top of page

Kaattumalli - 9

Updated: Jan 2

மடல் - 9


ஐப்பசி மாதத்தின் ஒரு அழகான மாலை நேரம் அது. மல்லிகா பிரியா என அக்கா தங்கைகள் இருவருக்குமாகச் சேர்த்து ஒரே செலவில் பூப்புனித நீராட்டு விழா செய்வதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தேறிக் கொண்டிருந்தது.


வீதியை அடைத்துப் போடப்பட்டிருந்த பந்தலின் கீழே, அவர்கள் இருவரையும் உட்கார வைக்க, வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த இரண்டு அலங்கார நாற்காலிகள் தயாராக இருந்தன.


அருகில் இருந்த காலி மனையைச் சுத்தம் செய்து சாமியானா பந்தல் போடப்பட்டிருக்க, வரிசையாக உணவுப் பந்தி மேசைகளும் இணையாக நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. அங்கேயே பின்பக்கமாகக் கீத்துக் கொட்டகை போடப்பட்டு தடபுடலாகக் கறி விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.


வந்திருந்த விருந்தினர் எல்லாம் இங்கேயும் அங்கேயுமாகக் குழுமி பேசிக் கொண்டிருக்க, எல்லோரையும் வரவேற்றபடி பரபரப்பாக மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் குணா.


ராஜம் ஒரு பக்கம் இங்கேயும் அங்கேயுமாக ஓடிக்கொண்டிருக்க, எந்த ஒரு வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாத படிக்கு பாக்கியம் அவளை அதட்டி ஒவ்வொரு வேலையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.


அவள் பக்க உறவினர்கள் எல்லாரும் வந்திருக்க, அவளுடைய அக்காவும் தங்கைகளுமாகச் சேர்ந்து இரண்டு பெண்களுக்கும் அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.


மூத்தவள் மல்லிகா வயதுக்கு வந்து இரண்டு வருடங்கள் முடிந்திருந்தாலும் சின்னவள் பிரியா பூப்படைந்ததும் இருவருக்கமாக சேர்ந்து இந்த விழாவை செய்து விடலாம் என முடிவெடுத்திருந்தார்கள். முடிந்தவரை தள்ளிப் போடலாம் என்கிற எண்ணம்தான்.


சில தினங்களுக்கு முன் பிரியாவும் பெரிய மனுஷியாகிவிட நாள் குறித்து இதற்கான ஏற்பாட்டைச் செய்து விட்டான் குணா.


கொஞ்ச நஞ்ச செலவு கிடையாது. கடன் வாங்கித்தான் அத்தனையும் செய்தாகிறது. இதெல்லாம் தேவையில்லை வீட்டோடு முடித்துக் கொள்ளலாம் என ராஜம் சொன்னதற்கு, "உங்க குடும்பம் மாதிரி வக்கத்த ஆளுங்கன்னு எங்கள நெனச்சிட்டியா, உங்க வீட்டுலதான் உனக்கு இதெல்லாம் செய்ய நாதி இல்லாம கல்யாணத்துக்கு முந்தின நாளு நலங்கு வைக்கிறதோடு சேர்த்து முடிச்சுக்கிட்டாங்க. அது மாதிரி நாங்க செய்ய முடியுமா? என் புள்ள ஊர்ல தலை நிமிந்து நடக்க வேணாம்? இதெல்லாம் யோசிச்சிதான் பொட்ட புள்ளையே பொறக்கக் கூடாதுன்னு சொல்றோம்! யாருக்குப் புரியுது? பொம்பள புள்ளைங்கனாலே செலவ இழுத்து விட பொறப்பெடுத்த ஜென்மங்கதான" என்ன பாக்கியம் ஒரு நீண்ட சொற்பொழிவை ஆற்றி முடித்தார்.


'நீங்களும் ஒரு பொண்ணுதான, அத்தை' எனக் கேட்க உள்ளுக்குள்ளிருந்து உந்தித் தள்ளினாலும் தலையைக் கவிழ்ந்து கொண்டு பேசாமல் இருக்க மட்டுமே முடிந்தது ராஜத்தால்.


தனிமையில் இருக்கும் போது குணாவிடம் சொன்னதற்குக் கூட, "இது என்ன இது பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்க.  என்ன செய்யணும்னு எது செய்யக்கூடாதுன்னு வீட்டுப் பெரியவங்களுக்குத் தெரியாது? அம்மா சொல்றதுதான் சரி. இல்லனா ஊருல ஒரு பய என்ன மதிக்க மாட்டான்" என்று சொல்லிவிட்டான் கறாராக.


