top of page

Kaattumalli - 20

Updated: Jan 8

மடல் - 20


அவ்வப்பொழுது வீண் வம்பளப்புக்காக விமலாவின் வீட்டிற்கு வந்து செல்லும் அந்தப் பெண்மணியின் கண்களில் பாந்தமாக வேலை செய்யும் மல்லிகா பட்டு விட, நேரம் ஒதுக்கித் தனக்காகவும் வேலை செய்ய இவளை அனுப்பும்படி விமலாவிடம் நச்சரிக்கத் தொடங்கினார்.


அந்தப் பெண்மணியின் கணவர் குமரனின் மேல் அதிகாரி. குமரனுடைய பதவி உயர்விலிருந்து அனைத்திற்கும் அவரது தயவு தேவைப்பட விமலாவாலும் மறுக்க இயலவில்லை.


நாள் முழுவதும் இங்கே உழைப்பது போதாதென்று அங்கேயும் போய் எடுபிடி வேலைகள் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகிப் போனது மல்லிக்கு.


ஆரம்பத்தில், வேலைச் சுமையைத் தவிர பெரிதாகத் தொல்லைகள் எதுவும் இல்லை என்றாலும், நாட்கள் செல்லச் செல்ல, அந்தப் பெண்மணியின் கணவர் வீட்டில் இருக்கும் சமயங்களில் அங்கே செல்லவே அஞ்சினாள் மல்லிகா.


உடல் முழுவதும் மேயும் அந்த மனிதரின் பார்வையும், தொலைக்காட்சியில் அவர் ஓடவிடும் ஆங்கில பேஷன் சேனலில் அரை நிர்வாண பெண்களின் அணிவகுப்பும்,   சினிமா பாடல்தான் பாடுகிறேன் பேர்வழியே என விரசமான வரிகளாகத் தேர்ந்தெடுத்து அவர் பாடும் தொனியும் அப்பட்டமான பாலியல் சீண்டல்தான் என்பது மல்லிகாவுக்கு நன்றாகவே புரிந்தது.


ஆனாலும் இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாமல் நிர்பந்தத்தின் பேரில் அவள் அவர்கள் வீட்டிற்கு வேலை செய்ய போய் வர, ஒரு நாள் அவர்களது அறையில் தரையில் கொட்டி விட்ட காஃபியைத் துடைப்பதற்கு அவளை உள்ளே வரச் சொல்ல, உலகமே மறந்ததுபோல தொலைகாட்சியில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் எஜமானி வேறு அதைச் செய்யச் சொல்லி இவளுக்கு ஆணைப் பிறப்பிக்க, வேறு வழி இல்லாமல் அவளும் அங்கு சென்று அதைத் துடைக்கும் பொழுது கால் இடதுபோல் சரிந்து அவள் மேல் விழுந்து கண்ட இடத்தில் தொட்டுத் தடவினான் அந்தக் கிழக்கோட்டான்.


இதற்கு மேல் இதைத் தொடர்ந்தால், இது தேவையில்லாத பிரச்சனையில் கொண்டு போய் விடும் என அவள் அங்கே போவதை ஆனமட்டும் தவிர்க்கத் தொடங்கினாள்.


ஆனால் அதற்கும், அந்தப் பெண்மணி வீடு தேடி வந்து விமலாவிடம் குத்தலாக ஜாடைப் பேசி விட்டுப் போக, இதை மனதில் வைத்துக் கொண்டு அந்த மேதகு மேலதிகாரி அலுவலகத்தில் குமாரனிடமும் மறைமுகமாக பிரச்சனை வேறு செய்யத் தொடங்கி இருக்க, அது அப்படியே வீட்டிலும் பிரதிபலித்தது.


அடுத்த முறை அவர் ஏதோ வேலைக்காக அழைத்தப் பொழுது, வேறு வழியில்லாமல் அவளை அங்கே செல்லும்படி நிர்பந்தித்தாள் விமலா.


அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல், தயங்கித் தயங்கி தன்னுடைய பிரச்சனையை அவளிடம் சொல்லிவிட்டாளா மல்லிகா.


ஏதோ மல்லிகாவுக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு விமலாவும் அந்தப் பெண்மணியிடம் உள்ளது உள்ளபடி சொல்லி நியாயம் கேட்டு முறையிட, அதை அவர் கொஞ்சம் கூட நம்பத் தயாராக இல்லை. காரணம் அந்தப் பெண்மணி தன் கணவன் மீது கொண்டிருந்த பதிபக்தி அப்படி.


"என் வீட்டுக்காரரு அந்த சாமி மாதிரி, அவர் வயசு என்ன இந்தப் பொண்ணு வயசு என்ன. மாசமா வேற கிடக்கு. இது கிட்ட போய் இப்படி எல்லாம் செய்வாரா" என அந்தப் பெண்மணி பேசிய விதத்திலேயே அபாய மணி அடித்தது மல்லிகாவின் மனதுக்குள்.


அவசரப்பட்டு, தான் இதை வெளியில் சொன்னது தவறு என அவள் வருந்திக் கொண்டிருக்க, அடுத்த நாளே, இந்தப் பெண்மணியின் வீட்டில் ஒரு பெரிய தொகை காணாமல் போயிருப்பது தெரியவர, அதை இவள்தான் திருடி இருக்கிறாள், அதனால்தான் இப்படி அபாண்டமாக தன் கணவனின் மேல் பொய் பழிச் சுமத்தி இருக்கிறாள் என்பதாக தன் நம்பிக்கைக்கு ஒரு சாதகமான முடிவுக்கு வந்துவிட்டார் அந்தப் பெண்மணி.


இப்படி திட்டமிட்டு அவள் மேல் பழி வரும்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதே தன் கணவன்தான் என்பதை அறியாமல், மல்லிகாவின்மேல் இருந்த கண்மண் தெரியாத ஆத்திரத்தில், தங்கள் வீட்டிலிருந்து அவள் பணத்தைத் திருடி விட்டதாக  காவல்துறையில் புகாரும் கொடுத்துவிட்டார்.


அதன் அடிப்படையில் அவளை விசாரிக்க வீடு வரை போலீஸ் வந்துவிட விமலாவால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.


அவளுக்கென்று இருக்கும் ஒரே உடைமையான அவளுடைய கட்டைப்பையை அவர்கள் சோதனையிட, எந்த ஒரு தனிப்பட்ட செலவுக்கும் அவசியம் இல்லாமல் போனதால் அதில் அவள் பத்திரமாக வைத்திருந்த ரூபாய் நோட்டுக் கட்டுகளே அவள் குற்றம் செய்தவள்தான் என்பதற்கு சான்றாகிப் போனது.


'நான் திருடல, அது என்னோட பணம்தான்' என்று அவள் கெஞ்சிப் பார்க்க, இவ்வளவு பெரிய தொகையை அவள் எப்படி சம்பாதித்தாள் என்கிற கேள்விக்கு அதற்கு முறையான பதிலை அவளால் சொல்ல முடியவில்லை.


அப்படி சொல்லும் பட்சத்தில் அவள் தன்னுடைய உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டி வரும், அப்பொழுது வேலாயுதத்தை அவள் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி வந்து விட்டாள் என்கிற உண்மையும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அதன் பின் தனக்கு ஆயுள் தண்டனையோ மரண தண்டனையோதான் கிடைக்கும் என்கிற அச்சத்தில் அவள் தடுமாற, ஒரு பெண் கான்ஸ்டபிள் உடன் வர அவளைக் கைது செய்து அழைத்துப் போனார்கள்.


