Isaithene - 7
- Krishnapriya Narayan
- Apr 30
- 7 min read
7. நீயா நானா?
சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதியில் இருந்தது பாலாவின் மியூசிக் ஸ்டூடியோ.
செல் போன் கூகுள் மேப்பில் லொகேஷன் போட்டுகொண்டு, ஜனாவின் ஆட்டோவில் வந்து அங்கே இறங்கினாள் தேன்மொழி.
“திரும்ப வர எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியலண்ணா. எனக்காக வெயிட் பண்ண வேண்டாம். ஏதாவது சவாரி வந்தா போங்க. நான் முடிச்சிட்டு கால் பண்றேன். பொறுமையா வந்து பிக் அப் பண்ணா போதும்”
“சரிம்மா, நீ பாத்து போயிட்டு வா” என்று சொல்லிவிட்டு ஆட்டோவை ஓரமாக போட்டுவிட்டு இறங்கி நின்றார் ஜனா.
‘ஹனி டியூ மியூசிக் ஸ்டூடியோ’ என ஒளிரும் பெரிய பெயர்ப்பலகையை தாங்கிய தனியான மூன்று மாடிக் கட்டடம் அது.
சுற்றுச்சுவர் ஓரமாக இரண்டு சரக்கொன்றை மரங்களும் இடையில் ஒரு பன்னீர் பூ மரமும் பூத்துக் குலுங்க, அதன் கீழே கிரானைட் திண்ணைகள் போடப்பட்டு பார்பதற்கே ஒரு இனிமையைக் கொடுத்தது.
மனமொன்றி அவற்றை இரசித்தபடி ஸ்டூடியோவின் உள்ளே நுழைந்தாள்.
தரைத் தளம் முழுவதும் அலுவலகம் போலும். இனிமையான லேவண்டர் மணம் எங்கும் பரவியிருக்க, ரிசப்ஷன் பகுதியே அவ்வளவு ஆடம்பரமாக இருந்தது. அந்த இடம் முழுவதுமே சென்ட்ரலைஸ்டு ஏசி செய்யபட்டிருக்கவும், ஆட்டோவில் பயணம் செய்துவந்த களைப்புக்கும் வியர்வைக்கும், உள்ளே நுழைந்த நொடி இதமாக இருந்தது.
எல்லோரும் வேலை முடிந்து கிளம்பியிருப்பார்கள் போலும்! ரிசப்ஷனிஸ்ட் போல ஒரே ஒருவன் மட்டுமே அங்கே தனியாக வேலை செய்துகொண்டிருந்தான். இல்லையில்லை வெட்டியாக அமர்ந்திருந்தான்!
அவனை இதற்கு முன் எங்கோ பார்த்திருப்பது போல் தோன்ற, ‘எக்ஸ்கியூஸ் மீ” என்றபடி அவனை நோக்கிச் சென்றாள்.
அவளை பார்த்து பெரிதாகப் புன்னகைத்தவன், “வாட் அ பிளேசன்ட் சர்ப்ரைஸ், மிஸ்.தேன்மொழி, நீங்க எங்க இங்க?” எனக்கேட்டான் சினேக பாவத்துடன்.
“என்ன உங்களுக்கு எப்படி தெரியும்?” என வியந்தாள்.
“எமோஷனல் டேமேஜ்… நிஜமாவே என்ன உங்களுக்கு அடையாளம் தெரியலியா?” என ஏமாற்றத்துடன் மூக்கால் அழுதபடி, “அன்னைக்கு உங்க மியூசிக் ஸ்கூல் இனாகுரேஷன் பங்க்ஷனுக்கு வந்திருந்தேனே! அங்க டின்னர் ஹால் பார்துட்டது நான்தான்” என்றதும், அவளுக்கும் நினைவு வந்தது. அன்று இவளைப் பார்த்து பார்த்து கவனித்தானே!
“ஸ்ஸ்ஸ்… சாரி! எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சிட்டு இருந்தேன். இப்பதான் நியாபகம் வருது, ரியலி சாரி!”
“பரவால்ல, இப்பவாவது நியாபகம் வந்துதே! ஆனா இன்னும் நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதிலே சொல்லலியே”
“ஆங்… பாலா சார மீட் பண்ணனுமே”
“அப்பாயின்ட்மென்ட் இருக்கா?”