அவனிடமெல்லாம் எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட இவளால் பேச முடியாது, அந்தளவுக்கு முரட்டு முன்கோபி. இவனது கோபத்தைத் தூண்டிவிட்டு இவளைப் புண்ணாக்க பாக்கியம் ஒருபக்கம் இருக்கிறார் என்றால் கூடவே மலிவு விலை சாராயமும் இருக்கிறது.


சாதாரணமாக இருக்கும் பொழுது கண்டும் காணாமலும் போனாலும் போவான். ஆனால் பாக்கியம் குதர்க்கமாக எதையாவது கிளறி விட்டாலோ அல்லது சாராயத்தின் போதையில் இருந்தாலோ அவனுடைய கை தாராளமாக நீளும். பிள்ளைகள் இருக்கிறார்களே என்று கூட பார்க்க மாட்டான். சமயத்தில் கையில் வைத்திருப்பதை அவள் மீது வீசியெறிந்து உடலில் காயப்படும் அளவிற்கு வன்முறைத் தாக்குதல் நடத்திவிடுவான். அதற்காக கொஞ்சமும் வருந்தவும் மாட்டான்.


இரவு நேரங்களில் பிள்ளைகளுடன் அவள் உறங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவன் வந்து சீண்டும்போது கட்டாயம் அவனுக்கு உடன்படத்தான் வேண்டும்.


வளர்ந்த பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவனுடன் ஒதுங்க அவ்வளவு அசூயையாக இருக்கும், ஆனாலும் மறுக்க இயலாது. மாதவிடாய் காரணமாகவோ அல்லது நீர்க்கடுப்பு போல ஏதும் வேறு உடல் உபாதைகளாலோ நிர்பந்தமாக மறுக்க நேர்ந்துவிட்டால், அடுத்து வரும் நாட்களில் அந்த ஆத்திரம் அவள் மேல் மொத்தமாக இறங்கும். உட்கார்ந்தால் குற்றம் நின்றால் குற்றம் என்று காது கூசும்படி திட்டுவான். வழக்கம்போல கையும் நீளும். இதையெல்லாம் யாரிடமும் சொல்லிக் கொள்ளவும் முடியாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்குவாள் ராஜம்.


எப்படியோ இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு இந்தப் பிள்ளைகளுக்காக ஓடிக் கொண்டிருக்கிறாள் .


"ம்மா, பட்ட, லவங்கம், ஏலக்காய், சோம்பு அப்புறம் சேமியா பாக்கெட் இதெல்லாம், அங்க சமையல் செய்யறாங்க இல்ல அந்த மாமா கேட்டாங்க" என மூத்தவன் துறை, வந்து அவளிடம் கேட்க, வாங்கி வைத்திருந்த மளிகை சாமான்களில் இருந்து அவற்றை தேடி எடுத்து ஒரு பையில் போட்டு அவனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு மகள்களை முழு அலங்காரத்துடன் பார்க்கும் ஆவலுடன் இரேழியை ஒட்டி இருக்கும் சிறு அறைக்குள் சென்றாள்.


தங்கச் சிலை போல ஜொலித்தனர் இருவரும். அதுவும் மூத்தவள் மல்லிகாவைப் பார்க்கும் பொழுது ஏதோ திரைப்படத்தில் வரும் கதாநாயகியைப் போன்று அவளுடைய மனதிற்கு தோன்றியது. கண்கள் குளமாக இருவருக்கும் நெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள்.


"சரியா செஞ்சக்கா நீ, சாதாரணமா பார்க்கும்போது தெரியல, இப்ப பொடவ கட்டி, பொட்டு வச்சு பூ முடிச்சு நகை எல்லாம் போட்டு அலங்காரம் பண்ண உடனே நம்ம மல்லிய பாரேன், நெடுநடுன்னு ஒயரமா நடிக பானுப்பிரியா மாதிரி இருக்குது" என அவளுடைய தங்கை சொல்ல இப்படிப்பட்ட ஒரு புகழ்ச்சி மல்லிகாவின் மனதிற்குள் ஒருவித கர்வத்தை ஏற்படுத்தியது.


ஒருத்தியை மட்டும் புகழ்ந்து மற்றொருத்தியைப் பற்றி ஏதும் சொல்லாமல் இருந்தால் சும்மா இருப்பாளா? காண்டாகிப் போனவளாக, "சித்தி, அப்படின்னா நான் அழகா இல்லன்னு சொல்றியா?" என  பிரியா சண்டைக்குக் கிளம்ப,


"அய்யய்ய, யாராவது அப்படி சொல்லுவாங்களா செல்லம். உங்க அக்கா பானுப்பிரியா மாதிரி இருந்தா நீ அவ தங்கச்சி மாதிரி இருக்க. எங்க ஊரு பாட்டுக்காரன் படத்துல நடிச்சுதே. அந்தப் பொண்ணும் அழகாதான இருக்கும்" இன்று ராஜதின் அக்கா அவளுக்கு இதமாகப் பதில் கொடுக்க, அந்தத் தாயின் மனம் நிறைந்து போனது.


