மடல் - 3
மஞ்சு கையுடன் எடுத்துவந்திருந்த பாத்திரங்களில் அனைத்தையும் அவர் நிரப்பிக் கொண்டிருக்க, தன் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து சுற்றுச்சுவர் ஓரமாக நிறுத்தினான் ஜீவா.
'இவன் ஏன் இப்ப இங்க வந்திருக்கான்?' என்கிற யோசனையுடன், "என்ன ஜீவா, இந்த நேரத்துல இங்க வந்திருக்க?" எனக் கேட்டபடி அவர் மகனை நோக்கிப் போக,
"ஏன், நீ இங்க வந்து ஊழியம் செய்யும் போது, நான் வரக்கூடாதா? நாமெல்லாம்தான் கொத்தடிமை வர்க்கமாச்சே!" எனக் குதர்க்கமாகப் பதில் வந்தது அவனிடமிருந்து.
"நான் என்ன கேட்டா நீ என்ன பதில் சொல்ற?" என அவனைக் கடிந்தவர், "வீட்டுல யாருக்காவது ஏதாவது உடம்பு சரியில்லயோன்னு பயந்து போயிட்டேன்" என்று முடிக்க,
"யாருக்கும் எந்தக் கேடும் இல்ல, வல்லரசுதான் என்ன கூப்பிட்டு அனுப்பியிருந்தான். இங்க வந்திருக்கிற மகாராணிக்கு ஓரிப்புத்தூர்ல இருக்கற இடத்தையெல்லாம் காமிச்சு அந்தம்மா ஏதாவது கேள்வி கேட்டா, தெளிவா விளக்கி சொல்லணுமாம்" என்றான் கடுப்புடன்.
தன் சொந்த வேலையைப் பார்க்க விடாமல் வல்லரசு இவனை இப்படி ஏவுவதில் உண்டான எரிச்சல் அவனுக்கு. இவனால் மறுக்கவும் முடியாது. அதற்கு குணா விடமாட்டார். இத்தனைக்கும் அங்கே மஞ்சுவும் அவளுடைய அம்மாவும் நிற்பதைக் கவனிக்காமலெல்லாம் இல்லை. அவர்கள் இதைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது தெரியும். இன்னும் சொல்லப்போனால் உள்ளுக்குள் இதை இரசிக்கவும் செய்வார்கள் என்பது அவனது அனுமானம்.
ஆனால் ராஜத்துக்குத்தான் உள்ளுக்குள்ளே பக்கென்று இருந்தது. இவனாவது நல்ல நிலைமைக்கு வருவான், தனக்கொரு மீட்சி கிடைக்கும் எனக் கனவு கண்டு கொண்டிருப்பவர். ஆனால் எல்லாமே தாமதமாகிக் கொண்டிருக்க, மனம் பதைத்து. "எனக்குப் பிள்ளையா வந்து பொறந்ததாலதான உனக்கு இந்தத் தலை எழுத்து" என வருந்தியவரின் கண்களில் நீர் கோர்த்துவிட,
"விடுமா, பார்த்துக்கலாம்" என்றவன், அவரைத் தாண்டி உள்ளே செல்ல எத்தனிக்க, அளவிடுவது போல அவனையே பார்த்தபடி வாயிற்கதவருகில் நின்றிருந்தாள் ஸ்வரா.
தூக்கிப் போட்ட குதிரை வாலுடன், கணுக்கால் தெரியும்படியான பலாஸோ, லாங் டாப் அணிந்து எந்தவொரு மேற்பூச்சும் அற்ற இயற்கை எழிலுடன் நின்ற அந்த சாக்கலேட் நிறத்தழகியைப் பார்த்து ஒரு நொடி திகைத்தான். பளபளத்து அவளது கண்கள் காட்டிய பாவத்தில், தான் பேசியதை அவள் கேட்டுவிட்டாளோ என்கிற அதிர்வு தோன்றி, ஒரே நொடிக்குள், 'கேட்டா கேட்டுட்டுப் போறா! என்ன இப்ப?' என்று உண்டான திமிரை அப்படியே அவனது முகம் பிரதிபலிக்க, அதையும் உணர்ந்த அவளது கண்களின் பளபளப்பு இன்னும் கூடித்தான் போனது.
அதற்குள் இருவருக்கும் இடையில் வந்த ராஜம், "இவன்தான் என் கடைசி புள்ள, பேரு ஜீவனந்தம். ஜீவா... ஐ.பி.எஸ். பரிட்சைக்குப் படிச்சிட்டு இருக்கான். இன்னைக்கு இவன்தான் உங்களுக்கு இடத்தையெல்லாம் காமிக்க போறானாம்" என்றார் பெருமை பொங்க.
