மடல் - 4
“கம்பியூட்டரு, தடவுற ஃபோனுன்னு இன்னைக்கு காலம் எங்கயோ போயிட்டு இருக்கு. ஆனாலும் கூட, பொட்ட புள்ளைங்க படிப்ப பாதில நிறுத்திக் கட்டிக் கொடுக்கறது, ஆம்பள புள்ள பொறக்கற வரைக்கும் குடும்ப கட்டுப்பாடு செஞ்சுக்க விடாம புள்ள காய்ச்சி மரமா வெச்சிருக்கறதுன்னு இப்ப வரைக்கும் கூட பெருசா எதுவுமே மாறிடலதான?!
அப்ப, ஒரு நாப்பது அம்பது வருஷத்துக்கு முன்னால எங்க வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் நினைச்சு பாருங்க பாப்பா!
எம்பொறந்த வீடு வாழ்ந்து கெட்ட குடும்பம். இந்த ஜாதி, இந்தக் கொலம்னு பேரு மட்டும் பெத்த பேரு! ஆனா எட்டு நாயும் பொட்ட குட்டியுமா வசவசன்னு பெத்துபோட்டு அதுங்களுக்கு வயிறார சோறு போடவும் வசதி இல்ல, பள்ளிக்கூடம் அனுப்பிப் படிக்க வெக்கவும் மனுஷங்களுக்கு மனசு இல்ல.
ஆணும் பொண்ணுமா எங்கூட பொறந்ததுங்க மொத்தம் ஏழு. நான் அஞ்சாம் பொறவு. அப்பக்கூட, கள்ளங்கபடம் இல்லாம வீட்டு வேலையும், காட்டு வேலையும் செஞ்சிட்டு சந்தோசமாத்தான் இருந்தோம். ஒரு அக்காவுக்கும் ரெண்டு அண்ணனுங்களுக்கும் வரிசையா கல்யாணம் முடிச்சாங்க. ஒரு அண்ணனுக்கு கல்யாண வயசு வரல. எனக்கு அப்பறம் ரெண்டு தங்கச்சிங்க ஒரு தம்பி. எனக்கு முடிச்சா தங்கச்சிங்க ரெண்டு பேரையும் காலாகாலத்துல கர சேர்த்துடலாம்னு சொல்லிக் காத்துட்டு இருந்தாங்க.
ஒத்த புள்ள, அப்பன் இல்ல, ஆத்தாக்காரி மட்டும்தான், வீடு நெலமெல்லாம் இருக்குன்னு சொல்லி, வயசுக்கு வந்த ஒரே மாசத்துக்குள்ள, இந்த ஆளுக்கு என்ன கட்டி வெச்சிட்டாங்க.
அப்ப எனக்கு வயசு, வெறும் பதிமூணுதான். இந்தாளுக்கு வயசு இருவத்தி ரெண்டு. கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் வரைக்கும் யாரும் ஒண்ணும் கேட்டுக்கல, ஆனா அதுக்கு பிறகு ஒவ்வொரு மாசமும், பிள்ள… பிள்ளன்னு ஆத்தாளும் புள்ளையுமா என்ன போட்டுப் புடுங்க ஆரம்பிச்சாங்க.
பொழுது விடிஞ்சு பொழுது போனா, ஊர் பொம்பளைகளுக்கு இதே வம்பளப்புதான்.
பள்ளிக்கூடம் போனதில்ல, கணக்கு வழக்குத் தெரிஞ்சுக்கல. எங்க, அந்தாளுக்கு வேற கல்யாணம் செஞ்சு வெச்சிட்டு என்ன தள்ளி வெச்சிடுவாங்களோ, என் வீட்டோடோட போய் உக்காந்துக்கணுமோன்னு பயந்து பயந்தே செத்தேன். ஏன்னா அங்க சோத்துக்கே வழி இல்ல. இதுல என் அண்ணிங்க வேற பேசிப் பேசியே என்னைக் கொன்னுடுவாளுங்க!
அரசல் பொரசலா பொண்ணுப் பாக்கவும் ஆரம்பிச்சுது என் மாமியார். பதினேழு முடிஞ்சு மூணு நாலமாசம் போக, எப்படியோ நல்ல காலமா புள்ள உண்டானேன்.
