top of page

Kaattumalli - 14

மடல் - 14


முதல் திருப்புதல் தேர்வில் அவள் வாங்கியிருந்த மதிப்பெண்கள் ஒன்றும் அப்படி சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாமல் போக நாளுக்கு நாள் மகளைப் பற்றிய கவலை கூடிக் கொண்டே போனது ராஜத்துக்கு. கொலுசு காணாமல் போன அன்று மகளை அடித்து விளாசியதற்குப் பிறகு அவள் மீது கை வைப்பதற்கே மிகவும் அச்சமாக இருந்தது. கொலுசு திரும்ப கிடைத்தப் பிறகு அவள்  நடத்து முடிந்ததைக் குறித்து யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றாலும், குடும்பத்தில் எல்லோரிடமிருந்தும் சற்று விலகிப் போனது போல்தான் தோன்றியது. தம்பி தங்கைகளிடம் கூட இணக்கமாக இல்லை. யாரும் ஏதும் கேட்டால் கூட,கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் வரும். அந்தச் சம்பவம்தான் அவள் மனதை மிகவும் பாதித்துவிட்டது, அதனால்தான் இப்படி பின்தங்கி இருக்கிறாளோ என்கிற குற்ற உணர்ச்சி ராஜத்தை வாட்டி வதைக்காமல் இல்லை.


பொறுமையாக, அனுசரணையாக. கோபத்துடன் திட்டி பலவாறாக மகளிடம் பேசிப் பார்த்தும் பெரிதாக பலன் ஒன்றும் இல்லை. இதற்கு மேல் எப்படி அவளிடம் நடந்து கொள்வது என்பது கூட அவளுக்குப் பிடிப்படவில்லை.


ஏதோ அவள் நல்லபடியாகப் படித்து பத்தாவது தேரினால் போதும் என்கிற எண்ணத்தில், "இனிமேல் கோவிலுக்குப் போறேன், சாமி கும்பிடுறேன்னு நீ போகத் தேவையில்ல. அந்த நேரத்துல வீட்ல இருந்து நீ படிச்சு கிழி அதுவே போதும். நீ படிக்காம என்ன வந்து கும்புடு, அப்பதான் உனக்கு மார்க் வரும்ன்னு எந்த சாமியும் சொல்லாது. நீ உழைச்சாதான் அதுக்குப் பலன் கிடைக்கும். அப்படி சாமி கும்பிடணும் சொன்னா உனக்கும் சேர்த்து வீட்ல இருந்தே நானே சாமி கும்பிட்டுக்கறேன். எனக்காக சாமி உனக்கு நல்லது செய்யும். அதனால இனிமேல் நீ பிரியா ஸ்கூலுக்குப் போகும்போது அவ கூட போ. அதுவரையும் ஒழுங்கா வீட்ல உட்கார்ந்து புத்தகத்தை எடுத்து வச்சுப் படி" என்று திட்டவட்டமாக மகளிடம் சொல்லிவிட்டாள்.


அதை மீறி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை மல்லிகாவால். இதற்கிடையில் அந்த மர்மதேசம் முடிந்து வேறு ஒன்று புதிதாகத் தொடங்கியிருந்தது. பள்ளியில் தீவிரமாகப் பரீட்சைகள் எல்லோரையும் நெருக்க, தேவையற்ற அரட்டைகளும் வம்பளப்புகளும் சுத்தமாக நின்று போயிருக்க அந்த நாடகத்தைப் பார்க்கிற ஆர்வமெல்லாம் அவளுக்கு வடிந்து போய் அந்த இடத்தை விரகதாபம் பிடித்திருந்தது.


ஆனாலும், அவளுக்காகக் கடைசி அத்தியாயத்தை அவன் கேமராவில் பதிவு செய்து வைத்து காத்திருக்க, உண்மையில் அதைக் கூட போய் அவளால் பார்க்க இயலவில்லை. வர முடியவில்லை என்கிற தகவலைக் கூட அவனுக்குத் தெரியப்படுத்த இயலாத ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டிருந்தாள்.


