top of page

Kaattumalli - 22

Updated: Jan 8

நன்றி தோழமைகளே!


இந்தக் கதைக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.


உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.


இந்த Update பற்றி நிறைய பேர், comments மூலமாகவும் inbox வந்தும் கேட்டிருந்தீர்கள்.


இன்று நான் எழுதியிருக்கும் மல்லி மற்றும் ஸ்வராவின் உரையாடல் மிக மிக முக்கியமானது. குறிப்பக Love Bombing பற்றி நான் எழுதியிருக்கும் பகுதியை என் முக்கிய கடமையாக நினைத்து எழுதினேன்.


Writers Block போல இது கொஞ்சம் என்னை வைத்து செய்துவிட்டது. இது எந்த அளவுக்கு தெளிவாக வந்திருக்கிறது என்றே புரியவில்லை. நீங்கள்தான் சொல்லவேண்டும்.


இந்த எபி பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள மறக்காதீர்கள்.


மடல் - 22


இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களுக்கான முக்கிய இடம் ஒன்றும் அவ்வளவு சுலபமாகக் கிடைத்து விடுவதில்லை. ஒவ்வொரு நிலையிலும் பலவிதமான எதிர்ப்புகளையும் சங்கடங்களையும் சமாளித்து சமாளித்தே புடம் போட்ட தங்கமாக ஜொலித்தாள் மல்லிகா. வாழ்க்கை தந்த அனுபவம் அவளை மிகவும் பக்குவப்பட்டவளாக மாற்றி இருந்தது.


அவரைத் தாண்டி எந்த ஒரு தீய சக்தியும் அவளை நெருங்கவே முடியாது எனும் அளவுக்கு அவளுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக நின்றார் அல்லி.


அவளுடைய மகள் வளர வளர மல்லியின் குழுமங்களும் வளர்ச்சியடைந்தன.


அடுத்த தலைமுறையான திலகாவும் பகலவனும் அவர்களுக்குத் துணையாக வளர்ந்து நின்ற பிறகு அவர்களுடைய குழுமம் உலக அரங்கிலும் தடம் பதித்தது.


கல்வி ஒரு பக்கம் இருந்தாலும், கணக்கு வழக்குகளைக் கையாளும் வயது வந்த உடனேயே ராஜராஜேஸ்வரியைக் கூட அவர்களது தொழிலில் ஈடுபடுத்தினாள் மல்லிகா, எந்த ஒரு சூழ்நிலையையும் அவள் கையாள வேண்டும் என்கிற அவசியத்தால்.


எந்தக் காலத்திலும் மகளின் விருப்பத்துக்கு மாறாக அவள் எதுவும் செய்வதில்லை, அதே நேரம் அவளைச் சரியான பாதையிலும்  இட்டுச் சென்றாள். தான் வாழ்க்கையில் பட்டு வந்த அடிகள், மகள் விஷயத்தில் அவளை மிகவும் கவனமாக இருக்க வைத்தது.


மல்லி அவளுடைய பதின்ம வயதில் பார்த்த உலகம் ஒரு மாதிரி இருந்தது என்றால் ஸ்வராவின் உலகம் வேறு மாதிரி இருந்தது.


மல்லிகாவின் பொருளாதார வளர்ச்சியினால் ஆசைப்பட்ட எல்லாமே அவளுக்குக் கிடைத்தாலும் கூட, உலகத்து மாயை அவளுடைய கண்களையும் மறைத்தது.


ராஜராஜேஸ்வரி என்கிற தனது பெயரை நாகரிகம் எனக் கருதி 'ஸ்வரா' என அவள் என்று மாற்றிக் கொண்டாளோ அன்றிலிருந்து தொடங்கியது அம்மாவுக்கும் மகளுக்குமான பனிப்போர்.


'ராஜராஜேஸ்வரி கார்மெண்ட்ஸ்' இதுதான் மல்லிகாவின் அடையாளமாக வளர்ந்து நிற்கும் அவளுடைய ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனம். ஆரம்பத்தில் சப்கான்ட்ராக்ட் போல வேறு ஒரு நிறுவனத்திற்கு வேலை செய்து கொண்டிருந்தவள் ஒரு வருடமாக நேரடி ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபடத் தொடங்கி இருந்தாள்.


மொத்தமாக துணிகளைக் கொள்முதல் செய்வது, வெட்டி ஆடைகளாகத் தைத்து விற்பனை செய்வது என்று இருந்தது போக இப்பொழுது ஆடை வடிவமைப்பிலும் நேரடியாக ஈடுபடத் தொடங்கி இருக்கிறாள்.


புதுப்புது டிசைன்களை வடிவமைப்பதில் அதீத ஆர்வம் இருந்ததால், முறையாக அதற்கான படிப்பை படிக்காமல் போனாலும் அனுபவரீதியாக அதில் நன்றாகவே கைதேர்ந்திருந்தாள்.


திலகாவும் ஃபேஷன் டிசைனிங் சார்ந்த பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு இவர்களது நிறுவனத்தின் ஆடை வடிவமைப்பு பிரிவின் பொறுப்பை ஏற்றிருக்க, அவளுடன் இணைந்து ஏற்கனவே தனக்கு இருந்த திறமையை மென்மேலும் மெருகேற்றிக் கொண்டாள் மல்லி.


இவர்களுடைய புது புது டிசைன்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பிருக்க தொழிலில் இன்னும் ஏறுமுகம்தான்.


அல்லிக்கொடி, சீராளன், சாந்தா, பகலவன், திலகா வரையில் அவளுடைய மிக நெருக்கமான உறவினர் என்றே ஆகி இருந்தார்கள். பிள்ளைகளைப் பொறுத்தவரையில் அதுதான் உண்மை என்றே நம்பிக் கொண்டிருந்தனர். பகலவனைப் பொறுத்தவரை சீராளனும் சாந்தாவும் அம்மா, அப்பா என்ற பிம்பத்தில் இருக்க, அல்லிக்கொடி பொதுவாக எல்லோருக்குமே பாட்டியானார். குறிப்பாக ஸ்வரா அவரைத் தன் அம்மாவைப் பெற்ற தாயார் என்றே சந்தேகத்துக்கு இடமின்றி நம்பினாள்.


சசி, சரோஜா, போன்ற அந்தக் குடிசைப் பகுதியில் வசித்த இன்னும் சில பெண்களும், அவளுடன் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்த பெண்கள் மற்றும் டெய்லர் அண்ணா வகுப்பில் ஒன்றாகப் பயிற்சி பெற்ற சில பெண்களும் தொடக்கத்தில் இருந்தே அவளுடனேயே இருக்க, இன்று அவளது நிறுவனத்தில் நல்ல பொறுப்பில், அதிக சம்பளத்தில் வேலை செய்கிறார்கள்.


