top of page

Kaattumalli - 25

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan

Updated: Jan 8, 2024

மடல் - 25


'மனம் பயத்திலிருந்து முழுவதுமாக விடுதலை பெறாவிட்டால் அதன் ஒவ்வொரு விதமான செயலும் அதிகமான தீங்கையும், அதிகமான துன்பத்தையும், அதிகமான குழப்பத்தையும் கொண்டு வருகிறது'


ஜே.கேவின், வன்முறைக்கு அப்பால் புத்தகத்தைப் பிரித்து வைத்து அதன் இரண்டாவது அத்தியாயமான சுதந்திரம் என்ற தலைப்பின் இந்த முதல் சில வரிகளைப் படித்துவிட்டு அதை மனதிற்குள் அசைப் போட்டபடி கண்களை மூடிப் படுத்திருந்தாள் ஸ்வரா.


தகப்பனின் அரவணைப்பே என்னவென்று தெரியாமல் வளர்ந்தது, அதனால் சமுதாயத்தில் அவள் சந்தித்த அவலங்கள், வாழ்க்கையைப் பற்றிய புரிதலே இல்லாமல் இருந்ததில், அம்மாவுக்கும் இவளுக்கும் இடையிலே உருவாகியிருந்த பிணக்கு, அம்மா தன் வாழ்க்கையைப் பற்றி ஆழமாகச் சொன்னவை, சற்று நேரத்திற்கு முன் நடந்து முடிந்த, சக்திக்கும் இவளுக்குமான உரசல் என ஒவ்வொன்றும் நினைவில் வந்து அவளது உறக்கம் மொத்தத்தையும் பறித்திருக்க, அருகில் பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லாமல் மிகவும் துன்பப்பட்டுப் போனவள், ஆறுதல் தேடி அந்தப் புத்தகத்துக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டாள்.


இது அம்மாவின் புத்தகம்! முன்பு எப்பொழுதோ ஒருமுறை அம்மாவின் புத்தக அடுக்கில் இருந்து எடுத்து வந்தது. இந்தப் புத்தகத்தை ஒரு பொக்கிஷம் என்று குறிப்பிட்டு இதைக் கூடவே வைத்துக்கொள்ளச் சொன்ன அம்மா தனக்காக வேறொன்றை வாங்கிக் கொண்டாள்.


பலமுறை படித்த புத்தகம்தான், ஆனால் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு புதுவித அனுபவத்தைக் கொடுக்கிறது.


இன்றைக்கும் அப்படி ஒரு ஆறுதலையும் தெளிவையும் இந்த வரிகள் கொடுக்க, சுலபமாகத் தன்னைச் சமன் செய்து கொண்டாள்.


படித்துக் கொண்டே இருந்தவள் எப்போது உறங்கிப் போனாள் என்றே தெரியவில்லை, கைப்பேசியின் ஒலியில் விழிப்பு தட்ட, திரையைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கண்கள் எரிச்சலாய் எரிந்தன. சோம்பலுடன் பச்சை நிறத்தை இழுத்துவிட்டு அப்படியே காதில் வைத்து, "ஹலோ" என்று சொல்ல, "கொஞ்சம் வந்து கதவை திற, ராஜ்" என மென்மையாக ஒலித்த சக்தியின் குரலில் உறக்கம் மொத்தமாகத் கலைந்து போனது.


தான் நினைத்து வருந்திய அளவுக்கு பிரச்சனை செல்லவில்லை என்பதை உணர்ந்தவள் எந்த பிகுவும் செய்யாமல் எழுந்து போய் கதவைத் திறக்க, கையில் மிகப்பெரிய சிவப்பு நிற ரோஜா பூங்கொத்துடன் நின்றிருந்தான் சக்தி.


அதிலிருந்து பரவிய சுகந்தம் மனதை இலகுவாக்க, இயல்பாக இதழில் படர்ந்த புன்னகையுடன் விலகி அவனுக்கு வழி விட்டாள்.


