top of page

Kaattumalli - 15வணக்கம் அன்புத் தோழமைகளே!


முந்தைய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த பின்னூட்டங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.


அடுத்த பதிவுடன் வந்திருக்கிறேன். சொன்னதுபோல 18+ பதிவுதான். ஆனால் முற்றிலும் வேறு கோணத்தில்!


எந்த இடத்திலும் முகம் சுளிக்குப்படியாகவோ, எதார்த்தத்துக்கு அப்பாற்பட்டோ வந்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் எழுதிய கனமான பதிவு என்பதால் தாமதமாகிவிட்டது, கூடவே சில பழ கடமைகள் பொறுப்புகள் etc, சேர்ந்துகொண்டது, மன்னிக்கவும்.


இந்த எபிசோட் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.


மடல் - 15


வழக்கமாக மாசி மகத் திருவிழா அவர்கள் ஊரில் மிக விமர்சையாக நடக்கும். ஊர் எல்லைக் காட்டுக்குள் அமைந்திருக்கும் காட்டு அம்மன் என்று அவர்கள் அழைக்கும் முண்டகக்கண்ணி அம்மன் கோவிலுக்குக் காப்புக் கட்டித் திருவிழா எடுப்பார்கள்.


தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் அந்தத் திருவிழா மாசி மகத்தன்று முடியும்.


அக்கம் பக்கத்து ஊருக்குப் பஞ்சம் பிழைக்கப் போனவர்கள் எல்லாம் கூட இந்தத் திருவிழாவுக்காக ஊரில் வந்து ஒன்று கூடிவிடுவர்.


ஒலிப் பெருக்கிகள் கட்டி பகல் முழுவதும் பாடல்கள் போட்டு காது கிழியும்.


இந்த ஐந்து நாட்களும், அதிகாலையும் மாலையும், பம்பையும் உடுக்கையும் உருமி மேளமும் முழங்க அம்மனை வருணித்து அதற்காக வரவழைக்கப்பட்டிருக்கும் சிறப்பு குழுவினர் பாடும் பாடல் கேட்டால் சாமானியப்பட்டவர்களுக்குக் கூட ஆவேசம் வந்து ஆட தோன்றும்.


மூன்றாம் நாள் பூக்குழித் திருவிழா நடக்கும். அம்மன் கரகம் எடுத்தல்,  தீச்சட்டி ஊர்வலம் எனத் தினம் தினம் ஊரே அமர்க்களப் படும். கூழ் ஊற்றுவது, நேர்த்திக் கடனுக்காக ஆடு, கோழி பலியிடுவது என ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் பரபரப்பாகவே இருப்பார்கள்.


திருவிழாவின் கடைசி நாளான மாசி மகத்தன்று அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் செய்து, சுத்துப்பட்டு ஊர்கள் சேர்த்து அம்மன் திருவீதி ஊர்வலம் நடைபெறும்.


மயிலாட்டம், கரகாட்டத்துடன் இரவு எட்டு மணி போல ஊரில் இருந்து கிளம்பினால் மறுபடி அம்மன் ஊர் வந்து சேர அடுத்த நாள் காலை பத்து மணிக்கு மேலாகிவிடும்.


இப்படியாக அந்த வருட திருவிழாவும் அமர்க்களமாகக் களைக் கட்ட, கடைசி நாள் திருவிழாவும் வந்தது, அம்மன் ஊர்வலமும் புறப்பட்டது.


ஊர்வலம் புறப்படுவதற்கு முன்பாக குடும்பம் குடும்பமாக வந்து முழு அலங்காரத்துடன் அம்மனைத் தரிசித்து விட்டுப் போவார்கள்.


அவரவர் வீட்டு வாயிலில் அம்மன் ஊர்வலம் வரும் பொழுது அர்ச்சனைத் தட்டுக் கொடுத்துத் தரிசனம் செய்த கையுடன் கோவிலுக்கு அருகில் இருக்கும் ஒரு திடலில், சுருட்டிய பாயும் சொம்பில் தண்ணீரமாக ஒவ்வொருவராக வந்து பொருத்தமான இடம் பிடித்து அமர்ந்து விடுவார்கள்.


