top of page
Writer's pictureKrishnapriya Narayan

Kaattu Malli - 1

Updated: Jan 10




Disclaimer இந்தக் கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் யாவும் கற்பனையே. இதில் வரும் சம்பவங்கள் எந்த ஒரு தனி மனிதரையும், வாழ்ந்தவர்களையும், வாழ்பவர்களையும் மையப்படுத்தி எழுதப்பட்டவை அல்ல. அப்படி இருப்பின் அது முற்றிலும் தற்செயலானது.

காப்புரிமை © ஆசிரியர்.

நாட்டுப்புறப் பாடல், ஒப்பாரிப் பாடல், கவிதைகள் உட்பட, இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் எந்த ஒரு பகுதியையும் பதிப்பாளரின் எழுத்துப் பூர்வமான முன் அனுமதி பெறாமல் மறு பிரசுரம் செய்வதோ, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் மறுபதிப்பு செய்வதோ காப்புரிமை சட்டப்படி தடை செய்யப் பட்டதாகும். நூல் விமரிசனத்துக்கு மட்டுமே இப் புதினத்திலிருந்து மேற்கோள்கள் காண்பிக்க அனுமதிக்கப் படுகிறது.




காட்டுமல்லி


மடல் - 1


குணதிசை வந்தணைந்த கதிரோன், தன் இளங்கிரணங்களால் பூமியை வெதுவெதுப்பாக முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.


சாணியின் வாடை, நெடுகிலும் போராகக் குவித்து வைத்திருந்த வைக்கோலின் வாசம், அந்த ஊரையே பச்சைப்சேலென வைத்திருக்கும் செடி, கொடிகளின் பசுமை மணம் எல்லாமுமாகச் சேர்ந்து நன்காட்டூர் என்கிற அந்தக் கிராமமே உயிர்ப்புடன் இருந்தது.


கொக்கரக்கோ என்ற சேவலின் கூவலும், ஒன்றின் கூவலுக்கு மற்றுமொரு சேவல் பாடிக்கொண்டிருந்த எதிர்ப் பாட்டும், மசமசப்பான அந்த இளம் காலை நேரத்தைப் பரபரப்பாக மாற்றிக்கொண்டிருந்தது.


பஞ்சாரத்திலிருந்து விடுதலை கிடைத்த குஷியில், தன் குஞ்சுகள் புடைச் சூழக் குப்பையைக் கிளறக் கிளம்பிவிட்டுருந்தன கோழிகள்.


மா... என்ற தம் கன்றுகளின் கத்தல் கேட்டு அவற்றை வாஞ்சையுடன்  நாவால் நக்கிக்கொடுக்கும் பசு - எருமைகளின் கனைப்பும், பாலைக் கொள்முதல் செய்யும் கூட்டுறவு சங்கப் பால் சாவடியைச் சுற்றிலும் கூடியிருந்த ஊர் சனம், நுரைப் பொங்க, அந்தக் கறவைகளின் பாலைக் கறக்கும் சர்…சர்... என்ற ஒலியும் பரவலாகக் கேட்டுக்கொண்டிருந்தன.


பெண்டிரெல்லாம் அவரவர் வீட்டு வாயில்களில் சரக்... சரக்கெனச் சாணம் தெளித்துக் கோலமிட்டு அந்த விடியலை வரவேற்க, ஐந்திலிருந்து ஒன்றாக ஊடு புள்ளி வைத்து, சிறியதாக ஒரு கோலத்தைப் போட்டு முடித்து, அதன் நேர்த்தியைக் கண்களில் நிரப்பியபடி ஒரு நொடி நின்றார் ராஜம்.


கோணல்மாணலாக இல்லாமல் சரியான வடிவத்தில் அந்தக் கோலம் வந்திருக்க, அதுவே ஒருவித திருப்தியை அளித்தது. அந்தச் சின்னஞ்சிறு மகிழ்ச்சியைக்கூட முழுமையாக அனுபவிக்க விடாமல், "ஏய் ராஜம்! ஒரு டீத்தண்ணிக் கூட குடுக்காம பொழுது விடிய எங்கடி போய் தொலச்ச!" என அதிகாரமாக ஒலித்தது அவரைக் கட்டியவரின் கட்டைக் குரல்.


 சென்ற ஐப்பசிக்கே ராஜத்துக்கு அறுபது முடிந்துவிட்டது. ஆனாலும் ஓய்வு ஒழிச்சல் என்பதே கிடையாது. இருப்பது போனது எனச் சேர்த்து, மொத்தம் அரை டசன் பெற்றவர்.


