மடல் - 12
தூரத்து சொந்தம் எனச் சொல்லிகொள்ளும் அளவிலிருக்கும் குணாவின் ஒன்று விட்ட பெரியப்பாவின் மகள்தான் வடிவாம்பாள். செல்வ நிலையில் இவர்களை விட பல படி மேலே இருப்பவர் அவர். அவனுடைய சொந்த பெரியப்பாவுக்கும் அப்பாவுக்கும் பிரிக்கப்படாத சொத்தின் காரணமாகத் தொடக்கத்தில் இருந்தே பிரச்சனைகள் இருந்து வந்தது. அந்த சமயத்தில் இவர்களுடன் அதிகம் இணக்கமாக இருந்தது வடிவின் குடும்பம்தான். ஒரே ஊரிலேயே அதுவும் சொந்தத்துக்குள்ளேயே அவளைத் திருமணம் செய்து கொடுத்திருக்க, அவளுடைய புகுந்த வீட்டிற்குள்ளும் சகஜமான போக்குவரத்து இவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
இருந்தாலும் கூட மதிப்பு மரியாதை என்பது கொஞ்சம் மட்டுதான். அதை இவர்களும் உணராமல் இல்லை. பண உதவிக்கு அங்கே போய் நிற்கும் சூழல் இருக்க, அவர்களுக்கும் இவர்களுடைய தேவை இருக்க இதையெல்லாம் பெரிது படுத்திப் பார்ப்பதில்லை.
அவர்கள் வீட்டில் ஏதும் பெரிய விருந்து என்றால் வடிவின் ஒத்தாசைக்கு ராஜத்தை கூப்பிடுவாள். வடிவின் அப்பா வீட்டிற்கு பாக்கியம் போய் வேலை செய்து இப்படி ஒரு பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதுவும் 'வந்து செய்ய முடியுமா?' என்பது போன்ற கோரிக்கைகள் இருக்காது, 'வந்துவிடு' என்கிற கட்டளை மட்டுமே.
அப்படி ராஜம் அங்கே வேலைக்குச் செல்லும் சமயங்களில், சிறிய பெண்கள்தானே என்கிற சலுகையில் மல்லியும் பிரியாவும் கூடவே செல்வார்கள்.
அங்கே அவர்களுடைய மகள் வனிதாவுடன் சேர்ந்து விளையாடவும் செய்வார்கள். வெளிப்படையாகப் பெரிய பாகுபாடுகளை அந்த வயதில் இவள் உணர்ந்ததில்லை. அவர்கள் கொடுக்கும் பழைய துணிகளைப் போட்டுக் கொள்வதிலும் பெரிதாக வருந்தியது இல்லை.
உள்ளூரிலேயே படித்துக் கொண்டிருந்ததால் வல்லரசுவை இவளுக்கு நன்றாகவே தெரியும்தான்.
அவன் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு, சென்னையில் தொழில் செய்து கொண்டிருக்கும் வடிவின் பெரிய அண்ணன் வீட்டில் தங்க வைத்து மேற்கொண்டு படிக்க வைத்தனர்.
அதன் பிறகு கல்லூரி படிப்பு, பட்ட மேற்படிப்பு என அவன் அங்கேயே தங்கிப படிப்பைத் தொடர, கடந்த ஏழு ஆண்டுகளாக விடுமுறைக்கு அவன் ஊருக்கு வரும் சமயங்களில் மட்டும் எப்பொழுதாவது அவனைப் பார்க்க நேரிடும்.
அப்பொழுதெல்லாம் கூட மனதிற்குள் பெரியதாக எதுவும் தோன்றியதில்லை. ஆனால் ஓராண்டுக்கு முன் கடைசியாக அவன் இங்கே வந்திருந்த பொழுது தோட்டத்தில் பூப்பறிக்கச் சென்றிருந்த சமயங்களில் அவன் தினமும் அங்கே வந்து போக இருக்க, அந்த வயதுக்கே உரிய ஹார்மோன்களின் சதிராட்டத்தால், அவனுடைய உயரமும் கம்பீரமும் மல்லியைச் சுண்டி இழுத்தது.