"ஹை" என ஸ்வரா அவரது அறிமுகத்தை இயல்பாக ஏற்க, அவளைப் பார்த்து மிதமான ஒரு புன்னகையைச் சிந்தியவன், 'இதெல்லாம் இப்ப தேவையா?' என்பதாக அவனது அம்மாவைப் பார்த்து வைக்க,
அதைக் கண்டுகொள்ளாமல், "சாப்டு வந்துட்டியா ஜீவா, இல்லனா உள்ள வந்து ஏதாவது சாப்டுட்டுக் கிளம்பு" என அவர் வாஞ்சையுடன் சொல்ல, அவனது முகத்தில் ஒரு வியந்த பாவம் வந்துபோனது.
"சாப்டுட்டேன் மா,பெரியண்ணி தோச ஊத்திக் கொடுத்துச்சு" என்று அவன் சொன்ன பதிலில் அடுத்ததாக ராஜம்தான் வியக்கும்படியானது.
"மேம், நீங்க ரெடியா, நாம கிளம்பலாமா?" என அவன் காரியத்தில் கண்ணாகக் கேட்க,
"யா, ஆஃப் கோர்ஸ்" என்றவள், தன் ரத கஜ துரக பதாதிகள் சகிதம் கிளம்பி வெளியில் வந்தாள்.
யானை போலக் கம்பீரமான பெரிய இரக கார்கள் இரண்டில் அவளது பாதுகாவலர்கள் இரண்டிரண்டு பேராக ஏறிக்கொள்ள, எந்த நேரமும் சீறிப்பாயத் தயாராக இருக்கும் சிறு கருஞ்சிறுத்தைக் குட்டியைப் போன்றிருக்கும் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டுக் கார் ஒன்றின் ஓட்டுநர் இருக்கையில் ஒயிலாகப் போய் அமர்ந்தாள் ஸ்வரா.
அனிச்சைச் செயலாக அவளது பாதுகாவலர்கள் அமர்ந்திருந்த கார் ஒன்றை நோக்கி ஜீவா செல்ல, "ஹை மிஸ்டர் ஜீவா, என் கூட வாங்க, ட்ராவலிங்க் டைம வேஸ்ட் பண்ணாம, இப்ப பார்க்க போற இடத்த பத்தின டீடைல்ஸ பேசிட்டே போகலாம்" என்றாள் இயல்பாக.
ஒரு பெண் வாகனத்தை ஓட்ட, அவளுக்கு அருகில் உட்கார்ந்து போக அவனுக்குச் சற்றுச் சங்கடமாக இருந்தாலும் மறுக்க இயலாமல் போய் அமர்ந்தான்.
அந்த காரை ஒரு பல்லக்காகவும், அவளை ஒரு இராஜகுமாரியாகவும் உருவகப்படுத்தி ஊற்றெடுத்த அவனது கற்பனையில் அவனுக்குச் சிரிப்பு வர, வாய்க்குள்ளேயே அதை அடக்கினான்.
இலாவகமாக அந்த காரை செலுத்தியபடியே, "நான் ஒண்ணும் மஹாராணியெல்லாம் இல்ல மிஸ்டர் ஜீவா" என்று அவள் இலகுவாகப் பேச்சைத் தொடங்கவும், திடுக்கிட்டுத் தூக்கி வாரிப் போட்டது அவனுக்கு. 'தான் மனதில் நினைத்ததை நினைத்த நொடியே, நினைத்தது நினைத்தபடியே எப்படிச் சொல்கிறாள்?' எனச் சிந்தித்தவனுக்கு, சில நிமிடங்களுக்கு முன் அவன் சொன்னதற்குத்தான் பதில் கொடுக்கிறாள் எனச் சற்றுத் தாமதமாகத்தான் மூளைக்குள் உரைத்தது.
"சாரி, சும்மா ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன்" எனத் தடுமாற,
"நீங்க கம்யூனிஸ்ட்டா மிஸ்டர் ஜீவா" எனப் பேச்சுவாக்கில் கேட்பது போல வினவினாள்.
'கடவுளே, அடுத்து என்ன... இந்த மொதலாளி வர்க்கத்துக்கு வக்காலத்து வாங்க போறாளா இவ?' என்ற கேள்வி மனதிற்குள் எழ, "ச்சச்ச, இங்க அவ்ளோ சீனெல்லாம் இல்லங்க, ஆனா ஜஸ்ட் அ ரேஷனலிஸ்ட்னு வேணா சொல்லலாம்" என்றான் புன்முறுவலுடன்.
