மடல் - 6
"அவங்களுக்கு ஜஸ்ட் ஃபீவர் அவ்ளோதான், ஒரு பாராசிட்டமல் போட்டா சரியா போயிடப்போகுது. அதுக்கு நீ இவ்ளோ எமோஷனல் ஆக வேண்டிய அவசியம் இல்ல ராஜ்" என கண்டனமாக மொழிந்தான் ஸ்வராவின் சிவந்து போன முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்த சக்தி.
"தீஸ் ஆர் ஆல் கனக்டட் வித் மை எமோஷன்ஸ் சக்தி. இத பத்தி எவ்வளவு எக்ஸ்ப்ளைன் பண்ணலும் உன்னால புரிஞ்சிக்க முடியாது, ப்ளீஸ் ஸ்டே அவே" என வெடுக்கென்று அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு,
"சுரேஷ்ண்ணா, தண்ணி ஓவர்ஃப்ளோ ஆகுது பாருங்க. போய் மோட்டர ஆஃப் பண்ணுங்க" என்று குரல் கொடுத்த படி மேலே தன் அறை நோக்கிச் சென்றாள்.
சுரேஷ் மோட்டர் அறை நோக்கிப் போக, "பிரேம்!" எனச் சத்தமாக அழைத்த சக்தி, அவன் பதறி அருகில் வந்து நிற்கவும், "எனக்கு சக்கர தூக்கலா ஸ்ட்ராங்கா காஃபி வேணும், உடனே" என்றான் ஹிந்தியில்.
அவனுக்கு இந்த இடம் புதிது என்பதால் என்ன செய்வது என்பது புரியாமல் ஸ்தம்பிக்க, "கமான் பிரேம், நான் காஃபி போட்டுத் தரேன்" எனச் சூழ்நிலைப் புரிந்து அவனுக்கு உதவ முன் வந்தான் ஆனந்த்.
சில நிமிடங்களில் பிரேம் காபியுடன் திரும்பி வர, அதைப் பருகிய பின்புதான் கொஞ்சமாவது ஆசுவாசம் அடைந்தான் சக்தி.
சில நிமிடங்களுக்கெல்லாம் குளித்து ஸ்கர்ட், டி-ஷர்ட் அணிந்து திரும்ப வந்து அமர்ந்த ஸ்வரா, தன் கைப்பேசியை எடுத்து டயல் செய்ய, அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
"இப்ப என்ன ஸ்டேட்டஸ் அண்ணா, ஹாஸ்பிட்டல் ரீச் ஆகிட்டீங்களா?" என்று அவள் கேட்க,
"இன்னும் இல்லம்மா, இன்னும் ஒரு டென் டு ஃபிப்டீன் மினிட்ஸ் ஆகும்னு நினைக்கிறேன். பட், பாட்டிம்மாக்கு ஃபீவர் குறைஞ்சிருக்கு. ஷி இஸ் ஸ்டேபிள்" என பதில் கொடுத்தான் எதிர் முனையில் இருந்த ராஜா.
"தென் ஃபைன், எனக்கு அப்பப்ப அப்டேட் பண்ணிட்டே இருங்க" என அந்த அழைப்பைத் துண்டித்து விட்டு நேராக உணவு மேசை நோக்கிச் சென்றாள்.
சரியாக அதே நேரம் அங்கே வந்து கொண்டிருந்தார்கள் சந்திராவும் அருணாவும்.
"ஹாய் ஆன்ட்டி வாங்க, ஹவ் ஆர் யு?' என ஸ்வரா அவர்களை வரவேற்க,
"நல்லா இருக்கோம் ஸ்வராம்மா" என சந்திரா அவளுக்குப் பதில் கொடுக்க, கூடவே தலையை ஆட்டி வைத்தாள் அருணா.
"என்ன ஆன்ட்டி இந்த நேரத்துல வந்துருக்கீங்க, எனிதிங் இம்ப்பார்டன்ட்" என்று கேட்க, இங்கு நடந்த அனைத்தையும் வீடு சுத்தம் செய்ய வந்தவர்கள் மூலமாக கேள்விப்பட்டுத்தான் அருணாவை உடன் அழைத்துக் கொண்டு அங்கே வந்திருந்தாள். அவர்களுக்கான இரவு உணவை ராஜம் தயார் செய்து வைத்து விட்டு போயிருக்கிறாரா என்பது பற்றி அவர்களுக்கே தெளிவில்லாமல் இருக்க, இங்கே தங்கி இருப்பவர்களுக்கான உணவை தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் கடுப்புடன்தான் வந்திருந்தாள்.