'முன்ன பின்ன தெரியாதவங்கள கூட்டிட்டு வந்து வீட்டுக்குள்ள வச்சா இப்படித்தான் நடக்கும்! மானமே போச்சு' என்பதாகக் குமரன் வேறு தன் பங்கிற்கு விமலாவிடம் சண்டைக்குக் கிளம்ப, மொத்த சூழ்நிலையும் மல்லிகாவுக்கு எதிராக திரும்பிப் போயிருக்க, விமலாவே மல்லிகாவை நம்பவில்லை.


நாளுக்கு நாள் அவளுடைய வயிறு வேறு பெரிதாகிக் கொண்டே வர, கூடவே வைத்திருந்தால் அவளது பிரசவத்தை வேறு பார்க்க வேண்டுமே என்கிற சிறு பயமும் அவளது மனதிற்குள் கனன்று கொண்டேதான் இருந்தது. அடிக்கடி அதைச் சொல்லிக் காண்பித்து குமரன் வேறு அவளைக் கிளறி விட்டுக் கொண்டே இருந்தான்.


இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க ஏதுவாக இப்படி ஒரு சூழ்நிலை தானாகவே அமையவும், அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டாள் என்றே சொல்ல வேண்டும்.


அதற்கு மேல் மல்லிகாவுக்காக உதவ அவள் தயாராக இல்லை. காவல் நிலையத்தில் வைத்து, அவர்கள் துருவித் துருவிக் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் அவளால் சரியான பதிலைச் சொல்ல இயலவில்லை.


ஊர், பெயர், கணவனின் பெயர், வயது என எந்த உண்மையையும் அவளால் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் திண்டாடிப் போக, விமலாவிடம் முன்பே சொன்ன பொய்யை அப்படியே தொடந்தாள்.


கையில் கிடைத்த ஆதாரத்தை வைத்து, அவளைக் கொண்டு போய் நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள்.


நீதிமன்றத்தின் பரிந்துரையில் அவளுக்கு சட்ட உதவி கிடைத்ததுதான். ஒருவேளை தன் உண்மை வயதைச் சொல்லி இருந்தால் கூட அவளுக்கு ஏதாவது சலுகை கிடைத்திருக்குமோ என்னவோ. முன்பு கருக்கலைப்புக்காகச் சென்ற பொழுது அங்கே மருத்துவர் சொன்ன தகவல்கள் அவளை அச்சுறுத்தி இருக்க, உண்மையான வயதைச் சொல்லக்கூட அவளுக்குத் தைரியம் இல்லை.


தன் பிரசவ செலவிற்கும் அதன் பின்னான செலவுகளுக்கும் பயந்துதான் அந்தத் தொகையைத் திருடி விட்டேன் எனச் சற்று மாற்றி நீதிமன்றத்தில் சொன்னால் கருணை அடிப்படையில் அவளுக்கு குறைந்த பட்ச தண்டனைதான் கிடைக்கும் என, அவள் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட, அவளை விசாரித்த காவல்துறை அதிகாரி அவளிடம் சொல்லியிருக்க, அதை அப்படியே சொல்லி வைத்தாள்.


அவளுடைய பிரசவ நேரம் போன்றவற்றை மனதில் கொண்டு அவளுக்கு மூன்று மாத சிறை தண்டனை மட்டும் வழங்கி தீர்ப்பளித்தார் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி.


அவளுடைய துயரத்தின் உச்சகட்டமாகச் சிறைச்சாலையையும் பார்த்துவிட்டாள்.


பிள்ளைத்தாச்சி என்கிற ஒரே சலுகையில் அதிகம் பிரச்சனைகளில் சிக்காமல் தப்பித்தாள். இந்த ஒரே காரணத்தினால் சக கைதிகளும் சரி காவல்துறை அதிகாரிகளும் சரி அவளிடம் மென்மையாகவே நடந்துகொண்டார்கள்.


