Isaithene - 5
- Krishnapriya Narayan
- Apr 17
- 9 min read
5. நினைவுப் பெட்டகம்!
ஸ்ரீமதி சாந்தம்மாள் அகடமி என்ற பெயரில் இயங்கிவந்த இசைப்பள்ளி, ‘தேவபாலன் அகடமி’ என பெயர் மாற்றம் பெற்றிருக்க, உள்ளே சிறு சிறு மாற்றங்கள் செய்து புதுபிக்கப்பட்டு திறப்புவிழாவுக்காக தயாராகிக் கொண்டிருந்தது.
தேவாவுக்கு அறிமுகம் செய்யும் பொருட்டு அங்கே வேலை செய்யும் எல்லோரையும் சீதா அழைத்திருக்க, அவர்களது அலுவலக அறைக்கு வெளியில் இருக்கும் நீண்ட காரிடாரில் வரிசையாக நின்றிருந்தனர்.
ஷிப்ட் முறையில் ஒவ்வொருவரது வேலை நேரமும் வேறு வேறாக இருக்கவே இதுவரை அனைவரையும் ஒருங்கிணைத்து அவருக்கு அறிமுகம் செய்ய இயலவில்லை. இன்றைய தினம் நடக்கவிருக்கும் விழாவுக்காக எல்லோரும் அழைக்கப்பட்டிருக்க, விழா தொடங்குவதற்கு முன்பு இந்த அறிமுகப் படலத்தை வைத்துக்கொண்டார்.
அச்சு அசல் தேவாவின் சாயலில் இருக்கும் இளம்பெண் ஒருத்தி அவருடன் வந்திருந்தாள். அவளை எங்கோ பார்த்ததுபோல் தேனுவுக்குத் தோன்றியது . யார் என்பதுதான் நினைவில் இல்லை. ‘இவள் யாராக இருக்கும்? பாலாவுக்கு தங்கை வேறு இருக்கிறாளா என்ன?’ என வியப்புடன் சீதாவின் அருகில் நின்றிருந்தாள்.
“இவங்க வான்மதி, இவர் சுப்பு, கைலாசம், இவங்க எல்லாரும் நம்ம அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மென்ட் ஸ்டாஃப்ஸ். சரோஜா, ஆஃபிஸ் அசிஸ்டன்ட்” என முதல் வரிசையில் நின்றவர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு, தொடர்ந்து, “இவர்தான் சூர்யபிரகாஷ், பரதநாட்டிய பிரிவோட ஃபாக்குல்டி ஹெட்” என அவரையும் அறிமுகம் செய்துவிட்டு மற்ற இசை, பரதநாட்டிய ஆசிரியர்களையும் அறிமுகப் படுத்திக்கொண்டே வந்தார்.
எல்லோரும் மரியாதை நிமித்தம் கரம் குவித்து புன்னகைக்க, பதிலுக்கு கரம் குவித்து புன்னகைத்தபடி ஒவ்வொருவராக கடந்துவந்தார் தேவா.
“இவங்க யாருன்னு சொல்லவே இல்லையே ஆன்ட்டி?” என தேன்மொழியை சுட்டிக்காண்பித்து அவருடன் வந்திருந்த பெண் கேட்க, சீதா பதில் சொல்வதற்குள் முந்திக்கொண்டு, “இவங்கதான் தேன்மொழி, மியூசிக் டிவிஷன் ஃபாக்குல்டி ஹெட் கம் வி.பின்னு சொல்றாங்க, ஆனா இவங்கதான் இங்க ஆல் இன் ஆல், நான் ஏற்கனவே உன்கிட்ட இவங்கள பத்தி சொல்லியிருக்கேன் மைத்ரி…” எனத் தானே அவளை அந்தப் பெண்ணுக்கு அறிமுகம் செய்தார் தேவா.
‘ஓஓ, இவங்கதானா அது?” என்ற அவளது பார்வை தேனுவை கூர்மையாக அளவெடுக்க, அவளுக்கு ஒரு மாதிரி சங்கடமாக இருந்தது.
அதன் காரணத்தை உணர்ந்தாற்போல், “ஏன் தேனு, இவங்கள யாருன்னு உனக்கு அடையாளம் தெரியலியா?” என வியப்புடன் சீதா கேட்க, ‘இல்லை’ என்பதாகத் தயக்கத்துடன் தலை அசைத்தாள்.
“இவங்கதான், த ஃபேமஸ் பரதநாட்டிய டான்சர் மைத்ரி ஸ்ரீரஞ்சன், தேனு!” என்றார் சீதா, யாரும் அறியாமல் அவளைக் கண்டனமாகப் பார்த்தபடி.
