top of page

Kaattumalli - 17

Updated: Jan 7

மடல் - 17


குன்றடிவாரக் காட்டின் எல்லையில் இருக்கும் சிறு கோவிலுக்குள் தனித் தெய்வமாக அமர்ந்திருந்தாள் முண்டகக்கண்ணி என்னும் காட்டு அம்மன்.


மாசி மகத் திருவிழா சமயத்தில் அந்த ஐந்து நாட்கள் மட்டுமே அவளுக்குத் தூப தீப ஆராதனையோடு ஆறு கால பூஜை, வழிபாடு எல்லாமே. அதன் பிறகு அந்தக் கோவிலுக்குள் ஒரு விளக்கேற்றி வைக்கக் கூட அந்த ஊரில் நாதி இல்லை.


மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பத்துப் பெண்கள் மட்டும் எப்பொழுதாவது இங்கே வந்து வேலிக்காத்தான் மரங்களை வெட்டி, கட்டித்தலை மேல் வைத்து அடுப்பெரிக்க எடுத்துப் போவார்கள்.


அதுவும் காட்டு விலங்குகளின்மேல் உள்ள பயத்தால் அந்தி சாய்ந்த பிறகு, அந்தப் பக்கம் யாரும் எட்டிக்கூட பார்க்கமாட்டார்கள்.


வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இருள் கவிழத் தொடங்கியிருக்கும் அப்படி ஒரு மாலை நேரம்தான் அது. கையில் ஒரு கட்டைப்பையைப் பிடித்தபடி அந்தப் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தாள் மல்லிகா.


அவளுடைய அம்மாவின் ஒரு பழைய புடவையை உடுத்தியிருந்தாள். சீப்பை வைத்துக் கூட சீவாமல் அப்படியே ஏனோ தானோ எனப் பின்னலிட்ட சடை. இனிமேல் அழக் கண்ணீரே இல்லையோ எனும்படி வற்றி வரண்டே போயிருந்த கண்கள். உதடுகள் காய்ந்து போய் தாகத்தில் நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டது. இன்னும் சில நிமிடங்கள் இப்படியே போனால் உயிரே போய்விடுமோ என்கிற அளவுக்கு அவளுக்கு அச்சமாக இருக்க கோவிலுக்குப் பின்னால் இருக்கும் கிணற்றின் நினைவு வந்தது. திருவிழா சமயத்தில் எல்லா தேவைகளுக்கும் அதிலிருந்துதான் தண்ணீர் எடுத்து உபயோகிப்பார்கள்.


இராட்டினம் கயிறு போன்ற ஏதும் இருக்கிறதோ இல்லையோ, எதற்கும் போய் பார்க்கலாம் என்று அங்கே செல்ல, இராட்டினம் இல்லை, நைந்துபோன கயிறு மட்டும் ஓரமாகக் கிடந்தது. அதிலும் தண்ணீர் இறைப்பதற்கு ஒரு வாளி கூட இல்லை. கிணற்றை எட்டிப் பார்த்தாள். நல்ல வேளையாகத் தண்ணீர் ஓரளவுக்கு எடுக்க ஏதுவாக மேலாகவே இருந்தது.


கையில் இருந்த கட்டைப் பையைத் தவிர உதவிக்கு வேறு எந்த பொருளும் இல்லை. இருப்பதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என பைக்குள்ளே துளாவ, பரபரவென்ற சத்தத்துடன் நெகிழிப் பை ஒன்று கைக்குத் தட்டுப்பட்டது. அவளுடைய பசியும் தாகமும் வேகமாக அவளைச் சிந்திக்க வைத்தது.


