top of page

Isaithene -9

9. வியூகம்


கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த செல்வியிடமிருந்து கிளம்பிய வினோத ஒலியில் திடுக்கிட்டு கண் விழித்தாள் தேன்மொழி.


"அம்மா, என்ன ஆச்சு" எனக் குரல் கொடுத்தபடி வேகமாக எழுந்து மின் விளக்கை ஒளிரவிட, பதில் சொல்லக்கூட இயலாத அளவுக்கு அவர் மூச்சு விட சிரமப்படுவதை பார்த்து வெகுவாகப் பதறிப்போனாள்.


உடனே ஜனாவுக்கு கால் செய்து, வரச்சொல்லிவிட்டு, மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல வேகமாகத் தயாரானாள்.


சில நிமிடங்களில் ஜனாவும் வந்துவிட, செல்வியை வழக்கமாக காண்பிக்கும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.


டியூட்டி டாக்டர் நன்கு பரிச்சயமானவராக இருக்க, அவரது உடல்நிலை குறித்து நன்றாகவே அறிந்துவைத்திருக்கவே, உடனே செயற்கை சுவாசம் அளித்து அவருக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினார்.


அவரே, செல்விக்கு வழக்கமாக பார்க்கும் இதயவியல் மருத்துவர் சாரதாவுக்கு தகவல் தெரிவிக்க, சில பரிசோதனைகளை செய்யச்சொல்லிவிட்டு, உடனே நேரில் வந்து பார்ப்பதாகச் சொல்லி அழைப்பிலிருந்து விலகினார்.


அவர் சொன்ன பரிசோதனைகளை எடுத்து முடிக்கவே மதியமாகிவிட்டது.


ஏதோ ஒரு அறுவைசிகிச்சையை முடித்துவிட்டு சாரதா அங்கே மாலைதான் வந்தார்.


"என்ன செல்வி, வீட்டுல தனியா போர் அடிக்குதா. வனிதா சிஸ்டர் கிட்ட பேசிட்டு இருந்தா டைம் பாஸ் ஆகும்னுதான மறுபடியும் மறுப்படியும் இங்கயே வரீங்க" என பகடி பேசியபடி செல்வியை பரிசோதித்தார்.


தன்னுடைய சிரமத்தையும் தாண்டி செல்வியின் முகத்தில் சிரிப்பு மலர, வேதனையாக இருந்தது தேனுவுக்கு.


அவரது பரிசோதனை முடிவுகளை ஆராய்ந்தவர், "வழக்கமா வர மூச்சுத் திணறல்தான், நத்திங் டு ஓரி" என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டு, "கொஞ்சம் கன்சல்டன்சி ரூமுக்கு வாம்மா, மெடிசின்ஸ் எழுதித் தரேன்" என தேனுவிடம் சொல்லி, அங்கிருந்து அகன்றார்.


அம்மாவுக்கு முன்னால் சொல்ல முடியாத எதையோ சொல்லத்தான் அழைக்கிறார் என அவளுக்கு நன்றாகவே புரிந்தது.


என்ன வரப்போகிறதோ என்கிற பயத்துடனேயே அவரைப் பின்தொடர்ந்து போனாள்.


"சாரி தேனு, உங்கம்மாவ வெச்சிட்டு அங்கேயே சொல்லக்கூடாதுன்னுதான் இங்க வரச்சொன்னேன்” என்றபடி தன்னுடைய இருக்கையில் போய் அமர்ந்த மருத்துவர், அவளையும் அமரும்படி கை காட்டினார்.


முகம் முழுவதும் கலவரம் மண்டிக்கிடக்க அவருக்கு எதிரில் போய் அமர்ந்தாள்.


