top of page
Writer's pictureKrishnapriya Narayan

Kadal Va..Radha? 10

Updated: Jun 26, 2020

காதல்-10


அடுத்த இரண்டாவது நாள் தன் மூன்று வயது மகனுடன் சேஷாத்ரியின் இல்லத்தில் தரை இறங்கியிருந்தாள் அவருடைய சீமந்த புத்திரி அனுபமா.


அபிமன்யுவின் திட்டப்படி 'அணுவிந்த் பார்மா'வின் உற்பத்தி பிரிவில் வேலை செய்யும் இரண்டு பேர் தாங்கள்தான் அந்த காலாவதியான மருந்துகளை புதிய மருந்துகளுடன் கலந்து விற்பனைக்கு அனுப்பியதாக ஒப்புக்கொள்ள, அவர்கள் பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருந்தது.


ஆனால் அவனுடைய நிபந்தனை அப்படியே இருந்தது.


அரவிந்துக்கு அவன் சொல்வதைச் செய்துமுடிப்பதைத் தவிர வேறு வாய்ப்பே வழங்கப்படவில்லை.


மாமனாரை அந்த திட்டத்துக்குச் சம்மதிக்க வைக்கும் பொருட்டு மனைவியை நேரில் அனுப்பியிருந்தான் அவன்.


அனுபமா ராதாவிடம் தொலைப்பேசியில் சொல்லியிருந்த தகவல்கள் மட்டும் கண்ணனுக்கும் சேஷாத்ரி மற்றும் கீதாவுக்கும் தெரிந்துதான் இருந்தது.


அதற்குப் பின் அபிமன்யுதான் இருக்கக்கூடும் என்கிற புரிதல் கண்ணனுக்கு இருக்கவே சேஷாத்ரியை முன்னமே எச்சரித்து வைத்திருந்தான் கண்ணன்.


என்னதான் அவர்கள் போவது தவறான வழியில் என்றாலும் மகளை நினைத்து வேதனையாக இருந்தது சேஷாத்ரிக்கும் கீதாவுக்கும்.


அதற்குள் அந்த பிரச்சனை பிசுபிசுத்துப் போகவும் கொஞ்சம் ஆசுவாசமடைந்தனர் அனைவரும்.


திருமணம் முடிந்து அவள் அமெரிக்கா சென்ற பிறகு இரண்டு வருடத்துக்கு ஒருமுறைதான் இங்கே வருவது வழக்கம்.


வந்தால் ஒரு மாதம் புக்ககத்திலும் ஒரு மாதம் பிறந்த அகத்திலும் என அட்டவணை போட்டு இருந்துவிட்டுப் போவாள்.


ஆனால் வித்தியாசமாக முன்னறிவிப்பு ஏதும் இன்றி மகள் வந்திருக்கவும் ஏதோ சரியில்லை என்பது புரிந்தது சேஷாத்ரிக்கு.


கீதாவால் கூட அதை இயல்பான வருகைதான் என ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


நீண்ட நாட்களுக்குப் பிறகு பேரனை நேரில் பார்த்த மகிழ்ச்சி கூட பின்னுக்குச் சென்றுவிட்டது.


இருந்தாலும் மகள் மேல் கொண்ட பாசத்தால் கீதா மட்டும் அவளிடம் சுமுகமாகக் காட்டிக்கொண்டார்.


ஆனால் ஏற்கனவே சேஷாத்ரியுடைய மறுப்பை மீறி தன் பிடிவாதத்தில் அரவிந்தனை மணந்ததிலிருந்தே அப்பா மகள் உறவில் சிறு விரிசல் ஏற்பட்டிருந்தது.


அதுவும் அவள் பிரசவத்திற்குக் கூட பிறந்த வீட்டிற்கு வராமல் போக அந்த விரிசல் அதிகமாகிப் போனது.


ஏதோ கீதா நடுவில் இருக்கவே அந்த உறவு அறுந்து போகாமல் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்க, அவர்களது இந்த செயலால் அவர் கோபத்தின் எல்லையிலிருந்தார்.


மகளைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தவே இல்லை.


'வந்தியா வா; போறியா போ!' என்ற ரீதியில் அவளைக் கண்டும் காணாமல் இருந்தார் அவர்.


