top of page

Kaattumalli - 19

Updated: Jan 8

மடல் - 19


நன்காட்டூரையும் தான் படிக்கும் பள்ளிக்கூடம் இருக்கும் டவுனையும் விட்டால் மல்லிகாவுக்கு இந்த உலகத்தில் வேறு எந்த இடமும் தெரியாது. மிகச் சிறிய வயதில் அவளுடைய அம்மாவின் பிறந்த ஊருக்குச் சென்ற நினைவு கலங்கலாக மனதிற்குள் நிழலாடியது. விவரம் தெரியும் வயது வரும்பொழுது அது கூட நின்று போயிருந்தது.


இப்படித் தனியாக வந்து இரயிலில் ஏறியெல்லாம் பட்டினம் வரை போவாள் என அவள் கனவில் கூட எண்ணியதில்லை.


குருட்டாம்போக்கில் போய் தட்டுத் தடுமாறிப் பயணச்சீட்டை எடுத்து, அந்த இரயில் நிலையத்தில் பத்தே பத்து நிமிடம் மட்டுமே நிற்கும் சென்னை செல்லும் அந்த இரயிலில், அருகில் இருந்த மக்களைப் பார்த்து ஏதோ ஒரு பெட்டிக்குள் ஏறியிருந்தாள்.


உட்கார ஒரு இருக்கை கூட மீதமில்லை. இரயில் பெட்டி முழுதும் நிரம்பி வழிந்த கூட்டத்தைப் பார்த்து பிரமிப்பாக இருந்தது. இவர்களெல்லாம் எங்கேயிருந்து வருகிறார்கள் எங்கே செல்கிறார்கள் என அவ்வளவு வியப்பாக இருந்தது. அவளது பதட்டம் தணியக் கூட அவகாசம் இல்லாமல் இரயில் புறப்பட்டுவிட, ஏறி இறங்கும் நுழைவிடத்தின் அருகில் கீழேயே பலரும் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு தட்டுத் தடுமாறி அங்கே வந்து நின்றவள், வயிற்றுக்குள் புதிதாக ஏதோ ஒரு அசைவு தெரிய, அப்படியே சரிந்து கீழே உட்கார்ந்து விட்டாள். அவளைப் பார்த்து பரிதாபப்பட்ட அருகில் இருந்த பெண், "ஐயோ, மாசமா இருக்கியாம்மா" என்று கேட்டபடி ஒரு ஓரமான இடத்தில் அவள் சற்று வசதியாக உட்கார உதவ, தான் கருவுற்றிருப்பது வெளிப்படையாக தெரியும் அளவுக்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்து தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு.


‘எங்கே செல்லப் போகிறோம்? இந்தக் குழந்தை வேறு பிறந்து விட்டால் அதையும் வைத்துக் கொண்டு எப்படி பிழைக்கப் போகிறோம்? ஒரு கொலையை வேறு செய்துவிட்டு வந்திருக்கிறோம், போலீசில் பிடிபட்டால் தூக்கில் போட்டுவிடுவர்களே’ என எதைஎதையோ நினைத்து அச்சமாக இருந்தது அடிப்டைச் சட்ட அறிவுக் கூட இல்லாத அந்தப் பேதைக்கு.


கைச் செலவுக்கு ஏதாவது பணம் வேண்டும் என்று, குணா வழக்கமாக பணம் வைக்கும் ட்ரங்க் பெட்டியைத் திறக்க எண்ணி அவன் சாவியை வைக்கும் இடத்தில் சென்று பார்க்க அவளுடைய நல்ல காலமாக அந்தச் சாவி அங்கேயே இருக்க, அதை எடுத்து வந்து அந்தப் பெட்டியைத் திறந்தாள். அதில் அவன் கட்டுக் கட்டாக அடுக்கி வைத்திருந்த பணத்தைப் பார்த்து அப்படியே ஆடிப் போனாள். ஆக இப்படி ஒரு பெரிய தொகையை வாங்கிக் கொண்டுதான் மகள் இறந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன் அவளுடைய கருவைக் கலைக்கும் அளவுக்கு அவன் சென்றிருக்கிறான் என்பது புரிந்து, ஏற்கனவே உடைந்து போயிருந்தவள் இன்னும் சுக்கல் சுக்கலாக நொறுங்கிப் போனாள்.


