top of page

Kaattu Malli - 2

Updated: Jan 2

மடல் - 2


உணவு வகைகளையெல்லாம் வரிசையாக அடுக்கி, பரிமாற ஏதுவாக அனைத்தையும் தயார் செய்துவிட்டு, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஏதுவாக அங்கேயே ஓரமாக நின்றார் ராஜம்.


சற்று முன் நடந்த  அவமானத்தை அப்படியே துடைத்தெறிந்து விட்டு, கல் மனம் படைத்தவன் என்றாலும் கணவன் என்கிற பதிவிரதா தர்மத்தின் அடிபடையில் தங்கராசுக்கு காலை உணவைப் பரிமாறப் போய்விட்டாள் அருணா.


அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த தன் பிள்ளைகளைக் கூட கவனிக்காமல், "அட ஸ்வராம்மா, நீங்க என்ன இப்படி சின்ன புள்ள மாதிரி கொறிக்கறீங்க? இன்னும் ஒரு பூரி வெச்சுக்கோங்க?" எனச் சந்திரா மேல்விழுந்து அவளை உபசரிக்க,


"ஓஹ் நோ ஆன்ட்டி, எல்லா ஐட்டமுமே செம்ம டேஸ்ட். கண்ட்ரோலே இல்லாம, யூசுவலா சாப்பிடறத விட கொஞ்சம் அதிகமாவே சாப்பிட்டுட்டேன், போதும்" என்ற ஸ்வரா, "உங்க வீட்டு குக்கிங் வேற லெவல் ஆன்ட்டி! நேட்டிவிட்டியோட அப்படியே மணக்குது. இவ்வளவு ஐட்டம்ஸ் யார் சமைச்சாங்க?" என்று இயல்பாக விசாரிக்க,


சட்டெனத் திகைத்து, நொடி நேரத்துக்குள் சுதாரித்து, "வேற யாரு ஸ்வராம்மா, உங்களுக்காகப் பார்த்துப் பார்த்து நானே சமைச்சேன். இவங்கல்லாம் சும்மா ஹெல்ப்புக்கு வெச்சிருக்கேன் அவ்வளவுதான்" என அப்பட்டமாகப் பொய்யுரைத்தாள்.


'சீச்சீ... என்ன பொம்பள ஜென்மம் இவ? புள்ளைங்க இதையெல்லாம் கவனிச்சிட்டு இருக்காங்கன்னு கூட நெனப்பில்லாம,  இப்படி வாய் கூசாம பச்சையா புளுகறாளே!' என மனதிற்குள்ளேயே அவளைக் காரி உமிழ்ந்தபடி முகத்தில் அதைக் காண்பிக்காமல் இருக்கப் படாதபாடு பட்டு நின்றார் ராஜம்.


‘போதும்’ ‘கொஞ்சமா வெய்ங்க’ என்கிற வார்த்தைகளைத் தவிர வேறு பேச்சு எதுவும் பேசாமல் அவளுடன் இணைந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த அவளது பாதுகாவலர்கள் நால்வரும், இரண்டு ஆள் சாப்பாட்டை ஒருவராகச் சரி கட்டுக் கட்டி வைக்க, இருக்கும் உணவு அடுத்து சாப்பிடுபவர்களுக்கு போதாமல் போகும் அபாயம் உருவாகிவிட்டிருந்தது.


அதை உணர்ந்து, பூரிக்கு மீண்டும் மாவு பிசைய அவர் உள்ளே செல்ல எத்தனிக்க, "ஆங், ஒரு நிமிஷம் இருங்க" என அவரைத் தடுத்தான் வல்லரசு.


உறவு முறைக்கு, அவனது ஒன்று விட்ட மாமனை மணந்த அத்தை அவர். ஆனாலும் கூட மதிப்புடன் முறை வைத்து அவன் அவரை அழைப்பதில்லை. அழைக்கவும் மாட்டான், அப்படி ஏதாவது ஒரு சூழலில் தப்பித்தவறி அவன் அவரை 'அத்தை' என்று மட்டும் அழைக்க நேர்ந்தால், நாக்கை பிடுங்கிக் கொள்வது போல நறுக்கென்று கேட்க ஒரு கேள்வி  ராஜத்திடம் உண்டு.


மனதிற்குள் மறைத்து வைத்திருக்கும் கசப்புடன், ‘என்ன’ என்பதாக அவர் தேங்கி நிற்க, "நான் சொன்னேன் இல்ல ஸ்வராம்மா, இவங்கதான் ராஜம். உங்க ஹெல்புக்கு இவங்களதான் அனுப்பலாம்னு இருக்கேன்" என்று அவன் சொல்ல, அவரது முகமே இருண்டு விட்டது.


அவரது அனுமதி, அனுமதியாவது ஒன்றாவது? குறைந்தபட்ச முன்னறிவிப்பு கூட இல்லாமல் அவரை வேறொருவர் வேலைக்குப் பணிக்கும் அவனது அகங்காரம் கண்டு நெஞ்சு கொதித்தது.