சட்டென அதை வெளியே எடுக்க, அன்று அவளுடைய பாட்டி அவர்களுக்குக் கொடுத்த பழைய பட்டுப் புடவையை வைத்திருந்த துணிக்கடைப் பைதான் அது. அவசரத்தில் கவனிக்காமல் அதையும் அள்ளிப் போட்டு வந்திருக்கிறாள் போலும். கிடைத்தவரைக்கும் நல்லது எனப் புடவையை உருவித் தள்ளிவிட்டு அந்தப்  பையை மட்டும் தனியாக எடுத்து, அருகில் கிடந்த சிறு கூழாங்கற்களை அள்ளி அதில் போட்டு அதை அந்த கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் விட்டு அப்படி இப்படி ஆட்ட ,கொஞ்சம் கொஞ்சமாக அதில் நீர் நிறையவும்,  மெதுவாக அதைத் தூக்கி, தாகம் தீரும் மட்டும் தண்ணீரை அருந்தினாள்.


அதன் பிறகுதான் பார்வையே சற்றுத் தெளிவாகத் தெரிந்தது.


மெதுவாக நடந்து வந்து கோவில் மண்டபத்துப் படியில் அமர்ந்து கொண்டாள்.


கடந்து போன ஒரு சில நாட்களுக்குள், யாரும் கற்பனையில்  நினைத்துப் பார்க்கக் கூட பதறும் படியாக ஏதேதோ சம்பவங்கள் நடந்து முடிந்திருந்தன.


கடைசியில் மிஞ்சியதென்னவோ துயரமும் அவமானமும் மட்டுமே!


அதையெல்லாம் சுமந்தபடி இங்கே வந்து உட்கார்ந்திருக்கும் இவளிடம் இன்னும் எஞ்சி இருப்பது இவளது உயிர் மட்டுமே.


இதையாவது காப்பாற்றிக் கொள்ளத்தான், எங்கு போவது என்கிற இலக்கு கூட தெரியாமல் இப்படி ஓடி வந்திருக்கிறாள்.


அன்று ராஜம், தங்கராசுடனான இவளது திருமணத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது, உண்மையில் அதை நம்பக் கூட இயலவில்லை மல்லியால், நினைத்தாலே அருவருத்தது.


அம்மாவிடம் சமாதானமாகவோ, மறுத்துப் பேசவோ, அல்லது 'அப்படி எதுவும் நடக்காது, நீ கவலைப்படாதே' என்று ஏதோ ஒரு ஆறுதலைச் சொல்லவோ, எதற்குமே வழியில்லை. அரண்டு போய் அவளும் அமர்ந்து விட, அப்படியே சில நிமிடங்கள் கடந்துபோனது.


அப்பொழுது அங்கே வந்த பிரியா, "அக்கா, அப்பா உன்னையும் அம்மாவையும் கூப்பிட்டாங்க" என்று அழைக்க, உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.


அவன் அழைத்த உடனே, ஒரு நாயைப் போல எழுந்து ஓட கொஞ்சம் கூட விருப்பமே இல்லாமல் கல்லைப் போல அசையாமல் அமர்ந்திருந்த ராஜம், 'எவ்வளவு நேரம் இப்படியே இருக்க முடியும், எப்படியும் போய்தானே ஆக வேண்டும்? இல்லையென்றால் இங்கேயே வந்து இதற்கும் ஒரு ஆட்டம் ஆடுவான்' என்கிற எண்ணம் வர, எழுந்து வீட்டிற்குள் சென்றாள்.


மல்லியின் ஒவ்வொரு அணுவிலும் பயம் துளிர்க்க, அம்மாவைத் தவிர வேறு பாதுகாப்பு இல்லை என்பது போல் அவளுக்குப் பின்னால் பதுங்கியவாறு தானும் உள்ளே சென்றாள்.


"சரிங்க அத்தான், உங்க விருப்பப்படியே செஞ்சிடலாம்னு நான் ஒரு வார்த்த சொன்னதுதான், அவருக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? வடிவு அக்கா, வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கவே ஆரம்பிச்சுட்டாங்கன்னா பாரும்மா.‌ உடனே ஜோசியரை வரவழைச்சு ஜாதகப் பொருத்தம் பார்த்து, வர ஆவணிலயே மொத முகூர்த்தமா புடிச்சு கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டாங்கன்னா பாரேன்" என‌ அவ்வளவு மகிழ்ச்சியும் ஆர்ப்பாட்டமுமாக அம்மாவிடம் சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தான் குணா.


