காதல்-6
சேஷாத்ரியின் முகக்குறிப்பை படித்தவர், "தோ பாரு சேஷா! இந்த கிழம் என்ன இப்படி கேட்டுடுத்தேன்னு தப்பா நினைக்காத.
இல்ல மரியாதைப் பட்ட மனுஷர் இப்படி கேட்டுட்டாரே! வேண்டாம்னு எப்படி சொல்றதுன்னு சங்கடப் படாத!
நான் கிராமத்தான்! மனசுல பட்டத பட்டுனு பேசிடுவேன்! ஏன்னா நாம இப்படி கேட்டிருந்தால் நடந்திருக்குமோன்னு நினைக்கக் கூடாது பாரு. அதான்.
அதனால நீ எனக்கு சாதகமாத்தான் பதில் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல.
உன் மனசுக்கு சரின்னு பட்டத்தை சொல்லு; எதுவா இருந்தாலும் எனக்குச் சந்தோஷம்தான்!" என்றார் சின்னத்தாத்தா எதார்த்தமாக.
அதில் முகம் தெளிவுற, "அப்படி இல்ல ஸ்வாமின்! உங்காத்துல நித்ய அனுஷ்டானமெல்லாம் கொஞ்சம் ஜாஸ்தி இல்லையா!
நம்மாத்துல அந்த அளவுக்கு பாக்கறதில்ல!
கீதாதான் இவா ரெண்டுபேரையும் அதை பண்ணாத இதை பண்ணாதன்னு வெஸ்ஸுண்டே (திட்டிக்கொண்டே) இருப்பா!
அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு!
இவளுக்கும் செவ்வாதோஷ ஜாதகம்.
அதனாலதான் கல்யாணம் தள்ளிபோயிண்டே இருக்கு!
இன்னும் அஞ்சாறு மாசத்துல படிப்பு முடிஞ்சிடும்.
அப்பறமா இதை பத்தி ஒரு முடிவு எடுக்கலாம்னு!" என சேஷாத்ரி இழுக்கவே, "நோ ப்ராப்ளம்! ஆத்துல போய் கீதாவோடவும் பேசிட்டு; பொண்ணோட விருப்பத்தையும் தெரிஞ்சுண்டு நிதானமா பதில் சொல்லு!
சுபஸ்ய சீக்ரம்னு சொல்லுவா!
இப்பலாம் ஆறு மாசம்ங்கறதே சீக்கிரம்தான்!
நல்ல முடிவா சொல்லு!" என முடித்தார் பெரியவர்.
சேஷாத்ரி கீதாவின் முகத்தைப் பார்க்க, அங்கே எள்ளும் கொள்ளும் வெடித்தது.
அதற்குள் அவர்கள் புறப்படுவதை அறிந்து மைத்ரேயி பெண்கள் இருவருக்கும் தாம்பூலம் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு அவர்கள் மூவரும் விடைபெற்று கிளம்பினர்.
அவர்களை வழி அனுப்ப அந்த குடியிருப்பின் வாயில் வரை வந்தனர் கண்ணன் ஆனந்தி மற்றும் ராகவனும்.
"சித்தியா அப்படி பேசுவார்னு நாங்க நினைச்சே பாக்கல!
எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்கோ!" என்றார் ராகவன் தயக்கத்துடன், பொதுப்படையாக.
"இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு! பொண்ணுன்னு இருந்தா இப்படி கல்யாணத்துக்காக கேக்கத்தான் செய்வா! நம்ம மனசுக்கு சரின்னு பட்டா மேற்கொண்டு பேசி முடிவு பண்ணப்போறோம்!" என்றார் கீதா கணவரின் முகத்தைப் பார்த்தவாறே!
யோசனையுடன் சேஷாத்ரி கண்ணனைப் பார்க்க அவன் முகம் உணர்ச்சி துடைத்து சலனமற்று இருந்தது.
அவனை முறைத்துக்கொண்டே, "அம்மா எனக்கு இப்ப ட்ரைவ் பண்ற மூட் இல்ல! என் காரை நாளைக்கு உங்க கண்ணனையே கொண்டுவந்து விடச்சொல்லுங்கோ!" என்று சொல்லிவிட்டு சேஷாத்ரியுடைய காருக்குள் போய் உட்கார்ந்தாள் ராதா.
மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் மனைவி மற்றும் மகளுடன் அங்கிருந்து கிளம்பினார் அவர்.
உடனே, "என்னடா கண்ணா தாத்தா இப்படி பட்டுன்னு கேட்டுட்டார்!" என்றார் ராகவன் மனதில் அடக்கிவைத்திருந்த ஆதங்கத்தின் வெளிப்பாடாக.
"பா! அவரோட ஸ்வபாவமே அதுதானே! இந்த பேச்சை இத்தோட விடுங்கோ! தாத்தா கிட்ட எதுவும் கேக்க வேண்டாம்!' என அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான் கண்ணன்.
"சரி... நாளைக்கு துவாதசி; நான் இப்படியே ஒரு வாக்கிங் போயிட்டு ஆத்திக்கீரை கிடைச்சா வாங்கிண்டு வந்துடறேன்!
நீங்க ரெண்டுபேரும் உள்ள போங்கோ!' என்று சொல்லிவிட்டு அவர் கிளம்ப,
"வாடா கண்ணா! பாவம் தாத்தா; ஏகாதசி உபவாசம்னு கார்தலேந்து பட்டினி கிடக்கார்! அவருக்கு பயத்தம் கஞ்சி போட்டு கொடுக்கணும்! பாட்டிக்கு எதாவது பலகாரம் ரெடி பண்ணனும்!" எனச் சொல்லிக்கொண்டே மின்தூக்கியை நோக்கிப் போனார் ஆனந்தி.
அவர் அகத்தினுள் நுழைந்து அடுக்களைக்குள் புகுந்து கொள்ள, 'ம்க்கும்' என தொண்டையைக் கனைத்தார் அங்கே வரவேற்பறையில் அமர்ந்திருந்த தாத்தா!
கண்ணன் மெல்லிய புன்னகையுடன் அவருடைய முகத்தைப் பார்க்க ஒரு அடக்கப்பட்ட சிரிப்புடன் கை கட்டைவிரலை தூக்கி காண்பித்த தாத்தா அவனை அருகில் அழைக்க அவரிடம் சென்றான் கண்ணன்.
"என்ன இது போதுமோல்லியோ!" எனத் தாத்தா கேட்க, "எதேஷ்டம்! (தேவைக்கு அதிகமாகவே) கலக்கிடீங்கோ தாத்தா! தேங்க்ஸ்!" என்றான் கண்ணன் நிறைவுடன்.
தன் அங்கவஸ்திரத்தால் அவன் தோளில் அடித்தவர், "படவா! இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருதுண்டு; உனக்கு லவ் கேக்கறதா" என அவர் மென் குரலில் கிண்டலாக கேட்க, "தாத்தா! ரொம்ப ஓட்டாதீங்கோ!" என சொல்லிவிட்டு தன் முகத்தில் படரும் வெட்கத்தை மறைத்தவாறு அங்கிருந்து சென்று தன் அறைக்குள் ஒளிந்துகொண்டான் கண்ணன்.
முந்தைய தினம் தாத்தாவைத் தொடர்பு கொண்டு, "தாத்தா மைத்துவை அழைச்சிண்டு அம்மாவும் அப்பாவும் இங்க வரப்போறா!
அவளோட கூடவே உங்களால இங்க வர முடியுமா?
ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்றவன் கூடவே, "நான்தான் உங்கள இங்க வரச்சொன்னேன்னு யாருக்கும் தெரிய வேண்டாம்!" என்றும் சொன்னான் கண்ணன்.
அதற்கு ஒப்புக்கொண்டவர் அவன் சொன்னபடி பாட்டியுடன் அங்கே வந்தார்.
ராகவனுக்கு சில விஷயங்களில் அதிக பிடிவாதம் உண்டு.
தன நிலையிலிருந்து சுலபத்தில் இறங்கி வர மாட்டார் அவர்.
ஆனால் தாத்தா அப்படி இல்லை.
அந்த காலத்து மனிதராக இருந்தாலும் அவர்கள் குடும்பத்து இளைய தலைமுறையினருடன் நல்ல புரிதலுடன் பழகும் இயல்புடையவர் அவர்.
அதனால் எப்பொழுதுமே கண்ணனுக்கும் அவருக்கும் நல்ல பிணைப்பு உண்டு.