மருமகள்கள் என்ற பெயரில் வீட்டில் இரண்டு மங்கையர் திலகங்கள் இருந்தும், கைக்குத் தோதாக வேலை செய்ய ஒருத்தி இல்லை.


எல்லோருக்கும் மூத்ததாக அவர் பெற்றெடுத்தப் பெண்ணரசியே அவர் கைக்கு ஒத்தாசையாக ஒரு துரும்பை நகர்த்த மாட்டாள் எனும்போது மருமகள்களை எங்கிருந்து குறை சொல்ல? அவள் இங்கே வருவதே பிறந்த வீட்டுச் சீராடலுக்கு மட்டும்தானே?


'யாரைச் சொல்லி என்ன புண்ணியம்?! நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி. இந்த வயசுக்கும் முதுகு ஓடிய ஒழச்சுக் கொட்டணும்ன்னு என் தலைல எழுதி இருக்கு!' என மனதிற்குள்ளே நொந்தவராக, தென்னம் துடைப்பத்தையும், சாணிக் கரைத்த இரும்பு வாளியையும் கைகளில் தூக்கிக்கொண்டு, அடி வயிற்றிலிருந்து ஆத்திரம் பொங்க, தடதடவென வீட்டிற்குள் நுழைந்தார்.


"குட்ட தண்ணிக்குப் போக்கிடம் ஏதுய்யா? செத்தாலும் இங்க எல்லா எடுபிடி வேலையும் செஞ்சி முடிச்சிட்டுதான் என்னால சுடுகாட்டுல கூட போய் படுக்க முடியும். இல்லன்னா எம் பிணத்தை எழுப்பிக் கூட வேல வாங்க மாட்டீங்க நீங்கல்லாம்" எனத் தாழ்வாரத் திண்ணையில் உட்கார்ந்திருந்த குணசேகரனிடம் படபடவெனப் பொரிந்து தள்ளினார்.


முகம் இறுகிக் கருக்க, "என்னடீ வாய் பாட்டுக்கு நீளுது" என அடிக் குரலில் கர்ஜித்தபடி  தன்னைச் சுற்றிப் பார்வையைச் சுழலவிட்டார் குணா.


பிள்ளை, மருமகள், பேரன், பேத்தி என இது யார் பார்வையில் விழுந்தாலும் அவருக்குத் தலை இரக்கம் ஆகிப்போகும் அல்லவா?


               நல்லவேளையாக அந்த வீட்டில் மற்ற யாருக்கும் இன்னும் பொழுது புலராததால் அவரது மானம் கப்பலேறாமல் தப்பித்தது.


 "பின்ன…  எத்தன காலத்துக்குத்தான் ஊமச்சி மாதிரி வாயைத் தச்சிட்டு என்னால போயிட்டு இருக்க முடியும்? எனக்கும் வயசாகுது இல்ல? இது ஏன் உங்க யார் மரமண்டையிலையும் உரைக்க மாட்டேங்குது. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன்யா, எனக்கு மட்டும் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிப்போனா, தொண்ட விக்கிட்டுச் செத்தா கூட எவளும் உனக்கு ஒரு வாய் தண்ணி  ஊத்த மாட்டாளுங்க நெனப்புல வெச்சிக்க" என ராஜம் அடங்காமல் எகிற, வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்துப் புழுங்கிப் புழுங்கிப் புதையுண்டு போய் கிடக்கும் நாட்பட்ட அவரது ஆதங்கமெல்லாம் நெஞ்சை உடைத்துக்கொண்டு வெளிவருவது புரிந்தது.


பதிலுக்குத் தானும் தன் ஆத்திரத்தைக் காண்பித்தால் அது சில பல உண்மைகளைத் தோண்டி விபரீதத்தில் போய் முடிந்துவிடும் அபாயம் இருப்பதால், "சரி... சரி... விடு! பொழுது விடிய எந்தப் பஞ்சாயத்தும் வேணாம்" என இறங்கி வந்தவர், "எனக்கு சூடா ஒரு கிளாஸ் டீய மட்டும் குடுத்துட்டு நேரத்தோட நீ வேலு ஐயா வீட்டுக்குக் கிளம்பு. லேட் ஆனா அதுக்கு வேற ஏச்சு வாங்கணும்" என்று அவர் சொல்லி முடிக்க, ராஜத்துக்கு தன் அடிமைப் பிழைப்பை எண்ணி நெஞ்சே வெடித்துவிடும் போல வலித்தது.


