top of page

Kaattu Malli - 7

Updated: Jan 2

மடல் - 7


முந்தைய இரவு எல்லோரும் உறங்கவே வெகு தாமதமாகி இருந்ததால் அன்றைய பொழுதும் அவர்களுக்கு தாமதமாகவே விடிந்தது. அவசர வேலை ஏதும் இல்லாததால் நிதானமாகக் கிளம்பி எல்லோருமாக வல்லரசுவின் வீட்டிற்கு வந்தார்கள்.


சக்தியைத் தனிப்பட்ட முறையில் வல்லரசு வேறு வேண்டி அழைத்திருக்க அவனும்தான் வந்திருந்தான். பகலவனும், ஆனந்தைத் தவிர ஸ்வராவின் மற்ற பாதுகாவலர்களும் அங்கேயே காலை உணவைத் தாங்களே செய்து சாப்பிட்டுக்கொள்வதாகச் சொல்லி இங்கே வருவதைத் தவிர்த்து விட்டனர்.


அந்தத் தாமதமும் நன்மைக்கே என்பது போல் அப்பொழுதுதான் அன்றைய காலை உணவு தயாராகி இருந்தது.


போய் தன்னைச் சுத்தம் செய்து கொண்டு வேறு உடைக்கு மாறி வரக்கூட நேரம் இல்லாமல் போக வியர்வை கசகசக்க வல்லரசுவுடன் இணைந்து வந்து அவர்களை வரவேற்றாள் சந்திரா.


வழக்கமாக அவள் முகத்தில் படர்ந்து இருக்கும் பொலிவோ அவளிடம் வெளிப்படும் ஒரு மிகையான உற்சாகமோ ஏதுமில்லாமல், அதிகப்படியாக இழுத்து விட்டுக் கொண்ட வேலையால் உண்டான எரிச்சலில் கடுகடுவென்று கடுத்திருந்தது அவளது முகம்.


கடமையே என அவர்களை உபசரிக்க இடையிடையே வல்லரசுவிடம் அவள் முகத்தை வேறு காண்பிக்க, அல்லிக்கொடிக்கு முதல் பார்வையிலேயே அவளைப் பிடிக்காமல் போனது. பெரிதான யோசனையுடன் வல்லரசுவை வேறு பார்வையாலேயே எடை போட்டுக் கொண்டிருந்தார்.


ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக அருணா இவர்களைக் கவனிப்பதும் இடையிடையே போய் அவளுடைய கணவனுக்கு வேண்டியதைச் செய்வதுமாக அல்லாடிக் கொண்டிருக்க, அவள் மீது ஒரு பச்சாதாபம் உண்டானது.


அங்கே வந்த முதல் தினம் சாப்பிட்ட பொழுது உணவில் இருந்த சுவை இன்றைக்கு இல்லாமல் போயிருந்தது. அதுவும் ராஜத்தின் கைப்பக்குவம் நன்றாக பழகிப் போயிருக்க, அன்று சந்திரா சொன்ன பொய் பகிரங்கமாகப் புலப்பட்டது ஸ்வராவுக்கு.


மனதிற்குள்ளேயே அருவருத்துக்கொண்டாள். வல்லரசுவுடன் பொதுப்படையாகப் பேசிக்கொண்டு சாப்பிட்டு முடித்த உடனேயே விடை பெற்று எல்லோரும் கிளம்ப, எங்கேயோ இடத்தைக் காண்பிக்கிறேன் என பிரேமுடன் சக்தியை அழைத்துக்கொண்டு சென்று விட்டான் வல்லரசு .


ஆனந்த் வாகனத்தைச் செலுத்த ராஜத்தின் வீடு நோக்கிச் சென்றனர் ஸ்வராவும் அல்லிக்கொடியும்.


***


அது ஒரு குறுக்கலான தெரு என்பதால் காரைச் சற்றுத் தள்ளியே நிறுத்திவிட்டு மூவருமாக அவர்களின் வீட்டை நோக்கிச் சென்றனர்.


வீதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன்னுடைய இருசக்கர வாகனத்தைத் துடைத்துக் கொண்டிருந்த ஜீவானந்தம் அவர்களைப் பார்த்துவிட்டு, வேகமாக வந்து வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.