“செல்வியோட கண்டிஷன் ஒண்ணும் சொல்றபடி இல்ல. இப்படியே ஒரு, ஒன் இயர் ஓட்ட முடியுமா பார்க்கலாம்னு நினைச்சேன். பட், அவங்க கண்டிஷன் சப்போர்ட் பண்ணல. இதுக்கு மேலயும் மருந்து மாத்திரைல தள்ள முடியாது. பைபாஸ் சர்ஜரி செஞ்சாதான் இனிமேல் அவங்களால சர்வைவ் ஆக முடியும்ங்கற ஸ்டேஜுக்கு வந்துட்டாங்க. இனிமேலும் தள்ளிப்போட்றது சரியில்ல. எப்ப வேணா அட்டாக் வரும்ங்கற ரிஸ்கான சிச்சுவேஷன்லதான் இருக்காங்க. மேக்சிமம் ஒரு வாரத்துக்குள்ள சர்ஜரி பண்ணிட்டா நல்லது. ஸோ, சீக்கிரம் டிசைட் பண்ணுங்க. இப்போதைக்கு நோ டிஸ்சார்ஜ்"


அவள் நினைத்ததுதான் சரி என்பது போல, வருத்தம் தோய்த்து மருத்துவர் சொல்லிக்கொண்டே போக, நெஞ்சை அடைத்தது தேனுவுக்கு.


இதற்கு என்ன சொல்ல முடியும்? ‘சரி’ என தலை அசைத்துவிட்டு செல்வியை அனுமதித்திருக்கும் அறைக்குள் வந்து அவரைப் பார்த்தபடி அமர்ந்தாள்.


மருந்தின் புண்ணியத்தில் உறங்கிக் கொண்டிருந்தார் செல்வி.


கையிருப்பு என்று பார்த்தால், ஒரு மூன்று லட்சம் வரைத் தேறும். இருக்கும் நகைகளை விற்றால் கூட, மொத்தமாக ஐந்து லட்சம் தேற்றலாம் அவ்வளவுதான். மேற்கொண்டு பணத்திற்கு யாரிடம் உதவி கோர முடியும்?


வேலையை விட்டுவிட்டால் கூட, அடுத்த வேலை கிடைக்கும் வரை, கையில் இருக்கும் பணத்தை வைத்துகொண்டு சமாளிக்கலாம் என்று நினைத்திருந்தாள். அதுவும் ஒருபக்கம் கழுத்தை நெரிக்கிறது.


மறுநாள், ஒரு பள்ளியில் நேர்முகத் தேர்வுக்கு வேறு செல்ல வேண்டியதாக இருக்க, இவரை இப்படி விட்டுவிட்டு செல்லவும் இயலாதே!


உதவிக்கு யாரையாவது கூப்பிட வேண்டும்.


கனியை அழைக்கலாம் என்றால், நிச்சயமாக அனுப்ப மாட்டார்கள். அப்படியே வந்தாலும், இரண்டு பிள்ளைகளையும் வைத்துகொண்டு அவளாள் ஒன்றும் செய்யவும் இயலாது. இத்தனைக்கும் இவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் செய்தியை உடனே அவளிடம் தெரியபடுதியிருந்தாள்.


அவளால் வருத்தப்பட மட்டுமே முடிந்தது. “அம்மாவ பத்திரமா பார்த்துக்கோக்கா” என்பதற்கு மேல் அவளால் ஆதரவாக எதுவும் சொல்லக்கூட இயலவில்லை.


யோசித்து, யோசித்து தலைவலியே வந்துவிட்டது.


அப்போதென்று பார்த்து அவளுடைய அம்மாவின் கைப்பேசி அதிர, யாரென்று எடுத்துப் பார்த்தாள். அவளுடைய மீனா சித்திதான் அழைத்திருந்தார்.


“சொல்லுங்க, சித்தி” என அவள் அழைப்பை ஏற்க, “எப்படி இருக்க, தேனு? அம்மா எப்படி இருகாங்க?” என நலம் விசாரித்தார் மீனா.


“அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல சித்தி, ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கேன்” என்று தகவல்சொல்லி, பேச்சினூடே “உங்களால, ரெண்டு மூணு நாள் இங்க வந்து அம்மா கூட இருக்க முடியுமா?” என்று கேட்டுப்பார்த்தாள்.