புள்ள பொறக்கற வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு, அது மட்டும் ஆம்பள புள்ளையா பொறந்திருந்தா இன்னுமே நல்லா இருந்திருக்கும், பொட்ட பிள்ளையா பொறந்து தொலைச்சுது.
மறுபடியும் மாமியாக்காரி பிடுங்க ஆரம்பிச்சா! பரவால்ல, மொத புள்ளதானன்னு எம்புருசன் மட்டும் பெருசா பிரச்சன எதுவும் செய்யல.
ஆனா, என்ன அம்மான்னு சொல்ல வந்த தலைச்சன் புள்ள இல்லையா? எனக்கு அது மேல கொள்ள பிரியம்.
செவப்பு தோலும், கருகருன்னு தலை நிறைய மயிருமா பார்க்க அப்படியே இராசாத்தி மாறி இருக்கும். மல்லிப்பூ செண்டு மாதிரி மகராசி பொறந்ததால மல்லிகான்னு பேரு வெச்சோம்.
அது பொறந்த மூனாமாசமே மறுபடியும் உண்டானேன். அடுத்ததும் பொண்ணுன்னு ஆக, இந்த ஆளும் ஆட்டமா ஆட ஆரம்பிச்சான்.
கைல ஒண்ணும் இடுப்புல ஒண்ணுமா நான் அவதிப்பட, ஆம்பள புள்ள வேணும் ஆம்பள புள்ள வேணும்னு, கொஞ்சம் கூட பொறுமை இல்லாம அந்தாளு உருண்டு பிரள, அடுத்த வருஷம் மறுபடியும் முழுகாம இருந்தேன்.
மொத ரெண்டு பிரசவத்துக்குமே பொறந்த வீட்டுக்குப் போயிட்டேன். வீட்டுலயே மருத்துவச்சிய வர வெச்சு பிரசவம் பார்த்தாங்க. ஆஸ்பத்திரிக்கெல்லாம் போகல. மூணாம் பிரசவம் பொறந்த வீட்டுல பார்க்கக்கூடதுன்னு ஒரு சம்பிரதாயம் அது இதுன்னு, அங்கயும் தட்டிக் கழிச்சாங்க, இங்கயும் இவங்க என்ன அங்க போக விடல. வலி வர கடைசி நிமிஷம் வரைக்கும் வீட்டு வேல செய்யணும்னுதான் அங்க போகவேணாம்னு சொல்றாங்கன்னுதான் நினைச்சேன். மூத்த புள்ளைங்க ரெண்டையும் வேற பார்க்கணுமே!
இடுப்பு நோவு எடுக்கற வரைக்கும் மாடு மாறி வீட்டு வேல, கழனி வேலன்னு எல்லாமே செஞ்சேன் பாப்பா. ஆனா அந்தப் பாவிங்க எனக்கு பின்னால குழிப் பரிச்சி வெச்சிருந்தாங்கன்னு பிறகுதான் புரிஞ்சுது. என தழுதழுத்தவரின் பார்வை இலக்கில்லாமல் எங்கேயோ வெறிக்க, விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அதற்கு மேல் தொண்டை அடைத்துப் பேச இயலாமல் புடவை முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டார்.
அவர் சொல்லிக்கொண்டிருக்கும் துயரக் கதையில் தானே ஒரு அங்கமாகிப் போனவளாக மனம் முழுவதும் பாரம் ஏறிப்போய் அதிர்ச்சியில் உடல் தடதடத்துக் கொண்டிருந்தது ஸ்வராவுக்கு. தன்னை சமாளித்தபடி எழுந்து வந்து அவரை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
அதில் அவரது துக்கம் மேலும் அதிகமாகிப்போக, “மூணாவதும் பொண்ணா பொறந்துடுச்சுன்னு அத என் கண்ணுல கூட காட்டாம கொன்னு பொதச்சிட்டாங்கம்மா அந்தக் கொடும்பவிங்க” என அவளது அணைப்பில் இருந்தபடியே அவர் துடிக்க, அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
‘யாருடனும் பகிர்ந்துகொள்ள இயலாமல் இப்படி ஒரு மனச் சுமையை இவ்வளவு நீண்ட நெடும் வருடங்களாக இவர் எப்படித்தான் தூக்கிச் சுமக்கிறாரோ?’ என்று எண்ணியவளுக்கு அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று கூட விளங்கவில்லை. அழுகையில் அவரது உடல் குலுங்கியபடியே இருக்க, ஆதரவாக முதுகை வருடி, அவரை அமைதிப் படுத்த முயன்றாள்.
