top of page

Kaattumalli - 28

Updated: Jan 8

மடல் - 28


தன் தகப்பனுக்காக, சமுதாயத்தில் தன் மதிப்பு மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில், தன் தன்மானத்தை விட்டுக் கொடுத்துக் கெஞ்சிக்கொண்டு, யாரிடம் கையேந்தி நிற்கப் போகிறோம் என்பது கூட தெரியாமல், பதைப்பதைத்துப் போய் வல்லரசுவை மல்லிகாவுக்கு எதிரில் வந்து நிற்க வைக்க, ராஜத்தை மருத்துவமனையில் அனுமதித்த மறுதினம் இங்கிருந்து கிளம்பிச் சென்ற ஸ்வரா செய்த காரியம்தான் என்ன? நன்காட்டூரில் அப்படி என்னதான் நடந்தது?


சரியாக ஏழு நாட்களுக்கு முன்…


இங்கிருந்து கிளம்பியதுமே அவளுடைய பாதுகாவலன் சுரேஷுக்கு அழைத்துதான் கிளம்பி அங்கே வந்து கொண்டிருப்பதைத் தெரிவித்தவள் விமான நிலையத்திற்கு வந்து தன்னை அழைத்துப் போகும்படி சொல்லி இருந்தாள்.


ஆனால் அவளை நன்காட்டூர் அழைத்துப் போக அங்கே வந்திருந்த பகலவனும் சக்தியும் காரில் அமர்ந்தபடி அவளுக்காகக் காத்திருந்தார்கள்.


அவர்களைப் பார்த்ததும் அவள் கேட்ட முதல் கேள்வியே, "ஹேய், நீங்க ரெண்டு பேரும் இன்னும் மும்பை போகாம இங்க உட்கார்ந்து என்ன செஞ்சிட்டு இருக்கீங்க?" என்பதுதான்.


"உங்க பிரச்சனைக்கு ஒரு சொல்யூஷன் கிடைக்காம இவனும் அங்க போக மாட்டான் என்னையும் போக விடமாட்டான்" என்று பகலவன் பதில் கொடுக்க, அவளிடம் நேரடியாக எதுவும் பேசாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தான் சக்தி. அவளிடம் முகம் கொடுத்துப் பேசக்கூட அவன் விருப்பப்படவில்லை என்பது புரிந்தது. வழக்கத்திற்கு மாறாக அவனது முகத்தில் வருத்தமும் சோர்வும் மண்டிக் கிடந்தது.


பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும் அவனிடம் பேச்சுக் கொடுத்து தன் பிரச்சனையை கவனிக்க அவளுக்கு அப்பொழுது நேரமில்லை. அவள் முகத்தில் படர்ந்திருந்த தீவிர யோசனையை உணர்ந்து, "என்ன ஆச்சு ராஜ், இந்த முக்கியமான நேரத்துல அத்த கூட இருந்து பாட்டிய கவனிச்சுக்காம, நீ எதுக்கு இவ்வளவு அவசரமா இங்க வந்த?" என்று கேட்டான் பகலவன்.


"ரொம்ப ரொம்ப அர்ஜென்ட்தான் பகலவா, முதல்ல என் மைண்ட்ல இருக்கிற விஷயத்தை கரெக்ட்தானான்னு கன்ஃபார்ம் பண்ணிட்டு உன்கிட்ட சொல்றேன்" என்றாள் சுற்றி வளைக்காமல்.


"பெரிய இவ" என வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த பகலவனுக்கு அருகில் உட்கார்ந்திருந்த சக்தி.


மேற்கொண்டு எதுவும் பேசாமல் தன் கைபேசியில் எதையெதையோ கூகுள் செய்து, தீவிரமாக அவற்றை படித்துக் கொண்டிருந்தாள்.


திடீரென நினைவு வந்து, "வழில ஏதாவது நல்ல டிபார்ட்மென்டல் ஸ்டோரா பார்த்து வண்டியை நிறுத்துப் பகலவன்" என்று சொல்ல அவள் சொன்னது போலவே ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தினான்.


தான் மட்டும் இறங்கி உள்ளே சென்றவள், சில நிமிடங்களில் ஏதேதோ வாங்கிக்கொண்டு திரும்ப வந்தாள்.


என்ன ஏது என்று பகலவன் எதுவும் தோண்டித் துருவிக் கேட்கவில்லை என்றாலும் பின்புறம் திரும்பிப் பார்த்த சக்தி அவள் வாங்கி வந்திருந்த பொருட்களைப் பார்த்து வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.


