top of page

Kaattumalli - 29

Updated: Jan 8

மடல் - 29


ஏதோ விபரீதம் என்பது புரிந்துவிட, மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் அவள் சொன்னபடி காவல்துறை அதிகாரி திவ்யாபாரதியின் எண்ணை அழுத்திக் கைப்பேசியை ஸ்வராவிடம் கொடுத்தான்.


"ஹாய் பகலவன், என்ன திடீர்னு என் ஞாபகம் எல்லாம் உனக்கு வந்திருக்கு?" என்றபடி அவர் அந்த அழைப்பை ஏற்க,


"மேம் திஸ் இஸ் ஸ்வரா" என்று அவள் சொல்லவும்,


"ஹாய் மா, எப்படி இருக்க? அல்லிக்கொடி, மல்லி எல்லாரும் எப்படி இருக்காங்க?" என்று கேட்டுக் கொண்டே போனார்.


"நான் நல்லா இருக்கேன் மேம், அம்மா, அம்மம்மா எல்லாரும் நலம்” என்றவள், “ஒரு போலீஸ் ஆஃபீஸரோட ஞாபகம் ஒருத்தங்களுக்கு வந்திருக்குன்னா ஏதோ குற்றம் நடக்குதுன்னுதானே அர்த்தம்" என்று அவரது தொனியிலேயே அவர் முதலில் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்க,


"அல்லியோட வளர்ப்பாச்சே, இப்படித்தான் அடாவடியா பேசும்" என்று உரிமையுடன் கடிந்தவர்,


"சொல்லுமா என்ன பிரச்சன?" என்று விஷயத்துக்கு வந்தார்.


"ஒரு சைல்ட் செக்ஸுவல் அப்யூஸ் கேஸ், மேம். சிக்ஸ் இயர்ஸ் ஓல்ட் ஃபீமேல் சைல்ட். மே, கம்ஸ் அண்டர் ஃபோக்ஸோ" என்று அவள் கடினமான குரலில் சொல்ல,


"கடவுளே, இந்தப் பதவியில வந்து உட்கார்ந்துட்டு இன்னும் நான் எதையெதையெல்லாம் பார்க்கணுமோ?" என வேதனையுற்றவர், "எந்த ஏரியான்னு சொல்லு, முடிஞ்சா நான் நேர்லேயே வரேன்" என்று முடித்துக் கொண்டார், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் இந்திய அளவில் முக்கிய பதவியில் இருக்கும் திவ்யா பாரதி ஐபிஎஸ். ( பூவும் நானும் வேறு நாவலின் ஒரு முக்கிய கதை மாந்தர் இவர்)


அதன் பிறகு அதை இதைச் சொல்லி குழந்தை திவ்யாவை தன் பாதுகாப்பிலேயே வைத்துக் கொண்டாள் ஸ்வரா. அவளுடைய அப்பா அம்மாவுடன் கூட அனுப்பவில்லை. இவளை மறுத்து பேசும் நிலையில் இல்லாமல் அவர்களும் அனுப்பச் சொல்லி நிர்பந்திக்கவில்லை. பிள்ளையும் மகிழ்ச்சியாக இவளுடனே இருந்துவிட இவள் கொடுத்தத் தகவலின் அடிப்படையில் அடுத்த நாள் காலையே அங்கே வந்து இறங்கினார் திவ்யாபாரதி. அதன் பிறகு நடந்தவை அனைத்துமே மின்னல் வேகம்தான்.


குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, திவ்யா என்னும் அந்தக் குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கிறாள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.


ஏற்கனவே ஸ்வரா அவளுடன் பேசி அனைத்தையும் தன்னுடைய ஹேண்டி கேமராவில் காணொளியாகப் பதிவு செய்து வைத்திருந்தாள். அதனுடன் சேர்த்து மருத்துவர்கள் குழுவுடன் சேர்ந்து அந்தக் குழந்தையுடன் நேரடி விசாரணையும் நடத்தப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.


இந்த விசாரணையில் மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக அவர்களுக்குத் தெரிய வந்தது என்னவென்றால் மஞ்சுவும் இதே போல, அந்த மனிதரால் மிக மோசமாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருந்தாள் என்பதுதான்.