அவள் சிறைச்சாலைக்கு வந்து ஓரிரு தினங்கள் இருக்கும் பொழுது மதிய உணவை வாங்கி வந்து தனியாக ஒரு மூலையில் அமர்ந்தவளுக்கு அம்மா, தங்கை, தம்பிகள் என வீட்டு நினைவு வந்து விட, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது.


"தெரிஞ்சிகினே தப்பு செஞ்சியோ தெரியாம செஞ்சியோ, நடந்தது நடந்து முடிஞ்சி போச்சாங்காட்டியும். பிள்ளைத்தாச்சிப் பொண்ணு இப்படி அழுதுகினு கெடந்தா எங்கனா வேலிக்கி ஆவுமா" என அதட்டலாக வந்து விழுந்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, பார்த்ததுமே மிரள வைக்கும் வாட்டசாட்டமான தோற்றத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தார் அல்லிக்கொடி.


அவள் பதறி எழுந்து நிற்க, "அட ஏம்மா, நீ ஏன் இப்படி அலறி அடிச்சுகினு எழுந்து நிக்கிற. நான் என்ன சிங்கமா புலியா? ஒக்காரு, ஒக்காரு" என்று அவள் தோளை அழுத்தி அமரச் செய்து தானும் அருகில் உட்கார்ந்தவர், "பாத்தாக்கா பச்ச புள்ளை கணக்கா தெரியிற, இப்புடி வயசுக்கு வந்தவங்க ஜெயில்ல கொண்டாந்து ஒன்ன போட்டு வெச்சிருக்கானுங்க" என்று அவர் கேட்ட கேள்வியில் தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு. அவளுடைய உயரத்தையும், அவள் வயிற்றில் வளரும் பிள்ளையையும் மட்டுமே பார்த்து அவளை ஏதோ பெரிய மனுசியாகத்தான் எல்லோரும் நினைத்தார்கள். சதா சர்வ காலமும் கவலையால் கன்றிப்போய், அவளது முகம் வேறு முற்றி முதிர்ந்து போயிருந்தது. ‘இவர் எப்படி தன்னைப்பற்றிச் சரியாகக் கணித்தார்’ என வியப்புடன் அவரை ஏறிட,


"நீயே ஒரு கொயந்தமாறிக்கீறயே கண்ணு, ஒனக்கு ஒரு கொயந்தையா? எவனாவது கஸுமாலம் பேமானிய நம்பி இத வவுத்துல வாங்கினு வந்தியாங்காட்டியும்" என்பதாக, பார்த்து சில நிமிடங்களுக்குள்ளேயே தன்னுடைய சரித்திரம் மொத்தத்தையும் அவர் புட்டு புட்டு வைக்க திகைத்துத்தான் போனாள்.


அவருடைய எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. அவருமே கூட, அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போனாரே ஒழிய அந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்த ஒரு பதிலையும் எதிர்பார்க்கவும் இல்லை.


ஆனால் அப்படி இப்படி பேச்சு கொடுத்துக் கொண்டே அவளை அந்தச் சாப்பாடு முழுவதையும் சாப்பிட வைத்து விட்டார்.


அவளுடைய அம்மாவிற்குப் பிறகு அவள் மீது அக்கறை காண்பிக்கும் ஒரு புதிய ஜீவன் கிடைத்ததுப் போன்ற ஒரு நிம்மதி அவளது மனம் முழுவதும் பரவினாலும், சிறு பயம் கூடவே ஒட்டிக்கொண்டேதான் இருந்தது.


இப்படியே சில நாட்கள் செல்ல, அவரிடம் நெருக்கமும் உண்டானது.


ஒரு நாள், "ஆமாம் மூணு மாசம் முடிஞ்சி ரிலீஸ் ஆவும் போது எங்க போவ?" என்று அவர் உண்மையான அக்கறையுடன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அவள் தடுமாறிக் கண்ணீர் விட,


"நான் எதுனா கேட்டா உடனே பொசுக்கு பொசுக்குனு அழுவு, பதில் மட்டும் சொல்லிடாத" என்று அவர் உரிமையுடன் கோபிக்க,


முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டவள், "நான் ஒரு அனாத, எங்க போகிறது என்னன்னு எதுவுமே தெரியலிங்க" என்று பதில் கொடுத்தாள்.