ஏச்சுப் பேச்சு, அடி உதைக்கெல்லாம் தேகமும் மனதும் மரத்துப்போயிருக்க, மிஞ்சிப் போனால் குணாவிடம் வேண்டுமானால் மல்லுக்கு நிற்கலாமே ஒழிய, அதற்கு மேல் அவரால் ஒன்றும் கிழிக்க இயலாது,  வந்ததும் சரியில்லை வாய்ந்ததும் சரியில்லை எனும்போது யாரைக் குறை சொல்ல முடியும் என தன் பிறப்பையே நொந்தபடி அன்றைய பிழைப்பைப் பார்க்கப் போனார் ராஜம்.


***


இந்த நன்காட்டூர் கிராமம் மட்டுமல்ல, அந்தத் தாலுகாவில் உள்ள பல கிராமங்களிலம் நிலங்களை வளைத்துப் போட்டு சர்வாதிகாரியாகத் தன்னை நிலை நிறுத்தியிருப்பவர் வேலாயுதம்.


இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என ஊரை அடித்து உலையிலிட்டு அவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கு மூன்று வாரிசுகள்.


ம்ஹும்… அப்படிக்கூடச் சொல்ல இயலாது. தன் சொத்துக்கு வாரிசுகளாக அவர் அங்கீகரிப்பது தனது இரண்டு மகன்களை மட்டுமே. மற்றபடி மகளுக்குச் செய்ய வேண்டிய சீர்செனத்திகளைச் சற்றுத் தாராளமாகவே செய்து, அவளைச் ஒரு அடி தள்ளியே வைத்திருக்கிறார். அதாவது, மகன்களுக்கு நிகராகவோ அல்லது போட்டியாகவோ ஒரு இடத்தைக் கொடுத்து உள் விவகாரங்கள் எதிலும் தலையிட மருமகனுக்கு வாய்ப்பளிக்காமல், வைக்க வேண்டிய இடத்திலேயே வைத்திருக்கிறார் என்பதே உண்மை.  


அவருடைய மனைவி வடிவாம்பாள் ஒரு சூதுவாதறியா வெள்ளந்திப் பெண்மணி. அதனாலேயே ஒரு மரியாதையான இடம் அந்தக் குடும்பத்துக்குள் அவருக்கு என்றுமே கிட்டியதில்லை. பிள்ளைகளைப் பெற்றுப்போட்டதுடன் அவரது வேலை முடிந்தது என்பதாக, பட்டுப் புடவைகள், தங்க-வைர நகைகளுடன் மூன்று வேளை சாப்பாடு, பெரிய திரையுடனான தொலைக்காட்சி, மூட்டு வலிக்குக் கொஞ்சம் தைலம் எனத்  திருப்திப்பட்டுக் கொண்டு ஒரு ஒப்புக்குச் சப்பாணியாக மட்டுமே அந்த வீட்டுக்குள் வலம் வருபவர்.


மூத்த மகன் தங்கராஜ், குடி, பெண்கள் சகவாசம் என இளம் வயதிலேயே கெட்டுச் சீரழிந்து, போதை தலைக்கேறி செய்த ஒரு விபத்தில் வலது காலை இழந்து, முடங்கிப்போய் வீட்டோடு கிடப்பவன். அவன் மனைவி அருணா. அவர்களுக்கு ஒரே ஒரு மகள், பள்ளியில் படிக்கிறாள். திருமணமாகி நீண்ட வருடம் கழித்துப் பிறந்தவள்.


இளைய மகன் வல்லரசு, தந்தைக்குத் தப்பாத மகனாக, அவரது எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் அடுத்த சர்வாதிகாரி. அவனது மனைவி சந்திரா, வல்லரசு எனும் ஜாடிக்கேற்ற சரியான மூடி! அவர்களுக்கு மகன் ஒன்றும் மகள் ஒன்றுமாக இரண்டு மக்கள். கல்லூரியிலும் பள்ளியிலும் படிக்கிறார்கள்.


ராஜத்துக்கு அவர்கள் வீட்டுக்குச் சமையல் வேலை செய்வதற்காக  வரவேண்டிய நிர்பந்தம்.


மார்பிளால் இழைத்து, பழமையும் புதுமையும் கலந்து கட்டப்பட்டிருந்த அவர்களுடைய அந்தப் பெரிய வீட்டிற்குள் காலை எடுத்து வைக்கவே அசூயையாக இருந்தது.