“போன தடவ அக்காவ அட்மிட் பண்ணப்பவே, பாவம் நீ தனியா கஷ்டபட்டுட்டு இருக்கியே, வந்து ஒரு ஒத்தாச செய்ய முடியலியேன்னு வருத்தப்பட்டேன். இப்ப நான் கொஞ்சம் ஃப்ரீதான். உடனே கிளம்பி வரேன்” என்று முடித்துகொண்டார் சித்தி.


அப்படியே அந்த நாளை தள்ள, சொன்னதுபோலவே அடுத்த நாள் காலையிலேயே அங்கே வந்துவிட்டார்.


என்ன தேவை என்றாலும், தன்னை கைப்பேசியில் அழைக்கும்படி மருத்துவமனையில் சொல்லிவிட்டு, செல்விக்கு அவரை துணைக்கு வைத்துவிட்டு, வீட்டிற்கு வந்தவள் அவசரமாகக் கிளம்பி, அந்த நேர்முகத் தேர்வுக்குச் சென்றாள்.


அங்கே பெரிதும் போட்டியென்று ஒன்றுமில்லை. மேலும், அந்தப் பள்ளியை நடத்துபவர் இவளுடைய அம்மாவின் பூர்வீக ஊரை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. பெயருக்கு சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, ஓரிரு நாட்களில் தகவல் தெரிவிப்பதாகச் சொல்லிவிட்டார் அந்தப் பள்ளியின் தாளாளர்.


முகத்திலேயே அவரது திருப்தி வெளிப்பட, நேர்மறையாக அவர் பேசிய விதத்தில் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்பது புரிந்தது. ஆனால் சம்பளம்தான் மிக மிகக் குறைவாக இருந்தது.


பரவாயில்லை, ஒப்புக்கொண்டு விடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாள்.


மனம் சற்று தெளிவடைய, மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.


முதல் வேலையாக, டியூட்டி டாக்டரை பார்த்து, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும் படி சொல்லிவிட்டு செல்வி இருக்கும் அறைக்கு வந்தாள்.


ஓரளவுக்கு தெளிவாக எழுந்து அமர்ந்தபடி தங்கையிடம் பேசிக்கொண்டிருந்தார் செல்வி.


“என்னம்மா, சாரதா டாக்டர் வந்து பார்த்தாங்களா?”


“வந்து பார்த்தாங்கடீ, ஆக்சிஜன் வேண்டாம்னு சொல்லிட்டு போனாங்க”


“ப்ச்… ஆனாலும் பேசும்போது இப்படி மூச்சு வாங்குதே”


“தேவைப்பட்டா மறுபடியும் ஆக்சிஜன் வெக்க சொல்லி சிஸ்டர் கிட்ட சொல்லிட்டு போயிருகாங்க தேனு, கவலப்படாத”


சித்தி சொன்னதற்கு தலை அசைத்தாள்.


“ஆமாம், அக்காவுக்கு திரும்பத் திரும்ப உடம்பு சரியில்லாம போகுதே, இத நிரந்தரமா சரி செய்ய முடியாதா?”


அவர் இப்படித் தொடரவும், என்ன பதில் சொல்வது என தடுமாறியவள், அம்மாவுக்கு சூழ்நிலையை தெரியப்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டாள்.


“ஆப்பரேஷன் பண்ண சொல்லிட்டாங்க சித்தி” என்றாள் செல்வியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே.


“என்ன சொல்ற, தேனு? அதுக்கு எக்கச்சக்கமா செலவாகுமே” என்றார் செல்வி அதிர்ந்தபடி.


“இல்லம்மா, தனியார் பைனான்ஸ் கம்பனில இந்த ஹாஸ்பிடல் மூலமாவே லோன் எடுத்துக்கலாம். ஆப்பரேஷனுக்கு தேவையான பணத்தை நேரடியா அவங்களே கட்டிடுவாங்க. நாம மாசாமாசம் ஈ.எம்.ஐ மூலமா பே பண்ணிக்கலாம்" என விளக்கம் கொடுத்தாள்.