யோசனையுடன் அவளது முகத்தையே கூர்ந்து பார்த்தவர், "த இதுக்காகவா இப்படி மூக்க சிந்திக்கினு கிடக்கற. அப்புறம் நானெல்லாம் ஒரு ஆளுன்னு என்னாத்துக்கு கீறனாம்" என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியவர்,  "நோவு நொடி இல்லாமக்கீரனான்னு என்ன கண்டுகினு போக எங்கக்கா மவன் எப்பனா இங்க வருவான். அவனாண்ட சொல்லி வெக்கறேன், நீ ரிலீஸ் ஆவ காட்டியும், அவன் கூட போயி கொஞ்ச நாள் இரு" என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது மல்லிக்கு.


"நான் மட்டும்னா பரவால்ல, நான் இருக்கிற இந்த நிலைமையில் யாருக்கும் பாரமா இருக்கக்கூடாது. என்னோட வயித்துல இருக்கிற சுமையை எப்படி இறக்கி வைக்க போறேன்னே புரியல. நானெல்லாம் உசுர வச்சுட்டு நடமாட்டிட்டு இருக்கிறதே பூமிக்குப் பாரம்" என்று மனதிற்குள் அடைத்து வைத்திருந்த உணர்வுகளை எல்லாம் அவள் கொட்டித் தீர்க்க,


"என்ன இப்புடி மெண்டலு மாதிரி பேசற. இங்க பொறக்கற ஒவ்வொரு உசுரும் யாரையும் நம்பியா இந்தப் பூமிக்கு வருது. என் குட்சையாண்ட வந்து பாரு தெரியும். அவ அவ பிளாட்பாரத்திலேயே படுத்து ஒரு புள்ளைய வாங்கிக்கினு, அந்த பிளாட்பாரத்துல வச்சே அதைப் பெத்து, அந்தப் புள்ளைங்களுக்கு அப்பனாவது ஆண்டவனாவது ம*ராவதுன்னு அங்க வெச்சே வளக்குறா. நீ என்னடான்னா புலம்பினுக்குற" என்று ஒரு அதட்டல் போட்டவர்,


"எங்கக்கா மருமவ ஆரசாரம் ஆஸ்பத்திரியில ஆயா வேலை பார்க்குது. என் பேரனையே ஆறு ஏழு வருஷமா அதுதான் வளக்குதுன்னா பாரு. அந்த அளவுக்கு அது சூதுவாது தெரியாத ஆளு. என் குடிசைலயே உன்ன தங்க வெச்சி டெலிவரி பார்த்து உட சொல்லிக்கறேன். நீ ஒண்ணும் ஃபீல் ஆகாத" என்றால் எதார்த்தமாக.


ஒரு முறைக்கு இரண்டு முறை அவள் பட்ட சூடு உடல் முழுவதும் ஒரு பீதியைக் கிளப்பினாலும், இதற்கு மேல் மோசமான நிலைமைக்குப் போக என்ன இருக்கிறது என்கிற கழிவிரக்கமும் தோன்ற, காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும் பொழுது கிடைக்கும் சிறு துரும்பைக்கூட பற்றிக் கொண்டு கரைச் சேர துடிக்கும் ஒரு உயிர் போல், இவரது உதவியைப் பற்றிக் கொள்வதை தவிர அவளுக்கும் வேறு வழியில்லாமல் போக, பதில் சொல்லக்கூட இயலாத அளவுக்கு அவளது தொண்டை அடைத்துப் போய், கண்ணீர் ததும்ப அவரை ஏறிட்டாள்.


