top of page

Isaithene - 6

Updated: Aug 18

6. நெருக்கடி


அடுத்த நாள் தொடங்கி வழக்கம் போல வேலைக்கு சென்றுவரத் தொடங்கினாள் தேன்மொழி. பெரிதாக சங்கடங்கள் ஏதும் இல்லை. நிர்வாகம் இவர்களிடம் மாறி இரண்டு மாதங்கள் முடிந்திருந்தும், பாலா ஒரு முறை கூட அங்கே வரவேயில்லை. அதுவே அவளுக்கு ஒருவித நிம்மதியைக் கொடுத்தது.


ஆனால் என்ன, சீதாவிடம் இருந்ததுபோல தேவாவிடம் ஒரு பற்றுதல் உண்டாகவேயில்லை. முன்பிருந்தது போல இலகுவான உரிமை உணர்வு விட்டுபோய் வெறும் சம்பளத்துக்காக கடமையே என வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.


அதற்குக் காரணம் மைத்ரி! வாரத்தில் மூன்று நாட்களாவது அவள் அங்கே வந்துவிடுவாள். நிர்வாகத்தில் மட்டுமில்லை, மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் சமயங்களில் கூட அவளுடைய தலையீடு அதிகம்  இருந்தது.


‘என்னை விட உங்களுக்கெல்லாம் அதிக ஞானம் இருக்க முடியுமா?!’ என்கிற கர்வம் அவளுக்கு சற்று அதிகமாகவே இருக்க. தங்கள் பரம்பரைப் பெருமை சற்று தூக்கலாகவே வெளிப்பட்டது. 


இவளென்று இல்லை, வகுப்பெடுக்கும் எல்லா ஆசிரியர்களிடமும் ஏதாவது ஒரு குறையை சுட்டிக் காண்பித்துக் கொண்டே இருப்பாள், அதுவும் அவர்களிடம் பயிலும் மாணவர்களின் முன்னிலையிலேயே.


பரதநாட்டிய பிரிவின் துணை முதல்வராக இருக்கும் சூர்யபிரகாஷ், இது குறித்து நேரடியாக தேவாவிடமே தெரிவித்துவிட்டார். 


“அவங்க ரொம்ப டேலண்டட் பர்சன், மிஸ்டர் பிரகாஷ். பரதநாட்டியம் மட்டுமில்ல,  கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, குச்சுபுடி, கதக், வீணை, வயலின்  எல்லாமே முறைப்படி கத்துக்கிட்டு, அதுல எல்லாம் எக்ஸ்பர்ட்டா இருக்கறவங்க. அவங்க இப்படி சின்னச்சின்ன குறையெல்லாம் எடுத்து சொல்றது நம்ம அகாடமியோட நன்மைக்காகத்தான். அத நெக்லக்ட் பண்ணாதீங்க” என்று தேவா அவருக்கு பதில் கொடுத்ததுடன், அதை கண்டும் காணாமலும் இருந்துவிட, அது மைத்ரிக்கும் தெரிந்துபோய், அவளது அட்டகாசம் இன்னும் அதிகமானது.  


எல்லோரிடமும் அது, ஒரு மாதிரியான சலசலப்பை ஏற்படுத்தியிருக்க, முதல் மாத முடிவில் சூர்யபிரகாஷ் மட்டுமில்லாமல் மேலும் இரண்டு ஆசிரியர்களும் வேலையை விட்டே நின்றுவிட்டனர். 


அவர்களால் முடிந்தது… அதுபோல தேனுவால் வேலையை சட்டென உதறிவிட முடியவில்லை அவ்வளவுதான். மற்றபடி அவளுக்கு அங்கே வேலை செய்யும் ஆர்வம் குறைந்துகொண்டே வந்தது.


இசையை மனம் ஒன்றி கற்றுக்கொடுக்க இயலாமல், இப்படி கடனே என வகுப்பெடுப்பது அவளுக்கு அதிக மன உளைச்சலைக் கொடுத்தது.


வழக்கம் போல அவர்களது வழிபாட்டுக் கூடத்தில் அவள் தனியே அமர்ந்து பாடுவதை ஒரு முறை பார்த்துவிட்டு, முறையான அனுமதி இன்றி இசைக்கருவிகளைக் கையாளக் கூடாது, எனவே இனி யாரும் வழிப்பாட்டுக் கூடத்துக்குள் செல்லவே கூடாது என்ற பொதுவான ஆணையை, தேவா மூலமாகவே அறிவிக்கவைத்துவிட்டாள்.