“இல்ல, ஆனா அவர்தான் என்ன வரச்சொன்னார்”
“அப்படியா, இந்த டைம்க்கா? ஆனா சார் எங்கிட்ட இதபத்தி இன்ஃபார்ம் பண்ணவே இல்லையே!” என வியந்தான்.
பதில் சொல்லக் கூடத் தோன்றாமல், ‘ஒரு வேள நான் இங்க வரமாட்டேன்னு நினைச்சுட்டானோ!’ என உள்ளே எழுந்த கேள்வியுடன் சலிப்பாக அவனை ஏறிட்டாள்.
“இல்லல்ல, நோ இஷ்யூஸ்… நான் அவர்கிட்ட ஒரு வார்த்த கேட்டு கன்பர்ம் பண்ணிகறேன்” என இன்டர்காம் மூலம் பாலாவை அழைத்து அவள் வந்திருப்பதை சொல்லி, அவனது பதிலைப் பெற்றுக்கொண்டு இணைப்பைத் துண்டித்தான்.
“தர்ட் பிளோர், டிஸ்கஷன் ஹால்ல இருக்காரு, மிஸ்.தேன்மொழி. உங்கள அங்க வரச்சொன்னாரு”
“தேங்க்ஸ் அ லாட்” என்று சொல்லிவிட்டு நேரே தெரிந்த படிக்கட்டுகளை நோக்கிப் போனாள்.
“அப்படியே லெஃப்ட்ல போங்க தேன்மொழி, லிப்ட் இருக்கு, பை த வே என் பேர் ஜீவா” என்றான் சத்தமாக.
திரும்பி அவனைப் பார்த்து, “தேங்க் யூ மிஸ்டர் ஜீவா, ஐம் ஓகே வித் திஸ்” என புன்னகையுடனேயே சொல்லிவிட்டு பாலா இருக்கும் இடத்திற்கு வந்தாள்.
படி ஏறி வந்ததுமே, வசதியான சொகுசு இருக்கைகள் போடப்பட்டு விஸ்தாரமாக ஒரு காத்திருப்புக் கூடம் இருக்க, அதைத் தாண்டி ஒரு பெரிய கதவு இருந்தது. அருகே சென்று கதவைத் தள்ளிப் பார்க்க, உட்புறமாக தாளிடப்பட்டிருந்தது.
அங்கேயும் எவரும் இல்லாமல், அந்த இடமே காலியாக இருக்க, பயத்தில் இதயம் வேகமாக துடித்தது. நல்ல வேளையாக உள்ளே இருப்பவன் பாலாதான் என்பதால், பயத்தை புறந்தள்ளி, மென்மையாகக் கதவைத் தட்டினாள்.
கதவைத் திறந்து, அவளைக் கூர்மையாகப் பார்த்தபடி, “கம் இன்” என்று திரும்ப உள்ளே சென்றான் பாலா.
அவனே வந்து கதவைத் திறப்பான் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால், அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
தன்னை சமன் செய்து கொண்டு உள்ளே நுழைய, அரைவட்ட வடிவிலான பெரிய குஷன் சோஃபா, அதன் நடுவில் கண்ணாடியாலான வட்டவடிவ தேநீர் மேசை போடப்பட்டு, சுற்றிலும் அலங்கார விளக்குகளுடனான மிகப்பெரியதான கூடம் இருக்க, அங்கே இன்னும் சில அறைகளும் இருப்பது தெரிந்தது.
நேராகப் போய் சோபாவில் அமர்ந்தபடி, "ப்ளீஸ் பி சீட்டட்" என்றான் பாலா. அதே சோபாவில் அவனுக்கு நேர் எதிராகப் போய் அமர்ந்தாள்.
கேள்வியாக அவனைப் பார்த்தபடியே, "ஃபுட் ஆர்டர் பண்ணி இருக்கேன், ஜீவா. வந்ததும் கொஞ்சம் மேல எடுத்துட்டு வந்து குடு" என அருகில் இருந்த இன்டர்காம் மூலமாக அவனை பணித்து விட்டு, "ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணதால திரோட் பெயினா இருக்கு, நீங்க அவ்வளவு தூரத்துல இருந்தீங்கன்னா சத்தமா என்னால பேச முடியாது. இஃப் யூ டோன்ட் மைண்ட், கொஞ்சம் இங்க வந்து உட்கார முடியுமா?" எனத் தனக்கு அருகில் சுட்டி காண்பித்துக் கேட்டான்.