ஒவ்வொருவராக தனித்தனியாக விசாரிக்கும் பொழுது, மனதிற்குள்ளேயே நீண்ட வருடங்களாக வைத்து போராடிக் கொண்டிருந்த தன் துன்பத்தைச் சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்திருக்க, "கொரோனா சமயத்துல ஊர் மொத்தமும் லாக்டவுன்ல இருந்ததால நான் பள்ளிக்கூடத்துக்குக் கூட போக முடியல. அந்தச் சமயத்துல இவங்க வீட்டுலயே தங்கி வேலை செய்ய அம்மா என்ன அனுப்பி வச்சது. அப்பதான் அந்தத் தாத்தா என்கிட்ட ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாரு. அப்ப எல்லாம் எனக்கு தினமும் ஏதோ மாத்திரை வேற கொடுப்பாரு" என்று தெளிவாக சொல்லி முடிக்க, விசாரித்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்த பெண் மருத்துவர்களாலேயே இந்தத் தீமையை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனம் வெம்பிபோய் கண்ணீர் சிந்தாமல் ஒருவரால் கூட அந்த விசாரணையைக் கடக்க முடியவில்லை என்பதே உண்மை.


அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, வேலாயுதத்தைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யவும் அவரைக் கைது செய்ய முறையான ஆணையைப் பெற்றனர்.


இவ்வளவும் நடந்து முடியும் வரை, இந்த விஷயம் ஒரு துளி அளவு கூட வெளியில் கசியாமல் பார்த்துக் கொண்டனர்.


பெற்றவருடன் இருந்தால் குழந்தைக்கு ஆபத்து வரும் என்கிற சூழ்நிலையைக் காரணம் காட்டி அவளை அரசுப் பாதுகாப்பு இல்லத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.


இவ்வளவும் முடிந்து உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகள் மூலம் அவரைக் கைது செய்ய வீட்டிற்கு வரும் பொழுதுதான் இந்த தகவலே வல்லரசுவுக்கும் அவனது குடும்பத்திற்கும் தெரிய வந்தது.


இதில் அவனுக்குச் சாதகமாக நடந்த ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், ஏதோ ஒரு உறவு முறை திருமணத்திற்காக அவருடைய அம்மாவும் அப்பாவும் சென்னை வரை சென்றிருந்ததுதான். அவர் வீட்டில் இல்லை என்கிற ஒரு காரணத்தினால் அவரை கைது செய்ய இயலாமல் காவல் துறையினர் இவனிடம் விசாரிக்க, வீட்டில் கோபித்துக் கொண்டு எங்கோ சென்று விட்டார் என அவசரமாக ஒரு பொய்யைச் சொல்லித் தற்காலிகமாக அவரது கைதைத் தள்ளிப் போட்டான்.


இதையெல்லாம் சத்தியமாக அவனால் நம்பவே முடியவில்லை. அவனுடைய அப்பா இப்படி செய்திருக்க மாட்டார் என்று இல்லை! இப்படி ஒரு பிரச்சனை தன்னுடைய பார்வைக்கு வராமல் எப்படி கைது வரை சென்றது என்பதைத்தான். இதுபோல் எவ்வளவோ விஷயங்களைப் பார்த்திருக்கிறான், அதனால் இதற்கெல்லாம் சற்றும் பதறவில்லை அவன்.


இதற்காகப் பெரிதும் மெனக்கெட தேவையில்லையே! அவர்கள் வீட்டில்தானே கன்னியப்பன் அவனது மனைவியும் வேலை செய்கிறார்கள்! அவர்களை மிரட்டிப் பணிய வைத்தாலே போதுமே.


ஆனால் அதை அவனால் செய்ய முடியாமல் போனது. காரணம் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதே அவனுக்குப் பெரிய மர்மமாக இருந்தது. அவனுடைய கூலிப்படையை அனுப்பியும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க இயலவில்லை.


அப்பொழுதுதான் லேசாக பயம் வந்தது. அடிமட்டத்திலிருந்து ஒவ்வொரு படியாக, தன்னுடைய அப்பாவைக் காப்பாற்ற காயை நகர்த்திப் பார்த்தான்.


ஆனால் எதுவுமே எடுபடாமல் போனது.