என்ன, எவ்வளவு என்று கூட பார்க்காமல் அதிலிருந்து இரண்டு கட்டுகளை மட்டும் எடுத்து ஒரு துணியில் சுற்றி, அவள் வைத்திருந்த கட்டைப்பையில் துணிக்கு அடியில் பத்திரமாக வைத்து எடுத்து வந்திருந்தாள். கோவிலில் அமர்ந்திருக்கும் பொழுதே அதிலிருந்து ஒரு சில தாள்களை உருவி புடவை முந்தானையில் முடிந்து வைத்தாள். எல்லாமே நூறு ரூபாய் தாள்கள் என்பதால் பயணச் சீட்டு வாங்கும் போது இரண்டு தாள்களை எடுத்து சில்லறையாக மாற்றிக் கொண்டாள்.


பசியில் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தாலும் அந்த இரயிலில் எங்கே என்ன கிடைக்கும் என எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. கையில் இருந்த கட்டைப்பையை இறுக்கி அணைத்தபடி அரைகுறை மயக்க நிலையில் உட்கார்ந்திருந்தவள், அப்படியே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டாள்.


எவ்வளவு நேரம் உறங்கினாளோ, திடீரென்று செவியைக் கிழித்த குழந்தையின் அழுகையில் உறக்கம் தெளிந்து நிமிர்ந்து அமர்ந்தாள்.


ஏதோ ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகை நிற்காமல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கவும், கட்டப்பையைக் கையில் எடுத்துக்கொண்டு சத்தம் வந்த இடம் நோக்கிச் சென்றாள்.


அங்கே ஒரு இளம் பெண், பிறந்து இரண்டு மூன்று மாதமே இருக்கும் அந்தக் குழந்தையை சமாதானம் செய்ய இயலாமல் போராடிக் கொண்டிருக்க, அவள் தனியாக பயணம் செய்கிறாள் என்பது பார்க்கும் போதே தெரிந்தது.


மனது கேட்காமல், "ஏங்க்கா, பாப்பா இப்படி அழுவது" என்று சிறு தயக்கத்துடன் அவளிடம் விசாரிக்க, "தெரியல, இதுவரைக்கும் பாப்பா இந்த மாதிரி அழுததே கிடையாது" என்று அந்தப் பெண்ணும் பரிதாபமாகப் பதில் கொடுக்க, 


"சரி பாப்பாவ என் கையில கொடுக்குறீங்களா நான் வேணா பாக்கறேன்" என்றாள் தயக்கம் விலகி.


இப்படி யாராவது கேட்க மாட்டார்களா என்பது போல் உதவிக்கு தவித்துக் கொண்டிருந்த அந்தப் பெண் தன்னுடைய குழந்தையை அவளிடம் கொடுக்க, அங்கே பரவியிருந்த மிதமான வெளிச்சத்தில் குழந்தையை ஆராய, பெண் குழந்தை என்பதை அறிந்து காரணமே இல்லாமல் மனம் ஏனோ சலிப்புற்றது.


மென்மையாக அதன் வயிற்றை அழுத்திப் பார்த்தபடி, "அக்கா, நீங்க ஏதோ ஆகாதது சாப்பிட்டு இருக்கீங்கன்னு நினைக்கறேன். பாப்பாக்குச் செரிமான கோளாறு போல இருக்கு" என்றவள்,


"வசம்பு வச்சிருக்கீங்களா?" என்று கேட்க,


" அப்படின்னா என்ன?" எனக் கேட்டாள் அவள் புரியாத பாவத்தில்.


'இது கூடத் தெரியாதா' என்பது போல் அவளை ஏறிட்டவள், சிறு யோசனைக்குப் பிறகு, "கிரைப் வாட்டர்ன்னு சொல்லுவாங்களே, டிவி விளம்பரத்துல எல்லாம் வருமே, அது வச்சிருக்கீங்களா" என்று கேட்டாள்.


அதற்குமே அவள் விழிக்க, இதற்கிடையில் குழந்தை  வேரு அழுது கொண்டே இருக்க, அந்தச் சத்தத்தில் உறக்கம் கலைந்த எரிச்சலில் அருகில் அமர்ந்திருந்த நபர், எதையாவது செய்து அழுகையை நிறுத்தி விடும் நோக்கத்தில், "இப்படி பேசியே நேரத்தை வேஸ்ட் பண்றத விட, பக்கத்து கம்பார்ட்மெண்ட்ல போய் யாராவது குழந்தை வெச்சிருக்கறவங்க கிட்ட கேட்டு ஒரு ஸ்பூன் வாங்கிட்டு வந்து ஊத்துங்களேன்மா" என்றார் சிடுசிடுப்புடன்.