மிகவும் நொறுங்கித்தான் போனாள் தேன்மொழி. உடனே வேறு சில இடங்களில் வேலைக்கும் விண்ணப்பிக்கத் தொடங்கிவிட்டாள். நல்ல சம்பளத்தில் வேலைதான் கிடைத்தபாடில்லை.


அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல அடுத்த பிரச்சினை பெரிதாக முளைத்தது.


ஒரு நாள் காலை, வகுப்பெடுத்துக் கொண்டிருந்த தேனுவை தேடிவந்த சரோஜா, “பிரின்சிபல் மேடம் உங்கள உடனே வரச் சொன்னாங்க” என்று சொல்ல, பாடத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு உடனே அங்கே சென்றாள்.


அவரது கேபினின் கதவைத் தட்டிவிட்டு அவள்  நுழைய, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த மைத்ரியைப் பார்த்து அதிர்ந்தாள். 


அவளை உட்காரக் கூடச் சொல்லாமல், “என்ன தேனு, இங்க டீச்சர்ஸ்க்கு டிரஸ் கோட் எதவும் கிடையாதா?” என எடுத்த எடுப்பில் அவளை கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டாள் மைத்ரி. அன்று அவள் சுடிதாரில் வந்திருப்பதே இந்தப் பேச்சுக்குத் தொடக்கபுள்ளி என்பது புரிந்தது.


“அப்படியெல்லாம் எதுவும் இல்ல மேம்! ஆனா எல்லாரும் சாரி அதவிட்டா சுடிதார் மட்டும் போட்டுட்டு வருவோம்! அத தவிர வேற டிரஸ்ஸ யாரும் ப்ரிஃபர் பண்றதில்ல”.


“என்ன அத்த இதெல்லாம்! இதையெல்லாம் நீங்க நோட்டிஸ் பண்றதில்லையா!”


“முன்னால இருந்தே இப்படி இருக்கவும், இதை நான் சீரியசா எடுதுக்கல, மைத்து”


“முன்னால எப்படி வேணா இருந்திருக்கலாம், அத்த. நம்மள மாதிரி ஒரு பாரம்பரியம் மிக்க ஃபேமிலில இருந்து வந்தவங்க இல்லல்ல, அதனால அவங்களுக்கு இதெல்லாம் ஒரு சீரியஸ் இஷ்யுவா இல்லாம இருந்திருக்கும். ஆனா நாம அப்படி செய்யலாமா, சொல்லுங்க? நாம இங்க சொல்லிக் கொடுக்கறது நம்ம பாரம்பரியம், கலாச்சாரத்தோட சம்பந்தப்பட்ட தெயவாம்சம் பொருந்தின கலைகள! இங்க போய், டீச்சர்ஸே இப்படி வந்தா, ஸ்டூடன்ட்ஸுக்கு நம்ம கலாச்சரத்த எப்படி புரியவைக்க முடியும்?”


“நீ சொல்றதும் சரியாத்தான் படுது!”


இப்படியாக அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, மறைமுகமாக அவள் சீதாவை மட்டந்தட்டுவது புரிந்து உள்ளுக்குள்ளே கொதித்துப் போய்விட்டது தேன்மொழிக்கு. அவர் அபத்தமாக இதுபோலெல்லாம் யோசிக்கவும் மாட்டார், இப்படிப்பட்ட யோசனைகளுக்கு துணைபோகவும் மாட்டார். 


“டிரெஸுக்குன்னு பர்மனன்ட்டா எந்த ஒரு பாரம்பரியமும் கிடையாது, மேம். இடத்துக்கு இடம், காலத்துக்கு காலம்ன்னு நாம வாழற இடத்துக்கும் அந்தந்த பீரியட் பேஷனுக்கும் தகுந்த மாதிரி நம்ம உடைகளின் வடிவமும் மாறிட்டேதான் வந்திருக்கு. கோவில்கள்ல இருக்கற சிலைகளை பார்த்தாலே இது தெரியும்! நல்லா கவனிச்சா புரியும், போன ஒரே நூற்றாண்டுகுள்ள, டிகேட் டு டிகேட் நாம புடவை உடுத்தற மெதட் கூட வேற வேறயா இருந்திருக்கு! நம்ம வீட்டுல இருக்கற பழைய போட்டோஸ் பார்த்தாலே தெரியும்” என அழுத்தமாகச் சொன்னாள்.