ஏதோ ஒரு வேகத்தில், நடந்து முடிந்த கதையை சொல்லத் தொடங்கிவிட்டாரே ஒழிய, அது இவ்வளவு வலியைக் கொடுக்கும் என அவரே எண்ணியிருக்கவில்லை. ஏதோ, இந்த நொடிதான் அந்தக் கொடுஞ்செயல் நடந்தது போல நெஞ்சம் கொதித்தது.
ஆவேசத்துடன் அவளிடமிருந்து விலகியவர், “இன்னைக்கு இவ்வளவு கதை சொல்லிட்டு இருக்கேனே, அன்னைக்கு என்னால என்ன செய்ய முடிஞ்சுதுன்னு நினைக்கறீங்க பாப்பா, மார்ல அடிச்சிட்டு கத்தி அழுது நியாயம் கேட்டேன், ‘நீ வரிசையா பொட்ட பிள்ளையா பெத்துப் போட்டுட்டே போனா, அத வளத்து ஆளாக்கி கட்டிக் கொடுக்கணுமே, உன் ஓட்டாண்டி அப்பன் படி அளப்பானா?’ன்னு கேட்டான் அந்தாளு.
‘கட்டிட்டு வந்து அஞ்சு வருஷம் புள்ளையே உண்டாவலையே, பேசாம உனக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணலாம்னு முடிவெடுத்த சமயத்துல மாசமாகி வென வெச்சா. ஒண்ணுக்கு ரெண்டா பொருத்து போயிட்டோம். இப்ப மூணாவதும் பொண்ணா பெத்திருக்கா இந்த மூதேவி. இதுல பிடாரி மாதிரி கத்தி ஊர கூட்டிட்டு இருக்கா. இவ நமக்கு சரி பட்டு வரமாட்டா குணா. பேசாம தள்ளி வெச்சிட்டு ரெண்டாங்கல்யாணம் பண்ணிக்கோ’ன்னு அந்தாளோட அம்மாக்காரி வேற எரியற கொள்ளியில எண்ணைய ஊத்தினா? என்று சொல்லிக்கொண்டே போக,
“அடப்பாவிகளா, ஒரு குழந்தை ஆணாவோ இல்ல பெண்ணாவோ பிறக்க அப்பன்தான் காரணம், அம்மா இல்ல. இது கூட தெரியாம என்ன ஆட்டம் ஆடி இருக்காங்க பாருங்க, ச்சை. கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம, இதுக்கெல்லாம் பொண்ணுங்கள பொறுபேற்க வெச்சு, அதுக்கு தண்டனை வேற கொடுப்பாங்களாமா? இதுல இந்த ஆம்பளைங்கள கட்டிக்கப் பொண்ணுங்க க்யூல நிப்பாங்களா?” என ஸ்வரா கொதிக்க,
“நின்னாங்க நின்னாங்க, எல்லாம் வரிசை கட்டித்தான் நின்னாங்க, வரிசையா புள்ளைங்கள பெத்துப் போட்டுட்டு, அதுங்களுக்கு சோறு போட வக்கில்லாம, கட்டிக் கொடுக்க காசில்லாம வறுமை நிலை, தள்ளிவுட்டா போதும்னு இப்படி எவனுக்காவது கட்டி வெச்சிடுவாங்க. பொண்ணுங்களுக்கு விருப்பு வெறுப்புன்னு எதுவும் கிடையாது” என விளக்கம் கொடுத்தார்.
“ஓ...” என்றபடி ஸ்வரா ஏதோ யோசனையில் மூழ்கிவிட, விழிகளில் நீர் கோர்த்து கோபத்தில் சிவந்திருந்த அவளது முகத்தை ஏறிட்டபடி தொடர்ந்தார் ராஜம்.