அவன் உள்ளே செல்லவும் கதவைத் தாழிட்டுவிட்டு தானும் அவனை நோக்கி வர, பூங்கொத்தை அவளிடம் கொடுத்தவன், "சாரி ராஜ், உனக்காக நான் இம்போர்ட் பண்ண கார, கரெக்டா நீ இங்க வர பார்த்து அவங்க டெலிவரி செய்யவும், அத உனக்கு கிஃப்ட் பண்ணி உன்னோட சந்தோசத்தைப் பாக்கணும்னு மட்டும்தான் வந்தேன். மத்தபடி நேத்து நைட் நான் வேணும்னு பிளான் பண்ணி எதுவும் செய்யல. நேச்சுரலி, அப்படி நடந்து போச்சு. ப்ளீஸ், டிரை டு அண்டர்ஸ்டாண்ட், தட்ஸ் ஆஃப்ட்டர் ஆல் அ வெரி நேச்சுரல் ஹியூமன் பிஹேவியர்" எனத் தன்னிலை விளக்கம் கொடுத்தான்.


'ஆமா ஹியூமன் பிஹேவியராம், மண்ணாங்கட்டி. இட்ஸ் பியூர்லி அ மென்ஸ் பிஹேவியர்' என மனதுக்குள் கடுகடுத்தாலும், அவனே இறங்கி வந்து பேசும் பொழுது பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என்கிற எண்ணத்துடன், "ஐ அம் ஆல்சோ சாரி, சக்தி. அந்த மொமென்ட்ல எனக்கு அப்படி நடந்துக்கறத தவிர வேற ஆப்ஷனே இல்ல. ஏன்னா நான் சொல்ற எதையும் ரியலைஸ் செய்யற நிலைமையில நீ இல்ல" என தன் செயலுக்குப் பின்னால் இருந்த நியாயத்தை அவனுக்கு உணர்த்த முயன்றாள்.


"விடு ராஜ், இனிமேல் இதைப் பத்தி நம்ம பேச வேணாம்" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, கதவைத் தட்டிவிட்டு, சக்தியின் பாதுகாவலர் ஒருவர் அவர்களுக்கான காலை உணவையும் காஃபியையும் கொண்டு வந்து வைத்துவிட்டு போனார்.


"நான்தான் வாங்கிட்டு வரச் சொன்னேன்" என்றான் அவளது பார்வை சிந்திய கேள்வியை உணர்ந்து.


கையில் வைத்திருந்த பூங்கொத்தை அங்கே இருந்த தேநீர் மேசை மேல் வைத்து விட்டுப் போய் காலைக்கடன்களை முடித்து வந்து சோஃபாவில் அமர்ந்தாள்.


பிளாஸ்க்கில் இருந்த காஃபியை கோப்பைகளில் ஊற்றி அவளுக்கும் கொடுத்துவிட்டு தானும் எடுத்துக் கொண்டவன், "இப்ப நாம இருக்கிற இந்த ஸ்டேஜ்க்கு பேர் என்ன, ராஜ்? உனக்குத் தெரிஞ்சா நீ கொஞ்சம் சொல்லு" என்றான், சில விஷயங்களை உடனே பேசித் தீர்க்க வேண்டிய தீவிரத்துடன்.


பட்டென பதில் சொல்ல முடியாமல் சற்றுத் தடுமாறியவள், "இதைத்தான் டேட்டிங்னு சொல்லுவாங்க இல்ல சக்தி" எனக் கேட்டாள் சரியாகத்தான் கேட்கிறோமா என்கிற தயக்கத்துடன்.


"நாட் எக்ஸாக்ட்லி, ஆனா கிட்டத்தட்ட அப்படித்தான். உண்மைய சொல்லப்போனா, நாம இவ்வளவு குளோசா பழகிட்டு இருக்கற விஷயம் மீடியாவோட வாய்க்கு அவலாகம இருக்கிறதே நம்ம நல்ல நேரம்தான்.‌ எப்படியோ, இதுவரைக்கும் தப்பிச்சிட்டோம். பட் என்னைக்காவது ஒருநாள் மாட்டாம இருக்க மாட்டோம்" என நிதர்சனத்தைத் தெளிவாகச் சொன்னவன், அவள் அதை ஒப்புக்கொண்ட பாவத்தில் மௌனம் காக்கவும் தொடர்ந்தான்.