அவன் மீதிருந்த பிடித்தத்தால் அவளுக்குப் பிடித்த சினிமா ஹீரோக்களுடன் அவனை ஒப்பிட்டுப் பார்த்து பரவசப்பட்டுக் கொள்வாள். உண்மையான சினிமா நாயகர்களைப் போலவே இவனும் தனக்கு எட்டாக்கனிதான் என்பதை நினைத்து நினைத்து மருகினாலும் யதார்த்தத்தை உணர்ந்தாள்தான்.
ஆனாலும், ஏதோ ஒரு புள்ளியில் அவன் மீது உண்டான ஈர்ப்பு அவளை விட்டு அகலவே இல்லை. அவன் படிப்பை முடித்துவிட்டு இங்கேயே வந்து விட்ட பிறகு அவளுடைய அந்த நிராசை பூதாகரமாக அவளை வாட்டி வதைக்கத் தொடங்கி விட்டது.
அன்று அவனுடைய வீட்டின் முதன் முதலில் அவனைப் பார்த்தபோது ஆர்வமாக அவன் இவளைப் பார்த்த பார்வையிலும் சரி அதன்பின் அவனாகவே வந்து அவளிடம் பேசத் தொடங்கிய பின்பும் சரி, 'இவனா நம்மிடம் வந்து இப்படி முகம் கொடுத்துப் பேசுகிறான்?' என்கிற வியப்பு மல்லிகை விட்டு விலகவே இல்லை.
அதுவும் அவன் மேலும் மேலும் அவளுடன் நெருங்க அது அவளுக்கு அப்படி ஒரு கர்வத்தையே கொடுத்தது என்று கூட சொல்லலாம். அதை வெளியில் யாரிடமும் சொல்லி மகிழ கூட முடியாமல் அதுவே அவளுடைய மனதைக் குடைந்து கொண்டுதான் இருக்கிறது.
ஏதோ ஒரு நட்பில் பழகுகிறான், மேற்கொண்டு இவனிடமிருந்து எதையும் எதிர்பார்க்க இயலாது என்பது அவன் இவளிடம் பழகும் விதத்திலேயே புரிந்துவிட, அது ஒரு ஆற்றாமையாக மாறி மிகப் பெரிய மன அழுத்தத்தை அவளுக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தது.
அதுவும் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்த பின்பு அவனை இதுபோல வந்து பார்க்கக் கூட பயமாக இருந்தது. பாட்டி பேசிய பேச்சு மனதிற்குள் பெரும் குற்ற உணர்ச்சியை விதைத்திருக்க, தான் செய்து கொண்டிருக்கும் தவறின் தீவிரம் மண்டைக்குள் நன்றாகவே உரைத்தது. இதற்கு மேல் இதைத் தொடர்வது ஆபத்து என்கிற அபாய மணி மனதிற்குள் ஓங்கி ஒலிக்க, இத்துடன் இதை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற மனநிலையுடன்தான் பெரும் பாரத்தைச் சுமந்து கொண்டு இன்று இவள் இங்கே வந்ததே.
ஆனால் காணாமல் போன கொலுசைக் கண்களில் காண்பித்து, அவன் அவளது வயிற்றில் பாலை வார்த்துவிட, அப்படி ஒரு ஆசுவாசமும் நிம்மதியும் வந்து ஒட்டிக்கொண்டது.
'இந்த அல்பமான கொலுசுக்காகதான என்ன இவ்வளவு பேச்சு பேசின, எதையுமே யோசிக்காம இந்த அம்மாவும் என்ன அடிச்சுட்டா இல்ல, இதோ இந்தக் கொலுசு பத்திரமாதான் இருக்கு பாரு, இந்தா இத உன் தலையிலையே மாட்டிக்க' என அதைக் கொண்டு போய் அவளுடைய பாட்டியின் முகத்தில் விசிறி அடிக்க வேண்டும் என்கிற வெறி தோன்ற என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்கிற நினைப்பே இல்லாமல் ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.
என்ன ஏது என்று புரியாமல் அவன் தடுமாறி நிற்க, அந்தக் கொலுசைத் தன் கைகளில் வாங்கியவள், "தேங்க்ஸ் அரசு, ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்" என அவள் கண்ணீர் மல்கச் சொல்லவும், அதுவும் அடிவாங்கி, பட்டினி கிடந்து சோர்வாக இருந்தவள் சற்றுத் தள்ளாடியபடி இருக்க, கைத் தாங்கலாக அவளை அழைத்து வந்து அவர்கள் வழக்கமாக உட்காரும் இடத்தில் அமர வைத்துத் தானும் பக்கத்தில் அமர்ந்தான்.
