top of page
Writer's pictureKrishnapriya Narayan

Kaattu Malli - 8

Updated: Jan 2

மடல் - 8

            வருடம் 1997


            வைக்கோல் துகள்களையும் உமியையும் கலந்து புரட்டி குவியலாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த சாணியைக் கை நிறைய அள்ளி பந்து போல உருண்டையாக உருட்டி வட்டவட்டமாக சுவரில் அறைந்து கொண்டிருந்தாள் ராஜம். எதிரில் நிற்கும் சுவரைக் கணவனாகவும் மாமியாராகவும் உருவகப் படுத்திக் கொள்ள, அவளுக்குக் கொஞ்சம் சிரிப்புக் கூட வந்தது.


இந்தச் சாணிக் குவியல் முழுதையும் வரட்டியாகத் தட்டி முடிக்க இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகிவிடும்.


            வியர்த்துக் கழுத்தில் வழிந்து கசகசத்த வியர்வையைத் தலையைத் திருப்பி அணிந்திருந்த இரவிக்கையின் கையில் துடைத்தாள். அதில் அடிப் பக்கமாக நைந்து கிழித்து போயிருந்த பகுதி கண்களில் பட, ‘நாளைக்காவது இத ஒட்டுப் போட்டுத் தச்சு வெக்கணும். முடிஞ்சா அடுத்த மாசமாவது ஒரு புது ரவிக்க தெக்க குடுக்கணும்’ என நினைத்துக் கொண்டாள்.


            வயதுக்கு வந்த இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு தனக்கென்று எதை செய்துகொள்வது? துட்டுக்காக கணவனிடம் கெஞ்சிக் கூத்தாடி அவர்களுக்கு உள்ளாடைகள் வாங்கிக் கொடுப்பதற்குள்ளாகவே நாக்குத் தள்ளிப் போகிறது!


            மற்றபடி, பாவம் இந்தப் பிள்ளைகள் அணியும் உடைகள் எல்லாமே பெரிய வீட்டு மகராசி வடிவாம்பாளிடம் போய் நின்று, இரந்து வாங்கி வந்து கொடுக்கும் பழந்துணிகள்தான்!


            கல்லூரியில் படிக்கும் அவர்கள் வீட்டுப் பெண் வனிதா, மல்லியை விட நான்கைந்து வயது மூத்தவள். அவளுடைய உடைகள் ஓரளவுக்கு இவர்களுக்கு பொருந்தியும் போகும்.


            வாய் திறந்து கேட்டுவிட்டால், இல்லை என்று சொல்லாமல், வேண்டாமென மகள் ஒதுக்கி வைத்திருக்கும் துணிகளை எடுத்து கொடுத்துவிடுவாள் வடிவு. சமயத்தில் அதிகமாகக் குவிந்து போனால் தானே கூப்பிட்டுக் கொடுப்பதும் உண்டு.


சில முறை மட்டுமே பயன்படுத்தபட்டு, பெரும்பாலும் அந்த உடைகளெல்லாம் கிழிசலோ ஓட்டையோ இல்லாமல் கல்லு கல்லாக பளிச்சென்று இருக்கும். அந்த வகையில் கொடுப்பினைதான். அவற்றையெல்லாம் உடுத்தும் பொழுது தேவலோகத்து மேனகைக் கூட அழகில் தோற்றுப்போவாள்தான் பெற்ற மகள்களிடம் என்று இவளுக்குத் தோன்றும்.


 மனதிற்குள் பெண்ணரசிகளைப் பற்றி பெருமைப்பட்டபடி கைப் பாட்டிற்கு வேலையைச் செய்ய, அதற்குள், "போனா போன எடம்… வந்தா வந்த எடம்… ராஜி… ஏய் ராஜி, இன்னுமாடி எருமுட்ட தட்டிட்டு இருக்க?" என அதட்டலாக ஒலித்த பாக்கியத்தின் குரலுக்கு,


“தோ வந்துட்டேன் அத்த” எனப் பதில் கொடுத்தபடி அவசரமாகக் கையைக் கழுவிக்கொண்டு வேகமாக வந்து தன் மாமியாரின் எதிரில் ஆஜர் ஆனாள்.


            “ஏன்டீ, மூதேவி மாதிரி, காலைல செய்ய வேண்டிய வேலைய மதியம், மதியம் செய்யற வேலைய பொழுது போயின்னு செய்யறியே, ஒடம்புல ஒரு சுறுசுறுப்பு வேணாம்! பாவம் எம்புள்ள உன்னையெல்லாம் கட்டிட்டு அழுதுட்டு இருக்கான் பாரு” என வசை மாறிப் பொழிந்தார் அந்த முதிய பெண்மணி.