"ஆஹ்... இது போறாதா?" எனக் குதூகலித்தவள், "இடது சாரி சிந்தனையாளர். அப்படினா நீங்களும் அடக்குமுறைக்கு எதிரான ஆசாமிதான?" என முடித்தாள்.
'நீங்களும்னா? அப்ப இவளும் இப்படித்தானோ?' எனப் புருவம் உயர்த்தி அவளைப் பார்த்தவன், "பரவாயில்ல, கம்யூனிசம்... அடக்குமுறை... இந்த மாதிரி வார்த்தையெல்லாம் உங்கள மாதிரி எலைட் பொண்ணுங்க வாயில இருந்து இப்பதான் முதல் தடவையா கேட்கறேன்" என வியந்தான்.
"எலைட்டு… ம்ம்… நாந்தான், நான் மஹாராணி இல்லனு முதல்லயே சொன்னேனே, நீங்க கவனிக்கலையோ?" எனக் கேட்டாள் குத்தல் தொனியில்.
"ஹாஹா... பார்க்கும்போது அப்படி தெரியலியே! முன்னே மூன்று பேர் இழுக்க, பின்னே நான்கு பேர் தள்ள" என அவன் பகடி பேசவும், அவளுக்கு அது சுத்தமாகப் புரியவில்லை.
"ஓஹ் கமான் மிஸ்டர் ஜீவா! என்ன சொல்ல வாரீங்கன்னே புரியல" என அவள் கண்களைச் சுருக்கவும்,
"நீங்க வயலன்ட் ஆக மாடீங்கன்னா நான் எக்ஸ்பிளைன் பண்றேன்" என்றான் விஷமமாக.
வில்லங்கமாகத்தான் ஏதோ வரப்போகிறது என்ற முன்னெச்சரிக்கையுடன், "அதுக்கெல்லாம் நான் கேரண்டி கொடுக்க முடியாது, பட்... ட்ரை டு கன்ட்ரோல் மை டெம்பர், இட்ஸ் அ வேர்ட்" எனப் பதிலுரைத்தாள் கெத்தாக.
அதற்கு மேல் பிகு செய்யாமல், "முன்னே கடிவாளம், மூன்று பேர் தொட்டு இழுக்கப் பின்னே இருந்து இரண்டு பேர் தள்ள – எந்நேரம் வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை மாதம் போம் காத வழி! அப்படின்னு தெனாலிராமன் குதிரையைப் பத்தி காளமேகப் புலவரோட ஒரு சிலேடை, அதாவது டபிள் மீனிங் பாட்டு" என்றவன், அவளது பக்கென்ற சிரிப்பில் அதன் அர்த்தம் அவளுக்குப் புரிந்துவிட்டது என்பது விளங்க, "வஞ்ச புகழ்ச்சி அணின்னா தெரியுமா" என்று வேறு கேட்க,
"ஹலோ, என் கார பார்த்தா உங்களுக்கு சோப்ளாங்கி குதிரை மாதிரியா தெரியுது? இல்ல என்னதான் சொல்றீங்களா?" எனக் கேட்டாள் காரமாக.
'இவளை நேரில் பார்த்து வெகு சில நிமிடங்கள் மட்டும்தானா ஆகிறது?' ஏதோ பல காலம் பழகிய உணர்வைக் கொடுக்கிறாளே!' என வியப்பானது அவனுக்கு.
"ச்ச... ச்ச... உங்களைப் போய் அப்படி நினைக்க தோனுமா? சும்மா ஃபன்க்குச் சொன்னேன்" என்றவன், "உண்மையாவே நான் என்ன ஃபீல் பண்ணேன் தெரியுமா?" எனக் கேட்க,
புருவம் உயர்த்தி அவனை அவள் பார்த்த பாவனையில் தொலைந்தே போனவன், "ஒரு பிரின்சஸ் பல்லக்குல பவனி வர மாதிரி" என்றான் தன் இரசனையை மறைக்க இயலாமல்.
"போச்சுடா" என அலுத்தவள், "உங்க கிட்ட மட்டும் ஒரு உண்மைய சொல்றேன் மிஸ்டர் ஜீவா! நான் பிரின்சஸோ இல்லக் குவீனோ கிடையாது, நான் எப்பவுமே என்னை அப்படி நினைச்சதில்ல, ஆனா என்னோட அம்மா ஒரு மஹாராணிதான், தனக்கான ஒரு சமஸ்தானத்தைத் தானே போராடி உருவாக்கின ஒரு மஹாராணி" என்றாள் பெருமையாக, அதை எந்தளவுக்கு உணர்ந்து சொல்கிறாள் என்பது அவளது குரலிலும் பாவனையிலும் அப்பட்டமாக வெளிப்பட, அவனுக்கு அந்தப் பேரரசியை நேரில் காணும் ஆவலே உருவாகிவிட்டது.