அந்தக் கொலுசைச் சுருட்டி உள்ளங்கையில் வைத்தபடி அவள் அதையே வெறித்துக் கொண்டிருக்க, "என்ன நடந்துச்சு மல்லி? எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்க?" என்று பதற்றத்துடன் அவன் கேட்க,
முந்தைய தினம் நடந்ததை சொன்னவள், "பாட்டி ரொம்ப ரொம்ப அசிங்கமா பேசிடிச்சு அரசு, என்னால தாங்கிக்கவே முடியல. அம்மா அடிச்ச அடியைக் கூட பொறுத்துக்கிட்டேன். ஆனா பாட்டிப் பேசின பேச்ச பொறுத்துக்கவே முடியல" என்று சொல்லி முகத்தை மூடிக்கொண்டு அழ, தோளுடன் அவளை வளைத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான். திடுக்கிட்டுத் திகைத்தாலும் அந்த நேரம் அவளுக்கு அது தேவையாக இருக்க, அப்படியே அமைதியாக இருந்துவிட்டாள்.
அவளுடைய அம்மா அடித்த அடியினால் உண்டான தழும்பு அவள் கைகளில் நன்றாகத் தடித்துச் சிவந்து தெரிய, கண்களில் கனலைத் தேக்கி அதையே பார்த்திருந்தான்.
அவள் மீது ஒரு சிறு கீறல் விழுந்தாலும் கூட அதை அவனால் தாங்க முடியாது என்பதே அப்பொழுதுதான் அவனுக்கே புரிந்தது.
எதையும் பேசும் மனநிலையில் இருவருமே இல்லாமல் போக இவர்களுக்கான வழக்கமான இந்தப் பொழுது இப்படியே கழிய, கையைத் திருப்பிக் கடிகாரத்தைப் பார்த்தவன், "மல்லி, டைம் ஆயிடுச்சு. இப்படியே உக்காந்துட்டு இருந்தா ஸ்கூலுக்கு லேட் ஆயிடும், போய் முகத்தைக் கழுவிட்டுக் கிளம்பிப் போ. மீதிய நாளைக்குப் பேசிக்கலாம்" இன்று இதமாக அவளிடம் சொல்லி அவளை முகம் கழுவ வைத்து அங்கிருந்து அனுப்பி வைத்தான் வல்லரசு.
அவனுடைய அந்த அணைப்பும் அவன் கொடுத்த ஆதரவும் ஒருவிதமான பாதுகாப்பு உணர்வை அவளுக்குள் கடத்த, நன்றாகவே தெளிந்திருந்தாள் மல்லிகா. அதன் பின்னான அன்றைய நாள் அவளுக்கு இலகுவாகவே சென்றது. என்ன, 'இதை இன்றுடன் நிறுத்திக் கொள்ளலாம்' என்று அவள் நினைத்த நினைப்பு அவளுக்குச் சுத்தமாக மறந்தே போனது.
***
அடுத்து வந்த ஓரிரு நாட்களும் கூட அவன் பெரிதாக அவளிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஏனோ அவனிடம் கதை கேட்கும் ஆர்வம் அவளுக்குக் குறைந்து போயிருந்தது. அவளுடைய கவனச் சிதறல் அவனுக்குள் சிறு எரிச்சலை கிளப்பி விட்டிருந்தது என்னவோ உண்மை.
"உனக்கு நான் கத சொல்றது போர் அடிச்சு போயிருந்தா, இனிமேல் இங்க வராத. எப்படியும் உனக்கு ரிவிஷன் எக்ஸாம் எல்லாம் இருக்கு. அதுல கான்சன்ட்ரேட் பண்ணு" என்று கடுமையாக அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மறுப்பாக அவள் தலையசைக்க,
அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், "எனக்குமே இந்த ஊர்ல ரொம்ப போர் அடிக்குது. நான் கொஞ்ச நாள் மெட்ராஸ் வரைக்கும் போயிட்டு வரலாம்னு இருக்கேன்" என சொல்லிக்கொண்டே போனவன், ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, "அங்க ஜாபுக்கு அப்ளை பண்ணலாம்னு இருக்கேன். இதே ஊர்ல இருந்தா என்னோட மூளையே துரு பிடிச்சு போயிடும்" என்றான் மரத்த தொனியில்.