அவசரத் தேவைக்கெனக் கேட்கும் நேரத்துக்கெல்லாம் கடன் கொடுத்து மூழ்கடித்து,  மீள முடியாதபடி ஊர் சனம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொத்தடிமையாக நடத்தும் இந்த ஆதிக்க குடும்பத்தின் அடையாளமாக, மனிதரை விழுங்கும் ஒரு கொள்ளிவாய்ப் பிசாசு போல நிமிர்ந்து நிற்கும் இந்த வீட்டுக்குள் ஒரு வேலைக்காரியாக நுழைய வேண்டிய கட்டாயத்தில் காலம் தன்னை வைத்திருக்கிறதே என்பதே காரணம்.


அந்த வீட்டின் முக்கியக் கூடம் வெறிச்சோடிக் கிடக்க தயக்கத்துடன் அவர் உள்ளே நுழையவும், "வாங்க சித்தி, உங்களுக்காகத்தான் காத்துட்டு இருந்தேன்" என்றபடி சமையலறையிலிருந்து வெளிப்பட்ட அந்த வீட்டின் இளைய மருமகள் சந்திரா, "சென்னைல இருந்து இன்னைக்கு முக்கியமான விருந்தாளிங்க வராங்க. அருணா கிட்ட மெதுவடைக்கு உளுந்து ஊறப் போடச் சொல்லியிருக்கேன், சீக்கிரமா ஆட்டுக்கல்லுல ஆட்டி எடுத்துருங்க! அப்பத்தான் வட சாஃப்ட்டா இருக்கும். அப்பறம் இட்லி ஊத்தி, பூரி சுடணும். கறிக் குழம்பு, தேங்கா சட்னி, கார சட்னி, பூரிக்கு மசாலு, ஆங்… ஒரு கேசரி எல்லாம் செஞ்சு முடிக்கணும். தேவைப்பட்டா ஆம்லட் போட்டுக்கலாம். ஹ்ம்ம்… அவங்க வரதுக்குள்ள இவ்ளோ ஐட்டத்தையும் எப்படித்தான் செஞ்சு முடிக்க போறோமோ" என அனைத்தையும் பட்டியலிட்டு முடித்தாள்.


என்னவோ அவளே அனைத்தையும் செய்யபோகிறவள் போல  அவளுடைய குரலில் அப்படி ஒரு ஆயாசம் தொனித்தது.


சித்தி என உறவு முறை சொல்லி அழைத்தாலும், அதில் அன்போ, மரியாதையோ மருந்துக்குமில்லை, முதலாளித்துவ கட்டளையின் சாயல் மட்டுமே. அத்தகைய உத்தம குணங்களையெல்லாம் அவளிடம் எதிர்பார்க்கவும் முடியாது.


ஒரு பெருமூச்சுடன் அவர் சமையலறை நோக்கிச் செல்ல, அருகிலிருந்த அறைக்குள்ளிருந்து பறந்து வந்து கீழே விழுந்தது ஒரு வெள்ளிக் குவளை. அதில் மிதமான சூட்டில் நிரம்பியிருந்த காஃபி முழுவதும் கொட்டிச் சிதறி ராஜத்தின் பாதத்தை நனைத்தது.


ஒரு நொடி அதிர்ந்து அவர் பின்வாங்க, "மந்தம்... மந்தம்... ஒரு காப்பி கொடுக்க இவ்வளவு நேரமா? உடம்புல ஒரு சுறுசுறுப்பு வேணாம்? ஊர் உலகத்துல இல்லாத பெரிய ரதி நெனப்பா உனக்கு? கருப்பட்டி மாதிரி இப்படி இருக்கும்போதே உனக்கு இவ்வளவு ஏத்தம் ம்ம்... இன்னும் நல்லபடியா இருந்தியானா உன்னையெல்லாம் கைலயே புடிக்க முடியாது. புருசன்ற பயம் கொஞ்சமாவது இருக்கா? உங்க வீட்டுல, நளாயினி, தமயந்தி மாதிரி பத்தினிங்க கதையெல்லாம் சொல்லி உன்னை வளக்கலையா?" என அறைக்குள்ளிருந்து வந்த காட்டுக் கூச்சலில், காதைப் பொத்திக் கொண்டார்.


அந்தக் குரலில் தொனித்த திமிரிலும் செருக்கிலும் அவரது உடலெல்லாம் நடுங்கியது. அந்த வீட்டின் மூத்த மகனான அந்த மூர்க்கனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்கும் அப்பாவிப் பெண்ணான,  குணாவின் ஒன்றுவிட்ட தமையன் மகளை எண்ணி மனம் பதைபதைத்தது.


தொண்டைக் குழிக்குள்ளிருந்து வெடித்துக் கிளம்பிய கேவலைப் புடவை முந்தானையால் அடக்கியபடி அந்த அறைக்குள்ளிருந்து வெளிப்பட்ட அருணா, அங்கே தன் சித்தியைக் கண்டதும், ஒரு நொடி திகைத்து, பின் தன்னை சமன் செய்துகொள்ள முயன்றாள்.