இவ்வளவு பேச்சுக்கு நடுவிலும் 'லெப்ட்' 'ரைட்' என அவளுக்கு வழி சொல்லவும் அவன் மறக்கவில்லை.
அதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய இடமும் வந்துவிட, "இங்கதான் ஓரமா நிறுத்திக்கோங்க" என்றவன், "அந்த ப்ராபர்ட்டியோட டீடைல்ஸ் பேசணும்னு சொன்னீங்க, கடைசில சம்பந்தமே இல்லாம என்னவோ பேசிட்டு வந்திருக்கோம் பாருங்க" என அவன் உரைக்க,
"எது எப்படியோ, என்ன உயர தூக்கி வெச்சு, தள்ளி நின்னு கைக் கட்டி பவ்யமா ட்ரீட் பண்ணாம நீங்க கேஷுவலா பேசிட்டு வந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்றபடி வாகனத்தை நிறுத்தினாள் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.
"இட்ஸ் மை ப்ளெஷர் பிரின்சஸ்' என இயல்பாக அதை ஏற்றவன் அவளது பல்லக்கிலிருந்து இறங்கினான்.
மற்ற இரண்டு வாகனங்களையும் நிறுத்திவிட்டு அவளுடைய பாதுகாவலர்களும் வந்துவிட, அவர்கள் வந்த வேலை மொத்தமாக அவர்களைத் தனக்குள் இழுத்துக்கொண்டது.
நிற்க நிதானிக்க அந்த நிலங்களை அவளுக்குச் சுற்றிக் காண்பித்தான் ஜீவா. அதன் பரப்பளவு, பட்டா, வில்லங்கம் தொடர்பான கேள்விகள், அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் பற்றிய சந்தேகங்கள், அங்கே வைக்கப்படும் பயிர் வகைகள், அவற்றில் விலை என ஒன்று தொட்டு ஒன்று நிறையக் கேள்விகள் இருந்தன ஸ்வராவிடம்.
அவளது எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கொடுக்கும் திறமை ஜீவாவிடம் இருந்தது.
மனதளவில் ஒருவரை ஒருவர் மெச்சிக்கொண்டார்கள். இடையிடையே அங்கே இருக்கும் மரங்களிலிருந்தே இளநீர், நுங்கு, கொய்யாப்பழம், சப்போட்டா என அங்கே காவலுக்கிருக்கும் ஆட்களைக் கொண்டு வரவைத்து, அவர்களுக்குக் கொடுத்து உபசரித்தான்.
அவளுக்கு அந்த இடம் பிடித்துவிட்டது என அவளது திருப்தியான நடவடிக்கையிலேயே புரிந்தது.
ஆனாலும், "வல்லரசு கேட்டா என்ன பதில் சொல்லட்டும்?" என அவன் போட்டு வாங்கியதற்கு,
"இத ஒரு சாய்ஸா வெச்சுக்கறேன், எதுக்கும் இன்னும் சில இடத்தைப் பார்த்துட்டு ஃபைனலைஸ் பண்ணிக்கலாம்" எனப் பிடிகொடுக்காமல்தான் பதில் சொன்னாள்.
அப்பொழுது முகம் முழுவதும் பூசிய யோசனையுடன் அவனது முகத்தையே உற்று அவள் பார்த்த பார்வைக்கு அவனுக்கு அர்த்தமே விளங்கவில்லை.
அனைத்தும் முடிந்து வீடு திரும்ப, மதிய உணவு நேரம் ஆகிவிட்டிருக்க, ஜீவாவைத் தன்னுடன் சாப்பிட வைத்துத்தான் அவனை அங்கிருந்து போக அனுமதித்தாள்.
அதைவிட ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அன்றைய தினம் அவனுக்குக் கொடுத்தது.
அவனுடைய அம்மா, வெகு இயல்பாகப் பேசியபடி அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டதைப் பார்த்து அவன் அடைந்த உவகையை வார்த்தைகளால் விளக்கச் சொன்னால் அது அவனால் இயலாது. வெளியில் வரும் வரை அணையிட்டுத் தடுத்து வைத்திருந்த கண்ணீர் உடைப்பெடுக்க, வீதியைப் பார்த்து அவனது வாகனத்தைக் கூட செலுத்த இயலவில்லை ஜீவானந்தத்தால்.