“வாட் நான்சன்ஸ், அத்த, இவங்களுக்கு நான் என்ன சொல்ல வரேன்னே புரியலன்னு நினைக்கறேன்” என இவள் சொன்னதற்குக் கூட தேவாவிடமே பதில் சொன்னாள் மைத்ரி.


“விடு மைத்ரி, டீச்சர்ஸ்க்கு டிரஸ் கோட் பிக்ஸ் பண்ணனும்னு சொல்ற, அவ்வளவுதான! பார்த்துக்கலாம். முக்கியமா சொல்ல வந்த விஷயத்த முதல்ல சொல்லு” என்றார் தேவா.


“ஆங்… எஸ் தேன்மொழி! இங்க சங்கீதம் சொல்லிகொடுக்க நிறைய டீச்சர்ஸ் இருக்காங்க! ஆனா அட்மினிஸ்டிரேஷன் சைட்லதான் யாரும் சரியா இல்ல! நீங்களும் கிளாஸ் எடுக்க போயிடறதால, இங்க சரியா கவனிக்க மாட்டேங்கறீங்க. அதனால நீங்க இனிமே கிளாசஸ் எடுக்க வேண்டாம். அட்மின் சைட் பாருங்க போதும்” என்று மைத்ரி சொல்ல, தூக்கிவாரிப் போட்டது தேனுவுக்கு.


ree

“இலல்ல, என்னோட பிரயாரிடி மியூசிக்தான். சீதாமேம்க்கு சப்போர்ட் பண்ணத்தான் நான் அக்கௌண்ட்ஸ் பார்க்க ஆரம்பிச்சதே! அதோட இல்ல, ஒவ்வொரு மாசமும் பர்ஸ்ட் வீக் மட்டும் கொஞ்சம் பிசியா இருக்கும். அப்பறம் இயர் என்ட் ஆடிட்டிங் டைம்ல கொஞ்சம் வேலை இருக்கும். மத்தபடி புல் டைம் பார்க்க பெருசா இங்க வேலை இருக்காது” என விளக்கம் கொடுத்தாள்.


“பார்த்தீங்க இல்ல, அத்த. நான் சொன்னது சரியா போச்சா! அக்கௌண்ட்ஸ்ல ஏகப்பட்ட கன்ப்யூஷன். உங்களை எது கேட்டாலும் தேனுவ கேட்கணும்னு சொல்றீங்க! அவங்கள வரசொல்லனும்னு சொன்னா, அவங்க  கிளாஸ் எடுக்கறதுல பிசிங்கறீங்க. அங்க போய் பார்த்தா, பாட்டு எங்க சொல்லிக் கொடுக்கறாங்க. ஸ்டூடண்ட்ஸ் கூட அரட்டை அடிச்சிட்டு இருகாங்க” என்றாள் மைத்ரி.


 “ஐயோ, இல்ல மேம், நேத்து இவங்க அங்க வந்தப்ப, தியரி கிளாஸ் எடுத்துட்டு இருந்தேன்”


“இந்த விளக்கம் எல்லாம் வேணாம் தேனு! எனக்குமே இங்க தலையும் புரியல, வாலும் புரியல! வேணா, பாலா கிட்ட சொல்லி வேற யாரையும் அப்பாயின்ட் பண்ண சொல்றேன். அது வரைக்கும் மைத்ரி சொல்ற மாதிரி கொஞ்ச நாளைக்கு அட்மின் சைட் மட்டும் பாருங்க.  இங்க கொஞ்சம் செட்டில் ஆனதும், நீங்க எப்பவும் போல கிளாஸ் எடுக்கலாம்” என்று சொல்லிவிட்டார் தேவா.


அதற்கு மேல் தேனுவால் ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லை, அவர் சொல்வதற்கு பணிந்தே தீரவேண்டிய கட்டாயம் உண்டாகிப் போனது. உடை விஷயத்திலும் கூட கட்டுபாடு உண்டானது.


அனைத்தையும் பல்லைக்கடித்தப் பொறுத்துக்கொண்டாள் தேன்மொழி.