வாயிலில் இரண்டு பக்கமும் திண்ணைகள் வைத்துக் கட்டப்பட்டிருந்த ஒரு பழைய கிராமத்து ஓட்டு வீடு அது. மராமத்துச் செய்தே பல வருடங்கள் ஆகி இருக்கும் என்பது அதன் நலிவடைந்த தோற்றத்தைப் பார்க்கும் பொழுதே தெரிந்தது.


“ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் இங்க இருந்து வீட்ட பார்த்துட்டு ஒருத்தர் கிளம்பி அங்க போங்கம்மா. யார் என்ன செய்ய போறீங்கன்னு பேசி நீங்களே முடிவு செஞ்சிக்கோங்க" என ஒரு ஆணின் குரல் அதிகார தொனியில் ஒலிக்க,


"ஐயோ, என்ன பேசறீங்க நீங்க? இது சரியில்லங்க" என ஈனமாக ஒலித்த ராஜத்தின் பதில் குரலில் பெண்கள் இருவரின் முகமும் மாறிப் போனது.


அவனுடைய அப்பா குணாதான் இப்படி  சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்.


இரேழியைக் கடந்து செல்லும் பொழுதுதான் உள்ளுக்குள்ளே உண்டாகியிருந்ந சலசலப்பு அவனுக்கே தெரிய வந்திருக்க அதில் துணுக்குற்றவன், சங்கடத்துடன் உள்ளே நுழைய எத்தனிக்க, அவனுடைய கையைப் பிடித்து தடுத்தவள், ‘வேண்டாம்’ என்பதாக தலை அசைத்துவிட்டு திரும்பி நடந்தாள்.


"இந்த சந்திரா ஃபோன் பண்ணி நேர்ல வரச் சொல்லி கூப்பிட்டுதேன்னு போனா, நேத்து நீ அவகிட்ட சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்துட்டன்னு சொல்லி என்ன பேச்சு பேசுது தெரியுமா? உனக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னா கூட காதுலயே வாங்கல.


நம்ம பேத்தி கல்யாணத்துக்கு தாய் மாமன் சீர் செய்ய, நம்ம புள்ளைங்க வாங்கின நாப்பதாயிரம், பழைய கடன் ரெண்டு லட்சத்தி இருவதாயிரத்து சொச்சம், எல்லாத்தையும் மொத்தமா எண்ணி உடனே உன்னால வெக்க முடியுமான்னு குத்தலா கேக்குது? அப்பறம் எப்படி ராஜம்,  முடியாதுன்னு சொல்ல முடியும்?


வெளியூர்ல இருந்து வந்து தங்கி இருக்கிற பெரிய மனுஷங்களுக்கு நல்லபடியா சமைச்சுப் போடணுமா வேணாமா? அதோட இல்லாம, இப்படி நாலு பேரைப் பழக்கப்படுத்தி வச்சுட்டா எதிர்காலத்துல நமக்கும் நல்லதுதான?" எனக் கொஞ்சம் கூட சுரணையே இல்லாமல் குணா பேச, அங்கே தன் பெயர் அடிபடுவதால் அப்படியே தேங்கி நின்றாள்.


"த்தூ... உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லையாய்யா? இன்னும் எத்தனை காலத்துக்குதான் இப்படி அடுத்தவன் கால கழுவித் தண்ணிக் குடிக்க முடியும்? என்ன வச்சு நீ இவ்வளவு வருஷம் குரங்காட்டி வித்த காமிச்ச மாதிரி, நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணுங்கள வச்சு வித்த காமிக்க வீண் முயற்சி செய்யாத. அதுக்கு நான் ஒரு நாளும் ஒத்துக்க மாட்டேன்" எனச் சீற்றமாக ஒலித்தது ராஜத்தின் குரல்.