'உண்மையாவே நீங்களே சொன்ன மாதிரி நீங்க இராணியெல்லாம் இல்ல ஸ்வரா, நீங்க ஒரு தேவத, என் அம்மாவோட முகத்துல ஒரு மலர்ச்சியைக் கொண்டு வந்த தேவத!' என எண்ணிக்கொண்டான்.
ஏனோ, யாரைப் பற்றி நினைக்கவே கூடாது எனச் சபதம் எடுத்திருந்தானோ, காட்டு விலங்கொன்றின் கோரப் பசிக்கு இரையாகி, புகைப்பட சட்டத்துக்குள் அடங்கிப்போயிருந்த அவனது அக்காவின் நினைவு மேலெழும்பி நெஞ்சை அடைத்தது.
***
நன்கு உயரமாக வளர்ந்து, சுற்றிலும் கிளைகளைப் பரப்பி அடர்ந்த இலைகளால் குடை போலக் கவிழ்ந்திருந்த வேப்பமரம் ஒன்று அந்த பங்களாவின் பக்கவாட்டில் இருந்தது.
அதனைச் சுற்றி மார்பிள் கற்கள் பதித்த திண்ணையை அமைத்திருந்தான் வல்லரசு.
மதிய வெயில் நேரம் என்றாலும் கூட அந்த மரம் தந்த நிழற்கொடையில் அப்பளிங்கு கற்கள் குளிர்ந்தே இருக்க, அதில் வசதியாக உட்கார்ந்து மடிகணினியில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தாள் ஸ்வரா. ஒரு கண்ணாடிக் குவளையில் இளநீரை நிரப்பி அவளுக்கு எடுத்துவந்தார் ராஜம்.
"ஓஹ் நோ பாட்டிம்மா, இடம் பார்க்க போன இடத்துல உங்க சன் என்னை விழுந்து விழுந்து கவனிச்சதுல ஆக்சுவலி எனக்குப் பசியே இல்ல. நீங்க கஷ்டப்பட்டு சமைச்சு வெச்சிருக்கீங்கன்னுதான் தம் கட்டி சாப்டேன், மேலயே இதையும் தள்ளி டம்ப் பண்ண முடியாது?" என மூச்சு வாங்கினாள் அவள்.
"ஐயோ, அப்படியே வெச்சா புளிச்சி போயிடுமே சாமி, பிரிஜ்ஜுல வெச்சு குடிச்சாலும் சத்துப் போயிருமே" என வருந்தினார் ராஜம்.
"ஒண்ணு செய்வோமா?" என்று அவள் கேட்க,
அவர் தலை அசைக்கவும், "முதல்ல இங்க வந்து உட்காருங்க" என்றாள் கட்டளை போல,
சுற்றும் முற்றும் பார்த்தபடி அவர் சங்கடத்துடன் அவளுக்கு அருகில் வந்து உட்கார, "இத நீங்க குடிங்க" என அடுத்த கட்டளையைப் பிறப்பித்தாள்.
"அய்யயோ, வேண்டாம் சாமி, எனக்கு இதெல்லாம் சேராது, சளிப் புடிச்சிக்கும்" என அவர் காரணத்துடன் தன் மறுப்பைச் சொல்ல,
"எல்லாம் வயசான கோளறு, வேற ஒண்ணும் சொல்றதுகில்ல" எனப் பெரிதாகப் புன்னகைத்தவள்,
"எங்க அம்மம்மாவும் இப்படிதான், கத்தரிக்கா சாப்டாக்க அரிப்பெடுக்கும். வெண்டைக்கா சாட்டாக்க கோழ கட்டும், கேரட் சாப்டாக்க சுகர் வந்துடும், இத சாப்ட்டா சளிப் புடிக்கும், அத சாப்ட்டா கேஸ் புடிச்சிக்கும்ன்னு முக்கால்வாசிப் பதார்த்தத்த ஒதுக்கிடுவாங்க. கடைசில சின்ன வெங்காயமும், முருங்கைக் கீரையும் மட்டும்தான் மிஞ்சும்" எனச் சொல்லிச் சிரிக்க,
"அம்மம்மான்னா, உங்க அம்மாவோட அம்மாவா சாமி?" என்று அவர் கேட்க,
"ஆமாம்" என்றவள், மஞ்சு அந்தப் பக்கமாகச் சுத்தம் செய்ய வரவும், "மஞ்சு இங்க வாடா?" என்று அழைக்க, புன்னகையுடன் அவளை நோக்கி வந்தாள்.
