top of page

Kadal Va..Radha? 8

காதல்-8


அந்த சிறு அறுவை சிகிச்சையைச் செய்தது தான்தான் எனக் கண்ணன் சொன்னதும், இறந்துபோனவருடைய மகன், "இல்ல! டாக்டர் சேஷாத்ரிதான் அந்த ஆப்ரேஷனை செய்தது! நீங்க அவரை காப்பாத்த ட்ரை பண்றீங்க!" என முன்னே வந்து கொதிப்புடன் சொல்ல, "இல்ல! முதல்ல அவர்தான் செய்யறதா இருந்தது. ஆனால் அவருக்கு கொஞ்சம் உடல்நிலை சரி இல்லாததால நான்தான் அதை செஞ்சேன்!


அர்ஜெண்டா நான் எங்க ஊருக்கு போக வேண்டி இருந்ததால உடனே கிளம்பி போயிட்டேன்" என்றான் கண்ணன் உறுதியுடன்.


உடனே அதை கவனித்து விட்டு எதோ பேசவந்த சேஷாத்ரியை பார்வையால் எச்சரித்தவன், காவல்துறை அதிகாரியை நோக்கி, "நீங்க தாராளமா உங்க லீகல் பார்மாலிட்டீசை கன்டின்யூ பண்ணலாம்!


நான் கான்ஸீக்வென்ஸ்ஸை ஃபேஸ் பண்ண தயாரா இருக்கேன்!" என்று சொல்ல மேற்கொண்டு அங்கிருந்த கூட்டத்தைக் கலைத்து அனுப்பிவிட்டு, அவர்களுடைய விசாரணையைத் தொடர்ந்தது காவல்துறை.


அவன் கீழே வருவதற்கு முன்பாகவே அவன் சொன்ன பொய்யை நிரூபிக்க சில ஆவணங்களை திருத்தி அதற்கேற்றவாறு மாற்றி இருந்தான்.


எக்காரணம் கொண்டும் சேஷாத்ரி பிரச்சனையில் சிக்கிக்கொள்வதை அவன் விரும்பவில்லை.


இறந்தவருடைய உடலை பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, ஆனந்தகிருஷ்ணனின் பெயரில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தார் அந்த காவல்துறை அதிகாரி.


ஆனால் மருத்துவமனை பற்றிய செய்திகள் ஊடகங்களில் வருவதை அவனால் தடுக்க இயலவில்லை.


அதன் எதிர்வினையாக அவர்கள் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே பல தொலைப்பேசி அழைப்புகள் சேஷாத்திரிக்கு வந்தவண்ணம் இருக்க, அமெரிக்காவிலிருந்து அவர்களுடைய மூத்த மகள் அனுபமாவும் அரவிந்தனும் 'போன்' செய்து ஏற்கனவே நொந்துபோயிருந்தவர்களை வார்த்தைகளால் மேலும் நோகடித்தனர்.


அதுவும் அதில் தெளிவாக ஆனந்தகிருஷ்ணனின் பெயர் இடம்பெற்றிருக்கவும், "அவனை தலை மேல தூக்கி வெச்சுட்டு ஆடினீங்க இல்ல? இப்ப என்ன அச்சு? இது உங்களுக்கு தேவைதான்" என நேரடியாகவே சொன்னான் அரவிந்தன்.


சேஷாத்ரியிடம் இப்படியெல்லாம் பேசும் தைரியம் அவனுக்கு எப்பொழுதுமே இருந்ததில்லை.


அவருடைய இந்த சூழ்நிலையும் மருத்துவத் துறையில் முதல் இடத்தில் இருக்கும் அபிமன்யுவிடம் அவனுக்குப் புதிதாக ஏற்பட்டிருக்கும் நெருக்கமும் நாக்கை கூராக்கிக்கொண்டு இப்படி அவரை தாக்கும் துணிச்சலை அவனுக்குக் கொடுத்து.


கண்ணன் மேல் அவனுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியும் ஒரு காரணம்.


இயலாமையால் எழுந்த ஆத்திரம் தலைக்கு ஏற, சூடாக அவனுக்குப் பதில் கொடுக்கும் வேகத்தில், "கண்ணனை பத்தி பேசற எந்த ஒரு தகுதியும் உங்களுக்கு இல்ல மாப்ள! அதனால இதோட நிறுத்திக்கோங்க!' என அவர் சீற, அவருடைய தோளில் கை வைத்து அவருடைய கோபத்தைத் தணிக்க முயன்றவனாக வேண்டாம் என்பதுபோல் தலை அசைத்தான் கண்ணன்.


அதனால் மேற்கொண்டு பேசப் பிடிக்காமல் அப்படியே அழைப்பைத் துண்டித்தார் அவர்.


***


உடைத்து நொறுக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் வரவேற்பு பகுதியினை சீர்செய்யும் பொருட்டு அடுத்தநாள் அதிகாலையிலேயே அங்கே வந்துவிட்டான் கண்ணன்.