அவளுக்கு எதிரில் பேரனைக்கூடக் கொஞ்சவில்லை. அவ்வளவு வீம்பாக இருந்தார்.


அவரது அந்த பாராமுகம் அனுவுக்கு பயத்தைக் கொடுக்க அபிமன்யுவின் நிபந்தனைகளைப் பற்றி அவரிடம் பேச நா எழ வில்லை அவளுக்கு.


ராதா மட்டுமே தமக்கையின் மேல் இருக்கும் பாசத்தால் இயல்பாகவே இருந்தாள்.


இப்படியே இரண்டு நாட்கள் செல்ல, அதுவரைக் கூட பொறுக்க முடியவில்லை அரவிந்தனால்.


அவளுடைய மனநிலையை உணராமல் அவளை சேஷாத்ரியுடன் பேச சொல்லி அவன் நிர்ப்பந்திக்க, சண்டை வந்துவிட்டது இருவருக்கும்.


மகனை உறங்க வைத்துவிட்டு வரவேற்பறையில் அமர்ந்து அவள் அம்மா கீதாவுடனும் ராதாவுடனும் பொதுவாகப் பேசிக்கொண்டிருக்க, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சேஷாத்ரி.


"கீதா!" என அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவர் அங்கே அனுவை பார்த்துவிட்டு, அப்படி ஒருத்தி அங்கே இருப்பதையே உணராதவர் போன்று, "கீதா! ரொம்ப பசிக்கர்து! நான் ரெப்பிரேஷ் ஆயிட்டு வரேன்; வந்து சாாாாாதம் போடு' என்று சொல்லிவிட்டு தன் அறை நோக்கிச் சென்றுவிட்டார்.


ஏற்கனவே மன அழுத்தத்திலிருந்தவள் தந்தையின் இந்த உதாசீனத்தால் என்ன பேசுகிறோம் என்பதையே எண்ணாமல், கீதாவிடம், "அப்பாவுக்கு பிடிக்கலேன்னு தெரிஞ்சும் நான் பிடிவாதம் பிடிச்சு அவரை கல்யாணம் பண்ணிண்டது தப்புதான். இல்லனு சொல்லல.


ஏதோ வயசு கோளாறு; புத்தி கெட்டுப்போய் லவ் பண்ணிட்டேன்!


தாட் பூட்ன்னு குதிக்காம நிதானமா எடுத்து சொல்லியிருந்தா கேட்டிருப்பேனோ என்னவோ!


அதை விட்டுட்டு நீங்களே முன்னாடி நின்னு அந்த கல்யாணத்தை பண்ணி வெச்சிட்டு என்னவோ நான் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிண்ட மாதிரி இவ்வளவு நாளா என்னை பழிவாங்கிண்டு இருக்கீங்கோ” பேசிக்கொண்டே போனாள் அணு.


அதிர்ந்துபோனார் கீதா!


"ஏண்டி இப்படி நாக்குல நரம்பே இல்லாம பேசற!


நீ பிடிவாதம் பிடிச்சதாலத்தான அப்பாவ கன்வின்ஸ் பண்ணி உன் கல்யாணத்தை நடத்தினோம்.


சீர் செனத்தி; நகை நட்டு எதுலையாவது குறை வெச்சோமா?


உன் பிள்ளை பிறந்த அப்பவும் உங்கப்பாவோட சண்டை போட்டுண்டு அங்க வந்து பத்தியம் பண்ணி போட்டேண்டி!


என்னைப் பார்த்து இந்த கேள்வி கேக்கற" என கீதா பொரிய, "ம்மா... சொல்லி காமிக்காத!' என்று சொல்லி அழுகையில் தேம்பியவள், "அறிவு கெட்டுப்போய் அந்த மனுஷனை லவ் பண்ணது முதல் தப்பு; அவரை கல்யாணம் பண்ணிண்டது ரெண்டாவது தப்பு; அவர் சொன்னாரேன்னு கண்ட இடத்துல கையெழுத்து போட்டது மூணாவது தப்பு; இப்ப அவர் சொல்றாரேன்னு இங்க வந்து உக்காந்துண்டு ராதா வாழ்க்கைல விளையாட நினைக்கறேன் பாரு இது எல்லாத்தையும் விட பெரிய தப்பு" என்று அவள் புலம்ப, "ராதா! நீ போய் அப்பாவுக்கு சாதம் போடு; நான் தோ வரேன்" என்றார் கீதா ராதாவிடம்.