தினமும் இருமுறை அவள் அங்கே வரவும், வலிய அழைத்து அவளிடம் ஓரிரு வார்த்தைகள் பேசாமல் விட மாட்டாள். நடிகையர், மாடல்கள் போன்ற அவளுடைய தோற்றப் பொலிவில் ஏற்கனவே மஞ்சுவுக்கு அவளை மிகவும் பிடித்துப் போயிருக்க, இப்படி தன்னை மதித்துப் பேசுவதில் இன்னும் கொள்ளை கொள்ளையாகப் பிடித்தது.
ராஜத்தின் கையிலிருந்த இளநீர் குவளையை வங்கி அவளிடம் நீட்ட, அவளுக்குத் தூக்கி வரிப் போட்டது. ஒரு பீதியுடன் ராஜத்தை ஏறிட, அவரது முகமும் பேயறைந்தது போலாகியிருக்க, "அக்கா, நாங்க இதுலயெல்லாம் சாப்பிடக் கூடாது" என மறுத்தாள் மஞ்சு.
"ஏன் மஞ்சு, இதுல என்ன பிரச்சன?" என அவள் கூர்மையாகக் கேட்க,
"இல்லமா, அவங்கல்லாம் வேற ஆளுங்க. நம்ம வீட்டுப் பாத்திரத்துல சாப்பிட கொடுக்க மாட்டோம்" என அவளுக்கு ராஜமே பதில் சொன்னார்.
அதற்குள் ஓடிப் போய் அவள் ஒரு சிறு தூக்குச் சட்டியை எடுத்து வர, அந்த இளநீரை அதில் ஊற்றினார் ராஜம். அதை எடுத்துக்கொண்டு அவள் அங்கிருந்து அகன்றுவிட, கொதித்தே போய்விட்டாள் ஸ்வரா.
"உங்களுக்கே இதெல்லாம் கொஞ்சமாவது நியாயமா படுதா பாட்டிம்மா?" என முகத்துக்கு நேராகக் கேட்டுவிட,
“இங்கத்தைய நியாயம் இதுதான் ஸ்வராம்மா, இன்னைக்கு நேத்து இல்ல இதெல்லாம் நாங்க காலம் காலமா கடைபிடிச்சிட்டு இருக்கற பழக்கம்" என்றார் வெகு இயல்பாக.
"இந்தப் பழக்கவழக்கமெல்லாம் விடுங்க, முதல்ல உங்க மனசுக்கு இது சரின்னு படுதா?" என மிக அமைதியாக அவள் கேட்க, தடுமாறிப்போனார் ராஜம். அவர் வாழ்வில் நடந்து முடிந்த பலவும் அவரது மனதிற்குள் மின்னல் வெட்டிப் போக, நன்மை தீமைக்கு இடையில் சிக்கி அவரது பகுத்தாராயும் அறிவு சற்றுத் தள்ளாடிப்போனது.
"இதுதான் சரி... இதுதான் தப்புன்னு எதுவும் நிஜமில்லை சாமி. இப்படி செய்யறோமேன்னு சிலது சமயத்துல மனச உறுத்தினா கூட, இதையெல்லாம் என்னால கை விட முடியாது. ஏன்னா, அப்படியே பழகிடுச்சு!" என்றார் தன் குற்ற உணர்ச்சியை மறைத்துக்கொண்டு.
"சரி, இத விடுங்க! நீங்களும் வல்லரசு அங்கிளும் ஒரே ஆளுங்களா?" என ஸ்வரா கேட்க, "ஆமாம், அவங்கல்லாம் எங்க தூரத்துச் சொந்தம்தான், அதனாலதான் சமையல்கட்டு வரைக்கும் விடறாங்க" என்றார் பெருமிதத்துடன்.
"இதுல என்ன அவ்வளவு பெருமை உங்களுக்கு?" எனக் குத்தலாகக் கேட்டவள், "அப்படினா அவங்க உங்களை சமமாதான நடத்தணும். ஆனா ஏன் உங்கள, நீங்க மஞ்சுவ ட்ரீட் பண்ற மாதிரி ட்ரீட் பண்றாங்க?" என அவள் அடுத்துக் கேட்ட கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை ராஜம்.