அதற்குமே அந்தப் பெண் தயங்க, போதாத குறைக்கு அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அலையவும் முடியாத சூழலில் இருப்பதைப் புரிந்து கொண்டு, எப்படி செல்வது என அவரிடமே கேட்டுத் தெரிந்துகொண்டு, தானே போய் வேறொரு பெட்டியில் சிறு குழந்தையுடன் பயணம் செய்த ஒரு குடும்பத்தினரிடமிருந்து கிரைப் வாட்டரை ஒரு பேப்பர் கப்பில் வாங்கி எடுத்து வந்தாள்.


'குழந்தைக்காகவே என்றாலும் கூட தன்னால் இப்படி ஒரு விஷயத்தை அவ்வளவு சுலபமாக செய்துவிட முடியாது, இந்தப் பெண் எப்படி இதைச் செய்தாள், அதுவும் முன்பின் தெரியாத யாரோ ஒருத்தியின் குழந்தைக்காக?' எனறு அவளது மனிதாபிமானத்தை எண்ணி வியப்பாக இருந்தது அந்தக் குழந்தையின் அம்மாவுக்கு.


அதன் பின் மல்லி தானே அதை அந்தக் குழந்தைக்குப் புகட்ட சற்று நேரத்தில் குழந்தை அழுகையை நிறுத்தி உறங்கவும் தொடங்கியது.


அப்பாடா என்கிற ஆசுவாசத்துடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டு அந்த இருக்கையிலேயே தனக்கு அருகில் மல்லியை அமரும்படி சொல்லி நகர்ந்து இடம் கொடுத்தவள், “ரொம்ப தேங்க்ஸ்மா, நீ இல்லன்னா ரொம்ப திண்டாடிப் போயிருப்பேன்” என்றாள் மனதிலிருந்து.


“பரவாயில்லக்கா, இதுல என்ன இருக்கு” என்று மல்லி கூச்சத்துடன் சொல்ல, “யாரு என்னன்னு கூட தெரியாம எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்க, நான் உன் பேரைக் கூட தெரிஞ்சிகல பாரு” என்று சொல்ல,


சட்டென,“மல்” மல்லி என்று சொல்ல வந்து, தன்னைப் பற்றிய அடையாளம் எதையும் வெளிபடுத்த வேண்டாம் என்று தோன்றவும், “மனோகரி…க்கா” என்றாள் சற்றே நீட்டி முழக்கி.


உறக்கம் கண்களை அழுத, அவளது தடுமாற்றத்தை அவள் கண்டுகொள்ளாமல், "மனோகரி, நல்ல பேர்தான். பார்த்தா ரொம்ப சின்ன பொண்ணா தெரியுற, உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்" என அவள் வியப்புடன் கேட்க,


"எனக்கு மூணு தம்பிங்கக்கா, அவனுங்க எல்லாம் கை குழந்தையா இருந்தப்ப நானும் தங்கச்சியும்தான் பாத்துகிட்டோம். அதனால இதெல்லாம் பழக்கம்" என்று அவள் பதில் கொடுக்க, அதன் பிறகு ஒருவருடன் ஒருவர் இலகுவாகப் பேசத் தொடங்க, தன் பெயர் விமலா என்பதையும், வீட்டை எதிர்த்துக் கொண்டு வெளியில் வந்து காதல் திருமணம் செய்து கொண்டவள் என்பதையும் சொன்னாள். அவளது பிறந்த வீடு கன்னியாக்குமரியில் இருக்க, கணவனுக்கு சென்னையில் வேலை.


குழந்தையைக் கொண்டு வந்து கண்களில் காண்பித்தாலாவது பிறந்த வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையுடன் கணவனிடம் சண்டைப் போட்டு தனியாகவே பிறந்தவீட்டிற்கு சென்றிருக்கிறாள். இதற்கும் கூட அவர்கள் மனம் இறங்காமல் அவளை விரட்டி அடித்திருக்க, வேறு வழி இல்லாமல் இப்படி தனியாகத் திரும்பிச் செல்கிறாளாம்.


