top of page

Kaattumalli - 21

Updated: Jan 8

மடல் - 21


அல்லிக்கொடி சொன்னது போலவே ஒரு நாள் அவரைப் பார்க்க அவரது அக்கா மகன் அங்கே வந்துவிட்டுப் போனான்.


அது கைதிகளைப் பார்ப்பதற்காகச் சிறைச்சாலை அனுமதித்திருக்கும் ஒரு பொதுவான தினம் என்பதால் சிறைக்குள் இருக்கும் தங்களது உறவினர்களைப் பார்க்க அப்படி ஒரு கூட்டம் அங்கே முண்டியடித்தது. யார் பேசுவதும் யாருடைய காதிலும் விழாத நிலை.


மல்லியையும் தன்னுடன் அழைத்து வந்தவர், அங்கே நிலவிய அந்தக் கூச்சல் குழப்பத்திலும் கூட அவளை அவனுக்கு அடையாளம் காண்பித்துச் சொன்ன சொல் மாறாமல், சொல்ல வேண்டிய விஷயத்தை அவனிடம் சொல்லி முடித்தார்.


அக்கா மகன் என்று சொன்னாலும் அவருக்குத் தம்பி போலத்தான் இருந்தான் சீராளன்.


கருப்பாக, ஒல்லியாக, குள்ளமாக அல்லிக்கொடிக்குச் சற்றும் சம்பந்தமில்லாத தோற்றத்தில் இருந்தவனை நன்றாகப் பார்த்து வைத்துக் கொண்டாள்.


அவன் கிளம்பிப் போனதும் இருவரும் சிறைக்குத் திரும்ப, "ப்ச், அந்தப் புள்ள இன்னாடான்னா கண்லியே நிக்குது. அடுத்த தபா வரச் சொல்லோ இட்னு வாடான்னு சொல்லிருந்தேன். கேட்டா அது இதுன்ட்டு எதுனா சால்ஜாப்பு சொல்லுவான்" என்று பேரனை நினைத்துக் குறைப்பட்டுக் கொண்டார் அல்லி. அவரைப் பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது. தெரிந்து வேண்டுமென்றே திட்டமிட்டுக் குற்றம் செய்துவிட்டு இங்கே வந்திருப்பவர்கள் பலர் என்றால் தன்னைப்போல இவரைப்போல சூழ்நிலை கைதிகளும் இருக்கவே செய்கிறார்களே என மனதிற்குள் வருத்தப்பட்டாள்.


தூக்கம் துயரம் அனைத்தையும் மனதில் போட்டுப் புதைத்து வைத்துக்கொண்டு, பற்களைக் கடித்தபடி நாட்களைக் கடத்த, அவளுக்கான விடுதலை நாளும் வந்து சேர்ந்தது.


காவல் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டிய இடத்திலெல்லாம் கைநாட்டு வைத்துவிட்டு, (விசாரணையில் எழுதப் படிக்கத் தெரியாது என்றே சொல்லியிருந்தாள்) அவர்கள் திரும்ப ஒப்படைத்த அவளுடைய உடைமைகளைச் சரி பார்த்து வாங்கிக்கொண்டு, அல்லியிடம் விடைபெற்று, அங்கே வந்தது முதலே அவள் மீது பரிதாபப்பட்டு அவளுக்கு ஆதரவாக ஒரு சிறைச்சாலை அதிகாரிக்கு நன்றியையும் சொல்லிக் கொண்டு தயக்கத்துடன் வெளியில் வந்தாள்.


சொந்தமோ பந்தமோ எதுவுமே இல்லை என்றாலும் கூட அல்லி சொன்ன ஒரே வார்த்தைக்காக அவளுக்காக அங்கே வந்த காத்திருந்தான் அவருடைய அக்காவின் மகன். அவன் கையில் பிடித்திருந்த சிறுவனைப் பார்த்ததும் ஜீவானந்தத்தின் நினைவு வர அவளது மனமே உருகித்தான் போனது.


வரவழைத்தப் புன்னகையுடன் அவர்களை நெருங்கி வந்தவள், "ரொம்ப நன்றி அண்ணே, சொந்தக்காரங்க கூட இந்த அளவுக்குச் செய்ய மாட்டாங்க" என்று மனதில் இருந்து சொல்ல,


"பணமா காசா கண்ணு, மனுஷங்களுக்கு மனுஷங்கதான் ஆதரவு" என்று சீராளன் சொன்ன பதில் நெகிழ்ந்து போனாள்.


அருகில் நின்ற அல்லியின் பேரனுடைய கன்னத்தை வழித்து முத்தம் கொடுத்தவள், "உன் பேர் என்ன செல்லம்?" என்று வாஞ்சையுடன் விசாரிக்க,


நன்றாக போய் தன் தாய் மாமனுக்கு பின்னால் ஒளிந்து கொண்டவன், "அக்கா கேக்குது இல்ல சொல்லு கண்ணு" என்ற அவனது நிர்ப்பந்தத்தில்,


"பகலு" என்றான் வெளியிலேயே வராத குரலில்.


புரியாத பாவத்தில் அவள் அவனை ஏறிட, "பகலவன், நாங்க அல்லாரும் பகலுன்னு கூப்புடுவோம், அதத்தான் சொன்னான்" என விளக்கம் கொடுத்தச் சீராளன், அதன்பின் பேருந்தைப் பிடித்து அவர்களது குடிசைப் பகுதிக்கு அழைத்து வந்தான்.