குரலில் மட்டுமல்ல, அவனது முகத்திலும் கூட அப்பட்டமான களைப்பு தெரிந்தது. எனவே பிகு செய்யாமல் எழுந்து வந்து அவனுக்கு அருகில் சிறு இடைவெளி விட்டு அமர்ந்தாள்.
“தேங்க்ஸ்! பை த வே, உங்களுக்கு என்ன பிரச்சன” என நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.
“சீதா மேம் உங்ககிட்ட சொல்லியிருப்பாங்களே!”
“சொன்னாங்க, பட்… என்ன நடந்துதுன்னு நீங்களே நேரடியா சொன்னா இன்னும் பெட்டரா இருக்கும்”
“ஐம் சாரி, ஐ கான்ட்! உண்மைய சொல்லனும்னா எல்.கே.ஜி குழந்த மாதிரி, மிஸ் மிஸ் இவ என்ன அடிச்சிட்டான்னு இத அவங்களுக்கு தெரியபடுத்தி, எந்த ஒரு நியாயத்தையும் தேடிக்கணும்னு நான் நினைக்கவே இல்ல மிஸ்டர்.பாலா, அத நீங்க மொதல்ல புரிஞ்சிக்கணும்”
”வேலைய ரிசைன் பண்ணிட்டு போயிடலாம்னு முடிவு பண்ணி பிரொசீஜரா என் ரெசிக்னேஷன் லெட்டெர உங்க அம்மாவுக்கு மெயில் பண்ணேன்! பட், அவங்கதான் இத சீதா மேம் வரைக்கும் கொண்டுபோயிட்டாங்க! ஜஸ்ட் ஃபார் கர்டசி சேக், அவங்க கிட்ட பேசப்போக, அவங்கதான் விடாப்பிடியா எல்லாத்தையும் என்ன சொல்ல வெச்சாங்க! மத்தபடி உங்கள சேர்ந்தவங்க மேல கம்ப்ளைன்ட் பண்ணி, அதுக்கு உங்ககிட்டயே நியாயம் எதிர்பார்க்கறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு புரிஞ்சுக்கற அளவுக்கு எனக்கு மெச்யூரிட்டி வந்துடுச்சு!”
”இப்ப இங்க வந்திருக்கறது கூட அவங்க சொன்னாங்களேன்னுதான்! மத்தபடி, உங்க கிட்ட இருந்து எனக்கு எந்த ஒரு ஃபேவரும் தேவையில்ல”
தேன்மொழி கடுமையாக சொல்லிக்கொண்டே போக, அவனது முகம் இறுகிக் கருத்தது.
“ஃபைன், மிஸ்.தேன்மொழி. நீங்க இப்ப அவங்ககிட்ட வேல செய்யல, எங்கிட்டதான் வேல செய்யறீங்க, நியாபகம் இருக்கா? உங்க ஒர்க்கிங் அட்மாஸ்ஃபியர்ல உங்களுக்கு என்ன பிரச்சன இருந்திருந்தாலும், மொதல்ல அத நீங்க எங்கிட்டதான் சொல்லியிருக்கணும், இன்க்ளூடிங் நீங்க வேலைய ரிசைன் பண்றதா இருந்தாலும்!
”பட் நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? என்ன சேர்ந்தவங்கள அக்யூஸ் பண்ணி, வேற ஒருத்தங்க கிட்ட, அதுவும் எங்க குடும்பத்துமேல ரொம்ப மரியாத வெச்சிருக்கறவங்க கிட்ட நீங்க சொன்னது ரொம்ப தப்பு! இது அவங்களுக்கும் எங்களுக்கும் இருக்கற ஸ்மூத் ரிலேஷன்ஷிப்ப பாதிக்குமா, பாதிக்காதா?”
எது நடக்கக்கூடாது என அவள் பயந்தாளோ, சொல்லிவைத்தார்போல அதுவே நடக்கவும், மனம் நொந்துபோனாள். இது சம்பந்தமாக எந்த ஒரு விளக்கத்தையும் அவனுக்கு கொடுக்க அவள் தயாராக இல்லை.