"நேத்து நான் உங்கிட்ட நடந்துட்டது இன்டென்ஷனலா இல்லனாலும், என்னால உன்ன பார்க்கும்போது கண்ட்ரோலா இருக்க முடியுமாங்கறது டவுட்தான். ஏன்னா… மேல் - ஃபீமேல் டிசயனே அப்படித்தான். ஃபீமேலால ஈஸியா, நோ சொல்லிட முடியும். பட் ஒரு ஆணால நோ, சொல்லவும் முடியாது, ஈஸியா அத அக்ஸப்ட் பண்ணிக்கவும் முடியாது. நாட் எவ்ரி டைம், பட் சம் டைம்… இட் வில் என்ட்ஸ் அப் வித் அ ஃபோர்ஸ்ட் செக்ஸ். அப்படி நடந்தா, அது நம்ம ரிலேஷன்ஷிப்ப அசிங்கப்படுத்தி நாசம் செஞ்சிடும். இதனால நமக்குள்ள நிறைய மிஸ்-அன்டர்ஸ்டாண்டிங் வரும். பிரிவுக்கு வழி வகுக்கும். இந்த கண்டிஷன்ல, எத்தனை நாளைக்கு நம்ம ரெண்டு பேராலயும் இப்படியே ஆடு புலி ஆட்டம் ஆடிட்டு இருக்க முடியும் சொல்லு?


நம்ம ஒர்க் பிரஷர் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அதையே காரணம் காமிச்சு நம்ம கல்யாணத்தைத் தள்ளிப் போட்றது ரொம்ப தப்பு. அத நேத்து நைட், நான் நல்லாவே ரியலைஸ் பண்ணிட்டேன், ராஜ். ஸோ, இன்னைக்கு நான் இத பத்தி எங்க வீட்ல ஓபன் பண்ணதான் போறேன், நீயும் உங்க வீட்ல பேசிடு" என்றான் பிடிவாதமாக.


ஒரு விதத்தில் அது சரி என்று பட்டாலும்,"ஒரு டூ டேஸ் வெயிட் பண்ணு சக்தி, பகலவன் வந்துடட்டும்" என்று அவள் முழுதாகச் சொல்லி முடிக்கக் கூட இல்லை அப்படி ஒரு கோபம் வந்துவிட்டது அவனுக்கு.


"அவன் எதுக்கு வரணும், உனக்கு உங்க அம்மா கிட்ட பேசணும்னா அதுக்கான டைம நீ எடுத்துக்கோ, பட் நம்ம ரெண்டு பேருக்கு நடுவுலயும் டிசைடிங் அத்தாரிட்டியா நீ பகலவன கொண்டு வராத" என்று படபடவெனப் பொரிந்தான்.


"திஸ் இஸ் டூ மச் சக்தி, அவன் நம்ம ரெண்டு பேருக்குமே காமன் ஃப்ரெண்ட், பெஸ்ட் ஃபிரண்ட். இதுல அவனோட சஜஷன் ரொம்ப முக்கியம். நீ இப்படி செல்ஃபிஷா பேசறது தப்பு. வேற யாரை நான் கல்யாணம் செஞ்சுட்டாலும் என்னால பகலவனோட ஃபிரண்ட்ஷிப்ப கண்டினியூ பண்ண முடியாது, இதே நீயா இருந்தா பிரச்சனை இல்லன்னு நீதான அன்னைக்கு சொன்ன. பட், இப்ப நீயே எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வரியே" என்று அவளும் பதிலுக்குப் பாய,


"நோ ராஜ், நான் இப்பவும் அவன உன் கிட்ட இருந்து தள்ளி நிறுத்த விரும்பல. ஆனா நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கிற இன்டிமசிக்கு நடுவுல அவன் வரது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று தன்மையாகவே பதில் சொல்ல அதற்கு மேல் அவளால் எதையுமே பேச முடியவில்லை.


