Kaattumalli - 27
- Krishnapriya Narayan
- Aug 12, 2023
- 8 min read
Updated: Jan 8, 2024

வணக்கம் அன்புத் தோழமைகளே!
இந்தக் கதைக்கு நீங்கள் கொடுத்து வரும் தொடர் ஊக்கத்தினால் தான் அடுத்தடுத்த பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் Final ஒரே ஒரு பகுதி மட்டுமே மீதம் இருக்கிறது. ஓரிரண்டு நாட்களில் போட்டு விடுகிறேன்.
சிறியதாக எழுத நினைத்த கதை தான், இவ்வளவு பெரிதாக வளரும் என்று நானே நினைக்கவில்லை.
மிகவும் அழுத்தமான கதைக்களம் என்றாலும் இவ்வளவு பேர் விரும்பி வாசிக்கிறீர்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நன்றி! நன்றி! நன்றி!
கூடவே, நிலமங்கை வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
இந்தக் கதை முடிந்தவுடன் அடுத்த வாரத்தில் இருந்து நிலமங்கையை தொடரவிருக்கிறேன்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடுத்தடுத்த பதிவுகள் கொடுக்கும் முனைப்பில் இருக்கிறேன், நம்பலாம்.
இந்த அத்தியாயத்தைப் பற்றிய உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மறக்காதிர்கள்.
மடல் - 27
அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வரை வந்து இறங்கி அதன் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கேர் ஃபார் லைஃப்புக்கு கொண்டுவரப்பட்டார் ராஜம்.
எதையும் சிந்தித்து வருத்தப்படவோ அல்லது ஸ்தம்பித்து உட்காரவோ நேரம் இல்லாமல், ஸ்வராவுடன் பேசி அழைப்பைத் துண்டித்த கையுடன் நேராக கேர் ஃபார் லைஃப்க்கு வந்து தாமரையைச் சந்தித்து தன் அம்மாவின் உடல் நிலைக் குறித்துப் பேசி அவருக்கான சிகிச்சைக்கான ஏற்பாட்டைச் செய்து முடித்தாள் மல்லிகா.
தாமரை எவ்வளவு சொல்லியும் அவளது கேபினில் போய் அமரவில்லை, மருத்துவமனையின் முக்கிய வரவேற்பு பகுதியிலேயே காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்தபடி அம்மாவுக்காகக் காத்திருந்தாள்.
வேக நடையுடன், ஒரு அவசர கதியில் ஆனந்த் அங்கே வர, அவனைப் பார்த்ததும் பரபரப்பானாள்.
பின்னோடோ மருத்துவமனை ஊழியர் வேகமாக ஸ்ட்ரக்சரைத் தள்ளிக் கொண்டு வரவும், அதில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த தன் அன்னையைப் பார்த்தபடி அருகில் ஓடி வந்தாள். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு மேல் கடந்து போயிருந்தது அவள் தன்னைப் பெற்ற தாயைப் பார்த்து. தலைமுடி மொத்தம் நரைத்துப் போய், தோல் சுருங்கி, நோயின் பிடியில் மயக்கத்தில் இருந்த ராஜம், நூறு சதவிகிதம் வேறு யாரோ போல மாறிப் போயிருந்தார்.
அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்வுகள் மொத்தம் வெடித்து சிதற, 'அம்மா' என அடிவயிற்றில் இருந்து எழுந்த விம்மலுடன் சுற்றுப்புறம் மறந்து மல்லி கதற, அவர் கையில் போடப்பட்டிருந்த டிரிப்ஸ் பாட்டிலைத் தூக்கிப் பிடித்த படி அருகில் நடந்து வந்த ஜீவானந்தம் அதிர்ச்சியுடன் அவளை ஏறிட்டான்.
சிறு வயதில் பார்த்த அக்காவின் முகம் அவனுக்கு நினைவில்லையே இல்லை. 'யார் இந்தப் பெண்மணி? தன் தாயைப் பார்த்து ஏன் இப்படி அழுது துடிக்கிறாள்' என்று சுத்தமாகப் புரியவே இல்லை அவனுக்கு.
அந்த ஸ்ட்ரக்சர்சைப் பிடித்தபடி தானும் கூடவே ஓட, அவளைப் பார்த்துவிட்டு அவசரமாக அருகில் வந்த அனந்த், "பயப்படாதீங்கம்மா, பாட்டிம்மாவுக்கு எதுவும் ஆகாது" என்று ஆதரவாகப் பிடித்துக் கொண்டான். இன்னும் அதிகமாக அதிர்ந்தான் ஜீவானந்தம்.