தந்தை ராகவனிடம் பகிர்ந்துகொள்ள முடியாத விஷயங்களை கூட அவனால் அவருடன் எளிதாகப் பகிர்ந்துகொள்ள முடியம்.
அந்த உரிமையிலேயே அவன் அவரை அழைத்தது.
அவர் பேச்சுக்கு அவர்கள் குடும்பத்தில் மறுபேச்சு இல்லை என்பதால் அவர் மூலமாக சில காரியங்களை அவனால் சாதித்துக்கொள்ள முடியும் என்பதும் ஒரு காரணம்.
அடுத்த நாள் அதிகாலை அவருடன் நடைப் பயிற்சிக்குக் கிளம்பிய கண்ணன் எப்படி பேச்சைத் தொடங்குவது என யோசித்தவாறே உடன் நடந்து வந்தான்.
சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர், "சொல்லுடா கண்ணா! என்னை வரச் சொல்லிட்டு நீ பேசாம இருந்தா எப்படி?" எனக் கேட்டார் அவர்.
அதற்காகவே காத்திருந்ததை போல தன் தயக்கத்தைக் கைவிட்டு, "ராதாவை தெரியுமோல்லியோ" எனத் தொடங்கினான் கண்ணன்.
அவர்களுடைய தூரத்துச் சொந்தம் என்கிற முறையில் சேஷாத்ரியை நன்றாகவே தெரியும் தாத்தாவுக்கு.
அதுவும் கண்ணனால் அவர் மேலும் நெருக்கமாகியிருக்க, "தெரியாதா என்ன? பீடிகை போடாம சொல்லு" என்றார் அவர் தீர்க்கமாக.
உடனே, "தாத்தா! குரு கிட்ட எனக்காக அவளை பொண்ணு கேக்க முடியமா?" என்று கேட்டான் அவன் சுற்றிவளைக்காமல்.
அதில் அதிர்ந்துபோய், நடந்துகொண்டிருந்தவர் அப்படியே நின்றுவிட, "தாத்தா!" என அவரை கலைதான் கண்ணன்.
"என்னடா லவ்வா! அந்த கர்மம் உன்னையும் விட்டுவெக்கலியா?" எனக் கேட்டார் அவர் ஒரு மாதிரியான குரலில்.
அவன் பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக இருக்க, "உன்கிட்ட இதை எதிர்பார்க்கலடா!" என்றார் அவர் உண்மையான ஏமாற்றத்துடன்.
"அப்படியெல்லாம் இல்ல தாத்தா! ஒரு விருப்பம் அவ்வளவுதான்" எனச் சமாளிப்பாகச் சொன்னவன், "எனக்காக ஒரே ஒரு தடவை ப்ளீஸ்!" என்றான் அவன் கெஞ்சலாக.
"எல்லாருக்காகவும் பார்த்து பார்த்து எவ்வளவோ செய்யற!
உனக்காக கேக்கறேன்! ஆனா சேஷா எதாவது மறுத்து சொல்லிட்டான்னா அதோட விட்டுடனும்' என்ற நிபந்தனையுடன் அதற்கு ஒப்புக்கொண்டார் தாத்தா.
அப்படியே கேட்டும் விட்டார்!
மூடிக்கொண்ட அவனது அறைக் கதவையே புன்னகையுடன் தாத்தா பார்த்துக்கொண்டிருக்க, "ஏன்னா! நீங்க ரெண்டுபேரும் குசுகுசுன்னு அப்படி என்ன பேசிண்டீங்கோ!
அவன் என்னடான்னா இப்படி வெக்க பட்டுண்டு ஓட்றான்! லவ் மேட்டரா?!
ஆமாம் திடீர்னு இப்படி கேட்டீங்களே இது நீங்களா கேட்டதா; இல்ல அவன் கேக்க சொல்லி கேட்டதா!" எனப் பாட்டி தாத்தாவிடம் வில்லங்கமாகக் கேள்விக்கணைகளைத் தொடுக்க,"ஏன் ஜெயம் இப்படியெல்லாம் கேக்கற! எதோ என் மனசுல தோணினத நான் கேட்டேன்! இதுக்கு இவ்ளோ கேள்வி கேக்கற!" என அவர் அலுத்துக்கொள்ள, "நம்ம சின்னு உங்க ரெண்டுபேரையும் பார்த்து அது என்னமோ சொல்லுவாளே?" என யோசித்தவர், "ஆங்... பார்ட்னர் இன் கிரைம்! அதுதானே நீங்க ரெண்டுபேரும்! அதான் கேட்டேன்" என்றார் பாட்டி ஒரே போடாக.