மருமகளைப் பார்த்து உதட்டைக் கோணிய பாக்கியம், அவளை உரசியபடி உள்ளே வந்த பேத்தியிடம், "வாடி அதிஷ்டக்காரி. பாத்தியா, யாருக்கு வரும் இப்படி ஒரு வாழ்வு. கொடுத்துதான் வெச்சிருக்கப் போ" என வாய் எல்லாம் பல்லாகச் சொல்ல, தலைச் சுற்றி மயக்கமே வரும் போல் இருந்தது ராஜத்துக்கு. தடுமாறி பக்கத்தில் இருந்த தூணை அவள் பிடித்துக் கொள்ள, மரம் போல சரிந்து அப்படியே மூர்ச்சையாகி கீழே விழுந்தாள் மல்லி.


அவளை அள்ளி மடியில் போட்டபடி, "ஐயோ பிரியா, பல்லெல்லாம் கிட்டுது, சீக்கிரம் போய் நர்சம்மா இருந்தா கூட்டிட்டு வாடி" என, அந்த நிலையிலும் ராஜம் பதற, உடனே பிரியாவும் ஓட எத்தனிக்க, "ஏய், ஒரு நிமிஷம் நில்லுடி" என அதட்டலாக வந்து விழுந்த பாக்கியத்தின் கட்டளைக்குப் பணிந்து தேங்கி நின்றாள்.


"அவ கவருமென்ட்டு வேலைக்காரி, கூட்டிட்டு வந்தா ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு நம்ம உசுர எடுப்பா. காலையிலேயே உங்க ஆத்தா காரி அந்த ஆட்டம் ஆடுனா, வீட்டுக்குள்ள வந்த உடனே இந்தப் பொண்ணு புத்தியில என்ன வெஷத்த வெதச்சாளோ. பயந்து போயி மயக்கமாயிருக்கு. போய் ஒரு சொம்பு தண்ணிய எடுத்துட்டு வந்து இது தலையில ஊத்து. மயக்கம் தானா தெளியும்" என்றார் சாவகாசமாக.


ராஜத்தின் உடம்பில் வெளிப்படையாகத் தெரியும் காயங்களைப் பார்த்து நிச்சயமாக அந்தச் செவிலியர் ஆயிரம் கேள்விகள் கேட்பார். அவரை அழைத்தால் தேவையில்லாத வம்பை விலைக் கொடுத்து வாங்குவது போலாகிவிடும் என்பதால்தான் இப்படிப் பூசி மொழுகினார் பாக்கியம்.


மகளை மடியில் போட்டுக்கொண்டு செய்வதறியாமல் அமர்ந்திருந்த ராஜத்துக்கு இதற்கெல்லாம் பதில் சொல்லக் கூடத் தெம்பில்லை. புடவை முந்தானையால் முகத்தை மூடியபடி விசும்ப, வேறு வழி தெரியாமல் பிரியா போய் தண்ணீரை எடுத்து வந்தாள்..


குணாவே அதை வாங்கி மகளின் முகத்தில் தெளித்தான். அதன் பிறகும் கூட கண்ணையே திறக்காமல் மல்லி அசைவற்றுக்கிடக்க, "வேற வழி இல்ல, நீ போய் அந்த நர்ஸ் பொண்ணையே கூட்டிட்டு வா. அதுக்கு மேல அவ வேற எந்தக் கேள்வி கேட்டாலும் தெரியாதுன்னு மட்டும்தான் சொல்லணும்" என்று சொல்லி மகளை அனுப்பினான் குணா.


"சரியான தூக்கிரி புடிச்சவடா உம்பொண்ணு, நல்ல சமாச்சாரம் பேசும்போது இது என்ன இப்படி அபசகுணம் புடிச்சா மாதிரி?" எனத் தலையில் அடித்துக் கொண்டு பாக்கியம் புலம்ப, அதைக் கண்டும் காணாமல் ஓட்டமாக ஓடிப் போய் கையுடன் அந்த ஊரின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருக்கும் செவிலியரை அழைத்து வந்தாள் பிரியா.


அதற்குள் அவளைப் பிடித்து அங்கிருந்த கயிற்றுக்கட்டிலில் படுக்க வைத்திருந்தனர். 