என்ன என்பதாக பகலவன் பார்வையாலேயே கேட்க, "சாக்லேட்சும் டெடிபியரும் வாங்கிட்டு வந்திருக்கா, அவங்க பாட்டி வீட்டுல இருக்கிற குட்டீஸ்களுக்கு ஐஸ் வைக்கப் போறான்னு நினைக்கிறேன்" எனக் கிசுகிசுத்தான்.


"இருக்கும், எல்லாமே அவளோட கசின்ஸ் இல்ல" என்று அதை ஆமோதித்தான் பகலவனும்.


ஆனால் அவர்கள் நினைத்ததற்கு மாறாக, அவர்கள் தங்கி இருக்கும் வல்லரசுவின் தோப்பு வீட்டிற்கு நேராக வாகனத்தை விடச் சொன்னவள், மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.


வீட்டிற்குள் நுழைந்ததுமே, "இங்க மஞ்சுன்னு ஒரு பொண்ணு வேலை செய்ய வரும் இல்ல, மார்னிங் வேலைய முடிச்சுட்டு போயிடுச்சா?" என்று கேட்டாள் வரவேற்பறையில் அமர்ந்திருந்த பிரபுவிடம்.


"இன்னும் போகல மேம், பின்னால கிணத்தடியில பாத்திரம் துலக்கிட்டு இருக்கு" என்று அவளுக்குப் பதில் கொடுத்தவன், "வல்லரசு சார் வீட்ல இருந்து பிரேக்ஃபாஸ்ட் அனுப்பி இருக்காங்க. நீங்க சாப்பட்றீங்களா" எனக் கேட்டான்.


"எனக்கு பசி இல்ல பிரபு, இப்ப வேண்டாம்" என்று அவனுக்குப் பதில் கொடுத்துவிட்டு, "ஆல்ரெடி டென் தர்ட்டி ஆயிடுச்சு .எனக்காக வெயிட் பண்ண வேண்டாம். உங்களுக்குப் பசிச்சா நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க" என்று சொல்லிவிட்டு அவசரமாக வீட்டின் பின்பக்கம் சென்றாள்.


அங்கே கிணற்றடியில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்த மஞ்சுவை நெருங்கி, "ஹாய் மஞ்சு" என்று அழைக்க, "ஐ அக்கா, அதுக்குள்ள வந்துட்டீங்க" என்று மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு, " ராஜம் பாட்டி இப்ப எப்படி இருக்காங்கக்கா?" என்று அக்கறையுடன் விசாரித்தாள்.


"பெட்டரா இருக்காங்க"  என்று அவளுக்குப் பதில் சொல்லிவிட்டு, "அன்னைக்கு கூட்டிட்டு வந்தியே, அந்த திவ்யா பாப்பா இப்ப எங்க இருக்கும்ன்னு தெரியுமா?" என்று கேட்டாள்.


"நம்ம பெரிய ஐயா வீட்டுப் பின்னால, மாட்டு தொழுவத்துக்குப் பக்கத்துலதான் விளையாடிட்டு இருக்கும்.‌ அவங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் பகல் பொழுதுக்கு அங்கதானே வேல செஞ்சிட்டு இருப்பாங்க!" என்று பதில் வந்தது அவளிடம் இருந்து.


"சரி, இந்த வேலை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், நீ முதல்ல கிளம்பிப் போயி அந்தப் பாப்பாவ இங்க கூட்டிட்டு வா. அவங்க அம்மாவோ அப்பாவோ கேட்டாங்கன்னா, ஸ்வரா அக்காதான் கூட்டிட்டு வரச் சொன்னாங்கன்னு சொல்லு" என்று சொல்லி அவளை அனுப்ப, தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் மஞ்சு.


அவளுக்காக வரவேற்பறையிலேயே அமர்ந்தபடி காத்திருந்தாள் ஸ்வரா. சில நிமிடங்களில் அந்தக் குழந்தையுடன் அங்கே திரும்ப வந்த மஞ்சு,"ஸ்வரா அக்கா" என வெளியில் இருந்தபடியே குரல் கொடுத்தாள்.


வேகமாக வெளியில் வந்தவள், மஞ்சுவின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த திவ்யாவைப் பார்த்து, "ஹாய் திவி குட்டி! எப்படி இருக்கீங்க?" என்று கனிவுடன் பேச்சுக் கொடுக்க,


"நன்றாக இருக்கிறேன்"என்று என்பதாக வெட்கப்பட்டுக் கொண்டே தலையசைத்தது அந்தக் குழந்தை. அதன் பாவனையைப் பார்த்ததும் அவளது கண்களே கலங்கிப் போயின.