அவள் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே அங்கிருந்து சென்றுவிட, "ஏய்.. ராதா வாழ்க்கைல விளையாட்றதா? என்னடி உளர்ர" என கீதா அழுத்தமாகக் கேட்கவும் அனைத்தையும் சொல்லி முடித்தாள் அனுபமா.


அதைக் கேட்டதும் கீதா சிலை போல இறுகிப்போய் உட்கார்ந்திருக்க, "மா.. அப்பா மட்டும் இதுக்கு சம்மதிக்கலன்னா நானும் உன் மாப்பிள்ளையும் ஜெயிலுக்குத்தான் போகணும்.


அப்பறம் வேதாந்த்தோட நிலைமையைக் கொஞ்சம் நினைச்சு பாரு" என்றாள் அவள் அம்மாவின் மனதை கரைக்கும் விதமாக.


"நன்னா போங்கோ! யார் வேண்டாம்கறா! நீங்க ரெண்டுபேரும் புத்தி இல்லாம செஞ்ச காரியத்துக்கு பிணை ராதாவா.


நெவர்; நான் ராதாவையும் விட்டுக் கொடுக்கமாட்டேன்! என் ஹாஸ்பிடலையும் விட்டுக்கொடுக்க மாட்டேன்!


ராதாவையும் ஹாஸ்பிடலையும் கண்ணனுக்குத்தான் கொடுக்கணும் நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்!


அவன் கைல ஒப்படைச்சதான் ராதாவுக்கும் நல்லது; என் ஹாஸ்பிடலுக்கும்" என்றார் அனைத்தையும் கேட்டுக்கொண்டே அங்கே வந்த சேஷாத்திரி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.


"பாரு; பாரு; அப்பா என்ன சொல்றா..ன்னு" என அவள் அம்மாவைத் துணைக்கு அழைக்க, "அவர் சொல்றதுல என்னடி தப்பு.


உன் வாழ்க்கையை சீரழிச்சுக்கற உரிமை உனக்கு இருக்கு; ஆனா ராதா வாழ்க்கையை சீரழிக்கற உரிமை உனக்கு இல்ல;


அவளுக்கு எது விருப்பமோ; அதுதான் நடக்கும்" என கீதா சொல்ல, "அந்த கண்ணனை தலைக்கு மேல தூக்கி வெச்சுண்டு ஆடறீங்கோ இல்ல; அவனாலதான் எங்களுக்கு இந்த நிலைமை;


ஜெயிலுக்கு போய் அவமான பட்றத விட எதாவது விஷத்தை சாப்டு என் உயிரை விட்டுடுவேன்!" என அவள் கதறி அழவும், "வேண்டாம் கா; நீ உன் உயிரை விட வேண்டாம்.


நான் அந்த அபிமன்யுவை கல்யாணம் பண்ணிக்கறேன்!


அப்பா அந்த ஹாஸ்பிடலை அவன் பேருக்கு மாத்தி குடுப்பா!


அதுக்கு நான் பொறுப்பு.


இப்ப நீ போய் நிம்மதியா தூங்கு" எனக் கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் சொல்லிவிட்டு, தன கைப்பேசியைக் குடைந்தவாறு, "அப்பா! சாப்பிட வாங்கோ! இப்ப இதை பத்தி எதுவும் பேச வேண்டாம்!


நாளைக்கு கார்த்தால முடிவு பண்ணிக்கலாம்!" என்று ராதா சொல்ல, அவளை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டே சாப்பிடும் அறை நோக்கிச் சென்றார் சேஷாத்ரி.