அவளைப் பார்த்த நொடி, "அட ஆமாய்யா உன் சின்னாத்தா சொன்னா மாதிரி, இந்தப் பொண்ணு நம்ம கற்பு மேறியேதாயா இருக்குது. அதுவும் கட்சி கடசியா நெற மாச புள்ளதாச்சியா வந்து நின்னுச்சு பாரு அந்த நெனைப்பு வருதுயா" என்று அதீதமாக வியந்தாள் அவனுடைய மனைவி சாந்தா.


"அட இன்னா மே நீயி, கற்பு கற்புன்னு அத பத்தியே பெர்சா பேசிக்கின்னு கிடக்கிற? கற்புதான் எப்பவோ போய் சேர்ந்திடுச்சு இல்ல, இப்போ இன்னாத்துக்கு அதும் பேச்சு? பாவம் இந்தப் புள்ள மனசுக்கு பக்குனுருக்கும் இல்ல. வூட்டுக்குள்ள இட்னு போயி முதல்ல துன்றதுக்கு எதுனா குடு" என்று அவன் பதில் பேச,


"அதுவும் சர்தான், நீ வா கண்ணு, ஜெயிலுக்கு வந்தன்னைக்கி சின்னத்த சொன்தெல்லாம் மச்சான் என்னான்ட வந்து சொல்லுச்சு. நீ ஒன்னியும் கவலைப்படாத, நல்லபடியா ஒனக்கு டெலிவரி பார்க்க வேண்டியது எம்பொறுப்பு" என்றபடி அவளை அன்புடன் வரவேற்றாள் சீராளனின் மனைவி சாந்தா.


அதற்குள் அவள் வந்திருக்கும் செய்தி பரவி, அவளைப் பார்க்க அந்தப் பகுதி பெண்கள் எல்லாம் ஆவலுடன் அங்கே ஒன்று கூடிவிட, கலகலப்பும் சலசலப்புமாக சில நிமிடங்கள் கழிந்தன.


பக்கத்துக் கடையில் போய் தேநீர் வாங்கிக் கொண்டு வந்து அவளைப் பருக வைத்தான் சீராளன்.


'நீ எதுக்கு ஜெயிலுக்குப் போன?'


'இதோ இந்த மூணாவது வீட்டு சசி புருஷன் மாதிரி, ஒரு பிள்ளையைக் கொடுத்துட்டு உன் புருஷன் பேமானியும் எங்கனா ஓடிப்பூட்டானா?'


'பாவம், ரொம்ப சின்ன பொண்ணா இருக்குது. அல்லி மக கற்பகம் கணக்கா பிரசவத்துல இதுக்கும் எதுனா ஆகிப்பூடுமோ' போன்றதாக, இதைக் கேட்கலாம் இதைக் கேட்கக் கூடாது என்று எந்த வித நேக்குப் போக்கும் இல்லாமல் மனதில் பட்டதை எல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசி ஏதேதோ கேள்வி கேட்க, பதட்டம் கூடியது மல்லிகாவுக்கு.


அதை உணர்ந்தவளாக, "தச்சீ, வாய பினாயில் ஊத்தி கயுவு" என ஓங்கி ஒரு அதட்டல் போட்ட சாந்தா, "கற்பகம் சோறு தண்ணி இல்லாம பட்டினி கெடந்து, அடி உதை பட்டு நாசமாப் போய் திரும்பி வந்துச்சு. ஒடம்புல ரத்தம் இல்லாம, சத்து இல்லாம, பிள்ளைய பெத்து போட்டுட்டு போய் சேர்ந்துச்சு. அதுனால அல்லாருக்கும் அப்புடியே ஆயிடுமா என்ன? தோ, நம்ம சரோஜாவுக்குந்தான்  போன வாரம் புள்ள பொறந்துது. ஆத்தாளும் புள்ளையும் நல்லாத்தான கீதுங்க" என மருத்துவமனையில் வேலை செய்யும் அனுபவத்தில் மல்லிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக சாந்தா பேச மற்ற பெண்களும் ஏதோ ஒரு விதத்தில் அதை ஆமோதித்து ஏற்றுக் கொள்ள, அதன் பின்பு அவள் அடித்து விரட்டாத குறையாக அவர்களை அனுப்பி வைக்க அந்த இடம் அமைதியானது.


தங்கள் ஊரில் இருப்பது போல இவ்வளவு பெரிய பட்டணத்தில் கூட ஒதுக்கி வைக்கப்பட்ட கூட்டம் ஒன்று இருக்கிறதே என அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அவர்களிடம் வெளிப்படும் இவ்வளவு அன்பையும் தெளிவையும் பார்த்து வியந்துதான் போனாள் மல்லிகா.


சீராளனின் குடிசைக்குப் பக்கத்திலேயே இருந்தது அல்லியின் குடிசை. இவர்களும் இங்கேயே இருப்பதினால்தான் அதைப் பத்திரமாகப் பிடித்து வைத்திருக்க முடிந்தது என்றாள் சாந்தா. அதில்தான் மல்லியைத் தங்க வைத்தனர்.


அவளுக்குத் துணையாக தங்கள் மகள் திலகாவையும், பகலவனையும் அவளுடனேயே விட்டு வைத்தனர்.


அங்கிருக்கும் அரசு பள்ளியில் ஆறாவது படித்துக் கொண்டிருந்தாள் திலகா. பகலவன் பிறந்தவுடனேயே ஏதேதோ நடந்து போயிருக்க அவனுக்குப் பிறப்புச் சான்றிதழ் போன்ற எதுவுமே வாங்கி வைக்கவில்லை. அதனால் இதுவரை அவனை பள்ளியிலேயே சேர்க்கவில்லை. அல்லிக்கொடி விடுதலையாகி வந்த பிறகுதான் இதைப்பற்றிப் பார்க்க வேண்டும் என்று சொன்னான் சீராளன்.