அதை முகத்தில் காண்பிக்காமல், "அந்த அம்மா பாட்டுக்கு உடம்பு சரியில்லன்னு பாதியிலேயே போயிடுச்சு! அப்படியே விட்டுட்டு இருக்க முடியுமா? உங்களுக்கு எல்லாம் ராத்திரி சாப்பாடு ரெடி செய்ய வேண்டியது ரொம்ப இம்ப்பார்ட்டன்ட்தான? அதுக்குதான் கண்ணு வீட்டுல போட்டதைப் போட்டபடி கிளம்பி வந்தோம்" என தேன் தடவிய குரலில் பதில் கொடுத்தாள்.
ஆனாலும் கூட அவளது பேச்சு ஸ்வராவுக்கு லேசாக எரிச்சலூட்ட, "ஓஹ், ஸோ கைன்ட் ஆப் யூ ஆன்ட்டி! ஆனா, உடம்பு சரியில்லன்னா கூட பாட்டிம்மா டின்னர் எல்லாம் செஞ்சு வச்சுட்டாங்க. ஷீ இஸ் ஸோ டெடிகேட்டட்" என அவளுக்குக் குட்டு வைத்தவள், "இல்லனா கூட இதெல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை ஆன்ட்டி, அதான் தேவையான ஐட்டம்ஸ் எல்லாமே இருக்கே! நாங்களே குக் பண்ணிக்குவோம். பாவம் நீங்கதான் தேவை இல்லாம இங்க வந்திருக்கீங்க" என்று வெகு சகஜமாகவே சொல்வது போல நறுக்கென்று சொல்லி முடித்தாள்.
ராஜம் சமையல் செய்து முடித்து விட்டார் என்பது ஒரு பக்கம் ஆசுவாசத்தைக் கொடுத்தாலும் ஸ்வராவின் இந்தப் பேச்சில் சந்திராவுக்கு உண்மையிலேயே ஒரு மாதிரியாகத்தான் ஆகிப் போனது.
ஆனாலும் அதை வெளியில் காண்பிக்காமல், "அது எப்படி ஸ்வராம்மா, எங்க வீட்டுக்கு கெஸ்ட்டா வந்துருக்கறவங்கள போய், நீங்களே சமையல் செஞ்சு சாப்பிட்டுகோங்கன்னு விட முடியும்?" எனச் சளைக்காமல் பதில் கொடுத்தவள், "சாப்பிட வாங்க ஸ்வராம்மா, எங்க கையாலேயே பரிமாறுறோம், அப்பதான் எனக்கு கொஞ்சமாவது திருப்தியா இருக்கும்" என்று குழைந்தாள்.
அதற்கு மேல் அதிகம் பிகு செய்யாமல், "ஆனந்த்… சுரேஷ் அண்ணா.,. பிரேம்… எல்லாரும் சாப்பிட வாங்க" என்று எல்லோரையும் சத்தமாக அழைத்தவள், சக்திக்கு மட்டும் பார்வையால் அழைப்பு விடுக்க, மற்றவர் எல்லாம் வந்து விட, அவன் மட்டும் அசராமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.
"பிரேம் உங்க பாச சாப்பிட கூப்பிடு, லேட்டா வந்தா இங்க என்ன மிச்சம் இருக்கும்னு நான் கேரண்டி கொடுக்க முடியாது, அப்பறம் பட்டினியாத்தான் தூங்கணும்" என்று அவள் அடாவடியாகப் பேச பிரேம் பரிதாபமாக சக்தியின் அருகில் போய் நிற்க, வேறு வழி இல்லாமல் எழுந்து வந்தான்.
அடுத்த ஒரு முக்கால் மணி நேரம் அவர்களது பந்தியிலேயே கழிய, உணவு நிரம்பி இருந்த பாத்திரம் எல்லாம் சுத்தமாகக் காலியாகிப் போனது.