நேராக வந்து அவளுடைய கண்களைப் பிரித்து விழி அசைவை பரிசோதித்து, மணிகட்டைப் பிடித்து நாடித்துடிப்பையும் பார்த்துவிட்டு, சந்தேகத்தில் நெற்றி சுருங்க அந்தச் செவிலியர் அவளுடைய வயிற்றில் கையை வைத்துப் பார்க்க, தூக்கி வாரிப் போட்டது அவருக்கு.


அனிச்சையாக அவரது பார்வை, அருகிலேயே நின்றிருந்த பாக்கியத்திடமும் குணாவிடமும் சென்று பின் ராஜதிடம் வந்து ஒரு பரிதாபத்துடன் நிலைத்தது.


தொண்டையைக் கனைத்துச் சற்றுச் சுதாரித்துக் கொண்டு, "ஒண்ணும் இல்ல, பாப்பாவுக்கு ரத்த சோக போலத் தெரியுது, அதான் பலகீனமாகி மயக்கம் போட்டிருக்கு, வேற ஒண்ணும் இல்ல, ஒரு ஊசிப் போடறேன், கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிடும்" என்று பொதுவில் சொல்லி, ஒரு ஊசியை அவளுக்குச் செலுத்திவிட்டு, "கை கழுவணுமே" என்று இழுத்தபடி ராஜத்தைத் தனியே வருமாறு கண்களால் ஜாடை செய்ய,


"கொல்ல பக்கம் கூட்டிட்டு போடி" என முந்திக் கொண்டு பிரியாவுக்கு உத்தரவிட்டார் பாக்கியம்.


"நீ உள்ளே போயி, நர்ஸ் அக்காவுக்கு டீ கொதிக்க வையி, நான் கூட்டிட்டு போறேன்" என்று ராஜமே அந்தச் செவிலியரைப் புழக்கடைக்கு அழைத்துச் செல்ல, "ஏற்கனவே உங்கப் பொண்ணு சமாச்சாரம் உங்களுக்குத் தெரிஞ்சு போச்சா? அதனாலதான் அண்ணன் உங்களையும் அவளையும் இப்படி போட்டு அடிச்சு வச்சிருக்காங்களா?" என்று கேள்வி மேல் கேட்க, எதுவுமே புரியவில்லை ராஜத்துக்கு.


"ஏன், ஏன் நரசம்மா, மல்லிக்கு என்ன ஆச்சு?" என்று பயந்தபடி கேட்க, அவளுக்கு எதுவும் தெரியவில்லை என்பது புரிந்து சங்கடமானது.


"அக்கா, ஏற்கனவே உங்க உடம்பெல்லாம் இரத்த காயமா இருக்கு, அதுக்கே நான் ட்ரீட்மென்ட் கொடுக்கணும் போலிருக்கு.  இந்த அழகுல இந்த விஷயத்த உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னே தெரியல. எதுக்கும் மனச தெடப்படுத்திக்கோங்க. நான் சொல்றத கேட்டுட்டு எந்தத் தப்பான முடிவுக்கும் போகக்கூடாது" என்று பூர்வ பீடிகைகளுடன் அவர் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல முடியாமல் திணற, ஏன் இப்படி எல்லாம் பேசுகிறார் என்றே பிடிபடவில்லை ராஜத்துக்கு.


பீதியுடன் அந்தச் செவிலியரை ஏறிட, "மல்லி இவ்வளவு தூரத்துக்குப் போற பொண்ணே கிடையாது. அவளுக்கும் தெரியாம ஏதோ பெருசா தப்பு நடந்திருக்கு. வெளிப்படையா சொல்ல பயந்துகிட்டு நடந்த விஷயத்த மூடி மறைச்சிருக்கு. மத்தபடி, தான் இப்படி இருக்கிறது கூட உங்கப் பொண்ணுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லன்னுதான் தோனுது" என்று அவர் மேலும் தொடர,


"ஐயோ, தயவு செஞ்சு என்னன்னு சொல்லுங்கம்மா, கேக்க  கேக்க எனக்குப் பதறுது" என்று ராஜம் அவரைத் துரிதப்படுத்த,


"மல்லி முழுகாம இருக்கு, ராஜிக்கா" என, மிகப் பெரிய இடியை அவளது தலையில் இறக்கினார் அந்தச் செவிலியர்.