காரணம், அங்கேதான் பெரிய திரைக் கட்டி ப்ரொஜெக்டர்கள் கொண்டு வந்து வைத்து விடிய விடிய திரைப்படங்கள் போடுவார்கள். ஒன்பது மணி வாக்கில் ஆரம்பித்தால், இடைவெளி விடாமல் தொடர்ந்து மூன்று படங்களைப் போடுவார்கள்.


அதில் முதல் படம் கட்டாயம் ஊர் பெருசுகளுக்காக, ஒரு எம்ஜிஆர் படமாகவோ அல்லது சிவாஜி படமாகவோ இருக்கும்.


அடுத்தடுத்த படம் இளசுகள் விரும்பும் சமீபமாக வந்த படமாக இருக்கும்.


அதேபோல அன்றும் ஒவ்வொருவராக அங்கே குழுமத் தொடங்க, பக்கத்து வீட்டுக் கிழவியுடன் பிரியாவும் மல்லிகாவும் வந்து திரைக்கு அருகிலேயே இருப்பது போல, ஓரமாக இடம் பார்த்துப் பாய் விரித்து அமர்ந்தார்கள்.


சின்னவன் மட்டும் மல்லிகாவுடன் இருக்கப் பெரிய தம்பிகள் இருவரும் அவன் வயதொத்த பிள்ளைகளுடன் போய் உட்கார்ந்து விட்டனர்.


பெரிய வீட்டுக்காரர்களுக்கென்று திரைக்கு அருகிலேயே பக்கவாட்டில் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும்.


பெரும்பாலும் வல்லரசுவின் அப்பாதான் திரைப்படம் தொடங்கிய பிறகு, தன் அல்லக் கைகளுடன் அங்கே வந்து பெயருக்கென்று சில நிமிடங்கள் அமர்ந்து விட்டுக் கிளம்பிப் போய்விடுவார். மூத்தவன் தங்கராசு சில வருடங்களுக்கு முன் செய்த சேட்டையால் அவர்களே அவனை இங்கே அனுமதிப்பதில்லை.


இந்த வருடம் வல்லரசு இங்கே இருக்கவும் ஒருவேளை அவன் இங்கே வருவானோ என்கிற நப்பாசை மல்லிக்குள் இருந்தது. இரு தினங்களுக்கு முன் இவள் இதைப் பற்றிக் கேட்டதற்கு கூட, "நான் எல்லா படத்தையும் தியேட்டர்லயே பார்த்துட்றேன், இப்படி ஒப்பன் கிரவுண்ட்ல உட்கார்ந்து பார்க்க எனக்கு கொஞ்சம் கூட இன்ட்ரஸ்டே இல்ல. அப்பாவால வர முடியலன்னா, சும்மா வந்து தலையைக் காண்பிச்சிட்டுப் போனா போவேன்" என்று தெளிவாகச் சொல்லி இருந்தான். ஆனாலும் கூட இவளுடைய மனம் அவனை அதிகம் நாடியது. அவன் பக்கத்தில் அமர்ந்து பார்க்க முடியவில்லை என்றாலும் ஒரே இடத்தில் அமர்ந்தாவது பார்க்கலாமே என்கிற நப்பாசை அவளுக்கு. இது ஒரு விபரீத ஆசை என்பதை அவள் இந்தக் கணம் சற்றும் அறிந்திருக்கவில்லை.


வழக்கம்போல முதல் படம்  மக்கள் திலகம் நடித்த படமாகிப் போக, பெருசுகள் எல்லாம் குறிப்பாகப் பெண்களெல்லாம் அந்தப் படத்தை ஒரு பரவசத்துடன் பார்க்கத் தொடங்கினர்.


பக்கத்து ஊரில் இருக்கும் பிரியாவின் தோழி அவளுடைய அப்பா அம்மாவுடன் அங்கே படம் பார்க்க வரவும் இவள் எழுந்து போய் அவர்களுடன் உட்கார்ந்து கொண்டாள்.