உடல் அதிராமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு பரிமாறுவது போல சந்திரா பாவலா செய்ய, ஓடி ஆடி அனைத்தும் செய்தது அருணா மட்டுமே. அதன் பின் அந்த இடத்தைச் சுத்தம் செய்து பாத்திரங்களை ஒதுக்கித் தோட்டத்துக் கிணற்றடியில் துலக்குவதற்காகப் போட்டுவிட்டு அவள் வரும் வரை, அங்கே இருந்த மற்றவர்களுடன் அவர்களுக்கெல்லாம் சம்பந்தமே இல்லாத ஏதோ ஒரு பயனற்ற பேச்சைப் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தாள் சந்திரா.
அருணாவுக்கு உதவுவதற்காக போன ஸ்வராவையும் அதைச் செய்ய அவள் அனுமதிக்கவில்லை. இவையெல்லாம் ஸ்வராவின் கருத்தில் பதியாமல் இல்லை. அனைத்தையும் மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேதான் இருந்தாள்.
அந்த நேரம் பார்த்து ராஜாவிடமிருந்து அழைப்பு வர, "சொல்லுங்கண்ணா" என அதை ஏற்றாள்.
"பாட்டிம்மாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டோம்மா. ஃபீவர் ரொம்ப ஹையாதான் இருக்கு. அதனால ட்ரிப்ஸ் போட்டிருக்காங்க. அது முடிஞ்சதும் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வீட்டுக்கு அனுப்புறதா சொல்லி இருக்காங்க. மத்தபடி ஒர்ரி பண்ண தேவையில்ல" என்று அவன் தகவல் சொல்லி அழைப்பைத் துண்டிக்க அவளுக்குச் சற்று ஆசுவாசமாக இருந்தது.
கை வேலையை முடித்துக் கொண்டு அருணா வந்துவிட, "ஓகே ஸ்வராம்மா, நாங்க கிளம்புறோம். நீங்க நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு, காலையில பிரேக்பாஸ்ட் சாப்பிட எங்க வீட்டுக்கு வந்துருங்க" என்று அழைப்பு விடுத்தாள் சந்திரா.
"ஐயோ, உங்களுக்கு ஏன் ஆன்ட்டி வீண் சிரமம்! நாங்களே இங்க குக் பண்ணிப்போம். ஒரு பிரச்சனையும் இல்ல" என்று ஸ்வரா இங்கீதத்துடன் மறுக்க, உண்மையில் சந்திராவுக்கு அப்பாடா என்றுதான் இருந்தது.
ஆனாலும் இது போன்ற விஷயங்களில் வல்லரசு விட்டுக் கொடுக்கவே மாட்டான். அதுவும் இவர்கள் மூலம் ஏகப்பட்ட ஆதாயங்களை எதிர்பார்த்து நிற்பவன், அதனால் இவர்களை கூடுமானவரை மகிழ்ச்சி படுத்தவே எண்ணுகிறான். வேறு வழியில்லை, காலை அங்கேதான் சாப்பிட அழைக்க வேண்டும். வழக்கமான வீட்டு மனிதர்கள் வரை என்றால் அருணா தனியாகவே சமைத்து விடுவாள். ஆனால் இவ்வளவு பேருக்கு அவளால் சமாளிக்க முடியாது. ராஜமும் இல்லை என்பதால் வேறு யாரையாவது சமையலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆள் கிடைக்காத பட்சத்தில் தானேதான் செய்தாக வேண்டும். உள்ளுக்குள்ளே அவ்வளவு எரிச்சல் மண்டியது.
ஆனாலும், "ஐயய்யோ… அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது ஸ்வராம்மா, உங்களுக்குப் பிடிச்ச மெனுவ அங்கிளுக்கு மெசேஜ் செய்ங்க. காலையில ரெடியா இருக்கும். நீங்க வந்துருங்க" என்று தேனொழுகச் சொல்லிவிட்டு அருணாவும் அவளுமாக விடை பெற்று வெளியில் வந்தனர்.
ஓரளவுக்கு மேல் மறுக்க இயலாமல், “யூஷுவலா உங்க வீட்டுல என்ன செய்வீங்களோ அதையே செய்ங்க போதும். ஸ்பெஷலா எதுவும் வேண்டாம்” என்றபடி அவர்களை வழி அனுப்ப உடன் வந்தாள் ஸ்வரா.