பிள்ளைகள் அவளுடன் நன்றாக ஒட்டிக் கொண்டார்கள். அவர்கள் காண்பித்த மாசற்ற அன்பு அவளுக்குமே மனதின் காயங்களுக்கு மருந்து போடுவது போல ஆனது.


ஆரம்பத்தில் சற்றுக் கடினமாக இருந்தாலும் அந்த வாழ்க்கை சூழலுக்குத் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொண்டாள் மல்லிகா.


இப்படியே ஒரு மாதம் கடக்க, ஒரு நாள் மாலை அவளுக்கு இடுப்பு வலி எடுத்து, ஆட்டோ பிடித்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள்.


நேரம் செல்லச் செல்ல வலி பொறுக்க முடியாமல் அவள் கத்திக் கதற, "சும்மா சும்மா இப்படி கத்தக் கூடாது. *** அப்ப மட்டும் *கமா இருந்துச்சில்ல, இப்ப புள்ள பெத்துக்க மட்டும் ரொம்ப நோவுதா, வலி வரும் போது அப்படி இப்படி நட" என அங்கிருந்த செவிலியர் ஏசியதில் சுருக்கென்று மனதைக் குத்த, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது அவளுக்கு.


"இங்க வேல பளு கொஞ்சம் தாஸ்த்தி. அதுனால இதுங்கல்லாம் இப்படித்தான் வெக்கங்கெட்டதனமா கூவினு கிடக்கும். இதுக்கெல்லாம் நீ ஃபீலாகாத" என அவளை ஆற்றுப்படுத்தினாள் சாந்தா.


எப்படியோ முக்கி முனகி ஒரு வழியாக அன்று இரவே ஸ்வராவைப் பெற்றெடுத்தாள் மல்லிகா.


வீறிட்டு அழுதக் குழந்தையை மருத்துவர் தலைகீழாகப் பிடித்திருக்க, "பொம்பள புள்ள" என்று யாரோ சொல்வது காதில் விழவும் முதலில் ‘ச்சீ’ என்று மனது சலித்துப் போனாலும், பின்பு வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு சாந்தா பிள்ளையைத் தூக்கி வந்து அவளிடம் காண்பிக்க, தன் அன்னையின் ஜாடையிலிருந்த தன் மகளைப் பார்த்ததும், இப்படி ஒரு எண்ணம் இனி தனக்கு வரவே கூடாது. மிக மிகச் சிறப்பாக இந்தப் பெண் பிள்ளையை வளர்த்து ஆளாக்க வேண்டும்' என்ற வைராக்கியம் நெஞ்சில் சுரக்க, அதைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.


ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க, அடியில் போடப்பட்டிருந்த ஏகப்பட்ட தையல்கள் முள்ளை வைத்தது போல  குத்தல் வலி கொடுக்க, இலகுவாக உட்காரக்கூட முடியவில்லை. 


உதிரப்போக்கு வேறு அதிகமாக இருக்க,  அதற்கு துணி வைத்துக் கொள்ள, மாற்ற என எல்லாவற்றிற்குமே சாந்தாதான் முகம் சுளிக்காமல் உதவிக்கொண்டிருந்தாள்.


அரை மயக்க நிலையில் மல்லி அசதியுடன் இருக்க, வாயைத் திறந்து கொண்டு குழந்தைத் தன் தலையை அப்படி இப்படி ஆட்டி நெஞ்சில் மூட்டியது.


"உம்பொண்ணோட சாமார்த்தியத்த பாத்தியா மல்லி, இதுங்களுக்கு இதெல்லாம் யார் வந்து பாடம் சொல்லிக் கொடுக்கறாங்க?" என்று வியந்த சாந்தா,


"புள்ளைக்குப் பசிக்குதாங்காட்டியும். மொதல்ல தாய்ப்பால கொடு" என்றபடி தானே அவளுக்கு உதவி செய்ய, குழந்தையும் பக்கெனப் பிடித்துக்கொண்டு மெள்ள மெள்ள உறிஞ்சத்தொடங்க, அதிகம் கூச்சமாகத்தான் இருந்தது மல்லிக்கு. இதற்காக இதையெல்லாம் உதறித் தள்ள இயலாதே.


வெகு சில நிமிட இச்சையில், இந்தப் பிள்ளையைக் கொடுத்தவனுக்கு இதன் பிறப்பைப் பற்றிக் கூட தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு பெண்ணுக்கு அப்படியா?


எந்த உடம்பை, 'கணவன் மட்டும் காணும் அழகு' என மூடி மூடி வைத்துப் பாதுகாக்கப் பயிற்சிக் கொடுக்கிறார்களோ, பிரசவம் என்று வரும்போது அதைத்தான் மொத்தமாகத் திறந்துகாண்பிக்க வேண்டியதாக இருக்கிறது. இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா?


அதுவும் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, இரண்டு மூன்று மருத்துவர்கள், சில பல பயிற்சி மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், ஆயாக்கள் என பலரும் மாற்றி மாற்றிப் பார்த்து விட்டுத்தான் போனார்கள்.


ஒரு உயிரைப் பத்திரமாக இந்த உலகுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற பொறுப்புணர்வைத் தவிர வேறு என்ன இருந்தது அவர்களது இந்தச் செய்கையில்?