தனது வளர்ச்சியைத் தான் மட்டுமே அனுபவிக்காமல், அங்கே வேலை செய்யும் பெண்களுக்கான மருத்துவ மையம், பச்சிளம் குழந்தைகள் காப்பகம், தங்கும் விடுதிகள், முதியோர் காப்பகம் என எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருந்தாள்.


வெகு சில ஆண் பணியாளர்களைத் தவிர்த்து, தலைமைத் தொடங்கி கடைநிலை ஊழியர் வரை பெண்களே அங்கு ஆதிக்கம் செலுத்த, ராஜராஜேஸ்வரி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தார்கள். அதுவே அவர்களை இன்னும் திறம்பட வேலை செய்ய வைத்தது. நிறுவனத்தின் வளர்ச்சியும் வேகமாக இருந்தது.


எந்த ஒரு துன்பமும் அவரைத் தாண்டித்தான் மல்லிகாவைத் தீண்ட முடியும் என்கிற அளவுக்கு அல்லிக்கொடி அவளது நிழலாகவே மாறிப்போனார்.


பகலவன் டெல்லி ஐஐடியில் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படிப்பைப் படித்துக் கொண்டிருக்க எட்டாம் வகுப்பில் இருந்தாள் எல்லோராலும் பிரியமாக 'ராஜ்'என்று அழைக்கப்படும் ஸ்வரா.


தொடக்கத்தில் இருந்து எல்லோருமே அரசுப் பள்ளிதான். வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டது என்கிற காரணத்துக்காக தன் மகளுக்காகத் தனியொரு சலுகைக் கொடுக்க மல்லி விரும்பவில்லை. அதனால் அவளையும் அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில்தான் சேர்த்திருந்தாள்.


திலகாவையும் சரி பகலவனையும் சரி பத்தாவது முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க ஏதுவாக அவர்களை ஸ்போக்கன் இங்கிலீஷ் உட்பட வேறு சில பயிற்சி வகுப்புகளிலும் சேர்த்துப் படிக்க வைத்திருக்க, அதையே மகளுக்கும் செய்ய முடிவு செய்திருந்தாள்.


ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லை என்பது போல திலகா, பகலவன் இருவருடனான நெருக்கத்தில் இது போன்ற எந்தச் சிறப்பு வகுப்புகளுக்கும் போகாமலேயே அனைத்திலும் தேர்ந்ததிருந்தாள் ஸ்வரா.


உண்மையில் அவர்கள் இருவருடன் இருந்த வரையில் ஸ்வராவைப் பற்றிய கவலையே இல்லாமல்தான் இருந்தாள் மல்லி. ஓராண்டுக்கு முன் திலகா திருமணமாகிச் சென்றிருக்க, பகலவனும் விடுதியில் தங்கிப் படிப்பதால், தன் மன உணர்வுகளைப் பகிர யாருமே இல்லாதது போல ஏதோ ஒரு விதத்தில் அவள் தனிமைப்பட்டுப் போனாள். அதுவே அவளது பிடிவாதத்தை அதிகமாக்கிக் கொண்டே போனது.


தினமும் பள்ளி முடிந்ததும் நேராக அவர்களுடைய அலுவலகத்திற்கு அவள் வருவதுதான் வழக்கம்.


ஒரு நாள் மாலை, மல்லிகா அவளுடைய பிரத்தியேக அறையில் அமர்ந்து கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க, வழக்கம் போல அன்றும் அங்கே வந்தாள்.


புத்தகப் பையையும் மதிய உணவுப் பையையும் ஓரமாக வீசிவிட்டு ஒரு உற்சாகத்துள்ளலுடன் அம்மாவை நோக்கி வந்தவள், "ம்மா.. யாருக்காவது அவங்க பேர மாத்திக்கணும்னா இப்பவே எழுதிக் கொடுக்கச் சொல்லி கிளாஸ் மிஸ் சொன்னாங்க. இந்தப் பேருதான் டென்த் சர்டிபிகேட்ல வருமாம். இப்ப விட்டுடா அப்புறம் கெசட்ல கொடுத்துதான் மாத்த முடியுமாம்" என்று தொடங்க,


'ஐயோ வந்ததும் வராததுமா ஆரம்பிச்சுட்டாளே' என்ற சலிப்புடன் சட்டென நிமிர்ந்து மகளை ஆழமாகப் பார்த்தவள், "அதுக்கு இப்ப என்ன?" எனக் கேட்டாள் கடுப்புடன்.


சமீப காலமாகவே அம்மாவுக்கும் பெண்ணுக்கும் இப்படித்தான் முட்டிக்கொண்டு நிற்கிறது.


அல்லியைப் பொறுத்தவரை, கண்ணை மூடிக்கொண்டு ஸ்வராவின் பக்கம்தான் நிற்பார். 'வாழ்க்கையில் தோல்வி என்பதையே சந்திக்காமல் இவளாவது சந்தோஷமாக இருந்து விட்டுப் போகட்டுமே' என்கிற எண்ணம்தான்.


ஆனால் மல்லி விடமாட்டாள், 'இப்படி செல்லம் கொடுத்துக் கொடுத்துதான் உன்ன மாதிரியே அடாவடிப் பேர்வழியா ஆக்கி வெச்சிருக்க" என்று பாய்வாள்.


இப்பொழுது இடையில் புகுந்து ஏதாவது பேசினாலும் அதுதான் நடக்கும் என, இதழில் பூத்தப் புன்னகையுடன் இருவரையும் பார்த்தபடி அல்லி அமர்ந்திருக்க,


"அம்மா… எனக்கு ராஜராஜேஸ்வரிங்கற இந்த வெரி ஓல்ட் நேம் கொஞ்சம் கூட பிடிக்கலைன்னு நான்தான் ஏற்கனவே சொன்னேனே. இப்ப அத சேஞ்ச் பண்ண தானாவே  ஒரு சான்ஸ் வந்திருக்குல்ல. அதுக்கு ஃபார்ம் வாங்கிட்டு வந்திருக்கேன். நீ சைன் பண்ணிக்குடு" என்றாள் பிடிவாதமும் அதிகாரமுமாக.