அதே நேரம் ஸ்வராவும் அல்லிக்கொடியும் ஓட்டமும் நடையுமாக அங்கே வரவும், மகளைப் பார்த்ததும் இன்னும் அதிகமாக உடைந்து போனவள், அவளைக் கட்டி அணைத்தபடி, "ஏன் ராஜ், சரியா இந்த நேரம் பார்த்து அந்த ஊருக்குப் போன? இவங்களை இந்த நிலைமையில தூக்கிட்டு வரவா? இல்ல இப்படி ஒரு நிலம இவங்களுக்கு வரப்போகுதுன்னு தெரிஞ்சா?" என்று அனற்ற,
"அம்மா, நீ இந்த நேரத்துல இப்படி எமோஷனல் ஆனா, அது வேலைக்கே ஆகாது. அவங்க கடைசியா மயக்கமாகும் போது கூட உன் ஃபோட்டோவ பார்த்துப் பேசிக்கிட்டேதான் மயங்கினாங்க. நீ முதல்ல தைரியமா இரு. அப்பதான் பாட்டிய காப்பாத்த முடியும்?" என்று ஸ்வரா சொல்லவும், அப்பொழுதுதான் மண்டையில் ஓங்கி அடித்தார் போல என்ன ஏது என்பதை விளங்கியது ஜீவாவுக்கு.
அதிர்ச்சியில், " மல்லி…க்காவா?" எனக் கையில் பிடித்திருந்த பாட்டிலை நழுவ விட, சட்டென அதைப் பிடித்துக் கொண்டாள் ஸ்வரா.
தடதடவென அந்த ஸ்ட்ரக்சரை மின்தூக்கிக்குள் தள்ளிக் கொண்டு மருத்துவமனை ஊழியர் உள்ளே செல்ல, ஜீவா, ஸ்வரா, மல்லி மட்டுமே உடன் செல்ல இடமிருந்தது.
"நீங்கல்லாம் முதல்ல போங்க, நாங்க ரெண்டு பேரும் அப்பறமா வரோம்" என்று அல்லி சொல்லிவிட, மேலே வந்ததும் மற்ற மூவரும் வெளியிலேயே நின்றுவிட, ஐ.சி.யூவுக்குள்ளே அவரைக் கொண்டு சென்றனர். அங்கே மருத்துவர்கள் தயாராக இருக்க, நிமிட நேரம் கூட தாமதிக்காமல் அவருக்கான சிகிச்சையைத் தொடங்கினார்கள்.
பேச்சு வராமல் ஜீவாவும் மல்லிகாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நிற்க இருவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வராவுமே மிகவும் நெகிழ்ந்து போயிருந்தாள்.
தன்னைச் சமாளித்துக் கொண்டு அருகில் இருந்தவர்களையும் சகஜமாக்கும் பொருட்டு, "அம்மா, சார் யாருன்னு உனக்கு அடையாளம் தெரியுதா?" என்று கேட்க, தொண்டையை அடைத்துக் கொண்டு, பதில் சொல்ல வார்த்தையே வரவில்லை மல்லிகாவுக்கு. அடையாளம் தெரிந்தது என்பதாக தலையை மட்டும் ஆட்ட, "சார் ஐ.பி.எஸ் படிக்கிறார் தெரியுமா, எக்ஸாம் எழுதிட்டு ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்காம்" அதற்கு மேல் தாங்க மாட்டாமல் அப்படியே அவன் தோள் மீது சரிந்து, "ஜீவா" எனக் கண்ணீர் வடித்தாள். அவளிடமிருந்து அவனுக்குள் கடத்தப்பட்ட கனவல்லவா அது! அவனது கரங்களும் ஆதரவாக அவளைத் தன்னுடன் அணைத்துக் கொள்ள, அவனது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவள் உச்சியை நனைத்தது. அதற்கு மேல் இருவருக்குமே எதுவும் பேசிக்கொள்ள தோன்றவில்லை.
அப்பொழுது வெளியில் வந்த மருத்துவர், "அவங்களோட ஹார்ட்ல இருக்கற மூணு வால்வுல ஃபுல்லா பிளாக் இருக்கு" என்று தொடங்கி அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்வது தவிர வேறு வழியில்லை என்று சொல்ல, அதற்கு ஒப்புக் கொண்டார்கள்.
ஆனாலுமே அவர் உடல் நிலையைச் சற்று சரி செய்து அதற்கு பின்தான் அறுவைச் சிகிச்சை செய்ய முடியும், அதுவரை மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருந்தாக வேண்டும் என்கிற சூழ்நிலை.