'ஏன் போற, இங்கயே இருந்துடு' என்று அவளால் அவனிடம் உரிமையுடன் சொல்ல இயலாது. 'எதற்காக?' என்ற கேள்வி எழுந்தால் 'எனக்காக!' என்ற பதிலை அவளால் கூற முடியாது. அவனே மனது வைத்தால் ஒழிய இதெல்லாம் நிதர்சனத்திற்கு ஒத்து வராது. அதுவும் அவளை வேறு மாதிரியான ஒரு பார்வை கூட அவன் இதுவரை பார்க்காமல் இருக்க, மனதிற்குள் எந்த எண்ணமும் இல்லை என்பது அப்பட்டமாகப் புரிய, அமைதியாக இதை ஏற்றுக் கொள்வதை தவிர அவளுக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
ஆமோதிப்பாகத் தலையசைத்தாள். ஆனாலும் அதைக் கேட்டதும் அவளுக்குள் உண்டான அதிர்ச்சி அப்பட்டமாக அவளுடைய முகத்தில் வெளிப்பட, "இதனால என்ன இப்ப, ஜஸ்ட் இதெல்லாம் ஒரு ரயில் சினேகம் மாதிரிதான. ஈஸியா எடுத்துக்க ட்ரை பண்ணு மல்லி. நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கு. இப்போதைக்கு அதுதான் தேவை" என்றான் அவளைத் தேற்றுவது போல.
இன்னும் ஓரிரு தினங்கள் மட்டுமே பள்ளி செல்ல வேண்டி இருக்கும், அதன் பிறகு பொங்கல் பண்டிகை வருகிறது. அதற்கான வேலைகள் அவளை இழுத்துக் கொள்ளும். பண்டிகை முடிந்து அவள் மீண்டும் பள்ளிச் செல்லும் போது ஓரளவுக்கு இயல்புக்குத் திரும்பிவிட முடியும் எனத் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டு மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றாள் மல்லிகா.
மாலை அந்தக் கொலுசைக் கொண்டு போய் பாக்கியத்தின் முன்னால் வைக்க, “கிடைச்சிடுச்சா, உன் நேரம் நல்லா இருக்குப் போலிக்கு. இன்னொரு கொலுசையும் கழட்டிப் பத்திரமா வெச்சிட்டு அடுத்த வேலைய பாரு, போ” என்று அவர் சாதரணமாகச் சொல்லிவிட, மனதில் நினைத்தபடி ஒரு வார்த்தை கூட அவரை எதிர்த்துப் பேச அவளுக்கு நா எழவில்லை. காரணம் பயம் மட்டுமே!
***
தொடர்ந்து வந்த நாட்களில் வீட்டைச் சுத்தம் செய்வது, மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டுவது எனப் பொங்கல் பண்டிகை சார்ந்த வேலைகள் அவளைத் தன்னுள் பிடித்து வைத்துக் கொள்ள பெரிதாக எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை. இடையில் ஒரு நாள் டவுனுக்குப் போய் பண்டிகைக்கான துணிமணிகளை எடுத்து வந்தார்கள். கடைசி நேரத்தில் அவற்றை தைக்கக் கொடுத்து வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.
அம்மா பயந்தது போலவே, தாய்மாமன்கள் பெண்கள் இருவருக்குமாகப் போட்ட தோடு ஜிமிக்கிகள்தான் இப்படி துணிமணிகளாக மாறி இருந்தது. இதைத் தவிர மற்ற பண்டிகைச் செலவுகளும் இருந்ததே. சற்றே சுணங்கி இருந்தாலும் வழக்கமான உற்சாகத்துடன் பொங்கல் பண்டிகையும் அதை ஒட்டிய கோவில் திருவிழாவும் நடந்து முடிந்திருக்க, மறுபடியும் பள்ளிச் செல்லும் தினத்தன்று அவளுடைய மனம் சூனியமாகிப் போனது.
ஏக்கம் மிஞ்சிப் போய் வழக்கமாக அவர்கள் அமர்ந்து பேசும் இடத்திற்கு வந்து சில நிமிடங்கள் அமர்ந்திருந்துவிட்டுத்தான் பள்ளிக்குச் சென்றாள்.