ஒருப் பேச்சுக்கு அவள் அல்லியைப் போல என்று சொன்னாலும் கூட, மிரட்டி காரியத்தைச் சாதிக்கும் தருணத்தில் பாக்கியத்தையும் கெஞ்சி கொஞ்சி காரியத்தை சாதிக்கும் நேரங்களில் வல்லரசுவையும் நினைவுபடுத்துவாள். அச்சு அசல் ராஜத்தின் தோற்றத்தில் இருந்தாலும், அவளுக்குள் தன் அம்மாவின் குணத்தைத் தேடி தேடி ஏதோ ஒரு விதத்தில் மல்லி தோற்றுப்போய் இருக்கிறாள்.


அதுவும் இப்பொழுது தன் தாயின் பெயரை அவள் குறைத்துச் சொல்வதைக் கேட்டு உஷ்ணமாகி, "அது எவ்வளவு அழகான பேர் தெரியுமா, ராஜ்? அத போய் குறை சொல்ற" என்று மகள் மீது பாய்ந்தாள்.


"ம்மா, அந்தப் பேரத்தான கம்பெனிக்கு வெச்சிருக்க, அப்படி அந்த மொக்க பேருதான் உனக்கு ரொம்ப புடிச்சி இருந்துதுனா, உன் பேர வேணா மாத்தி ராஜராஜேஸ்வரின்னு வெச்சிக்கோ, என்ன விட்டுடு" என்று அவள் விதண்டாவாதம் பேச, மல்லியின் ஆத்திரம் கூடிக் கொண்டே போனது.


தன் அம்மாவின் முகம் மனக்கண்ணில் மின்னி மறைய, "எவ்வளவு தைரியம் இருந்தா அப்படி ஒரு பேரை மட்டம் தட்டி என்கிட்டயே பேசுவ. அது யாரோட பேருன்னு தெரியுமாடி?" என்று கோபத்தில் வார்த்தையை விட்டுவிட்டு, அடுத்த நொடி தன் தவறை உணர்ந்து மென்று விழுங்கினாள் மல்லிகா.


"என்ன?" என ஒரு நொடி திகைத்து, "அப்படி எந்த விஐபியோட பேர் அது? சொல்லு" என்று ஸ்வரா விடாப்பிடியாகக் கேட்க, எதையும் சொல்ல முடியாமல் கண்களில் நீர் திரண்டு விட்டது மல்லிக்கு.


அதை உணர்ந்தவராக, "மல்லி, இன்னுமே நீ பக்குவப்படலையே?" என அவளைக் கடிந்தவர், "பிள்ள ஆசைப்படுது இல்ல, சும்மா சிலுத்துகிட்டு நிக்காம, போனா போகுதுன்னு விட்டுக் கொடுத்துட்டுப் போ. பேர்ல என்ன இருக்குது சொல்லு. வீட்டுல நாம எப்பவும் போல கூப்பிட்டுக்குவோம். பள்ளிக்கூடத்துல அவ ஆசைப்படுற பேரே இருந்துட்டுப் போகட்டும். அந்த மகராசி பேரயே வேணாலும் சுருக்கி காலத்துக்குத் தகுந்த மாதிரி மாத்தி எழுதிக் குடு" என்று சொல்லிவிட்டார் அல்லி.


இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை எனும் அளவுக்கு வாழ்க்கையின் ஆணிவேரையே தொலைத்து விட்டு, எங்கேயோ வந்து, பார்க்க கூடாத இடத்தை எல்லாம் பார்த்துவிட்டு, எப்படி எப்படியோ வாழ்ந்து, மீண்டு மறுபிறவி எடுத்து இவ்வளவு நடந்த பின்பும் கூட இது போன்ற சிறு சிறு விஷயங்களை மனம் பற்றிக் கொண்டிருக்கிறதே என்ற எண்ணம் தோன்ற, மகளின் ஆசைக்கு இணங்கி விட்டாள் மல்லிகா.


அதன் பிறகு எல்லோருமாக உட்கார்ந்து அலசி ஆராய்ந்து ராஜராஜேஸ்வரி என்கிற பெயரின் முடிவில் இருந்த ஸ்வரத்தை எடுத்து இப்படி ஒரு பெயரைக் கண்டுபிடிக்க, அது அவளுக்கும் மிகவும் பிடித்து போனது. வீட்டில் ராஜராஜேஸ்வரியாகவும் வெளியுலகத்தில் ஸ்வராவாகவும் வலம் வந்தாள்.


***


தெளிந்த நீரோடையாக நாட்கள் ஓட, பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான பிபிஏவுடன் ஒருங்கிணைந்த எம்பிஏ ஐந்து வருடப் படிப்பை தேர்ந்தெடுத்து சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் சேர்ந்தாள் ஸ்வரா.


பகலவனும், பிஈ படிப்பைத் தொடர்ந்து டெக்ஸ்டைல்ஸ் துறையில் எம்பிஏவும் முடித்துவிட்டு சமீபமாகத்தான் சென்னைக்குத் திரும்பி இருந்தான்.


இன்னும் ஓரிரு மாதங்கள் கழித்து கம்பெனி நிர்வாகத்தில் அவன் பங்கெடுக்கும் சூழ்நிலையில் இருந்ததால் ஒரு சில நாட்களாவது விடுமுறையை அனுபவிக்கும் பொருட்டு நண்பர்களுடன் சேர்ந்து வெளிநாட்டுப் பயணம் சென்று வந்தான்.


நீண்ட வருடங்களுக்குப் பிறகு இவனும் ஸ்வராவும்  ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பம் இப்பொழுதுதான் அமைந்தது. ஆனாலும் ஒன்றாக அதிக நேரம் செலவு செய்ய இருவருக்குமே வாய்ப்பில்லாமல் போய்க்கொண்டிருந்தது.


***


இதுதான் என்றில்லை, அவள் விருப்பப்படும் உடையாகட்டும் உணவுப் பண்டங்கள் ஆகட்டும் இல்லை வேறு எந்தப் பொருட்களானாலும் சரி, பார்க்க விரும்பும் திரைப்படங்களாலும் சரி, சுற்றிப் பார்க்க விரும்பும் இடங்கள் ஆனாலும் சரி, இல்லை என்று மறுதலிக்காமல் மகளின் ஆசை எல்லாவற்றையும் எப்பாடு பட்டாவது நிறைவேற்றி விடுவாள் மல்லிகா.


தன்னைப் போல ஏதாவது ஒரு விஷயத்திற்காக ஏங்கி அவள் தடம் மாறி விடக்கூடாது என்கிற பயமே காரணம். எல்லாமே கிடைத்து விடும் பொழுது ஏங்கித் தவிக்க இடமே இல்லையே!