"என்னடி உளறிண்டு இருக்க" என அதிர்ச்சியாக கீதா கேட்க, "மா! நீ கூட இன்னும் சாப்பிடல! வா நீயும் அப்பாவோட உட்கார்ந்து சாப்பிடு!" என்று சொல்லிவிட்டு ராதா உள்ளே போக எத்தனிக்க, "ராதா! நீ நிஜமா சொன்னியா? இல்ல இப்போதைக்குப் பிரச்சினையை முடிக்க சொன்னியா" என அழுது கட்டிக்கொண்ட தொண்டையுடன் கரகரப்பான குரலில் கேட்டாள் அனு.


அவளுடைய சுயநலத்தை உணர்ந்து இகழ்ச்சியுடன் சிரித்தவள், "உன் நன்மைக்காகத்தான் சொன்னேன் கா! கவலை படாத! நீ ஜெயிலுக்கு போற அளவுக்கு நாங்க விட மாட்டோம்" என்றாள் ராதா சிறிது குத்தலாக.


தமக்கையின் முகத்தை பார்க்க கூட பிடிக்காமல் அங்கே சுவர் ஓரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்த அவளுடைய அப்பாவின் மடிக்கணினி பையில் போய் நிலைத்தது அவளுடைய பார்வை.


***


முதலில் ராதா சொன்ன வார்த்தைகளை நம்பவே இயலவில்லை அனுபமாவால்.


அவள் ஏதோ வாய் வார்த்தைக்காகத்தான் சொல்கிறாள் என்றே நினைத்தாள் இவள்.


ஆனால் அவள் என்ன சொன்னாளோ, எப்படி அவர்களுடைய அப்பா அம்மாவைச் சம்மதிக்க வைத்தாளோ, அபிமன்யு அவனுடைய பெற்றோருடன் வந்து அவளைப் பெண் பார்க்கும் வரையும் வந்து நின்றது.


அவள் ராதா சம்மதம் சொன்ன தகவலை அரவிந்த்துக்குச் சொல்ல, உடனே அவன் சென்னை வந்ததுடன் இந்த பெண் பார்க்கும் நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துவிட்டான்.


எளிமையான ஒப்பனையுடன் வெகு இயல்பாக அவர்கள் முன் வந்து நின்றாள் ராதா.


சேஷாத்திரியின் முகம் உணர்ச்சி துடைத்திருக்க வேண்டா வெறுப்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார் கீதா.


சம்பிரதாய பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறிக்கப்பட, ராதா அரவிந்த்துடைய முகத்தைப் பார்க்கவும் அவள் சொல்ல வருவது புரிந்து, "அபி! ராதா உன் கிட்ட ஏதோ தனியா பேசணுமாம்" என்றான் அவன் மெல்லிய குரலில்.


"ஒய் நாட்; பேசலாமே! நான் நாளைக்கு வந்து அவளை லஞ்சுக்கு அழைச்சிட்டு போறேன்!


தென் பேசலாம்!' என்றான் அபிமன்யு குதூகலத்துடன்.


சேஷாத்ரி ராதாவை நோக்கி ஒரு சூடான பார்வை வீச, "அப்பா சில்!" என உதட்டு அசைவால் சொல்லிவிட்டு கண்களை மூடி திறந்தாள் ராதா. 'ஒரு பிரச்சினையும் இல்லை' என்பது போல்.


யாருமே அறியா வண்ணம் சில நொடிகளுக்குள் இந்த அப்பா மகள் மௌன உரையாடல் நடந்து முடிந்திருக்க அனைவரும் விடை பெற்றுச் சென்றனர்.


பிரச்சனை தீர்ந்தது என்கிற ரீதியில் அரவிந்த் அனுவை அழைத்துக்கொண்டு அவனுடைய வீட்டிற்குச் சென்றுவிட, கைப்பேசியில் எதையோ 'டைப்' செய்துகொண்டே தன் அறை நோக்கிப் போனாள் ராதா.


"ஏன்னா! இதெல்லாம் சரியா வருமா; எனக்கு ரொம்ப பயமா இருக்குன்னா" என கீதா நடுக்கத்துடன் கேட்க, "இதுக்கு நான் என்ன பதில் சென்றது.


இப்பல்லாம் நம்மாத்துல சின்னவா பிடிவாதம்தானே ஜெயிக்கறது!