தன் அரசியல் செல்வாக்கையும் பணபலத்தையும் கொண்டு அவன் எவ்வளவு முயற்சி செய்தும் அவனுடைய அப்பாவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்தை அவனால் மூடி மறைக்க இயலவில்லை. கேட்டால் காவல்துறை உயர் அதிகாரிகளையும், முக்கிய பதவியில் இருக்கும் அமைச்சர் வரையிலும் நீண்டு கொண்டே போனது.


ஸ்வராவை நேரில் பார்த்துப் பேசலாம் என்றால் அவளை அணுகவே முடியவில்லை. தன்னுடைய ஜாகையை அவனுடைய தோப்பு வீட்டில் இருந்து குணாவின் வீட்டிற்கு மாற்றி இருந்தாள்.


இரவில் உறங்குவதற்கு மட்டும் டவுனில் இருந்த ஒரு விடுதியில் அவர்கள் அறைகளை எடுத்திருப்பது தெரிய வந்தது. அங்கே போய் அவளிடம் நேரடியாகக் கெஞ்சிப் பார்த்தும் பயனில்லாமல் போனது.


இங்கிருந்தபடியே அவரை அழைத்து வந்து, பக்கத்து ஊரில் இருக்கும் அவர்களுக்குச் சொந்தமான ரைஸ் மில்லில் தங்க வைத்து விட்டான்.


சந்திராவின் உறவில் உள்ள ஒருவரை பினாமியாகக் கொண்டு அதை அவன் வாங்கி இருந்ததால், அவர் அங்கே இருப்பதை சுலபத்தில் போலீசால் கண்டுபிடிக்க முடியாது என்கிற காரணத்தினால்தான் அவரை அங்கே பத்திரமாகத் தங்க வைத்தான்.


அந்த உறவினர் வீட்டில் இருந்தே நேரா நேரத்திற்கு அவருக்குத் தேவையான உணவைக் கொடுக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு, அவரை எப்படி இதிலிருந்து விடுவிக்கலாம் என அவன் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்க, அவனைத் தேடி வந்தார் குணா.


அதற்குள் பட்டும் படாமலும் ஊருக்குள் இந்த விஷயம் கசிந்திருக்க, முதலில் அவரைச் சந்திக்கவே அவன் விருப்பப்படவில்லை. அவர் குடும்பத்தின் மீதே எக்கச்சக்க ஆத்திரத்தில் இருந்தான்.


'ஸ்வரா ஏன் ராஜத்துக்கு உதவுகிறாள்? இதுநாள் வரை ஆரோக்கியமாக இருந்த ராஜத்தக்கு இவளைப் பார்த்த பிறகு திடீரென்று ஏன் உடல்நலம் சரியில்லாமல் போனது? அதுவும், அவர்கள் வீட்டிலேயே போய் தங்கும் அளவுக்கு அப்படி என்ன திடீர் நெருக்கம் உண்டாகி இருக்கிறது?


அதைவிட முக்கியமாக, யார் பார்வையிலுமே சிக்காத இது போன்ற நுட்பமான ஒரு விஷயம் அவளுடைய பார்வைக்கு மட்டும் எப்படி புலப்பட்டது? என ஆயிரம் கேள்விகள் மண்டைக்குள் குடைந்து கொண்டே இருக்க, ஒருவேளை குணாவிடம் பேசினால் ஏதாவது விடை கிடைக்குமோ என அவரை வீட்டுக்குள் அனுமதித்தான்.


அவர் உள்ளே நுழைந்ததுமே, "வீட்டுக்குக் கூட்டம் கூட்டமா சொந்தக்காரங்க வந்து தங்கி இருக்காங்க போல இருக்கு?" என குதர்க்கமாகத்தான் தொடங்கினான்.


"என்ன தம்பி இப்படி கேக்கறீங்க? அவங்க உங்களுக்குதானே சினேகிதம். என்ன நடந்ததோ தெரியல அந்தப் பொண்ணுக்கு என் பொண்டாட்டி மேல ஒரு பிரியம் வந்துருச்சு. இந்த ஜீவா பையன் வேற ஏத சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான். மூத்தவனுங்க ரெண்டு பேரையும் கூட என்னால சமாளிக்க முடியும், இந்தப் பயல ஒண்ணும் செய்ய முடியல. இப்ப என் பொண்டாட்டியோட வைத்திய செலவு மொத்தத்தையும் அந்தப் பொண்ணுதான் பார்க்குதில்ல, அதனால அதை எங்க வீட்டுக்குள்ள வச்சுக்க வேண்டிய சூழ்நில" என்று புலம்பித் தள்ளினார்.