எதிரே அமர்ந்திருந்தவன் அவளுக்கு அருகில் வந்து அவளது தோள் மீது தன் கையைப் போட்டுத் தன்னுடன் நெருக்கிக் கொண்ட படி, "ப்ளீஸ் ராஜ், ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மை சிச்சுவேஷன். உனக்கே எங்க ஃபேமிலி பத்தி தெரியும், கல்யாணம் சொந்தத்துகுள்ளயேதான் பண்ணுவாங்க.”


”ஸோ, நம்ம கல்யாணம் என் பிடிவாதத்தால மட்டும்தான் நடக்கும். டேட் பத்தி நெனைச்சா இப்பவே எனக்கு  ரொம்ப பயமா இருக்கு. அவருக்கு சான்ஸே கொடுக்காம, நான் ஃபாஸ்ட்டா மூவ் பண்ண வேண்டிய சூழ்நிலைல இருக்கேன்” எனத் தன் பக்க பிரச்சனைகளை அவளுக்கு விளக்க,


‘வருவது வரட்டும், பார்த்துக் கொள்ளலாம்’ என்கிற முடிவுக்கு வந்தவள், “ஓகே சக்தி, என்னைக்கு இருந்தாலும் இத நாம ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும். தள்ளிப்போடாம அத இப்பவே செய்வோம்” எனத் தன் சம்மதத்தைச் சொல்ல, அவளுடைய பாதுகாவலர்கள் நான்கு பெரும் உள்ளே நுழைய, அதற்கு மேல் ஏதும் பேச அவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது.


புடை சூழ, அன்று மதியமே சென்னை நோக்கிப் புறப்பட்டவள் வீடு வந்து சேர மாலை ஆகிவிட்டது.


வீட்டிற்குள் நுழையவும், "உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல, இந்த பகலவன் கல்யாணத்த நேரங்காலத்தோட முடிச்சாதான நம்ம பாப்பாவுக்கு இடம் பார்க்க முடியும்?" என அல்லியின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.


சீராளனை நிற்க வைத்துக் கேள்வி கேட்டு அவர் மிரட்டிக் கொண்டிருக்க, அந்தக் காட்சியைப் பார்த்ததும் அவளுக்குச் சிரிப்புதான் வந்தது.


"மாமா, இதுதான் உன்ன நிக்க வெச்சு மிரட்டுதுன்னா, நீயும் கேட்டுட்டு நிக்கிறியே" என அவனைக் கிண்டல் செய்ய,


"சித்தி என்ன சொன்னாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும் பேபி" என்றான் வீட்டுக் கொடுக்காமல்,


"சுத்தம்" என சலித்தவள்,


"அந்தச் சாமியாரைக் கேக்க வேண்டிய கேள்விய நீ இவங்க கிட்ட கேட்டு என்ன பிரயோஜனம் அம்மம்மு" என்றபடி அவருக்கு அருகில் வந்து அமர,


"கரெக்ட்டா சொன்னா கண்ணு" என அவன் இவள் பக்கம் தாவ,


"டேய், நீ பாலுக்கும் காவக்காரன், பூனைக்கும் தோஸ்து... போடா" என சீராளனைக் கடிந்து,


"இதெல்லாம் கிடக்கட்டும், நீ போன வேல முடிஞ்சிதாடீ" என அதே மிரட்டல் தொனியிலேயே விசாரித்தவர்,


"முடிஞ்சிது அம்மம்மு, அதான் உடனே வந்துட்டேன், ஆமாம் சாந்தா அத்த எங்க? உன் பீபிய செக் பண்ண சொல்லலாம்" என்று கேட்க,


"அது ட்யூட்டிக்குப் போயிருக்கு. அத்தையாவது ஃப்ரீயா வுடு" என நொடித்தவர், "எனக்கு ஒண்ணும் பீபி எகிறல. நார்மலாதான் இருக்கேன், ஆனா இப்படியே போனா உங்கம்மாக்காரிக்குதான் பீபி எகிறப்போகுது" என்றார் குதர்க்கமாக.


"ஏன் அம்மம்மு, அவங்களுக்கு என்னாச்சு" எனப் பதற,


"பின்ன, உன்ன இப்படி தனியா மதுரைக்கும் தேனீக்கும் அனுப்பிட்டு, வாயில பல்லுல ஈரம் இல்லாம பயந்து சாகுது, மொதல்ல நீ இங்க வந்துட்டேன்னு ஃபோன் போடுடீ. அப்பத்தான் நிம்மதியா வேலைய பாப்பா" என ஆதங்கப் பட்டார்.


