top of page

Kaadhal Va..raathaa! 1*

காதல்-1


கார்த்திகை மாதத்து கார்மேகம், மெல்லிய தூறல்கள் எனும் அட்சதையை, பச்சை பசேல் என்ற நெற் பயிர்களை தன் மடியில் சுமந்திருந்த பூ மகள் மீது மென்மையாகத் தூவி அவளை ஆசிர்வதிக்க, அதில் மனம் குளிர்ந்து உடல் சிலிர்த்துப் போகவே, அந்த குளுமையை மற்றவருக்கும் உணர்த்தும் பொருட்டு, அதை அனைவருக்கும் அள்ளிக் கொடுத்துக்கொண்டிருந்தாள் அந்த இயற்கை அன்னை அவளது தோழியான வாடை காற்றின் துணையுடன்.


காஞ்சிபுரத்துக்கும் வந்தவாசிக்கும் இடையில் உள்ள 'தேத்துறை' என்ற கிராமத்திலிருக்கும் அந்த அழகிய இரண்டு கட்டு வீடு, அன்று அதிகாலை முதலே பரபரப்புக்களாகி இருந்தது! ஆனந்தி-ராகவன் தம்பதியினரின் அருமை மகள் மைத்ரேயியின் பூச்சூட்டல் வைபம்தான் காரணம்.


சடசடவென முற்றத்தில் வேகமாக வந்து விழுந்த தூறல்களைப் பார்த்து, மனதில் பதட்டம் குடிகொள்ள, 'பெருமாளே! சம்பந்தி ஆத்து மனுஷா எல்லாரும் வந்துட்டு போற வரைக்கும் இந்த மழை வலுக்காமல் இருக்கணுமே!' என எண்ணியவராக,


“டீ! சின்னு! வெத்தல பாக்கு தட்டை எடுத்து வச்சியாடி?


டீ! மரப்பாச்சி பொம்மையை எங்கடீ வெச்ச!


சோழி கிடைச்சுதா?" தனது சின்ன மகள் சின்மயியை ஓட ஓட விரட்டிக்கொண்டிருந்தார் ஆனந்தி அடுக்களையில் (சமையலை) தளிகையைக் கவனித்துக்கொண்டே.


"மன்னி! அக்காரை அடிசிலுக்கு (பாயசம்) வெல்லம் நறுக்கச் சொன்னேனே எங்க?" என்று அவரது மைத்துனர் வரதன் கேட்க, முந்திக்கொண்டு, "தோ இருக்கு... இந்தாங்கோ சித்யா(சித்தப்பா)!" என்றவாறு அதை அவருக்கு அருகில் கொண்டு வைத்தாள் சின்மயீ, அவளுடைய தாயார் சொன்ன அனைத்தையும் செய்து முடித்த கையோடு.


"சின்னு! நீ இங்கயே இருந்து சித்தியாவுக்கு ஹெல்ப் பண்ணு! நான் மைத்து என்ன பண்றானு பார்த்துட்டு வந்துடறேன்!" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் ஆனந்தி.


அரக்கு நிற பட்டுப்புடவையில் மடிசார் உடுத்தி, மேடிட்ட வயிற்றுடன், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கக் கூடத்து அறையில் தயாராகிக்கொண்டிருந்த மூத்த மகள் மைத்ரேயியை கண்களில் நிறைத்துக்கொண்டு, அவளுடைய புடவையின் கால் பகுதியை இழுத்துச் சரி செய்தவாறே, "மைத்து, தலை முடியை ஃபேன்ல காய வை!" என்று சொல்லிவிட்டு, "டீ! லதா! அவளுக்கு தலையைப் பின்னி பூவை சுத்து!" என அவரது தங்கையைப் பணித்தவர்,


நம்மாத்து பிள்ளை இன்னைக்கு இங்க இல்லன்னா உங்காத்து மனுஷால்லாம் என்ன நினைப்பா? என்ன சொல்லுவா?


அவனுக்கு எதாவது இருக்கா பாரு! எப்பப்பாரு ஹாஸ்பிடல், சர்ஜரின்னு எதாவது சொல்லிண்டு இருக்கான்!" என ஆனந்தி குறை பட,


"ம்மா.. எல்லாருக்கும் அண்ணாவை பத்தியும் தெரியும் அவனோட வேலையை பதியும் தெரியும். அவனை யாரும் ஒரு குறையும் சொல்ல மாட்டா.


அப்படியே மனசுல நினைச்சாலும் அத்த வெளில சொல்ற தைரியம் அவா யாருக்கும் கிடையாது.


அவன் அக்ஷய பாத்திரம் மாதிரி. அவனை பகைச்சுக்க மாட்டா; நீ கவலை படாதே!" என மூச்சுவிடாமல் தமையனுக்குப் பரிந்துகொண்டு வந்தாள் தங்கை.