தன் மனக்குறைகளைக் கொட்டியவள், "ஆமா மனோ, பார்த்தாக்க கிராமத்துப் பொண்ணு மாதிரி இருக்க, நீ ஏன் தனியா மெட்ராசுக்குப் போற" என்று கேள்வி கேட்டு வைக்க, என்ன சொல்வது என சற்றே தடுமாறினாலும் சட்டெனச் சுதாரித்துக் கொண்டு, "ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் கட்டிட்டதால குடும்பத்தோட தலை முழிகிட்டாங்க, பஞ்சாயத்து கூட்டி  ஊரை விட்டும் ஒதுக்கி வெச்சுட்டாங்கக்கா" என மனதைக் கல்லாக்கிக் கொண்டு நா கூசப் பொய் சொன்னாள்.


அவள் உடுத்தியிருந்த வெளுத்துப்போன புடவையும், பொட்டில்லாத நெற்றியும், அணிந்திருந்த கண்ணாடி வளையல்களும்கூட வேலாயுதத்தை அடிக்கும் பொழுது உடைந்து விழுந்திருக்க, மூளியாகிப் போயிருந்த கைகளும், மல்லி ஒரு கைம்பெண்தான் என்ற முடிவுக்கு அவளைக் கொண்டு வந்து விட்டிருக்க, "மாசமா வேற இருக்கப் போல இருக்கே, பாவம் இவ்வளவு சின்ன வயசுல உனக்கு இந்த நிலைமை வந்திருக்க வேணாம்" என்ன மெய்யாகவே வருந்தியவள்,


"உன் வீட்டுக்காரும் சின்ன வயசாதான இருந்திருக்கும்? எப்படி இறந்து போனாரு?" இன்று பரிதாபம் மேலிடக் கேட்க, உண்மையில் தூக்கி வாரி போட்டது மல்லிக்கு. ஒரு விதத்தில் மனதார தன் கணவனாக நம்பிய வல்லரசு பொய்த்துப் போயிருக்க, அந்தக் கயமையும் ஒரு வித மரணம்தான் என்கிற எண்ணம் மனதை உடைத்துக் கொண்டு தோன்றியது.


"ஆமாங்கா செத்துட்டான், கொஞ்ச நாள் முன்னால நடந்த ஒரு விபத்துல செத்துதான் போயிட்டான்" என்றாள் கொஞ்சம் கூட குற்றக் குறுகுறுப்பே இல்லாமல்.


அதைக் கேட்ட பிறகு, மனது கனத்துப் போக, அப்படியே கண் மூடி சாய்ந்து கொண்டாள் விமலா. எந்தப் பேச்சும் இல்லாமல் சில நிமிடங்கள் இப்படியே மௌனமாக கடக்க, திடீரென கண்களைத் திறந்து உற்சாகமாக எழுந்து அமர்ந்தவள், "நீ பேசாம என்கூட எங்க வீட்டுக்கு வரியா, என்னால இந்தப் பச்ச புள்ளைய வச்சிட்டு தனியாகச் சமாளிக்க முடியல. மெட்ராஸ்ல ஆள் பார்த்தாலும் சரியா கிடைக்கல. இதனாலேயே எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் அடிக்கடி சண்டை வருது. நீ என்கூடவே தங்கி இருந்து வீட்டு வேலை செய்யறியா?" என்று நேரடியாகக் கேட்டுவிட, ஒன்றுமே புரியவில்லை மல்லிகாவுக்கு.


"எப்படி அக்கா உங்களுக்கு ஒருத்தரைப் பார்த்த உடனே இப்படி  நம்பத் தோனுது. இது ரொம்ப தப்புக்கா. நான் இந்த மாதிரி நம்பி ரொம்ப ஏமாந்து போயிருக்கேன்" என அவள் வெள்ளந்தியாகக் கேள்வி கேட்க, அவள் மீதான நம்பிக்கை இன்னும் அதிகமாகச் சுரந்தது விமலாவுக்கு. அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவே செய்துவிட்டாள்.