வயிற்றை அழுத்திப் பிடித்துத் தள்ளிய செவிலியரும், ஆயாவும்,  "முக்கு… முக்கு… இன்னும் கொஞ்சம்தான் தலை வெளியில தெரியுது, சோர்ந்து போயிடாத பொண்ணே. உன்னால முடியும்" என மூச்சு விடாமல் சொல்லி, ஊக்கம் கொடுத்து, பிள்ளையின் தலை வெளியில் வரும் சரியான நேரத்தில் யோனியைக் கிழித்து, அதன்பின் ஏதோ ஆயுதத்தைக் கொண்டு பிள்ளையை வெளியில் இழுத்து, மிச்சம் மீதி கழிவுகளையும் சுத்தம் செய்து, ஊசிக் கொண்டு சுருக்கு சுருக்கு எனத் தைத்து முடித்த மருத்துவரும், தங்கள் கடமை முடிந்ததும் அவளைத் தூக்கி வேறு இடத்தில் போட்டுவிட்டு அடுத்த பிரசவம் பார்க்கத் தயாராகி ஓடவில்லையா?


இங்கே இந்தச் சமுதாயம் தப்பு, தவறு என்று எதை எதையெல்லாம் சொல்கிறதோ அதே விஷயத்திற்கு நீதியும் நேர்மையுமான ஒரு மறுபக்கமும் இருக்கத்தானே செய்கிறது.


பலவாறாக எண்ணியபடியேதான் பெற்ற மகளுக்குப் பசியாற்றினாள் மல்லி.


***


நாட்கள் உருண்டோட, விடுதலையாகி அல்லி அங்கே வரும் பொழுது குழந்தைக்கு ஏழெட்டு மாதங்கள் முடிந்திருந்தன. தானும் உடன் வருகிறேன் என்ற மல்லியிடம், கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு எங்கேயும் அலைய வேண்டாம் என்று சொல்லிவிட்டு சீராளனும் சாந்தவுமாகப் போய் அவரை அழைத்து வந்தார்கள்.


அவருக்காகக் கூடியிருந்த அக்கம் பக்கத்து ஜனங்களைப் பார்த்துப் புன்னகைத்துடன் சரி, வீட்டுக்குள் நுழைந்த உடன் பேரனை அருகில் அழைத்து அவனை அணைத்தபடி மௌனமாக அமர்ந்திருந்தார் அல்லி.‌ அவனும் மாறி மாறி அவரது முகம் முழுவதும் முத்தம் வைக்க, அதைப் பார்த்து நெகிழ்ந்து போன சீராளனுக்கு, உணர்வுகளின் பிரபாகத்தில் அழுகை வந்து தொண்டை அடைக்க, "சித்தி" என்றழைத்தான்.


அதை உணர்ந்தவர், "ஏய், நீ எவன்டா இம்மா ஃபீலிங்ஸ் வுட்டுகுனு, ஜெயிலோ வூடோ எங்க கிடந்தாலும், எனக்கு எந்த கொரவும் கெடையாது அஆங் .‌ என்ன, உங்க அல்லாரையும் வுட்டுட்டு கஸ்டமா இருந்துச்சு அவ்ளோதான்" என்றார் அவனை ஆற்றுப்படுத்தும் விதமாக. அங்கே தன் கையில் குழந்தையை வைத்தபடி ஓரமாக நின்ற மல்லிகாவைக் கையசைத்து அருகில் வரும்படி அழைத்தவர், பகலவனின் கையைப் பிடித்து நின்ற திலகாவைக் கன்னம் வழித்துக் கொஞ்சினார்.


நெருங்கி வந்த மல்லி, குழந்தையை அவரிடம் கொடுக்க, "ராசராசேஸ்வரியாமே, பேருக்கேத்தாமாறி பாப்பா அப்படியே ராணி கணக்காதான் கீதுல்ல சாந்தா" என்று அருகில் நின்ற சாந்தாவைப் பேச்சில் இழுக்க, "பாப்பா மட்டும்தான் ராணி கணக்காகீதா, மல்லிகாவும் அப்புடித்தான், இப்ப நம்ம ஏரியாவுக்கே இந்த அம்மாதான் லீடரு. நம்ம பகலவன பொறுப்பா பள்ளிக்கூடத்தில் சேர்த்து, அவனுக்கு மட்டும் இல்லாம, நம்ம திலகா, மத்த ஏரியா புள்ளைங்க அல்லாத்துக்கும் டியசன் எல்லாம் சொல்லிக் கொடுக்குது தெரிமா?" என மல்லிகாவின் புகழ் பாடினாள் சந்தா.


காரணம், நாட்கள் செல்லச் செல்ல அந்த மக்களுடன் மிகவும் நெருங்கி போய்விட்டாள் மல்லிகா. அந்தப் பகுதியிலேயே அவள்தான் நன்றாக எழுதப் படிக்க தெரிந்தவள், இன்னும் சொல்லப்போனால் அதிகம் படித்தவளே அவள்தான் என்பதால் ஏதாவது கடிதம் எழுதவோ, மனு கொடுக்கவோ, படிவங்களை நிரப்பவோ அனைத்திற்கும் அவளது உதவியை நாடினார்கள் அந்தப் பகுதி மக்கள். அது அவர்களிடம் இன்னும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டது. மதிப்புடன் அவளைப் பார்க்கவும் வைத்தது.


"நம்ம சரோஜா இதுக்கு எக்ஸ்போர்ட் கம்பெனியில வேலை வாங்கிக் கொடுக்கிறேன்னு சொல்லிக்கிது. புள்ளைய பார்த்துக்க யார்னா வேணுமில்ல. நீ ரிலீஸ் ஆகி வந்த பின்ன, வேலைக்குப் போகலாம்ன்னு சொல்லி வைச்சிக்கிறேன்" என்று கூடுதல் தகவலாக அவள் சொல்லவும் பெருமையாக உணர்ந்தார் அல்லி.