அதன்பின், "ஏன்னா! மாப்பிள்ளை ஆத்து மனுஷால்லாம் வந்துடுவா! இங்கேயே இருங்கோ! முடிஞ்சா கண்ணனுக்கு போன் போடுங்கோ! பேசினான்னா சித்த கூப்பிடுங்கோ!" என்றவாறு அடுக்களை நோக்கிப்போனார்.


அங்கே இருந்த சின்ன மகளை, "லதாசித்தி கிட்ட, ராக்கொடி, பூ எல்லாத்தையும் எடுத்து குடுடீ! வேற என்ன வேணுமோ ஹெல்ப் பண்ணு! போ! உங்காத்துக்கார், மாமனார், மாமியாரெல்லாம் வந்தான்னா அவாளை பக்கத்துல இருந்து கவனிச்சிக்கோ!" என்று சொல்லி அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.


பின்பு, "அம்மா ராஜி! நம்ம மைத்து ஆத்து மனுஷால்லாம் வந்தான்னா, கவனிச்சு காஃபீ கொடு. மாப்பிளையோட தாத்தாவுக்கு சக்கரை போடாம பால் கொடு.


நான் கலவை சாதத்தை எல்லாம் பாத்திரத்தில் மாத்தி வைச்சிட்டு வந்துடறேன். சித்தியா (இங்கே குறிப்பிடுவது அவருடைய கணவரின் சித்தப்பா / சின்னமாமனார்) திருவாராதனம் (தெய்வ ஆராதனை) பண்ண வந்துடுவர்!" என்று தனது ஓர்ப்படியிடம் சொல்லிவிட்டு (கணவரின் தம்பியுடைய மனைவி) மற்ற வேலைகளில் மும்முரமானார் ஆனந்தி.


அதன் பின்னர் சம்பந்தி இல்லத்து மனிதர்கள், மற்ற பந்துகள் என ஒவ்வொருவராக வந்துசேர, அவர்கள் இல்லமே ஜே.. ஜே.. என்று ஆனது.


அதன் பின் 'லக்ஷ்மி கல்யாணம் வைபோகமே!' என்ற பாடலில் தொடங்கி, 'குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணாவில் வந்து, 'என்ன தவம் செய்தனை... யசோதா!' வை கடந்து 'மங்களம் மங்களம் ஜெய.. கண்ணனுக்கு' என்ற பாடலுடன் இனிதே முடிவடைந்தது அந்த வைபவம் அவர்கள் இல்லத்துச் செல்ல கண்ணனான 'ஆனந்த கிருஷ்ணன்' இல்லை என்ற ஒரே ஒரு குறையைத் தவிர வேறு குறை ஒன்றும் இல்லாமல்.


வந்தவர்கள் ஒவ்வொருவராகக் கிளம்ப, "மாமி தளிகையெல்லாம் ரொம்ப பிரமாதமா இருந்தது.


நீங்கதான் சின்ன பங்க்ஷனுக்கு எல்லாம் கேட்டரிங் சொல்ல மாட்டிங்களே! யார் குக் பண்ணா!" என அங்கே வந்திருந்த கீதா மாமி கேட்க, "எங்க மச்சினர் பண்ணேர் மாமி!


நானும் என் ஓர்படி ராஜியும் ஹெல்ப்பு!" என்றார் ஆனந்தி பெருமை பொங்க.


"நன்னா தாராளமா சாதிச்சா! (பரிமாறினார்கள்) இப்படியெல்லாம் இப்ப இருக்கற காலத்துல சாப்பிட முடியுமா என்ன!


ப்ச்.. மூத்தவ அனுபமா அமெரிக்காலயே செட்டில் ஆயிட்டா!


ட்யூயல் சிட்டிசன்ஷிப் அது இதுன்னு சொல்லி அங்கேயே பிள்ளையை பெத்துக்கணும்னு ஒத்த கால்ல நின்னு சாதிச்சுண்டா!


பூச்சூட்டல் சீமந்தம்; ம்ஹும் ஒண்ணும் பண்ண முடியலையே. எங்காத்து மாமாவுக்கு மாப்பிள்ளை மேல ஏகப்பட்ட வருத்தம்.


உங்காத்து பூச்சூட்டல்ல கலந்துண்டது எங்க பெண்ணுக்கே பண்ணி அழகுபார்த்த ஒரு பீல் கொடுத்தது" எனக் கண் கலங்கினார் கீதா.


"ஏன் மாமி இவ்ளோ வருத்தப்படறீங்கோ; அதான் உங்க சின்னவ இருக்காளே அவளுக்கு மாமா மாதிரியே டாக்டர் மாப்பிள்ளையா பார்க்கலாமே!


