top of page

Kaattumalli - 18

Updated: Jan 7

மடல் - 18


ஒரு சாதாரண தூரத்து உறவினனாக பாக்கியத்தை அழைத்துக் கொண்டு அந்தத் திருமணத்திற்கு வந்திருந்த குணாவை கல்யாண மண்டபத்திற்கு உள்ளேயே நுழைய விடாமல் வேலாயுதத்தின் அடியாட்கள் தடுத்து நிறுத்தி, வேறெங்கும் செல்ல முடியாதபடி அங்கேயே ஓரமாக அமர வைத்துச் சிறைப் பிடிக்க, எல்லாம் நடந்து முடிந்த பின்புதான் அவனுக்கே தெரியவந்தது அந்தப் பெரிய மனிதனின் குள்ள நரித்தனம்.


"என் கையில கூலி வாங்கி வயிறு வளக்குற நாயி, உனக்கே இவ்வளவு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும், இனிமே உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோ" என இருவரையும் அங்கிருந்து கழுத்தைப் பிடித்து தள்ளினார் அந்த மனிதர்.


கீழே விழுந்ததில் பாக்கியத்திற்கு தலையில் பலமாக அடிபட்டு, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட, மல்லியின் எதிர்கால வாழ்க்கைக் குறித்த மிக முக்கியமான விஷயம் பின்னுக்குப் போய்விட்டது.


மகளின் அருகில் இருந்து அவளைத் தேற்றக் கூட இயலாத நிலையில் ராஜமிருக்க, எவ்வளவு மோசமாக நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டிருக்கிறோம் என்பது புரிந்து திக்பிரம்மை பிடித்துப்போய் ஒரு ஜடம் போலாகியிருந்தாள் மல்லிகா.


வண்டி வைத்து அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு போய், எக்ஸ்ரே, ஸ்கேனிங் என வரிசையில் நின்று, பாக்கியத்தைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, அவருக்குச் செலுத்த இரத்தம் ஏற்பாடு செய்து, ஓரளவுக்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகுதான் மகளைப் பற்றிய நினைவே வந்தது குணாவுக்கு.


ராஜம் சொன்னதைக் கேட்காமல் போனதற்காக முதன்முறையாக சற்றே வருந்தினான்தான், ஆனாலும் திருந்தினானில்லை.


இருந்தாலும் மகளின் வாழ்க்கையை அப்படியே விட முடியாத சூழ்நிலையில் வேலாயுதத்தைத் தேடி மீண்டும் அவரது வீட்டிற்கே சென்றான்.


வாழை மர முகப்பு கட்டி, ஒலிப்பெருக்கி, சீரியல் செட்டுகள் போட்டு மாவிலைத் தோரணத்துடன் ஜொலித்த அந்தத் திருமண வீட்டைப் பார்த்த பொழுது வயிறு பற்றி எரிந்தது அவனுக்கு.


எப்பொழுதுமே மரியாதையான வரவேற்பு கிடையாது, அதுவும் இப்பொழுது வழக்கமாக வேலைக்காரர்களுக்கு கொடுக்கப்படும் ஏனோ தானோ கவனிப்பு கூட இல்லாமல் அன்று மணிக்கணக்காக நாதியற்று வீட்டு வாயிலேயே தவம் கிடந்தான்.


திருமணம் முடிந்து ஓரிரு தினமே ஆகி இருந்த நிலையில், விசாரிப்பதற்காக ஒருவர் மாற்றி ஒருவர் வந்து போன வண்ணம் இருக்கவும், ஆட்களைக் கொண்டு அடித்துத் துரத்தி வீட்டிலேயே வைத்து ராசாபாசம் செய்ய இயலாமல், வேறு வழியின்றி அவனை உள்ளே வந்து பார்க்க அனுமதித்தார் வேலாயுதம்.


புது மணமக்கள் யாரும் வீட்டில் இல்லாதது அவருக்கு வசதியாகப் போனது போலும்.


வரவேற்பறையிலேயே உட்கார்ந்திருந்த வடிவு அவன் உள்ளே வந்ததும் எழுந்து சென்றுவிட, ஒரு புழுப் பூச்சியைப் பார்ப்பது போல அவள் அவனைப் பார்த்த பார்வையே அருவருப்பைச் சிந்தியது.