"நீ வேற ஒன்னிக்கும் மெர்சல் ஆவாத, எனக்கு தண்டன பீரியடு இன்னும் ஏழெட்டு மாசம்தான் கீது. முடிஞ்சதும் நானும் வெளிய வந்துருவேன். அதுக்கப்புறம் நம்ம ரெண்டு பேரும் ஒண்ணாவே சேர்ந்து ஏதோ ஒரு பொழப்ப பார்க்கலாம்" என்றார் மேற்பூச்சுக்கள் எதுவும் இல்லாமல்.


அவருக்கு என்ன பதில் சொல்வது என்று கூட புரியாமல், "ரொம்ப நன்றிங்க" என்று மட்டும் சொல்ல, "ஏம்மா நான் பெத்த மவ மாதிரி நெனச்சு ஒன்னான்ட பழவறேன். நீ இன்னாடான்னா, இந்த வார்டன் அம்மா கிட்ட பேசிக்கற மாதிரி வாங்க போங்கன்னு இம்மாம் மருவாதி குடுக்கற. என்ன அந்நியமா தள்ளி வைக்கலாம்னு பாக்குறியா" என்று ஏக்கம் ததும்ப அந்தப் பெண்மணி கேட்கவும், ராஜத்தின் நினைவு நெஞ்சை முட்டிக்கொண்டு வர அவர் மடியிலேயே தலை சாய்ந்து விசும்பத் தொடங்கினாள்.


"ஐயோ கண்ணு, சும்மா தமாசாங்காட்டியும் இப்படி பேசிகினேன். நீ ஃபீல் ஆவாத" என்று தொண்டை அடைக்கச் சொல்லிக்கொண்டே அவளது கூந்தலை வருடினார் அல்லிக்கொடி.


அதன் பிறகு இருவருக்குள்ளான நெருக்கம் இன்னும் அதிகம் கூடித்தான் போனது.


ஒரு நாள் பேச்சு வாக்கில், "இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்க, என்ன தப்பு செஞ்சிட்டு ஜெயிலுக்கு வந்தீங்க?" என்று அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்க தயக்கமாக இருந்தாலும் கூட, அவள் கேட்டே விட, அவர் சொன்ன கதையில், இப்படி எல்லாம் கூட வாழ்க்கை முறைகள் இங்கே இருக்கிறதா என்றுதான் தோன்றியது மல்லிக்கு.


சென்னையில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் தன் மகளுடன் வாழ்ந்து வந்தவர்தான் அல்லிக்கொடி. பக்கத்துக் குடிசையிலே அவருடைய அக்கா தன் மகன் மருமகளுடன் வசித்து வந்தார்.


அல்லியின் கணவன் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைச் சென்று வந்து கொண்டிருந்த ஆசாமி.  அவனும் ஒரு நாள் இரயில் விபத்தில் போய் சேர்ந்துவிட, பதிநான்கு வயது மகளுடன் தனியே வசிக்கும் நிலைமைக்கு ஆளாகி, வயிற்றுப் பிழைப்புக்காக ரோட்டோரம் ஆப்பக் கடைப் போட்டு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார்.


பாதுகாப்பற்ற சூழ்நிலையில், அந்தக் கடையில் தினமும் சாப்பிட வரும் ஒருவனுடன் நெருக்கம் ஏற்பட்டுவிட, அவருடைய வீட்டிலேயே வந்து தங்கி விட்டான் அவன்.


இதுபோன்ற விஷயங்களை எல்லாம் அங்கே யாரும் பெரிது படுத்துவது கிடையாது. வெளியில் அரசல் புரசலாகப் பேசிக் கொண்டாலும் கண்டும் காணாமல் போய்விடுவார்கள். அதேபோல் அக்கம் பக்கத்தில் ஒருவன் சண்டை என்று வந்துவிட்டால் வாயில் வந்ததை கொச்சையாகப் பேசவும் செய்வார்கள். அப்படிப்  பேசினாலும் அதை யாரும் தலையில் தூக்கி வைத்து சுமப்பதும் கிடையாது.