“இது இப்படித்தான் முடியும்னு எனக்குத் தெரியும் மிஸ்டர்.பாலா! ஃபால்ட் இஸ் மைன். சீதா மேம் சொன்னாங்கன்னு கூட நான் இங்க வந்திருகவே கூடாது! மோர் ஓவர், நான் ஒண்ணும் உங்ககிட்ட வேல செய்யல, உங்க அம்மாகிட்டதான்! அதுவும் அல்ரெடி நான் என் வேலைய ரிசைன் பண்ணிட்டேன்! என்ன எந்த கேள்வி கேக்கவும் உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது, மைன்ட் இட்” என வெடித்தவள், பட்டென எழுந்து தன் கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு அங்கிருந்து செல்ல எத்தனித்தாள்.
வேகமாகப் பாய்ந்து அவளது கையைப் பிடித்து தடுத்தவன், “முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கும்போது, இப்படி பாதில விட்டுட்டு போறது இன்டீசன்சின்னு உனக்கு தெரியல?”
“இப்ப நீங்க செய்யற காரியம் ரொம்ப டீசன்டானதா, பாலா?” என பற்களைக் கடித்தபடி அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக்கொள்ள அவள் போராடினாள்.
அதேநேரம், கதவைத் திறந்துகொண்டு, கையில் உணவுப் பையுடன் அங்கே நுழைந்தான் ஜீவா.
அவனைப் பார்த்த நொடி, சட்டென பாலா அவளது கையை விட, தடுமாறி சோபாவில் விழுந்தாள் தேன்மொழி. ஆனாலும் வேகமாக சுதாரித்து நிமிர்ந்து உட்கார்ந்து அந்தச் சூழலை அவள் சமாளிக்க, இது எதையும் கண்டும் காணாத பாவத்துடன்,, “ஆர்டர் பண்ண புட் வந்துடுச்சு, சார்” என்றபடி தன் கையில் இருந்த காகிதப் பைகளை தேநீர் மேசை மேல் வைத்தான் ஜீவா!
“இதை எடுத்துட்டு போய், மூணு பிளேட்ல வெச்சு எடுத்துட்டு வா, ஜீவா” என பாலா அவனை பணித்தான். அங்கேயே ஓரமாக இருந்த சிறு அறை நோக்கிப் போன ஜீவா, சில நிமிடங்களில் கையில் டிரேவுடன் திரும்ப வந்தான்.
அவன் அங்கே இருக்கும் ஒரே காரணத்தினால் இருவரும் அமைதி காக்க, இரண்டு தட்டுகளை அங்கிருந்த தேநீர் மேசை மேல் வைத்துவிட்டு, தனக்கானதை எடுத்துக்கொண்டு, உடனே அங்கிருந்து அகன்றான்.
அவள் அசந்துபோயிருந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு, வேகமாகப் போய் கதவை தாளிட்டு வந்தவன், அவள் மேலும் மேலும் பதற்றமடைவதைக் கூடப் பொருட்படுத்தாமல், “முழுசா பேசி முடிக்காம உன்ன இங்க இருந்து போக விடமாட்டேன், தேன்மொழி” என்றான் பிடிவாதமாக.
ஏற்கனவே மனத் தடுமாற்றத்தில் இருந்த தேன்மொழிக்கு ஆத்திரத்துடன் அழுகையும் வந்துத் தொலைக்க, முற்றிலும் உடைந்துபோகாமல் இருக்க போராடியபடி பேச்சற்று அமர்ந்திருந்தாள்.
“நான் சொல்லிட்டே இருக்கேன், இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்?”
“சொல்ல வேண்டியத சொல்லி முடிச்சாச்சுன்னு அர்த்தம்! இனிமேல் சொல்ல எதுவுமே இல்லன்னு அர்த்தம்?”
“ஆனா உங்கிட்ட கேட்டு பதில் தெரிஞ்சுக்க வேண்டிய சில கேள்விகள் என்கிட்டே இருக்கே! அதுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உனக்கும் இருக்கு!”