இத்தனைக்கும் பட்டுப் புடவை கூட எடுக்கவில்லை, புதிதாக வந்திருக்கும் அபூர்வாவோ அபர்ணாவோ ஏதோ சொன்னார்கள். அதில் மகள்களுக்குப் பிடித்த நிறமாகப் பார்த்து எடுத்து வந்திருந்தனர். போட்டு அழகு பார்க்க, தங்க நகைகள் ஏதும் இல்லை. எல்லாம் வாடகைக்கு எடுத்து வந்தவையே. அதில் கூட, பெண்கள் இருவரும் அந்தத் தாயின் கண்களுக்குப் பேரழகிகளாகவே தோன்றினார்கள்.


மகள்களின் ஆசைக்காக குணாவிடம் சிபாரிசு செய்து, புட்டு சுத்தும் நாளன்று, புது பாவாடை தாவணி அணிவித்து தலை அலங்காரம் செய்து சடை தைத்துப் பக்கத்து டவுனில் இருக்கும் ஃபோட்டோ ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று இருவரையும் படம் பிடித்து வந்திருந்தாள்.


தான் பட்ட பாட்டை இந்தப் பெண்கள் படக்கூடாது, இருவரையும் நல்ல படிப்பு படிக்க வைத்து, நல்ல உத்தியோகத்திற்கு அனுப்பி பக்குவப்பட்ட நாகரீகமான பிள்ளைகளாகப் பார்த்து திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே அவளுடைய பேராசை.


அதற்கு மேல் பேசிக்கொண்டு நிற்க நேரமில்லாமல் உறவினர்கள் எல்லோரும் வந்துவிட பெண்கள் இருவரையும்  அழைத்துப் போய் அந்த நாற்காலிகளில் அமர வைத்தனர்.


அவளுடைய பிறந்த வீட்டுச் சார்பில் தாய்மாமன்கள் சீராக, சோப்பு, சீப்பு, கண்ணாடி, பாவாடைத் துணிமணிகள், பூமாலைகள், பழங்கள், இனிப்பு பலகாரங்கள் என இருபத்தோரு வரிசை தட்டுக்கள் அடுக்கினர். அதோடில்லாமல் இருவருக்கும் பவுனில் தோடு ஜிமிக்கியும் போட்டனர்.


அவளுடைய அக்காவும் தங்கைகளும் கூட அவர்களின் சக்திக்குத் தகுந்தபடி வரிசைத் தட்டுகள் வைத்திருந்தனர்.  அக்கா ஒருத்திக்கும் சின்ன தங்கை ஒருத்திக்கும் மோதிரம் போட, பெரிய தங்கை இருவருக்கமாகக் கெட்டி கொலுசுகள் வாங்கி வந்திருந்தாள்.


எல்லா குடும்பத்துக்குள்ளும் இருப்பது போல சிறுசிறு உட்பூசல்கள் கருத்து வேறுபாடுகள் எல்லாமே ராஜத்துக்கும் அவளுடைய உடன் பிறந்தவர்களுடன் குறிப்பாக அண்ணன்களுடன் இருந்தாலும் கூட விட்டுக்கொடுக்காமல் எல்லோருமாக வந்திருந்து நிறைவாக சீர் செய்திருக்க ராஜத்திற்கும் நிம்மதியாக இருந்தது.


எல்லாம் நல்லபடியாக முடிந்து நலங்கு வைத்து அவர்களுக்கு ஆரத்தி எடுக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல்தான் போனது.


அதன் பின்புதான், அவளுடைய ஓரகத்தி அதாவது குணாவின் பெரியப்பாவின் மருமகள், "பரவாயில்ல சின்னத்த, ராஜத்தோட கூட பொறந்தவங்க எல்லாருமே விட்டுக் கொடுக்காம வந்திருந்து நல்லபடியா முறை செஞ்சுருக்காங்க பாருங்க. ஆளுக்கு ஒரு மூலைல அல்லாடிட்டு கிடந்தாலும், நல்ல நாள் பெரிய நாள்ன்னா நல்லா கூடிக்கிறாங்க இல்ல. தோடு ஜிமிக்கி எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அவங்க சக்திக்கு இதுவே கொஞ்சம் அதிகம்தான் இல்ல. எங்க அண்ணன் அருணாவுக்கு செஞ்ச மாதிரி அம்பத்தொரு வரிச தட்டு, பவுனு நெக்லஸூ செட்டு, வளையலு, பட்டுப் பொடவ, இதெல்லாம் இவங்க கிட்ட எதிர்பார்க்க முடியாதுதான" என வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பாக்கியத்தின் நெஞ்சில் நஞ்சைக் கலந்தாள்.