“நீ யாருடி இதுக்கு ஒத்துக்க? உன் அனுமதிய யார் இப்ப கேட்டாங்க? இவுளுகள கட்டின புருஷனுங்க சொல்லட்டும். சொளையா ரூபா நோட்டை எண்ணி எடுத்து வெச்சிடுவானுங்களா? அப்படியே அந்த வல்லரசு கைல கொண்டு போய் நொட்ட? அதனால அவனுங்களும் இதையேதான் சொல்லுவானுங்க, தோ பாருங்கம்மா, சட்டுபுட்டுனு முடிவு பண்ணி, சீக்கிரம் கெளம்பற வழிய பாருங்க, மதிய சாப்பாடு நீங்க யாரவது போய் செஞ்சாதான் உண்டு. இல்லன்னா தேவையில்லாத தொல்லையெல்லாம் வந்து சேரும்" என்று அவர் கொஞ்சம் கூட பச்சாதாபம் இல்லாமல் பேசத் துடிதுடித்துப் போய்விட்டார் ராஜம்.


"ஐயோ, உன்ன கட்டிட்டு வந்த பாவத்துக்கு நான்தான் அனுபவிக்கிறேன்னா, இந்த வீட்டில பொறந்த பொம்பள பிள்ளைகளும் சுகப்படல, வாக்கப்பட்டு வந்த புள்ளைங்களுக்கும் இதே கொடுமைய அனுபவிக்குதுங்களே! இந்த வேதனைய நான் யார்கிட்ட போய் சொல்ல?" என அழுகுறலில் சத்தமாக அலறினார்.


அதற்குமேல் பொறுக்கமுடியாமல், உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர் இவ்வளவு உணர்ச்சிவசப்படுதல் ஆகாது என்கிற அக்கறையில் ஜீவாவைத் தள்ளிக்கொண்டு வேகமாக ஸ்வரா உள்ளே நுழைய, தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்த ராஜம் தடுமாறி எழுந்து உட்கார்ந்தார்.


அரண்டுபோயிருந்த அவரது சின்ன மருமகள் செல்வி அவளுடைய மூன்று வயது மகளை இடுப்பில் இருத்தியபடி ஓரமாக நின்றிருக்க, ராஜம் எழுந்து அமர அவருக்கு உதவிய அவரது பெரிய மருமகள் சரசு குணாவை முறைத்துக்கொண்டிருந்தாள்.


சரியாக அதே நேரம் உள்ளேயிருந்து அங்கே வந்த அவரது இரண்டாவது மகன் சுந்தரம், “அம்மா, அப்பா சொல்றதுதான் சரி, ஜுரத்துல அனத்தாம நீ சும்மா கிட” என்று பெற்றவளை அலட்சியபடுத்தி, “புள்ளைய அப்பா கிட்ட விட்டுட்டு நீ கிளம்பு செல்வி, அண்ணி வீட்ட பார்த்துக்கட்டும்” என்றான், இதுதான் இறுதி முடிவு என்பதாக.


உள்ளே நுழைந்த யாரும் அவன் கருத்தில் பதியவில்லை போலும்.


ஆனால் அவளைப் பார்த்துவிட்ட செல்வியும் சரசுவும் அவமானத்தில் நெக்குருகிப் போயினர். நேரங்கெட்ட நேரத்தில் இப்படி திடுமென உள்ளே நுழைந்தவளை எரிசலுடன் உற்று நோக்கிய குணாவுக்கு அருகில் இடி விழுந்தாற்போன்ற அதிர்ச்சி உண்டானது. தன் கண்களை அழுந்த  துடைத்தபடி நிதானமாக அவளை மேலிருந்து கீழ் ஏறிட, அவளது உயரமும் நிறமும், களை பொருந்திய முக ஜாடையும் அவரை நடுக்கம் கொள்ளச் செய்தது.