அங்கே ஒருவருமே இல்லாமல் அந்த இடம் வெறிச்சோடி கிடந்தது.


உள்ளே நுழைந்ததுமே முதலில் காட்சி அளிக்கும் விதமாக அங்கே மாட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய திருவேங்கடமுடையானின் உற்சவ திருக்கோல படத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி உடைந்து சிதறி இருக்க, அதன் இருபக்கமும் நாள் முழுதும் ஒளிவீசும் விதமாக வைக்கப்பட்டிருக்கும் குத்துவிளக்குகள் கீழே சரிந்து கிடந்தது.


அந்த காட்சி அவனது மனதை வெகுவாக பாதிக்க, அவற்றை நேராக நிற்கவைத்தவன், கூடவே அவன் அந்த படத்தைக் கழற்ற முயலவும், ஒரு பக்கமாக உடைத்து நீட்டிக்கொண்டிருந்த கண்ணாடி துண்டு ஒன்று அவனது உள்ளங்கையில் பட்டுக் கிழித்தது.


அதில் குருதி வழியத்தொடங்கவும், அதைப் பார்த்துவிட்டு ஓடிவந்த செவிலியர், 'ஐயோ! சார்! இப்படி கிழிச்சிடுச்சே!' என்றவாறு மறுபடியும் உள்ளே சென்றார்.


உடனே கையில் முதல் உதவி சாதனங்கள் அடங்கிய தட்டுடன் திரும்ப வந்தவர், அவனது கைக்கு மருந்திட்டுக் கட்டுப் போட்டுவிட்டு, "ஒரு டீ.டீ போடவா சார்?" என்று கேட்க, மலர்ந்த புன்னகையுடன், "டாக்டருக்கே ஊசியா" எனக் கேட்டவன் அந்த பெண் தயக்கத்துடன் சிரிக்கவும், "வேண்டாம்மா! சின்ன ஊண்ட்தான். பரவாயில்ல" என்றான்.


அதைக் கவனித்துக்கொண்டே அங்கே வந்த ராதா, "என்னாச்சு கண்ணன்! கைல கட்டு போட்டிருக்கீங்க?" என்று கலவரத்துடன் கேட்டுக்கொண்டே அவனது காயம்பட்ட கையை பற்றி அதை ஆராய, "ப்ச்... ஒண்ணும் இல்ல! சின்ன கட்; அவ்ளோதான்" என்றவாறு தன் கையை மென்மையாக விடுவித்துக்கொண்டான்.


அவனது செய்கையில் அவள் முறைக்கவும் அவளைத் திசை திருப்பும் விதமாக, "உங்க அம்மாகிட்ட நம்ம கான்ட்ராக்ட்டர் நம்பரை வாங்கி, அவருக்குக் கால் பண்ணி இதையெல்லாம் சரிபண்ண சொல்லு!


நான் போய் இன் பேஷண்ட்ஸை பார்த்துட்டு வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றுவிட்டான் கண்ணன்!


சற்று நேரத்தில் சேஷாத்ரி தளர்ந்த நடையுடன் அங்கே வருவதைக் கண்டவன் "குட் மார்னிங் குரு!" என்றவாறு அவரை பின் தொடர்ந்து அவரது அறைக்குள் வந்தான்.


ஆயாசமாக தன் இருக்கையில் போய் உட்கார்ந்தவர், "ஏன் கண்ணா இப்படி எல்லாத்தையும் உன் தலைல போட்டுண்டு இருக்க?" என ஆதங்கத்துடன் கேட்டார் அவர்.


"இல்ல குரு! இது என்னோட கடமை! நான் அன்னைக்கு மெடிக்கல் சீட் கிடைக்காம உடைஞ்சு போய் இருந்த சமயத்துல அவ்வளவு பெரிய மெடிக்கல் காலேஜ்ல நீங்கதான் எனக்கு சீட் வாங்கி கொடுத்தீங்கோ!


அன்னைல இருந்து என்னை சரியான பாதைல வழிநடத்திண்டு இருக்கீங்கோ!


இந்த ஹாஸ்ப்பிட்டல்ல உங்களுக்கு அடுத்த இடத்துல என்னை வெச்சிருக்கீங்கோ!


இதையெல்லாம் நீங்க செஞ்சது சரின்னா; இப்ப நான் செஞ்சதுதான் சரி!


இதுல இருந்து எப்படி வெளியில வரணும்னு எனக்கு நன்னாவே தெரியும்! சில்!" என்று அவருக்குப் பதில் சொன்னான் கண்ணன்.


"நீ என்ன சொன்னாலும் என் மனசு ஆறவே ஆறாது கண்ணா!


என்னால ஏற்கனவே ஒரு உயிர் போயிருக்கு!