            'இன்னும் நான் கிழவியாகிப் பரலோகம் போற வரைக்கும் இந்த அம்மா இதைச் சொல்லிட்டேதான் இருக்கும் போலிருக்கு' என மனதில் சலித்தாலும், “இல்லத்த, காலைல ரேஷன் கடைக்குப் போனதுல எல்லா வேலையும் முன்ன பின்ன மாறிப் போயிடுச்சு, இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும்” என அவள் பொறுமையுடன் விளக்கம் கொடுக்க,


“சரி சரி சாக்குப் போக்குச் சொல்லாத. நெஞ்சு காஞ்சிப் போகுது, ஒரு கிளாஸ் டீ வெச்சி குடுத்துட்டு அப்பறம் மத்த வேலைய பாரு” என அவர் ஆணையிட, ஐயோ என்றிருந்தது. மறுத்து ஒரு வார்த்தை கூட பேச இயலாது.


            ஒரு தேநீர் தயாரித்து பருகக் கூட இயலாத அளவுக்கொன்றும் அவர் மூப்படைந்து போகவில்லை. ஆனாலும் இருக்கும் இடத்தை விட்டு அசைய மாட்டார். சாப்பாடு முதல் குடிக்கத் தண்ணீர் வரை அவர் இருக்கும் இடம் தேடி வந்தாக வேண்டும். மருமகள் என்கிற ஜென்மமே வீட்டு வேலை செய்வதற்கும் இவருக்குப் பணிவிடைகள் செய்யவும் மட்டுமே பிறப்பெடுத்ததாக எண்ணுபவர்.


            அதுவும், அப்போதைகப்போது தொழுவத்தில் கட்டியிருக்கும் மாட்டின்  பாலைக் கறந்து நன்றாக காய்ச்சி அதில் தேநீர் தயாரித்தால் மட்டுமே அவரது தொண்டைக்குள் இறங்கும்.


            அதை செய்து முடித்து மீதம் இருக்கும் சாணியை விரட்டியாகத் தட்டி முடிப்பதற்குள் அந்தி சாய்ந்து விடும். காலை வாசல் தெளித்துக் கோலம் போடுவதில் தொடங்கி, பழஞ்சோற்றைப் பிசைந்துப் போட்டு பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, துணிகளை துவைத்து, கொடியில் உலர்த்தி, காலைச் சமையலை முடித்து, கணவனுக்கும் மாமியாருக்கும் சாப்பாட்டைப் பரிமாறிவிட்டு, ரேஷனுக்கு போய் வந்து, அரைகுறையாய் சாப்பிட்டு முடித்து, குவிந்து கிடந்த பாத்திரத்தைத் தேய்த்து, தோசை செய்யச் சொல்லி கேட்ட சின்ன மகளின் ஆசைக்காக, அரிசி ஊற வைத்து அதை கல் உரலில் அரைத்தெடுத்து, பின் தேநீர் தயாரித்து மற்ற இருவருக்கும் கொடுத்து தானும் ஒரு வாய் பருகி, அதன் பின்தான் இந்த வேலையைக் கையிலெடுக்க முடிந்தது.


            அதற்குள் அடுத்த தேநீர் இடைவேளை வந்துவிட்டது அவளுடைய மாமியாருக்கு.


            இவ்வளவு வேலைகளுக்கு நடுவில், கொடியில் காய்ந்துகொண்டிருக்கும் துணிகளை வேறு இன்னும் இவள் மடித்து வைக்காமலிருக்க, நல்ல வேளையாக இன்னும் அதைப் பார்க்கவில்லை பாக்கியம், அதுவரை தப்பித்தாள். இல்லையென்றால், 'விளக்கு வெக்கற நேரத்துல இப்படி கொடில துணி தொங்கிட்டு இருந்தா, வீடு எங்கயாவது விளங்குமா?' எனத் தொடங்கி தரித்திரம், மூதேவி என ஒரு முழ நீளத்துக்கு இவளை வாறித் தூற்றுவார்.


            மனதுக்குள் சலித்தபடி, “சரி அத்த!” எனப் பால் கறக்கும் சொம்புடன் புழக்கடை நோக்கிப் போக, அம்மா என்ற அழைப்டன் தடதடவென உள்ளே நுழைந்தாள் அவள் பெற்றெடுத்த மூத்த பெண்ணரசி மல்லிகா.