அவளும் மெடிக்கல் பீல்டுல தானே இருக்கா; ரெண்டு பேருக்கும் செட் ஆகும்; அவளுக்கு எல்லாத்தையும் பண்ணி அழகு பார்க்கலாமே" என ஆனந்தி ராகமாகச் சொல்லத் தீவிரமாக யோசித்தவர் “நானும் அதேதான் மாமி நினைச்சிண்டு இருக்கேன். அதேபோல நடந்துதுன்னா நான் ரொம்பவே சந்தோஷப்படுவேன்; எல்லாத்துக்கும் கால நேரம் கூடி வரணுமோல்லியோ!" என்று சொன்ன கீதா கூடவே, “நேரம் ஆயிடுத்து; இப்பவே கிளம்பினா தான் எனக்குச் சரியா இருக்கும்; நான் கிளம்பட்டுமா?" என சொல்லிட்டு அவர் செல்ல எத்தனிக்க, "சித்த இருங்கோ! சித்த இருங்கோ!" என்றவர், "டீ லதா! மாமி கிளம்பறா பாரு; வெத்தல பாக்கு குடுடி!


வளையல் இருக்கான்னு செக் பண்ணிக்கோ; ராஜி தளிகை உள்ள இருப்பா, அவ கிட்ட சொல்லி மாமாவுக்கு கொஞ்சம் பக்ஷணம் பேக் பண்ணி குடுக்க சொல்லு; அப்படியே கொஞ்சம் புளிஹோரையும்” என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போனார் ஆனந்தி.


தாம்பூலத்துடன் மந்தார இலையில் சுற்றிய பட்சணங்களைத் தட்டில் வைத்து கீதாவிடம் கொடுத்தார் ஆனந்தியின் தங்கை லதா கூடவே ஒரு பாத்திரம் நிறையப் புளியோதரையும்!


அதைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார் கீதா.


சில மணி நேரங்கள் கடத்த நிலையில் அவர்களுடைய இளைய மகள் சின்மயீ அவளுடைய கணவர் மற்றும் மாமனார் மாமியாருடன் கிளம்ப, "எல்லாருமா வந்திருந்து நல்லபடியா நடத்திக்கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்!" எனச் சொல்லிக்கொண்டே அவர்களை வழி அனுப்ப வாசல் வரை வந்தனர் ராகவனும் ஆனந்தியும்.


"கண்ணனை நாங்க கேட்டதா சொல்லுங்கோ! அடுத்த தடவ வரும் போது சந்திக்கலாம்." என சின்மயியின் மாமனார் சொல்ல, "அவஸ்யம்!" என்ற ராகவன், "அவன் ஆள்தான் அங்க இருக்கானே தவிர; அவன் மனசு பூரா இங்கதான் இருக்கும்! தங்கைகள்னா அவ்ளோ ஸ்பெஷல் அவனுக்கு!" என்று முடித்தார் மகனுக்குப் பரிந்துகொண்டு.


அதேநேரம் சென்னையில் இருக்கும் புகழ் பெற்ற 'அனுகிரஹா ஈ.என்.டீ ஸ்பெஷாலிட்டி சென்டர்' எனும் பிரபல மருத்துவ மையத்தின் அறுவைசிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தான் அவர்களுடைய சீமந்த புத்திரன் ஆனந்த கிருஷ்ணன்.


திட்டமான உயரம், அறுவை சிகிச்சை அறையில் அணியும் நீல நிற அங்கியால் உடல் முழுவதையும் மூடி இருந்தான். தலையில் ஒரு தொப்பி!


அதுவரை முகத்தை மூடி இருந்த முகமூடியை அவன் கழற்றி விட்டிருக்க, கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்தது அது.


சுத்தமாகச் சவரம் செய்யப்பட்ட தாடைகள்.


கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாததால் சிவந்தே இருக்கும் உதட்டில் உதிர்ந்துகொண்டே இருக்கும் வசிய புன்னகை.


கருகருவென இருக்கும் சுறுசுறுப்பான கண்கள். அதில் நிறைந்திருக்கும் கருணை அனைத்துமே ஒன்று சேர்ந்து அவன் செய்யும் மருத்துவ பணியில் அவனை மேலே கொண்டு உட்கார வைத்திருந்தது.


அறுவை சிகிச்சையில் கை தேர்த்தவன் என்ற பெருமையை முப்பத்து இரண்டு வயதிற்குள்ளாகவே பெற்றிருந்தான் அந்த ஆனந்த கிருஷ்ணன்!


முகத்தில் கவலையோடு காத்திருந்த அந்த இளம் தம்பதியரை நெருங்கியவன்,“நத்திங் டு ஒர்ரி; உங்க குழந்தை சூப்பரா இருக்கா.


இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க போய் அவளைப் பார்க்கலாம். அண்ட் வெரி சூன் அவளோட காது நார்மலா கேட்கும்" என ஆறுதலாக அவர்களிடம் சொன்னவன் கையுறைகளைக் கழற்றியவாறு ஓய்வறை நோக்கிப் போக, அங்கே காத்திருந்த இளம் பெண் ஒருத்தி, "எக்ஸ்க்யூஸ் மீ!" என அழைக்க, "எஸ்!" என அவன் பதில் கொடுக்கவும், கையில் வைத்திருந்த மருந்து சீட்டை அவனிடம் காண்பித்து, "எங்க அப்பா இங்க ரூம் நம்பர் எப்.த்ரீ நாட் எய்ட்ல இருக்கார்! இந்த இயர் டிராப்ஸை எவ்வளவு ட்ராப்ஸ் போடணும்!" என அவள் குழைவாகக் கேட்க, அவன் வாங்குவதற்கு முன்பே அந்த காகிதத்தை வெடுக்கென பறித்தவள் அதைப் பார்த்துவிட்டு, "இதுலயே கிளியரா எழுதி இருக்கே த்ரீ ட்ராப்ஸ் இன் லெஃப்ட் இயர்னு!


இல்லன்னா அந்த ரூம் இன்ச்சார்ஜ் சிஸ்டர் இருப்பங்களே அவங்க கிட்டேயே கேட்டிருக்கலாமே!


நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு தியேட்டர் வரைக்கும் வந்து கேட்கணுமா!" எனக் குழைவாகவே அந்த பெண்ணிடம் சொன்னாள் அங்கே வந்த அந்த சூறாவளி.


அவர் குரலில் மட்டுமே மென்மை குடியிருக்க, அவளது கண்கள் கண்ணனைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.


அந்த பெண் கண்ணனை ஒரு பரி..தாப பார்வை பார்த்துவிட்டுச் அங்கிருந்து செல்ல, "உனக்கு இப்ப; இங்க; என்ன வேலை! என் பேஷண்ட்ஸ் அவங்க அட்டண்டர் எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ற!" எனக் கொஞ்சம் கடுமையாக அவன் கேட்க, 'அட்டெண்டராம் இல்ல! அவ உங்களைப் பார்த்து விட்ட ஜொல்லுல என் காலே வழுக்கர்து!' என மனதிற்குள் எண்ணியவள், நக்கல் சிரிப்புடன், "நீங்க என்ன ஸ்பெஷலிஸ்ட்! அதை சொல்லுங்கோ பார்க்கலாம்!" என அவள் கேட்க, அவள் எதோ வம்பிழுக்கிறாள் என்பது அவனுக்கு விளங்க, "நான் சொன்னாலும்; உனக்கு திரும்ப சொல்ல வராது! அதுக்கு நான் ஏன் சொல்லணும்! ம்.." என அவன் கிண்டலாகச் சொல்ல, "யாருக்கு எனக்கா?" என்றவள், "ஒடோர்...ஹிநோல...ரிங்கோலோஜிஸ்ட்" தட்டுத்தடுமாறி ஒருவழியாகச் சொல்லி முடித்தவள், "ப்பா... வாய்லையே நுழையாத ஒரு பேரு! ஹும்" என மூச்சுவாங்க, அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தவன், "பேர் வாய்ல நுழையறதோ இல்லையோ எங்க தொழில் வாயில மூக்குல தொண்டைல காதுல எல்லாம் நுழையும்!


ஈ.என்.டீ ப்ளஸ் நெக் சர்ஜனை பார்த்து என்ன பேச்சு பேசற நீ!" என்றவன் அவளுடைய கண்களில் கலந்தவாறு, "உண்மையை சொல்லு! நீ என்னை பார்க்கத்தானே வந்த?" எனக் கண்ணன் கேட்க,


"அய்ய! நான் எங்க அப்பாவைப் பார்க்க வந்தேன்!


அவருக்கு லன்ச் கொண்டு வந்திருக்கேன்!" எனக் கையில் வைத்திருந்த கூடையைத் தூக்கிக் காண்பித்தவள், "இதுல உங்காத்துல இருந்து வந்த பக்ஷணமும், புளிஹோரையும் இருக்கு!


நீங்க வேணா வந்து ஜா...யின் பண்ணிக்கலாம்!" என நீட்டி முழக்கிச் சொல்லவிட்டு அவனுடைய தந்தையை நோக்கிப் போனாள் அனுராதா!


அவளையே தொடர்ந்தன கண்ணனின் குறுகுறு கண்கள்.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Commenting has been turned off.
© KPN NOVELS COPY PROTECT
bottom of page