ஒவ்வொருவராக உள்ளே போய் ராஜத்தைப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அந்த மருத்துவர் அங்கிருந்து அகல, மல்லிதான் முதலில் சென்றாள். ராஜத்தின் காதருகில் குனிந்து அம்மா என்று அழைக்க, அவரிடம் எந்த சலனமும் இல்லை. கண்களில் இருந்து வழிந்த நீர் அவரது முகத்தில் பட்டுத் தெறிக்க, உணர்வற்றேதான் கிடந்தார்.
மெதுவாக தன் கைகளை எடுத்து அவரது கன்னத்தை வருடியவள், அம்மாவின் கையை எடுத்து தன் கைக்குள் பொத்திக் கொள்ள, அவளது ஸ்பரிசத்தை உணர்ந்தார் போன்று அவரது விரல்கள் அவளது விரல்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டது. வியப்புடன் நிமிர்ந்து அவரது முகத்தைப் பார்க்க, அவரது மயக்கம் தெளியவில்லை என்றாலும் கண்களில் ஓரத்தில் நீர் வழிந்தது.
"அம்மா, உம்மல்லிய உணர்ந்துட்டியாம்மா?" என மெலிதாக முணுமுணுத்தபடி, பற்றியிருந்த அவரது கையை எடுத்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள் மல்லிகா.
அந்த அறையின் கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டே நின்றாள் ஸ்வரா எதையோ சாதித்துவிட்ட பெருமையுடன். நடப்பதெல்லாம் கனவா அல்லது நிஜமா என்ற வியப்பு விலகாமல் அவளையே பார்த்திருந்தான் ஜீவானந்தம்.
***
மேலே வந்து அவர்களிடம் நிலைமையை விசாரித்துவிட்டு, வெளியிலிருந்தபடியே கண்ணாடி வழியாக ராஜத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பிச் சென்றுவிட்டார் அல்லிக்கொடி.
அதன் பிறகு, அவர்கள் தங்குவதற்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த அறைக்கு மூன்று பேரும் வந்தனர்.
"ஹாஸ்பிட்டல் ரூம் மாதிரியா இருக்கு, பைவ் ஸ்டார் ஹோட்டல் சூட் ரேஞ்சுல இல்ல இருக்கு" என்று ஜீவா வியக்க,
"ஆமாம் ஜீவா, கிட்டத்தட்ட அப்படித்தான். இதுவும் விஐபி சூட்தான். இந்த ஹாஸ்பிட்டலோட சேர்-பர்சன் தாமரை அம்மாவோட ஃப்ரெண்ட். நம்ம கம்பெனில வேலை செய்ற ஸ்டாப்ஸ் எல்லாரும் இங்கதான் வந்து ட்ரீட்மென்ட் எடுத்துப்பாங்க. இங்க, சாதாரண மக்கள் டிரீட்மென்ட் எடுக்கற சேரிடபிள் டிரஸ்ட்டும் இருக்கு, இந்த மாதிரி விஐபி ட்ரீட்மென்ட்டும் இருக்கு" என்று விளக்கம் கொடுத்தாள் ஸ்வரா.
"இதெல்லாம் இருக்கட்டும், பகலவன் ஏன் இன்னும் வரல?" என்று மல்லிகா அவளிடம் கேட்க,
"அம்மா இந்த சக்தி அங்கு வந்து உட்கார்ந்து குழப்பம் பண்ணிட்டு இருக்கான். அதுக்கு நடுவுல இந்தப் பிரச்சன வேற ஆனதுனால, எப்படியாவது அவன சமாதானப்படுத்தி மும்பைக்கே கூட்டிட்டுப் போகச் சொல்லி பகலவன் கிட்ட சொல்லிட்டு வந்தேன். ஃபிளைட்ல வேற இடம் இல்ல" என்று விளக்கம் கொடுத்தாள்.
"உன்ன இந்த மாதிரி நான் திரும்ப பார்ப்பேன்னு கனவுல கூட நினைச்சு பார்க்கலக்கா. நீ காணாம போன அன்னைக்கே நம்ம பாட்டி இறந்துட்டாங்க, உன்ன தேடிட்டு போறதா இல்ல அவங்கள அடக்கம் செய்யறதா எது முக்கியம்னு வரும்போது, அதுதான் முக்கியமா போச்சு!