            வாஞ்சையுடன் அவளது பார்வை வாயிற்புரம் திரும்ப, அவசரமாக செருப்பைக் கழற்றி விட்டு இரேழியில் இருக்கும் திண்ணையில் புத்தகப் பையை வீசிவிட்டு, அவளை நோக்கி ஓடி வந்தாள் அந்த மடந்தை.


            “ஏய் நில்லு” என்ற அவளது பாட்டியின் குரல் அவளுக்கு வேகத் தடை போட, “காலைல ரெட்ட சட போட்டு மடிச்சி கட்டிட்டுதான பள்ளிகூடத்துக்குப் போன, இப்ப என்னடி அவுத்துத் தொங்க வுட்டுட்டு வந்து நிக்கற!” என உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக அந்தப் பிள்ளையைப் பிடுங்க,


“இல்ல பாட்டி, லூசாயி அவுந்துடுச்சு. வீட்டுகுத்தான வரோம்னு சுங்கு போட்டு அப்படியே விட்டுட்டேன்” எனப் பொறுப்புடன் அவள் பதில் கொடுக்க,


“அதெல்லாம் சரி, இது என்ன முன்ன ரெண்டு முடி சுருட்டிட்டு நிக்குது! இந்த வயசுக்கே உனக்கு ஸ்டையிலு கேக்குதா, நல்ல குடும்பத்துல பிறந்த பொம்பள புள்ள செய்யற வேலையா இது? எல்லாம் உன் ஆத்தாள சொல்லணும், உன்னையெல்லாம் நம்பி பஸ்சுல அனுப்பிப் படிக்க வெக்குறான் பாரு எம்புள்ள” என அவளது தாயையும் உள்ளே இழுத்து, அவளை விடாமல் வாட்டி எடுக்க,


என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் தடுமாறியவள், “வேணும்னு செய்யல பாட்டி, தானே சுருட்டிகிச்சு” என்றாள் அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு.


உண்மையில் அந்த வயதுக்கே உரிய ஆசைகளும் ஏக்கங்களும் அவளுக்குக் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. அதுவும் இவளது பாட்டி கண்களில் விளகெண்ணையை ஊற்றிக்கொண்டு இவளைக் கண்காணிப்பதும், சற்று அதிகப்படியாக இப்படி இவளை அடக்கி வைக்க முற்படுவதுமாக இருக்க, அவரது கண்களில் மண்ணைத் தூவி இது போல் இலைமறைக் காயாக தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வாள். அதாவது, வீட்டுக்குள்ளே, சுருண்டுபோகும் மரவட்டையாகவும் வெளியுலகில்  ரீங்காரமிட்டபடி பறந்து திரியும் பொன் வண்டாகவும் வலம் வந்தாள்.


            “சரி போ… பாண்டி விளையாடறேன் பல்லாங்குழி ஆடறேன்னு தெரு பிள்ளைங்க கூட ஊர் மேய போயிடாத. உங்கம்மா முடிக்காம அரகொறையா வெச்சிருக்கற எருமுட்டைய தட்டி முடிச்சிட்டு அடுத்த வேலைய பாரு!” என அவளுக்கு ஆணைப் பிறப்பிக்க, சரி என்பதாகத் தலையை ஆட்டிவிட்டு பின் கட்டை நோக்கிப் போனாள்.


            வழியில் நின்றிருந்த ராஜம் அவளைத் தடுத்து, “இந்தா, பாட்டி டீ கேட்டாங்க. நீ போய் பால கறந்து தம்பி தங்கைங்க எல்லாருக்கும் சேர்த்து டீ கொதிக்க வெச்சு குடு, இந்தச் சாணி தட்டற வேல என்னோட போகட்டும்” எனக் கையில் வைத்திருந்த சொம்பை அவளிடம் நீட்ட, அம்மாவைப் பரிதாபமாகப் பார்த்தபடி அதனை கையில் வாங்கிகொண்டு மாட்டுத்தொழுவம் நோக்கிப் போனாள்.


            பெற்றவளின் உணர்வுகள் அவளுக்கு நன்றாகவே புரியும். தான்தான் இப்படி ஆகிவிட்டோம், தன் மகள்களாவது படித்து நல்ல வேலைக்கு போய் சுயமாக வாழ வேண்டும் என எண்ணுபவள். அதை இவளுக்கு வார்த்தைகளால் உணர்த்திக்கொண்டே இருக்கவும் செய்வாள்.