எல்லோர் எதிரிலும் அழுது வைக்காமல் இருக்கப் போராடியபடி அவர் நிற்க, எழுந்து நின்று, தனது இடது கரத்தை நெஞ்சின் மேல் வைத்து, "தேங் யூ பாட்டிம்மா! அன்ட், நான் ஸ்வரா! ஒரு பிசினஸ் விஷயமா வந்திருக்கேன். கொஞ்ச நாள்  இங்க தங்க போறேன்! நான் இந்த ஊருக்குப் புதுசுல்ல, அதனால எனக்கு ஒரு கேர் டேக்கர் கேட்டிருந்தேன், அதாவது உதவிக்கு ஒருத்தங்க. அதுக்குதான் வல்லரசு அங்கிள் உங்கள சஜஸ்ட் பண்றாரு. எனக்கு வேலை செய்ய உங்களுக்கு ஓகேதான?" என்று இன்முகமாய் அப்பெண் கேட்க, இருளைக் கிழித்துக்கொண்டு  சூரியன் உதிப்பது போல ராஜத்தின் முகம் அப்படியே ஒளிர்ந்துவிட்டது.


அத்திப் பூத்தாற்போல அரிதாகக் கிடைக்கும் மரியாதையில் அவரது மனம் முழுவதும் பூப்பூத்துப் போக, 'சரி' என அனிச்சையாகத்  தலை அசைத்தார்.


அது எப்படி நீங்கள் முறையாக அறிமுகம் செய்யாமல் இருக்கலாம் என்பதான குற்றச்சாட்டுகள் இல்லை என்றாலும் அவளது நடவடிக்கையே அதைச் சொல்லாமல் சொல்வது போல் தோன்ற, மற்ற இருவரின் நிலைதான் கேலிக் கூத்தாகிப் போனது.


'இவ கெட்ட கேட்டுக்கு இவ கிட்ட போய் இந்தப் பொண்ணு பேசிட்டு இருக்கு' என மனதிற்குள் கொதித்து அதைப் பார்வையில் கொண்டு வந்து கணவனை எரித்தாள் சந்திரா.


அதைக் கண்டும் காணாத பாவத்தில், 'இந்தப் பெண் தெரியாமல் செய்கிறாளா அல்லது வேண்டுமென்றே தன் மூக்கை உடைத்து ஒரு பாடம் நடத்துகிறாளா?' என யோசித்தபடி ஸ்வராவை ஏறிட்டான் வல்லரசு.


அவளுடைய உணர்ச்சி துடைத்த முகத்தைப் பார்த்து அவனாலேயே எதுவும் அளவிட முடியவில்லை.


யார் எவர் என்ற வகைதொகை இல்லாமல், அவளுடைய பாதுகாவலர்களை அவளுக்குச் சமமாக வீட்டிற்குள் அழைத்து உபசாரம் செய்ய வைத்துவிட்டாள் என்கிற சிறு எரிச்சல் ஏற்கனவே அவள் மீது அவனுக்கு இருந்தது, இப்பொழுது இதுவும்.


பின்னே, இவள் என்ன இவர்கள் வீட்டில் ஏவல் செய்யும் மஞ்சுவா என்ன? இப்படி மனதில் நினைப்பதையெல்லாம் நினைத்தபடி அவ்வளவு இலகுவாக அவளிடம் கேட்டுவிடத்தான் முடியுமா இவர்களால்?


ஏற்கனவே தெரியாத்தனமாக, "நீங்க எந்த ஆளுங்க?" எனப் புதிதாக சந்திக்கும் எல்லோரிடமும் வழக்கமாக கேட்கும் கேள்வியை அவளிடம் கேட்கப் போய், "எந்த ஆளுங்கன்னா? மனுஷாளுங்கதான்" என ஒரு இடக்கான பதில் வந்திருந்தது அவளிடமிருந்து.


எதையும் காண்பித்துக்கொள்ள வழி இல்லாமல் அவன் அமர்ந்திருக்க, அருகிலிருந்த வாஷ் பேசினில் போய் கைக் கழுவி வந்தவள், "ஃபீல்ட் விசிட் பண்ணனும் அங்கிள். அதுக்கு முன்னால கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்? அகாமடேஷன் எங்கன்னு கூட்டிட்டுப் போனீங்கன்னா எனக்கு ஈசியா இருக்கும்" என்றாள் ஸ்வரா.


மறுதலித்து எதவும் கூற முடியாமல் அவளது கட்டளை ஒவ்வொன்றையும் சிரமேற்கொண்டு செய்யவேண்டிய கட்டாயத்திலிருந்தான் வல்லரசு என்கிற ஆதிக்க வெறியன்.


***


ஸ்வரா அங்கே வந்து நான்கு தினங்கள் கடந்திருந்தன.


ஏக்கர் கணக்கிலிருக்கும் அவர்களது தென்னந்தோப்புக்குள் அமைந்திருக்கும் குட்டி பங்களாவில்தான் அவளைத் தங்க வைத்திருந்தான் வல்லரசு.


அவள் இங்கே இருக்கும் நாட்கள் வரை அவளுடனேயே தங்கிச் சமைத்துப் போட்டு அவளுக்கு உதவி செய்ய ராஜத்தை அனுப்பியிருந்தான்.  மஞ்சுவும் அவளுடைய அம்மாவும் தினமும் காலை ஒரு முறை மாலை ஒருமுறை வந்து வீட்டைச் சுத்தம் செய்துவிட்டுப் போவார்கள்.