"ஐயோ" எனப் பதறி ராஜம் நெஞ்சைப் பிடித்துக் கொள்ள,


"நீங்க பதட்டமாகி அழுது கிழுது ஏதாவது கலாட்டா பண்ணீங்கன்னா, அது உங்க பொண்ணு உயிருக்கே ஆபத்தா போய் முடியும். குணா அண்ணன் இத லேசுல விட மாட்டாங்க.”


”முதல்ல இது மல்லிக்கு தெரிஞ்சு… அதாவது அவ ஒப்புதலோட நடந்துதா, இல்ல எந்தப் பாவியாவது அவள பலவந்தமா கெடுத்துட்டானான்னு விசாரிங்க, எதுவாயிருந்தாலும் இப்ப உடனே முயற்சி பண்ணிங்கன்னா, இந்தக் கர்ப்பத்த கலைக்கலாம். கொஞ்சம் தாமதமானாக் கூட முடியாம போயிடும். கவர்மெண்ட் ஆஸ்பத்திரின்னு வந்தீங்கன்னா, நிறைய பார்மாலிட்டிஸ் இருக்கு. காதும் காதும் வச்ச மாதிரி எதையும் செய்ய முடியாது. அதனால நீங்க உங்களுக்காக போனீங்க இல்ல அந்த தனியார் ஆஸ்பத்திரிக்குப் போயி என்ன செய்ய முடியுமோ உடனே செய்ங்க" என்று தனக்குத் தெரிந்த நியாயத்தை இதமாகச் சொல்லிவிட்டு, அதிர்ச்சியில் மரம் போல நின்றிருந்த ராஜத்தின் கையைப் பற்றி, படுத்திருந்த மல்லிக்கு அருகில் இழுத்து வந்தவர், "சரி, நான் போயிட்டு வரேன்" என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டு ஒரு நொடி கூட நிற்காமல் அங்கிருந்து அகன்று விட, கையில் தேநீர் குவளையுடன் ஓடி வந்த பிரியா குழம்பி போய் அம்மாவின் முகத்தைப் பார்த்தாள்.


சிந்தித்து நிதானமாகச் செயல்பட அவகாசம் இல்லை என்பது நன்றாகவே புரிந்தது ராஜத்திற்கு. அப்படியே சரிந்து தரையில் அமர்ந்து விட, "போடி போ, இவ கண்ணு முழிக்கிற வரைக்கும் உங்க அம்மா இவளை விட்டு அங்க இங்க நகர மாட்டா. நீ போயி இராத்திரிக்கு என்ன வேணுமோ பார்த்து ஆக்கி வை. விளையாட போயிருக்கிற பிள்ளைங்க வந்தா பசி பசின்னு உசுர எடுத்துடுவானுங்க" என்று பிரியாவை அதட்டி அனுப்பியவர், தான் போய் தொலைக்காட்சியின் முன் அமர்ந்துவிட்டார் பாக்கியம்.


அதற்கு முன்பாகவே குணா எங்கேயோ சென்றிருக்க, கலக்கத்துடன் மகளையே பார்த்தபடி ராஜம் உட்கார்ந்திருக்க, சில நிமிடங்கள் கடந்து மயக்கம் தெளிந்து மெதுவாக எழுந்து அமர்ந்தாள் மல்லி.