படம் பாதி ஓடிக் கொண்டிருக்கும் போதே ஜீவானந்தம் உறங்கிப் போயிருக்க, பக்கத்து வீட்டுப் பாட்டியம்மா மட்டும் ஆர்வமாகப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.


அன்று மாலை பாக்கியத்தைப் பார்க்க அவர்கள் வீட்டுக்கு வந்திருந்தார் அந்தப் பெண்மணி. பாக்கியத்தின் உடல்நிலை இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை, இல்லையென்றால் முதல் ஆளாகக் கிளம்பி இருப்பார்.


வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் படம் பார்க்க ஆர்வமாக இருக்கவும், "நான் வர மாதிரி இருந்தாலாவது கூட்டிட்டு வருவேன். குணாவும் உடம்பு முடியல வரலன்னு சொல்லிட்டான். இப்ப எங்க இருந்து இவளுக்ள அனுப்ப?" என வழக்கம்போல பாக்கியம் பெண்பிள்ளைகளுக்கு முட்டுக்கட்டைப் போட,


"அதான் நான் போறேன் இல்ல. ஊரே அங்கதான இருக்கப் போகுது. சும்மா அனுப்பி வை பாக்கியம். புது படம் போடும்போது கோகிலாவும் வந்தா வரேன்னு சொல்லி இருக்கு" என ஏதோ நல்ல மனநிலையில் இருந்தவர் பாக்கியத்திடம் இவர்களுக்காக சிபாரிசு செய்ய, ராஜத்துக்குமே இந்தப் பெண் பிள்ளைகளை நினைத்து மனதிற்குள் ஒரே கரிசனம்தான். மாமியார் படுத்த படுக்கையான பிறகு அந்தப் பிள்ளைகளின் மேல் அதிகம் சுமை ஏற்றிவிட்டமோ என்கிற குற்ற உணர்ச்சி ஏற்கனவே அவள் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்க, போய்விட்டுதான் வரட்டுமே என்கிற எண்ணம்தான்.


பாக்கியம் பெரிய மனது செய்து அவர்கள் செல்ல அனுமதித்து விட, சாமி ஊர்வலம் அவர்களுடைய வீட்டைக் கடந்து சென்ற பிறகு கையில் வைத்திருந்த குவாட்டர் பாட்டிலை வாய்க்குள் மொத்தமாக கவிழ்த்துக்கொண்டு குணா போய் படுத்து விட்டான்.


கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருவரும் இவருடன் கிளம்பிவிட்டனர்.


அப்படி இப்படி முதல் படம் முடிய, இரண்டாவதாக அங்கே திரையிடப்பட்ட படம் ரோஜா. அன்று அவன் இந்தப் படத்தைப் பற்றி சொல்லி இருக்கவும், ஒரு புதிர் விடுபடும் குதூகலம்தான் மல்லிக்கு.


படம் தொடங்கி சில நிமிடங்கள் கழித்து வல்லரசு அந்த ஊர் இளவட்டங்களுடன் வந்து அவர்களுக்காக அங்கு போடப்பட்டிருக்கும் இருக்கையில் அமர, அதுவும் ஓரமாக பாய் விரித்து இவர்கள் உட்கார்ந்து இருந்த இடம் அவன் பார்வையில் படும்படியாக வேறு அமைந்திருக்க, அடிக்கடி அவனது பார்வை வேறு அவளைத் தீண்டிக் கொண்டே இருக்க, அதனால் உண்டான வேதியல் மாற்றத்தால் உடல் முழுவதும் ஒரு சூடு பரவியது மல்லிகாவுக்கு.


ஒரு குறிப்பிட்ட காட்சிக்குப் பிறகு படம் கொஞ்சம் சோகமாக, சட்டெனப் புரிந்துகொள்ள இயலாத வகையில் சென்று கொண்டிருக்க, ஆர்வம் குறைந்துபோய் அதற்கு மேல் விழித்திருக்க முடியாமல் பக்கத்து வீட்டுப் பாட்டி உறங்கியே போனார்.