***


உணவு தானியங்களை உற்பத்திச் செய்யவும் அவற்றைப் பதப்படுத்திச் சேமித்து வைக்கக் கிடங்குகள் அமைக்கவும் அவர்கள் நிறுவனத்துக்குப் பெருமளவிலான நிலங்கள் தேவையாக இருக்க, அதன் மொத்தப் பொறுப்பையும் இவளிடம் ஒப்படைத்திருக்கிறாள் இவளுடைய அம்மா.


படித்து முடித்து, இவளுடைய அம்மா தொடங்கி வளர்த்து விட்டிருக்கும் தொழில்களின் நிர்வாகத்தைக் கையிலெடுப்பதற்கான நேரம் வந்துவிட, முதன் முதலாக இவளுக்கு அவர் கொடுத்திருக்கும் இந்தப் பொறுப்பு இவளுக்கு அவர் வைத்திருக்கும் ஒரு இரசாயன பரிசோதனை என்றே சொல்லலாம். 


இப்படி ஒரு சூழ்நிலையில், சற்றே புத்திப் பேதலித்து அவள் செய்த பெரும் சொதப்பலில், ஏற்கனவே அவருக்கு இவளிடம் பெருத்த மனவருத்தம் உண்டாகி விட்டிருந்தது.


அதனால், இதில் இவள் காண்பிக்கும் வெற்றிதான் அவரது மனதில் இவள் விதைக்கப்போகும் நம்பிக்கையின் முதல் படி என்றே சொல்லலாம்.


இடம் வாங்க எந்தெந்த பகுதிகளைத் தேர்ந்தெடுத்திருந்தார்களோ அங்கே பிரபலமாக இருக்கும், முறையாகப் பதிவுசெய்யப்பட்ட ‘ரியல் எஸ்டேட்’ நிறுவனங்களை அணுகி, அவர்கள் மூலமாக, பொருத்தமானதாக வில்லங்கங்கள் ஏதுமில்லாத இடங்களாகத் தேர்ந்தெடுத்து வாங்க, கடந்த ஒரு வருடமாகத் தென் இந்தியா முழுவதும் அலசிக்கொண்டிருக்கிறாள்.


இரண்டு பகுதிகளில் இடம் வாங்கி, கட்டுமானமும் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்தப் பகுதியில் மட்டும், மனதுக்குத் திருப்தியாக இதுவரை எதுவும் அமையவில்லை.


தெரிந்த ஒரு நிறுவனம் மூலம் இந்தப் பகுதியின் ‘பெரியக் கை’ என்பதாக வல்லரசுவின் அறிமுகம் ஏற்பட்டு இந்த ஊருக்கு வரவேண்டும் என்கிற சூழ்நிலை இவளுக்கு உண்டாகும் என்பதாலேயே ஒரு வேளை அமையவில்லையோ என்னவோ?!


எப்படியோ, தான் சாதிக்க நினைக்கும் காரியத்தை முடித்தே தீர வேண்டும் என்கிற உறுதியில் அவள் இங்கே வந்திருக்க, இரண்டு நாட்களாக அவளை நேரில் அழைத்துப் போய் வல்லரசு காண்பித்த இடங்கள் எதுவுமே அவளது திருப்திக்கு இல்லை.


மற்றபடி தூரத் தெரியும் மலைக் குன்றும், பசுமையைப் போர்த்தியிருக்கும் இந்தக் கிராமமும் அவளுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது.


காலை காபி, சிற்றுண்டி, மதிய உணவு என இவளது தேவையைக் கேட்டுக்கேட்டுச் செய்து அனுசரணையாக ராஜம் இவளைக் கவனிக்கும் விதத்தில் அவரையும் மிகவும் பிடித்துவிட்டது.


நிலங்களைப் பார்க்க இவள் கிளம்பும் சமயங்களில், இவள் திரும்ப வரும் நேரத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்குள் ஒருமுறை அவரது வீட்டிற்குப் போய்விட்டுத் திரும்ப வந்துவிடுவார்.


இரவில் கூட இவளது அறையிலேயே ஓரமாகப் படுக்கை விரித்துப் படுப்பார்.


காலை இவள் கண்விழிக்கும் முன்பாகவே எழுந்து போய் சமையலறை வேலைகளைத் தொடங்கிவிடுவார். இந்த வயதுக்கும் இப்படி சுறுசுறுப்பாக இருக்கும் இவரைப் பார்க்க அவ்வளவு அதிசயமாக இருக்கும் ஸ்வராவுக்கு.


ஒருவிதத்தில் இவளுடைய அம்மம்மாவும் இப்படித்தான், காலில் சக்கரத்தைக் கட்டியது போல ஓடிக்கொண்டே இருப்பார். ஆனால் இவரிடம் இருக்கும் இப்படிப்பட்ட தயக்கமும் பணிவும் அவரிடம் ஒரு துளி கூட கிடையாது. அவ்வளவு ஆளுமையான மிடுக்கான பெண்மணி.


அவரது பேச்சிலும், நடவடிக்கைகளும் எப்பொழுதுமே ஒரு அதட்டல் தொனி தெரித்தாலும், சக மனிதர்கள் மேல் அவர் காண்பிக்கும் அன்புக்கும் அக்கறைக்கும் ஈடு இணையே இருக்காது.


தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் சமயங்களைத் தவிர்த்து,  அவருடைய அருகாமை இல்லாமல் இவளுடைய அம்மாவை இவளே ஒரு நாள் கூட பார்த்ததில்லை என்கிற அளவுக்கு அவரது நிழலாகிப்போனவர். இவளுடைய அம்மாவின் அசுர வளர்ச்சிக்கு அடித்தளம் இவர்தான் என்றால், அதுதான் உண்மை.


பார்வை மடிக்கணினியில் இருக்க, சிந்தனை அம்மாவையும், அம்மம்மாவையும் நோக்கிப் போயிருக்க, உடனே கைப்பேசியை எடுத்து, 'வில்லிக்கொடி' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்து அழுத்தினாள்.


"ஹேய் பொம்மு, எப்படி கண்ணு இருக்க?" என ஒலித்த கம்பீரக் குரலில் அன்பும் பாசமும் ஊற்றெடுத்தது.


"எனக்கென்ன அம்மம்மு, நான் நல்லாத்தான் இருக்கேன். நீ எப்ப இங்க வரபோற?" என அவள் கேள்வி எழுப்ப,


"உங்கம்மா இலண்டன் போற ஃபிளைட்ல ஏறி உட்கார்ந்த அடுத்த நிமிஷம், நான் இங்க இருந்து கிளம்பிடுவேன் கண்ணு, டோன்ட்டு ஒரி" என அவரிடமிருந்து பதில் வர,


"போ அம்மம்மு, நீ பெத்த பொண்ணு ஒரு சரியான டேஞ்சரஸ் பார்ட்டி, யூகே ட்ரிப்ப அவங்க ஏன் தள்ளிப் போட்டுட்டே போறாங்கன்னு உனக்குத் தெரியாது? என்னை ஃப்ரீயா விடாம, நான் எங்க போறேன் என்ன செய்யறேன்னு என்னை சர்வயலன்ஸ் பண்ணிட்டே இருக்காங்களா என்ன? உண்மையைச் சொல்லு" என அவள் பொரிந்து தள்ள,


இயல்பாக அவள் விட்ட வார்த்தையில் மனம் குன்றி எதிர் முனை மௌனம் காக்கவே, தன் தவறை உணர்ந்து சட்டெனச் சுதாரித்தவள், "ஓகே... ஓகே... சாரி, எப்பவும் பேசற மாதிரி தெரியாம ஒரு ஃப்ளோல அப்படி வந்துடுச்சு... நீ ஸ்ட்ரெஸ் ஆகாத. பட் ஐ மிஸ் யூ பேட்லி அம்மம்மு... அத புரிஞ்சிட்டு சீக்கிரம் இங்க வந்துடு" எனக் குழைந்தாள் ஸ்வரா.


"சரி பேபி! நானுந்தான், உன்னை மிஸ் யூ... இதுக்கு மேல உன்கூட கொஞ்சிட்டு இருக்க இப்ப எனக்கு நேரம் இல்ல. உங்கம்மா கூட கம்பெனிக்குப் போகணும். அவ டிக்கெட்டுக்குச் சொல்லியாச்சு, அதுக்குத் தகுந்த மாதிரி நான் பிளான் பண்ணிட்டு கிளம்பி வரேன், மத்தத எல்லாம் அங்க நேர்ல வந்த பிறகு பேசிக்கலாம்" என அந்த  அழைப்பைத் துண்டித்தார் அல்லிக்கொடி எனும் அவளது அம்மம்மா.


சரியாக அதே நேரம், "பாப்பா, டிஃபன் ரெடி ஆயிடுச்சு, சாப்பிட வாரீங்களா?" என்றபடி அங்கே வந்து நின்றார் ராஜம்.


"ஆங்... ஆன்லைன்ல வேல பார்த்துட்டே இருந்தனா, நேரம் போனதே தெரியல. குளிச்சிட்டு, ஜஸ்ட் டென் மினிட்ஸ்ல வந்துடறேன் பாட்டிம்மா" என அவள் இதமாகப் பதில் கொடுத்துவிட்டு, குளியல் அறை நோக்கிப் போக, நெகிழ்ந்தே போனார் அந்த முதிய பெண்மணி.


ஏதோ காற்றில் பறக்கும் இறகைப் போல மிதந்து சாப்பாட்டு அறைக்கு வந்து சேர்ந்தவர், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார்.


ஸ்வரா அங்கே வந்த தினம், காலை உணவு முடிந்ததும் அவரை அழைத்த சந்திரா, அன்று செய்த வேலைக்குக் கூலியாக முள்ளங்கிப் பத்தை போல மூன்று நூறு ரூபாய் நோட்டுகளை அவரிடம் நீட்டிவிட்டு, "சித்தி, அந்தப் பொண்ணு ஒரு வாரம் இல்லனா பத்து நாள் வரைக்கும் இங்கதான் தங்கப்போகுது. பார்த்தீங்க இல்ல, பாடி கார்ட்ஸ் இல்லாம அந்தப் பொண்ண தனியா எங்கயும் விடமாட்டாங்களாம். அவ்ளோபெரிய கோடீஸ்வர வீட்டு பொண்ணு சித்தி அது. கூட மாட ஒத்தாசைக்குப் பொறுப்பான ஆள் விடலன்னா, எங்களுக்குத்தான் பிரச்சன. அதனால, அந்தப் பொண்ணு பத்திரமா ஊருக்குக் கிளம்பற வரைக்கும் நீங்க கூட இருந்து அதுக்கு என்னென்ன வேணுமோ செய்ங்க, மொத்தமா ஒரு அமவுண்ட் கொடுக்கச் சொல்றேன்" என்று  கட்டளையாகச் சொல்ல, மறுப்புக்கு ஏதிடம்?