"கார்ல வரும்போதே சொல்லிட்டேன்" என்றவளுக்கு முந்தைய இரவு நடந்த நிகழ்வு நினைவில் வர, அம்மாவின் பயத்தில் பொதிந்திருக்கும் நியாயம் புரிந்து மவுனமாகிப் போனாள்.


"அதிருக்கட்டும், அந்த சுரேஷ் இருந்தான்னா கூப்புடு" என்று அல்லி கட்டளை இட,


"ஹா... ஹா... அடுத்த டார்கெட் அவங்களா, நீ  நடத்து வில்லிக்கொடி" என்று சிரிக்க,


"மவளே, என்னையே கிண்டல் செய்யறியா" என்று அவர் பொங்க,


"கூல்... கூல்..." என்றபடி கைப்பேசியை இயக்கி அவளுடைய பாதுகாவலன் சுரேஷை அழைக்க, உடனே வந்து நின்றான்.


"டேய், ரெண்டு நாளா உங்கம்மா சும்மா இல்லாம, கம்பெனில எல்லாரையும் புடிச்சி சத்தம் போட்டு கலாட்டா பண்ணிட்டு கெடக்குது. வீட்டுல எதுனா பிரச்சனையா?" எனக் கேட்டார்.


சசியின் மகன்தான் சுரேஷ். இவர்களுடைய நிறுவனத்தின் தையல் பிரிவில்தான்  முக்கிய பொறுப்பில் இருக்கிறாள் சசி.


"ஐயோ அல்லிமா, எனக்கு எதுவும் தெரியாதே. என் பொண்டாட்டி கிட்ட கூட ஏதோ தகராறு போலிருக்கு. மெனோபாஸ் ஆரம்பிச்சதுல இருந்து சமயத்துல இப்படித்தான் நடந்துக்கறாங்க" என்று அவன் விளக்கம் கொடுக்க, "இருக்கும்  அம்மம்மு, பீரியட்ஸ் வந்தா சரியா போயிடும்" என்று சொல்ல, "ஓ, இதுல இதெல்லாம் இருக்கா, யாருக்கு புரியது?" என அவர் உள்ளே போன குரலில் சொல்ல, திலகாவுக்கு அழைத்தவள் வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பிறகு, "அக்கா, சசி அத்தைக்கு ஆஃபீஸ்ல வேலையை மாத்தி விடு. கம்பெனில வேணாம். ஒரே அட்டகாசம் செய்யறாங்க போலிருக்கு. அங்க நம்ம சரோஜாக்காவ அனுப்பிடு" என்று சொல்லி முடித்து அழைப்பைத் துண்டிக்க, 'ஷ்... ப்பா' என பெருமூச்சு விட்டான் சுரேஷ்.


"அதுக்குள்ள ரிலாக்ஸ் ஆனா எப்படி? கம்பெனில நான் சமாளிச்சிட்டேன், வீட்டுக்குப் போய், அண்ணி கைல கால்ல விழுந்து அவங்கள சாமாளிங்க" என்று கிண்டலாகச் சொல்ல,


"வேற வழி, ஒரு வாரமா உன் கூட ஊர சுத்திட்டு இருக்கேனே. வீடியோ கால்லயே வெச்சு செஞ்சா" எனப் புலம்பிவிட்டு அங்கிருந்து அகன்றான் அவன்.


அதற்குள் ஏதோ அழைப்பு வந்து, பேசிக்கொண்டே சீராளனும் அங்கிருந்து அகன்றிருக்க, யாருமற்ற தனிமை கிட்டவும். "அம்மம்மு, ஒரு முக்கியமான விஷயம்" என அவள் பீடிகை போட,


"என்னடி, உங்கம்மா கிட்ட உனக்காக எதாவது தூது போகணுமா" எனக் கேட்டார் நக்கலாக.