மொத்த கும்பலும் படத்தை ஆர்வமுடன் பார்த்திருக்க, தொடர்ந்து வந்த காட்சியில் அவன் தன் சட்டையைப் பற்றி சொன்ன விளக்கம் அவளுக்குப் புரிந்து போனது. சரியாக அதே நேரம் அவளைப் பார்த்து அவன் செய்த கண் ஜாடையில் அவளது உடலின் ஒவ்வொரு அணுவும் சிலிர்த்துக்கொண்டது.


சில நிமிடங்கள் இப்படியே கடக்க அவளை எழுந்து வருமாறு ஜடை செய்துவிட்டு அவன் மட்டும் தனியாக அங்கிருந்து அகன்று விட, படப்படவென்றாகிப்போனது மல்லிகாவுக்கு.


அவள் மறுத்து வரமாட்டேன் எனப் பதில் ஜாடை செய்யக்கூட அவன் அவளுக்கு அவகாசம் கொடுக்காமல் போயிருக்க, எழுந்து சென்றே ஆக வேண்டிய ஒரு கட்டாயம். போகாமல் விட்டுவிட்டால் நிச்சயம் கோபித்துக் கொள்வான் என்பது அவளுக்குத் தெரியும். அவனைச் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.


தவறு என்று தெரிந்தும், உடல் முழுவதும் பயம் பரவி இருந்தும், மற்ற அனைத்தையும் புறந்தள்ளி அவனுக்குப் பின்னால் செல்ல முடிவெடுத்தவள் சுற்றும் மற்றும் பார்வையைச் சுழல விட, திரையில் இருந்து வரும் வெளிச்சத்தைத் தவிர அதிக வெளிச்சம் இல்லாமல் அந்த இடமே இருளில் மூழ்கியிருந்தது.


பக்கத்து வீட்டுக் கிழவியும் உறங்கிப் போயிருப்பது சாதகமாகிப் போகச் சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த பிரியாவைப் பார்த்தாலும் அரை தூக்கத்தில் சாமி ஆடியபடி அவளும் அந்தப் படத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க, நிச்சயம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்கிற தைரியம் பிறந்தது. ஏதாவது கேட்டாலும் இயற்கை உபாதைக்கு ஒதுங்கியதாகச் சொல்லிக் கொள்ளலாம் எனப் பூனை போல நழுவி, அங்கிருந்து அவன் போன திக்கில் நடக்கத் தொடங்கினாள்.


சற்றுத் தொலைவில் ஒரு மரத்தில் சாய்ந்த படி அவளுக்காகக் காத்திருந்தவன் அவளைப் பார்த்த நொடி தன்னுடன் இழுத்து அணைத்துக் கொண்டான்.


ரகசியமான விரச மொழியில் அவன் அவளிடம் ஏதேதோ கேள்விகள் கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறியபடி கொஞ்சம் கொஞ்சமாக அவன் எதிர்பார்ப்புக்குத் தக்க வளைந்து கொண்டிருந்தாள்.


மேற்கொண்டு அவள் எதையும் யோசிக்க விடாமல் எதையெதையோ பேசியபடி அப்படியே நடக்க தொடங்கினான். திகைப்பூண்டை மிதித்தவள் போல அவளும் அவனுடனே இணைந்து நடக்க, வல்லரசுவின் தென்னந்தோப்பு வந்திருந்தது.


அதன் பின்பே சுற்றுபுறம்  உரைக்க, பெண்களுக்கே உரித்தான எச்சரிக்கை உணர்வு சற்றே தலை தூக்கி, "போதும் அரசு, பக்கத்து வீட்டுப் பாட்டி முழிச்சுக்கிட்டா பிரச்சனையாயிரும் வாங்கத் திரும்பிப் போகலாம்" என்று இலகுவாகச் சொன்னபடி திரும்பி நடக்க எத்தனித்தவளின் கையைப் பற்றி, "இந்த மாதிரி சான்ஸ் எல்லாம் நமக்கு கிடைக்கிறது கஷ்டம், அதுக்குள்ள அந்தப் பாட்டி எழுந்துக்க மாட்டாங்க நீ கவலைப்படாத, இந்தத் தோப்பு வீட்லதான் என்னோட ஹேண்டி கேமரா வச்சிருக்கேன். உனக்கு காமிக்கறேன் வா" என்று மறுக்க இயலா வண்ணம் அவளைத் தன்னுடன் இழுத்துச் சென்றான்.


இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தானே அவன் இவ்வளவு நாட்கள் காத்திருந்தான்!? சுலபத்தில் அவளை விடுவானா என்ன?


ஒரு வருடத்திற்கு முன் அவன் இங்கு வந்திருந்த சமயத்தில்தான் இவனுடைய சொந்த அத்தை மகளான சந்திராவுடன் இவனுக்கு திருமணம் செய்வதென்று எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.


எட்டாம் வகுப்பிலேயே இரண்டு முறை ஃபெயிலாகி, கல்வியிலும் அவனுக்குச் சமமாக இல்லை! அவனுடைய மாமாவைக் கொண்டு பிறந்தவளாக, கருப்பாகக் குட்டையாகச் சற்றுக் கட்டைக் குரலுடன் தோற்றத்திலும் அவனுக்கு இணையாக இல்லை. அவளைப் போய் மணக்க சொல்லவும், கொஞ்சம் கூட மனம் ஒப்பவில்லை அவனுக்கு.


முடியாது என்று வீட்டில் மறுப்பு சொன்னதற்கு, அவளைத் திருமணம் செய்தால்தான் அத்தையின் பங்குப்பணம் வீட்டை விட்டு வெளியில் போகாமல் இருக்கும், இல்லையென்றால் சொத்தில் ஒரு பாகத்தை அவளுக்குப் பிரித்துக் கொடுக்க நேரும் என்று அதற்கு ஒரு பெரிய காரணத்தைச் சொன்னார் அப்பா.


அதற்காகவெல்லாம் அவளைத் திருமணம் செய்ய முடியாது என்று சொன்னதற்கு, அவளை மணக்கவில்லை என்றால் சொத்தில் சல்லிக் காசுக் கூட கொடுக்க முடியாது, இன்னும் சொல்லப்போனால் இறுதியாண்டு கல்விக்கான கட்டணத்தைக் கூட கட்டமாட்டேன் என்று அவர் கராராகச் சொல்லிவிட, மிகக் கேவலமாகத் தோற்றுப் போய் அவரிடம் பணிய வேண்டிய சூழ்நிலை அவனுக்கு.


பிறந்தது முதலே, பணத்திமிருடன் சேர்த்து ஜாதிய திமிரையும் அல்லவா ஊட்டி ஊட்டி வளர்த்திருக்கிறார்கள்?


இதெல்லாம் எனக்குத் தேவையே இல்லை எனத் தூக்கிப் போட்டுத் தன் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு இவனுக்கு முதுகெலும்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


அப்படி தூக்கி எறிந்துவிட்டுப் போகும் அளவுக்குக் கொஞ்சநஞ்ச சொத்தும் இல்லை. பூர்விகச் சொத்துடன் சேர்த்து, வேலாயுதம் சொந்தமாகச் சம்பாதித்து வைத்திருக்கும் பணத்தையும், வடிவு வழிச் சொத்தையும் சேர்த்துப் பார்த்தல், இந்த ஊர் என்ன, இது போல பத்து ஊரைக் கூட வாங்கலாம். இவன் பங்குக்கு மட்டுமே எக்கச்சக்கமாக தேறும். அதை விட்டுவிட எப்படி மனம் வரும்.


அவனது மறுப்பு மதிப்பற்றுப் போக, சந்திராவுக்குப் பதினெட்டு வயது பூர்த்தியானவுடன் திருமணம் என்று பேசி வைத்திருக்கிறார்கள். அதற்குள்ளாக அண்ணன் தங்கராசுவின் திருமணத்தை வேறு நடத்தி முடிக்க வேண்டும். அவனின் ஊரறிந்தப் பொறுக்கித் தனத்தால் சுற்றுப்பட்டு ஊர்களில் இருக்கும் சாதிசனத்தில், சம அந்தஸ்தில் யாரும் பெண் கொடுக்கத் தயாராக இல்லை.