***


அவளை உயிர்ப்புடன் வைத்திருந்த இசையும் அவளிடமிருந்து பறிக்கப்பட்டிருக்க, அகாடமியில் அவளது பெரும்பான்மையான நேரம், உருப்படியான வேலை எதுவும் இல்லாமல் வெட்டியாகவே கழிந்தது.


அவர்களது அலுவலகதின் ஓரமாக இவளுக்கென்று ஒரு மேசை ஒதுக்கப்படிருந்தது. நாள் முழுவதும் அதில் உட்கார்ந்தபடி, எதையோ செய்துகொண்டிருப்பது வெகுவாக சலிப்புதட்டியது.  வேவு பார்ப்பதுபோல தினமும் அங்கே வந்து அவளை கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுவிட்டுப் போகும் மைத்ரியின் பார்வை வேறு அவளை ஊசியாகத் தைத்து, கூனிக் குறுக வைத்தது.


நாட்கள் ஓடியதே தவிர, தேவா சொன்னது போல, அந்த வேலைக்கு வேறு யாரையும் நியமிக்கவுமில்லை. பொறுக்க முடியாமல் ஒரு நாள் அதுபற்றி அவரிடம் நேரடியாக அவள் கேட்டுவிட, “நான் பாலாகிட்ட சொல்லிட்டேன். அவனுக்கு இப்ப இதுக்கெல்லாம் டைம் இல்ல, அதான். அவசரப்படாத, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ தேனு!” என்று சொல்லிவிட்டார்.


இதற்கு மேல் இதுபற்றி அவரிடம் கேட்பது வீண் வேலை என்பது புரிந்து, இன்னும் தீவிரமாக வேறு வேலைக்கு முயலவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். அன்று மாலை வீடு திரும்பியதும், வலைதளங்களில் தேடி, ஒரு சில பள்ளிகளில் இசை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தாள். என்ன ஒன்று, இங்கே கிடைக்கும் அளவுக்கு வேறு எங்கேயும் கணிசமான சம்பளம் கிடைக்குமா என்று சொல்ல முடியாது.


இதே குழப்பத்துடன் தெளிவற்ற மனநிலையில்தான் அடுத்த நாள் வேலைக்கு வந்தாள். உள்ளே நுழைந்ததுமே மைத்ரி அழைப்பதாக செய்தி வந்தது.


அங்கே சென்று பார்த்தால், அவள் மட்டுமே சட்டமாக அமர்ந்திருந்தாள், அதுவும் தேவாவின் இருக்கையில். 


கதவைத் தட்டிவிட்டுத்தான் உள்ளே நுழைந்தாள். ஆனாலும் அவள் வந்து நின்றதைக் கூட இலட்சியம் செய்யாமல், கைப்பேசியைக் குடைந்தபடி அவளை சில நிமிடங்கள் வெட்டியாக நிற்க வைத்தாள்.


ஓரளவுக்கு மேல் பொறுமை இல்லாமல், “வரச் சொன்னீங்கன்னு சரோஜா வந்து சொன்னாங்க” என்றாள் தேனு.


“யா… யா… அத்த கிட்ட, அட்மின் மேனேஜர் போஸ்ட்டுக்கு இன்னும் ஏன் யாரையும் அப்பாயின்ட் பண்ணலன்னு கேட்டீங்களாமே”


நிமர்ந்து அவளது முகத்தைக் கூட பார்க்காமல், இப்படி நிற்க வைத்து மைத்ரி அவளைக் கேள்வி கேட்ட  விதத்தில், கொஞ்சநஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த அவளது பொறுமையும் காற்றில் பறக்க, “ஆமாம், கேட்டேன்! அதுக்கு அவங்க எனக்கு பதில் சொல்லிட்டாங்க! இப்ப நீங்க ஏன் அத பத்தி கேள்வி கேக்கறீங்க” என்றாள் நிமிர்ந்து நின்று.