'மொத்தமா ஒரு அமௌண்ட்' என அவள் வாய் நிறையச் சொன்னாலும், மிஞ்சிப் போனால் ஒரு மூவாயிரம் தேறினால் பெரிது.


மௌனமாக அவர் தலை அசைக்க, "நம்ம தோப்பு பங்களாவுலதான் அவங்கள தங்க வைக்க போறோம். நீங்க வீட்டுல தகவல் சொல்லிட்டு, மாத்துத் துணி எடுத்துட்டு உடனே கிளம்பி வந்துடுங்க" என அவள் அடுத்த ஆணையைப் பிறப்பிக்க, அவருக்கு வீட்டை நினைத்து கவலை பிடித்துக்கொண்டது.


மண்டையைக் கொளுத்தும் வெயிலில் நடந்தே வீடு வந்து சேர்ந்தவர், குணாவிடம் தகவல் சொல்ல, அவரது முகமே தொங்கிப்போய்விட்டது.


என்று இந்த மனிதரைத் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டுக்குள் வந்தாரோ, அன்றைக்கே பிறந்த வீடு அவருக்கு அந்நிய வீடாக மாறிப்போனது.


முதல் இரண்டு பிரசவங்களைப் பார்த்து அனுப்பியதுடன் பெற்றவர் கடமை முடிந்து போக, கல்யாணம் காதுகுத்து என அங்கே சென்று வந்தால் அதுவே பெரிய விஷயம். அவருடைய அப்பா போன பிறகு குறைந்துபோய், அம்மா போன பிறகு அதுவும் கூட முற்றிலும் நின்றுபோனது.


இந்த மனிதருக்கோ பொங்கிப் போடவும், துவைத்துப் போடவும், படுக்கைக்கும் பெண்டாட்டி இல்லாமல் சரிப்பட்டு வராது.


இப்படி ஒரு சலுகையை அனுபவித்து வந்தவருக்கு இந்தச் செய்தி சற்றுத் திகிலைத்தான் கொடுத்தது.


ஆனாலும் சூழ்நிலை அவரைப் பிடித்துத் தள்ள, "வேற வழி, நம்ம வீட்டுப் பத்திரத்தையும், நிலப்பத்திரத்தையும் அவங்க கிட்ட இருந்து மீட்கற வரைக்கும் இதெல்லாம் செஞ்சுதான் ஆகணும் ராஜம்" என்றார் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல்.


இந்தப் பத்திரங்கள் எல்லாம் என்ன இன்றைக்கு நேற்றா அவர்களிடம் இருக்கிறது? அது அவர்கள் கைக்குப் போய் முழுவதாக இரண்டு தசாப்தங்களும் மேலும் சில வருடங்களும் முடிந்து விட்டன.


கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, கடனை அடைப்பதும், பத்திரத்தைக் கையில் வாங்குவதற்குள் அடுத்த கடனை வாங்குவதும் என, இதற்கெல்லாம் ஒரு விடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.


வெறும் பத்து நாட்கள்தாம் என்றாலும், வீட்டைப் போட்டது போட்டபடி இவராலும் இருக்க இயலாது.


மூன்று பிள்ளைகளுக்கும் காட்டு வேலை, கழனி வேலை எனப் பொழுதுக்கும் சரியாக இருக்கும். கூடுதலாக அவரது கடைக்குட்டி மகனுக்கு தனது படிப்பையும் கவனித்தாக வேண்டும்.


அவனைத் தவிர மற்ற இருவரும் அவ்வளவு பொறுப்புடனும் நடந்துகொள்ள மாட்டார்கள். போதாத குறைக்குப் பீடி, சிகரெட், குடிப் பழக்கங்கள் வேறு.


இரண்டு மருமகள்கள் இருந்தாலும், தானாக முன்வந்து எந்த ஒரு வேலையும் செய்ய மாட்டார்கள். சொல்லிச் சொல்லித்தான் வேலை வாங்க வேண்டும். கேட்டால் பிள்ளைகளைக் கவனிப்பதாகச் சாக்குப் போக்கு. உண்மையில் பெற்றப் பிள்ளைகளுக்குக் கூட நேரத்துக்குச் சோறு போட மாட்டார்கள். நேராநேரத்துக்கு அவர்களைக் கூப்பிட்டு இவர்தான் தார்குச்சி வைத்து குத்த வேண்டும். அதற்கும் கூட எரிச்சல்தான் படுவார்கள்.


போதும் போதாத குறைக்கு, இரண்டு கறவை மாடுகளையும், முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கும் நாட்டுக் கோழிகளையும் வேறு பார்க்க வேண்டும். நினைக்கும்போதே மூச்சடைத்தது.