அங்கே தங்களது காரைப் பார்த்துவிட்டு, "இதுக்குதான் இவனையெல்லாம் நம்பி கார கொடுக்கக் கூடாதுங்கறது. வண்டிய இங்க விட்டுட்டு, அவன் பாட்டுக்குக் கிளம்பிப் போயிட்டான், ச்ச" என்று ஜீவாவைக் குறித்து மெலிதாக முணுமுணுத்தபடி தன் இரு சக்கர வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு அருணாவைப் பின்னால் உட்கார வைத்து ஓட்டிச் சென்றாள் சந்திரா.
ராஜத்தைப் பற்றிய யோசனையுடனேயே வீட்டிற்குள் வந்து அவள் சோஃபாவில் அமர, "நீ போய் தூங்கு ராஜ், ராஜா வந்த உடனே நான் கால் பண்றேன்" என்று ஆனந்த் சொல்லவும்,
"இப்பதான சாப்பிட்டு முடிச்சோம் ஆனந்த், கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாம். ரொம்ப லேட் ஆகும் போல இருந்தா கண்டிப்பா போய் தூங்கறேன்" என்றவள் சிறிது நேரம் கைப்பேசியைக் குடைந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
சுரேஷின் மனைவியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வர பேசிக் கொண்டே அவன் வெளியில் சென்று விட்டான்.
"ஆனந்த், தூக்கம் வரலன்னா வாயேன் கொஞ்ச நேரம் கார்ட்ஸ் ஆடலாம்" என்று பிரேம் வந்து தூண்டில் போட, உண்டான சபலத்தில் அவன் ஓரக்கண்ணால் ஸ்வராவை ஏறிடவும், சற்று சந்தேகத்துடன் சக்தி எங்கே என்று அவள் பார்வையால் துழாவ, அவன் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் போய் முடங்கி விட்டிருப்பது தெரிந்தது.
"சும்மா டைம் பாஸ்க்குதான, ஆனந்த்? போ, ஆனா காசு வச்சு விளையாட கூடாது" இன்று அவள் அனுமதி கொடுக்க இதுதான் சாக்கென்று பிரபுவும் அவனுடன் சென்று விட, மூவருமாக போர்டிக்கோவில் உட்கார்ந்து விளையாடத் தொடங்கினர்.
சில நிமிடங்களுக்கெல்லாம் ஆட்டம் களைகட்டி விட, சுற்றுப்புறமே மறந்து விட்டிருந்தது மூவருக்கும்.
மனக்குழப்பத்தில் சரியாகச் சாப்பிடாமல் விட்டிருக்க, எதையாவது சாப்பிடும் வேட்கை உண்டானது ஸ்வராவிற்கு. பிரிட்ஜில் இருந்து பழம் எடுத்துச் சாப்பிடலாம் எனச் சமையல் கட்டிற்குள் நுழைய, அங்கே எல்லாம் கழுவிச் சுத்தமாக இருந்தது.
அப்பொழுதுதான் ராஜா சாப்பிடவில்லை என்பதே அவளுக்கு நினைவில் வர, 'அடடா ராஜா அண்ணா இப்ப நோம்புல இருக்காங்களே! வெளியில எதுவும் சாப்பிடவும் மாட்டாங்க! ஞாபகம் இல்லாம அவங்கள அனுப்பிட்டோமே… ச்ச… சுரேஷ் அண்ணாவை அனுப்பி இருக்கலாம்' என்று தன் தவறை எண்ணி நொந்தவள், அவனுக்காக ஏதாவது தயார் செய்யலாம் என, என்ன இருக்கிறது என்று பார்க்க பிரிட்ஜைத் திறந்தாள். தக்காளி வெங்காயம் தவிர காய்கறிகள் எதுவுமே இல்லை.
நேரத்தைப் பார்த்தால் பதினொன்றைக் கடந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது.
இருப்பதை வைத்து செய்ய ஏதுவாக, சப்பாத்தியும் டாலும் செய்யலாம் என முதலில் கொஞ்சமாக பயத்தம் பருப்பை வேகப் போட்டுவிட்டு கோதுமை மாவைத் தேடிப் பிடித்து சப்பாத்திக்கு மாவைப் பிசையத் தொடங்கினாள்.