அவளுடைய அதிர்ஷ்டம் அவளுக்கு மூத்தது இரண்டும் ஆண் பிள்ளைகளாகிப் போக, மூன்றாவதாகத்தான் அருணா. அதன் பிறகு அவள் குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டாள். பிறந்த வீட்டிலும் நல்ல வசதி. ஏற்கனவே பிரிக்கப்படாத சொத்துக்களால் இரு குடும்பங்களுக்குள்ளும் நீரு பூத்த நெருப்பாக பகைமை கனன்று கொண்டே இருக்க, அருணாவை விட அழகாகக் கண்ணுக்குப் பளிச்சென்று இருக்கும் மல்லிகாவையும் பிரியாவையும் பார்த்து அவளது வயிறு எரியும்.


ராஜத்தின் காதில் படும்படியாகவே, ‘கருப்புக்கு நகப் போட்டு கண்ணால பாக்கணும், செவப்புக்கு நகப் போட்டு செருப்பால அடிக்கணும்’ என அடிக்கடி சொல்லி அவளுடைய வயிற்றெரிச்சலை நன்றாகவே கொட்டிக் கொள்வாள்.


தன் ஆத்திரத்தையெல்லாம் இவ்வாறு பேசிப் பேசியே அவள் தணித்துக் கொள்ள, ஏற்கனவே கள் குடித்த குரங்காக இருக்கும் பாக்கியத்தை இப்படி ஒரு தேள் வேறு கொட்டி வைக்கவும், மகனைக் கூப்பிட்டு அவன் காதில் ஏதோ மந்திரத்தை ஓதி விட்டார்.


அவ்வளவுதான் அதன் பிறகு அவன், தன் மைத்துனர்களைப் பேசிய குதர்க்கமான வார்த்தைகள் வாய்த் தகராறில் கொண்டு போய் நிறுத்த, யார் பக்கம் பேசுவது எனத் தெரியாமல் ராஜம் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாட, அண்ணன் தம்பிகளிடம் ஏச்சுப் பேச்சும் குணாவிடம் அடி உதையும் அவளுக்குத் தாராளமாகக் கிடைக்க, அந்த விழா இனிதே நிறைவு பெற்றது.


அவள் பிறந்த வீட்டிலிருந்து வந்தவர்கள் யாரும் ஒழுங்காக ஒரு வாய் சோறு கூட சாப்பிடாமல், சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட, அழுதழுது முகம் சிவந்து போய் தனியே உட்கார்ந்திருந்த பேத்திகளைத் தேடிக் கண்ணீரும் கம்பலையுமாய் வந்த ராஜத்தின் அம்மா தன் கைப்பையில் இருந்து ஒரு பழைய பட்டுப் புடவையை எடுத்து மல்லிகாவிடம் கொடுத்துவிட்டு, "இது என் மாமியாரோட கல்யாண புடவை, என் மொத பேத்தி உனக்குக் கொடுக்கணும்னு ஆசையா எடுத்து வச்சிருந்தேன். பழசுதான் கண்ணு ஆனா இதுல பெரியவங்க ஆசீர்வாதம் இருக்கு. இத மாத்தி மாத்தி ரெண்டு பேரும் கட்டிக்கிட்டாலும் சரி இல்ல கிழிச்சு பாவாடையா தெச்சு போட்டுட்டாலும் சரி இந்தக் கிழவிக்கு சந்தோசம்தான். இந்தக் காலம் போன காலத்துல ஏதோ என்னால முடிஞ்சது" என்று சொல்லிவிட்டு இருவரின் கன்னத்தை வாஞ்சையுடன் தடவி முத்தமிட்டு விட்டு வற்றாத கண்ணீருடன் விடை பெற்றுக் கிளம்பிச் சென்றார்.


"எங்கம்மாவுக்கு எப்ப என்ன செய்யனும்னு ஒரு இங்கிதமும் தெரியாது” என முணுமுணுத்தவள், “இத உங்க பாட்டியோட கண்ணுல படாம எடுத்து வைங்கடி. அப்பறம் அதுக்கு வேற எங்கம்மாவ அசிங்கசிங்கமா பேசுவாங்க"  என்று சொல்லிவிட்டு ராஜம் அவளுடைய அம்மாவின் பின்னாலேயே ஓட அப்பாவையும் பாட்டியையும் நினைத்து நெஞ்சம் கசந்து போனது மல்லிகாவுக்கு. அவளுக்கு இருந்த அளவிற்கான பாதிப்பு பிரியாவுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல நிகழ்வு இப்படி சண்டையும் சச்சரவுடன் முடிந்ததே என்கிற வருத்தம் மட்டுமே. பசி வயிற்றைக் கிள்ளவும் அது முக்கியமாகி போக அங்கிருந்து போய் விட்டாள்.