"அது, அது" எனப் பதில் சொல்ல இயலாமல் அவர் தடுமாற,
"அது ஒண்ணுமில்ல, பண வசதியில அவங்க உங்கள விட ரொம்ப மேல இருக்காங்க, அவ்வளவுதான். அவங்க உங்க எல்லாரையும் டாமினேட் பண்றாங்க, நீங்க உங்களுக்கும் கீழ இருக்கறவங்கள டாமினேட் பண்றீங்க, ரெண்டுத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்ல" என்று அவள் சலிப்புடன் சொல்ல,
"உண்மைதான் சாமி, ஜீவாவும் இப்படிதான் சொல்லும். ஆனா என்னால என் புருஷனை மீறியே ஒரு வேல செய்ய முடியாது, இதுல ஊரைப் பகைச்சிட்டு என்ன செய்ய முடியும் சொல்லுங்க?" என அவர் வேதனையுடன் கேட்க,
"ஒண்ணுமே செய்ய வேண்டாம் பாட்டிம்மா, ஆனா மனசளவுல மாற்றத்துக்குப் பழகிக்குங்க. அது நம்ம பேச்சுல எதிரொலிக்கும். அட்லீஸ்ட், சின்ன சின்ன மாற்றங்களையாவது கொண்டுவரும். நான் உங்கள ரெஸ்பெக்ட்டா ட்ரீட் பண்ணும்போது நீங்க எவ்வளவு சந்தோஷபட்றீங்க, இதே சந்தோஷத்தை நீங்க மத்தவங்களுக்குக் கொடுக்க வேணாமா? என்றாள் உறுதியான குரலில்.
"சின்ன பிள்ளையா இருந்தாலும் பெரிய பெரிய பேச்செல்லாம் சர்வ சாதரணமா பேசறீங்க சாமி. இதெல்லாம் படிப்புக் குடுத்த துணிச்சல்தான் இல்ல" என அவர் வியப்புடனேயே கேட்க,
"மே பீ, இருக்கலாம். இல்லன்னா என் வாழ்க்கை முறையும் கூட ஒரு காரணமா இருக்கலாம்" என்றவள், "ஜீவா அளவுக்கு உங்க வீட்டுல வேற யாரும் படிக்கலையா?" எனக் கேட்டாள்.
"இல்லையே, பெரியவ ஒம்பதாவது படிக்கும்போது வயசுக்கு வந்தா, அதனால படிப்ப நிறுத்தி, பதினெட்டு வயசு ஆன உடனே கட்டிக் கொடுத்துட்டோம். பெரிய பையனாவது ப்ளஸ் டூ வரைக்கும் போய் ஃபெயில் ஆனான், சின்னவன் எட்டாவதே தாண்டல. ஏதோ எங்க குலசாமி புண்ணியத்துல இவன் மட்டும் பொறுப்பா படிச்சிட்டு இருக்கான்" என்றார் வெள்ளந்தியாக.
அவர் சொன்னவற்றை மனதில் அசைபோட்டபடி, "அடேயப்பா, நாலு பிள்ளைங்களா உங்களுக்கு" என வியந்தவளாகக் கேட்டாள் ஸ்வரா.
"அட நீங்க வேற பாப்பா, ஆறு பெத்தேன், அதுல எனக்கு நாலுக்குதான் கொடுப்பன" என்றார் அலுப்பும் சலிப்புமாக.
"ஐயோ" என அவள் அதிர,
"இதுக்கே ஐயோன்னா, இதுல ரெண்ட இஸ்கேன் செஞ்சு, பொட்டப்பிள்ளைன்னு கண்டுபிடிச்சி வயித்துல இருக்கும்போதே கலைச்சு விட்டோம் தெரியுமா?" எனக் கேட்டு அவளை மேலும் அதிர வைத்தார் ராஜம்.
'வயிற்றிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டுபிடித்து கருக்கொலை செய்திருக்கிறார்கள் என்றால், அதுவும் பல வருடங்களுக்கு முன்பே! எப்படி சாத்தியப்பட்டது?' என்ற கேள்வி மனதுக்குள் குடைய, அவள் பேச்சற்று அமைதியாகிவிடவும், "ஸ்வராம்மா, இந்தக் கிழவி மனசுக்குள்ள, வெளியில சொல்ல முடியாத பாரம் வண்டி வண்டியா மண்டி கிடக்கு, அத யார் கிட்டயாவது சொல்லி எறக்கி வெச்சா, நான் வழர கொற காலமாவது நிம்மதியா போகும், நான் உங்க கிட்ட சொல்லி ஆறுதல் தேடிக்கட்டுமா?" என அவர் தழுதழுக்க, நீர் தளும்பித் திரையிட்ட அவரது விழியில் கலந்து, "நீங்க எங்கிட்ட தாராளமா சொல்லலாம் பாட்டிம்மா, தயங்காம சொல்லுங்க" என்றாள் ஸ்வரா.
அவளிடம் இப்படியெல்லாம் பேச வேண்டும் என எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லை, இல்லை இவளிடம் இப்படிப் பேசுவோம் என அவரே நினைத்திருக்க வில்லை. அவள் சகஜ பாவத்தில் இவருடன் பேசவும், காலை மகனை இப்படி கண்டது முதலே நெஞ்சை குத்திக்கொண்டிருந்த பழைய நினைவுகள் ஒருவேளை அவரை இப்படி பேசவைத்துவிட்டதோ என்னவோ!