யாரோ வரும் அரவம் கேட்கப் பின்னால் திரும்பிப் பார்த்தவள் அங்கே சக்தியைக் கண்டதும், அலட்சியமாகத் திரும்பி தன் வேலையைத் தொடர்ந்தபடி, "உன் பிஏ என் ஆளுங்கள தனியா தள்ளிட்டுப் போகும்போதே, நீ இப்படி எதையாவது செய்வன்னு எதிர்பார்த்தேன். ஒழுங்கா இங்கிருந்து போயிடு" என அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே பின்னாலிருந்து அவளை இறுக அணைத்தவன், "ப்ளீஸ் ராஜ், ட்ரை டு அன்டர் ஸ்டான்ட் மை சிச்சுவேஷன், எங்க நீ எனக்குக் கிடைக்காம போயிடுவியோங்கற பயத்துல தப்பு தப்பா என்னென்னவோ செஞ்சுட்டேன், ரியலி ஐம் வெரி சாரி" எனக் குரல் தழுதழுக்கக் கெஞ்சியபடி அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து, "ப்ளீஸ். எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடுடா" எனப் பிதற்றிக்கொண்டே போனான்.
இளகத் தொடங்கிய மனதையும் உடலையும் இழுத்துப் பிடித்து முழுவதுமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவள், கை முட்டியை அவனுடைய விலாவில் வைத்து அழுத்தி அவனைப் பின்னுக்குத் தள்ளி, "ஒரு தடவ சொன்னா உனக்குப் புரியாது, நீ இப்படியே லூசு மாதிரி செஞ்சிட்டு இருந்தன்னு வை" என அவள் அவனை எச்சரிக்கத் தொடங்க, வரவேற்பறையில் சலசலப்பு உண்டானது.
அவனைத் தள்ளிக்கொண்டு அவள் எட்டிப் பார்க்க, பகலவனும் அவளுடைய அம்மம்மாவும் வந்திருக்க, சுரேஷும் பிரபுவும் அவர்களது பயணப் பெட்டிகளை உருட்டிக்கொண்டு வந்தனர்.
தன் கணீர் குரலில் அவளுடைய அம்மம்மா அல்லி அவர்களிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருக்க, அந்த இடமே அதிர்ந்தது. மகிழ்ச்சி ததும்ப ஓடிப் போய் அவரை அணைத்துக்கொண்டவள், "ஈவினிங் ஃபோன் பண்ணும்போது ஒரு நால்ற அஞ்சு மணி இருக்குமா? எப்படி அம்மம்மூ இவ்வளவு சீக்கிரம் இங்க வந்த?" என்று வியக்க,
"நமக்குன்னு ஒரு தனி விமானம் வாங்கணும்னு ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தோம் இல்ல பேபி, பகலவன் வாங்கி எல்லா ஏற்படும் செஞ்சிட்டு இன்னைக்கு காலைலதான் தகவல் சொன்னான். இந்த கம்மினாட்டி இங்க வந்திருக்கவும், உடனே எடுத்துட்டு கிளம்பி வந்துட்டான். உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு சொல்லாம கொள்ளாம தொப்புனு வந்து குதிச்சிட்டோம்!" எனத் தன் கைப்பேசியில் அதன் படங்களைக் காண்பித்தவர், "இந்த ஊர் மெயின் சிட்டி, ஏர் போர்ட்டுலதான் நிறுத்தி வெச்சிருக்கோம், பேபி. கார்ல போனா ரெண்ற மூணு மணி நேரம்தான் பிடிக்கும். நேரம் கிடைச்சா நாளைக்குக் காலைல போய் நேர்ல ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடு' என்று சொல்ல,
அப்படியே அவரைக் கட்டி அணைத்து அவரது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள், "தேங் யூ அம்மம்மு... ஐம் ஸோ ஹாப்பி" என்று தன் மகிழ்ச்சியை வெளிபடுத்திவிட்டு, அருகில் நின்று அவர்களைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்த பகலவனின் தோளில் கைபோட்டுத் தன்னுடன் நெருக்கிக் கொண்டு, "நண்பேன்டா" என்று மெச்சிக் கொண்டாள்.