"இந்த சரோசாவ, நான் ஜெயிலுக்குப் போகச் சொல்லொ தம்மாதூண்டு பொண்ணா பார்த்தது. இப்போ அதுக்கு கண்ணாலம் ஆகிப் புள்ள வேற பொறந்திருச்சாங்காட்டியும்" என்று வியந்தவர்,


"எங்கடி, அதோட புள்ளய எடுத்துகின வரச் சொல்லு பாக்கலாம்" என்று சொல்ல, அந்தக் கும்பலில் பின்னால் நின்றிருந்த சரோஜா எல்லோரையும் விலக்கிக் கொண்டு தன் பிள்ளையுடன் அவரை நெருங்கி வந்தாள்.


பிள்ளையை வாங்கிக் கொண்டவர், "ஆம்பள புள்ளையா? என்ன பேர் வெச்சிருக்க" என்று உரிமையுடன் கேட்க,


"ஆனந்து, அந்தப் பேர கூட நம்ம மல்லிதான் வெச்சுது" என்றாள் அவளுடைய நெருங்கிய தோழியாகியிருந்த சரோஜா.


மல்லிகாவின் கடைசி தம்பியுடைய பெயரின் பின்பாதி அல்லவா?


மல்லியை ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தார் அல்லி, காரணம் சிறைச்சாலையில் இருக்கும் பொழுது தன்னைப் பற்றிய எல்லா உண்மையையும் அவரிடம் மறைக்காமல் சொல்லியிருந்தாள் மல்லிகா.


******


அல்லி பொறுப்புடன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள, சரோஜாவின் உதவியுடன் துணிகள் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் செல்லத் தொடங்கினாள் மல்லி.


தினமும் பத்து மணி நேரம் வேலை வாங்கினார்கள். சிறு குழந்தையை வைத்துக் கொண்டு சிரமமாகவே இருந்தது. ஆனாலும் அதில் வரும் வருமானம் அவர்களுடைய அடிப்படை தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள போதுமானதாக இருக்க, அதை நன்றாகப் பற்றிகொண்டாள்.


காலம் தன் போக்கில் அவளை இழுத்துச் சென்றாலும், இடையிடையே வீட்டின் நினைவுகள் அவளைக் கொல்லும். பேசாமல் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு அங்கேயே போய் விடலாம் என்று கூட தோன்றும். ஆனால் அதன், பின்விளைவுகளை நினைத்து உடல் நடுங்கி விடும். தன்னையே கொல்லத் துணிந்தவர்கள் இந்தப் பிள்ளையை விட்டு வைப்பார்களா என்ன? அவர்களுக்குத்தான் பெண் குழந்தை என்றாலே வேண்டாத சுமையாயிற்றே. போதும் போதாததற்கு தான் செய்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் கொலையை பற்றிய பயம் வேறு. தனியாக அழுது ஓய்ந்து மனதைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவாள்.


மூன்று வருடங்கள் இப்படியே செல்ல, வீதியில் நடக்கும்பொழுது கார் காரன் ஒருவன் தட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட, காலில்  எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது அல்லிக்கொடிக்கு.


புத்தூர் அழைத்துப் போய் கட்டுக் கட்டிக் கூட்டி வந்தார்கள். அவரையும் கவனித்துக் கொண்டு பிள்ளைகளுக்கும் செய்து கொண்டு சரியாக வேலைக்குச் செல்ல முடியாமல் திண்டாடிப் போனாள் மல்லிகா.


வயிற்றுப் பிழைப்புக்கு எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக, கையில் இருந்த பணத்தை வைத்து ஒரு தையல் இயந்திரம் வாங்கி சாலையோரத்தில் அமர்ந்தபடி பழைய துணிகளைத் தைத்துக் கொடுக்கத் தொடங்கினாள். அது ஓரளவுக்குக் கைக் கொடுத்தது என்றாலும் போதவில்லை. நன்றாகத் தையலைப் பழகி இரவிக்கை, சுடிதார் போன்றவற்றைத் தைத்துக் கொடுக்கலாம் என்று நினைத்தாலும், தையல் வகுப்புகளுக்குச் செல்ல காசில்லை.


இதைச் சொல்லி ஒரு நாள் அவள் தன்னுடன் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் புலம்பி வைக்க, "ஒரு அண்ணன் எங்க ஏரியாக்கு  வந்து, வெறும் ஒரு ரூபாய் வாங்கிட்டு தையல் சொல்லிக் கொடுக்கறாங்கடீ. வாரத்துல மூணு நாள் அங்க வருவாங்க. நீ வேணா அவங்க கிட்ட வந்து கேட்டுப் பாரேன்" என்றதோடு நிறுத்திக் கொள்ளாமல் தானே அவளை அங்கு அழைத்துச் சென்று அவளுக்கு ஒரு பாதையைக் காண்பித்தாள் அவள்.


அங்கேதான் அவள் டெய்லர் அண்ணனைச் சந்தித்தாள். எல்லோருமே அவரை அப்படித்தான் அழைத்தார்கள். அவருடைய பெயரைக்கூட யாரும் தெரிந்து வைத்திருக்கவில்லை.


அவரைச் சந்தித்து தனக்கும் தையல் கற்றுக் கொடுக்குமாறு கேட்க, அன்றே அவருடைய பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொண்டார்.


தையல் கலையை மிகவும் விரும்பியே கற்றாள் மல்லிகா.


தன்னை நம்பி இருக்கும் பிள்ளைகளை முன்னுக்குக் கொண்டு வர எப்படியாவது நல்லபடியாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறியில் மிகக் குறுகிய காலகட்டத்திற்குள்ளேயே நன்றாகக் கற்றுத் தேர்ந்தாள்.