"என்னடா, பார்க்கணும்னு சொன்னியாம், ஏதாவது கடன் கிடன் வேணுமா?" எனக் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் வேலாயுதம் அவனை மட்டந்தட்ட, "அத்தான், நீங்க இப்படி கேக்கறது கொஞ்சம் கூட நியாயம் இல்ல, என் மக மல்லி வாழ்க்கைக்கு ஒரு வழிச் சொல்லுங்க" என்று அவன் நேரடியாகக் கேட்க,


"இதெல்லாம் பெரிய விஷயமாடா, நீ சொல்ற மாதிரி இதுக்குக் காரணம் வல்லரசுதான்னு என்ன நிச்சயம், பணத்துக்கு ஆசைப்பட்டு சந்தர்ப்பத்த பயன்படுத்திக்கிறியா?" என்று நாக்கில் நரம்பில்லாமல் அவர் கேட்க, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலத்தான் இருந்தது அவனுக்கு. அருகில் மகள் இருந்தால் அவளைக் கொன்று போட்டிருப்பான், அவ்வளவு ஆத்திரம் வந்தது.


"அத்தான், இதுக்கு காரணம் வல்லரசுதான்னு இந்நேரத்துக்கு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும், சும்மா மழுப்பாதீங்க. வேணா சம்பந்தப்பட்ட ரெண்டு பேரையும் நேருக்கு நேரா நிக்க வெச்சு பேசலாமா?" என்று அவன் சற்று குரலை உயர்த்த, அவருடைய முகத்தில் பதற்றம் கூடியது.


அவனுடைய சம்மதம் இல்லாமல் பலவந்தமாக நடந்த திருமணம் என்று சொல்வதற்கில்லைதான். அதேபோல, மகிழ்ச்சியுடன் விரும்பி சந்திராவைத் திருமணம் செய்துகொண்டானா என்று கேட்டால், அதற்குப் பதிலும்... இல்லைதான். அதனால் ஏற்கனவே இந்த அவசர கல்யாணத்தால் அவருக்கும் வல்லரசுவுக்கும் முட்டிக் கொண்டிருக்க, இப்படி ஒரு விபரீதத்தை விலைக் கொடுத்து வாங்க அவர் விரும்பவில்லை .


"சரி சரி விடு, இதையெல்லாம் பெருசா கிளற வேண்டாம். இந்த விஷயத்துல நீதான் யோக்கியமா இல்ல நாந்தான் யோக்கியமா. நான் பள்ளத்தூர்ல நிரந்தரமா வெச்சிருக்கேன், நீ சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மேயற, அவ்வளவுதான. அவன கேட்டா அவன் மட்டும் என்னத்த புதுசா சொல்லப் போறான். இப்ப எவ்வளவு பணம் வேணும் சொல்லு கொடுக்கறேன், பேசாம ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போய் அந்தக் கருவைக் கலைச்சிட்டு உன் பொண்ணுக்கு, உன் தகுதிக்கு ஏத்த ஒரு பையனா பார்த்து கட்டி வை. அதுதான் உனக்கும் நல்லது… உன் பொண்ணுக்கும் நல்லது" என்று இறங்கிவந்து அவர் தன் அடுத்த பேரத்தைத் தொடங்கினார்.


அவருடன் சேர்த்து தன்னையும் அவர் குத்திக் காண்பித்ததில் காண்டாகிப் போனவன், "என்னத்தான், அஞ்சோ பத்தோ கொடுத்து என் தலையில் மிளகாய் அரைக்கலாம் பாக்குறீங்களா" என்று அடங்காமல் சிலிர்த்து நிற்க,


"சரி சரி விடு, உங்க பெரியப்பா மகன், அதான் என் புது சம்மந்தி இருக்கான் இல்ல, அவங்கிட்ட பேசி உனக்கு கிடைக்க வேண்டிய சொத்தை வாங்கிக் கொடுக்கறேன், நீ எனக்குக் கொடுக்க வேண்டிய கடனை எல்லாம் கூட கழிச்சி விட்டுடறேன், இதுக்கு மேல என்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்காத" என்று அவர் திட்ட வட்டமாகச் சொல்ல, வாயடைத்துப் போனான்.


சிறுகச் சிறுக அவரிடம் இவன் வாங்கி இருக்கும் கடன் மட்டுமே ஒன்றரை லட்சத்துக்கு மேலிருக்குமே!