இந்தக் கொடுமைக்கெல்லாம் நடுவுல, நஞ்சுக்கொடி வயித்துலேயே தங்கிப்போய் உதிரப் போக்கு அதிகமாகி, போரும் போராததுக்கு மாருலயும் பால் கட்டி சாகப் பொழைக்க கிடந்தேன். வேற வழி இல்லாம தர்மாஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் பெட்டுல சேர்த்து வைத்தியம் பார்துதுங்க. நடந்த எதையும் யார் கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு மிரட்டிதான் ஆஸ்பத்திரிக்கே கூட்டிட்டுப் போச்சுங்கன்னு வை!
சாவ பிழைக்க கிடக்குற மகளுக்கு, கூட தங்கி இருந்து கவனிச்சுக்க வந்த என் அம்மா, எல்லாமே தெரிஞ்ச பிறகும் கூட, ‘பொம்பளையா பொறந்தா இதையெல்லாம் தாங்கிட்டுதான் ஆகணும், பொறுத்துட்டுப் போடீ... உம்மாமியார் கைல கால்ல விழுந்து ஒரு சக்களத்தி வராம பார்த்துக்க, புருசன அனுசரிச்சு நடந்துக்க, அடுத்ததாவது ஆம்பள புள்ளையா பொறக்கட்டும். ஆனா உசுரே போனாக்கூட பொறந்த வீட்ட தேடிட்டு வந்துடாத’ன்னு எனக்கு பாடம் சொல்லிட்டு, எங்க என்னைக் கூடவே அனுப்பி வெச்சிடுவாங்களோன்னு பீதில பின்னங்கால் பிடரில பட ஓடிச்சு. இதுங்க வாய்க்குப் பயந்துட்டு எங்கப்பன் என்ன பார்க்கக் கூட வரல.
அதுக்குப் பிறகு மூணு வருஷம் புள்ளையே நிக்கல. ஆஸ்பத்திரி போய், வைத்தியம் பார்த்து மாத்தர மருந்து தின்னு மறுபடியும் உண்டானேன். நான் செஞ்ச புண்ணியமோ இல்ல யார் செஞ்ச புண்ணியமோ, அடுத்தது ஆண் புள்ளையா பொறந்துச்சு. அத்தோடயாவது குடும்பக் கட்டுப்பாடு அப்பரேஷன் பண்ண உட்டுதுங்களான்னா, அதுவும் இல்ல.
அந்தப் புள்ளைக்கு ரெண்டு வயசு இருக்கும்போது மறுபடியும் முழுவாம இருந்தேன். அந்தச் சமயத்துல பெண் சிசுக் கொலை அதிகம் நடந்ததால அதை தடுக்க கவர்மண்ட்டுல நிறைய நலத்திட்டம் கொண்டுவந்தாங்க. அதனால மாசாமாசம் ஒரு நர்ஸம்மா வீடு வீடா வந்து பொம்பளைங்கள பரிசோதிச்சு கணக்கு எழுதிட்டுக் கூடவே சத்து மாத்திரையெல்லாம் கொடுத்துட்டுப் போவாங்க. அப்படி வரும்போது நான் முழுவாம இருக்கறது அவங்களுக்குத் தெரிஞ்சி போச்சு.
ஏற்கனவே, மூணாவதா பிறந்த பொட்டப்பிள்ளைய சிசுக்கொல செஞ்ச செய்தி அரசால் புரசலா வெளியில பரவி, விசாரிக்க வீடு வரைக்கும் போலீசு வந்துச்சு. அத இத சொல்லி சமாளிச்சு, வல்லரசு அப்பா மூலமா பேசி, பணம் கொடுத்து அதை அமிக்கினாங்க. அந்தப் பயத்துல, அங்க இங்க விசாரிச்சு, பணம் செலவு செஞ்சு மெட்ராஸ் வரைக்கும் கூட்டிட்டு போய், இஸ்கேன் செஞ்சாங்க. அது பொண்ணுன்னு தெரிஞ்சதும், கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம, நாலு மாசம் வளர்ந்த அந்தக் கருவ கலைக்க சொன்னாங்க.