அடுத்த நொடி ராஜத்தின் முகம் ஜிவுஜிவு எனச் சிவந்து போய் கண்கள் இரண்டும் கனலை உமிழ, சத்தமாகப் பேசினால் அடுத்த நொடி என்ன ஆகும் என்கிற முன்னெச்சரிக்கையில், தன் குரலைத் தழைத்து, "எவங்கூட **த்துடீ இப்படி…" என பற்களைக் கடித்தப் படி ஒரு அசிங்கமான வார்த்தையை உமிழ்ந்தவள், மகளின் முகம் பேய் அறைவது போலானதை உணர்ந்து சற்றுத் தணிந்து, "எவன்டி உன்ன இந்த நெலமைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கான்" என்று கேட்க, வார்த்தையே வரவில்லை மல்லிக்கு, குற்ற உணர்ச்சியில் அவள் தலை கவிழ,


"அப்படின்னா உனக்குத் தெரிஞ்சேதான் நடந்திருக்காடீ, பாவி… பாவி… நம்ம சாதிக்காரனா இல்ல கீழ் சாதிக்காரனா?" எனக் கேள்வி கேட்டுத் தலையில் அடித்துக் கொண்டு சன்னமாக அழ, எழுந்து நிற்கக் கூட தெம்பில்லாமல் ஒவ்வொரு அணுவிலும் பயம் மட்டுமே மேலோங்கி போய் அப்படியே அமர்ந்திருந்தாள் மல்லி.


"இப்ப என்கிட்ட நீ சொல்லப் போறியா இல்லையா? உங்கப்பனுக்கு மட்டும் இது தெரிஞ்சுதுன்னா, உன்னையும் அந்தப் பையனையும் அடிச்சே கொன்னுடுவான்டி பாவி மு*ட" என்று அவர் தன் ஆத்திரம் முழுவதையும் சேர்த்து அவள் மீது இறக்க, அவளுடைய இந்த வார்த்தை வேறு மல்லியை எக்கச்சக்கமாக உசுப்பி விட, 'யார் மேல, வல்லரசு மேல நம்ம அப்பனால கை வெச்சுட முடியுமா?' என்றுதான் அவளால் சிந்திக்க முடிந்தது, தகப்பனின் மீது இருந்த அளவு கடந்த வெறுப்பின் காரணமாக.


இந்த நேரத்திலும் கூட அவள் வல்லரசுவின் மீது கொண்டிருந்த நம்பிக்கை தலைத்தூக்க, தைரியமாக அவனுடைய பெயரை அம்மாவிடம் சொன்னவள், "அவர் ஒண்ணும் என்னை ஏமாத்திட்டுப் போற ஆள் கிடையாது, கண்ணு மண்ணு தெரியாத அளவுக்கு என்ன காதலிக்கிறாரு. போ, போய் அப்பாகிட்ட சொல்லு, என் வயித்துல வளர பிள்ளைக்கு அப்பன் வல்லரசுதான். அந்த ஆளால அவர் மேல கைய வெக்க முடியுதான்னு நானும் பாக்கறேன்" எனத் திமிராகவே அவளிடம் இருந்து பதில் வர, அரண்டுதான் போனாள் ராஜம்.


மகள் நன்றாக ஏமாந்திருக்கிறாள் என்பது அந்தத் தாய்க்குத் தெளிவாகப் புரிந்தது.


"அறிவு கெட்டு நீ எவ்வளவு பெரிய தப்ப செஞ்சிருக்கேன்னு தெரியுமா? இந்த ஊர் உலகத்துல நல்ல ஆம்பளன்னு பார்த்தா, பத்துக்கு நாலு பேர் கூட தேற மாட்டான்டீ. அதுல ரெண்டு பேரு சந்தர்ப்பம் கிடைக்காம உலகத்துக்குப் பயந்துட்டு நல்லவனா இருக்கிறவனா இருப்பான். இந்த வல்லரசு மாதிரி இருக்கிறவன், அப்படிப்பட்ட ரெண்டு பேருக்குள்ள கூட வர மாட்டான். உங்கப்பன் துணை இல்லாம உன் வயித்துல இருக்கற இந்தப் புள்ளைய கலைக்கக் கூட என்னால முடியாதேடீ. இப்படி உன்ன வெச்சுட்டு நான் என்ன செய்யப் போறேன்னு தெரியலயே" என்று அவள் கேவ,


