மடல் - 16
(Disclaimer: Sensitive Content மக்களே, இளகிய மனம் படைத்தவர்கள் இனி வரும் பதிவுகளை இரவு நேரத்தில் படிப்பதை தவிர்க்கவும்)
மல்லியின் வீடே சோகத்தில் மூழ்கியிருந்தது. மகள்களின் எதிர்காலத்தை எண்ணிப் பயந்து, நினைத்து நினைத்து நாள் முழுதும் அழுது கொண்டிருந்தாள் ராஜம்.
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல, துக்கம் விசாரிக்காத குறையாக ஊராரெல்லாம் பரிதாபமாகப் பேசிவிட்டுப் போக, "என்னமோ ஊர்ல இல்லாத படிப்பெல்லாம் படிச்சு உன் பொண்ணு கலெக்டர் ஆவற மாதிரி பேசினியே, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம எப்படி செஞ்சு வச்சிருக்கா பாரு. இதைவிட எட்டாவதோட படிப்ப நிறுத்தி, இவள காட்டு வேலைக்கு அனுப்பியிருந்தாலும் பத்து காசு பார்த்து இருக்கலாம்" என பக்கத்து வீட்டு கோகிலாவோ முகத்திற்கு நேராகவே ஏகத்தாளமாகப் பேசினாள்.
பொதுத் தேர்வில் மல்லி ஆங்கில பாடத்தில் ஃபெயிலாகி இருக்க, அவளுடைய தேர்வு முடிவுகள் வந்த அன்றே, "உன்ன எவ்வளவோ நம்பினேன், இப்படி ஏமாத்திட்டியே. நல்லபடியாதான படிச்சிட்டு இருந்த, திடீர்னு உனக்கென்ன கேடுகாலம் வந்துது?" என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதவள், கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து அவளை அடித்து நொறுக்கியிருந்தாள் ராஜம். பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி அவள் கட்டி வைத்திருந்த கனவுக் கோட்டைகள் தரை மட்டமாகத் தகர்ந்துப் போய்விட்டதல்லவா!
அனைத்தையும் வாங்கிக் கொண்டு மரம் போல நின்றவளை அதற்கு மேல் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
கூடவே குணாவும் பாக்கியமும் எவ்வளவு கேவலமாகப் பேச முடியுமோ அவ்வளவு கேவலமாகத் தாயையும் மகளையும் பேசி இருக்க, மீண்டும் ஒருமுறை அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி அவளை மறுபடியும் பத்தாவது பரீட்சை எழுத வைப்பதென்பதெல்லாம் நடக்காத காரியம். அவ்வளவுதான், அத்துடன் படிப்புக்கு மூடுவிழா நடத்தியாயிற்று.
மல்லிக்கு மட்டுமில்லை பிரியாவுக்கும் சேர்த்துத்தான்.
ஏற்கனவே சின்னவளுக்குப் படிப்பு மண்டையில் ஏறாது, ராஜத்தின் நிர்பந்தத்தினால் மட்டுமே பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள்.
பெரியவளுடன் சேர்த்து சின்னவளின் படிப்பையும் நிறுத்தி விடச் சொல்லி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துவிட, இதுதான் சாக்கெஎன்று அவளும் ஒப்புக் கொண்டாள்.
ஆக இதில் முழுமையான தோல்வியுற்றது என்னவோ ராஜம் மட்டுமே.
அவள் பக்க நியாயத்தை நின்று பேசக்கூட நாதியில்லாமல் தவித்துக் கொண்டிருக்க, கோகிலா இப்படிப் பேசவும் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளலாம் எனும் அளவுக்கு ராஜம் உடைந்தே போனாள்.
புத்தி தெரியாத வயதிலிருக்கும் பிள்ளைகளை எண்ணி மட்டுமே தன் உயிரைச் சுமந்தவள் அடுத்து என்ன வருமோ என்கிற பீதியில் இருக்க, அவள் பயந்தது போலவேதான் அடுத்தடுத்த சம்பவங்களும் அரங்கேறின.