அவள் பூப்படைவதற்கு முன்பாகவே அது பற்றிய விஷயங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்திருந்தாள்.


ஆண்களில் நல்லவர்கள் இருந்தாலும் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை அடையாளம் காண்பது கடினம்.‌ எனவே எல்லோரையுமே ஒரு அடி தள்ளி வைத்துப் பழகுவதுதான் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு என்பதையும் அடிக்கடிச் சொல்லி அவள் மனதில் பதிய வைத்திருந்தாள்.


மகள் விஷயத்தில் அவளால் செய்ய முடியாதது ஒன்றே ஒன்றுதான், அதுதான், தன் தகப்பனைக் குறித்த அவளது எந்த ஒரு கேள்விக்கும் இவளிடம் விடையில்லையே.


அவளது அந்த ஏக்கத்துக்கு மட்டும் இவளால் தீர்வு காண முடியாமல் போக, செய்யும் மற்ற அனைத்து நன்மைகளும் இந்த ஒரே விஷயத்தில் அடிபட்டுப் பின்னுக்குப் போய்விட, இதுவே ஸ்வராவின் மனதிற்குள் புகுந்து பேய் பிடித்தார் போன்று  அவளை ஆட்டி வைத்தது.


இந்த ஒரே காரணத்தினால் வெளி உலகத்தில் அந்தச் சின்ன பெண் அடையும் அவமானம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. தாய் தந்தையுடன் சேர்ந்து குடும்பமாய் வாழவில்லை என்பது கூட அவளது பிரச்சனை இல்லை, தந்தையின் பெயரைக் கூட தெரிந்து வைத்திருக்காமல்  இருப்பதுதான் அவளுக்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது. பள்ளியைத் தாண்டி கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் சமயம் இது இன்னும் பூதாகரமாக வெடித்தது.


பள்ளியில் படித்தவரை இந்த அந்தஸ்து பேதம், போட்டி பொறாமை போன்ற எதையுமே அவள் அறிந்ததில்லை.


ஆனால் கல்லூரியில் சேர்ந்த பிறகு ஜாதிய பெருமை, பணச் செருக்கு, யார் பெரியவர் என்ற போட்டி, எல்லாமே பூதாகரமாகத் தோன்றி அவளைப் பயமுறுத்தியது.


இவளைத் துன்பப்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற நோக்கமெல்லாம் இருக்க வேண்டும் என்பது கூட இல்லை, வெகு சாதாரணமாகப் பெற்றவனைப் பற்றி உடன் படிப்பவர் யாராவது கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் கூனிக்குறுகும் பொழுது மல்லியின் மேல் அளவு கடந்த கோபம் வரும்.


சிலர் இதை இயல்பாகக் கடந்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தில் அவளை இறக்கிக் காண்பிக்க முயலும் ஒரு சிலருக்கு இவளது இந்த நிலை ஒரு கூர்மையான ஆயுதமாகிப் போனது.


இதன் பொருட்டு தாய் மகளுக்குள் உண்டாகும் பிணக்குகளுக்குத் தீர்வே இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.


அம்மாவின் மேல் உள்ள கோபத்தைத் தீர்த்துக் கொள்ள அவளுக்குப் பிடிக்காத எதையெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தாள் ஸ்வரா.


அவளுடைய கடன் அட்டையை எடுத்து போய், நண்பர்களுடன் சேர்ந்து கண்டபடி செலவு செய்வது, ஊரைச் சுற்றிவிட்டு நேரம் கெட்ட நேரத்திற்கு வீட்டுக்கு வருவது. படிப்பில் கொஞ்சம் கூட கவனம் செலுத்தாமல் அரியர்ஸ் வைத்து அவளைக் கல்லூரி வரை இழுத்தடிப்பது என ஒரு வரையறை இல்லாமல் அவளது ஆட்டம் போய்க் கொண்டிருந்தது.


ஒவ்வொன்றுக்கும் பொறுத்து போய் இதமாக பேசியோ அல்லது வன்மையாக கண்டித்தோ அவளுக்குப் புரிய வைக்க முயல்வாள் மல்லி. கூடவே, சமயத்திற்குத் தகுந்தாற் போன்று மல்லியின் பக்கமோ அல்லது ஸ்வராவின் பக்கமோ நின்று சூழ்நிலையைக் கையாளுவார் அல்லி.


அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல பார்ட்டி என்கிற பெயரில் மேல்தட்டு பிள்ளைகளுடன் சேர்ந்து போய் அவள் குடித்துவிட்டு, போதையில் வாகனத்தை வேறு ஒட்டி, போக்குவரத்து காவலரிடம் பிடிபட்டு விட, மல்லிக்குத் தகவல் வந்தது.


அந்த இரவு ரோந்துக் காவல் குழுவில், இவளது நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணின் கணவர் பணியில் இருந்ததால் இவளை அழைத்துச் சொல்லி பிரச்சனை பெரிதாகாமல் பார்த்துக் கொண்டார். அவளுடைய பழைய கசந்த அனுபவங்கள் நினைவில் வர, நடுநடுங்கிப் போய்விட்டாள் மல்லிகா.


சூழ்நிலை உணர்ந்து, பகலவன்தான் போய், போதையில் ஆட்டமாக ஆடிக் கொண்டிருந்தவளைப் பத்திரமாக அழைத்து வந்தான். அவனுக்கே அவளுடைய இந்த மாற்றம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.


நேராக இழுத்து வந்து அல்லியிடம் அவளை ஒப்படைத்து விட, குளிர்ந்த நீரை அவள் தலையில் ஊற்றி அவளைத் தெளிய வைத்தார். அவளை உடைமாற்றி வரச் செய்து, தானே அவளது தலையைத் துவட்டி விட்டு, ஏதோ கஷாயம் ஒன்றைத் தயாரித்து பலவந்தமாகக் குடிக்க வைத்து அதன் பின்னே தன்னுடனேயே உறங்கும்படி பார்த்துக்கொண்டார்.


அதீத முன்னெச்சரிக்கையுடன் அம்மாவையும் மகளையும் நேருக்கு நேர் சந்திக்கவே விடவில்லை அவர்.


அடுத்த நாள் காலை வழக்கம் போல குளித்துத் தயாராகி உணவுக் கூடம் நோக்கி அவர் வர, முகத்தில் எந்த சகலனமும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து ஏதோ கோப்பைப் புரட்டியபடி அருகில் அமர்ந்திருந்த பகலவனோடு உரையாடிக் கொண்டிருந்தாள் மல்லிகா.