உறவினரெல்லாம் ஒவ்வொருவராக சாப்பிட்டு கிளம்ப, அவர்களைக் கவனிக்கும் கடமை ராஜத்தை அழுத்த, மனவேதனை முழுவதையும் மிதித்துக் கொண்டு ஒரு இயந்திரத்தைப் போல ஒடிக் கொண்டிருந்தாள்.


அடுத்து வந்த நாட்களிலும் கூட இழிச் சொற்களும், குத்தல் பேச்சுகளும் மாமியார் மற்றும் கணவனின் வாயிலிருந்து விஷமாகக் கொட்டிக் கொண்டிருக்க, ஒருக் கட்டத்தில் தாங்க முடியாமல் போய் இவளும் எதிர்த்துப் பேசி அவன் அறைந்த அறையில் கன்னமே கன்றிப்போனது.


விடுமுறை சமயம் என்பதால் பிள்ளைகள் எல்லாமே வீட்டில் இருக்க, இதையெல்லாம் பார்த்து அரண்டு போய், அப்பா என்பவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் எங்கேயாவது ஓடிப்போய் ஒளிந்து கொள்வார்கள். குறிப்பாகப் பெண் பிள்ளைகள் இருவரும் அவன் எதிரிலேயே வருவதில்லை. சின்னவன் மட்டும் அடிக்கடி அம்மாவைத் தேடி போய் அவளது கன்றிய கண்ணம் தொட்டு வருடி முத்தம் கொடுப்பான்.


அன்றைய பொழுதுக்கு மீண்டும் ஒருமுறை இப்படி அம்மாவை ஆற்றுப்படுத்தியவன் அவரது முகத்தில் தெரிந்த வலியை உணர்ந்தவனாக நேராக மல்லியிடம் வந்து, “அக்கா, போலீஸ் ஆகணும்னா என்னவோ படிப்பு படிக்கணும்னு சொல்லுவியே என்ன அது?” எனத் தீவிரமாக கேட்க,


திடீரென அவன் இப்படி கேட்கவுமே குழப்பமுற்றவள் “அது… ஐபிஎஸ்..ன்னு சொல்லுவாங்கடா, எதுக்கு கேக்கற” என்று வினவ,


"நானு அந்த போலீஸ் படிப்பைப் படிச்சு நம்ம அப்பாவையும் பாட்டியும் புடிச்சு ஜெயில்ல போட போறேன்" என்றான் கண்களில் கனல் மின்ன.


அவனை இழுத்து அப்படியே அணைத்துக் கொண்டவள், "நாம ரெண்டு பேருமே அந்தப் படிப்பு படிச்சு அப்பாவையும் பாட்டியும் மட்டும் இல்ல இந்த மாதிரி பொல்லாத வேலை செய்ற நம்ம ஊர் காரங்க எல்லாரையும் புடிச்சு ஜெயில்ல போடுவோம் என்ன!" என்று தன் தம்பியை அமைதிப்படுத்தினாள் மல்லிகா.


எது எப்படியோ பிள்ளைகளுக்காக ஓடியே தீர வேண்டிய கடமையில் அத்தனை ஏச்சுப் பேச்சுகளையும் விஷ வார்த்தைகளையும் மனதில் ஓரத்தில் குழித் தோண்டிப் புதைத்து விட்டு இயல்பாக நடமாடிக்கொண்டிருந்தாள் ராஜம்.


வீட்டு விசேஷம், தீபாவளிப் பண்டிகை, கொட்டித் தீர்த்த மழை என நீண்ட விடுமுறைகள் முடிந்து பிள்ளைகள் நால்வரும் மூக்கால் அழுது கொண்டே அவரவர் பள்ளிக்கூடத்துக்குச் செல்லத் தொடங்கினர்.


அவர்கள் ஊரில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றால் டவுனில் இருக்கும் பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும்.