அதற்குள் அங்கே வந்த பெண்ணொருத்தி அந்த இடத்தைச் சுத்தம் செய்யத் தொடங்க, அவரை இப்படி ஒரு சூழ்நிலையில் அங்கே கண்டதால் உண்டான அவமானத்தில் அருணாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய, என்ன பேசுவதென்றே புரியாமல் ஸ்தம்பித்து நின்றார் ராஜம்.


அதைத் தொடரவிடாமல், "இதென்ன இது, ரெண்டு பேரும் இப்படி மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க! சீக்கிரம் வந்து வேலையை ஆரமிக்க பாருங்க" என சந்திராவிடமிருந்து ஒரு அதட்டல் வந்தது.


இருவருக்குமே இதெல்லாம் புதிதில்லை என்பதால், சூடு சுரணை அனைத்தையும் துடைத்தெறிந்துவிட்டு, இயந்திரங்களைப் போல தங்கள் வேலையில் மூழ்கினர்.


சரியாக இரண்டு மணி நேரத்தில், வீட்டு மனிதர்களையும் சேர்த்து இருபது நபர்களுக்கு மேல் காலை உணவு தயாராகியிருந்தது.


முதலில் சொன்னதை விடக் கூடுதலாக இரண்டு பதார்த்தங்களையும் செய்ய வைத்து, ஒரு நொடி கூட ஓய்வு கொடுக்காமல் சக்கையாய் பிழிந்து அவர்களை வேலை செய்ய வைத்திருந்தாள் சந்திரா. 


இப்படி ஒரு திறமை அவளுக்கு இருப்பதால்தான் அந்த வீட்டின் மொத்த நிர்வாகமும் அவளுடைய கைக்கு வந்திருந்தது என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லை, அவள் வேலாயுதத்தின் சொந்த தங்கை மகள் என்கிற சிறப்புத் தகுதியும் ஒரு காரணம்.


"ஏய் மஞ்சு, சீக்கிரம் வந்து சாப்பாட்டு டேபிளைச் சுத்தம் செய்டி" என அடுத்த அதட்டல் சந்திராவிடமிருந்து வரவும், பின் கட்டிலிருந்து தடதடவென ஓடி வந்தாள் மஞ்சு எனும் அந்தப் பதின் வயதுப் பெண்.


அவசர அவசரமாக உணவு மேசையைச் சுத்தம் செய்தவள், அந்தக் கூடத்தையும் பெருக்கிச் சுத்தம் செய்துவிட்டு அங்கிருந்து சென்று மறைந்தாள்.


"ஏய், கன்னியப்பா, வாழை இலை எங்க?" என அவள் கொடுத்த குரலில், கட்டு வாழையிலையுடன் வந்த கன்னியப்பன் பின்கட்டு வாயிலின் ஓரமாக அதை அப்படியே வைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.


உடனே மஞ்சு அதைக் கொண்டுவந்து உணவு மேசை மேல் வைத்துவிட்டுப் போக, வாயிற்புறம் சலசலத்தது.


ஒரு பரபரப்புடன், அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் பார்த்து புடவையைச் சரி செய்தபடி, அருணாவை ஏற இரங்கப் பார்த்த சந்திரா, "அதான் கெஸ்ட் வரங்கன்னு தெரியும் இல்ல, கொஞ்சம் பளிச்சுன்னு டீசன்ட்டா டிரஸ் பண்ணமாட்ட? உன்ன பார்த்தாக்க இந்த வீட்டு மருமக..ன்னு சொல்லுவாங்களா இல்ல வேலைக்காரின்னு சொல்லுவாங்களா? போ, போய் முதல்ல டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா" என தன் வன்மத்தைக் கக்கிவிட்டு ஒரு போலியான புன்னகையை முகத்தில் படரவிட்டபடி வெளியில் சென்றாள். எதிர்த்து ஒரு வார்த்தை பேசக் கூட திராணியற்று, அவமானத்தில் புழுங்கி, தலையைத் தொங்கவிட்டபடி தங்கள் அறை நோக்கிப் போனாள் அருணா.