தனக்காகவும் ஸ்வராவுக்காகவும் சாப்பிடாமல் காத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.


எப்படியும் தன் மேல் விழுந்து பிடுங்குவாள் என்கிற எதிர்பார்ப்போடு தயாராகவே அவர் வந்திருக்க காற்று போன பலூன் போல் ஆகி எதிரில் வந்து அமர்ந்தார்.


அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தங்கள் வேலையில் மூழ்க, எல்லோரையும் எடை போடும் ஒரு பார்வை பார்த்தபடி, எதுவுமே நடக்காதது போல நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக்கொண்டு பூனை போல அவருக்கு அருகில் வந்து  உட்கார்ந்த ஸ்வரா, "என்ன அம்மம்மு, இந்நேரத்துக்கு இங்க ஒரு பூகம்பமே வெடிச்சிருக்கும்னு எதிர்பார்த்து வந்தா உன் பொண்ணு இவ்வளவு கூலா உட்கார்ந்து ஆஃபீஸ் வேலைய பாத்துட்டு இருக்கு" என்று வியந்து காதில் கிசுகிசுத்தாள்.


'உன் பொண்ணு' என்கிற வார்த்தையை அவள் பிரயோகித்தால் அப்படியே உச்சி குளிர்ந்து கரைந்து உருகிப் போய்விடுவார் அல்லி. ஆனால் அன்று அநியாயத்திற்கும் அவளை முறைக்க, "ஐயோ பயமா இருக்கு" என்று வேறு அவரை பகடி செய்ய,


"என்னடி உன்ன உங்க அம்மா கிட்ட கோர்த்து விடவா" என்று அவர் கடுப்புடன் மொழிய,


"தெய்வமே தெரியாம செஞ்சிட்டேன். என்ன விட்டுடு" இன்று பயந்தவள் போல இறங்கி வர, அதுவரை அமைதியாக பொறுமை காத்த பகலவன் அவளை நன்றாக முறைத்து வைத்தான்.


அவனைப் பார்த்து, 'கூல்' என உதட்டை அசைத்துக் கண்ணடித்தாள்.


"இருடி உனக்கு இருக்கு" எனச் சுட்டு விரல் காட்டி அவளை அவன் எச்சரிக்க, கோப்பிலிருந்து தலையைத் தூக்கி மகளை ஏறிட்ட மல்லி, மேற்கொண்டு ஏதும் பேசாமல் அதை மூடி வைத்துவிட்டு உணவைத் தட்டில் போட்டுச் சாப்பிடத் தொடங்கினாள்.


அதன்பின் மற்றவரும் சாப்பிடத் தொடங்க, "அல்லிம்மா, ஆஃபீஸ்க்கு ஒரு ரெண்டு மணி நேரம் லேட்டா வரேன்னு சொல்லி திலகா கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டேன்" என்று சொல்லவும்,


"ஏங்கண்ணு, சூரத்ல இருந்து யாரோ சப்ளையர் வராங்க, நேர்ல மீட் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தியே" என்று அல்லி கேள்வி எழுப்ப,


"அத திலகாவும் பகலவனும் பார்த்துப்பாங்க. இன்னைக்கு எனக்கு முக்கியமா ராஜி கிட்ட சில விஷயத்தைப் பேசித் தெளிவுப் படுத்தனும்" என்று முடிவாகச் சொல்லிவிட்டு எழுந்து போய் கைக் கழுவி வந்தாள்.


அதற்குள் மற்றவரும் சாப்பிட்டு முடித்திருக்க வரவேற்பறையில் வந்து அமர்ந்தனர்.


அங்கே சமையல் வேலை செய்யும் சுசீலா எல்லோருக்கும் தேனீர் கொண்டு வந்து கொடுக்க, அதைப் பருகியபடியே அலுவலக சம்பந்தமாக சில விஷயங்களைத் தெளிவுப் படுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டான் பகலவன்.


மற்ற மூவரும் அங்கே தனித்துவிடப்பட, குறுகுறு வென்று அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்வரா, அவள் தன்னை ஏதாவது கேள்வி கேட்டால் சொல்வதற்கு ஏதுவாக அடாவடித்தனமான சில பதில்களை யோசித்தபடி.


ஆனால் அப்படி எந்தக் கேள்வியும் மகளை நோக்கிக் கேட்டு விடவில்லை மல்லிகா. தான் சொல்ல வரும் விஷயத்தைத் தெளிவாக அவளிடம் எப்படி சொல்லிப் புரிய வைப்பது என்கிற குழப்பமே அவளிடம் மேலோங்கி இருந்தது.


எங்கே தொடங்குவது? எப்படி சொல்லி முடிப்பது? என்கிற தீவிர யோசனையுடன், "லவ் ஃபாமிங், பத்தி கேள்விப்பட்டிருக்கியா, ராஜி?" என்ற கேள்வியை அவளின் முன் வைத்தாள்.


சம்பந்தம் இல்லாமல் அம்மா பேசியதில் கலவரமாகி, நெற்றி சுருங்கியவள், 'இல்லை' என்பதான உதடு பிடிக்கலுடன் தன் கைபேசியை எடுத்தாள், அதைப்பற்றி கூகுள் செய்ய.


இதற்கிடையில், "எம்பாமிங் தெரியும், நம்ம முதல்வர் அம்மா இறந்து போனாங்கல்ல, அப்ப கேள்விப்பட்டு இருக்கேன். இது என்ன லவ் ஃபாமிங்" என ஆர்வம் தாங்காமல் அல்லி இடைப்புக,


"ஐயோஅல்லிம்மா, நீ வேற. நடுவுல சம்பந்தமே இல்லாம எதையாவது கேட்டு டைவர்ட் பண்ணாத. ம்ஹும், நீ இங்க இருந்தா என்ன பேசவிடாம ஏதாவது கேள்வி கேட்டுட்டே இருப்ப, வெளியில- பகலவன் இருந்தான்னா அவன் கூடவே கிளம்பி நீ ஆஃபீஸ் போ. நான் இவ கிட்ட பேசி முடிச்சுட்டு வரேன்" என்று கட்டாயப்படுத்தி அவரை அங்கிருந்து அனுப்பிவிட்டு மகளின் கைப்பேசியைப் பிடுங்கி சோஃபாவின் மீது எறிந்தவர்,


"இவ்வளவு நாள் இத பத்தி எல்லாம் எதுவும் தெரிஞ்சுக்காம இருந்துட்டு இப்ப நான் கேட்டதுக்கு அப்புறம் பார்க்கப் போறியா?" என்கிற கண்டனத்துடன், "நீ இதுக்காக ரொம்ப மெனக்கெட வேண்டாம், நானே இதைப் பத்தி சொல்றேன்" எனத் தொடர, ஏதோ நீண்ட பிரசங்கம் செய்யப் போகிறார் என்கிற அசிரத்தையுடன், பிடிக்கிறதோ இல்லையோ அம்மா சொல்வதைக் கேட்கத் தொடங்கினாள் ஸ்வரா.