வேணாம்... இதெல்லம் தப்பு... பாவம்ன்னு நினைச்சாலும் சரின்னு ஒத்துக்கிட்டேன். இல்லன்னா என்ன நடக்கும்னு தெரியாதா? முழுசா பொறந்த பிள்ளைய கொல செய்யறத விட, இது பரவாயில்லதான. சரின்னு செஞ்சுக்கிட்டேன்" என்று சொல்லி ராஜம் பெருமூச்சு விட, "என்னம்மா சொல்றீங்க, அதான் ஆம்பள பிள்ளை பொறந்துடுச்சே, அப்பவே நீங்க ஏன் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செஞ்சுக்கல" என்று ஸ்வரா கேட்க, "ரெண்டு பொம்பள புள்ள பெத்த இல்ல, எனக்கு ரெண்டு ஆம்பள புள்ள பெத்துக் குடுன்னு கணக்கு பேசினாரும்மா என் புருஷன்" என்று அவர் பதில் சொல்ல, மூண்ட எரிச்சலை விழுங்கினாள்.
"மறுபடியும் ஒரு தடவ உண்டாகி, கருவைக் கலைச்சி, அடுத்து ஒரு ஆம்பள புள்ள பொறந்துச்சு. ஆனா ஆபரேஷன் செய்யற அளவுக்கு என் உடம்புல தெம்பில்ல. அப்படியே விட்டு, கடைசியா ஜீவா பொறந்த பிறகுதான் எனக்குப் பொழுதே விடிஞ்சிச்சு" என சொல்லிக்கொண்டே வந்தவர், “கொடுமையிலயே கேடுகெட்ட கொடும எது தெரியுமா, ஸ்வராம்மா” என அவளது முகம் பார்த்து கேட்கவும், அதையும் அவரே சொல்லட்டும் என் அவள் மௌனம் காக்க, தொடர்ந்தார்.
“நமக்கு கெடுதல் செஞ்சு குழி பரிச்சவங்க கூடவே வாழுறது! நிமுந்து நின்னு ஒரு கேள்வி கூட கேக்க துணிவில்லாம, அவங்க போடுற பிச்சையில சோறு தின்றது! அவங்களுக்கு ஊழியம் செய்யறது! எல்லாத்துக்கும் மேல அவங்களுக்கு நம்ம கையால பொங்கிக் கொட்டுறது! இதெல்லம் எவ்வளவு கேவலமான பிழைப்பு இல்ல? ஆனா கூட இதையெல்லாம் தாங்கிட்டு நாம உசுரோட நடமாட பிள்ளகுட்டிங்கன்னு நமக்கு ஒரு கடமை இருக்கில்ல?” எனப் பெரிய பெரிய கேள்வியெல்லாம் அவர் அனாயாசமாக கேட்க,
‘ஆம்’ என தலையசைத்து அதை ஆமோதிப்பதைத் தவிர அவளுக்கு வேறு தெரியவில்லை.
“என்னவோ சமஸ்தான சிம்மாசனம் சீரழிஞ்சு போற மாதிரி, ஆண் வாரிசுக்கு அவ்வளவு ஆர்ப்பாட்டம் செஞ்சான் அந்தாளு. இப்படி ஆட்டமா ஆடி, புள்ளைங்கள பெத்து, கடைசியில, கண்ட கண்ட கழிசட பேமானிங்க கிட்டயெல்லாம் கடன வாங்கி கொத்தடிம மாதிரி ஆக்கி வெச்சதுதான் மிச்சம். என் கடைசி புள்ளய பாருங்க பாப்பா, அவன ஒரு ஆளாக்கிப் பார்க்கத்தான் நான் உசுரோடவே இருக்கேன், அவன் படிச்சிருக்கற படிப்புக்கும் அவன் அறிவுக்கும் அவன இவனுங்களுக்கு ஊழியம் செய்ய வெக்கறானுங்க. பார்க்க பார்க்க வயிறு எரியுது.