நடப்பதையெல்லாம் உணரும் நிலையை ராஜம் கடந்திருக்க, “பாவி, உங்கப்பன மாதிரி மனசுல ஈவு இறக்கம் இல்லாதவனா போகாதடா! பெண் பாவம் பொல்லாதுடா! அது நம்ம குலத்தையே நாசம் செஞ்சிடும்” என்றவர், பின் பக்கமாகத் திரும்பிச் சுவரில் மாட்டப் பட்டிருந்த தன் மூத்த மகளின் படத்தில் பார்வையைப் பதித்து, "யம்மா மல்லி, இந்தக் குடும்பம் உனக்குச் செஞ்ச பாவத்துக்கு என்னென்ன கஷ்டப் படப் போகுதோ! இதுங்கள எல்லாம் உதறித் தள்ளிட்டு நான் உன்கூட நீ போன இடத்துக்கே வந்திருக்கணும். இதுங்களுக்காகப் பார்த்து உன்கூட சேர்த்து உண்மையக் குழித் தோண்டிப் புதைச்சதுக்கு, நான் இன்னும் என்னென கொடுமைய அனுபவிக்கப்போறேனோ? என்ன மன்னிச்சிடு தாயி!" என நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதபடி அப்படியே மூர்ச்சையாகி பின்னால் சரிய,


"பாட்டி, என்றபடி அவரைத் தாங்கிப் பிடித்த ஸ்வரா, அவரது நாசியிலிருந்து இரத்தம் கசிவதைப் பார்த்துப் பதறியவளாக, "ஜீவா, சம்திங் ராங், உடனே இவங்கள ஹாஸ்பிடல்க்குக் கூட்டிட்டுப் போகணும், வந்து பிடிங்க" எனப் படபடத்து, "ஆனந்த், சீக்கிரம் இங்க வா" எனச் சத்தமாகக் குரல் கொடுக்க, பதறி அவனும் உள்ளே நுழைந்து அவரைத் தூக்கிச் செல்ல ஜீவாவுக்கு உதவினான்.


ஒரு வேகத்தில், பேத்திக்கு உதவியாக அவரை மற்றொரு புறம் பிடித்திருந்த அல்லிக்கொடியின் பார்வை சுவரில் மாட்டியிருந்த படத்தில் போய் பதிய, உண்டான அதிர்ச்சியில் அவரது  உடலில் ஒரு நடுக்கமே உண்டாகிப் போனது.


திடகாத்திரமான ஆனந்தும் ஜீவானந்தமும் ராஜத்தைத் தூக்கி வந்து அவர்கள் வந்த காரின் பின் இருக்கையில் படுக்க வைக்க, ஸ்வரா ஏறி உள்ளே உட்கார்ந்து அவரது தலையைத் தன் மடியில் தாங்கினாள்.


கூடவே வந்த குணாவையும் சுந்தரத்தையும் பார்வையாலேயே ஒதுக்கித் தள்ளிவிட்டு, மிரண்டு நின்ற வீட்டு மருமகள்களிடம், "வீட்ட பார்த்துக்கோங்க அண்ணி, அம்மா திரும்ப வந்த பிறகு மத்தத பேசிக்கலாம்" என்று மட்டும் சொல்லிவிட்டு மற்றொரு பக்கமாக ஏறி அவரது காலை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான் ஜீவா. அவனது கண்கள் கலங்கிச் சிவந்திருக்க, ஸ்தம்பித்து நின்றிருந்த அல்லிக்கு ஸ்வரா ஜாடை செய்யவும் ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையுடன், 'ஆம்' என்பதாகத் தலை அசைத்துவிட்டு அவர் போய் முன் இருக்கையில் அமர,  ஆனந்த் காரைக் கிளப்பினான்.


அந்த அரை மயக்க நிலையிலும் கூட ராஜத்தின் கண்களில் கண்ணீர் வழிந்தபடியே இருக்க, உதடுகள் மல்லி... மல்லி... என ஜபித்துக் கொண்டே இருந்தன.


சில நிமிட பயணத்துக்குப் அந்தப் பகுதியின் முக்கிய டவுனில் இருக்கும் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.


சில பல பரிசோதனைகளுக்குப் பின் முதற்கட்ட சிகிச்சைகள் கொடுக்கப்பட்டிருக்க, அவருக்குத் தீவிர மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த மருத்துவர்கள், உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்தே தீரவேண்டும், அதற்கான வசதி அங்கே இல்லாததால் அருகிலிருக்கும் முக்கிய நகரத்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அவரை மாற்றவேண்டும், ஆனாலும் அவர் பிழைப்பதற்கான சாத்தியக் கூறு மிக மிகக் குறைவுதான் என்று சொல்லிவிட, பெற்றவள் உயிரைக் காக்க தேவையான பணத்திற்கு எப்படி ஏற்பாடு செய்வது என்பதே புரியாமல் உச்சபட்ச அதிர்ச்சியில் ஜீவாவின் மூளையே வேலை நிறுத்தம் செய்துவிட்டது.