இதே போன்றே அடுத்த சில தினங்களும் கழிய, காலை பள்ளிக்குக் கிளம்பி வழக்கம் போல குளத்தருகில் வந்தவள் அதன்படிக்கட்டுகளில் போய் அமர்ந்து வட்ட வட்ட இலைகளுக்கு நடுவில் மலர்ந்திருந்த தாமரை மலர்களையே வெறித்திருந்தாள்.
யாரோ நடந்து வரும் அரவம் கேட்டு அவள் பதைத்துத் திரும்புவதற்குள்
அவளது முகத்தைச் சுற்றி விழுந்த துணி ஒன்று கண்களை இறுகக் கட்டியது. அவளைச் சுற்றி கமழ்ந்த வாசனைத் திரவியத்தின் மணம் அது யார் என்பதைச் சொல்லாமல் சொல்ல, பரவசப்பட்டுப் போனாள்.
இதையெல்லாம் உணர்வதற்கு முன்பாகவே பயத்தில் அவள் உடல் நடுங்கிப் போயிருக்க, "அரசு" என வார்த்தைகள் தந்தி அடிக்க அவள் அவனை அழைத்த அழைப்பு அவளது பிரிவுத் துயரை அவனுக்குப் படம் பிடித்துக் காட்டியது.
சட்டென்று அவளது கண்களில் கட்டியிருந்த துணியை அவிழ்த்தவன் "நானேதான்" எனக் கண் சிமிட்டிய படி அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்து, "நீ என்ன ரொம்ப மிஸ் பண்றதான, அதனாலதான் நான் இல்லன்னு தெரிஞ்சும் இங்க வந்து உட்கார்ந்திருக்க" என அவள் கண்களில் எதையோ தேடியபடி அவன் கேள்வி கேட்க, என்ன சொல்வது எனப் புரியாமல் ‘இல்லை’ என தலையை ஆட்டியவளின் வழிகளில் கண்ணீர் திரண்டது.
"அதுதான் உண்மன்னா அப்படியே இருந்துட்டு போகட்டும், விடு" என கடுப்புடன் சொன்னவன், "நீ எப்படி இருக்க, நல்லா இருக்கியா? பொங்கல் பண்டிகை எல்லாம் எப்படி போச்சு?" என இயல்பாக அவளது நலம் விசாரிக்க,
"நல்லா இருக்கேன், பண்டிகை எல்லாம் நல்லபடியா போச்சு" என்றாள் தன்னை இயல்பாகக் காண்பிக்க முயற்சி செய்த படி.
அவளைப் பார்த்த நாள் தொட்டு அவள் காதுகளில் நடனமாடி கொண்டிருந்த ஜிமிக்கி இல்லாமல் சிவப்பு நிற ஒற்றை மணியால் ஆன ஒரு தோடை அவள் அணிந்திருக்க, அவனுடைய நெற்றி சுருங்கியது. அதைப் பற்றி எல்லாம் கேள்வி கேட்க அவனுக்கு விருப்பமில்லை, விட்டுவிட்டான்.
"வேலைக்கு அப்ளை பண்ண போறேன்னு சொன்னீங்களே செஞ்சிட்டிங்களா, இன்டர்வியூ எல்லாம் முடிஞ்சிடிச்சா?" எனக் கேட்டாள் குரலில் சுரத்தே இல்லாமல்.
"அப்ளை பண்ணிட்டேன், இன்டர்வியூக்கு இனிமேல்தான் கூப்பிடுவாங்க. ஆல்மோஸ்ட்.. வேலை கிடைச்சா மாதிரிதான்" என்று அவன் சொன்னதும் அவளுடைய முகம் கூம்பித்தான் போனது. அதை மறைத்து பாசாங்கெல்லாம் செய்ய அவளுக்கு கொஞ்சம் கூட வரவில்லை.
"ஏன் நான் வேலைக்குப் போறது உனக்குப் பிடிக்கலையா? முகம் இப்படி போகுது?" என அவளைப் போலவே தன் முகத்தைச் சுளித்துக் காண்பித்தான்.
"சச்ச. அப்படி எல்லாம் எதுவும் இல்ல. அப்படி நினைக்கிறதும் தப்பு. மர்மதேசம் முடியற வரைக்கும் உங்களால கதை சொல்ல முடியுமான்னு யோசிச்சேன், அவ்வளவுதான்" என்று பூசிமொழுகினாள்.