இப்படி  ஒரு சந்தர்ப்பத்தில்தான் அவர்கள் தோட்டத்தில் பூப் பறிக்க வந்த மல்லிகாவைப் பார்த்தான். சிறுவயதில் எல்லாம் அவளைப் பார்த்திருக்கிறான்தான், இருந்தாலும் இப்பொழுது அவளைப் பார்க்கும் பொழுது அவனுக்கு ஏற்பட்ட உணர்வு முற்றிலும் புதியது.


அவன் ஆசைப்பட்டபடி ஒரு பெண்.


அவளுடைய விரிந்த சிரிப்பே அப்படி ஒரு போதையைக் கொடுத்தது அவனுக்கு. அதுவும் அரசல்புரசலாக அவள் அவனைப் பார்த்த ஏக்கப் பார்வை அவளுக்குத் தன மீது உண்டாகியிருக்கும் ஈர்ப்பைப் படம்பிடித்துக் காண்பிக்க, வாழ்ந்தால் இப்படிப்பட்டவளுடன்தான் வாழ வேண்டும் என்று அவனைப் பித்தம் கொள்ளச் செய்தாள்.


அன்று வைத்தக் குறியில் தப்பாமல் இன்று அவளைத் தன் மடியில் விழ வைத்து விட்டான்.


அன்று முதன் முறையாக அவள் சுவர் ஏறி குதித்து வந்து ஜாலி அருகில் நின்றதை மாடியிலிருந்து பார்க்காமலா அப்படி வந்து அவளைக் கட்டிப் பிடித்து பதற்றம் அடையச் செய்தான்? இல்லை... இவனுடைய தலையீடு இல்லாமல்தான் இந்த ரோஜாப்படம் அங்கே திரையில் ஓடிக் கொண்டிருக்கிறதா?  முன் கூட்டியே தெளிவாக திட்டமிடாமல் இதெல்லாம் தானாகக் கனிந்து விட்டதா என்ன?


மனதில் நினைத்தது நினைத்தபடி, பிடித்தக் கையை விடாமல் அவளைத் தன் தோப்பு வீட்டிற்குள் அழைத்து வர, அந்த வீடு சிறியதாக இருந்தாலும், கூடம், சமையலறை, ஏசியுடன் கூடிய ஒற்றைப் படுக்கையறை எனச் சகல வசதிகளையும் உள்ளடக்கியதாகவே இருந்தது.


நேராகப் போய் அங்கிருந்த ஃப்ரிட்ஜைத் திறந்து அதிலிருந்த குளிர்பான பாட்டில்களைக் காண்பித்தவன், "உனக்கு எது பிடிக்குமோ எடுத்துக்கோ" என்று சொல்ல, தொலைக்காட்சி விளம்பரங்களில் மட்டுமே இதையெல்லாம் பார்த்திருக்கிறாள்.


கலர் சோடா வாங்கிக் குடிக்கவே காசிருக்காது, இதெல்லாம் எங்கிருந்து? 'பிடித்ததை எடுத்துக்கொள்' என அவன் சொன்னதே அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது.


டவுனில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து அவர்கள் இதை அடுக்கி வைத்திருப்பார்கள் போலும்.


மாம்பழப் பானம் ஒன்றை ஆசையாகக் கையில் எடுத்துக் கொண்டாள். அந்த ஃப்ரிட்ஜின் உள்ளேயே இருந்ந ஓப்பனரை எடுத்து அவள் கையில் இருந்த பாட்டிலைத் தன் கையால் பிடித்த படியே திறந்தவன், அவள் கையை விடாமல் அழைத்து வந்து படுக்கையறைக்குள் இருந்த சோஃபாவில் அமர வைத்து, "இப்ப குடி" என்று சொல்லிவிட்டுப் போய் தன் ஹாண்டி கேமராவை எடுத்து வந்தான்.