அதுவும் எங்குடிய கெடுத்தவனுக்கே கால் கழுவற நிலைமையில கொண்டு வந்து என்ன வெச்சிருக்கு பாரு இந்த சாமி... அது சாமி இல்ல... வெறும் கல்லு” எனக் கட்டுபாட்டை இழந்தவராக ராஜம் புலம்பியபடி இருக்க, கண்கள் வற்றாமல் கண்ணீரைச் சுரந்தது.
“சரி... சரி.. அழாதீங்க பாட்டிம்மா, ரிலாக்ஸ். ரொம்பவே ஸ்ட்ரெஸ் ஆகறீங்க! போதும்... முடியலன்னா விட்டுடுங்க, நான் இங்கதான் இடம் வாங்கப் போறேன். ஸோ, இப்போதைக்கு ஊருக்குப் போக மாட்டேன். பொறுமையா பேசிக்கலாம்” என்று அக்கறையுடன் ஸ்வரா சொல்ல, முந்தானையால் மூக்கை சிந்தி, முகத்தைத் துடைத்தபடி பெரிய பெரிய மூச்செடுத்துத் தன்னை சமன் செய்துகொண்டார்.
உடலிலிருந்த சக்தி மொத்தமும் வடிந்து துவண்டு கிடந்தவரை அப்படியே அமர வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றவள், சூடான தேநீரை எடுத்து வந்து வற்புறுத்தி அவரைப் பருக வைத்தாள்.
அதில் சற்றுத் தெம்பு வர, “நாம்பட்ட பாட்டச் சொல்லி, உங்க மனச நோகடிச்சிட்டேனா, பாப்பா?” எனக் கேட்டார் குற்ற உணர்ச்சி மேலோங்க.
“அப்படியெல்லாம் இல்ல பாட்டிம்மா, உங்க துன்பத்த இறக்கி வெக்க என்னால தோள் கொடுக்க முடிஞ்சுதேன்னு எனக்கு ஒரு சின்ன சந்தோஷம்தான்” என்று அவள் பதில்கொடுக்க,
“இப்படி ஒரு சந்தர்ப்பம் மறுபடியும் வாய்க்குமா தெரியாது. அப்படியே வாய்ச்சாலும் கூட, மிச்சம் மீதி கொடுமைய சொல்ல எனக்கு நா எழுமா தெரியாது. ஆனா, என் குலதெய்வம் முண்டகண்ணி அம்மனே உங்க ரூபத்துல வந்து என் குறை கேட்ட மாதிரி ஒரு நிம்மதிய கொடுக்குது, சாமி” என்று சொன்னவரை ஆதுரமாக அணைத்துக் கொண்டாள். முதன்முறை அவர் அதை உணரவில்லை, ஆனால் இப்பொழுது அவருக்குச் சற்றுக் கூச்சமாக இருக்க, நெளிந்தபடி அவளிடமிருந்து விலகினார்.
அதே நேரம் வல்லரசுவின் வாகனம் உள்ளே நுழையவும் பதறி எழுந்தவர், அவளுக்கு சமமாக அருகில் உட்கார்ந்திருப்பதை அவன் பார்த்துவிட்டால் என்னாகும் என்கிற பயத்துடன் அவனது பார்வை தன் மேல் விழுவதற்குள், மின்னல் போல அங்கிருத்து ஓடி மறைந்தார்.
அதை உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள்ளே ஆத்திரம் கனன்றது. அனைத்துக்கும் காரணமான ராஜத்தின் கணவன் குணாவின் மீது, அவள் பார்த்தே இராத குணாவுடைய அம்மாவின் மீது, இப்படி இவரை ஆட்டிப்படைக்கும் வல்லரசுவின் மீது, வன்மமும் வெஞ்சினமும் வெடித்துப் பொங்கியது.
எதையும் வெளிக்காண்பிகாமல், தோரணையாக கால்மேல் கால்போட்டபடி நிமர்ந்து அமர்ந்தாள்.
வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அவன் இறங்க, மற்றொரு பக்கமாக இறங்கி வல்லரசுவுடன் இணைத்து மிதப்பாக அவளை நோக்கி நடந்து வந்த சக்தியைப் பார்த்ததும் அவளது இதழின் ஓரம் ஒரு கோணல் புன்னகை அரும்ப, விழிகள் நஞ்சை உமிழ்ந்தன.
***
Wow awesome