***
காலை அவசர அவசரமாக எழுந்து, கிளம்பி பள்ளிக்கூடம் செல்லத் தேவையில்லை. பேருந்து நிறுத்தத்தில் நின்று கூட்டமான பேருந்தில் நெட்டி முட்டி ஏறி அவதியாகப் பயணம் செய்யத் தேவையில்லை. படிப்பு படிப்பு எனப் புத்தகத்தைக் கட்டிக்கொண்டு அழவும் தேவையில்லை. ஒரு விதத்தில் இதுவும் கூட நிம்மதியாகத்தான் இருக்கிறது. சீக்கிரமே வல்லரசுரிடம் பேசித் திருமணத்திற்கான ஏற்பாட்டைச் செய்துவிட வேண்டும் என்பதாக இதைக் கூட இலகுவாகவே எடுத்துக் கொண்டாள் மல்லிகா.
என்ன இவளுக்கான தேர்வு முடிவுகள் வரும் சமயம் பார்த்து அவன் ஊரில் இல்லாமல் போய்விட்டான். அதில்தான் அதிகம் துவண்டு போனாள்.
ஏதோ ஒரு முறை புத்தி தடுமாறி ஒரு தவறு நிகழ்ந்து விட்டது என்று பார்த்தால், அதையே காரணமாக வைத்துக் கொண்டு அதை மீண்டும் மீண்டும் அவளிடம் எதிர்பார்க்கத் தொடங்கி இருந்தான் வல்லரசு.
"கல்யாணம் ஆகாம இதெல்லாம் தப்பு" என்ற பேச்சை அவள் தொடங்கினாலே, "அதுதான் காலம் முழுக்க உன்ன நல்லபடியா வச்சு காப்பாத்தறேன்னு சொல்லி இருக்கேன் இல்ல. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா" என்ற ஒரே வாரத்தையில் அவளுடைய வாயை அடைத்து விடுவான்.
முறையாக எதையும் செய்ய நினைப்பவர்களுக்கு மட்டும்தான் காலம், நேரம், இடம், பொருள், ஏவல் எல்லாம், முறை தவறிப் போகும்போது கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத்தானே தோன்றும்? இப்படியான சந்தர்ப்பங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அல்லது தானாகவே சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு அவளை நன்றாகவே உபயோகப்படுத்திக் கொண்டிருந்தான் வல்லரசு. தொடக்கத்தில் பிடிக்கவில்லை, போகப்போகப் பிடிக்கிற மாதிரியும் இருந்தது பிடிக்காதது போலவும், அதை ஒப்புக்கொள்ள இயலாமல் குழப்பமாகவும் இருந்தது. ஆனாலும் கூட ஏதோ ஒரு விதத்தில் இதெல்லாம் சகஜமாகி, வல்லரசுவின் மேல் உள்ள நம்பிக்கையில், எதார்த்தமாக ஏற்றுக் கொண்டு விட்டாள்.
மாசி மகத் திருவிழா முடிந்த சில தினங்களில், குடித்துவிட்டு வேகமாக வண்டியை ஓட்டியதால் நடந்த விபத்தில் வல்லரசுவின் அண்ணன் தங்கராசு மரணம் வரை சென்று பிழைத்து வந்தான்.
ஆனாலும் கூட வலது கால் எலும்புகள் முறிந்து போய் உள்ளுக்குள்ளே ராடு வைத்து அறுவைச் சிகிச்சை செய்திருந்தார்கள்.
ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் அவனைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்க, கூடவே அவனது தங்கையின் திருமணத்திற்கு வேறு ஏற்பாடு செய்திருக்க, வல்லரசுவைப் பற்றி கவலைப்பட வீட்டில் நாதி இல்லை.
இதையெல்லாம் வேறு அவளிடம் சொல்லிப் புலம்பி அவளுடைய அனுதாபத்தைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் கிட்டிய அவளது அக்கறையையும் அன்பையும் அதிகப்படியான நெருக்கத்தையும் நன்றாகவே அனுபவித்தான்.
அவனுடைய கயமையைச் சற்றும் உணராமல் முழு நம்பிக்கையுடன் அவனுக்கு இணக்கமாகவே நடந்து கொண்டிருந்தாள் மல்லிகா.
படித்த எதுவும் மண்டையில் ஏறினால்தானே பரீட்சையில் நல்ல மதிப்பெண் வாங்க? செய்து கொண்டிருக்கும் இது போன்ற செயல்களால் கண்களில் பதிந்தது கருத்தில் பதியாமலேயே போனது.