அவளுடன் நெருங்கி அமர்ந்தபடி அதை அவளுக்கு இயக்கிக் காண்பிக்க கண்மண் தெரியாத அளவுக்கு அவனைப் பிடித்தது.


அந்தக் குளிர்பானத்தைப் பருகிக் கொண்டே அதிலிருந்த பதிவைப் பார்க்கத் தொடங்க, கொஞ்சம் கொஞ்சமாக அத்து மீறியவனுக்கு மறுப்புத் தெரிவிக்கக் கூட மறந்தே போனாள்.


குளிர்பான விளம்பரத்தில் காண்பிப்பது போல மாம்பழ ரசத்தில் நனைந்த அவளுடைய இதழ்கள் மட்டும் மிக அருகில் அவன் கண்களுக்குக் கவர்ச்சியூட்ட, கேமராவை ஓரமாக வைத்துவிட்டு அவளைப் பருகத் தொடங்கியவன், கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு அவளும் வசப்பட்டுப் போயிருந்தாள்.


'இப்படி ஒரு சந்தர்ப்பத்தை மீண்டும் உருவாக்க இயலுமா?' என்கிற அவநம்பிக்கையுடன், கிடைத்திருக்கும் இந்த குறுகிய நேரத்தைக் கொஞ்சமும் வீணடிக்க விரும்பாமல், நினைத்ததை முழுமையாகச் செய்து முடித்திட வேண்டும் என்கிற அவசர கதியில், வெறியாட்டம் ஆடித் தீர்த்து, அவளது  ஜீவன் முழுவதையும் பருகி விட்டு எஞ்சியிருக்கும் சக்கையாக அவளது உடலை மட்டும் மிச்சம் வைத்தான்.


தொடங்கிய பொழுது அதன் தீவிரம் புரியாமல் இருந்தவளுக்கு, நரகம் என்பது எப்படி இருக்கும் என்பது போகப் போகத்தான் புரிந்தது. மாதவிடாய் உதிரப்போக்கால்  வரும் இடுப்பு வலியும் யோனியில் உண்டாகும் வலியையுமே தாங்க முடியாமல் தவிப்பவளுக்கு இப்படிப்பட்ட முதல் கூடலினால் உண்டாகியிருக்கும் உள் உருப்பு சிதைவால் உண்டான வலி உயிர் வாதைக் கொடுத்தது.


அசைக்க முடியாத நம்பிக்கையுடன், என்னதான் அன்னியோன்னியமாகப் பழகினாலும் எல்லைக் கோட்டை தாண்டவே மாட்டேன் என தனக்குத் தானே போட்டுக் கொண்டிருந்த வைராக்கிய வேலியைத் தாண்டி, தான் எப்படி இந்தளவுக்கு இணங்கிப் போனோம் எனத் திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தாலும் அவளுக்குப் பதிலே கிடைக்கவில்லை.


பீதியுடன் அசையக் கூட முடியாமல் அமர்ந்திருந்தவளைப் பார்த்து, "சாரி ஏதோ தெரியாம நடந்து போச்சு. நீ இதுக்கெல்லாம் பயப்படாத. நான் உன்ன கைவிடவே மாட்டேன்" என மிகவும் நல்லவனாக அவளுக்கு வாக்களித்தவன், "பாத்ரூம்ல போய் கிளீன் பண்ணிட்டு வந்து டிரஸ்ஸ சரி செஞ்சிட்டுச் சட்டுனு கிளம்பு. இல்லன்னா தேவை இல்லாம எல்லார்கிட்டயும் மாட்டிப்ப. நம்ம ரெண்டு பேருக்குமே ரொம்ப அசிங்கமா போயிரும்" என்று அவளை அவசரப்படுத்த அது மட்டும் நன்றாக மூளைக்குள் உரைத்து அவளைப் பதறிச் செயல்பட வைத்தது. ஒரு அடி எடுத்து வைக்கக் கூட இயலாத அளவுக்கு வலி கொடுத்தாலும்,  இங்கே வரும்பொழுது கதை பேசியபடி தன் கைப் பற்றி அழைத்து வந்தவன், ஏன் இப்படி ஓடித் தொலைகிறான் எனக் குழம்பியபடி அவனுடைய வேகத்துக்கு நடந்தாள். அவன் முன்பு நின்றிருந்த அதே மரம் வரை அவளுக்குத் துணை வந்தவன், தன் வேகம் தணிந்து, "பார்த்துப் பத்திரமா போ" என்று மென்மையாக அவளை அனைத்து அவள் உச்சியில் இதழ் பதித்து விடுவித்தான்.