"என்னவோ தெரியல, உன் மேல எனக்கு அளவு கடந்த நம்பிக்கை வந்துடுச்சு மனோகரி. உனக்கு என் வீட்ல வந்து வேலை செய்ய விருப்பம் இருக்கா இல்லையா அத மட்டும் சொல்லு" என்று விமலா அதிலேயே ஸ்திரமாக நிற்க,


"அக்கா உங்க வீட்டுக்காரர் இதுக்கு சம்மதிபாங்களா, அவர் கிட்ட கேட்காம நீங்க எப்படி முடிவு பண்ணுவீங்க" என்று மல்லிகா தயக்கத்துடன் இழுக்க? அதுவே அவளுக்கு சம்மதம் என்பதை விமலாவுக்குப் புரிய வைத்து விட, "அத பத்தியெல்லாம் நீ ஏன் கவலைப்படுற, நான் சொன்னா என் வீட்டுக்காரு கேட்டுப்பாரு" என்று சொல்லிவிட்டாள் திட்டவட்டமாக.


அவளுக்குமே வேறு போக்கிடம் எதுவும் இல்லாமல் போனதால், அதற்கு மேல் மறுத்தலித்து எதுவும் கூறவில்லை மல்லிகா, முன்பின் தெரியாத ஏதோ ஒரு புதிய ஊரில் போய் எப்படி பிழைக்கப் போகிறோம் என்ன பயந்து கொண்டிருந்தவளுக்கு ஏதோ கடவுளே வழி காண்பித்ததாக எண்ணிக் கொண்டாள். ஆனால் அந்த வழி அப்படியொன்றும் நல்ல வழி இல்லை என்பதே போகப் போகத்தான் அவளுக்குப் புரிந்தது.


*****


சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வந்து இறங்கியதும் தானே ஒரு டாக்ஸி பிடித்து அவளைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்தாள் விமலா.


அவர்கள் வீட்டில் வந்து இறங்கிய சமயம் அவளுடைய கணவன் வேலைக்குச் சென்றிருக்க, தன் கையில் வைத்திருந்த மாற்றுச் சாவிக் கொண்டு கதவைத் திறந்து, இவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.


அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பில் உள்ள இரட்டைப் படுக்கை அறை கொண்ட வீடு அது. அவளுடைய கணவன் குமரன் ஏதோ ஒரு அரசாங்க பணியில் இருப்பதாகச் சொன்னாள். வீட்டைப் பார்த்ததுமே அவர்கள் ஓரளவுக்கு நல்ல வசதி நிலையில் இருப்பதும் புரிந்தது.


வீட்டுக்குள் நுழைந்ததுமே குழந்தை அழத்தொடங்க பரபரப்பு அவளைத் தொற்றிக் கொண்டது. வீட்டுக்குள்ளேயே அமைந்திருந்த குளியல் அறையைச் சுட்டிக் காண்பித்து மல்லியை முகம் கழுவி வரச் சொல்லிவிட்டு குழந்தைக்குப் பசியாற்றியவள் அதன் பின் அந்தக் குழந்தையை அவளுடைய  பொறுப்பில் விட்டுவிட்டு அவசர அவசரமாகக் குளித்துவிட்டுச் சமையலைக் கவனிக்கச் சென்றாள்.


சில நிமிடங்களில் தனக்குத் தெரிந்த ஏதோ ஒன்றைச் சமைத்துதான் சாப்பிட்டு முடித்து மல்லிக்கும் சாப்பிடக் கொடுத்தாள். சமையலில் அவளுக்குப் பெரிதாக அனுபவம் இல்லை என்பது அதன் ருசியிலேயே தெரிந்தது என்றாலும் இருந்த பசிக்கு நன்றாகச் சாப்பிட்டு முடித்தாள்.


விமலாவின் கணவன் இவளை வேலைக்கு வைத்துக்கொள்வது குறித்து என்ன சொல்வானோ என்ற கவலைதான் அவளுக்குப் பெரிதாக இருந்தது. ஆனால் அது பற்றி எல்லாம் விமலா பெரிதாகக் அலட்டிக்கொண்டது போலத் தெரியவில்லை. மல்லிக்கு உணவு கொடுத்ததும் போட்டது போட்டபடி அவள் போய் அறைக்குள் படுத்து விட குழந்தை உறங்கி இருக்கும் நேரம் பார்த்து, வீட்டைச் சுத்தம் செய்தாள்.


நிதானமாக உறங்கி எழுந்து வந்த விமலா காலையில் செய்ததையே சூடு செய்து மதியத்திற்கும் சாப்பிட்டுவிட்டு மீதம் இருந்ததை மல்லிக்கும் கொடுத்துவிட்டு தொலைக்காட்சியை உயிர்பித்து உட்கார்ந்து விட்டாள்.