ஒரு நாள் காலை வழக்கமான நேரத்தில், வந்து நின்ற பேருந்தில் அவள் ஏறப் போகும் சமயம் தூர இருந்தே அவன் அவளை எரிப்பது போல பார்த்துக் கொண்டிருப்பது தெரிய, கண்களாலேயே அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டுப் பேருந்தில் ஏறிப்போனாள்.


அன்று மாலை வீட்டு வாயிற் திண்ணையில் அமர்ந்து அவள் படித்துக் கொண்டிருக்க, அவனது இரு சக்கர வாகனத்தின் ஒலி கேட்கவும், அவள் பதறி வீதியைப் பார்க்க, அது வேகமாக அவர்கள் வீட்டைக் கடந்த நொடி அவள் மீது வந்து விழுந்தது பந்தாகச் சுருட்டிய காகிதம் ஒன்று.


சுற்றுமுற்றும் பார்வையைச் சுழற்றி யாரும் தன்னைப் பார்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு அவசரமாக அதைப் பிரித்துப் புத்தகத்துக்குள் வைத்தபடி அவள் படிக்கத் தொடங்கினாள்.


‘உனக்கு என் மேல அன்போ இரக்கமோ கொஞ்சம் கூட இல்லாதான, இருந்திருந்தா இப்படி என்னைத் தவிக்க விடுவியா? இப்படியே போனா எனக்குப் பைத்தியம்தான் பிடிக்கப் போகுது’ என்று கோபத்துடன் எழுதியிருந்தான்.


அவனது மனநிலையை எண்ணி அவளது மனம் முழுவதும் பாறாங்கல்லை வைத்தது போலக் கனமாகிப் போனது. ‘அடுத்து என்ன?’ என்பது மட்டும் அவளுக்குக் கொஞ்சம் கூட விளங்கவே இல்லை.


காலை அவள் சந்தித்த அவனது குற்றசஞ்சாட்டும் பார்வையும் திரும்பி அவளது முகத்தைக் கூட பாராது அவன் வீசி எறிந்து விட்டுப் போன கடிதமும் மனதைக் குத்திக் கிழித்தது. ஆனாலும் கூட அவளால் எதையும் செய்ய இயலவில்லை. அவளுடைய அம்மாவின் கவனம் மொத்தமும் இவள் மீதே இருக்க, முன்பு செய்தது போல எந்தவித திருட்டுத்தனமும் செய்து வீட்டை விட்டு வெளியில் போக கூட இயலாத நிலை.


விவரம் தெரிந்த நாளிலிருந்தே சின்னச் சின்ன ஆசைகள் கூட நிறைவேறாமல் ஏங்கித் தவிக்கும் தவிப்பும், வாய்க்கும் வயிற்றுக்கும் எட்டாத வறுமையும், குடும்பத்துக்குள்ளேயே ஒருவரை ஒருவர் சுரண்டிப் பிழைக்கும் பிழைப்பும், அன்போ பரிவோ இல்லாத அதீத கட்டுப்பாடுகள் மட்டும் நிறைந்த ஒரு மரத்த வாழ்க்கையும் அவளுக்குள் ஆழ்ந்த சலிப்பை உருவாக்கி விட்டிருந்தது.


இதெல்லாம் இல்லாமல் ஒழிக்கும்படி, வாழ்க்கையில் தானாக இவளைத் தேடி வந்திருக்கும் புதையலைப் போன்றுதான் வல்லரசுவைப் பார்த்தாள். அவன் இவளிடம் காண்பிக்கும் அன்பும் கனிவும் இவளுக்கு ஒருவித போதையைக் கொடுத்திருந்தது.


அவனிடம்தான் சரியாக நடந்து கொள்ளாமல் போனால் எங்கே அவன் தன் கைநழுவிப் போய் விடுவானோ என்கிற அச்சம் அதிகமாகத் துளிர்த்து அவளை உறங்கவே விடவில்லை.