"எதிராளியை சைக்காலஜிக்கலா அடிமைப்படுத்த உபயோகப்படுத்துற ஒரு மாதிரியான டேக்டிஸ்தான் இந்த லவ் ஃபாமிங். இத யார் வேணாலும், யார் மேல வேணாலும், அப்ளை பண்ணலாம். ஆண்கள்தான் பெண்ணுங்களுக்காகச் செய்வாங்க அப்படின்னு எதுவும் கிடையாது. ஆனாலும் காதல்ன்ற பேர்ல செக்ஸுக்காக பொண்ணுங்கள தங்களோட வலைல விழ வைக்க ஆண்கள் சுலபமா கையில எடுக்கிற ஒரு ஆயுதம் இது”


“ம்மா… வேணாம்! இந்த குட் டச்… பேட் டச்… லெக்சர் எல்லாம் கேட்கற மூட்ல நான் இல்ல” என வெட்டுவது போல் சொல்லிவிட்டு ஸ்வரா எழுந்துகொள்ள, உக்கிரமாக அவளை முறைத்தவள், “ஹவ் அடமென்ட் யூ ஆர் ராஜ், நேத்து நீ பண்ண வேலைக்கு உன்ன நான் இவ்வளவு சாஃப்டா ஹேண்டில் பண்றனே அந்தத் திமிரா? போலிஸ் ஸ்டேஷன், ஜெயில் இதெல்லாம் எப்படி இருக்கும்னு ஒரு தடவ பார்த்துட்டு வரியா?” எனக் காய்ந்தவள், “இப்படி ரூடா பிஹேவ் பண்ணாம மரியாதையா உட்காரு” என அதட்டல் போட, முகத்தைச் சுளித்தபடி பட்டென அமர்ந்தாள் மகள்.


“நான் பேசி முடிக்கற வரைக்கும் இந்த இடத்தை விட்டு நகரக் கூடாது” என்கிற எச்சரிகையுடன் தொடர்ந்தாள் தாய்.


“எஸ்… லவ் ஃபாமிங்… ஒரு பெண்ணைத் தன்னுடைய இச்சைக்கு இணங்க வைக்க, அவங்கள தேடித் தேடிப் போய் பேசறது, இன்னைக்கு காலகட்டத்துக்கு ஏத்த மாதிரி சொல்லனும்னா, அடிக்கடி ஃபோன் செய்யலாம், டெக்ஸ்ட் மெசேஜஸ் அனுப்பலாம், அந்த மாதிரி வச்சுக்கோயேன். தென், அவங்களுக்குப் பிடிச்ச மாதிரியே நடந்துகிறது, எந்த மாதிரி கிஃப்ட் கொடுத்தா அவங்க ரொம்ப அட்ராக்ட் ஆவாங்கன்னு தெரிஞ்சி அதைக் கொடுக்கறது, அப்படியே அதிகமா அன்பைப் பொழியரது… இது போலதான் தொடங்குவாங்க.


அதாவது அன்பு, காதல் இந்த மாதிரி பேர் சொல்லி ஒருத்தங்கள எமோஷனலி, சைக்கலாஜிக்கலி சுலபமா அடிமைப்படுத்துற ஒரு ஈஸி அப்ரோச்.”


”இது என்னன்னு தெரியாமயே ஒரு எமோஷன்ல இதைச் செய்றவங்க பலர் இருக்காங்க. ஆனா தன்னோட தேவையை நிறைவேத்திக்க தெரிஞ்சே பிளான் பண்ணி செய்றவங்க நிறைய பேர் இருக்காங்க. இதுல பொதுவா ஒரு சில டெக்னிக்ஸ கையாளுவாங்களாம்.”


”இத, நார்சிசிச்டிக் லவ் ஃபாமிங் டெக்னிக்ஸ்..ன்னு சொல்றாங்க. இதுல மூணு ஸ்டேஜ் இருக்கு. இன்டென்ஸ் ஐடியலைசேஷன், டீவேல்யூ, டிஸ்கார்ட் ஆர் ரிபீட்”


“ஓ” என வியந்தவள் சற்று ஆர்வம் காண்பிக்கத் தொடங்கினாள்.


“அதுல பர்ஸ்ட் ஸ்டெப், இன்டென்ஸ் ஐடியலைசேஷன்… இது ஒரு தீவிர மனப்பான்மை. அதாவது ஒருத்தர புடிச்சு போய் டார்கெட் பண்றாங்கன்னா, அவங்கள அதீதமா ப்ரைஸ் பண்ணிப் புகழ்ந்து தள்ளுவாங்க. அவங்க குறை எதையுமே கண்டுக்கவே மாட்டாங்க. அதே மாதிரி தான்தான் உலகத்துலேயே பெஸ்ட்ன்னு ப்ரொஜெக்ட் பண்ணுவாங்க. தன்ன பத்தின ஒரு சின்ன குறை கூட எதிராளிக்குத் தெரியாம பர்ஃபெக்டா மெயின்டைன் பண்ணுவாங்க”


வியப்புடன் விழி விரித்துக் கேட்கத் தொடங்கினாள்.


“பார் எக்சாம்பிள், அவங்க உன்ன டார்கெட் பண்றங்கன்னு வெச்சிக்கோ, உன்ன பத்தின எல்லா தகவல்களையும் டாப் டு பாட்டம் தெரிஞ்சுக்க ட்ரை பண்ணுவாங்க. அப்ப, அவங்க உன் மேல காமிக்கறங அதீத ஆர்வம் இருக்கு இல்லையா, அது இன்னும் உன்ன அட்ராக்ட் ஆக வைக்கும். அதுக்கு நீ பதில் சொல்ல விருப்பப்பட்டாலும் சரி விருப்பப்படலன்னாலும் சரி பேசிப் பேசியே உன் வாயில இருந்து எல்லா விஷயங்களையும் பிடுங்கிடுவாங்க. நீ பேசின வார்த்தைகளையே ஒரு ஆயுதமா வச்சு அவங்க எதிர்காலத்துல பிளாக் மெயிலும் செய்வாங்க.