“இதுக்கு மேல என்ன கேக்கணும் உங்களுக்கு”
“ஃபர்ஸ்ட் கொஸ்டியன், இப்ப, எங்க அகாடமில யாராவது ரிசைன் பண்ணனும்னா, அதுக்கு எதாவது ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கா? இதுக்கு நீ பதில் சொல்றத பொறுத்து என்னோட அடுத்த கேள்வி இருக்கும்!”
‘எங்க அகாடமி’ என அவன் சொன்னதே அவள் மனதுக்குள் சுருக்கென்று தைத்திருக்க, அவன் கேட்ட முதல் கேள்வியே அவளை ஆட்டம் காண வைத்துவிட்டது. பதில் சொல்ல அவளுக்கு அதிக தயக்கமாக இருந்தது.
“கமான் தேன்மொழி, பதில் சொல்லு” என்றான் விடாபிடியாக.
“அது, அது வந்து… பர்மனட் ஸ்டாஃப்ன்னா, டூ மந்த்ஸ் பிரயரா இன்பார்ம் பண்ணும்!”
“தென் ஃபைன், நீ பர்மனட் ஸ்டாஃப்தான, அதனால ரெண்டு மாசம் கழிச்சு ரிலீவ் பண்ணா போதும் இல்ல?”
“ஆனா, மேனேஜ்மென்ட் டிசைட் பண்ணா, உடனே ரிலீவ் பண்ணலாம்!”
“உன் அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸான ஆளு அங்க வேற யாரும் இல்லல்ல! நீ இப்படி விட்டுட்டு போனா, அம்மா ரொம்ப கஷ்டபடுவாங்க, தேன்மொழி! ஒரு டூ மந்த்ஸ் அட்ஜஸ்ட் பண்ணி உன்னால அங்க வேல செய்ய முடியுமா? அதுக்குள்ள நல்ல ஆளா கிடைச்சா அப்பாயின்ட் பண்ணிடுவேன்”
“சாரி பாலா, ரெண்டு மாசம் இல்ல, ரெண்டு நாள் கூட என்னால அந்த அட்மாஸ்ஃபியர்ல வேல செய்ய முடியாது”
“இவ்வளவு நாள் நீ வேல செஞ்ச இடம்தான! ஒரு டூ மந்த்ஸ் பல்ல கடிச்சிட்டு அட்ஜஸ் பண்ண முடியாதா?”
“முடியாது, நான் அங்க வேலைல சேர்ந்ததே, அது சங்கீதம் சம்பந்தப்பட்ட வேலைங்கறதாலதான், பாட்டுப் பாடாம என்னால ஒரு நாள் கூட நிமதியா இருக்க முடியாது! சும்மா ஒரே இடத்துல உக்காந்துட்டு அக்கௌண்ட்ஸ் எழுத எனக்கு சரிபட்டு வராது! அது ஒரு மாதிரி என்ன இரிடேட் பண்ணுது” என்று கொதித்தாள்.
அவளது இந்தப் பேச்சு அவனை எதையெதையோ நினைக்க வைக்க, பாலாவின் மனது வேதனையில் துடித்தது.
“அப்படினா, அங்க வேற யாரையாவது உடனே அப்பாயின்ட் செய்யற வரைக்கும், நீ இங்க வந்து வேல பாரு? அதாவது உனக்கு பிடிச்ச பாட்டு பாடற வேல! அம்மாவுக்கு எதாவது ஹெல்ப் தேவைபட்டா மட்டும் அங்க போனா போதும்”
“இதுக்கு நீங்க குடுத்த ஃபர்ஸ்ட் ஆப்ஷனே பெட்டர்!”
“வாட் டூ யூ மீன் பை தட்”
“நேரடியா சொல்லவா… அங்க வேல செஞ்சா, நான் என்னோட சிச்சுவேஷனுக்கு மட்டும்தான் அட்ஜஸ்ட் பண்ணணும்! ஆனா இங்க வேல செஞ்சா உங்க ப்ரொட்யூசருக்கெல்லாம் இல்ல அட்ஜஸ்ட் செய்யணும்… அதுக்கெல்லாம் நான் செட் ஆகா மாட்டேன் பாலா! சூட்டபிளா வேற ஆள பாருங்க”
“தேனூஊஊஊ” என உயர்ந்த அவனது குரல், அந்த இடம் முழுதும் ஒருமுறை எதிரொலித்து அடங்கியது.