தினமும் டெய்லர் அண்ணனைப் பற்றிய புகழ்ச்சி அதிகம் இருக்கும் அவளிடம். எந்த ஒரு கருத்தையும் சொல்லாமல், அல்லிக்கொடி மௌனமாகக் கேட்டுக் கொள்வார் அவ்வளவுதான்.


இதே போல் ஒரு நாள் அவள் அவரை அதிகமாகப் புகழ, "எத்தனை பட்டும் உனக்கெல்லாம் புத்தியே வரலையே மல்லி" என்று அவளை வன்மையாகவே கண்டித்தார் அல்லி.


அப்படியே அவளது முகம் கூம்பிப் போக, "இதுபோல எவனோ ஒரு கசுமாலத்த நம்பிதான, நானும் மோசம் போனேன் நீயும் மோசம் போன. அதனாலதான் சொன்னேன்" என்று அவர் இறங்கி வந்து அவளைச் சமாதானம் செய்ய,


"அப்படி இல்ல அல்லிமா, நம்ம டெய்லர் அண்ணன் உண்மையாவே நல்லவங்க. அவங்க அம்மாவும் டெய்லர் தானாம். அவங்க கிட்டதான் இவரு டைலரிங் கத்துக்கிட்டாராம். இவருக்கு ஒரு தங்கச்சி இருந்துதாம். அந்தப் பொண்ணும் டைலரிங் செல்லித்தரச் சொல்லி இவங்க கிட்ட கேட்டிருக்கு. நம்ம தங்கச்சிக்கு என்ன, அது ஒரு மகாராணி. நாம இருக்கும்போது அவ ஏன் கஷ்டப்படணும்னு சொல்லி இவங்க கத்துக் கொடுக்கல. கல்யாணம் ஆகிப் போன பிறகு ஏதோ பிரச்சனையாகி அந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிச்சாம். அதுல ரொம்ப மனசு ஒடிஞ்சு போயிட்டாங்க டைலர் அண்ணன். நம்ம தங்கச்சிக்கும் இப்படி டெய்லரிங் சொல்லிக் கொடுத்திருந்தா வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்துகிட்டு இப்படி தற்கொலை பண்ணிக்காம தைரியமா வாழ்ந்து இருக்குமேன்னு நெனச்சு ரொம்ப வருத்தப்பட்டாங்களாம். அதுக்குப் பிறகுதான், இப்படி கஷ்டத்துல இருக்குற மத்த எல்லா பொண்ணுங்களையும் தங்கச்சியா நினைச்சு, தன்னோட தங்கச்சிக்கு நடந்தது மத்த பொண்ணுங்களுக்கு நடக்க கூடாதுங்கற நல்ல எண்ணத்துல, இப்படி வெறும் ஒரு ரூபாய் வாங்கிட்டு இந்தத் தையல் கலையைச் சொல்லிக் கொடுக்கறாங்க. நானும் சும்மா பார்த்த உடனே அவங்கள புகழல தெரிஞ்சுக்கோங்க.


ஆம்பளைங்கள்ள நல்லவன்னு பார்த்தா பத்துல நாலு பேர்தான் தேருவாங்க, அதுலயும் ரெண்டு பேரு சந்தர்ப்பம் கிடைக்காததுனால நல்லவங்களா இருப்பாங்க. ரெண்டே ரெண்டு பேருதான் உண்மையாவே நல்லவங்களா இருப்பாங்கன்னு எங்க அம்மா ஒரு தடவ சொன்னாங்க.  அதுல இந்தப் பத்துல ரெண்டு பேர் இருக்காங்க இல்ல அது மாதிரியான ஆளுதான் நம்ம டைலர் அண்ணன். என்னோட இந்த நம்பிக்கைய யாராலயும் மாத்த முடியாதும்மா" என்று அதற்கு அவள் ஒரு நீண்ட விளக்கம் கொடுக்க, தன் சொந்த அம்மாவைப் பற்றி அவள் பேசியதில் அல்லியின் முகம் மாறியது.


"சரி சரி, முன்ன மாதிரி இல்ல, உனக்கும் வயசு கூடி இருக்கு, உலக அனுபவமும் வந்து சேர்ந்துகிச்சு. உட்டா எனக்கே புத்தி சொல்ல ஆரம்பிக்காத" என்று நொடித்தாலும் அவள் சொன்னதைப் புரிந்து கொண்டார்.


அதன் பின்னான நாட்களில் அந்த ஒற்றை தையல் மிஷினை வைத்துக் கொண்டே அக்கம் பக்க குடியிருப்புகளில் வசிக்கும் பெண்களுக்கு இரவிக்கை தைத்துக் கொடுக்கத் தொடங்க, கொஞ்சம் வருமானம் கூடியது.


மகளைப் பள்ளியில் சேர்க்கவேண்டிய காலம் நெருங்க, திலகா மற்றும் பகலவனின் பொறுப்புகளும் கூடவே சேர்ந்திருக்க, இப்பொழுதிலிருந்தே பணம் சேர்த்தால்தான் அவர்ளை பெரிய பெரிய படிப்புகள் படிக்க வைக்க முடியும் என்று தோன்றியது மல்லிகாவுக்கு.


வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வாடகைக்குக் கடை எடுத்து, மேலும் சில தையல் இயந்திரங்களை வாங்கிப் போட்டுப் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கிற எண்ணம் அவளுக்குள் அடிக்கடி தலைத் தூக்க, அதற்காக எப்படி பணத்திற்கு ஏற்பாடு செய்வது என்பது புரியாமல் அமைதி காத்தாள்.