அவன்தான் மெட்ராஸில் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறானே! அவன் படிப்பிற்குப் பெரிய வேலை கிடைக்காமலா போய்விடும்? எப்படியாவது அவனைத் திருமணம் செய்து கொண்டு இங்கிருந்து சென்றால் போதும்.


அவன் தன் மீது வைத்திருக்கும் அன்பையும் அக்கறையும் பார்த்தால், திருமணத்திற்குப் பின் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று கேட்டால் கூட, சூரியவம்சம் படத்தில் வரும் சின்ராசு போல இவனும் தன்னை நிச்சயம் படிக்க வைப்பான். படித்து நல்ல வேலைக்குப் போய் பிறந்த வீட்டிற்கும் ஏதாவது நன்மை செய்யலாம் என்று பலவாறாக பகல் கனவு கண்டவள், அதனால் அவன் மனம் கோணும்படி எக்காரணம் கொண்டும் நடக்கக்கூடாது என்று முடிவு செய்தாள்.


அடுத்து என்ன செய்வது எப்படி அவனை நேரில் சென்று சந்திப்பது என்று புரியாமல் அவள் தவித்துக் கொண்டிருக்க, இரண்டு தினம் கடந்து அதற்கேற்ற சூழல் தானாகவே அமைந்தது.


அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. உடம்புக்கு ஒவ்வாத எதையோ சாப்பிட்டுவிட்டு காலை முதலே வாந்தியும் பேதியுமாக பாக்கியம் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, இருக்கிற அத்தனை கை வைத்தியமும் செய்ய வைத்து ராஜத்தை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தார்.


புழக்கடைப் பக்கமாக இருந்த கழிவறைக்குச் செல்வதற்குள் தாக்குப் பிடிக்க முடியாமல் காலை முதல் இரண்டு மூன்று சேலைகளை வேறு அலசிப் போடும் சூழல். மல்லியும் பிரியாவுமாக வீட்டு வேலைகளைப் பார்க்க ராஜம் நாள் முழுக்க இதையே செய்து கொண்டிருக்க, மாலைக்குள் அதிகம்  துவண்டு போய்விட்டார் பாக்கியம்.


இதற்கு மேல் இப்படியே வைத்திருந்தால் சரிபடாது என்று உரக்கடைக்கு வேலைக்குப் போயிருந்த குணாவுக்கு, அந்தத் தடத்தில் செல்லும் தெரிந்த ஒரு பேருந்து ஓட்டுநர் மூலம் செய்தி சொல்லி அனுப்பினாள்.


அவன் வரும்பொழுதே கையுடன் டவுனில் இருந்து ஆட்டோ எடுத்து வந்துவிட, ராஜமும் அவனுமாக அவரை டவுன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.


இரவு உணவை தயார் செய்யச் சொல்லிவிட்டு, பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ளுமாறு மல்லியையும் பிரியாவையும் பணித்துவிட்டுக் கிளம்பிச் சென்றாள் ராஜம்.


அவள் சொன்னபடி வேகமாக இரவுக்கு ஏதோ ஒன்றை செய்து முடித்து சமையல் கட்டை விட்டு வெளியில் வர, அன்றைக்கென்று பார்த்து அன்பே வா படம் வேரு தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க, மற்ற நால்வரும் மெய்மறந்து அதனுடன் கலந்து விட்டிருந்தனர். பசித்தாலும் சாப்பாட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடத் தொடங்கி விடுவார்கள். பாத்திரம் துலக்குவதும் கூட பிரியாவின் வேலை. அதனால் இனி எதற்காகவும் இவர்கள் தன்னைத் தேட மாட்டார்கள் என்பது மல்லிக்கு புரிந்தது.


'இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன?' என்ற எண்ணம் தோன்ற, அதற்கு மேல் ஒரு நொடி கூட சிந்திக்காமல் போட்டது போட்டபடி வல்லரசுவின் வீடு நோக்கிக் கிளம்பி விட்டாள்.