"அப்பா போதும், நீங்க இப்ப எதுக்கு இங்க வந்தீங்க முதல்ல அதைச் சொல்லுங்க" என்று கேட்க,


"அதுதான் தம்பி, உங்க அப்பாவ பத்தி ஊருக்குள்ள என்னென்னமோ பேசிக்கிறாங்களே, அத பத்தி உங்க காதுல ஒரு வார்த்தைப் போட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்" என்றார்.


"போறவன் வரவன் எதையாவது சொல்லிட்டு இருப்பான்  இப்ப என்ன அத பத்தி" என்று சுள்ளென எரிந்து விழ, "அதில்ல தம்பி, இது விஷயமா இந்தப் பொண்ணு கிட்ட எது பேசினாலும் பிரயோஜனப்படாது. அதான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்லலாம்னு" என்று இழுக்க,


"எது, நீங்க எனக்கு யோசனை சொல்ல போறீங்களா?" எனக் கேட்டான் எள்ளலாக.


இந்த அளவுக்குத் தழைந்து போயும் இவ்வளவு திமிராகப் பேசுகிறானே என எரிச்சலாக இருந்தது அவருக்கு.


இருந்தாலும்தான் நினைத்து வந்த காரியத்தைச் சாதிக்கும் நோக்கத்துடன், "உண்மையாவே தம்பி, அந்தப் பொண்ணை எப்படி வழிக்குக் கொண்டு வரதுன்னு என்று எனக்குத் தெரியும்" என்று அவர் சொன்ன விதத்திலேயே அதைக் கேட்டால்தான் என்ன என்கிற எண்ணம் அவனுக்கு உருவாக,


"எங்க சொல்லுங்க கேட்போம்" என்றான் ஏதோ தனக்கு அதில் அக்கறையே இல்லாத ஒரு பாவனையில்.


"சொல்றேன் தம்பி, அதுக்கு பதிலா என் பேத்தி கல்யாணத்துக்கு வாங்கின கடன தள்ளுபடி பண்றேன்னு சொல்லுங்க, சொல்றேன்" எனக் கேவலமாகப் பேரம் பேச,


"ஒருவேளை நீங்க சொல்ற யோசனை சரிப்பட்டு வந்து எல்லாம் நல்லபடியா முடிஞ்சா பார்க்கலாம்" என்று அவன், அவர் சொல்ல அனுமதிக்க,


"இந்தப் பொண்ணு கூட ஒரு  கிழவி வந்து தங்கிட்டு இருந்துச்சுல்ல, அது கிட்டயோ இல்ல இந்தப் பொண்ணோட அம்மா கிட்டயோ பேசினா ஒருவேள இந்த வேல சுலபமா முடியும். ஏதோ என் மருமகளுங்க பேசிக்கிட்டத வச்சு எனக்கு தோனினத சொல்லிட்டேன்" என்று சொல்லி முடிக்க,


"இதையெல்லாம் ஒரு யோசனை வந்து சொல்லிட்டு இருக்கீங்க பாரு… ச்சை. என் நேரத்தை இதுக்கு மேல வேஸ்ட் பண்ணாம முதல்ல வெளிய போங்க" என்று கடுப்பாகி அவரை கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக விரட்டி அடித்தான்.


ஆனாலும் அவனது அடுத்தடுத்த முயற்சிகளுக்கும் பலன் இல்லாமல் போக, கடைசியாக குணா சொன்னதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தவன் மல்லிகாவைத் தேடி சென்னை வந்து சேர்ந்தான்.


அவளைப் பார்த்ததும் இந்த உலகத்தில் மற்ற அனைத்தும் மறந்தே போனது அவனுக்கு.


கிட்டத்தட்ட இருப்பத்தேழு வருடங்களுக்கு முன்பு அவன் இஷ்டத்துக்கெல்லாம் வளைத்து ஆட்டிப்படைத்த மல்லிகா இல்லை அவள் என்பதை நன்றாக உணர்ந்தான். கற்பனையில் கூட அவனால் தீண்ட முடியாத ஒரு சூரியனைப் போல அக்னிப் பிழம்பாக அல்லவா எதிரே நின்றாள்?