இப்படியே நாட்கள் நகர, திடீரென்று ஒரு நாள் அவருடைய மகளை தன்னுடன் இழுத்துக் கொண்டு கண் காணாமல் எங்கேயோ ஓடிவிட்டான் அவர் சேர்த்து வைத்திருந்த அந்த ஆசாமி.


வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு, சில தினங்கள் அவளைத் தேடி அலைந்து எங்கேயும் கிடைக்காமல் போக அப்படியே விட்டு விட்டார்.


போனவள் அப்படியே போயிருந்தாலும் கூட பிரச்சனை வந்திருக்காது, நான்கைந்து மாதங்கள் கூட கடந்து இருக்காது, கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் கயிறும் வயிற்றில் அவன் கொடுத்தப் பிள்ளையுமாக நிறைமாத கர்ப்பிணியாய் திரும்பி அங்கேயே வந்தாள் அவள், தான் மட்டும் தனியாக.


அவன் அடித்து உதைத்து அவளைச் செய்த கொடுமை தாங்காமல் அவள் திரும்ப வந்திருக்க, இங்கிருந்து ஓடிப் போகும் பொழுதே மகள் கருவுற்றுதான் இருந்திருக்கிறாள் என்பது புரிந்து ஆடித்தான் போனார் அல்லிக்கொடி.


தன்னுடைய உணர்ச்சிகளே பெரிது என்று எண்ணி, பெற்ற மகளின் எதிர்காலத்தைக் கூட கருத்தில் கொள்ளாமல் இப்படி ஒரு விபரீதத்தை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார், முன்பின் தெரியாத யாரோ ஒருவனை நம்பி வீட்டிற்குள் சேர்த்துக் கொண்டு.


மகளின் இந்த நிலைமைக்கு தான்தான் காரணம் எனத் தன்னைத்தானே நொந்து கொண்டு, எந்தக் கேள்வியும் கேட்காமல் அவளைச் சேர்த்துக்கொண்டார்.


திரும்பி வந்த சில தினங்களிலேயே பிரசவ வலி எடுத்து, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று போட்டுவிட்டு இறந்து போனது அந்தப் பெண்.


அதன் பிறகு அவரது குற்ற உணர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. மகள் பெற்றுப் போட்ட குழந்தையை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவதன் மூலமாகவாவதுதான் செய்த பாவத்தைப் போக்கிக் கொள்ளலாம் என மனதை அவர் திசை திருப்பிய சமயம் பார்த்து அந்தப் பாவி மறுபடியும் அங்கே வந்து சேர்ந்தான், அந்தப் பிள்ளையை உரிமை கோரி. ஒன்று என் பிள்ளையை என்னிடம் கொடு, நானே வளர்த்துக் கொள்கிறேன் இல்லை என்னை உன் வீட்டோடு சேர்த்துக்கொள் என்பதாக அவரை நெருக்கி அவனது ஆதிக்கத்தை நிலைநாட்டப் பார்த்தான்.


'ஆயிரம் இருந்தாலும் அது ஆண் பிள்ளை' என்ற எண்ணமோ அல்லது உடலின் தேவையைப் பூர்த்திச் செய்ய மகள் போனால் தாய் இருக்கிறாள் என்கிற மிருகத்தனமோ, அவனது நோக்கத்தை அல்லியால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவனைத் தன்னிடம் அண்டவே விடக்கூடாது என்கிற எண்ணத்தில் மட்டும் உறுதியாக இருந்தார்.


இவர் பிள்ளையைக் கொடுக்க மறுக்க அவன் பலவந்தமாக, தூளியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கப் போக, கட்டுக்குள் கொண்டு வர முடியாத அளவுக்கு சினம் பொங்கிப்  போய், அப்போதைக்குக் கைக்கு வாகாக அகப்பட்ட இரும்புக் கரண்டியை  எடுத்து அவனைக் கண்டபடி அடிக்கத் தொடங்கினார். படாத இடத்தில் பட்டுப் பட்டென அவன் போய் சேர்ந்துவிட, அது ஏழு வருட கடுங்காவல் தண்டனையாக அவரைச் சிறைக்குள் கொண்டு வந்து நிறுத்தி இருந்தது.