"இல்லா, நானே அவங்ககிட்ட சொல்லிடுவேன், அது பிரச்சன இல்ல, ஆனா உன்கிட்டயும் நானே நேரடியா சொல்லிடலாம்னு" என இழுத்தவள், அவர் புருவம் உயர்த்தி அவளை ஏறிடவும்,


தலையைக் குனிந்தபடி, "நான் சக்திய லவ் பண்றேன்" என்று உள்ளே போன குரலில் சொல்ல,


"அடி சக்க, நீ இந்த வேலையெல்லாம் கூட செய்வியா?" என வியந்தார்.


ஆனாலும் முகம் யோசனையைப் பூசிக்கொள்ள, "நம்ம பசங்கள்லயே உனக்கு புடிச்சவனா பார்த்து உனக்கு கட்டி வெச்சு, நம்ம கைக்குள்ளயே வெச்சுக்கலாம்னு உங்கம்மாட்ட சொல்லிட்டே இருந்தேன்டீ! முன்ன பின்ன தெரியாத குடும்பம்னா, நாளைக்கே உன் நிம்மதி பூடுமோனு ஒரு பயம்" எனக் கலங்க,


"நீ கவலையே படாத அம்மம்மு, அப்படி எதுவும் நடக்காது" என அவரை ஆற்றுப்படுத்தினாள்.


"என் ராஜி, நீ நல்லா இருந்தா அதுவே போதும்டீ கண்ணு" என அவளை அணைத்துக் கொண்டவரின் கண்கள் குளமானது.


மல்லிகா சென்னை திரும்பியதும் இதைப்பற்றி நேரில் பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.


அன்று இரவு கால் செய்து மல்லிகாவுடனும் பகலவனுடனும் சிறிது நேரம் பேசிவிட்டு, சக்திக்கு அழைத்தாள்.


"சொல்லு மை லவ்" என்றபடி அவன் அந்த அழைப்பை ஏற்க, வழக்கமான உற்சாகம் இல்லாமல் சற்று சுரத்தின்றி ஒலித்தது அவனது குரல்.


"என்ன ஆச்சு சக்தி, உன் குரல் ஒரு மாதிரி டல்லா இருக்கு" என்று வினவ, "யா ராஜ், அம்மா கிட்ட நம்ம மேட்டர ஓபன் பண்ணிட்டேன். அவங்களுக்கு இதுல எந்த ஹெஸிடேஷனும் இல்ல. இன் ஃபேக்ட், இந்தக் கட்டுப்பாட்டுக்குள்ள இருந்து வெளியில வரதுல அவங்களுக்கு சந்தோஷம்தான்.”


”இந்த மாதிரி விஷயத்தை ஃபோன்ல சொல்லக்கூடாதுன்னு, அப்பா கிட்ட நேர்ல பேச அப்பாயின்மென்ட் கேட்டேன், ரெண்டு நாளைக்கு பிசியாம். சண்டேதான் பேச முடியும்னு சொல்லிட்டாரு. அது ஒரு மாதிரி இரிடேட்ங்கா இருக்கு" என்றான் வருத்தம் மேலிட.


'ச்ச, நெனச்ச நேரத்துல பார்த்துப் பேச முடியாத அளவுக்குப் பெத்த பிள்ளையையே இப்படி ஒரு இடத்தில வச்சிருக்காருன்னா, என்ன அப்பா இவரு?' என்று தோன்றினாலும்,


"இட்ஸ் ஓகே சக்தி, அதுக்கு ஏன் இவ்வளவு ஃபீல் பண்ற. இதுக்காக ஒரு டூ ஆர் த்ரீ டேஸ் வெயிட் பணறதுல ஒண்ணும் பிரச்சன இல்ல" என்று இதமாகப் பேச,


"நோ அதர் கோ, அங்க உன்னோட சிச்சுவேஷன் என்ன?" எனக் கேட்டான்.


"நான் என்னோட அம்மம்மா கிட்ட சொல்லிட்டேன் தெரியுமா?!" என்றாள் உற்சாகம் மேலிட.


"வாவ், உங்க வீட்ல உன் பேச்சுக்கு அகைன்ஸ்ட்டா ஏதாவது சொல்லுவாங்களா என்ன. பாட்டிம்மா, உன்ன பிளெஸ்தான் பண்ணி இருப்பாங்க" என்றான் மெச்சுதலுடன்.