அதுவும் ஆங்கிலம் அவளுக்குத் தண்ணீர் காட்டியது. தேறினாலும் தேறலாம் தேராமலும் போகலாம் என்கிற நிலைதான். அவளுக்கே அது புரிந்திருக்க உச்சபட்ச பயத்தில்தான் இருந்தாள். இதெல்லாம் அவனுக்கும் தெரியாமல் இல்லை.
"விடு, நீ படிச்சு பாஸ் ஆனாலும் ஆகாம போனாலும் நான் இருக்கேன் உனக்கு" என்று தைரியம் சொன்னவன், அவனுடைய தங்கையின் திருமணம் முடிந்த கையுடன், "நான் அப்ளை பண்ணி இருந்த வேலைக்கு இன்டர்வியூக்கு வரச் சொல்லி இருக்காங்க, செலக்ட் ஆனா, பெங்களூருக்கு மூணு மாசம் ட்ரைனிங் போகணும், நீ தைரியமா இரு எப்படி இருந்தாலும் நான் திரும்ப வந்து உனக்கு என்ன செய்யணுமோ செய்யறேன்" என்று சொல்லிவிட்டு, ஒரு கட்டத்துக்கு மேல் அவள் அழுகையைக் கூட பொருட்படுத்தாமல் சலிப்புற்றவனாக சென்னைக்குக் கிளம்பிச் சென்றுவிட்டான்.
அவன் அங்கிருந்து கிளம்பிப் போய் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் அவளுடைய பரீட்சை முடிவுகள் வந்தது. அதுவரையிலும் கூட அவளுக்குள் உண்டாகியிருந்த மாற்றத்தை அவள் அறியவில்லை. தேர்வு முடிவு வேறு இப்படி வந்துவிட மற்ற எதுவுமே அவள் நினைவில் இல்லை. எப்பொழுதடா அவன் திரும்பி வருவான் என வல்லரசுவுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள் மல்லிகா.
***
எல்லாம் முடிந்து, எதார்த்தத்தை ஒப்புக்கொண்டு அவர்களது வாழ்க்கை சற்றே இயல்புக்குத் திரும்பியிருக்க, அடுத்து என்ன என்பது புரியாமல் வடிவின் தோட்டத்தில் விவசாயக் கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினர் மல்லியும் பிரியாவும்.
பாக்கியத்தின் நச்சரிப்பின் பேரில் அரசல் புரசலாக, நெருங்கியவர்களிடம் மட்டும் சொல்லி வைத்து மூத்தவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கி இருந்தான் குணா.
இனி இதைத்தவிர வேறு வழி இல்லை என்பதால் எந்த மறுப்பும் சொல்லும் நிலைமையில் ராஜமும் இல்லை. இப்படியாக இரண்டு மாதங்கள் கடந்து போயின.
ஒரு நாள் காலை குணா உரக்கடைக்கு வேலைக்குக் கிளம்பி கொண்டிருந்த சமயம் வேலாயுதத்தில் வீட்டில் வேலை செய்பவன் அவர்கள் வீட்டு வாயிலில் வந்து நின்று, "குணா அண்ணன் இருக்காங்களா?" என்று அவனைக் கேட்டு குரல் கொடுக்க, வெளியில் வந்தான்.
"பெரிய ஐயா ஒரக் கடை சாவிய வாங்கிட்டு வரச் சொன்னாங்க" என்று அவன் சொல்லவும் திக்கென்றானது குணாவுக்கு, "ஏன்? என்ன ஆச்சு?" என்று தன் பதற்றத்தை மறைத்தபடி கேட்க,
"தெரியலண்ணே, சாவியை வாங்கி கடைல வேலை செய்ற அருள் அண்ணன் கிட்ட கொடுக்கச் சொன்னாரு" என்று தகவல் சொன்னவன்,
"உங்கள ஒரு ஒன்பது மணிக்கா வீட்ல வந்து பார்க்கச் சொன்னாரு" என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
ஏற்கனவே நிலப்புலன்கள் எல்லாம் கோர்ட்டு கேசு என்றிருக்க, உருப்படியாக விவசாய வேலை செய்ய முடியவில்லை, இதில் இருக்கும் இந்த உரக்கடை வேலையையும் பிடுங்கிக் கொண்டால் இவர்களுடைய வாழ்வாதாரமே நின்று போகும். அடுத்ததாக என்ன செய்வது என்கிற பயத்துடன் ஒன்பது மணிக்கு முன்பாகவே வேலாயுதத்தின் வீட்டிற்கு வந்து அவருக்காக காத்து நின்றான் குணா.