மெலிதாக இருள் பரவத் தொடங்கியிருந்தது. எம்ஜிஆர் படம் என்பதால் அதுவும் முதன் முதலாகத் தொலைக்காட்சியில் போடுவதால் ஊரே வீட்டிற்குள் அடைந்து கிடக்க, தெருவெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது.


தடை ஏதும் இல்லாமல் அவனது வீடு வரை வந்துவிட்டவள் சுற்றும் மற்றும் பார்த்து சுவர் ஏறிக் குதித்து அன்று போல அந்தச் சந்துக்குள் வந்து நின்று கொண்டாள்.


ஒரு அரை மணி நேரம் காத்திருந்து பார்ப்போம். அதிர்ஷ்டவசமாக அன்று போல் அவன் இந்தப் பக்கம் வந்தால் அவனை நேரில் பார்த்து நல்ல விதமாகப் பேசிவிட்டு போகலாம். இல்லை என்றால் திரும்பிச் சென்று விடலாம் என்ற எண்ணத்துடன் அப்படியே திரும்பி சில நிமிடங்கள் நின்றவள், ஒருவேளை அவன் வீட்டிற்குள் இருக்கிறானா எனத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் அங்கிருக்கும் சிமெண்ட் ஜாலி வழியாக எட்டிப் பார்த்தாள்.


அவனுடைய அம்மாவும் தங்கையும் மட்டும் உட்கார்ந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரு புதிய திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


அது என்ன படம் என்று புரிந்து கொள்ளவே அவளுக்கு சில நிமிடங்கள் பிடித்தன. சமீபமாக வந்த புதிய திரைப்படம் என்பது தெரிந்து வியந்துபோய் வந்த வேலை மறந்து அதில் மூழ்கி விட்டாள்.


சில நிமிடங்கள் இப்படியே சென்று விட, நிதானமாகப் புகைப் பிடித்து முடித்துவிட்டு மொட்டை மாடியிலிருந்து இறங்கி வந்த வல்லரசு, அவள் அங்கு நிற்பதைப் பார்த்து மனதிற்குள்ளே துள்ளிக் குதித்தாலும் கொஞ்சம் கூட சந்தடியே செய்யாமல் பூனை போல் நடந்து வந்து பின்னால் இருந்தபடியே சுவருடன் நெருக்கி அவளை அணைத்தது போல நின்றான்.


அவன்தான் என்று தெரிந்தாலும் கூட ஒரு நொடி உண்டான பதற்றத்தில், "ஆ" என அவள் கத்தி விட, "ஏய், யாரது இந்த நேரத்துல அங்க?" என அந்த ஜாலியின் அருகில் இருந்து வடிவின் குரல் வந்தது.


சப்த நாடியும் ஒடுங்கிப் போய் மல்லி அரண்டு போய்விட, தனது பிடியைச் சற்றும் தளர்த்தாமல் அவளைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்தபடி சற்றுத் தள்ளி நிற்க வைத்தவன் உள்ளே எட்டிப் பார்த்து, "நாந்தாம்மா, ஒரு பெருச்சாளி குதிச்சு ஓடிச்சு. அதை விரட்டிட்டு இருக்கேன்" எனப் பதில் கொடுத்தான்.


அப்படியும் நம்பாத ஒரு பாவத்தில்,"பொம்பள கொரல் மாதிரி கேட்டுச்சே" என வடிவு இழுக்க,


"அம்மா சினிமால வந்த சத்தமா இருக்கும். எதையாவது காதுல வாங்கிட்டு என்னப் போட்டு கொடையாத" என எரிந்து விழுந்தான். அதன் பின் எதுவும் பேசாமல் அவர் அங்கிருந்து அகன்று விட,


"இப்பதான் உனக்கு என்ன பாக்கணும்னு தோனுச்சாடி? அதுவும் நான் அவ்வளவு தூரம் உன்னைத் தேடி வந்து லெட்டர் எல்லாம் கொடுத்தப் பிறகு?" என்று கிசுகிசுப்பான குரலில் கிறக்கமாகக் கேட்டபடி அவனது இதழை அவளுடைய கழுத்தில் பதித்து ஓடவிட்டபடி அவளைத் திருப்பினான். அவனுடைய இதழ் தீண்டலும் மீசையின் குறுகுறுப்பும் சேர்ந்து அவளது உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல் ஆனது.