நொடி நேரம் இடைவெளி விடாமல், பாவம் அவளிங்கே சமையல் கட்டில் உழைத்துக்கொட்டி இருக்க,  சாஃப்ட் சில்க் புடவையும் டிசைனர் பிளவுசும், அதற்குத் தோதான நகைகளும் அணிந்து சீவி சிங்காரித்து தலை நிறைய பூ முடித்து சர்வாலங்கார பூஷிதையாகத் தயாராகி நிற்க சந்திராவுக்குப் போதுமான நேரம் கிடைத்துவிட்டது. அந்தத் திமிரில் இதுவும் பேசுவாள் இன்னமும் பேசுவாள் என மனதிற்குள் கொதித்தபடி ஓரமாகப் போய் நின்றார் ராஜம்.


இதெல்லாம் ஒரு புறம் இருக்க, யார் இந்த புது விருந்தினர் எனப் பார்க்கும் ஒரு அதீத ஆவலும் அவருக்கு உண்டாகத்தான் செய்தது .


அங்கிருந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க, வல்லரசு முன்னால் வந்துகொண்டிருக்க, அவனைப் பின்தொடர்ந்து சிலர் வருவது தென்பட்டது.


வாயெல்லாம் பல்லாகச் சந்திரா அவர்களை வரவேற்க, அவளது பார்வையில் படாமல் பின்னால் நகர்ந்துகொண்டு பார்வையைச் சுழற்றினார் ராஜம்.


ஒரே மாதிரியான சீருடை அணிந்த, வாட்டசாட்டமான ஆண்கள் நான்கு பேர் வரவேற்பறையிலேயே நின்றுவிட, சந்திரா பின்தொடர அரசுவுடன் இணைந்து மாடிப்படியில் ஏறிக்கொண்டிருந்தாள் ஒரு பெண். உயரமும் பருமனுமாக நெடுமரம் போல் அவன் அவளை மறைத்திருக்க, பக்கவாட்டு தோற்றத்தில் அவளது பாதி உருவம் மட்டுமே தெரிந்தது. சிறு ஏமாற்றத்துடன் ‘ப்ச்’ என சலித்துக்கொண்டார்.


மாடி அறையிலிருக்கும் வேலுவிற்கும் வடிவாம்பாளுக்கும் அவளை அறிமுகம் செய்து வைக்கவே அங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்பது புரிந்தது. வயோதிகம் காரணமாக அவர்கள் அதிகம் கீழே இறங்குவதே இல்லை. நாள் முழுக்க தொலைக்காட்சித் தொடரிலேயே ஐக்கியமாகி இருப்பார்கள். பெரும்பாலும் சாப்பாடு கூட  அருணா மாடி அறைக்கே கொண்டுபோய் கொடுத்துவிடுவாள்.


அதைகூட இந்த மகராசி செய்ய மாட்டாள், பாவம் இந்தப் பெண் அருணா!' என்ற பரிதாபம் ஏற்பட்டாலும் 'அவளைப் பெற்றவர்களின் பேராசையால் வந்த வினைதானே?' எனறு எண்ணியபடி ஒரு பெரும்மூச்சுடன் போய் உணவு மேசையின் இணைவிருக்கையில் அமர்ந்தார் ராஜம்.


சில நிமிடங்களில் அவர்கள் கீழே வந்துவிட, அவசரமாக எழுந்துபோய் அவர் ஓரமாக நிற்க, "என்ன வேடிக்க பார்த்துட்டு நிக்கறீங்க. எல போடுங்க சித்தி" என்றபடி ஓடி வந்தாள் சந்திரா.


கடுப்பானாலும், "எத்தன பேரும்மா?" என அவர் இயல்பாகக் கேட்க, ஏதோ கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டு விட்டது போல், 'ஷ்... ப்பா' என்ற அலுப்புடன், "பிள்ளைகளும் வந்துடுவாங்க. ஒரு பத்து பேருக்குப் போடுங்க" என்றபடி வெளியில் சென்றாள்.


இலையைக் கழுவி மேசை மீது விரித்துவிட்டு, குவளைகளை வைத்து தண்ணீர் நிரப்பினார்.


பளிச்சென ஒரு புடவையை உடுத்தி, தலை சீவி அருணாவும் வந்துவிட, அரசுவுடன் உள்ளே நுழைந்த அந்தப் பெண் ராஜத்தின் கண்களுக்கு அழகியாக, பேரழகியாகத் தெரிந்தாள். அவளைச் சுற்றி ஒளிவட்டம் தெரிவது  போன்றதொரு பிரமை தட்ட, வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்தபடி ஸ்தம்பித்து நின்றார் ராஜம்.


ஏனோ அவரது அடி வயிறு அப்படியே சில்லிட்டுக் குளிர்ந்தது.