இரண்டு வீடு தள்ளி இருக்கும் சசி, அவள் வீட்டு வேலை செய்யும் எஜமானியின் இரவிக்கைகளை இவளிடம் தைக்க கொண்டு வந்து கொடுப்பாள். அதேபோல ஒரு நாள் அவள் இவர்கள் குடிசைக்கு வரும்போது, அல்லிக்கும் இவளுக்கும் இதைப் பற்றிய பேச்சு வார்த்தைதான் நடந்து கொண்டிருந்தது.


"வா சசி, இப்புடிக்கா குந்து" என அவளை வரவேற்று உட்கார வைத்துவிட்டு, "நீதான் ஏதோ ஒரு பழைய பட்டுப் பொடவை வெச்சுக்கிறியே. அதை எதுனா நகைக்கடையில எடுத்துக்கினு போய் கொடுத்தா துட்டுக் குடுப்பாங்க. அத வச்சு எதுனா செய்ய முடியுமா பாரேன்" என்று அல்லி தன் பேச்சைத் தொடர, பதில் கூறாமல் தீவிரமாக யோசித்தாள் மல்லி.


"என் கண்ணு, உன் பாட்டிக் கொடுத்த புடவையைக் கடைல போட சொல்றேனு அம்மா மேல கோச்சிகினியா" என் அல்லி சங்கடத்துடன் கேட்க,


"ச்சச்ச என்ன அல்லிமா, நீங்க இப்படி பேசறீங்க? இந்தப் பழைய புடவைக்குப் பெருசா என்ன துட்டு வந்துரப்போகுதுன்னு யோசிச்சேன். வேற ஒண்ணும் இல்ல" என்று இவள் பதில் கொடுக்க,


அதுவரை அவர்களை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்த சசி, "நீ பட்டுப் பொடவல்லாம் வெச்சிக்கிறியா மல்லி" இன்று வியந்து கேள்வி கேட்க,


"ஆமாங்கக்கா, எங்க அம்மாவோட அப்பா வழிப்பாட்டியோட கல்யாண பொடவ. என் சடங்குக்கு வந்தப்ப என் பாட்டி அத கொண்டு வந்து எங்களுக்குக் கொடுத்தாங்க" என்று பதில் சொன்னவளின் வார்த்தையை வைத்துக்கொண்டு சசி அவளது சொந்தக் கதையைத் தோண்டி துருவ,


"ஏ சசி, தோ பாரு, நீ இன்னா வேலையா வந்தியோ அத மட்டும் கண்டுக்குணு போ, இப்ப என்னத்துக்கு உனக்கு இவ அப்பன் பாட்டன் பத்தின தேவையில்லாத கதல்லாம்" என்று குறுக்கே விழுந்து அல்லி அவளைப் பிடுங்க,


"சரி சரி எனக்கு இன்னாத்துக்கு இந்த ஊர் வம்புலாம்" என நொடித்துக் கொண்டாலும்,


"எங்க அந்த பட்டு பொடவைய ஒரு தபா என்னான்ட காமி" என்று உரிமையுடன் கேட்டாள்.


அங்கேயே ஓரமாக இருந்த அந்தப் புடவையை எடுத்து மல்லியும் தயங்காமல் அவள் கையில் கொடுக்க அதைப் பார்த்ததும் ஆடியே போய்விட்டாள் சசி.


"ஆத்தாடி, இது இன்னா சாதாரண பட்டு புடவையா இது. இதை உன்னான்ட கொடுத்த உன் ஆயா இத பத்தி ஒண்ணுமே சொல்லலியா" என்று வியந்து அவள் கேள்வி கேட்க எதுவுமே புரியவில்லை மல்லிக்கு.


"என்னக்கா சொல்றீங்க ஒண்ணுமே புரியலையே" என்று அவள் விழிக்க,


"ஏய் மல்லி, இது பூராம் தங்க சரிக போட்ட பொடவடீ. சேட்டு வூட்டுல வேலை செய்ய காட்டியும் இது மாதிரி ரெண்டு மூணு பொடவைய நான் கையிலேயே எடுத்துப் பாத்திருக்கேன். என்னா கனம் கனக்குது. இத கண்டி கொண்டு குடுத்தா, அப்புடியே உருக்கி தங்கமா மாத்திடுவான். எம்மாம் பவுனு தேறுமோ தெரியலையே" என்று அதிசயத்துப் போனவள், "இத போட்டுத் துட்டாகணும்னா நீ எங்கேயும் போய் ஏமாந்து போயிராத. என்னாண்ட சொல்லு, நானே சேட்டு வூட்டுக்கு இட்னு போயி நல்ல வெலையா வாங்கி தரேன். உட்டா அந்த ஆளே கூட ஏமாத்திபுடுவான்" என்று சொல்லிவிட்டுத்தான் கொண்டு வந்த அளவு இரவிக்கையையும் தைக்க வேண்டிய துணிகளையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றாள் சசி.


உண்மையில் தன் கொள்ளு பாட்டியின் அந்தப் புடவையை இப்படி விற்று பணமாக்க அவளுக்கு மனம் வரவில்லைதான். ஆனாலும் அந்த நைந்து போன புடவையால் இனி யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்து, எந்த விதத்திலாவது அது தனக்குப் பயன்பட்டால் ஒரு நல்ல எதிர்காலத்துக்கு வழி வகுக்குமே என அதை விற்றுவிடும் முடிவுக்கு வந்தவள் அடுத்த நாளே சசியிடம் சொல்லி அவளை அந்த சேட்டின் கடைக்கு அழைத்துப் போகும்படி கேட்க, சந்தோஷமாகவே அங்கே இவளை அழைத்துக் கொண்டு போனாள் சசி.