'ப்பா! கிழவி சரியான எம்டன்! இவ கிட்ட மாட்டாம ஒரு விஷயம் பண்ணவே முடியாது' என எண்ணியவர், "பாப்பா! பாவம் ஆனந்தி! உள்ள தனியா டிஃபன் பண்ணிண்டு இருக்கா!
எனக்கு கஞ்சி போட்டு வெச்சிருந்தான்னா கொஞ்சம் கொண்டு வந்து குடேன்!" என்றார் தாத்தா சில்மிஷமாக.
அதில் பேசிக்கொண்டிருந்த விஷயத்தை மறந்து உள்ளே சென்றார் பாட்டி.
***
அவனது அறைக்குள் நுழைந்தவன் அங்கே இருந்த நாற்காலியில் ஓய்வாக அமர்ந்தவாறு தன் மடிக்கணினியை உயிர்ப்பிக்க அதே நேரம் அவனது கைப்பேசி இசைத்தது. அதை எடுத்துப் பார்த்தவன், "சொல்லு!" என்றான் கண்ணன் ஒரே வார்த்தையாக.
எதிர் முனையில் மௌனம் குடியிருக்கவே, "ப்ச், போன் பண்ணிட்டு இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தமாம்! நான் கட் பண்ணிடவா?" எனக் கேட்டான் அவன் பொறுமை இழந்து.
"ஏன் சொல்லு ராதான்னு என் பேரை சொன்னா குறைஞ்சு போயிடுவீங்களா?" என அவள் படபடக்க, "ப்ச்.. தோ பார்; வளவளன்னு பேசிண்டு இருக்க எனக்கு டைம் இல்ல;
சொல்லவந்த விஷயத்தை பட்டுனு சொல்லு" என்றான் அவன் அவளைத் தவிர்ப்பது போல.
"ஏன் கண்ணன் இப்படி பண்றீங்கோ! நான் நேத்து அப்படி சொன்னதால நீங்கதானே உங்க தாத்தா கிட்ட சொல்லி அப்பா கிட்ட பொண்ணு கேக்க சொன்னீங்கோ?" என ராதா நேரடியாகக் கேட்க, "ப்ச்.. லூசுத்தனமா பேசாத! நான் ஒண்ணும் தாத்தாகிட்ட சொல்லல!" என்றவன், "ஆமாம் நேத்து நீ என்ன சொன்ன" என்றான் கண்ணன் அவள் பேசியதே அவன் நினைவில் இல்லை என்பதுபோல்.
அதில் அவள் பொறுமை இழந்து, "கண்ணன்!' எனப் பற்களைக் கடிக்க, "இதோ பார்! தாத்தா பேசினதை நீ பெருசா எடுத்துக்காத.
ஒரு வேளை உங்கப்பா இதுக்கு சம்மதிச்சா அப்பறம் நடக்கறது நடக்கட்டும்" என அவன் வெகு எதார்த்தமாகச் சொல்ல வெகு ஏமாற்றமாக இருந்தது அவளுக்கு.
"ஒரு வேளை அப்பா சம்மதிக்கலன்னா" என அவள் நிராசையுடன் கேட்க, "உங்க அப்பா சொல்ற பையனைக் கல்யாணம் பண்ணிக்கோ! தட்ஸ் இட்.
நான் இனிமேல் உங்காத்துக்கு வர மாட்டேன்! நீயும் இங்க வராத!
இது பெரியவாளா பார்த்து முடிவு பண்ணவேண்டிய விஷயம்.
நாம டிசைட் பண்ணக்கூடாது.
அதுவும் உங்க அப்பா என்னோட குரு!
அவர் இல்லனா இன்னைக்கு நான் இல்ல!
அவர் மனசுக்கு உவப்பா இல்லாத ஒரு விஷயத்தை நான் செய்யவே மாட்டேன்!
அதனால எது நடந்தாலும் ஏத்துண்டு போக ரெடியா இரு!
இனிமேல் தேவை இல்லாம போன் கூட பண்ணாத" என்று காரமாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் கண்ணன். அவளது கண்களில் கண்ணீர் திரண்டது.
Comments