அவன் வந்திருக்கும் தகவல் உள்ளே சொல்லப்பட்டிருந்தாலும், சாவகாசமாக தன் வேலையெல்லாம் முடித்துக் கொண்டு ஒன்பதரை போல அவனைப் பேச அழைத்தர்,.
அவருக்குச் சமமாக உட்கார்ந்து பெசுவதென்பதெல்லாம் என்றுமே வழக்கத்தில் இல்லை. எப்பொழுதும்போல அன்றும் அவனை நிற்க வைத்தே, "பெரிய பொண்ணு ஃபெயில் ஆயிடுச்சாமே கேள்விப்பட்டேன். நம்ம காட்டுலதான் வேலை செய்யுது போலிருக்கு" என்று கேட்க,
'நம்ம வேலைய பத்தி கேட்க வந்தா, இவர் என்ன இப்படி சம்பந்தமே இல்லாம பேசிட்டு இருக்காரு' என்று குழம்பிப்போனவனாக, "ஆமாங்க அத்தான், நல்லாதான் படிச்சிட்டு இருந்துது, ஏனோ தெரியல, இங்கிலீசு பாடத்துல ஃபெயில் ஆயிடுச்சு" என்று போலி வருத்தத்துடன் பதில் சொன்னான்.
"எல்லாமே நல்லதுக்குதான்னு வச்சுக்கோ" என்றவர், "ஆமாம், அவளுக்கு அசல்ல போயி மாப்பிள்ளை பாக்கறியாமே, கேள்விப்பட்டேன்!"என்று கேள்வியாக நிறுத்த,
"என்னத்தான் செய்யறது, சொந்தத்துல தோதா பசங்க இல்லையே" என்றான் உண்மையான வருத்தத்துடன்.
"நீ ஏன் அப்படி நினைக்கிற, நம்ம வீட்டுல பிள்ளை இல்லையா என்ன?" என்று வேலாயுதம் கேட்டதும் அவனது காதை அவனாலேயே நம்ப முடியவில்லை.
விபத்தில் அடிப்பட்டு குற்றுயிரும் கொலையுயிருமாகக் கிடந்து, பிழைத்து வந்து இன்னும் சரியாக நடக்க கூட முடியாத நிலையில் இருக்கும் தங்கராசுவுக்குதான் இவ்வளவு நயிச்சியமாகக் கேட்கிறார் என்கிற எண்ணமே அவன் மண்டைக்குள் உரைக்கவில்லை.
வல்லரசுவை நினைத்து மனதிற்குள் மகிழ்ச்சிப் பொங்கிப் பிரவாகித்தது. ஆனாலும் அதை மறைத்தபடி, "ஐயோ, அத எப்படி அத்தான் நான் நினைக்க முடியும், மொடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படலாமா?" என்று இயல்பாக அவன் சொன்ன பழமொழி அவருக்கு சுருக்கென்று குத்த,
"அது என்ன மொடவன் கிடவன்னு பேசிகிட்டு" எனச் சுள்ளென எரிந்து விழுந்தவர், சட்டெனத் தன் பாவனையை மாற்றிக்கொண்டு, "பாப்பாவுக்கு நல்ல இடமா பாத்து முடிச்சுட்டேன், சின்னவனுக்கு தங்கச்சி மகளையே கட்டலாம்னு இருக்கேன். மூத்தவனுக்குதான் இன்னும் ஒண்ணும் சரியா அமையல. ஏதோ வயசு கோளாறு அப்படி இப்படி கிடக்கறான். நம்ம கண்ணு பார்க்க வளர்ந்த பொண்ணா பார்த்து கட்டி வெச்சா ஒழுங்கா இருப்பான். எனக்கு சட்டுனு உன் பொண்ணு நெனப்புதான் வந்தது" என்று அதையும் இதையும் சொல்லி அவர் விஷயத்திற்கு வர, சப்பென்றாகிப்போனது குணாவுக்கு.