"கரெக்டா புரிஞ்சி வச்சிருக்க, சக்தி. எப்பவுமே அவங்க ஒரு பிக் ஷிம்மரிங் பால் ஆஃப் பாஸிட்டிவ் எனர்ஜி" என்றாள் பெருமையுடன்.


"ஆனா எங்க வீட்ல, என்ன சுத்தி இருக்கிறது எல்லாமே நெகட்டிவ் எனர்ஜியா இருக்கே, நான் என்ன செய்ய" என அவன் ஆதங்கிக்க,


"ஏன் சக்தி நீ என்னை இப்படி டென்ஷன் பண்ற" எனச் சலித்தாள்.


"உனக்கு அம்மம்மா இருக்கற மாதிரி எனக்கும் ஒரு பாட்டிம்மா இருக்காங்க. அப்படியே ராஜமாதா சிவகாமிதேவின்னு நினைப்பு. எக்ஸ்ட்ரீம்லி டாமினேடிங்" என்று உள்ளுக்குள்ளே இருந்து பொங்கிய ஆதங்கத்துடன் சொன்னவன்,


"சாரி டு சே திஸ் ராஜ், நீ இதுக்கெல்லாம் பழகிக்க வேண்டியதா இருக்கும்" என்று முடிக்க, "அம்மம்மா மட்டும் இல்ல, எங்க கம்யூனிட்டில டிசைன் டிசைனான மனுஷங்க இருக்காங்க. அவங்கள பத்தி எல்லாம் உனக்குத் தெரியாது இல்ல. எல்லாத்தையும் மேனேஜ் பண்ணலாம், இதுல என்ன இருக்கு" என்று இலக்குவாகவே அதை ஏற்றுக் கொண்டாள் ஸ்வரா.


அதன் பிறகு அவர்களுடைய பேச்சுத் திசை மாறிக் கொஞ்சல் குலாவல்களில் நீண்டு, முற்றுப் பெற்றது.


மல்லிகாவும் பகலவனும் ஊர் திரும்புவதற்குள் மேலும் இரண்டு நாட்கள் கடந்து போயின.


அன்று அவர்கள் இங்கே வந்து சேரவே நள்ளிரவாகி இருந்ததால், நேராக அவரவர் அறைக்குப் போய்விட்டனர். மல்லிகாவைப் பார்த்தும் அல்லியின் உறக்கம் கலைந்துவிட, இவள் அவரிடம் இயல்பாகப் பேச்சுக் கொடுக்கப் போய், காலை வரைக் கூட பொறுக்க இயலாமல், ஸ்வராவின் காதல் விவகாரத்தைப் போட்டு உடைத்து விட்டார்.


இதெல்லாம் தொடங்குவதற்கு முன்பே ஸ்வரா அவளிடம் தன் மனதைத் திறந்திருக்கவே, கூடவே பகலவனும் யார் என்பது பற்றி பட்டுப் படாமலும் சொல்லி வைத்திருக்க, இதை எதிர்பார்த்தே இருந்ததால் என்ன வந்தாலும் மகளுக்குத் துணை நிற்கத் தயாராகவே இருந்தாள் மல்லிகா.


***


அவர்கள் வசிப்பது, முழுக்க முழுக்க ஆர்.ஆர் குழுமத்தில் வேலை செய்பர்களுக்கான 'அல்லிஸ் பேரடைஸ்' எனும் கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்பில் உள்ள வில்லாவில்தான்.


ஜாதி மத பேதமில்லாமல் எல்லோரும் வழிபட தகுந்தபடி ஒரு தியான மண்டபம், உடற்பயிற்சிக்கூடம் மற்றும் ஒரு பூங்காவும் அங்கே உண்டு.


தினமும் காலை அந்தப் பூங்காவில் நடைப் பயிற்சி செய்வது ஸ்வரா மற்றும் மல்லியின் வழக்கம். அல்லி விழிக்கவே ஏழு மணிக்கு மேலாகிவிடும். அதிசயமாகச் சீக்கிரம் விழித்தாலும் முட்டி வலி முழங்கால் வலி என டிமிக்கி கொடுத்து விடுவார்.