ஒப்பனைகள் ஏதுமில்லாமல் அவள் காண்பிக்கும் அன்பா, அல்லது அவளுடைய முகத்தைப் பார்த்ததுமே ஜன்ம ஜன்மாந்திர பந்தம் போல அவர் மனதுக்குள் துளிர்விட்ட ஏதோ ஒரு உணர்வா, என்னவென்று பிரித்தாராய அவரால் இயலவில்லை. கண்மூடித்தனமான ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் அவளிடம் தன் அந்தரங்கத்தைச் சொல்லத் தயாரானார்.
வயசுக்கு வந்த பாவம்…
வாக்கப்பட்டு வந்தேன்டி…
நான் வாக்கப்பட்டு வந்தேன்டி,
நெஞ்சில் ஈரமில்லா ஆம்பளைக்கு!
புள்ள பெத்துக் கொடுக்கத்தானோ பொட்டச்சியா நாம்பொறந்தேன்?
ஆம்புள்ள பெத்துக் கொடுக்கத்தானோ பொட்டச்சியா நாம்பொறந்தேன்?
விசேசம் உண்டான்னு கேட்டதுங்க கேள்விக்கெல்லாம்,
தள்ளிப் போன பின்னதான நிம்மதியா பதில் சொன்னேன்?
நாளு தள்ளிப் போன பின்னதான நிம்மதியா பதில் சொன்னேன்?
அஞ்சாம் மாசத்துல மசக்கைக்கு மருந்தூத்தி, நாட்டு மருந்தூத்தி…
ஏழாம் மாசத்துல கலர் கலரா வளை அடுக்கி, சீமந்த வளை அடுக்கி…
ஆம்பளைய பெத்துப் போட ஆசி சொன்ன வாயிகெல்லாம்….
பொட்டையத்தான் பெத்தெடுத்து அவலாகிப் போனேன்டி!
தலைச்சன் பொண்ணாகி தலையெழுத்து வேறாகி…
என் தலை எழுத்து வேறாகி…
ஒரு வருஷம் முடியகுள்ள மறுபடியும் மடி நிரம்பி…
மறுபடியும் மடி நிரம்பி…
பத்துமாசம் நான் சுமந்த சுமையொன்னும் சிசுவில்ல…
அடிவயிறு நெருப்பு அது! நெஞ்சு முட்ட வெறுப்பு அது!
ஆணா அது பொறந்திருந்தா அரசியா வாழ்ந்திருப்பேன்!
அதுவும்தான் பொண்ணாகி எம்பொழப்பு மண்ணாகி…
மாமியாக்காரிகிட்ட மதிப்பெழந்து போனேன்டி!
கள்ளிப்பால் விஷம் ஊத்தி மண்ணுக்கு ஒரு புள்ள...
இஸ்கேனு மிசினு புண்ணியத்துல காப்பிள்ப... அர பிள்ள...
அத்தனையும் கண்டவ நான்... தாங்கிட்டு நின்னவ நான்...
நாளெல்லாம் நரகமாப் போய் ஆம்பிள்ள பெறக்குள்ள…
நானாகிப் போனேன்டி நடமாடும் அரை பொணமா!
உசுரோட ஒரு ஜடமா!
அத்தோட விட்டிருந்தா அப்படியே பொழச்சிருப்பேன்,
விட்டானா பாவியவன், வெறி பிடிச்ச நாயி அவன்…
நெஞ்சடைச்சு மூச்சுமுட்டும் எஞ்சோகம் சொல்லதான்
தமிழுலதான் வார்த்தை உணடா? முத்தமிழுலதான் வார்த்தை உண்டா?
கொலைகார குடும்பத்துல கூடி வாழும் எங்கதிய கேக்கத்தான் நாதி உண்டா? இங்க கேக்கத்தான் நாதி உண்டா?
ஆங்ஹ்… ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா…
(ஒப்பாரிப் பாடல் By KPN)
என, கண்ணெல்லாம் குளமாகி, தொண்டை அடைத்து வந்த அழுகையில் விசும்பி, நெஞ்சில் அடித்துக்கொண்டு அந்த ஒப்பாரியைப் பாடியபடி, தன் கதையைச் சொல்லத் தொடங்கினார் ராஜம்.
அவரைப் பேசவிட்டு, அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் ஸ்வரா.
semma
Very painful character rajam.wow awesome.
Sema very nice