*** 


மும்பை நகரத்திலிருக்கும் உயர் ரக பப் ஒன்றில் வெறியாட்டம் போட்டுக்கொண்டிருந்த சிவசக்தி குழுமங்களின் நிறுவனர் சிவப்பிரகாசத்தின் ஏக போக வாரிசான சக்தியை அடக்கும் வழி தெரியாமல் விழிப் பிதுங்கி நின்றான் அவனது காரியதரிசி பிரேம்.


இந்தச் சம்பவம் மட்டும் வெளியில் கசிந்தால் ஊடகப் பசிக்கு அவன்தான் விருந்து.


போதை தலைக்கேறி அவன் உடைத்து நொறுக்கி சேதம் விளைவித்திருந்த பொருட்களின் மதிப்பே சில இலட்சங்கள் பெரும். அதற்கான தொகையைக் கொடுக்கவாவது அவன் சற்று மலை இறங்கி வர வேண்டும்.


ஆனால் அது இப்பொழுது சாத்தியம் இல்லை என்பதால் வருவது வரட்டும் என தன் கைப்பேசியை எடுத்தவன் யாருக்கோ அழைப்பு விடுத்தான். உடனே அந்த அழைப்பு ஏற்கப்படப் பூர்வ பீடிகை ஏதுமின்றி நிலைமையை விளக்கி அழைப்பைத் துண்டித்தான் பிரேம்.


அடுத்த பத்தாவது நிமிடம் அங்கே வந்திறங்கினான் இங்கே பிரச்சனை செய்துகொண்டிருப்பவனை அடக்கும் வித்தை தெரிந்த ஒரே ஒருவன், அவன்தான் பகலவன்! அதனால்தான் இவ்வளவு அவசரமாக அவனை அழைத்திருந்தான்.


சக்தியிருந்த போதை வெறியில் கூட, "சக்தி, வாட் இஸ் திஸ்?" என்ற அவனது கண்டனக் குரலில் பின்புறமாகத் திரும்பியவன், நண்பனைக் கண்டதும் அவனை நோக்கித் தள்ளாடியபடி வந்தான்.


பிரேமின் கையில் ரூபாய் நோட்டு கட்டுகளைத் திணித்த பகலவன், 'பார்த்துக்கொள்' என்பதாக ஜாடை செய்துவிட்டு சக்தியின் தோளில் கைப் போட்டு அணைத்தபடி தள்ளிக்கொண்டு வந்து தன்னுடைய காரின் முன்னிருக்கையில் திணித்து கதவைப் பூட்டினான். பின் சுற்றி வந்து அவனுக்கு அருகில் அமர, சாலையை வெறித்தபடி உடல் இறுக அமர்ந்திருந்தான் சக்தி.


"ஹேய், என்னடா உனக்குப் பிரச்சன?" என பகலவன் இதமாக வினவ,


"எங்கடா போனா அவ?" எனக் கேட்டான் குளறலாக.


"எவ அவ?" என இவன் பகடி பேச,


"வேணாம் மச்சி, ஏற்கனவே கொல வெறில இருக்கேன்" என இவனும் எகிற,


"ஹேய், பின்ன... சும்மா அவ இவன்னா வேற எப்படி கேப்பாங்களாம்!" என பகலவன் இலகுவாகவே பதில் கொடுக்க,


அவனுடைய மென்மையான பார்வையிலும் வசீகரிக்கும் புன்னகையிலும் சற்றுத் தணிந்தவனாக, "அதான், அந்த இராட்சசி... உன்னோட பெஸ்டீ" என மீண்டும் அவனுடைய சிந்திக்கும் திறனை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவளின் பெயரைச் சொல்லாமல் சமாளிக்க,


"புரியல" என்றவனைக் கொலை வெறியுடன் பார்த்தவன்,


"ஏன், ஸ்வரா...ன்னு அந்த மகாராணியோட பேர டைரக்டா சொன்னாத்தான் சாருக்குப் புரியுமோ" என்றான் வார்த்தைகளில் எரிச்சலைத் தேக்கி.


"வேணாம் சக்தி, அவள டிஸ்டர்ப் பண்ணாத. அவளுக்கும் உனக்கும் கொஞ்சம் கூட செட் ஆகாது" என பகலவன் தீவிர பாவத்தில் சொல்ல,


"நான் அவ பேரைச் சொன்னாலே உனக்கு ஏன்டா எரியுது? உண்மையை ஒத்துக்கோ, நீ அவள லவ் பண்றதான? அதனாலதான் இப்ப சான்ஸ் எடுக்கப் பார்க்கற இல்ல?" என சக்தி காட்டமாக வினவ பக்கெனச் சிரித்தேவிட்டான்.