ஏற்கனவே வடிவு போட்ட சத்தத்தில் உடம்பெல்லாம் தடதடவென்று ஆடிக் கொண்டிருக்க அவனிடமிருந்து விடுபடவும் இயலாமல் போனது. கூடவே இதுவும் சேர்ந்து கொள்ள அப்படியே துவண்டு அவன் மீதே படர்தாள்.


வஞ்சனை இல்லாமல் அவன் இதழ்கள் சுதந்திரமாக அவள் முகம் முழுவதும் பயணம் செய்ய மிகவும் திணறிப் போனாள்.


"இப்படி எல்லாம் செய்யாதீங்க அரசு, எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்று அவள் குரல் தந்தி அடிக்க சொல்வதற்குள், கொஞ்சம் கொஞ்சமாக அத்துமீறிக் கொண்டிருந்தவன் அவளது உடல் மறுப்புத் தெரிவித்து இறுகுவதை உணர்ந்து, வெடுக்கென்று அவளிடம் இருந்து தள்ளி நின்று, அதிர்ந்து அவள் பார்த்தப் பார்வைக்கு, "இவ்வளவு நாள் பார்க்காம நான் ஏங்கித் தவிச்சத் தவிப்போட வெளிப்பாடுடி இது, இதக் கூட உன்னால புரிஞ்சுக்க முடியல இல்ல. நாள் முழுக்க உன்ன மட்டுமே நினைச்சுட்டு என்னாலதான் உன்ன பாக்காம இருக்க முடியல, பைத்தியக்காரன் மாதிரி உன்கிட்ட கெஞ்சிட்டு இருக்கேன். ஆனா என்ன பாக்காம உன்னால ஈசியா இருந்திட முடியுது, அப்படித்தான. உனக்குதான் என் நினைப்பே இல்லையே! இருந்திருந்தா என்னை இப்படி எவனோ ஒரு வேத்து ஆள் மாதிரி தள்ளி நிறுத்துவியா?" என விஷம் போல துளித்துளியாக அவளது மனதிற்குள் குற்ற உணர்ச்சியை நிரப்பினான்.


"ஏன் அரசு இப்படி எல்லாம் பேசறீங்க. அந்த மாதிரி எதுவும் கிடையாது" என்றவளுக்கு அவனுக்கு அதை நிரூபிக்கும் கட்டாயம் ஏற்பட்டிருக்க தானாகவே வந்து அவனைக் கட்டிக் கொண்டாள். கிடைத்த சந்தர்ப்பத்தை வீணாக்கிக் கொள்ளாமல் அவனது கைகளும் அவளைத் தன்னுடன் இருக்கிக் கொண்டது.


"நாளையோட ரெண்டாவது ரிவிஷன் டெஸ்ட் முடியுது. இந்த தடவ நல்லாவே செஞ்சிருக்கேன். எல்லா சப்ஜெக்ட்லயும் மறுபடியும் நல்ல மார்க் எடுத்துட்டா, அம்மா என்ன கண்டுக்க மாட்டாங்க, அதுக்குப் பிறகு வழக்கம் போல வர முடியுமான்னு பார்க்கிறேன். தயவு செஞ்சு நீங்க என் மேல சந்தேகப்பட்டுக் கோவிச்சுக்காதீங்க" என்று அவனது அணைப்பிலிருந்து விலகாமலேயே இதமாக அவள் சொல்லவும், அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் புதைத்த படி நின்றான்.