பட்டெனத் தலையைத் தூக்கி அவளைப் பார்த்தவள், “நான் கேக்காம, வேற யார் கேப்பாங்க! உங்க தேவா மேடமோட தம்பி பொண்ணு நானு! தென் பாலாவ கல்யாணம் செஞ்சுட்டு அவங்களுக்கு மருமகளாகப் போறேன்! எங்க அத்தைக்கு அப்பறம் இங்க நான்தான் எல்லாமே! இன்னும் சொல்லபோனா இப்பவே  இந்த ஸ்கூல் என்னோட கண்ட்ரோல்லதான் இருக்கு. அவங்க சும்மா பேருக்கு இங்க வந்து போயிட்டு இருக்காங்க அவ்வளவுதான். ஸோ… நான் கேட்கற கேள்விக்கெல்லாம் நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும்! அதுக்கு இஷ்டம் இல்லன்னா தாராளமா நீங்க வேற வேலை பார்த்துக்கலாம்” என்றாள் திமிராக.


அவளுடைய பேச்சு, ஏற்கனவே வெந்துபோயிருந்த  தேனுவின் மனதில் மேலும் அமிலத்தை ஊற்றியது. அது கொடுத்த வலியில், “தென் ஃபைன்… நான் இப்பவே ரிசைன் பண்ணறேன், மிஸ்.மைத்ரி. உங்கள மாதிரி ஒரு அரகன்ட் பர்சன் கீழ வேலை செய்ய எனக்குமே இஷ்டம் இல்ல” என தேனு பட்டென பதில் கொடுக்கவும் அவளது முகம் விகாரமாக மாறிப்போனது.


“உன் ஃபேமிலி பேக்கிரவுண்ட் பத்தி அத்த சொன்னாங்க! இந்த நெலமைல இருக்கும்போதே இவ்வளவு திமிரா இருக்கியே, நீயெல்லாம் என் இடத்துல இருந்தா எப்படி இருப்ப! என்ன சொல்ல வந்துட்டியா நீ! ‘ரொம்ப நல்ல பொண்ணு… அழகு… அடக்கம்… அமைதி… அருமையான சாரீரம்… தெய்வீகமான குரல்…’ அப்படி இப்படின்னு சொல்லி உன்ன மீட் பண்ணிட்டு வந்ததுல இருந்து அத்த உன்ன பத்தி ஆஹா ஓஹோன்னு பாராட்டிட்டு இருந்தப்ப, ஷ்..ப்பா… எவ்ளோ எரிச்சல் வந்துது தெரியுமா? அதுவும் அன்னைக்கு பங்ஷன்ல என்ன யாருன்னு கூட தெரியாத மாதிரி ஒரு அப்பாவி லுக் கொடுத்த பாரு, அப்பத்தான் உன்ன பத்தி எனக்கு புரிஞ்சுது!


இங்க வந்து பார்த்தாக்க, ஸ்கூல் மொத்தமும் உன் கண்ட்ரோல்ல இல்ல இருக்கு! ஃபீல் ஸோ அனாயிங்… உன்ன நல்லா வெச்சு செய்யனும்னு அப்பதான் முடிவு செஞ்சேன். பார்த்தல்ல, ஜஸ்ட் ரெண்டே மாசத்துல உன்னோட சாயத்த எப்படி வெளுக்க வெச்சேன்னு சொல்லி”  எனத் தன் மனதில் நிரப்பி வைத்திருந்த வன்மம் மொத்தத்தையும் வெளிப்படையாக உமிழ்ந்தாள் மைத்ரி! ஆனாலும் இவற்றையெல்லாம் தாண்டி வேறேதோ காரணம் இருப்பதாகத் தோன்றியது தேனுவுக்கு. அது என்ன என்றுதான்  புரிந்துகொள்ள முடியவில்லை.  


“உங்களுக்கு ஈக்வலா நெனச்சு, என்ன இந்த நிலைமைல கொண்டுவந்து நிறுத்த இவ்வளவு எஃபர்ட் போட்டுருக்கீங்க பாருங்க, அதுக்கு தேங்க்ஸ்! பெட்டெர், இனிமேலாவது இந்த ஸ்கூல நல்லபடியா நடத்தற வழியப்பாருங்க” என்று சொல்லிவிட்டு, அடுத்த நொடியே அங்கிருந்து அகன்றாள் தேனு.


முதல் வேலையாக தன் கைப்பேசியிலேயே ஒரு ராஜினாமா கடிதத்தை டைப் செய்து, அதை தேவாவின் மின் அஞ்சலுக்கு அனுப்பிவிட்டு வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள். 