"சரி சரி நீ கெளம்பு, வீட்டுக்குப் போய் பொறுமையா யோசிச்சுட்டு பதில் சொல்லு எனக்கு இப்ப அவசரமா வெளியில போகணும்" என்று அவர் அதோடு துண்டித்து, அவனது கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளாதக் குறையாக விரட்ட, ஆழ்ந்த யோசனையுடன் வீடு திரும்பினான்.


தீவிரமாக யோசித்துப் பார்க்க, வல்லரசுவுக்கும் திருமணம் முடிந்திருக்க, அவர்களை எதிர்த்துக்கொண்டு இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்பது புரிந்தது.


மிகச் சிறிய வயதிலேயே கணவனை இழந்து கைம்பெண்ணாகிப் போனாலும், சொத்தைப் பிடுங்கிக் கொண்டு ஏமாற்றி விரட்டியடிக்கப் பார்த்த அவனுடைய பெரியப்பா குடும்பத்தைச் சாமர்த்தியமாகச் சமாளித்து ஒற்றை ஆளாக அவனை வளர்த்து ஆளாக்கிய அவனுடைய அம்மா அவனைப் பொறுத்தவரை தெய்வம் போல்தான் என்றாலும், அவரைப் பார்க்கும் பொறுப்பைக் கூட ராஜத்தின் தலையில் சுமத்திவிட்டு நிம்மதியாக இருந்து கொள்வான்.


அவனைப் பொறுத்தவரை அவனுக்குத் தன் வசதிகள் குறையாமல் நிம்மதியாக இருந்தால் போதும், மனைவியைப் பற்றிய கவலையும் இல்லை மகள்களைப் பற்றிய அக்கறையும் இல்லை.


மல்லியின் கருவைக் கலைத்து அவளுக்கு வேறு திருமணம் செய்வதுதான் சரி என்று மனதில் படவே, அத்துடன் கிடைக்கும் ஆதாயத்தையும் விட வேண்டாம் என்ற எண்ணத்தில் வேலாயுதத்திற்கு சரி என்று சொல்லிவிட முடிவு செய்தான்.


அதன் முதல் கட்டமாக அவரிடம் பேசிக் கடனைத் தள்ளுபடி செய்து ஒரு குறிப்பிட்ட தொகையையும் வாங்கி வந்தவன், ஏற்கனவே ராஜத்திற்கு கருக்கலைப்பு செய்ததனியார் மருத்துவமனைக்கு அவளை அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.


அடுத்தக் கட்டமாக அதற்கான பேச்சை அவன் வீட்டில் தொடங்கிய பொழுது, அதுவரையும் கூட ஒரு மரக்கட்டையைப் போலக் கிடந்தவள் சிலிர்த்துக்கொண்டாள் மல்லிகா. அவளைப் பொறுத்தவரை வல்லரசுவுடன் ஒரு முறையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று உறுதியாக இருக்க, அவன் மீதும் ஒரு இழையோடிய நம்பிக்கை இருந்து கொண்டே இருக்க கருக்கலைப்புக்கு அவள் ஒப்புக் கொள்ளவே இல்லை.


அவள் இருக்கும் நிலைமையைக் கூட கருத்தில் கொள்ளாமல் எல்லை மீறி குணா கை நீட்டிய போது கூட அவள் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை.


மகளை வற்புறுத்தி இப்படி செய்வது அநியாயம் என்பது மனதில் பட, அவள் பக்கமே நிற்க வேண்டும் என முடிவு செய்த ராஜம், யாரைப்பற்றியும் கவலைப்படாமல் மல்லிகாவை அழைத்துக் கொண்டு வல்லரசுவின் வீட்டிற்குள்ளேயே சென்று நியாயம் கேட்டு நின்றாள்.


இருவரும் அங்கே சென்ற நேரம் அங்குதான் இருந்தான் வல்லரசு. சந்திராவும் உள்ளே இருக்க, அவர்களை விரட்டியடிக்க பார்த்த வடிவையும் வேலாயுதத்தையும் தடுத்துக் குறுக்கே வந்து நின்றவன், "எனக்கு இஷ்டம் இல்லன்னு தெரிஞ்சும் நிர்பந்தப்படுத்தி சந்திராவ கட்டி வச்சல்ல, நான் முடியாதுன்னு மறுத்தனா? அதே மாதிரி என்னால மல்லி இல்லாமலும் வாழ முடியாது. 