எதற்காகவெல்லாம் சில மாதங்களுக்கு முன் அவள் ஏங்கித் தவித்தாளோ, சுலபமாக அனுபவிக்க ஏதுவாக அது அவளுடைய கைக்கு அருகில் இருக்க, அந்தத் தொலைக்காட்சித் தொடர்களின் மீது இருந்த அதீத ஆர்வம் சுத்தமாக வடிந்து போய் தொடர்ந்து ஒரு நிமிடம் சேர்ந்தார் போல அந்தத் திரையைப் பார்க்கக்கூட அவளுக்கு அலுப்பாக இருந்தது.


வரவேற்பறையிலேயே ஒரு மூலையில் அப்படியே படுத்துக் கண்ணயர்ந்தாள்.


ஏதோ இப்படியும் அப்படியுமாக மாலை வரை நேரத்தைக் கடத்த, விமலாவின் கணவன் குமரன் வீடு வந்து சேர்ந்தான்.


முதலில் அவள் பயந்தது போலத்தான் நடந்தது. விமலா மல்லிகாவைப் பற்றி சொன்னதும் திடுக்கிட்டுப்போய், வேண்டா விருந்தாளியாக ஒரு வெறுப்புடன் அவளை ஏறிட்டவன், அவர்களுடைய படுக்கையறைக்குள் செல்ல குழந்தையை இவளிடம் விட்டுவிட்டு விமலாவும் பின்னோடே சென்றாள்.


வார்த்தைகள் தெளிவாக காதில் விழவில்லை என்றாலும் ஏதோ காரசாரமாக இருவரும் விவாதிப்பது புரிந்தது. சில நிமிடங்களில் விமலா வெளியில் வந்து விட, அவன் மட்டும் அறைக்குள்ளேயே இருந்து கொண்டான்.


"அக்கா, என்னால உங்களுக்குள்ள எந்தச் சண்டையும் வேண்டாம். நான் இப்படியே எங்கயாவது கிளம்பிப் போறேன்" என்று மல்லி பயத்துடன் சொல்ல,


"லூசு மாதிரி ஒளறாத, உனக்கு இங்க யார தெரியும்? எங்க போவ? அவர எப்படி சமாதானம் செய்யணும்னு எனக்குத் தெரியும், நீ உன் வேலையைப் பாரு" என்று அவள் வாயை அடைத்து விட்டாள் விமலா.


அதன்பின் பெரிதாக சலசலப்புகள் எதுவும் இல்லை, அவளிடம் நேரடியாக எதுவும் பேச மாட்டானே தவிர குமரனும் கடுமையான முகத்தைக் காண்பிப்பதில்லை.


ஓரளவுக்கு அவர்கள் வீட்டு வேலைகளும் மல்லிக்குப் பிடிபட ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல சமையல் வேலை உட்பட எல்லாவற்றையுமே மல்லியின் மீது சுமத்தி விட்டாள் விமலா. இவளுடன் சேர்த்து வெறும் மூன்று பேருக்குதான் வேலைகள் என்பதால், அதுவும் கேஸ் அடுப்பு, மிக்ஸி கிரைண்டர், வாஷிங் மிஷின் என எல்லாமே இருந்ததால் மல்லிக்கு அது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனாலும் இரவு நேரங்களில் விழித்து அழும் குழந்தையைக் கவனித்துக் கொள்வதுதான் சற்று சிரமமாக இருந்தது.


குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, வசதியான பக்கத்து அறையையும் இவளுக்காக ஒதுக்கிக் கொடுத்திருக்க அதையும் பொறுத்துக் கொண்டாள்.


அப்படி இப்படி ஒரு மாதத்திற்கு மேல் இயல்பாகக் கடந்திருந்தது. சம்பளம் என்று தனியாக அவள் எதையும் கொடுக்கவில்லை என்றாலும் இப்படி ஒரு பாதுகாப்பான இடத்தில் நாட்கள் இப்படியே நிம்மதியாகச் சென்றால் போதும் என்ற மன நிலையில் அவள் இருக்க, அதற்கும் பங்கம் வந்தது அந்த குடியிருப்பின் வேறு ஒரு வீட்டில் வசிக்கும் ஒரு மூத்த பெண்மணியால்.


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page