நேரம் வேறு ஆகிக்கொண்டே இருக்க, வீட்டிற்குச் சென்றே தீர வேண்டிய கட்டாயம் அவளுக்கு. "அரசு, தயவு செஞ்சு என்னைப் போக விடுங்க. இல்லன்னா ரொம்ப பிரச்சினையா ஆயிரும்" என்று அவள் தயங்கித் தயங்கிச் சொல்ல, போனால் போகிறது என்பது போல் அவளை விடுவித்தவன்,


"என்னால உன்ன பாக்காம இருக்க முடியாது, தினம் சாயங்காலம் ஆறு மணி போல உங்க‌ தெரு பக்கம் பைக்க ஓட்டிட்டு வருவேன். நீ எனக்காக வெளியில வந்து காத்திருக்கணும். என்னைக்கு உன்னால கோவிலுக்கு வர முடியுமோ, அப்ப சிக்னல் குடு. நான் வந்து உனக்காகக் காத்திருக்கேன்" என்ற அழுத்தமான நிபந்தனையுடன் அவள் வீட்டிற்குச் செல்ல அனுமதித்தான், அவள் எதிர்பாராத நேரத்தில் ஒரு அழுத்தமான முத்தத்தை அவளுடைய இதழில் பதித்து. 


மறுபடியும் சுவர் ஏறி குதிக்க அவனே அவளுக்கு உதவி செய்ய, புதியதொரு அனுபவத்தால் உண்டான ஒவ்வாமையா அல்லது அருவருப்பா எனப் புரியாமல் அவளது புறங்கையால் உதட்டை மீண்டும் மீண்டும் துடைத்தபடி அதிர்ச்சியில் கால்கள் நடுங்க, தளர்ந்த நடையுடன் வீடு வந்து சேர்ந்தாள் மல்லிகா.


படம் இன்னும் முடியாமல் எல்லோரும் தொலைகாட்சிப் பெட்டிக்கு முன்னாலேயே உட்கார்ந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்க, என்னவோ அவளது உதடே தடித்து மரத்துப் போனதுபோல உண்டான உணர்வில், நேராகப்போய் மஞ்சள் நீராட்டு விழா அன்று சீர்வரிசை தட்டில் யாரோ வைத்துக் கொடுத்த சிறிய கண்ணாடியை எடுத்து தன் இதழ்களைப் பார்த்து, அப்படி எதுவுமில்லை எனச் சற்று நிம்மதியுற்றாள். ஆனாலும் மனதிற்குள் குருகுருக்கும் குற்ற உணர்வில் குன்றித்தான் போனாள்.


பாக்கியத்துக்கு மருத்துவம் பார்த்துவிட்டுக் கடைசி பஸ் பிடித்து எல்லோரும் வீடு வந்து சேரவே இரவு பதினோரு மணி ஆகிவிட்டது.


அதற்குள் பிள்ளைகள் எல்லாம் உறங்கியிருக்க மல்லி மட்டும் அவர்களுக்காகக் காத்திருந்தாள்.


ஒரே நாளிலேயே பாட்டி வாடி வதங்கிப் போயிருக்க, ராஜம் கூட ஓய்ந்து போயிருந்தாள்.


அடுத்த நாள் காலை சீக்கிரமே எழுந்து, பால் கறப்பதில் தொடங்கி, வாசல் தெளித்து கோலம் போட்டு, அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்த்துவிட்டுப் பதைபதைக்கப் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றாள் மல்லிகா.


ஒரு துளி அளவு கூட நிம்மதியற்ற மனநிலையுடன் ஒருவாராக அன்றைய பரீட்சையையும் சுமாராக எழுதி முடித்துவிட்டு, வல்லரசுவைத் தவிர வேறு எந்த நினைவும் இல்லாதவளாக வீடு வந்து சேர்ந்தாள்.


பாட்டியின் உடல் நிலையில் துளி அளவு கூட முன்னேற்றம் இல்லாமல் இருக்க, அம்மாவால் இயல்பாக வேலைகள் செய்ய முடியாமல் போனதால் வீடே தலைகீழாகக் கிடந்தது.


பிரியாவுடன் சேர்ந்து அனைத்தையும் சரி செய்துவிட்டுத் திரும்பிப் பார்க்கும் பொழுது மணி ஆறைத் தொட்டுவிட்டிருந்தது.