இவ வயத்துல என் புள்ள வளருதுன்னா அது சும்மா மந்திரத்தால வந்துடுச்சுன்னு நெனச்சியா? ஒரு வருஷத்துக்கு முன்னால நம்ம காட்டுல வச்சு என்னைக்கு நான் இவளப் பார்த்தனோ இதே ஊர்ல உங்க கண்ணு முன்னால வச்சு இவ கூட குடும்பம் நடத்தணும்னு அன்னைக்கே நான் முடிவு செஞ்சேன். நான் நெனச்சத நெனச்ச மாதிரி இன்னிக்கு சாதிச்சு முடிச்சிருக்கேன். இதே ஊர்ல நம்ம தோப்பு வீட்ல இவள வச்சு நான் குடும்பம் நடத்ததான் போறேன், உன்னால ஆனத பாரு" என்று சொல்ல அரண்டே போய்விட்டார் வடிவு.


"என்னடா பேசற நீ? அறிவு இருக்கா உனக்கு?" என எகிறிக் கொண்டு வந்த வேலாயுதத்தை, "நீ ரொம்ப யோக்கியமா, பள்ளத்தூரில் நீ ஒரு *த்தியா வெச்சிருக்கறது எங்க யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சியா, எல்லாமே தெரிஞ்சிருந்தாலும் தெரியாத மாதிரி அம்மாவே பொறுத்துட்டு போகல, அதேபோல சந்திராவும் இருந்துட்டு போகட்டும். எனக்கு அவளை கட்டிக்க விருப்பமே இல்லன்னு தெரிஞ்சேதான வம்பா வந்து எனக்குக் கழுத்த நீட்டி இருக்கா? உன் தங்கச்சி மக..ன்ற தகுதி மட்டும் இல்லன்னா என்ன மாதிரி ஒரு புருஷன அவளால கனவுல கூட நெனைச்சு பார்த்திருக்க முடியுமா? " என்று சொல்லி வாய் அடைக்க வைத்தவன்,


"நீ கவலப்படாத மல்லி, நான் உன்ன கை விடவே மாட்டேன், இப்படியே என் கூட வந்துடு. எல்லா வசதியோடவும் உன்ன நல்லபடியா 'வெச்சு' பார்த்துக்கறேன்" என அவன் வழக்கமாகச் சொல்வது போலவே சொன்னவாறு, உரிமையுடன் அவளது கையை பற்ற முனைய, வெடுக்கென்று ஓரடி பின்னால் நகர்ந்து நின்றாள் மல்லி ஏதோ அசிங்கத்தை மிதித்தார்போன்று!


இவனைப் பொறுத்தவரைதான் எந்த மாதிரி ஒரு மட்டமான இடத்தில் இருக்கிறோம் என்பது அவளுக்குத்  தெள்ளத் தெளிவாக புரிந்து போனது. இப்படி ஒரு கேவலமான வார்த்தையை அவன் சொன்ன பிறகு, அவன் திட்டமிட்டு தன்னை நன்றாகவே ஏமாற்றி இருக்கிறான் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் விளங்கிய பிறகு,  அவனுடைய முகத்தில் விழிக்கக் கூட அவ்வளவு அருவருப்பாக இருந்தது.


சுக்கல் சுக்கலாக உடைந்துபோய் ராஜம் வேதனையுடன் மகளைப் பார்க்க, அவரது கையைப் பற்றி இழுத்தபடி அந்த வீட்டை விட்டு வெளியில் வந்தவளின் பின்னாலேயே ஓடிவந்த வல்லரசுவைத் திரும்பிக் கூட பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தாள்.


ஒரு மாயத் திரை விலகி, எதார்த்தம் என்ன என்பது அவளுக்குப் புரிந்து போக, இந்தப் பிள்ளையைப் பெற்றுக் கொள்வதா இல்லை கருவைக் கலைப்பதா என எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் குழம்பித் தவித்தாள் மல்லி.


இதுவரையிலும் கூட, ஊர் வாயில் விழாமல், இப்படி ஒரு விஷயம் வெளியிலேயே கசியாமல் எப்படி எப்படியோ மூடி மறைத்து காப்பாற்றியாகிவிட்டது. ஆனால் இனிமேலும் அது முடியாது என்பதால் மகளின் எதிர்காலத்தை எண்ணி அந்தக் கருவைக் கலைக்கத் துணிந்தாள் ராஜம்.


அவள் இரண்டு முறை கருக் கலைப்பு செய்த போது கூட நான்கு மாதத்தைக் கடந்திருக்க, அவளுக்கு அது ஆபத்தானதாகத் தெரியவில்லை.