***


தன்னை எந்த ஒரு விதத்திலும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் உச்சபட்ச ஆத்திரத்துடன் காட்டு அம்மன் கோவில் மண்டபத்தில் அமர்ந்தபடி மகனுக்காக காத்திருந்தார் வேலாயுதம்.


இயற்கை உபாதைகளைக் கூட பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்குக் கழிவறை வசதியுடன் கூடிய, ஏசி செய்யப்பட்ட ஆடம்பர படுக்கை அறையும், ஆளே உள்ளே புதைந்து போகும் அளவுக்கு சொகுசான மெத்தையும், இருபத்து நான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியும், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து சேவகம் செய்ய மனைவியும் மருமகளும், போதாத குறைக்கு தன் காம இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காகவே அடிமை வர்க்கம் பெற்றுப் போட்ட சதைப் பிண்டங்களையும் விட்டுவிட்டு, கொசுவும் வண்டுகளும் பிடுங்கித் தின்னும், அனலை வாரி இறைக்கும் இருட்டு குடோனுக்குள் அவரால் இருக்கவே முடியவில்லை. வெளியில் காவலுக்காக உட்கார்ந்திருக்கும் ஆட்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, விறு விறுவெனக் காட்டுப்பாதை வழியாக நடந்து இந்தக் கோவில் வரை வந்துவிட்டவருக்கு அதைத் தாண்டி ஊருக்குள் செல்ல உண்மையிலேயே அச்சமாக இருந்தது.


இந்த அறைவாசமே இவ்வளவு அசௌகரியமாக இருக்க சிறைவாசம் எப்படி இருக்கும் என்று தெரியாதா அவருக்கு?


மகன் புதிதாக வாங்கிக் கொடுத்திருந்த கைப்பேசிச் சட்டை பையில் பத்திரமாக இருக்க, அதை எடுத்து அவனுக்கு அழைத்து, "என்னால அந்த குடோன்ல எல்லாம் இருக்க முடியல. கை, கால் எல்லாம் வெலவெலத்துப் போச்சு. நான் நம்ம காட்டு அம்மன் கோவில்ல வந்து உட்கார்ந்து இருக்கேன். நீ உடனே கிளம்பி இங்க வந்து என்ன கூட்டிட்டுப் போயி வேற ஏதாவது ஒரு நல்ல இடத்துல தங்க வை… முடிஞ்சா உங்க அம்மாவையும் கூடவே கூட்டிட்டு வா" என்று கட்டளை தொனிக்க சொல்லிவிட்டு, மறுத்து அவன் ஒரு வார்த்தை பேசக் கூட இடம் கொடுக்காமல் பட்டென அழைப்பைத் துண்டித்து விட்டார்.


அப்பொழுதுதான் சென்னையில் இருந்து திரும்பியிருந்தவனின் உடலும் மனமும் ஓய்வுக்குக் கெஞ்ச, அவனுடைய அப்பா அங்கிருந்து தப்பித்து விட்டார் என்பதைத் தெரிந்து சந்திரா வேறு, "வயசானா இந்த மனுஷங்களுக்கே புத்திக் கெட்டுப் போயிடும் போல இருக்கு. இந்த வயசுல உங்கப்பன் செஞ்ச இந்தக் கேவலமான பொழப்புக்கு உங்க அம்மா வேற பொழுதன்னைக்கும் அழுது புலம்பிட்டு இருக்கு. இந்த அழகுல எங்க அண்ணன் ஃபோன் பண்ணான். உங்க அப்பாவல அங்க பொத்தினாப்பல இருக்க முடியாம, தப்பிச்சு எங்கயோ ஓடிப் போயிட்டாராம்" என அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருக்க,  அரை மணிநேரத்துக்கு மேலாக ஆட்களை அனுப்பி அவரைத் தேடிக் கொண்டிருந்தான். இந்த நிலைமையில் இவர் இப்படி சாவகாசமாகப் பேசவும் உச்சபட்ச ஆத்திரத்துடன் அவரைக் காண அங்கே வந்தான்.