அன்றும், வாக்கிங் செல்ல ஏதுவாக ட்ராக் சூட் அணிந்து மல்லிகா வரவேற்பறைக்கு வர, தானும் தயாராகி வந்து ஷூ அணிந்து லேஸைக் கட்டிக்கொண்டிருந்தாள் ஸ்வரா.


அம்மாவைப் பார்த்ததும், "ஹை மா, ஹவ் வாஸ் தி ட்ரிப்" என உற்சாகமாக விசாரிக்க,


"கிரேட்" என பதிலளித்தவள், தானும் ஷூவை அணிந்துகொள்ள, பூங்காவை நோக்கி நடந்தனர்.


எப்படி தொடங்குவது என்கிற யோசனையுடன் ஸ்வரா நடக்க, மகளே தன் மௌனத்தை உடைக்கட்டும் எனக் காத்திருந்தாள் மல்லி.


"யாரு அம்மா, யாரு பொண்ணுன்னே தெரியல, மல்லி வர வர உனக்கு வயசு குறைஞ்சிட்டே போகுதா" என  வம்பிழுத்தபடி அவர்களை கடந்து சென்றாள் எதிரே வந்த சசி.


"அக்கா, ஆஃபிஸ்க்கு வா, உன்ன வெச்சுக்கறேன்" என்று மல்லி பதில் கொடுக்க, "வரேன், நல்லா வெச்சிக்கோ" என பதில் வர, பக்கெனச் சிரித்தாள் ஸ்வரா.


'இவ இப்படியே சிரிச்சிட்டு சந்தோஷமா இருந்தா அதுவே போதும்' என்று நினைத்தபடி அவள் மீது மல்லியின் பார்வை பதிய, 'என்ன?' எனப் புருவம் உயர்த்தியவளைப் பார்த்து ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது.


பூங்காவின் உள்ளே நுழைந்ததும், ஸ்வரா போய் அங்கிருந்த மேடையில் அமர்ந்துவிட, "ஏன், வாக் பண்ணலியா நீ?" எனக் கேட்டாள் மல்லி.


அதற்கு பதில் சொல்லாமல், "மா, சக்தி" என்று மட்டும் சொல்ல, "ஸோ, தெளிவான முடிவுக்கு வந்துட்ட" என்றபடி அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.


"எஸ்..ம்மா, இது வரைக்கும் ஸ்மூத்தா..தான் போயிட்டு இருக்கு. கல்யாணம் பண்ணிக்கற முடிவுக்கு வந்துட்டோம். ஆனா, அவங்க வீட்டுல எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது" என்று சொல்ல,


"சாரி டு ஸே திஸ் ராஜ், பட் சொல்லாம இருக்க முடியல" எனக் கலக்கத்துடன் சொன்னவள், கலவரமாக மகள் பார்த்த பார்வையில், "பிரச்சனை கண்டிப்பா வரும் கண்ணு, அவங்க உன்னோட அப்பாவ பத்தி தோண்டித் துருவாம இருக்க மாட்டாங்க. நிறைய தழைஞ்சு போய் போராட வேண்டி வரும். என்ன வந்தாலும் ஃபேஸ் பண்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கோ, அதுதான் உனக்கு நல்லது" என்று சொல்ல, ஆமோதிப்பாகத் தலை அசைத்தாள்.


"சரி, எழுந்து வா, வாக்கிங் போகலாம். எதுக்காகவும் எதுவும் நிக்கக் கூடாது. அப்பறம் நாம ரொம்ப பின் தங்கிப் போயிடுவோம்" என்று இரு பொருள் படும்படி சொல்ல, உணர்ந்து நிமிர்ந்து அமர்ந்தவள், ஒரு துள்ளலுடன் எழுந்து நின்றாள் அன்னையுடன் இணைந்து நடக்க.


0 comments

Σχόλια

Βαθμολογήθηκε με 0 από 5 αστέρια.
Δεν υπάρχουν ακόμη βαθμολογίες

Προσθέστε μια βαθμολογία
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page