அதுக்கு பிறகு ஒரு வாரம் கழிச்சு, நம்ம ஊர் காட்டுக்குள்ள அழுகி போய் துண்டு துண்டா போன ஒரு பொண்ணோட பிணம் கிடந்தது தெரிய வந்துது. அதுல உன்னோட துணியோட பீசஸ் இருந்துது. அதனால இறந்து போனது நீதான்னு முடிவு பண்ணிட்டாங்க. அந்த வயசில எனக்கு எதுவுமே புரியல. பிரியா அக்கா கிட்ட கேட்டதுக்கு, சிறுத்தை இழுத்துட்டுப் போய் கொன்னுடுச்சுன்னு சொல்லிச்சு. அப்பல்லாம் உன்ன நெனச்சு அம்மா தினமும் அழுவாங்க. அம்மா அழறத பார்த்துட்டு நானும் அழுதுருக்கேன் தெரியுமா. நீ இல்லாம நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்க்கா" என்று சொல்லி அவள் மடியில் முகம் புதைத்து அழுகையில் குலுங்கினான்.
சிறு வயது நினைவுடன் அவளுடைய கரங்கள் அவன் தலை கோத, "இப்ப வரைக்கும், அம்மா உன்ன பத்தி பேசாத நாளே கிடையாது தெரியுமாக்கா. யாருமே இல்லாதப்ப உன் ஃபோட்டோவ பார்த்து தனியா பேசிட்டு இருப்பாங்க" என்று எதார்த்தமாக அவன் சொல்ல போக அப்படியே குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கி விட்டாள்.
இருவரும் சேர்ந்து அவளை சமாதானப்படுத்த, தன்னைத் தேற்றிக்கொண்டாள்.
காஃபி, பழரசம், சிற்றுண்டிகள் என நேரத்திற்கு அறைக்கே வந்துவிட, இடையிடையில் போய் ஒருவர் மாற்றி ஒருவர் ராஜத்தையும் பார்த்து வந்தாலும், ஒன்றும் பேசாமல் அமைதியாக உட்கார முடியவில்லை.
அங்கு தொட்டு இங்கு தொட்டு பேச்சு கடைசியில் நன்காட்டூரில்தான் வந்து நிற்கும்.
மற்ற இரு சகோதரர்கள், தங்கை, அவர்கள் திருமண வாழ்க்கை அவர்கள் பெற்ற பிள்ளைகள் என்ன பேச்சு சுவாரசியமாகவும் இருந்தது. பிரியாவின் மகளுக்கே திருமணம் செய்து விட்டார்கள் என்று கேட்டு மிகவும் வியந்து போனாள்.
"ஆரம்பத்துல நீ பயந்து கிளம்பி போன சரி, ஆனா இப்படி நல்ல நிலைமைக்கு வந்த பிறகும் நீ ஏன் அக்கா ஊர் பக்கமே வரல. நீ இப்படி நல்லா வாழறத அவங்க எல்லாம் பார்க்க வேண்டாமா?" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படையாகவே ஜீவா கேட்கப் போக,
"எல்லாம் அந்த சனியன் புடிச்ச வேலாயுதத்தாலதான்"என்று அவள் வெடித்துச் சிதற,
"அந்தக் கிழ கோட்டானுக்கு என்ன கேடு. இப்ப வரைக்கும் ஊர் வயத்துல அடிச்சு தின்னுட்டு, நல்லா மலமாடு மாதிரி கொழுத்துக் கிடக்கறான். அவனெல்லாம் ஒரு ஆளுன்னு பயந்துட்டா நீ அங்க வராம இருந்த?" என்று ஜீவானந்தம் எதார்த்தமாகக் கேட்க உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.
"என்ன சொல்ற ஜீவா, அந்த ஆளு உயிரோடயா இருக்கான்?" என்று அதிர்ச்சியுடன் அவள் கேட்க,
"உழைச்சு உழைச்சு ஓடா தேஞ்சுபோய் அம்மாதான் இப்படி கிழிஞ்ச நாறு மாதிரி கிடக்கறாங்க. அவன் நல்ல தெம்பா வீட்ல உக்காந்துட்டு எல்லாரையும் மெரட்டியே பிழைச்சிட்டு இருக்கான்" என்றான் தெளிவாக.
"ஐயோ, பைத்தியம் மாதிரி இவ்வளவு வருஷமா எவ்வளவு பெரிய சுமைய நான் தூக்கிச் சுமந்துட்டு இருந்திருக்கேன்" என நொந்து போய் சொன்னவள், அன்றைய சம்பவங்கள் முழுவதையும் கோர்வையாகச் சொல்லி முடித்தாள்.