அதை மனதில் கொண்டு இப்படி ஒரு முடிவுக்கு வந்தவள், பொறுமையாகப் பேசி புரிய வைத்து மகளின் மனதைத் திடப்படுத்தி வழக்கமாக அவர்கள் பார்க்கும் மருத்துவரிடம் அழைத்து வந்திருக்க, ஆரம்பத்திலேயே ராஜத்தின் பேச்சைக் கேட்காமல் குணா செய்த குளறுபடியால் மிகவும் தாமதமாகி முழுவதுமாக இருபது வாரம் கடந்து போயிருக்க, பதினேழு வயது கூட நிரம்பாத சிறிய பெண் என்பதினாலும், ஏற்கனவே இரத்தச் சோகை ஊட்டச்சத்துக் குறைபாடு என உடலளவில் பலகீனப்பட்டுப் போயிருந்ததாலும் மல்லியின் உயிருக்கே ஆபத்தாகும் நிலைமை என்பதால் கருக்கலைப்புச் செய்ய அந்த மருத்துவர் முற்றிலும் மறுத்துவிட்டார்.


பணத்திற்காக என்றாலும் கூட, இப்படிப்பட்ட காரியத்தைச் செய்ய அவர் தயாராகவே இல்லை. மருந்து மாத்திரை கொடுத்து அவளது உடலைத் திடப்படுத்தி அந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வைப்பது மட்டுமே ஒரே தீர்வு என்று சொல்லி அவர் அனுப்பிவிட, எதையாவது செய்து இந்தக் கருவை கலைத்தே தீர வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு நின்றான் குணா.


காரணம், சாம தான பேத தண்டம் அனைத்தையும் பயன்படுத்தி அந்த அளவுக்கு அவனை மூளைச்சலவை செய்திருந்தார் வேலாயுதம், சொந்தத் தங்கை மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு.


இதற்கிடையில், இருசக்கர வாகனத்தில் வல்லரசுவு ஆன மட்டும் அவர்கள் வீதியையே சுற்றிச் சுற்றி வர, அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை மல்லிகா.


அவள் வாயில் வரை வந்தால்தானே அவனைப் பார்க்க. என்னதான் முறுக்கி முறுக்கி அவன் வாகனத்தின் சத்தத்தை எழுப்பினாலும் கூட அவள் எட்டி கூட பார்க்காமல் அவனைத் தவிர்க்க, ஓரிரு நாட்களுக்கு மேல் அப்படிச் செய்வதைத் தானே நிறுத்திக் கொண்டான்.


இது வேறு அவளது மன உளைச்சலை அதிகப்படுத்தியது. இப்படி இருக்கும் பொழுதுதான் ஒரு நாள், யாருக்கும் தெரியாமல், ராஜத்திடம் கூட தகவல் சொல்லாமல், எதையெதையோ சொல்லி பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு மருத்துவச்சியிடம் குணா அவளை அழைத்துச் செல்ல, முதலில் செய்யவே மாட்டேன் என மறுத்தார்தான் அந்த மூதாட்டி.


ஆனாலும் மகள் யாரோ ஒருவனை நம்பி ஏமாந்து போனதாகச் சொல்லி, ஏதோ மகள் மேல் அக்கறை இருப்பது போல நாடகம் ஆடி, குடும்ப கவுரவம் அவளுடைய எதிர்காலம் அது இது என்று பேசி அவரது கையில் காலில் விழாத குறையாக கெஞ்சினான் குணா. அனைத்திற்கும் மேல் அவரது பணத்தாசையைத் தூண்டும்படி பேரம் வேறு பேச, ஒரு வழியாக அதற்கு ஒப்புக்கொண்டார் அந்தப் பெண்மணி.


இதற்கு மேல் மல்லிகாவை அருகில் வைத்துக் கொண்டே பேசத் தயங்கி, அவளை வெளியே அனுப்பிவிட்டு அவனிடம் மட்டும் தனியாக, "நாளைக்குப் பொழுது விடிய வெறும் வயித்தோட இவள இங்க கூட்டிட்டு வா, நான் மருந்து கொடுக்கறேன். கரு கலைஞ்சிடும், நீ கும்புட்ற சாமி உன் பொண்ணுக்கு நல்ல ஆயுசு போட்டிருந்தா உசுரோட இருப்பா, இல்லனா அவளும் போய் சேர்ந்திடுவா, எனக்கு எந்த வம்பு தும்பும் வராமல் பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு" என்று வெளிப்படையாகச் சொல்ல,