அவள் வீட்டிற்குள் நுழைய கூட இல்லை, அதற்குள் சீதாவிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. கண்டிப்பாக அழைப்பார் என்று தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் இவள் அதை எதிர்பார்க்கவில்லை.


இங்கே நடந்ததை எல்லாம் அவரிடம் சொல்வது சரி இல்லை என அவள் மனதிற்கு பட்டது. உண்மையை சொல்லும் வரை விடமாட்டார் என்பதும் தெரியும். அவரை எப்படி எதிர்கொள்வது என்கிற சங்கடம் மனதிற்குள் உழன்று கொண்டுதான் இருந்தது. 


அவரிடம் என்ன பேசுவது என்கிற குழப்பத்தில் அவள் அந்த அழைப்பை எடுக்காமல் போக, முழுவதுமாக ஒரு ரிங் போய் கட் ஆகிவிட்டது. தானே அழைக்கலாம் என அவள் கைப்பேசியை அழுத்துவதற்குள்ளாகவே வீடியோ காலில் மறுபடியும் அழைத்துவிட்டார்.


அம்மா வேறு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பாள் என்பதால் பட்டென அறைக்குள் நுழைந்து கதவை உள்ளே தாளிட்டுவிட்டு அந்த அழைப்பை ஏற்றாள்.


"என்ன தேனு இப்படி பண்ணி வச்சிருக்க. அங்க என்னதான் பிரச்சனை உனக்கு" என்று படபடத்தார் சீதா.


"ஐயோ பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல மேம்! இப்ப அம்மாவோட மெடிக்கல் செலவு அதிகமாயிடுச்சில்ல. அதனால இன்னும் அதிக சம்பளத்துல வேற வேலைக்கு போகலாம்னு சொல்லிட்டுதான்" என்று மழுப்பினாள்.


"இதுதான் உன் பிரச்சனைனா என்கிட்ட முதல்ல சொல்லி இருக்கலாம் இல்ல. நான் தேவா கிட்ட சொல்லி, சம்பளத்தை ஏத்தி கொடுக்க சொல்லியிருப்பேனே"


"ஐயோ அதெல்லாம் வேண்டாம், மேம்! எனக்காக ஏற்கனவே நீங்க அவங்ககிட்ட நிறைய ரெகமெண்டேஷன் போயிருக்கீங்க, ஓரளவுக்கு மேல போனா அது நல்லா இருக்காது"


"அது நான் படவேண்டிய கவலை. நான் தேவா கிட்ட பேசறேன், நீ நாளைக்கு வேலைக்கு போ"


"ப்ளீஸ் மேம் புரிஞ்சுக்கோங்க, நீங்க இருந்தப்ப இருந்த நிலைமை இப்ப அங்க இல்ல. என்னால நிச்சயமா அங்க வேலைக்கு போக முடியாது"


"ஸோ, நான் நினைச்ச மாதிரி அங்க எதோ நடந்திருக்கு! அதனாலதான், நான் எங்க தப்பா நெனச்சுக்க போறனோன்னு, அவசர அவசரமா கால் பண்ணி மொட்டையா நீ ரிசைன் பண்ணிட்ட விஷயத்தை மட்டும் சொல்லிட்டு கட் பண்ணிட்டாளா இந்த தேவா? நீயாவது உண்மையா அங்க என்ன நடந்ததுன்னு சொல்லப் போறியா இல்லையா" எனக் கிட்டத்தட்ட அவர் அவளை மிரட்டினார்.


வேறு வழியில்லாமல் மேலோட்டமாக அனைத்தையும் சொல்லி முடித்தவள், "மேம் ப்ளீஸ், இத பத்தியெல்லாம் அவங்க கிட்ட நீங்க எதையும் கேட்காதீங்க! அப்புறம் என்னைதான் கேரக்டர் அசாசினேஷன் செய்வாங்க! அதுக்கு பயந்துட்டுதான் நான் உங்ககிட்ட எதையுமே சொல்லல" எனத் தன் நிலைமையை அவருக்கு புரிய வைக்க முயன்றாள் தேன்மொழி.


"சரி, உனக்கு வேற வேலை கிடைச்சிடுச்சா?"