பசியில் வயிறு வேறு கடமுடவென்று சத்தம் போட, சமையலறை நோக்கிப் போனவர் பானையில் இருந்த பழைய சோற்றை எடுத்து ஒரு வட்டியில் போட்டு, மோரை ஊற்றிக் கரைத்து, அப்படியே மடக் மடக்கெனக் குடித்துவிட்டுத் தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் ஆயாசத்துடன் வந்து படுத்துவிட்டார். அவரது பார்வை, அங்கே மாட்டப் பட்டிருந்த ஒரு புகைப்படத்தில் போய் பதிந்து நிலைக்குத்தி நின்றது.


பாவாடை தாவணி உடுத்தி, கூந்தலில் ஜாடை பின்னி நெற்றிச்சுட்டி வைத்து சிங்காரித்து, கழுத்தில் மாலையுடன் கண்ணாடிக்கு முன் நிற்க வைத்து எடுக்கப்பட்டிருந்த பெண்ணின் புகைப்படத்தில், குங்குமப் பொட்டு வைக்கப்பட்டிருந்தது.


எப்பொழுதோ சட்டம் போட்டு மாட்டப்பட்டது என்பதால் உள்ளே இருந்த படம் நிறம் மங்கி, அங்கங்கே உரிந்து போய் கிடந்தது. ஆனாலும் அதில் நின்று புன்னகைத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் நினைவு மட்டும் பச்சை இரணமாய் அவளைப் பெற்ற தாயின் நெஞ்சில் ஆறாமல் குத்திக் குடைந்தது.


'என் பாடே இப்படி இருக்க, உனக்கு என்ன நியாயம் செய்வேன் கண்ணே?' என அவரது நெஞ்சம் ஊமை கண்ணீர் வடிக்க, 'இவ இப்படி போன பிறகு, நீ வாழாமலா போயிட்ட? அதமாதிரிதான,  திடீர்னு உனக்கு ஏதோ ஒண்ணு நடந்து போனா, அதுக்குப் பிறகு இவளுக இந்த வீட்டைப் பார்க்காம அப்படியே விட்டுட போறாளுகளா என்ன? எப்படியோ ஒண்ணு குடும்பம் நடக்கத்தான் போகுது. அதுக்கு ஏன் நீ இவ்வளவு ஆதங்க படுற ராஜம்? விடு, ஒரு பத்து நாள், நீ இல்லாம இதுங்க என்னதான் செய்யுதுங்கன்னு பார்க்கலாம்' என அவர் மனம் தெளிந்தது.


எழுந்து உட்கார்ந்தவர், தலை முடியை உதறிக் கொண்டையிட்டு, நேராகப் போய் ஒரு புடவையையும், உள்ளாடைகளையும் எடுத்து ஒரு பையில் திணித்துக்கொண்டு, மூலைக்கு ஒருத்தியாக உட்கார்ந்து கைப்பேசியைக் குடைந்துகொண்டிருந்த மருமகள்களை அழைத்துத் தகவல் சொல்லிவிட்டு, அவர்கள் அதிர்வையெல்லாம் கண்டுகொள்ளாத பாவத்துடன் வல்லரசுவின் தோப்பு பங்களாவுக்கு வந்து சேர்ந்தார்.


அந்த வீட்டின் தரைத் தளத்தில் பெரிய கூடமும், அதை ஒட்டிய ஒரு பெரிய அறையும், பின் பக்கமாக சமையலறையும் சாப்பிடும் அறையும் இருக்க, முதல் தளத்தில் படுக்கை அறைகள் இருந்தன.


ஸ்வராவின் பாதுகாவலர்கள் கூடத்தில் அமர்ந்திருக்க, அவள் மாடியில் அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறையிலிருப்பது தெரிந்தது.


நேராகச் சமையலறை நோக்கிப் போனவர், ஏற்கனவே சந்திரா சொல்லியிருந்தபடி சமையலை முடித்துவிட்டு, மேலே போய் ஸ்வராவை சாப்பிட அழைத்தார்.


உடனே அவர்களும் அங்கே வந்துவிட, அவர்கள் சாப்பிடும்போதுதான் அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்தது.


செய்த உணவு வகைகளை மேசை மேல் அடுக்கி, இலை விரித்து ராஜம் அவர்களுக்குப் பரிமாற, "பாட்டிம்மா, நீங்களும் உட்காருங்க, ஒண்ணாவே சாப்பிடலாம்" என்றாள் ஸ்வரா.


அவருக்குத்தான் பதறிவிட்டது. இங்கே இப்படியெல்லாம் அவர்களைச் சமமாக நடத்தமாட்டார்கள். அதுவும் ஒன்றாக உணவு மேசையில் அமர்ந்து சாப்பிடுவதா? கைப்படாத உணவு மிச்சம் மீதம் இருந்தால் வீட்டுக்கு எடுத்துபோய் சாப்பிடுவதுதான் வழக்கம்.


"வேண்டாம்மா, எனக்கு இப்ப பசிக்கல" என அவர் நாசூக்காய் மறுக்க,


"இவ்வளவு நேரமா வேலை செஞ்சிட்டு இருக்கீங்க? அது எப்படி பசி எடுக்காம இருக்கும்?" என அவள் உத்தரவாகச் சொல்ல,


ஒரு தயக்கத்துடன் அவர் அவளுக்கு அருகில் உட்கார, தன் கையாலேயே பரிமாறியவள், "ஆமா பாட்டிம்மா, இவ்வளவு ஐட்டம்ஸ் செஞ்சிருக்கீங்களே!  இங்க இத்தன பேருக்கு நீங்க ஏன் தனியாவே சமைக்கறீங்க? சந்ரா ஆன்டி உங்க ஹெல்ப்புக்கு யாரையும் அப்பாயிண்ட் பண்ணலையா?" என எதார்த்தமாகக் கேட்டாள். இதற்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை.