பதபதைப்புடன் ஓடி வந்து புத்தகத்தைப் பிரித்து வைத்து வாசற்திண்ணையில் அமர, அதே நேரம், சரியாக அவளைக் கடந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற வல்லரசுவின் முகத்தில் படர்ந்து விரிந்த புன்னகை அவளுக்கு சற்றே ஆசுவாசத்தைக் கொடுத்தது.


***


பாட்டியின் உடல் நிலையில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருக்க பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தனர். குடலிறக்கம் அது இது என்று அறுவைச் சிகிச்சை செய்யும் சூழ்நிலை. துணைக்கு ராஜம் போய் அங்கேயே தங்க வேண்டியதாகிப் போக, கடை வேலைக்கு அதிகம் விடுப்பு எடுக்க முடியாமல் குணாவும் தவிக்க, வீட்டுப் பொறுப்பு மொத்தம் பெண்கள் இருவர் தலையிலும் விழுந்தது.


பிரியா பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்துவிட, பத்தாம் வகுப்பு என்பதனால் மல்லியை மட்டும் கட்டாயம் போகச் சொல்லிவிட்டாள் ராஜம்.


ஒருவிதத்தில் இது அவளுக்கு நல்ல வாய்ப்பாகிப் போக, மாலை அந்தப் பக்கமாக வல்லரசு வரும் நேரம், அடுத்த நாள் அவனைச் சந்திப்பதாக ஜாடைச் செய்துவிட்டாள்.


அதேபோல மறுநாள் சற்று முன்னமே கிளம்பி நல்ல தண்ணீர் குளத்தருகில் வந்து அவனுக்காகக் காத்திருந்தாள். எப்பொழுதுமே நேரத்தோடு அங்கே வந்து விடுபவன் அன்றைக்கென்று பார்த்து தாமதம் செய்ய, உண்மையில் கொஞ்சம் கொஞ்சமாகப் பதற்றமாகிக் கொண்டிருந்தாள்.


கைக் கடிகாரம் இல்லாமல் என்ன நேரம் என்று கூட அவளால் தெரிந்து கொள்ள முடியவில்லை. பேசாமல் கிளம்பிப் பேருந்து நிறுத்தம் சென்று விடலாம் என அவள் எழுந்திருக்கும் சமயம் பார்த்து அங்கே வந்து சேர்ந்தவன் படிக்கட்டில் வந்தமர்ந்தபடி அவளை இழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டான்.


பொது இடம் என்பதால் உள்ளுக்குள்ளே எச்சரிக்கை மணி அடிக்க, பதறி விலக எத்தனித்து முந்தைய சம்பவம் நினைவில் வரவும் அப்படியே இருந்து விட்டாள்.


"சாரிடி, மெட்ராஸ்ல இருந்து என் ஃப்ரண்டு ஒருத்தன் ஃபோன் பண்ணி இருந்தான். கால பாதிலயே கட் பண்ண முடியல அதான் லேட் ஆயிடுச்சு" என்று சாக்குச் சொன்னவன், "நீயே அதிசயமா இன்னைக்கு வந்து இருக்க, உன் கூட அதிகமா டைம் ஸ்பென்ட் பண்ண முடியல பாரு" என்று வருந்தினான்.


"பரவால்ல அரசு, இதனால என்ன இருக்கு? முடிஞ்சா நாளைக்கு இதுபோல வரேன். நாம நிறைய பேசலாம்" என்று அவள் அவனுக்குச் சாதகமாகப் பதில் கொடுத்த போதும்,


"பேசாம இன்னிக்கு ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டேன். அதுதான் பரீட்சைக் கூட எதுவும் இல்லல்ல" என்று சர்வ சாதாரணமாகச் சொல்ல,


"அய்யய்யோ அம்மாவுக்குத் தெரிஞ்சா என்ன கொன்னுடுவாங்க, அதுவும் இல்ல எக்ஸாம் வேற நெருங்கிட்டு இருக்கு இல்ல. எப்படியாவது டென்த்த நல்லபடியா பாஸ் பண்ணிட்டா போதும்" இன்று அவள் தன் கல்வி மேல் இருக்கும் உண்மையான அக்கறையுடன் சொல்ல,