நம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த மக்களையும் ஒழுக்க நெறியில் செலுத்த, திருமண உறவு, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற குடும்ப அமைப்பு என்று ஏகப்பட்ட வரையறைகள் வகுத்திருந்தாலும், நாகரிக வளர்ச்சியில் சிறந்து விளங்கும் இந்தச் சமுதாயத்தின் எல்லா மட்டதிலும் இருக்கும் அனைவராலுமே தங்களது பாலியல் தேவைகளை நேர்மையான முறையில் தீர்த்துக் கொள்ள இயலுவதில்லை. மிகவும் பணிந்து விதிகளைக் கடைபிடித்து ஒழுக்க நெறிகளை கட்டிக் காப்பவர்கள் மிகுந்திருந்தாலும் விதிகளை மீறுபவர்கள் பலரும் இருக்கவே செய்கிறார்கள்தானே.


சமூகம் சார்ந்த பொதுவான ஒழுக்க நெறிகள் ஒவ்வொன்றுக்கும் விதிகள் என்று ஒன்று உருவாகும் பொழுதே விதி மீறல்களும் தானாகவே உருவாகிவிடுகின்றன அல்லவா?


இவ்விதிகள், ஆண் பெண் என இரு பாலருக்கும் சமமாக இல்லாமல் பெண் என்பவளுக்கு, ஆண்களைக் காட்டிலும் சற்றுக் கடினமானதாகவே இருக்கிறதே!


இந்த விதிகளுக்கெல்லாம் உட்பட்டு தங்கள் சுய பாலியல் தேவைகளைப் பிரச்சனை இல்லாமல் கையாள, அல்லது அவர்களைத் தங்கள் விருப்பத்துக்கு ஆண்கள் வளைத்துக் கொள்ள முயலும் பொழுது அதைப் புரிதலுடன் எதிர்கொள்ள எல்லா மட்டத்திலும் இருக்கும் பெண்களுக்கும் சரியான வழிகாட்டுதல் நம் சமுதாயத்தில் இல்லை என்பதே அசிங்கமான உண்மையல்லவா?


இதில் யார் தவறு செய்தாலும் பொறுப்பற்றவள், கற்பிழந்தவள், வேசி, ஓடுகாலி போன்ற மோசமான பட்டங்களைப் பெண்களுக்குக் கட்டி இந்தச் சமுதாயம் கைக்கொட்டி ச்சிரிக்கிறதுதானே?


இந்தச் சமுதாயத்திற்கு அஞ்சி அல்லது சமுதாயத்தை எதிர்த்துக்கொண்டு இழி வாழ்க்கை வாழ்வதில், புத்தி தடுமாறி தடம் மாறிப்போன மல்லி என்ன? அல்லி என்ன? அல்லது முறையாக வாழ்க்கைப்பட்டுப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்ட ராஜம்தான் என்ன? யாரும் விதிவிலக்கில்லை.


பாலியல் தொடர்பாக இயற்கையே விதித்திருக்கும் உயிரியல், வேதியியல், உளவியல் ரீதியான தன் சொந்த உடல் சார்ந்த புரிதல்களும் இல்லாமல், இந்தச் சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பான பீனல் கோட் சட்ட அறிவும் இல்லாமல் போனதால் பாழாகிப்போன பெண்களின் வாழ்க்கை, எண்ணிகைகளுக்குள்ளேயே அடங்காது. ஆனால் இதற்கெல்லாம் மட்டும் இந்தப் பாழாய் போன சமுதாயம் எந்த ஒரு பொறுப்பையும் ஏற்காது.


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page