"அதெல்லாம் தேவையில்லம்மா, நானே செஞ்சிருவேன், அதான்" என்றவர், "இதையெல்லாம் சந்ரா கிட்ட கேட்டுடாதீங்கம்மா, அப்பறம் என்னைத் தப்பா நினைச்சுக்கும்" என்றார் தயக்கத்துடன்.


அவரை அழுத்தமான ஒரு பார்வை பார்த்தபடி 'சரி' என்பதாகத் தலை அசைத்தவள், "சுரேஷ் அண்ணா, நம்ம எல்லாருக்காகவும் இங்க இவங்க தனியா குக் பண்றங்க பாருங்க. இனிமேல் நீங்க யாராவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க" என்று அவளது பாதுகாவலர் ஒருவரிடம் சொல்ல, பக்கென்றது ராஜத்துக்கு.


"வேணாம்மா, நானே செஞ்சுடுவேன், எனக்குப் பழக்கம்தான்" என்று அவர் மறுதலிக்க,


"ஆனா இப்படி வயசுல பெரியவங்கள வேலை வாங்கி எங்களுக்குப் பழக்கமில்லையே. எங்க சென்னை வீட்டுல வந்து பார்த்தீங்கன்னா உங்களுக்கே தெரியும்" என்றவள், “இவர் ஆனந்த்… இவங்க சுரேஷ் அண்ணா… இவங்க ராஜா அண்ணா… தென், இவன் பிரபு” என அவளது நான்கு பாதுகாவலர்களையும் அவருக்கு அறிமுகம் செய்ய, அவர்களும் ஒவ்வொருவராக கரம் குவிக்க, பதிலுக்கு ஒரு புன்னகையுடன் தானும் கரம் குவித்தார்.


            "முடியும் போது அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க, ஏன் நான் கூட உங்க கூட சேர்ந்து செய்வேன், தடுக்காதீங்க" என அவள் இறுதியாகச் சொல்லி முடிக்க, அவர் எப்படி உணர்ந்தார் என்றே புரியவில்லை.


அன்றிரவு வரவேற்பறையிலேயே ஓரமாகப் படுக்கப் போனவரை அழைத்து தன் அறையில் படுக்க அவள் சொன்ன போதும் இதுவே தொடர்ந்தது.


அங்கே போடப்பட்டிருந்த ஒற்றை கட்டிலில் (கௌச்) அவரைப் படுக்கச் சொல்ல, முற்றிலும் மறுத்துத் தரையில் படுத்தார்.


இதெல்லாம் எப்படியும் சந்திராவின் செவிகளுக்குப் போகாமல் இருக்காது. இவர்கள் ஊருக்குப் போகும் வரை பொறுத்திருந்து சினம் காத்து அதன் பின் குறிப் பார்த்து அடிக்கும் இரகம் அவள். நினைக்கும் போதே நெஞ்சே உலர்ந்து போனாலும், இந்தப் பெண்ணின் அன்பும் அக்கறையும் மனதைக் குளிரத்தான் வைத்தது.


இடையிடையே அவர்கள் வெளியில் செல்லும் நேரத்தைப் பயன்படுத்தித் தன் வீட்டிற்கும் சென்று நிலைமையை ஒரு பார்வை பார்த்து வர அவருக்கு வசதியாக இருந்தது.


அதன் பின் எல்லாமே ஒரு சீராகச் சென்று கொண்டிருக்கிறது.


சற்று முன், காலை உணவு செய்யும்போது கூட சுரேஷும் ஆனந்தும் வந்து வெங்காயம் உரித்து, காய்கறிகள் நறுக்கிக் கொடுக்க, வேலை சீக்கிரமாக முடிந்தது.


அவர் யோசனையுடன் அமர்ந்திருக்க, அங்கே வந்தாள் ஸ்வரா.


மற்றவரும் பின்னோடே வர, எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து கதை பேசியபடியே சாப்பிட்டு முடித்தனர்.


சற்று நேரத்திற்கெல்லாம் எல்லோரும் வெளியில் செல்லத் தயாராகிக்கொண்டிருக்க, மஞ்சு தன் வழக்கமான வேலைகளைச் செய்து கொண்டிருக்க, பனியன் துணியால் ஆன சாயம் போன ஒரு ஸ்கர்டும் டாப்பும் அணிந்து இரட்டை ஜடைப் போட்டு மடித்துக் கட்டி, நெற்றியில் ஒரு குட்டிப் பொட்டு வைத்து, தோட்டத்துப் பட்டாம்பூச்சியைத் துரத்தியவாறு துருதுருவென்று இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டிருந்தாள் ஐந்தோ அல்லது ஆறு வயதோ இருக்கும் ஒரு பெண் குழந்தை.


அந்தக் குழந்தையின் அழகில் மயங்கி, பிரிட்ஜில் இருந்த ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து வந்தவள், "குட்டிமா இங்க வாங்க" என்று அழைக்க, தயக்கமே இல்லாமல், அழகாக ஒரு புன்னகையைச் சிந்தியபடி அவளை நோக்கி ஓடி வந்தது.