"சாரி மல்லி, இங்கிருந்து கிளம்பிப் போன பிறகு எனக்கு அதெல்லாம் பார்க்க டைம் இல்ல. வேலைக்கு அப்ளை பண்ணிட்டு ஃபிரண்ட்ஸோட கோவா டூர் போயிட்டு வந்தேன்" என்றவன்,
" ஹாங்… சொல்ல மறந்துட்டேன் பாரு, மின்சார கனவுன்னு ஒரு படம் ரிலீஸ் ஆயிருக்குத் தெரியுமா?" என்று கேட்க,
"ஆமா, பொங்கல் ரிலீஸு… பாட்டெல்லாம் பட்டைய கிளப்புதே" என மற்ற அனைத்தையும் மறந்து குதூகளித்தாள் மல்லி.
"அந்தப் படத்த நான் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாத்துட்டேன் தெரியுமா?" எனக் கேட்டான் பெருமையாக.
"நிஜமாவா! ரிலீஸ் ஆன மொத நாளே பாத்துட்டீங்களா!" என அவள் அதீதமாக வியக்க,
"ஆமாம், மவுண்ட் ரோட்ல தேவின்னு ஒரு தியேட்டர் இருக்கு, அதுல ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து அட்வான்ஸ் புக்கிங் பண்ணி வெச்சிருந்தாங்க" என்று சொல்ல,
"அட்வான்ஸ் புக்கிங்கா, அப்படின்னா என்ன?" என்று கேட்டவளுக்கு அதைப் பற்றி ஒரு சிறு வகுப்பெடுத்தவன்,
"அந்தப் படத்தின் கதையைச் சொல்லத் தொடங்கினான்" வழக்கம்போல மெய் மறந்து அவள் அதைக் கேட்கத் தொடங்க, திடீரென்று சொல்வதை நிறுத்தியவனின் முகம் தீவிரமாக மாறிப்போனது.
ஏன் என்று புரியாமல் "என்ன ஆச்சு? ஏன் திடீர்னு சொல்றத நிறுத்திட்டீங்க?" என்று அவள் விழிக்க,
"அந்த வெண்ணிலவே வெண்ணிலவே சாங் முடியற சீன், ரொம்ப டச்சிங்கா இருக்கும் மல்லி… அத பார்க்கும்போது என்னையும் மறந்து எனக்கு உன் ஞாபகம்தான் வந்துது. இத, இந்த நேரத்துல என்னால உன்கிட்ட சொல்லாம இருக்க முடியல, ஐ அம் வெரி சாரி, இனிமேல் நீ என்ன தேடி வராத. ஏன்னா, என்னால இனிமேல் உன்கிட்ட இந்த மாதிரி சாதாரணமா பழக முடியாது. என்னைக்கு நீயா வந்து என்ன கட்டிப் பிடிச்சியோ அன்னைக்கே என் புத்தி கெட்டுப் போச்சு. உன்ன வேற மாதிரி பார்க்க தோனுது. காலம் முழுமைக்கும் உன்னை என் கூடவே வெச்சு, ராணி மாதிரி பார்த்துக்கணும்னு தோனுது! அதுக்காக எந்த எல்லை வரைக்கும் போகலாம்னு தோனுது! நீ என் பக்கத்திலேயே இருக்கும்போது, என்னால என்ன கட்டுபட்டுக்க முடியாது. எப்ப வேணா உனக்கும் எனக்கும் நடுவுல இருக்கிற எல்லை கோட்ட நான் தாண்டிடுவேன். நான் என்ன சொல்ல வரேன்னு உனக்குப் புரியுதா மல்லி. எனக்கு நீ வேணும்! இதுக்கு நீ தயாரா இருந்தா இனிமேல் என்ன பார்க்க வா, இல்லன்னா வராத" எனக் கலவையான உணர்ச்சிகளுடன் அவன் நீளமாகப் பேசி முடிக்க, கிட்டத்தட்ட விண்ணில்தான் பறந்தாள் மல்லிகா.
இதற்கிடையில் பள்ளிக்கூடம் செல்ல அவள் ஏற வேண்டிய பேருந்து அவர்கள் ஊரைக் கடந்து போய் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகி இருந்தது. சோதனை மேல் சோதனையாக, அன்று அவளுக்குத் திருப்புதல் தேர்வு வேறு இருந்தது.
Wow awesome