அதற்கு ஒப்புக்கொண்டது போல், "அப்ப சரிம்மா, ஒரு ஆறு மணிக்கு நான் இங்க அழைச்சிட்டு வந்தா போதுமா" என்று கேட்டுக்கொண்டு கையோடு எடுத்து வந்திருந்த ஒரு பெரிய தொகையை அந்தப் பெண்மணியிடம் கொடுத்துவிட்டு, குணா வெளியில் வர, ஒரு அற்ப பதரைப் போல அவனைப் பார்த்தாள், அனைத்தையும் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த மல்லிகா.


சமீபமாக, இவளுடைய இந்தப் பிரச்சனைகள் வீட்டில் தலையெடுத்தப் பிறகுதான், சண்டையில் ராஜம் விடும் வார்த்தைகளைக் கொண்டு பிறந்த பெண் குழந்தையைக் கொன்றதில் தொடங்கி துணிந்து அவள் செய்து கொண்ட கருக்கலைப்புகள் வரை மல்லிகாவுக்குத் தெரிய வந்திருந்தது.


எப்படியும் குடும்ப கவுரவம் அது இது என்று சொல்லிக்கொண்டு, இவளது உயிருக்கு உலை வைக்காமல் விடமாட்டான் தகப்பன் என்பதை உணர்ந்தவளுக்கு, அடி வயிறு கலங்கிப் போனது.


இந்த விஷயத்தில் இவளுடன் சேர்த்து தானும் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடியுமே தவிர ராஜத்தால் ஓரளவுக்கு மேல் எதுவும் செய்ய இயலாது என்பது புரிந்தே இருக்க, இதிலிருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம் என யோசித்தபடி வீடு வந்து சேர்ந்தாள்.


ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலில், யாருக்கும் தெரியாமல், அங்கிருந்து நான்கு மணிநேர பயண தூரத்தில் இருக்கும் முக்கிய நகரம் வரை போய் இரயில் பிடித்து மெட்ராஸுக்குப் போய்விடலாம், பிறகு வாழ்க்கை விட்ட வழி என்ற முடிவுக்கு வந்திருந்தாள். எது எப்படியோ அடுத்த நாள் விடியலில் அவள் இங்கே இருக்கவே கூடாது என்கிற உறுதி அவளுக்குள் வந்திருந்தது.


யாருக்கும் தெரியாமல் கையில் அகப்பட்ட ஏதோ சில உடைகளை அள்ளி ஒரு கட்டைப் பைக்குள் போட்டுத் திணித்துக் கொண்டு, சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தாள்.


இன்னும் கூட பாக்கியம் உடல் தேறி வீடு வந்து சேராமல் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே கிடக்க, அவரைப் பார்க்க ராஜத்தையும் அழைத்துக் கொண்டு கிளம்பிப் போனான் குணா.


வழக்கம் போல ஆண் பிள்ளைகள் எல்லோரும் வீதியில் விளையாடிக் கொண்டிருக்க, மாட்டுக் கொட்டகையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் பிரியா.


அவர்கள் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் போய் வண்டி ஏறினால், பார்ப்பவர் எல்லோருக்கும் தெரிந்து போகும் என்பதால், காட்டுப்பாதை வழியாகப் பக்கத்து ஊர் வரை சென்று அங்கிருந்து பேருந்துப் பிடித்து இரயில் நிலையம் வரை சென்றுவிடலாம் என்கிற யோசனையில், கிளம்பி இங்கே வந்துவிட்டாள்.


பசியும் தாகமும் பாடாய் படுத்தக் களைத்துப்போய் உட்கார்ந்துவிட்டாள்.


அங்கிருந்த தூணில் தலை சாய்ந்து அவள் அமர்ந்திருக்க ஆயாசத்தில் கண்கள் சொருகியது. அரைகுறை உறக்க நிலையில் எவ்வளவு நேரம் இருந்தாளோ, மனித சந்தடியற்ற அந்த இடத்தின் அமைதியை கிழித்து ஈனமாக யாரோ முனகும் சத்தம் கேட்க, காதைத் தீட்டிக் கூர்மையாக்கிக் கவனித்தாள்.