அன்னைக்கு அங்க செத்துப் போய் கிடந்தது மரிக்கொழுந்து. நான் அடிச்ச அடியில அந்த வேலாயுதமும் செத்துப் போயிட்டான்னு பயந்து ஓடிப் வந்துட்டேன். அதுக்குப் பிறகு, எப்படியும் அவனோட ஆளுங்க அங்க வந்து அவனைக் காப்பாத்திருப்பாங்க. அதோட, அந்தப் பொண்ணோட பிணத்தை அவனுங்களே கொண்டு போய் காட்டுக்குள்ள போட்டிருப்பானுங்க. ஏதாவது நாய் நரி வந்து பிடுங்கி தின்னிருக்கும். அந்தப் பொண்ணு மேல என்னோட பாவாடைய கட்டி வச்சிருந்தேன் இல்ல அதைப் பார்த்துட்டு, நான்தான் முடிவு பண்ணிட்டாங்க போலிருக்கு" என்று அவள் விளக்கமாகச் சொல்ல அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை ஸ்வராவுக்கு.
"ஒரு கொலைய செஞ்சிட்டோம்ங்கற குற்ற உணர்ச்சியில நான் இன்னைக்கு வரைக்கும் வேதனை பட்டுட்டு இருக்கேன் தெரியுமா ஜீவா? ஆரம்பத்துல சட்ட அறிவே இல்லாம இருந்தப்ப தூக்குல போட்டுருவாங்கன்னு பயந்தேன். ஓரளவுக்கு எல்லாம் தெளிவான பிறகு, நான் ஒரு கொலைகாரின்னு தெரிஞ்சா என் மகளோட வாழ்க்கை வீணா போயிடுமேன்னு பயந்தேன். அதுக்கு தகுந்த மாதிரியேதான் இப்ப வரைக்கும் பல விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. நான் ஒரு கொலைகாரிங்கறத நாம் பெத்த பொண்ணு கிட்ட சொல்றதுக்குக் கூட எனக்கு அவ்வளவு கேவலமா இருந்தது. இப்படி ஒரு விஷயத்தை நான் மனசுல தூக்கிச் சுமந்துட்டு இருக்கும்போது எப்படி என்னால ஊருக்கு வர முடியும் சொல்லு?" என்று அவள் தழுதழுக்க, எதிரில் அமர்ந்திருந்த இருவரிடமுமே அதற்கு பதில் இல்லை.
தவறே செய்யாதவள் ஓடி ஒளிந்து, தன் அடையாளம் தொலைத்து வாழ்கிறாள். ஒரு சிறு பிஞ்சை வன்புணர்வு செய்து கொன்று போட்டவனும், நம்பிக்கை துரோகம் செய்தவனும் நிம்மதியாக வாழ்கிறான்!
எப்படிப்பட்ட உலகம் இது என்று அசூயையாக இருந்தது ஸ்வராவுக்கு. ஜீவானந்தமும் உள்ளுக்குள்ளே கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று மனதில் பொறித்தட்ட, "அம்மா அப்படின்னா அந்த வல்லரசுதான்?" என்று தன்னைப் பற்றிய புதிருக்கு விடை கிடைத்த பாவத்தில் அவள் கேள்வியுடன் நிறுத்த, ஆமோதிப்பாக தலை அசைத்தாள் மல்லிகா.
அந்த ஊரில் அவன் எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்கிறான் என்பதைத்தான் அவள் நேரில் பார்த்திருக்கிறாளே. உடல் முழுவதும் தீயாய் தகித்தது.
ஜீவாவுக்குமே புரியாத பல விஷயங்கள் புரிந்தது.
"நீ உன் வாழ்க்கையில, இந்த வெறி பிடிச்ச கூட்டத்தால படக்கூடாத கஷ்டத்தை எல்லாம் பட்டுருக்கம்மா, ஆனா அவங்கள பாருங்க எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாம சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க. அதுவும் அந்தக் கிழவனைப் பார்க்கணுமே கர வேஷ்டியும் சிலுக்கு ஜிப்பாவுமா, பக்திமான் மாதிரி நெத்தியில சந்தனமும் குங்குமமும் வெச்சிட்டு, ஜவ்வாதும் இன்னும் ஏதேதோ கலந்து உடம்பு மொத்தம் பூசிக்கிட்டு, அவங்க ரூமுக்குள்ள போனாலே அந்த ஸ்மெல் ஹெவியா தூக்கி அடிக்கும்" என்று ஆத்திரத்துடன் சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு, சட்டென மூண்ட நினைவில் மூளைக்குள் சுருக்கென்று ஊசிக் குத்த, ஒரு நொடி உடல் அதிர்ந்து அடங்கியது. அதற்கு மேல் எதையும் பேசும் நிலையிலேயே அவள் இல்லை.