அந்தச் சத்தத்தில், "என்னடி இது ஆத்தாளும் மகளுமா குசுகுசுன்னு பேசி ஒப்பாரி வைக்கிறீங்க. அவள மூஞ்சிய கழுவிட்டு வந்து சோத்த தின்ன சொல்லு. இருக்கிற இந்த ரெண்டு மூணு மாசத்துல, நல்லா ஆக்கிப் போட்டு உடம்ப தேத்து. இல்லன்னா போற இடத்துல உன் பேரும் என் பேரும்தான் நாறிப் போகும்" என பாக்கியம் அங்கிருந்தபடியே எகத்தாளமாகப் பேச, அதிர்ச்சியில் மறந்து போயிருந்த இந்தத் திருமண விஷயமும் நினைவுக்கு வர தலையே வெடித்து விடும் போல் இருந்தது ராஜத்துக்கு.


குணா திரும்ப வீடு வரும் வரையிலுமே யோசித்தபடி அப்படியே அமர்ந்திருந்தவள், அவன் கை, கால் கழுவி வந்து சாப்பிட அமரவும், மனதிற்குள் பலவித கணக்குகளைப் போட்டபடியே அவனுக்கும் பாக்கியத்துக்கும் உணவைப் பரிமாறினாள்.


திருமண விஷயம் பேசிவிட்டு வந்திருந்த சந்தோஷத்தில் இருந்ததால், அது பற்றி பாக்கியத்துடன் வேறு மேற்கொண்டு பேசும் எண்ணத்தில் இருந்தவன் அன்று நல்ல வேளையாகக் குடிக்காமல் வந்திருந்தான்.


இதுதான் சமயம் என்று ஒரு முடிவுக்கு வந்தவள், தடதடவென்று எழுத்து நடந்தபடி மல்லி, பிரியா இருவரின் கைகளையும் பற்றி இழுத்துப் போய் இரேழியில் இருந்த அறைக்குள் தள்ளிக் கதவை வெளியில் இருந்து பூட்டினாள். சாவியைப் புடவை முந்தானையில் முடிந்து இடுப்பில் சொருகியவள், வீட்டின் நிலைக் கதவை அடைத்துத் தாழ் போட, அவள் செய்கையைப் புரியாமல் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த குணாவிடம் வந்து, அனைத்தையும் சொல்லிவிட்டாள்.


அடுத்து அங்கே என்ன நடந்திருக்கும் என விளக்கமாக சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.


மகளுக்கு விழ வேண்டிய அடி மொத்தத்தையும் தானே வாங்கிக் கொண்டு, ஒரு கோட்டைச் சுவர் போல அந்த அறையின் வாயிலிலேயே அரணாக நின்றாள் ராஜம்.


தன் மொத்தப் பலத்தையும் பிரயோகித்த பிறகும் கூட அவளைத் தாண்டி மகளை நெருங்க முடியவில்லை குணாவால்.


பாக்கியம் ஒரு பக்கம் கத்திக் கூப்பாடு போட, விளையாடச் சென்ற இந்தப் பிள்ளைகள் வேறு வந்து கதவை இடி இடி என்று இடிக்க, நேராகப் போய் கதவைத் திறந்தவன் பிள்ளைகள் உள்ளே நுழையவும் அப்படியே தெருவில் இறங்கி நடந்தான் குணா. அவனுடைய கால்கள் அவனை நேராக மலிவு விலை மதுக் கடைக்கு இழுத்துச் செல்ல, அன்று இரவு முழுவதும் அவன் வீடு திரும்பவில்லை.


விடியற்காலையில் வந்து வாயிற் திண்ணையிலேயே படுத்துவிட, அதுவரையிலும் கூட மகள்கள் இருந்த அறையின் கதவைத் திறக்கவில்லை ராஜம். அடுத்து என்ன ஆகுமோ என அவள் திகிலுடன் இருக்க, அப்படி எதுவும் நடக்கவில்லை,


காரணம், வேறு விதமாக கணக்கை மாற்றிப் போட்டிருந்தான் குணா.


காலை நிதானமாகக் குளித்துச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பியவன் நேராகப் போய் வேலாயுதத்தில் எதிரில்தான் நின்றான், வல்லரசுவுக்கும் மல்லிக்கும் ஏற்பட்டிருக்கும் உறவைச் சொல்லி.