            அம்மா சொன்னதுபோல பாலைக் கறந்து எடுத்துக்கொண்டு சமையற்கட்டுக்குள் நுழைந்தவள், தரையோடு போடப்பட்டிருந்த விறகடுப்புக்கு அருகில் அமர்ந்து, கனன்று கொண்டிருந்த தணலை ஊதி அடுப்பை எரிய வைத்து, தேநீர் தயாரிக்கத் தொடங்க, அதற்குள் அவளது உடன் பிறப்புகள் ஒவ்வொன்றாக அங்கே வந்து சேர்ந்தன.


            சின்னவன் வந்து பின்னாலிருந்து அவளது கழுத்தைக் கட்டிக்கொண்டு “செல்ல அக்கா” என அவளது கன்னத்தோடு கன்னம் வைத்து இழைய, எதற்காக இந்தக் குழைசல் என்பதை உணர்ந்து, வாஞ்சையுடன் திரும்பி அந்த ஆறு வயது பாலகனின் கன்னத்தில் இதழ் பதித்தவள், “பள்ளிகூட பையில பட்டர் பிஸ்கட்டு வெச்சிருக்கேன், பாட்டிக்குத் தெரியாம எடுத்துட்டு வா பிரியா” எனத் தங்கையிடம் கிசுகிசுக்க, சின்னவனின் விழிகள் பளபளத்தது.


தொற்றிகொண்ட குதூகலத்துடன், பெரிய தம்பியிடம் சண்டைப் பிடிப்பது போல பாவலா செய்து குரல் எழுப்பியபடியே போய் ஒளித்து மறைத்து பிரியா அதை எடுத்து வர, 'வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் நுழையாததுமா ஆம்பள பிள்ளைங்க கூட சண்டைக்குன்னே அலையுது பாரு… சனியன்' என அவளை அர்ச்சித்த பாட்டியின் வசை மொழி சமையற்கூடம் வரை கேட்டது.


            அதெல்லாம் காதிலேயே வாங்காமல் அந்தப் பொட்டலத்தை அவள் பிரிக்க, “பிரி, ஆளுக்கு ரெண்டு, நீயே பங்குபோட்டு குடு” என்று மல்லி சொல்ல, மூன்று தம்பிகளுக்கும் தலா இரண்டு கொடுத்துவிட்டு தானும் இரண்டை எடுத்துக்கொண்டு, எஞ்சிய இரண்டை காகிதத்திலேயே வைத்துச் சுருட்டி அக்காவுக்கு அருகில் வைத்தாள்.


            அதற்குள் தேநீர் தயாராகி இருக்க, அதைக் குவளைகளில் ஊற்றி, “பெரியவனே, இத எடுத்துட்டுப் போயி பாட்டிகிட்ட குடுத்துட்டு வா” என்று சொல்ல,


“கையில் வைத்திருந்த பிஸ்கட்டை அவளது பாதுகாப்பில் விட்டுவிட்டு அதை எடுத்துப் போய் பாக்கியத்திடம் நீட்டினான் அவன்.


            பேரன்களிடம், அதுவும் குறிப்பாக மூத்த பேரனின் மேல் கொள்ளை பிரியம் அவருக்கு. அவனைப் பார்த்தாலே பரவசப் பட்டுப்போவர். அதனால்தான் மல்லி அவனைத் தேர்ந்தெடுத்தாள். வேறு யாரும் இதைச் செய்திருந்தால் ராஜத்துக்குதான் அர்ச்சனை கிடைத்திருக்கும்.


            தான் சொன்னதை மீறி வேலைகளை மாற்றி அமைப்பது என்பது பெருங்குற்றம் அல்லவா?!


            பிஸ்கட் தின்னும் அவசரத்தில் அவனும் அங்கே நிற்காமல் ஓடிவந்துவிட, அதற்கு மேல் ஏதும் பேச அவருக்கும் இடமில்லாமல் போனது.


            பிள்ளைகள் ஐவரும் சுற்றி அமர்ந்து தேநீர் பருகும் அழகைக் கண்களில் நிரப்பியபடி ராஜம் உள்ளே நுழைய, “அம்மா வா, நீயும் ஒரு வாயி டீ குடி” என அவளை அழைத்தாள் மல்லி.


            தொண்டை வறண்டு போயிருக்க, வயிறும் பசியில் ‘எதையாவது கொடு’ என்று கேட்க, மகளுக்கு அருகில் அவள் வந்து  அமரவும் தேநீர் குவளையுடன் சேர்த்து காகிதத்தில் இருந்த பிஸ்கட்டையும் அவளிடம் நீட்டினாள்.