“ஏன் பாலா… உண்மைய சொன்னா வலிக்குதா?”
“அமான்டி, அப்படியே வெச்சுக்கோ! நீ இங்கதான் வேல செஞ்சாகனும்! செய்ய வெப்பேன்! அன்ட், நீ சொன்ன மாதிரி, பிரொட்யூசருக்கு நீ அட்ஜஸ்ட் பண்ணிதான் ஆகணும்! ஏன்னா, அடுத்து நான் மியூசிக் பண்ண போற படத்தோட பிரொட்யூசரே நான்தான்” என கர்ஜித்தான் பாலா.
அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தாள் தேன்மொழி. அவளது அடிபட்ட பார்வை அவனை ஏதோ செய்ய, “சாரி தேன்மொழி! நீ அப்படி பேசினதும் தப்புத்தான! என்ன ஹர்ட் பண்ணும்னு நீ அப்படி பேசி இருந்தா… ஒண்ண மட்டும் புரிஞ்சிக்கோ, இதுக்கெல்லாம் நான் ஹர்ட் ஆக மாட்டேன்! மத்த படி, நான் உன்ன இங்க டிராக் பாட மட்டும்தான் சொன்னேன்! நீ ஏதோ, நான் உன்ன சினிமால ஒரிஜினல் பாட ஆஃபர் குடுத்ததா தப்பா நினைச்சுட்டு பேசிட்டு இருக்க!” எனத் தன்மையாகவே சொன்னான்.
அவனைக் காயப் படுத்திப் பார்க்க அவளுக்குமே விருப்பம் இல்லை. அவனது தணிவான பேச்சில் தானும் சற்று தணிந்தவள், “பரவால்ல பாலா, நான் அங்கேயே கண்டின்யூ பண்றேன்! ஆனா சீக்கிரம் வேற யாரையாவது அப்பாயின்ட் பண்ணுங்க! ஒரே ஒருச் சின்ன ரிக்வஸ்ட், நான் அங்க இருக்கற வரைக்கும்… உங்க பியன்ஸி அங்க வராம பார்த்துக்கோங்க!” என்று சொல்லிவிட்டு அவள் எழுந்து நிற்க, புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்தான்.
பக்கென சிரித்துவைத்து அவளது கோபத்தை மிகை படுத்த விரும்பாமல் தன்னை கட்டுபடுத்திக் கொண்டவன், “உத்தரவு மகாராணி… அப்படியே செய்யலாம்! நீங்க கிளம்பறதுக்கு முன்னால உங்களுக்காக ஆர்டர் பண்ண ஃபுட்ட சாப்டுட்டு கிளம்புங்க!” என்றான் இலகுவாக.
“பரவால்ல மிஸ்டர்.பாலா” என அவள் நழுவப்பார்க்க, “நீங்க சாப்பிடலன்னா, இதெல்லாம் தூக்கி குப்பைலதான் போட வேண்டி வரும்! உங்களுக்கு இதுல உடன்பாடு உண்டா?”
‘ப்பா, எப்படி எப்படிலாம் நம்மள கார்னர் பண்றான் பாரு!’ என மனதில் அவனை தாளித்தாலும், உணவை வீணாக்க அவளுக்கு மனம் வரவில்லை. கூடவே அதிக பசி வேறு! பிகு செய்யாமல் அமர்ந்து, அவளுக்கான தட்டை கையிலெடுக்க, அவனும் தனதை எடுத்துக் கொண்டான்.
ஸ்ரீமிட்டாயிலிருந்து வரவழைக்கப்பட்ட சமோசாவும், பாதாம் பாலும் அதில் இருக்க, அவளது கண்களில் நீர் திரண்டது! அவனறியாவண்ணம் துப்பட்டாவால் முகத்தைத் துடைத்துக்கொண்டு நிராசையுடன் அவனை ஏறிட்டவளின் விழிகளில் ஏமாற்றத்தின் வலி மட்டும் மீதமிருந்தது!
வேகவேகமாக சாப்பிட்டு முடித்து, “தேங்க்ஸ் பாலா, பை” என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பிவிட, தானே எழுந்து வந்து கதவைத் திறந்துவிட்டான்.