"ஹேய், உனக்கு வேலை வேற இல்லையே! பணம் கிடைக்குமாடீ! என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம் பாரு" எனப் புலம்பினார் செல்வி.


"அக்கா என்ன சொல்றா, தேனு? உனக்கு வேலை போயிடுச்சா? நல்ல வேல, நல்ல சம்பளம்னு நிம்மதியா இருந்தியே!" என அதிர்ந்தார் சித்தி.


"கொஞ்சநாளா அங்க சரிப்பட்டு வரல சித்தி, அதான் வேற வேலைக்கு மாறப்போறேன்" என சித்திக்கும், "இன்னைக்கு இன்டர்வ்யூ போனேன் இல்ல, அந்த ஸ்கூல்ல நிச்சயம் வேலை கிடைச்சிடும்மா. அதை பேஸ் பண்ணி லோன் வாங்கிடலாம் கவலைப்படாத" என்று அம்மாவுக்கும் பதில் கொடுத்தாள்.


எந்தப் பள்ளியில் வேலை கிடைத்திருக்கிறது. அந்தப் பள்ளிக்கூடம் எங்கே இருக்கிறது, எவ்வளவு சம்பளம், அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என ஆயிரம் கேள்வி கேட்டார் சித்தி.


தங்கள் மீதுள்ள அக்கறையில்தானே கேட்கிறார் என பொறுமையாக பதில் சொன்னாள்.


அதற்குள் அவருக்கு கைபேசியில் அழைப்பு வர, அங்கே சரியான சிக்னல் இல்லாததால் பேசிக்கொண்டே வெளியில் சென்றுவிட்டார்.


"இந்த வேலை நிச்சயமா கிடைச்சுடுமா, தேனு? சம்பளம் வேற முன்ன விட இப்ப கம்மியா இருக்கே. இதுக்கு லோன் கொடுப்பாங்களா. ஒரு வேள லோன் கிடைக்கலன்னா என்ன பண்ணுவ" என்று கவலையுடன் கேட்டார் செல்வி.


"வேல கண்டிப்பா கிடைச்சுடும், லோனும் கிடைக்கும் கவலப்படாத. அப்படியும் பணம் புரட்ட முடியலன்னா, சீதா மேடம் கிட்ட கேட்கலாம்னு இருக்கேன். நிச்சயமா குடுப்பாங்க, ஆனா அதை கடைசி ஆப்ஷனா வச்சிருக்கேன்" என்று தேன்மொழி தெளிவாகச் சொன்னதில் சற்று நிம்மதியுற்றார்.


ஆனாலும் கூட திருமணம் செய்ய வழியில்லாமல் இந்தப் பெண்ணை இவ்வளவு துன்பத்திற்கு ஆளாக்குகிறோமே என்கிற குற்ற உணர்ச்சி அவர் நெஞ்சை குத்தியது.


வாய் திறந்து அதை சொல்லாமல் மனதிற்குள்ளேயே புலம்பத் தொடங்கிவிட்டார்.


அன்று இரவு மீனாவே செல்விக்கு துணையாக இருப்பதாக சொல்லிவிட, வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள் தேனு.


அடுத்த நாள் காலை விழித்து தயாராகி மறுபடியும் அவள் மருத்துவமனைக்கு வர, அங்கே அவளுடைய அம்மாவை பார்ப்பதற்காக அவளுடைய தாய் மாமாவும் மாமியும் வந்திருக்க, ஆச்சரியப்பட்டுப் போனாள்.


"வாம்மா தேனு எப்படி இருக்க?" என தேனொழுக விசாரித்தார் அவளுடைய மாமா.


"நல்லா இருக்கேன் மாமா, நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?" என நாகரிகம் கருதி அவள் பதிலுக்கு விசாரிக்க, "எங்களுக்கு என்னம்மா, குத்து கல்லாட்டம் நல்லாதான் இருக்கோம்" என அலுத்துக் கொண்டார் மாமா.