அப்படியே மௌனமாகிப் போனாள். மகளின் இந்த திடீர் மாற்றத்தைப் பார்த்து பயந்து போன மல்லிகா அவளிடம் எவ்வளவு கேட்டுப் பார்த்து அதற்கான பதில் கிட்டவில்லை. இங்கே ராஜத்தைப் பார்த்துக் கொள்ள மல்லிகாவும் ஜீவானந்தமும் இருக்க, தங்களைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் ஊருக்குள் கசிய கூடாது என்கிற வார்த்தையை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு, அடுத்த நாள் அதிகாலையே கிளம்பி நன்காட்டூர் சென்று விட்டாள். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் அவள் சர்வ சாதாரணமாக எதிர்கொள்வாள் என்கிற நம்பிக்கையில் மல்லிகாவும் அதிகம் கவலைப்படவில்லை.
மருத்துவமனை வாசத்தில் அப்படி இப்படி ஏழெட்டு நாட்கள் கடந்து போயிருந்தன. ராஜத்திடமும் நல்ல முன்னேற்றம் இருக்க, அவருடைய அறுவைச் சிகிச்சைக்கும் நாள் குறித்தார்கள்.
எக்கச்சக்கமான மன உளைச்சலும், உணர்வுகளின் எழுச்சியும் சேர்ந்து மல்லிகாவுக்கு திடீரென்று காய்ச்சல் வந்துவிட, ஐ.சி.யுவுக்குள் சென்று ராஜத்தையும் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அவசரமாக கவனிக்க வேண்டிய வேலைகள் வேறு அலுவலகத்தில் குவிந்து கிடக்க, ஒரு பாராசிட்டமால் மாத்திரையைப் போட்டுக்கொண்டு, அல்லியையும் ஜீவானந்தத்தையும் மருத்துவமனையில் விட்டுவிட்டு அங்கே வந்திருந்தாள்.
சில முக்கியமான கணக்கு வழக்குகளைப் பற்றி விவாதிக்க கம்பெனியின் ஆடிட்டர் குழு நேரில் வரவும், மதியம் வரை அதிலேயே சென்றது.
பேசிப் பேசியே மதிய உணவு நேரம் கடந்துவிட, ஒருவழியாக அந்தச் சந்திப்பு முடிந்து அவர்களும் கிளம்பினார்கள்.
வீட்டிலிருந்து சுசீலா செய்து அனுப்பி இருந்த சாப்பாட்டை சாப்பிடலாம் என்று அவள் தன் இருக்கையில் இருந்து எழும் சமயம் பார்த்து அவளது பார்வை எதிரே சுவரில் மாற்றப்பட்டிருந்த மிகப்பெரிய திரையில் பதிந்தது.
அவர்களுடைய அலுவலகம் மற்றும் டெய்லரிங் பிரிவு சார்ந்த இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் அதிலே ஒளிந்து கொண்டிருக்க, கீழே இருக்கும் வரவேற்பு பகுதியில் ஏதோ சலசலப்பு உண்டாகி இருப்பது புரிந்தது.
அவளுடைய பிரத்தியேக காரியதரிசியை அழைத்தவள், "மீனா, ரிசப்ஷன்ல என்ன பிரச்சன?" என்று கேட்க, சட்டென திரும்பி திரையைப் பார்த்துவிட்டு, அவளுடைய மேசை மேல் இருந்த இன்டர்காம் கருவி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தவள், "கீழ, ஒருத்தர் வந்து உங்களை நேர்ல பார்க்கணும்னு கேட்டிருக்காரு. அப்பாயின்மென்ட் இல்லாம பார்க்க முடியாதுன்னு நம்ம ரேஷ்மா சொல்லி இருக்காங்க போல... இன்னும் நீங்க லஞ்ச் கூட சாப்பிடலையே! உங்களுக்கும் இப்ப வேற அப்பாயிண்ட்மெண்ட்ஸ் இருக்கு இல்லையா, மேம்?" என்று தயங்கித் தயங்கி பீடிகையுடன் சொல்ல,
"ஓகே, அதனால என்ன பிரச்சன, அத சொல்லு முதல்ல" என்று அவள் சலிப்புற, "இல்ல மேம், உங்கள பாக்காம போக மாட்டேன்னு கலாட்டா பண்ணிட்டு இருக்காரு" என்றாள்.
"அப்படி என்ன அவசரமாம்? யாரு என்னன்னு விசாரிச்சு சொல்லு" என்று சொல்ல, அழைத்து விசாரித்தாள்.