மல்லிகா வயதுக்கு வந்த போதே, பேருந்தில் பயணித்து அவ்வளவு தூரம் சென்று படிப்பதென்பது பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பில்லை என்று காரணம் சொல்லி அவளுடைய படிப்பை நிறுத்தி விடலாம் என பாக்கியம் தொடங்கி வைக்க வழக்கம் போல குணாவும் அதற்கு ஒத்து ஊத, எப்படியும் பதினெட்டு வயது ஆனப் பிறகுதான் திருமணம் செய்ய முடியும், அதுவரை அவளை வீட்டில் வைத்திருப்பதை விட பள்ளிக்கு அனுப்புவதுதான் நல்லது. பத்தாம் வகுப்பு வரையிலாவது படிக்கட்டும் என இருவரின் கையில் காலில் விழுந்து கெஞ்சிதான் அவளுடைய படிப்பு தடைப்படாமல் அப்போதைக்குக் காப்பாற்றியிருந்தாள் ராஜம். பத்தாவது பரிட்சையில் நல்ல மதிப்பெண் பெற்று தேறினால் அவளை மேல் படிப்பு படிக்க வைக்கச் சொல்லிப் பேச வழிக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவளுக்கு மலை அளவு இருந்தது.


திரும்பத் திரும்ப இதைச் சொல்லியே மகளை எச்சரித்துக் கொண்டிருந்தாள்.


மல்லியைப் பற்றியும் குறை சொல்வதற்கு இல்லை. கவனமாகப் படித்து நல்ல மதிப்பெண் வாங்குபவள்தான். அதுவும் பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தப் பிறகு இன்னும் முயற்சி செய்து படிப்பில் தன்னை மேம்படுத்திக் கொண்டிருந்தாள்.


எது எப்படியோ தாயின் புண்ணியத்தில் மகள்கள் இருவரின் படிப்பு கெடாமல் இருக்க, நாட்கள் நல்ல விதமாகத்தான் போய்க்கொண்டிருந்தன.


பொது தொலைப்பேசி பூத், சினிமாக் கொட்டகை, வெளியூர்  பேருந்து நிலையம், அரசாங்க உண்டு உறைவிடப் பள்ளி, தனியார் பள்ளிகள், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் என இவர்கள் ஊரை விட நன்கு முன்னேறியதாகவே இருந்தது, இவளும் பிரியாவும் படிக்கும் பள்ளி அமைந்திருந்த டவுன். அந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமாகிக் கொண்டிருந்த கேபிள் டிவியும் டிஷ் ஆன்ட்டனாக்களும் அங்கே வாழும் மக்களுக்கு ஒரளவுக்கு பரிச்சயமாகி இருந்தது.


மல்லியுடன் பள்ளியில் படிக்கும் தோழிகள் சிலர் சன் டிவி, ராஜ் டிவி என்று பேசி அவளுடைய ஆர்வத்தைக் கிளப்பி விட்டிருந்தனர்.


உணவு இடைவேளையில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் சமயத்தில், அதில் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்க்கும் பெண்கள், இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் ஒரு குறிப்பிட்ட தொடரைப் பற்றி அதிகமாக விவாதிக்க, அதைப் பற்றி எதுவுமே தெரியாத மல்லிக்கோ அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என அறிந்து கொள்ளும் ஆவல் அதிகமானது.


"ஹேய், எந்தத் தொடர் நாடகத்தைப் பத்திடீ பேசிக்கிறீங்க? எனக்கும்தான் கொஞ்சம் சொல்லுங்களேன்" என்று அவர்களிடம் கேட்கப்போக,


"ஏன், நாங்க சொன்னா உடனே அடுத்த எபிசோட பாத்துட்டு வந்து நீயும் எங்க கூட டிஸ்கஸ் பண்ண போறியாக்கும்!" என ஒருத்தி அவளிடம் எகத்தாளமாகக் கேட்டுவிட, ஒரு மாதிரி அவமானமாகிப் போனது மல்லிக்கு.


அதை உணர்ந்த பக்கத்தில் இருந்த மற்றொருத்தி, "ஹேய் சந்து, ஒண்ணு ஒழுங்கா பதில் சொல்லு இல்லன்னா கம்முனு இரு. அது என்ன இப்படி எகத்தாளமா பேசறது" என அவளை அடக்கி விட்டு,


"மர்மதேசம்னு ஒரு தொடர் கத, அதுல இப்ப வர கதைக்குப் பேரு விடாது கருப்பு. நம்ம கருப்பசாமி எல்லாம் வெச்சு மர்மமா போயிட்டு இருக்கு. இதுக்கு முன்னால சிவலிங்கத்த வெச்சு வேற ஒரு கதை வந்துச்சாம். அப்ப எங்க ஊர்ல இந்த வெள்ள ஒயர் டிவி எல்லாம் வரல" என தெளிவாக விளக்கம் கொடுத்தாள்.


அதை மனதிற்குள் பதியவைத்துக் கொண்டவள், எப்படியாவது அந்தத் தொடரைப் பார்த்து விட்டு வந்து இவர்களோடு அதைப்பற்றி பேசி, குறிப்பாக இந்த சந்திராவின் மூக்கை உடைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டாள்.