"பாவம், செல்விக்கு ரொம்ப உடம்பு முடியலன்னு மீனா போன் பண்ணி சொல்லுச்சு. அதான் மனசு கேட்காம ஓடி வந்தோம். என்ன இருந்தாலும் சொந்தம் விட்டுப் போயிடுமா" என வேதம் ஓதினார் அவளுடைய மாமி.


இவர்கள் இருவரும் இப்படித் தேன் ஒழுகப் பேசவும் எங்கேயோ இடித்தது தேன்மொழிக்கு.


அவள் கேள்வியுடன் அவர்களைப் பார்த்திருக்க, "நான் இப்ப கிளம்புறேன் செல்வி, தேனு கிட்ட பேசி முடிவு பண்ணி போன் பண்ணு" என்று செல்வியிடம் சொல்லிவிட்டு அருகில் நின்றிருந்த மீனாவிடம் கண் ஜாடை காட்டிவிட்டு, தேனுவிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர் இருவரும்.


அவர்கள் இங்கே வந்ததை எண்ணி ஒரு துளி மகிழ்ச்சி கூட இல்லை தேன்மொழிக்கு.‌ அம்மா எப்படி உணர்ந்தாளோ என்கிற எண்ணத்தில் அவளுடைய பார்வை அவரிடம் சொல்ல, அவரது முகத்தில் ஒரு அசாத்திய தெளிவு வந்திருப்பது தெரிந்தது.


விட்டுப் போயிருந்த உறவு மீண்டும் ஒட்டுவதால் உண்டான மகிழ்ச்சி என்று எண்ணிக் கொண்டாள்.


"என்ன சித்தி, உலகத்துல இல்லாத அதிசயம் எல்லாம் நடக்குது" எனக் கிண்டலாக தேனு அவரிடம் கேட்க, "காலம் எப்பவும் ஒரே மாதிரி இருந்திடுமா?" என்றார் மீனா பொடி வைத்து.


"ஏன், அவங்களுக்கு என்ன ஆச்சாம்?" எனக் கேட்டாள்.


"ஆனாலும் உங்க அப்பாவோட மனச நோகடிச்சு, செல்வாவுக்கு வேற இடத்துல கல்யாணம் முடிச்சாங்க இல்ல. கடைசியில டைவர்ஸ் ஆகிப்போச்சாம்" என்று அவர் பதில் சொல்ல, 'அடப்பாவமே' என்றுதான் தோன்றியது அவளுக்கு.


செல்வவிநாயகத்தை நினைத்து ஒரு பச்சாதாபம் உண்டானது. உண்மையில் மென்மையான மனம் படைத்தவன், நல்லவன், அவளுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமானவனும் கூட.


அதிர்ச்சியில் பேச்சற்று அவள் இருவரையும் பார்த்திருக்க, "ரொம்ப ஷாக் ஆகாத தேனு, இப்பவும் நல்ல ஒரு பேரம் பேச தான் அவங்க இங்க வந்திருக்காங்க" என்றார் மீனா நக்கலாக.


"என்னவாம்?" என்றாள் தெரிந்துகொள்ளும் ஆவலுடன்.


"செல்வாவுக்கு உன்னை ரெண்டாம் தாரமா கட்டித்தரச் சொல்லி கேக்கறாங்க. இதுக்கு மட்டும் நீங்க சம்மதிச்சா, உங்க அம்மாவோட வைத்திய செலவு மொத்தத்தையும் அவங்களே ஏத்துக்கறாங்களாம்" என்றார் எரிச்சல் மேலோங்க.


வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டு பேச்சே வராமல் தேன்மொழி திகைக்க, "நீ ஏன் இப்படி பேசற மீனா? அண்ணன் கேட்டதுல என்ன தப்பிருக்கு?" என்றார் செல்வி தீர்க்கமான குரலில். அதில் மேலும் திகைத்து தான் போனாள் தேனு.