"நம்ம ஸ்வரா மேம் தங்கி இருக்காங்க இல்ல, அந்த நன்காட்டூர் வில்லேஜ்ல இருந்து வந்திருக்காராம். மிஸ்டர் வல்லரசுன்னு சொன்னாங்க ரேஷ்மா. என்ன விஷயம்னு கேட்டா உங்க கிட்டதான் பேசுவேன்னு சொல்றாராம்" என்று விளக்கமாக சொல்ல, அவளது மூளை முழுவதும் சுறுசுறுப்பானது.
மனதிற்குள் அவள் கணித்தபடி மகள் ஏதோ பெரிதாக அங்கே செய்திருக்கிறாள் என்பது பிடிபட, அவனைப் பார்ப்பதா வேண்டாமா என்ற கேள்வி கூட நெருடியது.
ஆனாலும் இப்படித் தேடி வந்து துடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது என்கிற ஆவலும் சேர்ந்து கொள்ள, அவனை நேருக்கு நேர் சந்திக்கும் துடிப்பும் உண்டாகி இருக்க, அவனை இங்கே அனுப்பச் சொல்லச் சொல்லிவிட்டு, முக கவசத்தை எடுத்து அணிந்து கொண்டவள், வசதியாக தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்.
எந்த நிமிடமும் அவன் வரக்கூடும் என மனது தடதடவென்று அடித்துக் கொள்ள, மரியாதை நிமித்தமான அனுமதி கூட கேட்காமல் கதவைத் தள்ளிக் கொண்டு வேகமாக நுழைந்தவன் அவளுக்கு எதிரில் வந்து நின்றான்.
வயது கூடி, சற்றுத் தொப்பைப் போட்டிருந்தாலும் அன்று பார்த்த அதே மிடுக்குடன்தான் இருந்தான்.
ஆனாலும், முகம் முழுவதும் கலவரம் மண்டி, வியர்த்து விதிர்விதித்துப் போய் நிற்க, உச்சபட்ச பதற்றத்துடன் அவன் இருப்பது புரிந்தது.
"ஆமா, மிஸ்ட்டர் வல்லரசு, உங்களுக்கும் எனக்கும் எந்த விதமான டைரக்ட் டீலிங்கும் இல்லையே, எதுவா இருந்தாலும் என் டாட்டர் கிட்டயே பேசி இருக்கலாமே, அவதான் உங்க ஊர்லேயே ஸ்டே பண்ணி இருக்காளே. அத விட்டுட்டு, என்னை எதுக்கு பார்க்கணும்னு கலாட்டா பண்ணீங்க?" என்று வார்த்தைகளை மிகக் கவனமாக தேர்ந்தெடுத்து அவள் கேள்வி கேட்க,
"பொண்ணா மேடம் பெத்து வெச்சிருக்கீங்க. இவ்ளோ பெரிய ஆளுங்களா இருக்கீங்களேன்னு நம்பி எங்க வீட்டுக்குள்ள விட்டதுக்கு, எங்க எதிரி குடும்பத்துக்கூட சேர்ந்துக்கிட்டு, எங்க அப்பா மேல தேவையில்லாத பழிய சுமத்தி ஜெயிலுக்குப் போற அளவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்கா" என்று அவன் பொரிந்துத்தள்ள,
'அப்படி என்ன செஞ்சு வெச்சிருக்கா இவ?' என மனதிற்குள் வியந்தாலும் அதை வெளிக் காண்பிக்காமல்,
"என் பொண்ண பத்தி விமர்சிக்கிற அளவுக்கு நீங்கல்லாம் ஆள் கிடையாது. அவ எதைச் செஞ்சாலும் அதுல ஒரு நேர்மையும் நியாயமும் இருக்கும். முதல்ல என் பொண்ண பத்தி தப்பா பேசாத விட்டுட்டு என்ன விஷயம்னு புரியற மாதிரி சொல்லுங்க" என்று திட்டவட்டமாக அவள் பேசவும் சற்று பம்மியபடி,
"எங்க அப்பா மேல செக்ஸுவல் அப்யூஸ் கேஸ் கொடுத்துட்டாங்க மேம் உங்க டாட்டர்" என்று சொல்லவும் தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு.
"வாட் நான்சென்ஸ், உங்க அப்பா அவ கிட்ட ஏதாவது தப்பா நடந்துகிட்டாரா?" என்று அருவருக்க,
"ச்சச்ச, அவரா? அதுவும் உங்க பொண்ணு கிட்டயா? அவர் எப்படிப்பட்ட நல்ல மனுஷன்னு தெரியுமா உங்களுக்கு? போயும் போயும் எங்க வீட்ல வேலை செய்றவன் பொண்ணு கிட்ட போய் அவர் தப்பா நடந்துட்டுதா பொய் புகார் கொடுத்திருக்கா உங்க பொண்ணு, அதுவும் போக்சோல.”