அவற்றை கையில் வாங்கியவளின் கண்கள் கலங்கிப் போயின. “பள்ளிக்கூடம் விட்டு வர இன்னைக்கு நேரம் ஆயிடுச்சே ஸ்பெசல் கிளாஸ் வேச்சிட்டங்கன்னு நினைச்சேன், வடிவு அத்த அவங்க காட்டுல பூ பறிக்க போனியா மல்லி? சொல்லிட்டே போகல” என்று மெல்லிய குரலில் கேட்க,


  “ஆம்மாம்மா, உங்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னா, காலைல நீ தனியா சிக்கல. பாட்டிக்குத் தெரிஞ்சா வர அஞ்சு பத்த கூட புடுங்கி அப்பா கிட்ட கொடுத்துடுவாங்கல்ல. தோ, இப்படி புள்ளைங்களுக்கு எதாவது வாங்கிக் குடுக்க முடியுமா சொல்லு?” என்று மகள் இரகசிய கேள்வி எழுப்ப, அமோதிப்பக மவுனம் காத்தாள் தாய்.


குணா, டவுனில் இருக்கும் வேலாயுதத்துக்குச் சொந்தமான ஒரு உரக்கடையில் மாத சம்பளத்துக்கு வேலை செய்வதால் இதையெல்லாம் கவனிக்க அவனுக்கு நேரம் இருக்காது. அந்த வகையில் தப்பித்தாள் மல்லி.


“என்னம்மா குசுகுசுன்னு பேசிக்கறீங்க” என பிரியா கேட்டதில் கலைந்தவள், “ஆங்… ஒண்ணுமில்ல, நீ டீய குடிடீ” என்று தங்கையைத் திசை திருப்பியவள், “ம்மா… நீ என்ன வேடிக்க பக்கற, டீ ஆறுது பாரு” என அன்னையைத் துரிதப் படுத்த பிஸ்கட்டை டீயில் தோய்த்து மல்லியின் வாயில் திணித்து, தானும் சாப்பிட்டாள் ராஜம்.


அதற்குள் எல்லோரும் சாப்பிட்டு முடித்திருக்க, அந்தத் தேநீரைச் சொட்டவிட்டு அணிந்திருந்தச் சட்டையெல்லாம் நனைத்திருந்தான் சின்னவன்.


“அய்ய, என்ன ஜீவா இது” என அவனைக் கடிந்த மல்லி, “பிரியா, இவன இழுத்துட்டுப் போய் கழுவி வேற துணி மாத்தி விடு, அப்படியே கொடில கிடக்கற துணி எல்லாம் மடிச்சி எடுத்துட்டு வந்து போடு” என அவளைப் பணிக்க, அதில் அவளுக்கு எரிச்சல் மூண்டது.


தப்பித்தவறி ராஜம் ஏதாவது வேலை சொன்னால் கூட அதைச் செய்ய மாட்டாள். ஆனால் மல்லி சொன்னால் கட்டாயம் செய்தே ஆக வேண்டும். இல்லை என்றால் இது போன்ற சிறு சிறு ஆதாயங்கள் அவளுக்குக் கிட்டாது.


எனவே மறுக்க முடியாமல், “கொரங்கு, எருமைக்கு ஆற மாதிரி வயசாகுது, இன்னும் ஒரு டீய ஒழுங்கா குடிக்கத் துப்பில்ல” எனத் திட்டியபடி அவனை இழுத்துக்கொண்டு போக, அவன் சிணுங்குவது கேட்டது.


“பிரி” என அவள் அழுத்தமாக குரல் கொடுக்க, “உன் ஆச தம்பிய நான் ஒண்ணும் செய்யலடி அக்கா” எனப் பதில் குரல் வந்தது.


“ஏய், உனக்கு தில்லு இருந்தா பெரியவன் கிட்ட இந்த வீரத்த காமி… நல்லா நாலு அப்பு அப்புவான்” என கோபமாகச் சொல்லவும், அவள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே போவது கேட்டது.


அதற்குள் மற்ற இரு தம்பிகளும் விளையாட தெருவுக்கு ஓடி இருக்க, சீருடையாக அணிந்திருந்த நீல நிற தாவணியின் முந்தியில் முடிந்து வைத்திருந்த பத்து ரூபாய் தாளை அவிழ்த்தெடுத்து அம்மாவிடம் கொடுத்தவள், “இத ஏதாவது டப்பால போட்டு வைம்மா, சேர்த்து வெச்சா உனக்கு ரவிக்க தெக்க ஆகும்” என்று சொல்ல, அவளை சேர்த்து அணைத்த ராஜம், தனக்கான ஒரே ஆதரவாக இறங்கிவந்திருகும் தாய் தெய்வமாக அவளை எண்ணிக் கொண்டாள்.