மறுபடியும் அங்கே சென்று எல்லோருடனும் அமர அவளுக்கு அவ்வளவு அருவருப்பாக இருக்க, கால் பாட்டிற்கு அவர்கள் வீடு வரை இழுத்து வந்து விட்டது. கதவு உட்பக்கமாக தாளிடப்பட்டிருக்க, இந்த நடுநிசி நேரத்தில் தட்டி அம்மாவைக் கூப்பிட்டுக் கலவரப்படுத்த விரும்பாமல், வேறருந்த மரம் போல வாயிற் திண்ணையில் சரிந்தாள்.


கால்களைக் குறுக்கிப் படுக்கக் கூட முடியாமல் வலி உயிர் போக அப்படியே இரு கால்களையும் நீட்டி விரித்த படி சுவரில் சாய்ந்தமர்ந்தவளின் விழிகளில் கண்ணீர் பாட்டுக்கு வழிந்த வண்ணம் இருந்தது.


'இந்த அரச நம்பி நாம இந்த அளவுக்கு வந்துட்டோமே! இந்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்யாம நம்மள கல்யாணம் கட்டிப்பானா?!" என்கிற கேள்வி விஸ்வரூபமாக மனதில் எழுந்து பூதாகரமாக அவளை மிரட்டியது.


இதையெல்லாம் தாண்டி, அங்கே ஓடிக்கொண்டிருக்கும், அவள் பார்க்க அதிகம் ஆசைப்பட்ட சூர்யவம்சம் படம் இவளை ஒரு ஏக்கப் பெருமூச்சு விடவைத்தது.


இது எல்லாமே, ‘மலர்ந்தும் மலராத, வளர்ந்தும் வளராத, அறிந்தும் அறியாத, புரிந்தும் புரியாத’ இரண்டுங்கெட்டான் வயது படுத்தும் பாடுதான் இல்லையா?


உன் நிறம் இப்படி இருந்தால்தான் நீ அழகு,


உன் உடல் இப்படி இருந்தால்தான் அழகு,


உன் கூந்தல் இப்படித்தான் இருக்க வேண்டும்,


நீ இது போல உடுதினால்தான் அழகு,


மற்றவரைக் கவர நீ இப்படி இப்படியெல்லாம் உன்னை அழகுபடுத்திக்கொள் எனக் கலர் கலராகக் கண்டதையும் கண்களில் காண்பித்து ஆசையை வளர்க்கும் சமூகம்!


‘ராஜ குமரன் போல ஒருவன் குதிரையில் வந்து உன்னை…’ என, விவரம் புரியாத வயதிலேயே கல்யாணக் கனவுகளை ஒரு  பெண்ணின் மனதிற்குள் விதைக்கும் சமூகம்!


தடம் மாறிப் போனால் ‘நீ பத்தினி இல்லை’ எனப் பழிச் சுமத்தும் சமூகம், ஆளாளுக்குத் தனித்தனியாக ஆயிரம் வரையறைகளை வகுத்து வைத்திருக்கும் இந்த மேட்டிமைத்தனமான சமூகம், தன் சொந்த உடல் சார்ந்த உரிமைகளையும், உன்னதமான பாலியல் புரிதலையும் பெற்று, இந்த நேரத்தில் இது தனக்குத் தேவையா தேவையில்லையா, எந்தெந்தச் சூழலை எப்படிக் கையாள வேண்டும் என்ற தெளிவைப் பெற ஒரு பெண்ணக்குச் சரியான வழியைக் காண்பிப்பதில்லையே!


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page