"என்னக்கா நீ இப்படி பேசற? ஏற்கனவே வாக்கு தவறி, திமிரா போய் வேற இடத்துல அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க இல்ல?"


"புரியாம பேசாத மீனா, அன்னைக்கு இருந்த சூழ்நிலை அப்படி. யாராயிருந்தாலும் அப்படித்தான் செஞ்சிருப்பாங்க"


"நீ புரியாம பேசாதக்கா. மனசுல பாசம், அக்கறை இதெல்லாம் இருக்கிறவங்க அந்த மாதிரி செய்ய மாட்டாங்கக்கா,? இப்ப கூட எப்படி பேசறாங்க பார்த்த இல்ல. ஆயிரம் இருந்தாலும், உன் டிரீட்மென்ட்க்கு பணம் கொடுக்க பேரம் பேசறாங்க"


"நீ ரொம்ப பொங்கற மீனா, எதார்த்தமா யோசிச்சு பாரு! இப்ப அண்ணன் கேட்டதுல எந்தத் தப்பும் இருக்கிற மாதிரி எனக்கு தோணல. ஏற்கனவே தேனுவுக்கு செல்வான்னுதான பேசி வெச்சிருந்தோம். இப்ப வரைக்கும் இவ தனியாளாத்தான நிக்கறா? அவனுக்கு கட்டி கொடுக்கறதுல எனக்கு எந்த தடையும் இல்லை. இத என்னோட டிரீட்மென்ட்க்கு அவங்க பணம் கொடுக்கறோம்னு சொன்னதுனால சொல்லல. அவங்க பணமே கொடுக்கலன்னா கூட செல்வாவுக்கு இவளை கட்டி வச்சுட்டா, நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்" என நீளமாக பேசிக் கொண்டே போனார் செல்வி.


"ம்மா தத்துபித்துன்னு இந்த மாதிரி ஒளற்ற வேலையெல்லாம் வெச்சுக்காத சொல்லிட்டேன்! இதுக்குத்தானா நான் இந்த பாடு படறேன். அவங்க கிட்ட இப்படி பணம் வாங்க வேண்டிய எந்த அவசியமும் நமக்கு கிடையாது. அதுவும் வினுவ என்னால கட்டிக்க முடியாது. இந்தப் பேச்சை இதோட விட்டுடு" எனக் கொந்தளித்து விட்டாள் தேனு.


தேனுவிடம் இப்படி ஒரு கோபத்தை பார்த்து வியந்தே போனார் மீனா. அவளுடைய ஆவேசத்தில், வேறு பேசத் தோன்றாமல் அப்போதைக்கு அடங்கிப் போனார் செல்வி.


அப்படி இப்படி இரண்டு நாட்கள் கழிய, அந்தப் பள்ளியில் இருந்து எந்தத் தகவலும் வரவே இல்லை.


ஒரு கட்டத்திற்கு மேல் காத்திருக்க பொறுமை இல்லாமல் அவளே அந்த பள்ளியின் தாளாளரை அழைத்து விசாரிக்க, இன்னும் குறைந்த சம்பளத்திற்கு வேறு ஒருவரை வேலைக்கு வைத்து விட்டதாக சுருக்கமாக முடித்துக் கொண்டார் அவர்.


உண்மையில் மிகவும் அதிர்ச்சியாக தான் இருந்தது தேன்மொழிக்கு. இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அம்மாவின் அறுவை சிகிச்சைக்கு வேறு, நாள் நெருங்கிக் கொண்டே இருக்க, வேருவழி இல்லாமல் சீதாவுக்கு அழைத்து நிலைமையைச் சொல்லி உதவி கேட்டாள்.


அவள் சூழ்நிலையை எண்ணி உண்மையில் மிகவும் வருத்தப்பட்டார் சீதா. தொகை சற்று பெரியது என்பதால் கணவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அவள் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவதாக சொல்லி அழைப்பை துண்டித்தார்.