அவளுடைய எண்ணங்களுக்கு வடிவம் கொடுப்பவனல்லவா அவன், அந்தப் பெருமிதம்தான்.
"சுத்தம், ஏற்கனவே இவளுக்கு இருக்கற நாலு பாடி கார்ட்ஸ் போறாதுன்னு அடிஷனலா இன்னும் ரெண்டு. அவனுங்களையாவது எதையாவது சொல்லி ஈஸியா டைவர்ட் பண்ணலாம், ஆனா இந்த சொர்ணக்காவையும், ஸ்ரிக்ட் ஆஃபீசரையும் ஒண்ணுமே செய்ய முடியாதே!" என மனதிற்குள்ளேயே அலுத்தபடி சக்தி அங்கே வர, அல்லி அவனைப் பார்த்த பார்வையே அனலைக் கக்கியது.
மேலும் அவர் ஏதும் பேசிப் பிரச்சனையாகும் முன்பாக, "அம்மம்மா நீ வா மேல போய் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு சாப்பிடலாம், பகலவா, உன் ஃபிரண்டு கீழதான் தங்கி இருக்கான் நீ அவன் கூட ரூம ஷேர் பண்ணிக்கோ" என்று சொல்லிவிட்டு அவளுடைய அம்மம்மாவின் கையைப் பிடித்து இழுத்தவாறு மாடிக்குச் சென்றாள்.
ராஜத்தைப் பற்றி அவரிடம் சுருக்கமாகச் சொன்னவள், அவருக்குக் குளியலறையைக் காண்பித்து விட்டுக் கீழே வர, பகலவன் அவளுக்காக வரவேற்பறையிலேயே காத்திருந்தான். சக்தியும் அவனுக்கு அருகிலேயே அமர்ந்திருக்க, "ராஜ், இவனால உனக்கு எந்தத் தொந்தரவும் இல்லையே?" என்று அவளிடம் நேரடியாகக் கேட்க,
“ஒஹ், உண்மைய சொல்லனும்னா, நான் இங்க வந்ததே இவள ரொம்ப டிஸ்டர்ப் பண்ணதான். ஆனா எங்கிருந்து? மேடம்தான் சரியானா ஆங்க்ரி பேர்ட் ஆச்சே! போறாத குறைக்கு ஒருத்தனுக்கு நாலு பேர எனக்கு வில்லனா அபாயின்ட் பண்ணி வெச்சிருக்கீங்களே!" என அவன் புலம்ப, சற்று முன் நடந்த சம்பவத்தின் நினைப்பில் பக்கெனச் சிரித்தவள்,
"உனக்கு ஆள் கிடைச்சிடுச்சு இல்ல, நீ இப்படியே புலம்பிட்டு இரு" என்று அவனிடம் எள்ளலாகச் சொல்லிவிட்டு, "இவ்வளவு அவசரமா சார்ட்டர்ட் ஃபிளைட் வெச்சிட்டு இதுக்காக நீ இங்க ஓடி வந்ததே கொஞ்சம் ஓவர் தளபதி சூர்யா" எனப் பகலவனைக் கிண்டலடித்தவள், "உனக்கு சப்பாத்தி ஓகேவா" என்று கேட்க,
ஒரு சிரிப்புடனேயே, "வேணாம் தேவா, நாங்க டின்னர் சாப்ட்டுட்டுதான் வந்தோம் தேவா" எனப் பகலவன் அவளுக்குப் பதில் கொடுக்கவும் சமையலறை நோக்கிப் போனவளை ஒரு பெருமூச்சுடன் சக்தி ஏறிட,
அவனது தோளில் தட்டி, "இந்த சூர்யாவ அப்பறம் கவனி, இப்ப நீ என் கூட வா அர்ஜுன், எனக்கு தூக்கம் தூக்கமா வருது" என வம்படியாக அவனை அங்கிருந்து கிளப்ப,
கொலை காண்டாகிப் போய் அவனை முறைத்தாலும் அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலவில்லை சக்தியால், அமைதியாக அவனுக்குப் பின்னால் சென்றான்.
அவள் சமையலறைக்குள் செல்வதைப் பார்த்துவிட்டு சுரேஷ் அங்கே வர, ராஜாவுக்கான உணவைத் தயார் செய்து எடுத்துவைத்துவிட்டு வெளியில் வந்தனர்.