சசி சொன்னது போல, அவளைப் போன்ற விவரமான ஒருத்தரை உடன் அழைத்துப் போகாமல் இருந்தால் நிச்சயமாக ஏமாற்றப்பட்டு இருப்போம் என மல்லி முழுமையாக நம்பும்படிதான் அங்கே எல்லாமே நடந்தது.


சசி அவருடைய நம்பிக்கைக்கு உரிய நபர் என்பதால்தான் இந்தப் புடவை இவளிடம் இருப்பது பற்றித் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு அவர் குடையவில்லை. ஏனென்றால், களவு செய்தாலே ஒழிய இவளைப் போன்ற ஒரு அடித்தட்டுப் பெண்ணிடம் இது போன்ற புடவை இருக்க நூறுசதவிகிதம் வாய்ப்பே இல்லை என்பதே இது போன்றோர்கள் கருத்து.


அந்தப் புடவையை கையில் வாங்கி அப்படி இப்படி திருப்பிப் பார்த்தவரின் முகம் அப்படியே மலர்ந்து போனது. "ஒரு எழுவத்தியஞ்சு வருஷமாவது இருக்கும் இந்த புடவைய நெஞ்சு. ஸ்பெஷலா தறியில கொடுத்து நெசவு செஞ்சிருப்பாங்க" என்று அவர் வியத்து பாராட்ட,


"எங்க தாத்தாவோட அம்மா கல்யாணப் புடவை. அந்தக் காலத்துல அவங்க அந்த ஊர்ல பெரிய பண்ணையாரா இருந்தாங்களாம்" என்று அவள் விளக்கம் கொடுக்க, அதற்கு மேல் அதைப் பற்றி அவர் ஏதும் கேட்கவில்லை.


சசியை விட்டு அங்கிருக்கும் இரும்பு வாளியை எடுத்து வரச் சொன்னவர் அதில் அந்தப் புடவையை போட்டு அதன் மேல் கொஞ்சமாக மண்ணெண்ணெயைத் தெளித்துக் கொளுத்தினார்.


அது மொத்தமாக எரிந்து முடியும் வரை பொறுத்திருந்து அதில் தண்ணீரை ஊற்ற, சாம்பல் மொத்தமும் மேலாக மிதந்து வந்தது.


சரிகையில் இருந்த தங்கம் மொத்தம் உருகி கட்டியாக அடியிலேயே தங்கிவிட, மேலுடன் இருந்த சாம்பலை எல்லாம் கொட்டி விட்டு அந்த தங்கத்தை மட்டும் சேர்த்து எடுத்து எடை போட்டார்.


மொத்தமாக ஆறு பவுனும்  ஆறு கிராம்களும் தேறியது.


அத்தனையும் சுத்தமானத் தங்கம்தான். இருந்தாலும் கூட உரிய விலையைக் கொடுக்க மனமில்லாமல் அந்த மனிதர் அப்படி இப்படி பேரம் பேச, அடித்துப் பேசி ஒரு நல்ல தொகையை அவளுக்கு வாங்கிக் கொடுத்தாள் சசி.


அதைக் கொண்டு ஒரு கடையை வாடகைக்கு எடுத்து மேலும் மூன்று தையல் இயந்திரங்களை வாங்கிப் போட்டு, அந்தக் குடிசைப் பகுதியில் இருக்கும் பெண்களையே வேலைக்கு அமர்த்தி, தன் தொழிலுக்குப் பிள்ளையார் சுழிப் போட்டாள் மல்லிகா.


அவளுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவளுக்கு அரும் துணையாக அமைந்தனர் அல்லியும் அந்தக் குப்பத்துப் பெண்கள் பலரும்.


இரவிக்கை, சுடிதார் போன்றவற்றைத் தைத்துக் கொடுப்பதில் ஆரம்பித்து, அக்கம் பக்கத்து தனியார் பள்ளிகளின் சீருடைகளை மொத்தமாகத் தைக்கும் வேலைகளை எடுக்கும் அளவுக்கு உயர்ந்து, மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமாக வளர்ந்து நின்றது மல்லியின் தொழில்.


கண்களைப் பறிக்கும் படி அழகாக மலர்ந்து, மெல்லியதாக மணம் வீசினாலும், மணக்கும் குண்டு மல்லிக்குச் செய்வது போலக் காட்டுமல்லிக்கு யாரும் பதியன் வைத்து, உரம் போட்டு, தண்ணீர் பாய்ச்சி வளர்ப்பதும் இல்லை. வேலி போட்டுக் காவல் காப்பதும் இல்லை.


இத்தகைய கவனிப்பு எதுவுமே கிடைக்காமல் போனாலும் கூட, தோட்டத்துப் பயிர்களுக்கு தானே உயிர் வேலியாக மாறி, அதிவேக வளர்ச்சியுடன் புதராகப் படர்ந்துகொண்டே போய் பூத்துக் குலுங்கும் ஆற்றல் இந்த காட்டுமல்லிக்கு உண்டு.


அதே போன்றதொரு அசுர வளர்ச்சிதான் மல்லிகாவினுடையதும்!3 comments

3 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Sumathi Siva
Sumathi Siva
Jul 29, 2023
Rated 5 out of 5 stars.

Wow awesome

Like

Rated 5 out of 5 stars.

Wow nu dan sollanum pa malli oda munnetram sema pa neemga sonnathu pola niraiya per life la idellam nadanthu irukalam pa rumba nalla iruku pa

Like
Replying to

Thank you 😊

Like
© KPN NOVELS COPY PROTECT
bottom of page