"அது எப்படி அத்தான் முடியும், தம்பிக்குதான் உடம்புக்கு முடியாம இருக்கே" என்று அவன் நல்ல விதமாகவே தன் மறுப்பை வெளிப்படுத்த,
"இப்ப இப்படி இருந்தா, எப்பவுமே இப்படியே இருந்துருவானா. இன்னும் ரெண்டொரு மாசத்துல பழைய மாதிரி எழுந்து நடமாட ஆரம்பிச்சிடுவான். இதையெல்லாம்மாடா குறையா நினைப்ப" என அவனை விட அழகாக வார்த்தைகளைப் புனைந்தவர், "ஒருவேளை நீ தங்கராசுக்குப் பொண்ணக் கொடுத்து எனக்கு சம்மந்தியா ஆகிட்டன்னு வச்சுக்கோ, உங்க பெரியப்பா குடும்பத்த கூப்ட்டு வச்சு என் பாணியில பஞ்சாயத்து செஞ்சு, இந்தச் சொத்துப் பிரச்சனை எல்லாம் பைசல் பண்ணி, ஞாயமா உனக்கு சேர வேண்டியதை வாங்கிக் கொடுக்கிறேன், கூடவே அந்த உரக்கடைய உன் பேர்லயே மாத்திக் கொடுத்துடறேன். உனக்கு இஷ்டம் இல்லன்னா இப்பவே சொல்லிடு, அதனால பரவாயில்ல. இதுக்காக எல்லாம் உன்னை வேலைல இருந்து தூக்க மாட்டேன்" எனப் புத்திசாலித்தனமாக தன் பேரத்தைத் தொடங்க,
மூளை முழுவதும் குழப்பம்தான் குணாவுக்கு. உடனே எந்த பதிலும் சொல்ல இயலாமல் தடுமாற்றம் வந்து சேர, "வீட்ல போய் அம்மாகிட்ட ஒரு வார்த்த பேசிட்டு பதில் சொல்றேன் அத்தான். சாயங்காலம் வரைக்கும் அவகாசம் கொடுங்க" என்று அதையும் கோரிக்கையாகவே கேட்டுவிட்டு அரைகுறை மனதுடன் அவர் தலையசைக்கவும், விட்டால் போதும் என்று வீடு வந்து சேர்ந்தான்.
சற்று முன் எங்கே அந்த வேலை போய் விடுமோ என்ற பதற்றத்தில் இருந்தவனுக்கு, இப்பொழுது அந்தக் கடையே தனக்குச் சொந்தமாகும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்க, மல்லியை தங்கராசுவுக்குக் கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கியிருந்தான்.
ராஜத்துக்கு தெரியாமல் அம்மாவிடம் இது சம்பந்தமாகப் பேச எண்ணி வீட்டுக்குள் நுழைய, அதற்கேற்றார் போல புழக்கடையில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
இவன் வீட்டுக்குள் வந்தது கூட தெரியாமல் அவள் வேலை செய்து கொண்டிருக்க, முதல் காரியமாக வேலாயுதம் சொன்னதை அம்மாவிடம் ஒப்பித்து முடித்தான் குணா.
"இது பொட்ட புள்ளையா பொறந்ததுக்கு நமக்கு இந்த நல்லதாவது நடக்குதே. நம்ம சொத்தும் கைக்கு வந்து, அந்த உரக்கடையும் உனக்கு சொந்தமானா, அடுத்ததா இருக்கிற பொட்ட புள்ளையும் நல்லவிதமா கட்டிக் கொடுக்கலாம். ராசா மாதிரி இருக்கிற மூணு ஆம்பள புள்ளைங்களுக்கு நல்லபடியா நாலு காசு சேர்த்து வைக்கலாம். நீ சரின்னு சொல்லிட்டு வந்திருக்க வேண்டியதுதானே. எங்கிட்ட வந்து கேட்டா மட்டும் நான் என்ன வேணாம்னா சொல்லப் போறேன்" என்று பாக்கியம் மகனுடைய ஆசையை நன்றாக கிளறி விட, மகளை தங்கராசுக்கு கொடுப்பது என்று முடிவே செய்து விட்டான் குணா.
***
விவசாய வேலைக்குச் சென்றிருந்த பெண்கள் இருவரும் மாலை சூரியன் மறையும் நேரம் வீடு திரும்ப, வழக்கத்திற்கு மாறாக, ஆங்காங்கே போட்டது போட்டபடி கிடக்க, வீடே அமைதியைப் போர்த்தி இருந்தது.