முன் இரவு நேரத்திலேயே இங்கே குள்ள நரிகளின் நடமாட்டம் இருக்கும். சமயத்தில் அவை ஊருக்குள்ளே வந்து ஆட்டுக்குட்டிகளை அடித்துத் தின்பதும் நடக்கும். அறிதாக எப்பொழுதாவது சிறுத்தைகளின் நடமாட்டமும் இருக்கும்.


பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன் இவர்கள் ஊர் தடத்தில் பேருந்து வசதி இல்லாமல் இருந்த சமயத்தில், பக்கத்து ஊருக்குச் செல்ல மக்கள் இந்தக் காட்டுப் பாதையைத்தான் பயன்படுத்தினார்கள். அப்பொழுதெல்லாம் சிறுத்தை அடித்து மனிதர்கள் இறப்பது சகஜமாக இருந்தது.


இப்பொழுது மக்கள் நடமாட்டம் இல்லாமல் போன பிறகு, அது எப்பொழுதாவது அரிதாக நடக்கும் சம்பவமாகிப்போனது.


சில வருடங்களுக்கு முன் அதிக மின்சார பயன்பாடு இல்லாத காலகட்டத்தில், இங்கிருக்கும் நரிகள் ஊளையிடும் சத்தம் ஊருக்குள்ளேயே கேட்டுக் கிலியைக் கிளப்பும். இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வீடு ஒலிக்கும் தொலைக்காட்சி சத்தத்தில் நரியின் ஊளை காதிலேயே விழுவதில்லை.


இப்பொழுதும் கூட அருகில் ஏதாவது நரி வந்திருக்குமோ என்கிற பயத்தில் கொஞ்சமாக இருந்த வெளிச்சத்தில் சுற்றும் மற்றும் துளாவினாள். பார்வைக்கெட்டிய தூரம் வரை எதுவும் தென்படாமல் போக சத்தம் மட்டும் வந்து கொண்டே இருந்தது.


யாராவது ஆபத்தில் இருக்கிறார்களோ என்கிற அச்சம் மேலோங்க, கால்கள் தானாக அவளைச் சத்தம் வந்த திசைக்கு இழுத்துச் சென்றன.


அங்கே அவள் கண்ட காட்சியில் குலை நடுங்கிப் போனது.


ஆடையற்ற உடல் முழுவதும் காயங்களுடன் குற்றுயிரும் கொலை உயிருமாக, மூச்சுக்கே சிரமப்பட்ட படி ஒரு பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை மல்லிக்கு.


அருகில் சென்று யார் என்று பார்க்க, வேலாயுதத்தில் காட்டில் கூலி வேலை செய்யும் *ரியில் வசிக்கும் ராக்குவின் மகள் மரிக்கொழுந்து என்பது தெரிந்து பதறிப் போனது.


பிரியாவை விட சிறிய பெண். சென்ற மாதம்தான் பூப்படைந்திருந்தாள்.


மாலை நேரத்தில் சுள்ளிப் பொறுக்க இங்கே வந்திருக்கும் சமயம் பார்த்து, ஏதாவது நாய் நரி இவளை இப்படிப் பிடிங்கிப் போட்டிருக்குமோ என்று நினைத்தவளுக்கு, அப்படி ஏதும் நடந்திருந்தால் இப்படி ஒட்டுத் துணி இல்லாமல் எப்படிக் கிடப்பாள் என்ற கேள்வி எழ, இது ஏதோ மனித மிருகத்தின் செயல்தான் என்பது புரிந்தது.


அவள் தாகம்… தண்ணி… என்று முனக அதே பையில் தண்ணீரைக் கொண்டு வந்து அவளுக்குப் புகட்டினாள்.


அப்படியே அவளது கண்கள் நிலைக் குத்தி நின்றுவிட, அவள் மயங்கி இருக்கிறாளா அல்லது உயிர் போய்விட்டதா என்று கூட புரியவில்லை.


அந்தப் பெண்ணை அப்படியே விட மனது வராமல் பையில் இருந்த தன்னுடைய பாவாடையை இடுப்பில் மாட்டிக் கழுத்து வரை இழுத்து விட்டாள்.


அப்பொழுது அந்தப் பக்கமாக ஏதோ சந்தடி கேட்க, அதிர்ந்து மரத்துக்குப் பின்னால் பதுங்க, பதட்டத்துடன் அந்தப் பெண்ணை நோக்கி வந்து கொண்டிருந்தார் வேலாயுதம்.