மஞ்சுவைப் பார்த்து 'நீ போ' என கண்களால் ஜடை செய்துவிட்டு கைவிரல் மடக்கி அருகில் வா என அழைத்தவள், தயங்கித் தயங்கி அவளிடம் வரவும் அந்தப் பிள்ளையின் கையைப் பற்றிக் கொண்டு, "அக்கா உனக்கு நிறைய கிஃப்ட் வாங்கிட்டு வந்து இருக்கேன் தெரியுமா. என் கூட வா நான் உனக்கு தரேன்" என்று ஆசைக் காண்பிக்க கண்கள் ஒளிர அவளுடன் உள்ளே வந்தது அந்தக் குழந்தை.


தான் வாங்கி வந்திருந்த பையைக் கையில் எடுத்துக் கொண்டு அந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றாள்.


அந்த அறையின் செழுமையைப் பார்த்து மிரண்டு போய் அந்த குழந்தை உள்ளே வரத் தயங்க, "அதான் அக்கா இருக்கேன் இல்ல, நீ ஏன் பயப்பட்ற. உள்ள வா" என்றபடி மென்மையாக அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து அறைக்குள் அழைத்துச் சென்றவள் மெத்தை மேல் அமர்ந்தபடி அந்தக் குழந்தையைத் தன் மடியில் இருத்திக் கொண்டு, தான் வாங்கி வந்திருந்த பொம்மையை எடுத்து அதனிடம் கொடுத்தாள்.


அந்தப் பொம்மையை பார்த்ததும் அவ்வளவு மகிழ்ச்சியும் பரவசமுமாக அதை எடுத்து அணைத்துக்கொள்ள, அந்தக் குழந்தையைப் பக்கத்தில் அமர வைத்து அதன் முகத்தைப் பார்த்தவாறு, "பிடிச்சிருக்கா" என்று கேட்க, நன்றாகத் தலையை ஆட்டியது.


தான் வாங்கி வந்திருந்த சாக்லேட்டில் இருந்து ஒன்றை எடுத்து அதனிடம் நீட்டியபடி, "இது எல்லாமே உனக்குதான். நான் கேட்கிற கேள்விக்கு நீ பதில் சொல்ல சொல்ல அக்கா ஒண்ணு ஒண்ணா கொடுப்பேனாம்" என்று சொல்லிக் கொண்டிருக்க அவள் கொடுத்த சாக்லேட்டைப் பிரித்து வாயில் திணித்துக் கொண்டு தலையை ஆட்டியது குழந்தை.


"உங்க அம்மா அப்பா வேலை செய்றாங்க இல்ல, அந்த வீட்டுல யாராவது உன்ன மடியில வச்சு கொஞ்சுவாங்களா?" என்று கேட்க, அவளைத் திரும்பி ஒரு மாதிரியான பார்வை பார்த்தபடி 'ஆமாம்' என்பதாக தலை அசைத்தது.


"யாரு?" என்று அடுத்த கேள்வி கேட்க, ஒரு நீண்ட யோசனைக்கு பிறகு, "பெரிய தாத்தா" என்று பதில் கொடுத்தது.


"ஓ, நெத்தியில பெரிய குங்கும பொட்டெல்லாம் வச்சுட்டு, பெரிய மீசை வச்சிருப்பாங்களே அந்தத் தாத்தாவா?" என்று அந்தக் குழந்தையின் பாவத்திலேயே கேட்க, ஆமாம் என்று தலையசைத்தது.


"அந்த தாத்தா உன்ன எப்படி கொஞ்சுவாங்க?" என்று கேட்க, "எனக்கு நிறைய சாக்லேட் கொடுப்பாங்க, அப்பறம் மடியில உட்கார வச்சுப்பாங்க?" என்று வாயில் இவள் கொடுத்த சாக்லேட்டை குதப்பியப்படியே பதில் சொன்னது.


"அப்பறம் என்ன செய்வாங்க"


"முத்தா கொடுப்பாங்க"


தொண்டையை அடைத்தது ஸ்வராவுக்கு. அடுத்த கேள்வி கேட்பதற்குள் நெஞ்சுக் கூடே உலர்ந்து போனது. உதடுகள் துடிக்க வார்த்தைகள் தந்தி அடித்தன.