ஆனாலும் மனதிற்குள் அச்சம் மேலோங்க, “இதெல்லாம் வேணாம் கண்ணு, அங்கல்லாம் போகாத. அந்தப் பொறுக்கி பய தங்கராசு கண்ணுல பட்டா தேவையில்லாத வில்லங்கம் வந்து சேரும், போறும் போறாததுக்கு சின்னவன் வேற படிப்ப முடிச்சுட்டு ஊரோட வந்துட்டானாம்” என்று சொல்ல,


“ம்மா, நீ தேவையில்லாம பயபடுற! தங்கம் பிழைப்பு நடக்கற இடத்துக்கெல்லாம் வரதில்ல தெரிஞ்சுக்க. அதே மாதிரி அவன் வீடும் தங்கறதில்ல. அதோட பெரியவன் மாதிரி இல்லையாம், சின்னவரு ரொம்ப நல்ல மாதிரின்னு பேசிக்கறாங்க” என மல்லி அலட்சியமாகப் பதில் கொடுக்க, நெடு நெடு உயரமும், நீண்ட கருங்கூந்தலும், வண்டு போன்ற விழிகளும், தேனின் நிறமுமாக தங்கமென ஜொலிக்கும் மகளைப் பார்த்து வயிற்றுக்குள்ளே பயம் பந்தென உருண்டது.


‘முண்டகன்னிம்மா தாயே, எம்மகளுக்கு நீதான் காவல் இருக்கனும்’ என மனதிற்குள் வேண்டிக்கொண்டு, “எதுக்கும் ஜாக்ரதையா இரு கண்ணு, பொம்பள ஜென்மமா போயிட்டோம். நாமதான் பார்த்து பக்குவமா நடந்துக்கணும். நாலு எழுத்துப் படிச்சு உத்தியோகத்துக்குப் போய் பிழைக்கிறத மட்டும் வைராக்கியமா வச்சுக்க” என அறிவுறுத்த,


மறுமொழி இன்றி, “சரிம்மா” என ஏற்றுகொண்டவள் புழக்கடை நோக்கிப் போனாள்.


முதல் நாள் மீதமிருக்கும் பழைய சோற்றைக் காலையில் சாப்பிட்டுப் போனால், மதியத்திற்கு பிள்ளைகள் ஐவருமே பள்ளியில் கொடுக்கும் சத்துணவுச் சாப்பாட்டைச் சாப்பிட்டு விடுவார்கள். அதனால் இரவில் புதிதாக சோறு வடித்துப் பொரியலோ கூட்டோ செய்வாள் ராஜம். முடியும் போது முட்டை அவிப்பாள். அதை விட்டால் அசைவம் என்பதையே  தீபாவளி அன்றுதான் பிள்ளைகளின் கண்களிலேயே காண்பிக்க இயலும்.


வழக்கம் போல இரவு சமையலைக் கவனிக்க அவள் சென்றுவிட, நேரே குளியறைக்குள் போய் பள்ளி சீருடையைக் களைந்து வேறு உடைக்கு மாறி, கனமான பாவாடையை உதறி மடித்து அங்கேயே இருந்த கொடியில் போட்டுவிட்டு, தாவணியையும் இரவிக்கையையும் மட்டும் கசக்கி அலசி எடுத்து வந்தவள் அவற்றை வேறு கொடியில் காயப்  போட்டுவிட்டுத் திரும்ப, தொட்டியில் நிரப்பி வைத்திருந்த தண்ணீரைக் கொட்டி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான் சின்னவன்.


இவளைப் பார்த்ததும் இவள் மீதும் தண்ணீரை வாரித் தெளிக்க, களுக் என்ற சிரிப்புடன், "வாலு பையா" என அவனை இழுத்துத் துண்டால் உடலைத் துவட்டிவிட்டு அதை இடையில் சுற்றி வீட்டிற்குள் இழுத்து வர, குறும்புத்தனம் மேலோங்கி ‘அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே, ஹம்மா, ஹம்மா' எனப் பாடிக்கொண்டே இங்கேயும் அங்கேயுமாக அவன் ஓடி ஆட, அவனது இடையில் சுற்றியிருந்த துண்டு நழுவி கீழே விழுந்தது.