"சனியன், இப்படி ஆகும்னு யார் கண்டா, இது மேலயெல்லாம் கைய வச்சா எவன் நம்ம கேள்வி கேட்பான்னு தொட்டது தப்பா போச்சு. இது செத்து கித்து தொலைஞ்சா பிரச்சனையா போகும்" என அவர் புலம்பிய புலம்பல் அவளுடைய காதில் தெளிவாக விழுந்தது.


அருகில் வந்ததும், திடீரென்று அந்தப் பெண்ணின் மேல் படர்ந்திருந்த  துணியைப் பார்த்ததும் துணுக்குற்று, அவருடைய பதற்றம் கூடிப் போய் சுற்றும் முற்றும் பார்க்கத் தொடங்கினார்.


இந்த நொடி, தான் மட்டும் அவருடைய கையில் கிடைத்தால் இந்தப் பெண்ணிற்கு நேர்ந்த நிலைதான் தனக்கும் என்று மண்டைக்குள் சூரீர் என்று உரைக்க, ஒரு சிறு பெண் என்றும் பாராமல் இவ்வளவு கேடு கெட்ட செயலைச் செய்த அந்த மிருகத்தின் மேல் கண்மண் தெரியாத கோபம் உண்டாக, சமயமாக, அந்தப் பெண் அடுப்பு எரிக்க வெட்டிப் போட்டிருந்த வேலி காத்தான் முற்கள் கண்களில் பட்டது.


அதில் கனமானதாக ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டவள் திடீரென்று பாய்ந்து வேலாயுதத்தை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினாள்.


எங்கிருந்துதான் அவளுக்கு அப்படி ஒரு பலம் வந்ததோ, தன்னை இப்படி ஒரு நிராதரவான நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் வல்லரசுவின் மீது, பெற்ற மகளென்றும் பாராமல் அவளது உயிரைப் பறிக்கும் அளவுக்குப் போன குணாவின் மீது, தன் மேல் முழுமையாக நம்பிக்கை வைத்து தனக்கான நன்மையை மட்டுமே நினைக்கும் ஒரே ஜீவனான அம்மாவை ஏமாற்றி, புத்தி தடுமாறி இப்படி ஒரு அவல நிலையை வலியப் போய் தேடிக்கொண்ட தன்மீதே, உண்டான ஆத்திரமெல்லாம் வெறியாக மாறிப்போய், ஒவ்வொரு அடியும் இடியாக அவர் மீது இறங்க, எதிர்பாராமல் நடந்த தாக்குதலில் நிலை குலைந்து போய், போதாத குறைக்கும் குடிபோதையில் வேறு இருந்ததால் அந்த மனித மிருகம் அவளை எதிர்க்க முடியாமல் தடுமாறி தரையில் விழ, கீழே இருந்த கூர்மையான கல் அவருடைய தலையை நன்றாகப் பதம் பார்த்து விட்டது.


இரத்தம் வழிந்து தரை எல்லாம் நனைய, அவருடைய கை, கால்கள் வெட்டி வெட்டி இழுக்கத் தொடங்கியது. சில நிமிடங்களில், மெள்ள மெள்ள அந்தத் துடிப்பும் அடங்கிப் போக, அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கே வந்துவிட்டாள் மல்லிகா.


அதற்குள் அந்தப் பெண்ணும் இறந்துவிட்டாள் என்பது புரிய, அருகருகில் இரண்டு சடலங்களையும் பார்த்து பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்ள,  அப்படியே திரும்பி காட்டுப்பாதைக்குள் தலைத் தெறிக்க ஓடத் தொடங்கினாள்.


எப்படி பக்கத்து ஊருக்கு வந்து சேர்ந்தாள் என்றோ, எப்படிப் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் என்றோ, முன்பின் தெரியாத இரயில் நிலையத்திற்குள் வந்து பயணச்சீட்டு வாங்கி சென்னை போகும் இரயிலில் எப்படி ஏறி அமர்ந்தாள் என்றோ எதுவுமே அவள் சிந்தைக்குள் பதியவே இல்லை. இரயிலில் உட்கார்ந்த பிறகுதான், அந்த இரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்தப் பிறகுதான், அவளால் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது.


இங்கே தொடங்கிய மல்லியின் இந்த ஓட்டம், மத்திய சிறைச்சாலைக்குள் என்று அவள் அல்லிக்கொடியை சந்தித்தாளோ அன்றுதான் முற்றுப்பெற்றது.


1 comment
© KPN NOVELS COPY PROTECT
bottom of page