அடுத்ததா தன்னைப் பத்தின நிறைய தகவல்களைச் சொல்லுவாங்க. பெரும்பாலும் அது அவங்க மேல உனக்குப் பரிதாபம் வரவெக்கற மாதிரிதான் இருக்கும். லைக் அவங்கள யாருமே கேர் பண்ணல, குடும்பத்துல அவங்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கல அந்த மாதிரி பேசுவாங்க.


உன் வாயாலயே நீ அவங்கள எந்த அளவுக்கு விரும்பற அப்படிங்கற விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லணும்னு எதிர்பார்ப்பாங்க. ஜஸ்ட் அத அடிக்கடி அவங்க கன்ஃபார்ம் பண்ணிக்கிறாங்கன்னு அர்த்தம்.


அடுத்ததா அவங்க காதல அடிக்கடி உன் கிட்ட தெரியப்படுத்தி அதை உறுதிப்படுத்திட்டு இருப்பாங்க, உன் மைண்ட் வேற எங்கேயாவது டைவர்ட் ஆகாம இருக்க.


உன் மேல அதிகமா உரிமை எடுத்துப்பாங்க. நீ வேற யாரோடவாவது க்ளோசா இருந்தா பொறாமை படுவாங்க. முக்கியமா அத வெளிப்படையா காமிப்பாங்க. அதை நினைச்சு நீ கில்ட்டியா ஃபீல் பண்ற அளவுக்கு நடந்துப்பாங்க.


இதுல ஒரு மாதிரி அவங்க ரொம்ப தீவிரமா இருப்பாங்க. ஒரு ஸ்டேஜ்ல நீ அவங்களுக்கு, அதாவது அவங்க காதலுக்கு அடிமையா மாறிடுவ, லைக் அ பப்பட். அவன் எப்படி உன்ன யூஸ் தட் இஸ் அப்யூஸ் பண்ணாலும் அதை நீ உணரக் கூட மாட்ட, தப்பு, சரி, நம்ம குடும்பம், இந்தச் சமுதாயம், நம்ம எதிர் காலம் எல்லாமே… எல்லாமே மறந்து போயிடும்.


இந்த நேஷனல் ஜியாக்ரபிக் சேனல்ல, சிங்கம் ஒரு மான வேட்டையாடி கழுத்துல கவ்வி பிச்சு இழுத்துட்டுப் போறத பார்த்திருக்க இல்ல, அப்ப அந்த மான் எதுவுமே செய்யாம அப்படியே ஒரு மயக்க நிலைல இருக்குமே, அப்படி ஒரு நிலைல அவனோட செக்ஷுவல் அக்டிவிடீஸ்க்கு எந்த ஒரு எதிர்ப்பும் காமிக்காம நீ உடன்படுவ”


“ஓ மை காட், மா இதுல நீ… நீன்னு என்னை ஏன் சொல்ற?” என்று அவள் பதற,


“சாரி ராஜ், நான் உன்ன சொல்லல, நீன்னு என்னை நானே சொல்லிக்கறேன்னு வெச்சுக்கோ. இதெல்லாம் நான் ஜஸ்ட் படிச்சு தெரிஞ்சிட்ட விஷயம் இல்ல, நேரடியா அனுபவிச்சது. இதை நான் என் லைஃப்ல பிராக்டிகலா எக்ஸ்பீரியன்ஸ் பண்ணப்ப, பிஸ்கட்டுக்கு வாலாட்டற ஒரு நாய் மாதிரி, அவனோட காதலுக்கு விசுவாசமா இருந்தேன், அப்ப எனக்கு ஜஸ்ட் சிக்ஸ்டீன் இயர்ஸ்தான்” என உணர்வற்ற குரலில் மல்லி சொல்ல, அப்படியே உலுக்கிவிட்டது ஸ்வராவை.


தன் தகப்பனைப் பற்றித்தான் சொல்ல விழைகிறாள் என்பது மண்டைக்குள் உரைக்க, பதறிபோய், “அம்மா” என்று அலறியபடி அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்துவிட்டாள்.


“எமோஷன் ஆகாத ராஜ், நான் சொல்றத முழுசா கேட்டு முடிச்சிட்டு நீயே ஒரு தெளிவான முடிவுக்கு வா” என்று மல்லி உரைக்க, தன்னைக் கட்டுப்படுத்தி அமைதியாக கவனிக்கத் தொடங்கினாள்.


“அடுத்த ஸ்டேஜ் டீவேல்யூ” என்று சொல்லி, “டீவேல்யூன்னா என்னன்னு புரியுதா, ஒருத்தர மதிப்பிழக்க வெக்கறது” என்று விளக்கம் தர, உணர்ந்து தலையசைத்தாள் மகள்.


“ரொம்ப தந்தரமா உன் சுயமரியாதையை அடியோட அழிக்கறது. இதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. ஒண்ணு அவனோட ஆதிகத்த உன் மேல நிலைநாட்ட. இன்னும் ஒண்ணு, நீ அங்க இங்க தப்பிச்சு ஓடவே நினைக்கக் கூடாது, உன்னோட ஒரே சாய்ஸ் அவனா மட்டும்தான் இருக்கணும்.


உன் பயலாஜிகல் பாதரோட அந்த அப்ரோச்லதான் நான் உன்னை கன்சீவ் ஆனேன், ஈவன் கல்யாணம் கூட செஞ்சுக்காம” என்று சொல்ல பேச்சற்று உறைந்துபோய் அமர்ந்திருந்தாள் ஸ்வரா.


“நீதான உன் அப்பாவ பத்தி தெரிஞ்சுக்க துடிச்ச, இப்ப இது உனக்கு ரொம்ப ஈசியா இருக்கா, ராஜ்?” என்று சலிப்புடன் கேட்டு, நீரால் நிரம்பிய விழிகளைத் தன் புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டாள் மல்லி.


“அடுத்த ஸ்டேஜ், டிஸ்கார்ட் ஆர் ரிபீட்… ஒண்ணு அந்த ரிலேஷன்ஷிப்ப நீயே ப்ரேக் பண்ணும், இல்ல இந்த டாக்சிக் அப்ரோச்ச சகிசிட்டு இந்த ரிலேஷன்ஷிப்ப தொடரணும். அந்த நிலைமைக்கு உன்ன கொண்டு வந்து நிறுத்திடுவான்.