ஆயிரம் இருந்தாலும் பொறுப்பற்ற, திருமண உறவுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவன் என்பதால், தொடக்கத்திலேயே தங்கராசுவுக்கு மகளைக் கொடுக்க அவனுக்கு முழு விருப்பம் இல்லைதான். ஆனாலும், அதனால் தனக்குக் கிடைக்கக் கூடிய லாபத்திற்காக மகளைப் பலிக் கொடுக்கத் துணிந்திருந்தான்.


இப்பொழுது அதைவிட ஒரு இலாபகரமான பேரம் படிவது போல் தோன்ற, இன்னும் துணிந்து இதில் இறங்கி விட்டான். இதற்கு வேலாயுதம் சம்மதித்தாலும் சரி சம்மதிக்காமல் போனாலும் சரி அவனுக்கு இலாபம் மட்டுமே, என்கிற அசட்டுத்தனமான எண்ணம்தான்.


அவன் சொன்னதைக் கேட்டு முதலில் அதிகம் கொந்தளித்தாலும், சட்டெனச் சுதாரித்து சமாதானமாகவே அவனிடம் பேசினார் வேலாயுதம். முதலில் மூத்தவன் திருமணத்தை எப்படியாவது முடித்துவிட்டு, பெங்களூரில் ட்ரைனிங் முடிந்து வல்லரசு வந்தவுடன்,  இது பற்றிப் பேசி நல்ல முடிவை எடுக்கலாம், அதுவரையில் இது குறித்து வெளியில் யாரிடமும் எதுவும் பேச வேண்டாம் என்கிற நிபந்தனையுடன் சுமுகமாகவே பேசி அவனைத் திருப்பி அனுப்பினார்.


அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அவனும் மேற்கொண்டு எதையும் குடையாமல் திரும்பி வந்து விட, ஒரே மாதத்தில் மூத்தவனின் திருமணத்திற்கு நாள் குறித்தார் வேலாயுதம்.


அவர்கள் பக்கத்தில், ஆடி மாதத்தில் திருமணமே நடத்த மாட்டார்கள். ஆனால் அவசரமாக ஆடியில் நாள் குறித்து தங்கராசுவுக்கு தடபுடலாக திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது, அதுவும் குணாவின் ஒன்றுவிட்ட அண்ணன் மகள் அருணாவுடன்.


இவனிடம் பேசிய அதே பேரத்தைதான் சற்று மாற்றிப் போட்டு அங்கேயும் பேசி இருப்பார் வேலாயுதம் என்பது புரிந்தது.


குணா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், பங்காளி காய்ச்சலில், தங்கராசுவுக்கு அருணாதான் பொருத்தம் என எகத்தாளமாக பாக்கியத்திடம் சொல்லி குரூர மகிழ்ச்சி வேறு அடைந்தான்.


குடும்பச் சொத்தைப் பற்றி கொஞ்சம் பயம் வந்தாலும், வல்லரசுவுடன் மகளுக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை நினைத்து தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.


ஆனால், இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாமல், அப்படியே ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாக இந்தத் திருமணம் நடந்தாலும் கூட இவள் வேறு பிள்ளை பெற்றுக் கொள்ளட்டும என ராஜம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தும், மல்லியின் வயிற்றில் இருந்த கருவை கலைக்க அவன் ஒப்புக்கொள்ளவேயில்லை. அவனுகுக் கிடைத்திருக்கும் ஒரே துருப்புசீட்டு இது இல்லையா?


மல்லிக்கும் இது சாதகமாக அமைய, அப்பாவின் பக்கமே நின்றுவிட்டாள்.


எது எப்படியோ வேலாயுதம் பணிந்து விட்டார் என்கிற நினைப்பில் குணா மிகவும் அடக்கி வாசிக்க, ஒரு சிறு எதிர்ப்பு கூட இல்லாமல் குறித்த முகூர்த்தத்தில் வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது… அருணாவுடன் தங்கராசுவுக்கு மட்டுமல்ல, சந்திராவுடன் வல்லரசுவுக்கும்தான்.


0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page