”என்னோட பவர பயன்படுத்தி என்ன செஞ்சும் அவரோட அரெஸ்ட்ட என்னால தடுக்க முடியல? அந்த அளவுக்குப் பெரிய இடம் வரைக்கும் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணி இருக்கா. அவகிட்ட நான் நேரடியா எவ்வளவு கேட்டுப் பார்த்தும் அந்த கம்பளைண்ட்ட வாபஸ் வாங்க மறுத்துட்டா! நீங்க சொன்னாலாவது கேட்பாளோன்னுதான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். ப்ளீஸ் மேம், எப்படியாவது எங்க அப்பாவ காப்பாத்துங்க. அவர் இந்த அளவுக்கு கேவலமா போற ஆள் எல்லாம் கிடையாது. அட்லீஸ்ட் அவரோட வயசயாவுது நெனச்சு பாருங்க" என்று கீழே இறங்கி வந்து அவன் கெஞ்சவும்,
"யாரு உன் அப்பாவா? அந்த ஆளு உத்தமனா? அதை நீ என்கிட்டயே வந்து சொல்ற பாரு?" என்று ஏக வசனத்தில் அவள் ஆத்திரம் பொங்கக் கேட்கவும்,
"என்னமோ எங்க அப்பாவ பத்தி எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசறீங்க. இது உங்க இடங்கறதால இந்த அளவுக்குப் பணிவா பேசிட்டு இருக்கேன். இந்த மாதிரி என் ஊருக்குள்ள வந்து நீங்க பேசி இருந்தீங்கன்னா நடந்திருக்கிறதே வேற" என தன் சுபாவம் தலை தூக்க எகிறியவனுக்கு, சட்டெனத் தன் தந்தையின் நினைவு வர இவளிடம் இப்படி எதிர்த்து நின்றால் பிரச்சனை இன்னும் பெரிதாகும் என்பதை உணர்ந்து,
"சாரி மேம், சாரி… சாரி… ஏதோ டென்ஷன்ல இப்படி பேசிட்டேன் தப்பா நினைக்காதீங்க. எப்படியாவது உங்க டாட்டர் கிட்ட பேசி இந்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க சொல்லுங்க மேம்" என்று தன் கெஞ்சலைத் தொடர, இப்படி சதுரங்க விளையாட்டு விளையாடும் காலத்தை எண்ணிச் சிரிப்புதான் வந்தது மல்லிகாவுக்கு.
"உன்ன பத்தி, உங்க அப்பாவ பத்தி, ஏன்… உன் பரம்பரைய பத்தியே எனக்குத் தெரியும். உண்மையா உங்க அப்பனுக்குத் தூக்குத் தண்டனைதான் கொடுக்கணும். என் பொண்ணு இப்படி செஞ்சிருக்கான்னா அதுக்கு பின்னாடி ஒரு பெரிய உண்மை இருக்கணும். அதனால அவ கிட்ட போய் நான் எதுவும் பேச மாட்டேன்”
”அப்படியே பேசினாலும், இந்த விஷயத்துல என் பொண்ணு நான் சொல்றத கூட கேட்க மாட்டா! அவ ஒண்ணும், கொஞ்சம் கூட தன்னோட அறிவைக் கொண்டு யோசிக்காம மத்தவங்க சொல்றத நம்பி, உயிராப் பழகித் தன் வாழ்க்கையே நாசமாக்கிட்ட மல்லிகா கிடையாது. எல்லா நல்லது கெட்டதும் தெரிஞ்ச ஸ்வரா" என்றபடி எழுந்து நிற்க, மல்லிகா என்ற பெயரைக் கேட்டதுமே அவனது பாதி உயிர் போய்விட்டது. அடுத்ததாக, அணிந்திருந்த முக கவசத்தை அலட்சியமாக அவள் கழற்றிய நொடி, அவனுடைய மிச்சம் மீதம் இருந்த நிம்மதியும் ஆவியாகிப்போக, உடலில் இருந்த சக்தி மொத்தமும் வடிந்து, நிற்கக் கூட முடியாமல் தள்ளாடியவன் அருகில் இருந்த இருக்கையில் தொப்பென அமர்ந்தான்.
மல்லிகாவா… மல்லிகாவா… மல்லிகாதானா… என அவளுடைய அவளது பெயரை மந்திரம் போல ஜெபிக்கத் தொடங்கினான் அதிர்ச்சியுடன்.
***
Wow awesome
Great epi.. Awesome👍
Super story