இவர்களால் வெள்ளை ஒயர் டிவி என அழைக்கப்படும் கேபிள் டிவி இணைப்பு இன்னும் அவர்களுடைய ஊருக்குள் புழக்கத்தில் வரவில்லை. ஆனால் வடிவு அத்தை வீட்டில் மட்டும் பெரிய பெரிய டிஷ் ஆன்டனாக்களை சமீபமாக மாட்டி இருப்பது அவளுக்குத் தெரியும்.


இவர்கள் வீட்டில் இப்பொழுது இருக்கும் இந்த போர்ட்டபிள் கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டியை செகண்ட் ஹேண்டில் இவர்கள் வாங்குவதற்கு முன்பு இவளுடைய பாட்டிக்கும் அப்பாவுக்கும் தெரியாமல் அவர்கள் வீட்டிற்குப் போய்தான் ஞாயிறு படத்தையும் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியையும் பார்த்து விட்டு வருவாள்.


கூட்டத்தோடு கூட்டமாக அவள் உட்கார்ந்து படம் பார்க்கும் பொழுது அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள்.


வடிவத்தைக்கும் இப்படி ஊர் சனமெல்லாம் வந்து அவர்கள் வீட்டு தாழ்வாரத்தில் கும்பலாக அமர்ந்து டிவி பார்ப்பதில் ஒரு அபார பெருமிதம்.


வேற்று இனத்தவர் என்றால், ஜன்னல் வழியாக மட்டுமே எட்டிப் பார்க்க அனுமதி. மற்றபடி வேலாயுதம் மாமாவும் இதற்கெல்லாம் பெரிதாக முட்டுக்கட்டை போட மாட்டார். அவர்களுடைய மூத்த மகன் தங்கராஜ் வீட்டில் இருந்தால் மட்டும் அவனுடைய கடுமையான நடத்தைக்குப் பயந்த ஊர் பிள்ளைகள் அந்தப் பக்கமே போக மாட்டார்கள். சின்னவன் வெளியூரில் தங்கிப் படிக்க, அவனைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது.


சென்ற ஆண்டு இந்த டிவியை வாங்கிய பிறகு அங்கு போக வேண்டிய அவசியம் இவளுக்கு இல்லாமல் போனது.


அந்த நினைப்பில், இப்பொழுது இந்தத் தொடரைப் பார்க்க அவர்கள் வீட்டிற்குப் போனால்தான் என்ன என்கிற நப்பாசை அவளுக்குள் உண்டானது.


அந்தத் தொடர் வாரத்தில் இரண்டு நாட்கள் வருகிறது என்று அவர்களுடைய பேச்சிலிருந்து தெரிந்து கொண்டிருந்தாள். ஆனால் என்று எந்த நேரத்தில் வருகிறது என்பதுதான் தெரியவில்லை. அடுத்த நாள் பள்ளிக்கு வந்ததும் வராததுமாக அந்தத் தோழியிடம் அதையும் கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டாள்.


அன்று மாலையே அந்தத் தொடரின் அடுத்த பாகம் ஒளிபரப்பாக இருக்கவே, வீட்டில் யாருக்கும் தெரியாமல் அதை எப்படிப் போய் பார்ப்பது என்பதற்கான ஒரு திட்டத்தையும் மனதிற்குள் வகுத்துக் கொண்டாள்.


பயமும் மகிழ்ச்சியும் கலந்த ஏதோ ஒரு உணர்வு மனதிற்குள் ததும்பி வழிய, அதனால் உண்டான படபடப்புடன் வீடு வந்து சேர்ந்தாள். வழக்கமான சின்ன சின்ன வேலைகளுடன் பொழுதை தள்ள, மழைக்காலம் என்பதினால் மாலை சீக்கிரமே இருட்டத் தொடங்கி விட்டது.


பசி… பசி… என்று அம்மாவைப் பிடுங்கி, அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்துவிட்டு உறக்கம் வருவதாகச் சொன்னவள் வழக்கமாக அவள் படுக்கும் தாழ்வார மூலையில் போய் பாயை விரிக்க, "என்ன மல்லி இப்படி பொறுப்பில்லாம இருக்க, இன்னும் கொஞ்ச நாளுல அர பரீட்சை வந்துரும். அப்புறமா அந்தத் திருப்புதல் தேர்வோ ஏதோ சொன்னியே அதெல்லாம் வரிசையா வரும். பத்தாவது படிக்கிற புள்ள இப்படி தூக்கத்துக்கு இடம் கொடுக்கலாமா?" என்ன ராஜம் அவளைக் கடிய,


"அம்மா என்னைக்கோ ஒரு நாள் நேரத்தோட தூங்கறேன், இதுக்கெல்லாம் குடைச்சல் கொடுக்காத" என எரிந்து விழுந்து விட்டு தலையோடு கால் இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.