ஒண்ணுமே பண்றதுக்கில்ல" என அலுத்துக்கொண்டே தன் வேலையைக் கவனிக்கக் கிளம்பினார் சேஷாத்ரி.


***


அடுத்த நாள் மதியம் ராதாவை அழைத்துச்செல்ல அவர்கள் வீட்டிற்கே வந்திருந்தான் அபிமன்யு.


அவள் கிளம்பி தயாராகக் காத்திருக்க, "யூ ஆர் லூக்கிங் ஆஸம் இன் திஸ் டிரஸ்.


உன்னோட இந்த கூல் லுக்தான் உன்னைக் கல்யாணம் பண்ணிட்டே ஆகணும்னு எனக்கு ஒரு கிரேஸ் வரக் காரணம்" என்றான் அவன் எந்தவிதமான அதிகப்படியான வழிசலும் இல்லாமல்.


அவள் ஒரு மென் புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுக்க, "நாம கிளம்பலாம் இல்ல" என அவன் கேட்கவும், "யா; ஸ்யூர்" என்றவள் அவனுடன் வந்து அவனுடைய 'காரி'ல் ஏறினாள்.


அந்த வாகனம் கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் ஒரு ஒரு புகழ் பெற்ற ஐந்து நட்சத்திர விடுதியில் போய் நின்றது.


உள்ளே சென்றதும் ஏற்கனவே பதிவு செய்திருந்த இருக்கையில் போய் உட்கார்ந்து, பின் அவளுடைய விருப்பத்தைக் கேட்டு உணவை 'ஆர்டர்' செய்தவன், "என்னவோ பேசணும்னு சொன்னியே;


உன்னோட கண்டிஷன்ஸ் எதாவது இருக்கா?


இப்ப சொல்லு" எனக் கேட்டான் அபிமன்யு நேரடியாக.


"எஸ்! அஃப்கோர்ஸ்" என்றவள், "நான் ஒரு கம்பல்ஷன்காகத்தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கேன்.


அதை பத்தி உங்களுக்கு எந்த கவலையும் இல்லன்னு எனக்கு தெரியும்" என அவள் தொடங்க அவன் ஏதோ சொல்ல வரவும், "இட்ஸ் ஓகே! எப்படியும் அப்பா யாராவது ஒருத்தனை பார்த்து; இவன்தான் மாப்பிள்ளைன்னு சொல்லப்போறார்; நான் அதுக்கு ஒத்துக்கத்தான் போறேன்!


அது நீங்களா இருக்கறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.


ஆனா இன்னும் ஃப்யூ மந்த்ஸ்ல என்னோட தீசிஸ் சப்மிட் பண்ணிடுவேன்!


அது வரைக்கும் என்னால எந்த கமிட்மெண்டும் எடுக்க முடியாது!


நீங்க அதை புரிஞ்சிக்கணும்!


நான் தீசிஸ் சப்மிட் பண்ண பிறகு கல்யாணத்துக்கு நாள் பார்த்தால் நான் ரொம்ப சந்தோஷ படுவேன்" என்றாள் அவள் தெளிவாக.


'இவ அந்த கண்ணனை லவ் பண்றான்னு அந்த அரவிந்த் பில்ட் அப் கொடுத்தான்; என்னடான்னா இப்ப இப்படி பேசறாளே' என அவன் அவளைக் குழப்பத்துடன் பார்க்க, "இன் பிட்வீன் நானும் என் ஃப்ரெண்ட் ஒருத்தியும் எக்ஸ்பீரியன்ஸ்காக ஒரு த்ரீ மந்தஸ் எங்கயாவது வேலைக்கு போகலாம்னு இருக்கோம்!


அதுக்கும் நீங்க குறுக்க நிக்க கூடாது!


தட்ஸ் ஆல்; இதுதான் என் கண்டிஷன்ஸ்" என முடித்தாள் அவள்.


அவளை ஆழமாகப் பார்த்துக்கொண்டே, "ஐம் ஃபேர் வித் யுவர் கண்டிஷன்ஸ்.