மகனைக் கண்ட நொடி அந்தக் கோயில் மண்டப படிக்கட்டில் அமர்ந்திருந்தவர், “ரூமா அது, ஒரே இருட்டு. மிஷினு ஓடற சத்தம் வேற நாராசமா கேட்டுட்டே இருக்கு. கொசுக் கடிக்குது, வண்டு கடிக்குது. தோ பாரு, கை கால்ல எல்லாம் திண்டு திண்டா தடிச்சிப் போயிருக்கு” எனச் சத்தமாகப் புலம்பியபடி தடதடவென்று அவனை நோக்கி வர, தன் கட்டுப்பாட்டை மொத்தமாக இழந்திருந்தவன், தன்னுடைய கையை அவர் நெஞ்சில் மேல் வைத்து அப்படியே ஒரு தள்ளு தள்ள, எந்தப் பிடிமானம் கிடைக்காமல் தடால் எனக் கீழே சரிந்தார்.


இப்படி ஒரு செயலை மகனிடம் இருந்து அவர் எதிர்பார்க்கவே இல்லை என்பதை அவர் முகத்தில் பரவிய அதிர்ச்சியே சொல்லாமல் சொல்ல, "என்ன அரசு அப்பாவை போய் இப்படி செஞ்சிட்ட?" என்றார் குரல் நடுங்க.


"சுடுகாட்டுக்குப் போற இந்த வயசுல நீ செஞ்சு வச்ச வேலைக்கு நான் இதைக் கூட செய்யலன்னா எப்படி? வயசு காலத்துலதான் ஆட்டமா ஆடினேன்னு சொன்னா இப்படி காலம் போன காலத்துல கூட கேவலமா செஞ்சு வச்சிருக்கியே, உனக்கு கொசுக்கடிப் பெருசா போச்சா?" என்று அவன் போட்ட கூச்சலில் அவருடைய சப்த நாடியும் ஒடுங்கிப் போனது.


"ஜெயிலுக்குப் போகாம காப்பாத்தி சொகுசா வாழ வைக்கணும்னு உன்னை இப்படி ஒளிச்சு வெச்சிருக்கேன்னு நினைச்சியா? சத்தியமா கிடையாது! நீ மட்டும் ஜெயிலுக்குப் போனா, நீ செஞ்ச இந்தக் கேடு கெட்ட விஷயம் உலகத்துக்குத் தெரிஞ்சிடும். அதுக்குப் பிறகு, இந்த ஊர் உலகத்துல என் மானம் மரியாதை போறதோட என் பிள்ளைகளுக்கும் சரி, உன் மூத்த பிள்ளை இருக்கானே அவன் பெத்து போட்டு வச்சிருக்க பிள்ளைக்கும் சரி எதிர்காலம்ன்ற ஒண்னே இல்லாம போயிடும்" என்று சீறியவன்,


"உண்மைய சொல்லு, மல்லிகா சாகல உயிரோடதான் இருக்கான்னு உனக்கு தெரியுமா தெரியாதா?" என்று அவன் கேட்ட நொடி, அவருடைய பாதி உயிர் போய்விட்டது.


பதில் சொல்ல முடியாமல் அப்படியே பின்னோக்கி நகர்ந்தபடி நிமிர்ந்து உட்கார, "அவளை என் கண்ணால பார்த்தேன்யா! நேருக்கு நேரா பார்த்தேன்! எப்படி இருக்கா தெரியுமா? அப்படியே ஒரு மகாராணி மாதிரி, இந்த வயசுக்கு அப்படியே அழகா குத்து விளக்காட்டமா  இருக்கா. இந்த ஊர் உலகத்துல, நம்ம சாதிசனத்துல, சொந்த பந்தத்துல இப்படி ஒருத்தி தேடினாலும் கிடைப்பாளா?”


”ஒரு தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வெச்சிருக்காய்யா! அவளோட ஆஃபீஸ் எப்படி இருக்குன்னு தெரியுமா உனக்கு? அஞ்சு மாடி கட்டடத்துல ஒரு சொர்க்கத்தையே உருவாக்கி வெச்சிருக்கா!