 அதையெல்லாம் கருத்திலேயே கொள்ளாமல் திகம்பரமாக கிங்கிணி மங்கிணி என அவன் தன் ஆட்டத்தைத் தொடர, அவன் போட்ட இந்த  குத்தாட்டத்தில் மயங்கிய பாக்கியம் அவனைப் பிடித்து இழுத்து, “சீமையாளப் பொறந்த மகராசா, எங்கொல சாமி, என்னமா பாடுது” எனக் கொஞ்சியபடி அவன் முகம் எல்லாம் முத்தம் வைத்து அவனது குறித் தொட்டு விரல்கள் குவித்து அதற்கும் முத்தம் வைக்க, அதில் அவனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்ன, ஓடிப் போய் மல்லி உடுத்தியிருந்த பாவடையை இழுத்து ஒரு சுற்று சுற்றி தன்னை மூடியபடி அவளுடன் ஒட்டிக் கொண்டவன், “மல்லி…க்கா, என்னோட நிஜார எடுத்துக் குடு” என்றான்.


"போடா, நீ போட்ட ஆட்டத்த ஊரே பார்த்துச்சு, எங்கிட்ட மூடிக்கறியா?" எனக் கிழவி அவனைக் கிண்டல் செய்ய, அவருக்குப் பழிப்புக் காட்டியபடி அக்காவைப் பிடித்துக்கொண்டான்.


அங்கே உயரத்தில் கொடியில் இருந்த அவனுடைய ட்ரவுசரையும் சட்டயையும் எடுத்து அவள் அவனுக்கு அணிவித்து விட, அவளையே பார்த்துக் கொண்டிருந்த பாக்கியம் எரிச்சலுற்று,  "இது என்னடி இது கூத்து, மேலாக்கு போடாம தடி மாடு மாதிரி ஆம்பள சட்டைய எடுத்து மாட்டிட்டுச் சுத்தற" என ஆத்திரத்துடன் கடிய,


"இல்ல பாட்டி, நல்ல காட்டன் சட்ட, லூசா வசதியா இருந்துச்சு அதான் எடுத்துப் போட்டேன்" என்று அவள் பதில் கொடுக்க,


அதில் கடுப்பானவர், "ஏய் ராஜி இங்க வாடி" என மருமகளை அதிகாரத்துடன் அழைக்கவும்,


"என்னாச்சு அத்த?" என்றவாறு போட்டது போட்டபடி அரக்க பறக்க ஓடி வந்தாள்.


"என்னடி இது, இந்த கருமத்தையெல்லாம் நீ கேக்கவே மாட்டியா?" என அவளை வேறு சாட,


"என்னத்த, ஒண்ணுமே புரியலையே!" என்று அவள் குழப்பத்துடன் மகளை ஏறிட,


"அப்புடியே அப்பாவி பார்வை பாரு!" என்று பொங்கியவர், "இது என்னடி இது ஆம்பள சட்ட" என்று கேட்க,


"ஓ இதுவா அத்த, வனிதாவுதா இருக்கும். வடிவு அண்ணி கொடுத்துவிட்ட துணியோட இருந்துச்சு. நல்லா இருக்கேன்னு எடுத்து போட்ருக்கா போலிருக்கு" என்று பதில் கொடுக்கவும்,


"நீ கொடுக்கிற எடத்திலதான் இவளுங்க இந்த ஆட்டம் ஆடுறாளுங்க. அறிவு இருந்துதான் இதெல்லாம் பாத்துட்டு இருக்கியான்னு எனக்குப் புரியல. இது எல்லாத்தையும் கழட்டிக் கடாசிட்டு இவளை மேலாக்கு போடச் சொல்லு முதல்ல" என்று அவர் சொல்லவும்,


"பொழுது போன நேரந்தான அத்த, இதுக்கப்புறம் இவ வெளிய எங்கயும் போக மாட்டா, இருந்துட்டு போகட்டுமே" என மகளுக்காகப் பரிந்து இறைஞ்சுதலுடன் அவள் சொல்லவும்,


"அடங்காப் பிடாரிங்க… எக்கேடோ கெட்டுத் தொலைஞ்சு போங்க" என முணுமுணுத்தபடி அங்கிருந்து அகன்றார் பாக்கியம்.


'நீ போய் வேலையைப் பாரு' என்பதாக மகளுக்கு ஜாடை செய்து விட்டு ராஜம் சமையல் அறைக்குள் போக' பிரியா துணிகளை எல்லாம் மடித்துக் கொண்டு வந்து உள்ளே இருந்த கொடியில் வரிசையாக மாட்டிவிட்டு நேராகப் போய் தொலைக்காட்சி பெட்டியை உயிர்பித்தாள்.