கீழே வந்து, ரிசப்ஷனில் இருந்த ஜீவாவிடமும் நன்றி சொல்லி, விடைபெற்று அங்கிருந்து வெளியேறினாள்.
மரத்தடியில் போடப்பட்டிருந்த திண்ணையில் அமர்ந்து ஜனாவை அழைத்து தன் வேலை முடிந்துவிட்டதை தெரியப்படுத்தினாள்.
“ம்மா… சவாரி ஏத்திட்டு இங்க பக்கத்துலதான் வந்துருக்கேன். ஒரு பத்து நிமிஷத்துல வந்துற்றேன்” என ஜனா சொன்னதற்கு, “பரவால்லன்னா, பொறுமையா ஓட்டிட்டு வாங்க, வெயிட் பண்றேன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.
பாலாவைத் தவிர மனம் வேறெதையும் சிந்திக்க மறுத்தது.
அவனை நேரில்பார்க்கும்போதேல்லாம், அவன்மீது பொங்கிப் பிரவாகிக்கும் காதலை மனதிற்குள்ளேயே போட்டு மூழ்கடித்து, போலியான ஒரு முகமூடியை அணிந்துகொண்டு, ‘உன்மீது எனக்கு எந்த ஒரு பிடிப்பும் இல்லை! என்னைப் பொறுத்தவரை நீ ஒரு அந்நியன்தான்!’ என நிரூபிக்கப் போராட வேண்டியதாக இருக்கிறதே என ஆயாசமாக இருந்தது.
அதுவும் இன்று இவ்வளவு தகிப்பாக அவனிடம் பேசும்படி ஆகிவிட்டதை அவளால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. மீண்டும் அவனை தனக்கெதிரில் கொண்டுவந்து நிறுத்தியிருக்க வேண்டாம் என காலத்தை சபித்தாள்.
மனதின் தனிமையை தள்ளிவைக்க, கைபேசியில் ஹெட் போனை பொருத்தி காதில் மாட்டிக்கொண்டாள்.

‘காதலே என் காதலின் தேடலே’ எனப் பாடல் தொடங்கியது. செவியில் நுழைந்து இதயம் வருடிய பாலாவின் குரல், கொந்தளித்துக் கொண்டிருக்கும் அவள் மனதின் வெம்மையைத் சற்றே தணித்தது.
அடுத்தடுத்து பிளேலிஸ்டில் அவள் வரிசையாக போட்டுவைத்திருந்த அவனது பாடல்கள் ஒவ்வொன்றாகத் தொடர, சுற்றுபுரமே மறந்துபோனது.
கண்காணிப்புக் கேமராவில் அவள் அங்கேயே அமர்ந்திருபதைப் பார்த்துவிட்டு கதவைத் திறந்துகொண்டு பால்கனியில் வந்து நின்றான் பாலா.
அங்கிருந்து பார்க்க, அசோகவன சீதை போல சோகமே உருவாக அவள் அமர்ந்திருந்த கோலம் மனதைத் தைத்தது.
இதே போல அவளை அடிக்கடி பார்த்துக்கொண்டே இருக்கும் சூழ்நிலை அமைந்தால், தன் வைராக்கியமெல்லாம் பொடிப்பொடியாகிப் போய்விடுமோ என்கிற அச்சம் மனதில் தலைதூக்க, ‘இந்த காலம் மிகக் கொடியது! மறுபடி இவளைத் தன் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி, ஏன் இப்படி தன்னை வதைக்கிறது?’ என அவள் நினைத்ததையே வேறு விதமாக அவனும் நினைத்தான்.
அவனது குரலில் நான்காவது பாடலை அவள் கேட்டுக் கொண்டிருக்கும்போது, “வெளிய வந்துரும்மா, பக்கத்துல வந்துட்டேன்” என ஜனாவிடமிருந்து அழைப்பு வர, எழுந்து வெளியில் வந்து நின்றாள். உடனே அவனது ஆட்டோவும் வந்துவிட, அதில் ஏறி அமர்ந்து அவள் அங்கிருந்து செல்லும்வரை, அவளையே பார்த்திருந்தான் பாலா, மனம் முழுவதும் தளும்பி வழியும் அவள்மீதான காதலுடன்!
Commentaires