அவ யாரோ ஒரு முன்ன பின்ன தெரியாதவ..ன்னு  நினைச்சு போகும்போதே உடம்பெல்லாம் உதறல் எடுத்துது. அவ யாருன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், 'மல்லி'ன்னு உரிமையா ஒரே ஒரு தடவை அவ பேர சொன்னதுக்கு, 'மரியாதையா நீயே வெளியில போறியா, இல்ல என்னோட பவுன்சர்ஸ வச்சு உன்ன தூக்கி ரோடுல கிடாசட்டுமா'ன்னு கேட்டா. அப்பதான் புரிஞ்சது அவ சாதாரண மல்லிகா இல்லன்னு. அவள பொறுத்த வரைக்கும் நான் ஒரு குப்பன்னு!


அப்படிப்பட்ட ஒருத்திக் கூட என்னை வாழ விடாம செஞ்சிட்டு, கரிச்சட்டி மாதிரி ஒருத்திய என் தலையில கட்டி வச்சிருக்க. என் தலைக்கு மேல ஏறி நின்னு ஜிங்கு ஜிங்குனு ஆடுறா இவ. எல்லாம் உனக்குப் பிள்ளையா பிறந்த தலை எழுத்து. சொத்து வேணாம் சுகம் வேணாம்ன்னு தூக்கிப் போட்டுட்டுப் போற புத்தி எனக்கு இல்லாம போச்சு இல்ல, அந்தப் பாவத்ததான் இப்ப அனுபவிக்கறேன்!" எனத் தன் ஆற்றாமை தீரப் புலம்பிக்கொண்டே போனான்.


அதிர்ச்சியில் தொண்டை வரண்டு போக, எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி அவர் மகனை ஏறிட, "தெரியுமாய்யா, நம்ம வீட்டுக்கு வந்துதே அந்தப் பொண்ணு ஸ்வரா! அவ யாருன்னு தெரியுமா? என்னோட பொண்ணு?" என்று சொல்லும் போது அவனுடைய குரலே உடைந்து போனது.


தலையில் இடியே இறங்கியது போல் இருந்தது வேலாயுதத்துக்கு. அவருடைய பார்வை சற்றுத் தொலைவில் போய் வெறிக்க, கையில் ஒரு தடித்த முள் கொம்பை ஏந்தி மல்லிகா அவரை அடித்த அடி நினைவில் வந்து உடல் முழுவதும் ஊசிக் குத்தியது.


தன் பக்கத்திலேயே குருதி வெள்ளத்தில் நனைந்தபடி ஒரு சிறு பெண்ணின் சடலம் கிடப்பது போல பிரமை தட்ட, பாவத்தின் மேல் பாவம் செய்த அந்த மனித உருவில் இருக்கும் நயவஞ்சகனுக்கு மூச்சு முட்டியது.


"பாவி! பாவி!  என் உயிர்ல இருந்து வந்த என் பொண்ணு மொத்தமா விஸ்வரூபம் எடுத்து இன்னைக்கு எனக்கு எதிரா நிக்கறா!! அவகிட்ட போய் விட்டுக் கொடுன்னு ஒரு வார்த்தை சொல்லக்கூட முடியாத ஒரு அசிங்கமான இடத்துல நான்  இருக்கேன்" என்ற படி சரிந்து அவருக்கு அருகில் மண்டியிட்ட வல்லரசு தன் கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு கண்ணீர் வடிக்க, தடதடவென்ற சத்தத்தில் அதிர்ந்து எழுந்து நின்றான். அப்படியே அவர்களைச் சுற்றி வளைத்தது காவல்துறை.


வேலாயுதத்தின் கைகளில் விலங்கு பூட்டி அவரை இழுத்துச் செல்ல, நிச்சயம் சட்டப்பூர்வமாக அவருகுக் கிடைக்கவிருக்கும் தண்டனை மிகக் கொடிதாக இருக்கும், ஏன் அது மரண தண்டனையாகக் கூட இருக்கலாம் என்பதை உணர்ந்து, மிரண்டு போய் அந்தக் காட்சியை அப்படியே பார்த்து நின்றான் வல்லரசு, அன்றொரு நாள் தன் தாயின் கையைப் பிடித்து இழுத்தபடி அவனுடைய வீட்டை விட்டு மல்லிகா வெளியேறும் போது பார்த்துக்கொண்டே நின்றானே அதேபோல!


***


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page