ஆசையுடன் அந்தக் குழந்தையின் கன்னம் கொஞ்சி அந்த ஆப்பிளை அதனிடம் நீட்ட, ஒரு வியந்த பார்வையுடன் அதை வாங்கிக் கொண்டது.


"உங்க பேரு என்ன?" என்று கொஞ்சிக் கேட்க, "திவியா" என்று பதில் வந்தது.


கொடியில் துணியைக் காயப் போட்டுக் கொண்டிருந்த மஞ்சுவிடம், "செம்ம க்யூட்டா இருக்கு, யாரு மஞ்சு இந்தப் பாப்பா?" என்று கேட்க, "பெரிய வீட்டுல மாடுங்கள பார்த்துக்கறாங்க இல்ல கன்னியப்ப அண்ணன் அவங்க பொண்ணுதான். இவ அம்மா தேனு கூட அங்கதான் வேலை செய்யுது" என்றாள்.


அந்த ஆப்பிளைக் கடித்துச் சுவாரசியமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையைப் படிக்கட்டில் அமர்ந்தபடி இழுத்து தன் மடியில் இருத்திக் கொண்டாள். "ஸ்ஸ்ஸ்" என்ற முனகலுடன் குழந்தை அவஸ்தையாய் உட்கார, "என்ன ஆச்சு பாப்பா உனக்கு?" என்று  திடுக்கிட்டாள்.


வாய் திறந்து சொல்ல கூச்சப் பட்டுக்கொண்டு குழந்தை தன் கைக்கொண்டு உட்காரும் இடத்தில் தேய்த்து விட, "அக்கா அதுக்கு அடிக்கடி, ***மட்டைல கட்டி வந்துரும். இப்படித்தான் உட்கார முடியாம கஷ்டப்படும். அது அம்மாகிட்ட சொன்னா சீம ஓட்ட தேச்சு கட்டி மேல தடவிவிடும், ஒரே நாள்ள சரியா போயிடும்" என்றாள் மஞ்சு, இலகுவாக.


இது ஒரு வழக்கமான நிகழ்வுதான் போலும் என்று இயல்பாக எடுத்துக் கொண்டவளுக்கு அந்தக் குழந்தையின் மீதிருந்து வீசிய ஒரு அழுத்தாமான வாடையில் லேசாக வயிற்றைப் புரட்டவே குழைந்தையைப் பிடித்திருந்த பிடியைத் தளர்த்த, அப்படியே ஓடிபோய் மஞ்சுவின் உடையைப் பிடித்து இழுத்து, “அம்மா கிட்ட கூட்டிட்டுப் போ” என்றது.


“இதோ முடிஞ்சிருச்சு, போகலாம்” என அவள் சொல்லிக் கொண்டிருக்க, தன் கைப்பேசியை எடுத்து வர உள்ளே சென்றாள் ஸ்வரா.


கிணற்றடியில் குவிந்திருந்த பாத்திரங்களைத் துலக்கி முடித்து மஞ்சுவின் அம்மா அங்கே வர, மஞ்சுவும் கை வேலையை முடித்து வந்து அந்தக் குழந்தையை அழைத்துக்கொண்டு  கிளம்ப எத்தனிக்க, எல்லோரும் காலை உணவு சாப்பிட்டு முடித்திருக்கவும், எஞ்சியவற்றை அவர்களுக்குக் கொடுக்கலாம் என வெளியில் வந்தார் ராஜம்.


அப்பொழுது ஸ்வராவை அழைத்துப்போய் இடங்களைக் காண்பிக்கவென வல்லரசு அனுப்பியதாக அங்கே வந்தவனைப் பார்த்ததும் அவரது உயிரே போனதுபோல் ஆனது.


ஏனென்றால், இவ்வளவு துயரங்களையும் தாங்கியபடி இழுத்துப்பிடித்து இவர் வாழ்க்கையை எதிர்த்துப் போராடக் காரணமாக இருக்கும் அவரது கடைசி மகன் ஜீவானந்தம்தான் அவன். கல்லூரி வரை சென்று பெரிய படிப்பு படித்தவன். காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்கிற வெறியில் ஐ.பி.எஸ். பரிட்சைக்காகப் படித்துக் கொண்டிருப்பவன்.


'அவனையும் கூட விட்டுவைக்கமாட்டார்களா இந்தக் கல்லிலே மனம் படைத்தக் கொடும்பாவிகள்?' என அந்தப் பெண்மணியின் கண்கள் குளமானது.


இந்த அம்மாக்களைப் பொறுத்த வரைக்கும் எந்த வயதானாலும்தான் பெற்ற பிள்ளைகள் அப்பாவிகள், உலகம் அறியாதவர்கள்தான் அல்லவா?


ஜீவாவைப் பொறுத்தவரை ராஜத்தின் மன நிலையும் இப்படியே இருக்க, வல்லரசுமீது அவனுக்கு இருக்கும் வன்மத்தின் அளவை அவரே அறிந்திருக்கவில்லை, அந்த வன்மத்தைத் துளித் துளியாக அவன் மனதில் விதைத்ததே அவர்தான் என்றபோதிலும் கூட!


3 comments
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page