வழக்கமாக அந்த நேரத்தில் படுத்து உறங்கும் ஜீவாவும் அவளுக்கு அருகில் வந்து படுத்து உடனே உறங்கியும் போனான்.


அதற்காகவே காத்திருந்தவள், முன்பே தயாராக எடுத்து வைத்திருந்த துணியால் சுற்றப்பட்ட வைக்கோலை வைத்து அவள் படுத்திருப்பது போல் தயார் செய்துவிட்டு போர்வையால் முழுவதுமாக மூடினாள்.


அம்மா சமையல் கட்டில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க, பாட்டியும் பிரியாவும் கூடத்தில் இருக்கும் தொலைக்காட்சியுடன் ஒன்றியிருந்தனர்.


மற்ற தம்பிகள் இருவரும் தெரு பிள்ளைகளுடன் விளையாடச் சென்றிருக்க, இதுதான் சமயம் என பூனை போல வெளியில் வந்தாள்.


இன்னும் ஒரு மணி நேரத்திற்கு யாரும் அவளைச் சட்டை செய்ய மாட்டார்கள். அப்பா வர ஒன்பது, பத்து மணியாகிவிடும். அதற்குள் திரும்ப வந்துவிடலாம் என்கிற துணிச்சலில் வேலாயுதத்தின் வீட்டை நோக்கிச் சென்றாள்.


இவர்கள் வீட்டிலிருந்து மூன்று தெருக்கள் தள்ளி இருந்தது அவர்களுடைய பெரிய வீடு. வானம் இருட்டிக் கொண்டு எப்பொழுது வேண்டுமானாலும் மழையைக் கொட்டத் தயாராக இருக்க, தெருவே வெறிச்சோடிக் கிடந்தது.


அவளுடைய தோழிகள் எல்லாம் அதிசயமாக பேசிக் கொண்டிருக்கும் இந்தத் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஏதோ ஒரு அசட்டு துணிச்சலில் திருட்டுத்தனமாக இப்படி வந்து விட்டாளே ஒழிய மனதிற்குள் திக்கு திக்கு என்று அடித்துக் கொண்டது.


திரும்பிப் போய் விடலாமா என்று கூட மனதிற்கு தோன்ற, முன் வைத்தக் காலை பின் வைக்கக் கூடாது என்கிற பிடிவாதத்துடன் எப்படியோ அங்கே வந்து சேர்ந்தாள்.


அங்கு வந்து பார்த்தால், ஊருக்குள்ளே வெட்டியாகப் பொழுதைக் கழிக்கும் கூட்டம் மொத்தம் அங்கேதான் கூடியிருந்தது.


பொட்டுப் பொடுசுகள் எல்லாம் முன் வரிசையில் உட்கார்ந்திருக்க, வாயிற் திண்ணையிலேயே உட்கார்ந்து வம்பளக்கும் கிழவிகள் கூட்டம் அவர்களுக்குப் பின்னாலே உட்கார்ந்திருந்தது.


அவர்கள் வீட்டுப் பெரிய நிலை கதவுக்குப் பின்னால் ஒளிந்த படி தலையை மட்டும் நீட்டி உள்ளே எட்டிப் பார்க்க, அவளுக்குப் பின்னால் பிறந்த இரண்டு குரங்கு குட்டிகளும் அங்கேதான் உட்கார்ந்திருந்தன.


அவ்வளவுதான்… கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த தைரியமும் விலகி ஓடிப்போக, புறமுதுகைக் காட்டி அவள் அங்கிருந்து திரும்பிப் போக எத்தனிக்க, அவளை வழி மறித்து வந்து நின்றான் எட்டாக் கனியாக எட்டி இருந்தபடியே அவளது தாபத்தைத் தூண்டி அவளுடைய உணர்ச்சியெனும் மூங்கிலை வெடிக்க வைப்பவன்… வல்லரசு.


பதறிப்போனவளாக, கிடைத்த சிறு இடைவெளியில் நுழைந்து அவனைக் கடந்து, அங்கிருந்து ஓட்டமாக ஓடியே போனாள் மல்லிகா கால் கொலுசு அதிர.


அதைக் கண்ட அந்த வல்லவனின் முகம் புன்னகையைப் பூசிக் கொண்டது.2 comments

2 комментария

Оценка: 0 из 5 звезд.
Еще нет оценок

Добавить рейтинг
Гость
06 июл. 2023 г.
Оценка: 5 из 5 звезд.

Slowly getting into the trap.. 😔

Лайк

Sumathi Siva
Sumathi Siva
05 июл. 2023 г.
Оценка: 5 из 5 звезд.

Wow awesome.

Лайк
© KPN NOVELS COPY PROTECT
bottom of page