உன்னை வேற இதுல மாட்டிவிட்டுட்டு நான் வேடிக்கை பார்க்கறது பஞ்சமாபாதகத்துல ஒண்ணு" என்றார் அவரது குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடாக.


"நீங்க நினைக்கற மாதிரி இல்ல குரு! இது வேற!


இதுக்காகலாம் நீங்க கில்டியா பீல் பண்ண கூடாது.


நடந்த மெடிக்கல் எரர்க்கு காரணம் வேற!


நாம யூஸ் பண்ண மெடிசின்லதான் பிரச்சனை!


நம்ம ஹாஸ்பிடல்ல மட்டும் இல்ல! போன வாரத்துல மட்டும் இதே மாதிரி டெத் இன்னும் ரெண்டு நடந்திருக்கு!


அதெல்லாம் கூட நம்ம ஹாஸ்பிடல் மாதிரி சின்ன சின்ன ஹாஸ்பிடல்ஸ் தான்!


இன்னும் பெரிய கார்ப்பரேட் ஹாஸ்பிடல்ஸ்லயும் இப்படி நடந்திருக்க சான்ஸ் இருக்கு.


ஆனா அழகா மூடி மறைச்சிருப்பாங்க!


கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ குரு!


எல்லாமே சரியாயிடும்" என்றான் அவன் தெளிவாக.


அவர்களது சம்பாஷணையைக் கவனித்துக்கொண்டிருந்த ராதாவுக்குப் பெருமூச்சு எழுந்தது.


***


அந்த கசப்பான சம்பவம் நடந்து முடித்து சில தினங்கள் கடந்திருந்தன.


தமிழ்நாடு மருத்துவ கௌன்சிலுக்கு அந்த வழக்கு பரிந்துரை செய்யப்பதட்டது.


அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்திருந்தது.


அந்த விசாரணைக்காக வந்திருந்தான் கண்ணன்.


அந்த விசாரணை அதிகாரிகளை சந்திக்க சில நிமிடங்கள் இருக்கவே அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்தவன், அவன் தெளிவாக எடுத்துக்கூறவேண்டிய விஷயங்களை மனதிற்குள் வரிசைப்படுத்திக்கொண்டிருந்தான்.


அவனுக்கு அருகில் நிழலாடுவதைப்போலத் தோன்றவும் அவன் கண்களைத் திறந்து பார்க்க, அங்கே கையில் ஒரு கோப்பை ஏந்தியவாறு நின்றிருந்தாள் ராதா!


அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்துகொண்டு, "அந்த மெடிசின்ஸ் பத்தின லேப் ரிப்போர்ட் வித் டீடெயில்ஸ் இதுல இருக்கு" என்றாள் ராதா!


"ஹ்ம்ம்! அந்த போஸ்ட்மார்ட்டம் பண்ண டாக்டர் உங்க அப்பாவோட ஜூனியர் தெறியும் இல்ல!


அன் அஃபிஷியலா, அந்த டெத் எப்படி ஏற்பட்டிருக்கும்னு தெளிவா சொல்லியிருக்கார்!" என்றவன், "பாக்கலாம்! நமக்கு ஃபேவராதான் நடக்கும்" என்றான் ஒரு நீண்ட பெருமூச்சுடன்.


இதில் ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும் அவனுடைய 'லைசன்ஸ்' பறிமுதல் செய்யப்பட்டுவிடும்.


அதன்பிறகு அவனால் மருத்துவ தொழிலையே செய்யமுடியாமலும் போகலாம்.


அதை நன்றாகவே உணர்ந்தாள் ராதா!


அவன் அவளுடைய அப்பாவின்மேல் கொண்டிருக்கும் அளவுகடந்த மரியாதை, அதைத் தாண்டிய ஒரு பக்தி அவளுக்கு நன்றாக விளங்க, அவனுக்கு ஏன் தன் மேல் காதல் வரவேயில்லை என்பது மிக நன்றாகப் புரிந்தது அவளுக்கு.


அவனுடைய குருவின்மேல் அவனுக்கு இருக்கும் நன்றி உணர்வு அவனுடைய காதலை மொத்தமாக மறைத்துக்கொண்டு வளர்ந்து நிற்கிறது.


இந்த நிலைக்கு தீர்வே கிட்டாதோ என்ற எண்ணம் தோன்றி அவளது மனதை அழுத்த அவளுடைய கண்கள் கலங்கவும், அந்த இருக்கையை அழுந்த பற்றியிருந்த அவளது கை மேல் தன் கையை வைத்து மென்மையாக அழுத்தியவன், "டோன்ட் ஒர்ரி ராதா! திங்க் பாசிட்டிவ்" என்றான் கண்ணன்!


அவனது அந்த விசித்திர செய்கையில் அதிசயித்து விழி விரித்து அவனை பார்த்து மௌனமாக தலையை அசைத்தாள் ராதா!

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page