இந்த ஸ்டேடர்ஜியும் என்கிட்ட அவன் ட்ரை பண்ணான். தட் இஸ், உனக்கான உரிமைக்காக நான் அவனைத் தேடி போனப்ப, எனக்கு வேற ஆப்ஷனே கிடையாதுன்னு நினைச்சு என்னை அவனுக்கு கூ**யாளா இருக்க சொன்னான்! அப்படின்னா என்னன்னு உனக்குத் தெரியாதா என்ன? டீசண்டா சொன்னா சின்னவீடு? அந்த மொமென்ட்தான், இனி இந்த நாயோட முகத்துலயே முழிக்கக் கூடாதுன்னு நான் முடிவு பண்ணேன்"


"மா அப்படின்னா அந்த ஆளுக்கு ஏற்கனவே" என அதற்கு மேல் கேள்வி கேட்கக் கூட பிடிக்காமல் அதிர்ச்சியுடன் ஸ்வரா இழுக்க,


"இல்ல, என் நிலைமை தெரிஞ்சும் வீட்ல பார்த்த பொண்ண, சொத்துக்காக கட்டிக்கிட்டான். என்னையும் அவனால விட முடியல.


ஒரு விதத்துல அவன் இத ரிப்பீட்தான் பண்ணதான் டிரை பண்ணான். ஆனா நான்தான் டிஸ்கார்ட் பண்ணேன்"


"பின்ன, போயும் போயும் இதுக்கு யாராவது சம்மதிப்பாங்களா" என்று ஸ்வரா கொந்தளிக்க,


"உனக்குத் தெரியாது ராஜ், எங்க அம்மாவோட வளர்ப்புதான் அந்த நேரத்துல என்ன அப்படி தன்மானத்தோட சிந்திக்க வெச்சுது. மத்தபடி அங்க இதெல்லாம் ரொம்ப சகஜம். வசதி வாய்ப்பு இருக்கிற ஆம்பளைங்களுக்கு இரண்டு குடும்பம் மூணு குடும்பம் அப்படிங்கதெல்லாம் அங்க சர்வ சாதாரணம்.


பணம் காசு, நகை நட்டுக்காகவும் ஆசைப்பட்டோ, இல்ல ஏமாந்து போய் பிழைக்க வேற வழி இல்லாம நிக்கிறதாலையோ பொம்பளைங்க இதையெல்லாம் சகிச்சுட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாங்க போலிருக்கு.


ஆனா ஊருக்குள்ள அவங்களுக்கு ஒரு மரியாதையான இடம் என்னிக்குமே கிடைக்காது. எனக்கு வேற வழியில்லன்னு சொல்லி நானும் அவனுக்கு உடன்பட்டு இருந்தன்னா, நீ இப்ப கேக்குற இதே கேள்வியதான் அப்பவும் கேட்டிருப்ப. கூ**யா பெத்த பொண்ணுன்ற பேருதான் நின்னிருக்கும். உனக்கான அங்கீகாரம் கண்டிப்பா கிடைச்சிருக்காது.


இப்ப உன்னோட பிறப்புக்குக் காரணம் யாருன்னு தெரியாம என் கிட்ட சண்டைப் போட்டுட்டு இருக்க. அப்படி நடந்து இருந்தா தெரிஞ்சிருந்தாலும் சண்டைதான் போட்டுட்டு இருந்திருப்ப.


இப்படி உன்ன பெத்து போட்டு சமுதாயத்துல கஷ்டப்பட வைக்கணும்னு நான் நினைக்கல. அன்னைக்கு நிலைமைல என்னால வேற எதுவுமே செய்ய முடியல.


அப்ப எனக்கு நல்லது கேட்டது புரிஞ்சிக்கற வயசும் இல்ல. பக்குவமா இதைக் கையாள என் கூட இருந்தவங்களுக்கும் தெரியல. ஒன்லி ஆப்ஷனா உன்னைப் பெத்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு, உன்ன நல்லபடியா வளர்த்து ஆளாக்கணுங்கற வைராக்கியத்தைத் தவிர என் வாழ்க்கைக்குள்ள வேற எதுவுமே இல்ல.


எவ்வளவோ அசிங்கத்தையும் அவமானத்தையும் கடந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். என்னோட இந்த வளர்சிய நீ பக்கத்துல இருந்துதான பார்த்துட்டு இருந்த.


ஒரு வேளை அவன முறையா கல்யாணம் செஞ்சிட்டு உன்னைப் பெத்திருந்தா கூட, என்னால இவ்வளவு உயரமெல்லாம் வளர்ந்திருக்க முடியாது.


ஆனா இப்ப, எனக்குன்னு ஒரு பெரிய ஆடையாளத்த ஏற்படுத்திட்டு இருக்கறதோட உனக்குன்னு ஒரு குட்டி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வெச்சிருக்கேன்.


வெளி உலகத்துக்கு மல்லிகாவோட பொண்ணுன்னு சொல்லிக்க உனக்கு வேணா கேவலமா இருக்கலாம், உன்ன பத்தி ஒரு ஊசி முனை அளவுக் கூட கவலைப் பாடாத ஒருத்தனோட பேர இனிஷியலா போட்டுக்க நீ துடிக்கலாம், ஆனா உன்னைப் பெத்ததுக்காக நான் என்னைக்குமே வருத்தப்பட்டதில்ல” என்று சொல்லிவிட்டு, புடவை முந்தானையைச் சுருட்டி வாயில் வைத்து அடைத்தபடி, வயிற்றிலிருந்து பீறிட்டு கிளம்பிய கேவலை அவள் கட்டுபடுத்த,


“சாரிம்மா… ரியலி ஐ ஆம் சாரி. யூ ஆர் தி பெஸ்ட் மாம் இன் த வேர்ல்ட். நான் உன்ன கொஞ்சம் கூட புரிஞ்சிக்க ட்ரை பண்ணல. ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு” என அப்படியே அவளை அணைத்துக் கொள்ள, சரிந்து மகளின் மடியில் முகம் புதைத்தாள் மல்லிகா. அவள் தன் உணர்வுகளை அடக்கப் போராட, மகளின் ஒரு கரம் ஆதரவாக அந்தத் தாயை அணைத்துப் பிடித்திருக்க மறுகரம் இவளது கூந்தலை இதமாக வருட, அவளிடம்தான் தேடிக் கொண்டிருந்த தன் தாய் ராஜத்தை அந்த நொடியில் உணர்ந்தாள் மல்லிகா.


'அம்மா'' என்கிற கேவல் அவளிடமிருந்து வெடித்துக் கிளம்பியது.



9 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page