"நம்ம ஊரு பொண்ணுங்க என்னத்த படிச்சு கிழிக்கிறாங்க, அதிசயமா நீ மட்டும்தான் படிப்பு படிப்புன்னு சின்சியரா இருக்க" என்ற விதத்தில் அவன் தன்னை மெச்சுகிறானா இல்லை கிண்டல் செய்கிறேனா என்பது கூட புரியாமல் அவள் பார்த்திருக்க,


"ஆமா இவ்வளவு கஷ்டப்பட்டுப் படிச்சு நீ மேல்கொண்டு என்ன செய்யப் போற?" என்று தீவிரமாகக் கேட்க,


"நான் ஐ.பி.எஸ். படிப்பு படிச்சு, பெரிய போலீசா ஆகப்போறேன்" இன்று அவள் சொன்ன பதிலில் அவனுடைய கண்களில் ஒரு கேலி வந்து ஒட்டிக்கொள்ள, "ஏய் நீ எப்பவாவது வைஜயந்தி ஐ.பி.எஸ். படம் பாத்தியா? உண்மைய சொல்லு அதுக்கப்பறம்தான உனக்கு இந்தப் படிப்பு படிக்கணும்னு ஆசை வந்துச்சு?" என்று கேட்க,


"ஐயோ, மூணாம் வருஷம் மாசி மகத் திருவிழா அப்ப அந்தப் படம் போட்டாங்க. எப்படி இவ்வளவு கரெக்டா கண்டு பிடிச்சீங்க" என்று வியந்து கேட்க, அவனாலேயே சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.


எப்படிம் இவளுடைய இந்த ஆசையை எல்லாம் நிறைவேற்றும் அளவிற்கு அவனுக்கு மனதில்லை, ஆனாலும் கூட எதிர்காலத்தில் எந்தக் குறையும் இல்லாமல் இவளை நல்லபடியாக ‘வைத்து’க்கொள்ள வேண்டும் என்று மனதார நினைத்தான். இதை நினைக்கும் பொழுதே கூடவே அபஸ்வரமாக சந்திராவின் நினைவும் அவனுக்கு வந்து தொலைக்க அவனுடைய மொத்தச் சிரிப்பும் மறைந்து போனது.


"ஏன்… என்னாச்சு அரசு, திடீர்னு ஒரு மாதிரி ஆயிட்டீங்க?" என்று மல்லிகா பதற, "ஒண்ணும் இல்ல, லீவ் எல்லாம் போட வேணாம். நீ ஸ்கூல் கிளம்பு" என்று அவன் சொல்லவும் ஏதோ கோபித்துக் கொண்டானோ என்று அவள் மேலும் பதறிப் பார்க்க,


"ஏய் நீ ஏண்டி இவ்வளவு டென்ஷன் ஆவற, என் ஃப்ரண்டு திரும்பவும் ஃபோன் பண்றேன்னு சொல்லி இருந்தான் நான் அத மறந்துட்டேன், இப்போ உடனே போனாதான் சரியா இருக்கும்" என்று அவளைச் சமாளித்து அனுப்பி வைத்தவனின் மனம் மட்டும் ஆற்றாமையுடன் கொதிக்கத் தொடங்கியிருந்தது.


அடுத்தடுத்து வந்த நாட்களிலும் வழக்கமான அவர்களுடைய சந்திப்புத் தொடர, அவனுடைய இதழ் தீண்டல்களையும் அவளது உடல் மீதான அத்துமீறல்களையும் வெகு இயல்பாக ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவளே அறியாமல் மல்லியை அடுத்த கட்டத்திற்கு கொண்டுவந்திருந்தான் வல்லரசு.


ஒரு வழியாகப் பாட்டியும் குணமடைந்து வீடு வந்து சேர, ஊரே மாசி மக திருவிழாவிற்காகக் களைக் கட்டத் தொடங்கியது.


***


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page