உடல் தடதடக்க நின்றிருந்த ஸ்வராவின் அருகில் வந்து அவளை அணைத்துக்கொண்ட அல்லிக்கொடி, தன் கைப்பேசியை அவளிடம் நீட்டியபடி, "கவலப்படாத பேபி, அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது. உங்கம்மாவை உடனே கிளம்பி இங்க வரச்சொல்லு! இனிமேல் இவங்கள அவதான் குணப்படுத்தனும்"  என்று சொல்ல, தன் முகத்தை அழுந்தத் துடைத்தவள் அதை இயக்க,


"சொல்லுங்கம்மா" என்று ஒலித்த அவளது அன்னையின் குரலில் உடைந்தவளாக, "ம்மா, நான் ஸ்வரா" என்றதும் எதிர் முனை மௌனமாகிவிட,


"ம்மா... நீ உடனே இங்க கிளம்பி வா, உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, ரொம்ப சீரியஸா இருக்காங்க! உன் பேர மட்டும்தான் சொல்லிட்டு உயிர கைல பிடிச்சிட்டு இருக்காங்க! ப்ளீஸ் சீக்கிரம் வா" என்று தழுதழுக்க,


"என்னடி உளர்ர! என்ன கார்னர் செய்யறதுக்காக ரெண்டு பெரும் சேர்ந்து டிராமா பண்றீங்களா?" என அதிர்ச்சியுடன் பேசியது எதிர்முனை.


"மா... ப்ளீஸ் ட்ரை டு அன்டர் ஸ்டான்ட் த சிச்சுவேஷன்" என அவள் கெஞ்ச,


"ஹேய், நேத்து ஈவினிங் இங்க இருந்து கிளம்பும்போது கூட நல்லா இருந்தாங்களே! திடீர்னு என்னடி ஆச்சு" என அவர் பதற,


"ம்மா, அம்மம்மாக்கு ஒண்ணும் இல்ல, ஷி இஸ் பர்ஃபெக்ட்லி ஆல் ரைட். நான் சொல்றது உன்ன பெத்த அம்மா, ஐ மீன் உன் உன்னோட பயலாஜிக்கல் மதர், ராஜம், ராஜராஜேஸ்வரி. அவங்கதான் மேசிவ் ஹார்ட் அட்டாக் வந்து சீரியஸா இருகாங்க" என்று விளக்கமாகச் சொல்ல,


"என்னடி சொல்ற? நீ இப்ப எந்த ஊர்ல இருக்க?" என்று அவர் அதிர்ச்சி மேலிடக் கேட்க,


"மா... நீ பிறந்த ஊர்.. நன்காட்டூர்லதான் இருக்கேன். அவங்கள வேற ஹாஸ்பிட்டல் செஞ் பண்ண போறேன். லொகேஷன் ஷேர் பண்றேன், நீ உடனே கிளம்பி வா" என்று சொல்ல, வெடித்துச் சிதறிய கேவலுடன் தன் கையில் வைத்திருந்த கைப்பேசியை நழுவ விட்டாள் அவளுடைய அம்மா மல்லிகா.


இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அருகிலிருந்து அவளைத் தேற்றக்கூட முடியாமல் தவியாய் தவித்துத்தான் போனாள், ஸ்வரா என்கிற ராஜராஜேஸ்வரி.


பல வருட காலமாகக் கட்டிக்காத்த உறவுகள் கை நழுவிப் போய்விடுமோ என்கிற அச்சத்துடன் பரிதாபமாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் அவளுக்கும் அவளுடைய அம்மாவுக்கும் காவல் தெய்வமாகத் திகழும் அல்லிக்கொடி என்கிற அன்பான பெண்மணி.


***3 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page