"எங்கெல்லாம் முத்தா கொடுப்பாங்க" என்று கேட்டபடி இன்னொரு சாக்லேட்டை எடுத்து அந்தக் குழந்தையிடம் நீட்டினாள்.


முதலில் தன் கன்னத்தைச் சுட்டிக் காண்பித்தது, அவள் திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்க, சாக்லேட் வழியும் தன் உதடுகளைத் தொட்டுக் காண்பித்தது. அதற்குள்ளாகவே அவளது சப்தநாடியும் ஒடுங்கிப் போய் இருக்க, மீதம் அந்தக் குழந்தை சுட்டிக் காண்பித்த பாகங்கள் எல்லாம் அந்தக் கிழவனின் பாதகத்தைச் சொல்லாமல் சொன்னது. மேற்கொண்டு பேசும் தைரியமே இல்லாமல் போனாலும் கூட கொஞ்சம் கொஞ்சமாகப் பேச வைத்து எந்த அளவுக்கு அந்தக் குழந்தை இடம் அவன் எல்லை மீறி இருக்கிறான் என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டாள்.


 "அந்த தாத்தா, உனக்கு எந்த இடத்துல வச்சு சாக்லேட் கொடுப்பாரு" என்று கேட்க, "அங்க ஒரு மாடிப்படி இருக்குமே அதுக்குக் கீழ" என்றது குழந்தை.


பழகிய இடம்தான் என்கிற தைரியத்தில், வேலையின் மும்முரத்தில் இருந்த பெற்றவர்கள் குழந்தையைப் பற்றி பெரிதாக கவலை கொள்ளவில்லை என்பது புரிந்தது.


அதற்கு மேல் தாங்க முடியாமல் நேராக குளியலறைக்குள் போய் குலுங்கி அழுதவள் தன் முகத்தைக் கழுவித் தன்னைச் சமன் செய்து கொண்டு திரும்ப வெளியில் வந்தாள்.


அவள் கொடுத்த அந்த பொம்மையைக் கொஞ்சிய படி மற்றொரு சாக்லேட்டைச் சுவைத்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை.


முந்தைய இரவு மல்லிகாவுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பல விஷயங்களையும் ஒன்றுடன் ஒன்று கோர்வையாக நினைத்துப் பார்க்க திவ்யா பாப்பாவை அன்று சந்தித்த தினம் நடந்த அனைத்தும் நினைவில் வந்து அவளுக்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது.


அன்று அவள் யோசிக்க தவறியது அந்தக் குழந்தை மேலிருந்து வந்த அழுத்தமான  மணத்தை! ஆம், வேலுச்சாமியின் அறை முழுதும் வீசும் அவரது வாசனை திரவியங்களில் அதிகப்படியான நெடியை! அது அவ்வளவு அழுத்தமாக அந்தக் குழந்தை மேல் படிந்திருகிறது என்றால்?


ஒரு வேளை அவன் ஃபிடோபைலிக் சைக்கோவாக இருந்தால்? ஒருவேளை அவன் இதை இன்று வரை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால்?.


அந்தக் குழந்தை உட்காரக் கூட முடியாமல் பட்ட அவஸ்த்தையை அன்று அவ்வளவு இயல்பாகக் கடந்திருக்கக் கூடாதோ எனக் குற்ற உணர்ச்சியில் தவித்தாள்.


இதை நேரடியாக அந்தக் குழந்தையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இவ்வளவு அவசரமாக இங்கே ஓடி வந்திருந்தாள்.


இது எல்லாவற்றையும் கடந்து, 'தெய்வமே, அதுபோல எதுவும் நடந்திருக்கக் கூடாது!' என்கிற ஒரு அழுத்தமான பிரார்த்தனையும் அவளிடம் இருந்தது. ஆனால், தெய்வம் என்றைக்குத்தான் நலிந்தவர் பக்கம் நின்றிருக்கிறது? அவளது இந்த ஒரே ஒரு பிரார்த்தனையும் பலனற்றுப் போய்விட்டது.


