுக்கு பண்ணலாம்னு நினைக்கிறேன்!
அவனோட பேரன்ட்ஸ் கிட்ட சொல்லி உங்க அப்பாவை வந்து பார்க்க சொல்லி இருக்கேன்" என கண்ணன் சொல்ல, கண்கள் விரிய, "அப்படியா!" எனக் கேட்டாள் அவள் மகிழ்ச்சியுடன்!
பதிலாக அவன் புன்னகைக்க, "நீங்களும் அப்பாவும் பண்றத பாத்து ரொம்ப பெருமையா இருக்கு கண்ணன்; இதை நாம விடாம செய்யணும்" என்றவள் யோசனையுடன், "கண்ணன்! அத்திம்பேர் இங்க வந்திருக்கார் தெரியுமா?" எனக் கேட்க அவன் முகம் இறுகிக் கறுத்தது.
அவன் மனநிலையை ஊகித்தவளாக, அன்று நடந்ததை அவனிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசித்த ராதா ஒரு முடிவிற்கு வந்தவளாக, “நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்கோ!" என்ற பீடிகையுடன் அனைத்தும் சொல்லி முடித்தாள்.
மருத்துவமனையைப் பற்றி முன்பு அரவிந்தன் சேஷாத்ரியிடம் சொன்னதாக அவர் சொன்ன தகவல்களும் அன்று ராதாவைப் பற்றி அவர்கள் கைப்பேசியில் பேசிய உரையாடலும் அவனுடைய நினைவிற்கு வர, "ஒரு வேளை அரவிந்தன் அண்ணா மூலமா அந்த அபிமன்யுவுக்காக அவா உங்காத்துல வந்து உன்னை பொண்ணு கேட்டா என்ன பண்ணுவ ராதா?" எனத் தீவிரமாக அவன் கேட்கவும்,
"ப்ச்.. இது ஏதோ அவா கம்பெனில ஜாப் ஆஃப்பர்காகத்தான் அத்திம்பேர் கூப்பிட்டிருந்தார். நீங்க சொல்ற மாதிரியெல்லாம் இருக்க சான்ஸே இல்ல" என அவள் திண்ணமாகச் சொல்ல,
"சரி! இருந்துட்டுபோட்டும்!" என்றவன், "ஒரு வேளை உன்னை பொண்ணு கேட்டா என்ன பண்ணுவ?" என அவன் அழுத்திக் கேட்க,
"அந்த அபிமன்யு மாதிரி ஒருத்தன் 'உன்னை எனக்கு பிடிச்சிருக்குனு' வந்து பொண்ணு கேட்டா உடனே ஓகே சொல்லிடுவேன் கண்ணன்! கரும்பு தின்னக் கசக்குமா என்ன?" என்றாள் ராதா கண்ணனை கூர்மையாகப் பார்த்துக்கொண்டே!
Kommentare