அதன் திரையில் உடைந்து இரண்டாகத் தெரிந்த கருப்பு வெள்ளை பிம்பங்கள் அனைத்தும் தெளிவில்லாமல் நடனமாடியது.


அடுத்த நிமிடம் பாக்கியமும் அங்கு ஆஜராகி, "போடி ரெண்டாவது ஸ்டேஷன வெச்சிட்டு போய் ஆண்ட்டநாய திருப்பு, படம் சரியா வந்தா சொல்றேன்" என்று அவளைக் கிளப்ப,


“அது ஆண்ட்டநாயி இல்ல பாட்டி, ஆன்டனா… எங்கச் சொல்லு ஆன்டனா” என் அவள் அவரது வார்த்தையைத் திருத்த,


“நீயே ஒரு செந்நாயி, அது எந்த நாயா இருந்தா எனக்கென்ன, நான் இப்படிதான் சொல்லுவேன், உனக்குப் புடிக்கலன்னா காத பொத்திக்கோ… எனக்கு பாடம் சொல்லி குடுக்காத” எனப் பாட்டி அவளுடன் சண்டைக்குக் கிளம்ப,


“மெட்ரோ சேனல்ன்னு சேர்ந்தப்பல ரெண்டு வர்த்த சொல்ல தெரியல, பேசுது பாரு பேச்சு” என முணுமுணுத்துகொண்டே போய் அவள் ஆன்டனாவை திருப்ப, சில நிமிடங்களில் படம் தெளிவாக வந்து விட சண்டை மறந்து இருவரும் அதில் ஐக்கியமாயினர்.


தன் பாடப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு மல்லி வாயிற் திண்ணையில் வந்து அமர, சின்னவனும் ஒரு ஸ்லேட்டு பலகையுடன் அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தான்.


"அக்காவுக்கு நாளைக்கு டெஸ்ட் இருக்கு, என்ன தொல்ல பண்ணாம, நீ ஒண்ணுல இருந்து நூறு வரைக்கும் எழுதுவியாம், அக்கா படிப்பேனாம்" என்றுக் கொஞ்சலாகச் சொல்ல, அவனும் ஒரு தலையசைப்புடன் எழுதத் தொடங்கவும் தானும் அறிவியல் புத்தகத்தில் தன் கவனத்தைப் பதித்தாள்.


சில நிமிடங்கள் கூட கடந்திருக்காத நிலையில் அவளது கவனத்தைக் கலைத்தது இருசக்கர வாகனத்தின் படபட ஓசை. அனிச்சையாக அவளது பார்வை ஆவலுடன் வீதியை நோக்கிச் செல்ல, அவளைக் கடந்து சென்றது அந்த வாகனம்.


அதில் சென்றவனின் பார்வை யோசனையுடன் அவள் மீது ஒரு நொடியேனும் படிந்து மீண்டிருக்க அதை உணர்ந்தவளின் உடலெல்லாம்  கூசிச் சிலிர்த்தது.


அந்த வீதியின் கோடி வரை சென்று அந்த வாகனம் திரும்பிய பின்பும் கூட அவளது பார்வை அந்தத் திசையையே வெறித்திருக்க,


'ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்


உன்னோடு நான் கண்டு கொண்டேன்…


ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்


என்னோடு நான் கண்டு கொண்டேன்


என்னை மறந்துவிட்டேன்


இந்த உலகத்தில் நானில்லை நானில்லை


வண்டை இழந்து விட்டால்


எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை


இது கனவா இல்லை நினைவா


என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்…


உன்னை பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்!


என அவளது உதடுகள் மெல்லியதாக முணுமுணுத்தது,


தாபத்துடன்…


ஏக்கத்துடன்…


நிராசையுடன்…



3 comments

3 commenti

Valutazione 0 stelle su 5.
Non ci sono ancora valutazioni

Aggiungi una valutazione
Ospite
23 giu 2023
Valutazione 5 stelle su 5.

eagerly waiting for new epi

Mi piace

Sumathi Siva
Sumathi Siva
13 giu 2023
Valutazione 5 stelle su 5.

Wow awesome

Mi piace

Ospite
12 giu 2023

Oh god malli.. So sad, why she had to fall in his trap.. 😔

Mi piace
© KPN NOVELS COPY PROTECT
bottom of page