அதில் அவன் மேலும் கடுப்பாக, "வேணாம் சக்தி, ஏற்கனவே அவ உன் மேல செம்ம எரிச்சல்ல இருக்கா. நீ இப்படி பேசறது மட்டும் அவளுக்குத் தெரிஞசுதுன்னு வை உன்ன மட்டுமில்ல என்னையும் உரிச்சு தொங்க விடருவா ஜாக்ரத" என இலகுவாகவே சொல்ல,


"ஹேய், கொஞ்சம் கூட வெட்க்கமா இல்லயா உனக்கு? ஒரு பொண்ணு உன்னை அடிப்பான்னு இப்படி பப்ளிக்கா சொல்ற?" என அவன் நக்கல் இழையோடக் கேட்க,


"எக்ஸாக்ட்லி கொஞ்சம் கூட வெட்கப்பட மாட்டேன். இதுக்கெல்லாம் எதுக்குடா வெட்கப்படணும்? உன்னை மாதிரி ஆள பார்த்துதான் நான் வெட்கப்படணும். 'நீ எனக்கு வேணாம், என்ன டிஸ்டர்ப் பண்ணாத'ன்னு ஒரு பொண்ணு ஓப்பனா சொல்லிட்டுப் போனதுக்கு அப்பறமும் அவளுக்கான ஸ்பேஸ கொஞ்சம் கூட கொடுக்காம, தொடர்ந்து அவளை ஸ்டாக்கிங் பண்ணிட்டு இருக்க பாரு. அத முதல்ல நீ நிறுந்து" எனப் பகலவன் கண்டனமாகச் சொன்னாலும் அதெல்லாம் கொஞ்சம் கூட சக்தியின் மூளைக்குள் ஏறவே இல்லை.


"ஏய், நீ சொல்ற மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது. இப்ப அவ எங்க இருக்கான்னு மட்டும் சொல்லு போதும். அவளை எப்படி கரெக்ட் பண்றதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்று பிடிவாதமாகக் தன் நிலையிலேயே நின்றான்.


"உன்னோட சகவாசம் வெச்ச பாவத்துக்கு என் நம்பரையும் சேர்த்து ப்ளாக் பண்ணி வெச்சிருக்கு அந்தப் பிசாசு... நீ வேற எரிச்சலைக் கிளப்பிட்டு" எனச் சலிப்புடன் பகலவன் சொன்ன நொடி, தன் அலைபேசியை இயக்கியவன், எதிர் முனையில் அந்த அழைப்பு ஏற்கப்பட்டதும், "ஹலோ மிஸ்டர் சக்சேனா, நான் ஒரு நம்பர் அனுப்பறேன், அது இப்ப எந்த லொகேஷன்ல இருக்குன்னு கண்டுபிடிச்சு உடனே எனக்கு மெசேஜ் பண்ணுங்க" என்பதை ஹிந்தியிலேயே கட்டளையிட்டு அழைப்பைத் துண்டித்தான்.


"அனாயிங் சக்தி! ரொம்ப அளவு கடந்து போயிட்டு இருக்க! உன் இஷ்டத்துக்கு ஆட அவ ஒண்ணும் பப்பட் கிடையாது, மைன்ட் இட்" எனத் தன்னுடைய 'மிஸ்டர் கூல்' சுபாவத்தை மறந்து கண்களில் கோபம் தெறிக்க பகலவன் சொல்லிக்கொண்டிருக்க, அதற்குள்ளாகவே அவன் சொன்ன வேலை முடிந்திருந்தது.


தன் கைப்பேசியில் வந்திருந்த குறுஞ்செய்தியை வாசித்ததும் முகத்தில் ஒரு புன்னகை  படர, "நன்காட்டூர் வில்லேஜ், தமிழ்நாடு" என முணுமுணுத்தான் சக்தி.


'ஐயோ, இவன் இதோட விட மாட்டானே! அவ வேற இவனை விட ரெண்டு மடங்கு அடங்காப்பிடாரி ஆச்சே" என தன் தலையைப் பிடித்துக்கொண்டான் பகலவன்.


அங்கே சாவகாசமாக உட்கார்ந்து ராஜம் செய்த பூரியை அருணா செய்த மசாலாவில் தோய்த்து இரசித்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், இங்கே சக்தி, பகலவன் என்ற இருவரையும் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கும் ஸ்வரா எனும் பெண்ணரசி!


1 comment

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Sumathi Siva
Sumathi Siva
Jun 06, 2023
Rated 5 out of 5 stars.

Wow awesome

Like
© KPN NOVELS COPY PROTECT
bottom of page