இதுக்கு பின்னால ஹிட்டன் ப்ளான்ஸ் எதுவும் இருக்காதுன்னு நம்பறேன்" என அவன் சொல்ல, அவனைக் கிண்டலான ஒரு பார்வை பார்த்தவள், "ப்ச்... ஆனா என்னால ப்ரூவ் பண்ண முடியாதில்ல" என அவள் கேட்க, சிரித்துக்கொண்டே, "அஃப்கோர்ஸ்! யூ கேன்" என்றான் அவன்.


"வாட் டூ யூ மீன் பை திஸ்" என்ற சீற்றமான அவளுடைய கேள்விக்கு, "ஹேய்! கூல் பேபி!" என்றவன், "அந்த த்ரீ மந்த்ஸ் நீ என்னோட கம்பனிலயே ஒர்க் பண்ணு; சிம்பிள்" என்றான் அவன் இலகுவாக.


"ஆங்.. மறந்துட்டேன்! இந்த கல்யாணம் முடியற வரைக்கும் எங்க ஹாஸ்பிடல்ல எந்த ச்சேஞ்ஜசும் நடக்க கூடாது.


அதாவது அது வரைக்கும் அது எங்க ஹாஸ்ப்பிடலாத்தான் இருக்கும்.


இந்த கண்டிஷன் என் அப்பாவுக்காக!


மத்தபடி உங்க கம்பெனில வேலை செய்யறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்றாள் அவள் நிமிர்வுடன்.


அவளது பதிலில் புன்னகைத்தவன், "அது இப்ப உங்க ஹாஸ்ப்பிடலா இருக்கு; கல்யாணத்துக்கு பிறகு நம்ம ஹாஸ்ப்பிடலா இருக்கும்;


என்ன பேர் மட்டும் மாறி இருக்கும் அவ்வளவுதான்" என்றான் சர்வ சாதாரணமாக.


கோபத்தின் உச்சத்தில் முகத்தில் பரவும் சூட்டை மறைக்க முயன்று, சூடான 'சூப்'பை சாப்பிட்டு அதைச் சமன் செய்தாள் அவள்.


அதே நேரம் மருத்துவமனைக்குக் கூட செல்ல மனமில்லாமல் அவன் இல்லத்து வரவேற்பறை 'சோஃபா'வில் தன் கையை நெற்றிக்குக் குறுக்காக இட்டு படுத்திருந்தான் கண்ணன்.


பள்ளி சீருடையன 'சல்வார்' அணிந்து இரட்டைச் சடை பின்னலிட்டு, முகத்தைச் சுருக்கி, "கண்ணன் ப்ளீஸ்! ஸ்கூல் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன்!


அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவா!


என்னை ஸ்கூல்ல ட்ராப் பண்றீங்களா" என்று கேட்டுக்கொண்டே அவன் மனக்கண்ணில் காட்சி அளித்தாள் ராதா.


எந்த ஒரு பொருளும் கேட்பாரில்லாமல் நம் கண்பார்வையில் இருக்கும்போது அது சிறிய பொருளாக இருந்தாலும் சரி. எவ்வளவு விலை மதிப்பு வாய்த்த பொக்கிஷமாக இருந்தாலும் சரி அதன் மதிப்பு நமக்குத் தெரியாது.


ஆனால் அதை மற்றவர் உரிமை கோரும் போது அதன் மேல் ஒரு பற்று ஏற்படும்.


அதை விட்டுக்கொடுக்க நம் மனம் இடம் கொடுக்காது.


அந்த மனநிலையிலிருந்தான் கண்ணன்.


ராதாவை எந்த ஒரு சூழ்நிலையிலும் அவனால் விட்டுக்கொடுக்க முடியாது.


அப்படிச் செய்தால் அது அவனுடைய குருவின் மன நிம்மதிக்காக மட்டுமே இருக்கும்.


ஆனால் அவனுடைய நிம்மதியும் ஆனந்தமும் ராதாவிடம் மட்டுமே இருப்பதை உணர்ந்த அவன் ராதாவின் ஆனந்த கிருஷ்ணனாக முற்றிலுமாக மாறிக்கொண்டிருந்தான்.

1 comment

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Moorthi Rajeshwari
Moorthi Rajeshwari
Aug 03, 2020

Next episode varala pa😭😭😭

Like
© KPN NOVELS COPY PROTECT
bottom of page