அந்த நேரம் பார்த்து தேனுவை மருத்துவர் அழைப்பதாக ஒரு செவிலியர் வந்து சொல்ல, அவரது அறை நோக்கிச் சென்றாள்.


"என்ன தேனு, சர்ஜரி பண்ணலாம்னு சொல்லிட்டீங்களாமே! வர சாட்டர்டே எர்லி மார்னிங் ஃபிக்ஸ் பண்ணிடலாமா” என்று கேட்டார் மருத்துவர் சாரதா.


எப்படியும் சீதா பணம் கொடுத்துவிடுவார் என்கிற நம்பிக்கையில், அவள் அதற்கு ஒப்புக்கொண்டுவிட, அதன்பின் அந்த அறுவை சிகிச்சை குறித்து அவளிடம் தெளிவாக விளக்கினார் சாரதா.


பேசி முடித்து அவள் மீண்டும் அறைக்கு வர, அவளது கைப்பேசியை குடைந்துகொண்டிருந்தார் செல்வி. அவரை முறைத்தபடி உர்ரென உட்கார்ந்திருந்தார் மீனா.


அக்கா தங்கை இருவருக்குள்ளும் உண்டான பிணக்கு இன்னும் முற்றுபெறவில்லை என்று எண்ணியபடி அவளது கைப்பேசியை செல்வியிடமிருது வாங்கியவள், திரையைப் பார்க்க, சீதா அழைத்திருந்தது தெரிந்தது.


“என்னம்மா, சீதா மேடம் கால் பண்ணியிருந்தாங்களா?”


“ஆமாம்டீ, போன எடுத்து நீ டாக்டர பாக்க போயிருகன்னு சொன்னேன்! என்னை விசாரிச்சு பேசிட்டு இருந்தாங்க”


இது வழக்கமாக நடப்பதுதான் என்பதால் அதை தீவிரமாக எடுக்கவில்லை தேனு. அதனால், மகளின் எதிர்காலத்தின் மீது இருந்த பயத்தில் செல்வி செய்துவைத்திருந்த இடக்கான செயலை அவள் அறியாமல் வீட்டிற்குக் கிளம்பிப் போனாள்.


அதன் விளைவு, அன்று இரவே அவளை அழைத்து, “இங்க மியூசிக் ஸ்கூல் ஆரம்பிக்கற வேலைல இருக்கறதால, நிறைய பணம் லாக் ஆகிடுச்சாம். இப்போதைக்கு அவ்வளவு பெரிய அமௌன்ட் கைல இல்லன்னு சாரும் என் பையனும் சொல்லிட்டாங்க, தேனு. ரொம்ப சாரி” என சொல்லிவிட்டார் சீதா.


ஆடித்தான் போனாள் தேன்மொழி.


ஆக, அவளுடைய அம்மாவைக் காப்பாற்ற அவளுக்கு இப்பொழுது இருக்கும் ஒரே வழி, அவளுடைய தாய்மாமன் மகனான செல்வவிநாயகத்தை மணப்பது மட்டுமே என்கிற இக்கட்டான சூழல் உருவாகியிருந்தது.


வீட்டில் சூழ்ந்திருக்கும் அசாதாரணமான தனிமை குத்திக் கிழிக்க, உறக்கம் வராமல் தவித்தவளின் நினைவு மொத்தமும் அவளுடைய செல்வாவிடமே போய் தஞ்சம் புகுந்தது.


கனவிலும் காணாத…

வகையினில் உன் தோற்றம்…

எனக்குள்ளே கூச்சல் போட…

இதுவரை கேட்காத…

இசை என உன் பேச்சு…

அளவில்லா ஆட்டம் போட…


இறந்து இறந்து பிறக்கும்…

நிலை இதுதானடா…

மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும்…

வரம் கொடுத்தாயடா…


கள்ள பார்வை…

என்னை கொத்தி தின்ன…

என்ன ஏது என்று…

உள்ளம் எண்ண எண்ண…


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page