இவர்கள் வந்தது தெரிந்தும் கூட,கயிற்றுக் கட்டிலில் அசைவின்றி கிழவி கண் மூடி படுத்திருக்க, விபரீதமாக ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் மல்லிக்கு புரிந்தது.
காரணம், ஏதோ பெரிய பிரச்சனை, சண்டை என்றால் மட்டுமே பாக்கியம் இப்படி இருப்பார்.
அம்மாவைத் தேடி மல்லி சமையல் கட்டுக்குள் போக, அவள் அங்கே இல்லை. அதைவிட, காலை சமையல் செய்த பாத்திரம் எல்லாம் திறந்து போட்டபடி அலங்கோலமாக கிடக்க, அதன் பிறகு ஏதும் வேலை நடந்ததற்கான சுவடே இல்லை. மாலைத் தேனீர் கூட தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.
வேதனையுடன் ராஜத்தைத் தேடிப் புழக்கடைக்குச் சென்றாள். சுவரில் மோதி நெற்றிப் புடைத்திருக்க, கைகள் கழுத்து என மெல்லிய கீறலாக இரத்தம் கசிய, கன்னத்தில் பதிந்த அழுத்தமான கைத் தடத்துடன், அணிந்திருக்கும் உடையெல்லாம் கசங்கி, நிலை குத்திய பார்வையுடன், அங்கே கிணற்றங்கரை மேடைமேல் ராஜம் உட்கார்ந்திருந்த கோலத்தைப் பார்த்து அடி வயிறு கலங்கியது.
ஏதோ பெரிய தகராறு நடந்திருக்க, குணா தன் ஆதிக்கத்தை முழுமையாக செலுத்தி வெறிபிடித்து ஆடி இருக்கிறான் என்பது புரிந்தது.
பின்தொடர்ந்து வந்த பிரியா, கண்களில் மிரட்சியுடன் இருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்க்க, "நீ முகம் கை, கால் கழுவிட்டுப் போய் சாமி விளக்கேத்திட்டு டீ கொதிக்க வை, நான் வந்து இராத்திரிக்குச் சமையல் செய்யறேன்" என்று அவளை அனுப்பி வைத்தாள்.
அம்மாவை நெருங்கி இதமாக அவளுடைய தோளில் கையை வைக்க, அவளுடைய கண்களில் இருந்து கரகரவெனக் கண்ணீர் வடிந்தது.
விசும்பியபடி அவளுடைய கையைத் தன் கைக்குள் வைத்துப் பொத்திக் கொண்டவள், "நல்லா படி படின்னு அவ்வளவு தூரம் படிச்சு படிச்சுச் சொன்னேனே, இப்படி எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு நிக்கிறியே" என்று அவள் விசும்ப, இதற்கு என்ன பதில் சொல்வது என்பது கூட புரியாமல் அவள் ஸ்தம்பித்து நிற்கவும், "உன்னோட பொறுப்பில்லாத தனத்துக்கு, இந்த தங்கராசு மாதிரி பொறுக்கிதான் உனக்கு புருஷனா கிடைப்பான். சீக்கிரமே அவங்கூட கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டு வந்து நிக்கப் போறான் உன் அப்பன். கழுத்த நீட்ட தயாரா இரு" என்ன முழு ஆங்காரத்துடன் அவள் கத்தவும் தலையில் இடி இறங்கியது போல் ஆனது மல்லிகாவுக்கு.
இந்தத் தகவல் வல்லரசுவுக்குத் தெரிந்திருக்குமா? இல்லையென்றால் இதை அவனுக்கு எப்படி தெரியப்படுத்துவது என்பது எதுவும் புரியாமல், உலகமே தலைகீழாகச் சுழல்வது போல் தோன்ற, அனிச்சையாக அவளது கை தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டது. காரணம் அங்கே ஒரு உயிர் உருவாகி முழுதாக மூன்று மாதங்கள் முடிந்திருந்தன.
இதைச் சொல்லக் கூட அவனைத் தொடர்புகொள்ள இயலவில்லை, ‘எப்படியும் அவன் தன்னைக் கைவிடவே மாட்டான்’ என முழுமையாக அந்த வல்லரசுவை நம்பிக் கொண்டிருக்கும் இந்த அறிவிலியால்!
pity of malli...she has no doubts on that bad guy
Malli has to take next step.he won’t give any solution for this.wow awesome