அழுகையை அடக்க முயன்றதால் அவளது தொண்டை அடைத்தது, ஆனாலும் தன்னைச் சமாளித்தபடி குழந்தையின் அருகில் வந்தமர்ந்தவள், "அந்தத் தாத்தா உன்ன அப்படி செய்யும்போதெல்லாம் உனக்குப் பயங்கரமா வலிச்சிருக்குமே, உன்னோட அம்மா கிட்ட நீ சொல்லலியா பாப்பா?" என்று கொஞ்சும் தொனியில் கேட்க,


"ஆமாம், ரொம்ப வலிக்குதுக்கா, ஆனா யார்கிட்டயாவது சொன்னா, சாக்லேட் எல்லாம் தரமாட்டேன்னு அந்தத் தாத்தா சொல்லுவாரு. அதனாலதான் சொல்லல" என்று சொல்லிவிட்டு, சட்டென்று ,தான் ஏதோ தவறு செய்து விட்டதாக எண்ணிக் கொண்டு, "அய்யய்யோ, அக்கா நான் இதை உன்கிட்ட சொல்லிட்டேனே, நீ அந்தத் தாத்தா கிட்ட சொல்லிடாத! அப்புறம் அவர் எனக்கு, இந்த மாதிரி பெரிய சாக்லேட் குடுக்க மாட்டாரு. அம்மா கிட்ட கேட்டாலும் வாங்கி குடுக்காது.‌ காசு இல்லன்னு சொல்லிடும்" என்றாள் அப்பாவியாக.


எப்படியும் இந்த துன்புறுத்தல்களினால் உண்டான உடல் உபாதைகள் அந்தக் குழந்தைக்கு இல்லாமல் இருந்திருக்காது.‌ இன்னும் இரண்டு பிள்ளைகள் வேறு அவர்களுக்கு இருக்க, பெற்றவர்களின் முழு கவனமும் இந்தக் குழந்தை மேல் இல்லாமல் அவர்கள் வாழ்வாதாரத்தை நோக்கி ஓடுவதிலேயே இருந்திருக்க, குழந்தையிடம் ஏற்பட்டிருக்கும் இப்படிப்பட்ட மாறுதல்களைக் கூட அவர்களால் இனம் காண முடியவில்லை போலும் என்று எண்ணிக் கொண்டாள்.


அந்தக் கிழவனை கொன்று போடும் அளவுக்கு ஆத்திரம் உண்டானது அவளுக்கு. இருந்தாலும் அந்த சிறு குழந்தையின் முன்பாக அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு தான் எதையும் வெளிப்படுத்தி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவள் வேகமாக அறையை விட்டு வெளியில் வந்து அங்கிருந்த சோஃபாவில் கால்களை மடித்து அமர்ந்து முகத்தைப் புதைத்துக் குலுங்கினாள்.


அதைத் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் பதறிப்போய் பகலவனை அழைத்து வரக் கூடவே சக்தியும் ஓடி வந்தான்.


"ராஜ், என்னம்மா ஆச்சு? ஏன் இப்படி ஸ்ட்ரேஞ்சா பிஹேவ் பண்ற?" என்றபடி அவளை நிமிர்த்த, கண்ணீர் பெருகி விழிகள் எல்லாம் சிவந்து உணர்ச்சிப் பிழம்பாகக் காட்சியளித்தாள்.


ஒவ்வொரு ஆணுவும் பதறிப் போக அவளை தன் தோளுடன் சாய்த்துக் கொண்டவன், "எவ்வளவோ பிரச்சனைகள ஃபேஸ் பண்ணியிருக்கோம். ஈவன் சக்தியோட அப்பா நம்மள அவ்வளவு மோசமா இல் டிரீட் பண்ணப்ப கூட நீ இவ்வளவு பிரேக் ஆகல. என்னாச்சு ராஜ்? சொல்லு" என்று அவன் துடிக்க, தான் இருக்கும் நிலைமையை முற்றுமாக உணர்ந்தவள் அவன் தோளிலேயே நன்றாக முகத்தைத் துடைத்து, பெரிய பெரிய மூச்சுக்கள் எடுத்துத் தன்னைச் சமன் செய்து கொண்டாள்.


இவர்கள் இருவரின் இந்தப் பிணைப்பைப் பற்றி ஏற்கனவே நன்றாகத் தெரிந்து வைத்திருந்தாலும், இப்படி ஒரு சூழ்நிலையில் அவளை நெருங்க கூட முடியவில்லையே எனத் தவித்துப் போய் நின்றிருந்தான் சக்தி.


பகலவனின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும் மனநிலையிலேயே இல்லை அவள். "திவ்யபாரதி மேம் நம்பர் உன் கிட்ட இருக்கு இல்ல, டயல் பண்ணி குடு பகலவா" என்று மட்டும் சொன்னாள், மூக்கை உறிஞ்சியபடி.


1 comment
© KPN NOVELS COPY PROTECT
bottom of page