"ட்ரை பண்ணிட்டு இருக்கேன், மேம். சீக்கிரம் கெடச்சிடும்"


"பேசாம இங்க வந்துட்றியா, எனக்கும் இங்க ஆரம்பகட்ட வேலை எல்லாம் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு"


"இவ்வளவு அக்கறையா கேக்கறீங்க, ஆனாலும் என் சூழ்நிலை, என்னால அங்க வர முடியாது, மேம். அம்மா டிராவல் பண்ண கூட முடியாத நெலமைல இருக்காங்க. அவங்கள தனியா விட்டுட்டு என்னால எப்படி மேம் வர முடியும்?" எனக்கேட்டாள் வேதனையுடன்.


அவருக்கு நன்றாகவே தெரியும், கனிமொழியால் அவளுடைய அம்மாவின் பொறுப்பை ஏற்க முடியாது. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று கூட புரியாத குழப்பத்துடன் அந்த அழைப்பில் இருந்து விலகினார் சீதா.


வேலையை விட்டுவிட்டதைப் பற்றி அவளுடைய அம்மாவிடம் கூட சொல்லவில்லை. தப்பித்தவறி சொல்லிவிட்டால், புலம்பிப் புலம்பியே இவளது துயரத்தை அதிகப்படுத்தி விடுவார். 


உடல் அசதியாக இருப்பதால் நான்கு நாட்கள் விடுப்பு எடுத்திருப்பதாக சொல்லி தற்காலிகமாக பிரச்சனையை தள்ளிப் போட்டாள்.


ஊன் உறக்கம் இன்றி, அடுத்து என்ன என்ற குழப்பத்துடனும் பயத்துடனும் அந்த நாள் கடந்து போனது.


அடுத்த நாள் பொழுது விடிந்ததும் விடியாததுமாக மறுபடியும் சீதா அவளை அழைத்தார்.


அம்மா நல்ல உறக்கத்தில் இருக்கவும் அறைக் கதவை வெளியில் இருந்து தாளிட்டுவிட்டு வரவேற்பறை சோபாவில் அமர்ந்தவாறு அந்த அழைப்பை ஏற்றாள்.


"தேவா கிட்ட பேசினா இதுக்கு ஒரு சொல்யூஷன் கிடைக்காது. அதனால நேரா பாலாவையே கூப்ட்டு பேசிட்டேன். இன்னைக்கு ஈவினிங் ஃபுல்லா அவனோட ரெக்கார்டிங் ஸ்டூடியோலதான் இருப்பானாம். உடனே உன்ன அங்க வந்து  அவன மீட் பண்ண சொல்லிட்டான். சாயங்காலமா கிளம்பி போய்ச் சேரு. நிச்சயமா உனக்கு ஒரு நல்ல சொல்யூஷன் கிடைக்கும். அவனோட போன் நம்பரும் லொகேஷனும் உனக்கு ஷேர் பண்றேன்" என இடைவெளி விடாமல் சொல்லி முடித்தார்.


"ஐயோ அதெல்லாம் வேண்டாம், மேம். என்னால மறுபடியும் அங்க போய் வேலை செய்ய முடியாது" என இவள் அழுத்தமாக மறுக்க, "இதோ பாரு, என்கிட்ட எந்த சால்ஜாப்பும் சொல்லாத. முதல்ல போய் அவனைப் பார்த்து பேசிட்டு அதுக்கு அப்புறம் ஒரு முடிவு எடுத்துக்கலாம்" என்று கட்டளையாகச் சொல்லி அழைப்பை துண்டித்து விட்டார். அடுத்த நிமிடமே அவர் சொன்ன தகவல்களெல்லாம் அவளது கைப்பேசிக்கு வந்து சேர்ந்தது.


இதுவரை நடந்த அனைத்தையும் விட அவனை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும் என்பதே அவ்வளவு துன்பமாக இருந்தது தேன்மொழிக்கு. ஆனாலும் வேறு வழி இல்லை, சீதாவின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்தே ஆகவேண்டும். எப்படி இருந்தாலும் இதற்குப் பிறகு அவர்களிடம் வேலை செய்வது நடக்காத காரியம் என்பதால், கடைசியாக ஒருமுறை அவனை நேரில் சந்தித்து விட்டு மொத்தமாக முடித்துக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டவள், மாலை… நேரத்துடனே அவனை சந்திக்கக் கிளம்பினாள்.


ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதை அந்த ஒரே சந்திப்பில் அவளுக்கு புரிய வைத்து விட்டான் பாலா.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page