அதே நேரம் ராஜாவும் வந்துவிட, அவள் அங்கேயே காத்திருக்கவும், "பாட்டிம்மா இப்ப பெட்டரா இருக்காங்க மேம், வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டாங்க, டிஸ்சார்ஜ் பண்ணி அவங்கள அவங்க வீட்டுல சேஃபா விட்டுட்டுதான் வந்தேன். மறுபடியும் ஃபீவர் வந்தா பெரிய ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டாங்க" என்று அவளிடம் அனைத்தையும் சொன்னவன்,
"நீங்க போய் தூங்குங்க மேம், நத்திங் டு ஒரி" என்று சொல்ல,
"தேங்க்ஸ் ராஜாண்ணா, உங்களுக்கு டின்னர் ரெடி பண்ணி வெச்சிருக்கோம். சாப்டுட்டுத் தூங்குங்க" என்று சொல்ல, அவளது அக்கரையில் நெகிழ்ந்துதான் போனான்.
'ப்பா... இந்த நாள் ஏன் இவ்வளவு நீண்டுட்டே போகுது' என ஆயாசமாக இருந்தது அவளுக்கு. அவ்வளவு சுலபத்திலெல்லாம் சோர்ந்து போகிறவள் இல்லை, ஆனாலும் இன்று ஏனோ அவளுக்கு அதீத அயர்ச்சியாக இருந்தது. அறைக்குள் நுழைந்தவள், அவளுக்காக உறங்காமல் காத்திருந்த அல்லியின் அருகில் போய் படுத்து அவரை அணைத்துக் கொண்டாள்.
"ரொம்ப வருத்தமா இருக்கற மாதிரி தெரியுதே பேபி! என்ன பிரச்சன?" என்றபடி அவளது உச்சியை அவர் ஆதுரமாக வருட, அவளது கண்கள் கண்ணீரில் நிரம்பிப் போனது.
"ஏன் கண்ணு, என்ன நடந்துச்சு?" எனப் பதறியபடி அவர் எழுந்து அமர, "அம்மம்மா, ராஜம் பாட்டி இருக்காங்க இல்ல, அவங்க நினைப்புதான். அவங்க பட்ட கஷ்டத்த இன்னைக்குப் பாட்டா படிச்சாங்க தெரியுமா? சத்தியமா, கேட்கவே அவ்வளவு பயங்கரமா இருந்துது. இத மாதிரியெல்லாம் ஒரு வாழ்க்கைய கற்பன கூட செஞ்சு பார்க்க முடியல அம்மம்மா? அதான் அம்மா நினைப்பு வந்துடுச்சு. அவங்களும் இதையெல்லாம் அனுபவிச்சு வந்தவங்கதான?" என்று அவள் நெகிழ,
"ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு பேபி! உங்கம்மா இதையெல்லாம் அனுபவிச்சு மீண்டு வந்தவ!" என்று அவர் விளக்கம் கொடுக்க,
"ஆனாலும் கூட நம்ம சமூகத்துல இன்னைக்கு வரைக்கும் எதுவுமே மாறலயே அம்மு, அவங்க ஆரம்பக் கால வாழ்க்கைய தோண்டி போஸ்ட் மார்ட்டம் செய்யறாங்களே!" என அவள் வலியுடன் சொல்ல,
"செஞ்சா செய்யட்டும், போஸ்டு மார்ட்டம் செஞ்சாதான் பல உண்மைகள் வெளியில வரும்" என அழுத்தமாகச் சொன்னவர், "பேபி, மணி ஒண்ணாகப் போகுது! பேசாம தூங்கு, காலைல அவங்க வீட்டுக்குப் போய், அந்த அம்மாவ பார்த்துட்டு வருவோம், நம்ம தேடுறது அங்க கிடைச்சாலும் கிடைக்கும்" என்று அவளை அமைதிப்படுத்த, கண்களை மூடி உறங்க முயன்றாள். அவள் மனதிற்குள் மண்டிக் கிடக்கும் பெரும் புதிர் ஒன்றுக்கு விடை தரும் நாளாக விடியுமா அடுத்த விடியல்?
***
Super
Awesome epi....I very slightly guessed this twist on third epi itself, but the story flow is going very well...
Wow awesome