“ஓ மை காட், சாரி மேம், இவங்கள டேன்ஸ் காஸ்ட்யூம்ஸ்ல மட்டுமே பார்த்திருக்கேன். அதான் சட்டுன்னு அடையாளம் தெரியல” என்றாள் சங்கடத்துடன்.
“இதுல என்ன இருக்கு தேனு, முதல் தடவ நேர்ல பார்த்தப்ப எனக்கே, இவள அடையாளம் தெரியல!” என்று பட்டெனச் சொல்லிவிட்டு, அந்தப் பெண் அவரைப் பார்த்த பார்வையில், அவசரப்பட்டுத் தான் வார்த்தையை விட்டுவிட்டதை எண்ணி மௌனமாகிப் போனார் தேவா.
“இவங்க வேற யாரும் இல்ல தேனு, தேவாவோட தம்பிப் பொண்ணுதான்” என இலகுவாகச் சொல்லிவிட்டு, நாசூக்காக அங்கிருந்து அகன்றார் சீதா.
மற்ற இருவரும் அவருடன் சென்றுவிட, தன்னுடன் வேலை செய்பவர்களை நோக்கிப் போனாள் தேனு.
*****
‘தேவபாலன் அகாடமி’ என்கிற பெயர் பொறித்த அலங்கார வளைவுடன் கூடிய இரும்பாலான பெரிய வெளி வாயிற்கதவை தாண்டி வந்தால், இருக்கைகள் போட்டு ஐநூறு பேர் வரை அமரும் அளவுக்கு பரந்துவிரிந்த மைதானமும் அதனைச் சுற்றி மூன்று பக்கமும், இரண்டு தளங்களைக் கொண்ட கட்டடங்களும் இருக்கும்.
கச்சேரிகள் செய்ய ஏதுவாக, அந்த மைதானத்தில், மையமாக ஒரு பெரிய மேடை அமைக்கப்பட்டிருக்கும்.
மூன்று கட்டடங்களையும் இணைத்து நடைக்கூடம் அமைந்திருக்க, இடது பக்க கட்டடத்தின் மையமாக அவர்களது அலுவலகம் அமைந்திருந்தது. மற்ற அனைத்து பகுதிகளிலும் தனித்தனி வகுப்பறைகள் அமைந்திருந்தன.
உள்ளே நுழைந்ததுமே நேராகக் கண்களில் படும்படி, வழிபாட்டுகூடம் கட்டப்பட்டிருந்தது.
அந்த மைதானத்துக்கு நடுவிலும் சரி, கட்டடத்தை சுற்றியும் சரி, ஏகப்பட்ட மரங்கள் வளர்ந்து நிற்க, ஆங்காங்கே வேலி அமைத்து, பூத்துக் குலுங்கும் மலர்ச்செடிகளும் பராமரிக்கப்பட்டு வர, அந்த இடம் எப்பொழுதுமே பார்வைக்கு அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.
அதுவும் இப்பொழுது புதிதாக வண்ணம் பூசப்பட்டு, விழாவுக்காக அந்த வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்க, அந்த இசைப்பள்ளி புது மெருகுடன் எழிலுறக் கண்ணைப் பறித்தது.
நடுநாயகமாக அமைந்திருக்கும் வழிப்பாட்டுக் கூடத்தின் வாயிலில் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு, ரிப்பன் வெட்டி திறந்து வைப்பதற்குத் தயாராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திரைத்துறை பிரபலங்கள் பலரும் அந்த விழாவில் கலந்துகொள்ள வந்தவண்ணமிருக்க, அந்த பகுதியே அமர்களப்பட்டுக் கொண்டிருந்து.
பிரபல ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திடம் விழாவுக்கான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
வேலே கார் பார்க்கிங் முறையில், வந்திருந்த விருந்தினர்களின் வாகனங்களை பொறுப்பாக பார்த்து நிறுத்தி அவர்கள் கிளம்பும்போது கொண்டு வந்து ஒப்படைக்க ஆட்களை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பிறகு, வந்தவர்களை ஒவ்வொருவராக அழைத்து அமர வைத்து உபசரிக்கவும், இந்த இசை பள்ளிக்கு அருகில் அமைந்திருக்கும் திருமண மண்டபத்தில் பஃபே முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துக்கு அவர்களை அழைத்துச் சென்று முறையாக கவனிக்கவுமென ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக ஏகப்பட்ட ஆட்களை நியமத்திருந்தார்கள்.
அவர்களது இசைப்பள்ளியில் வேலை செய்பவர்கள் அனைவரையுமே தேவா முறையாக அழைத்திருக்கவே, எல்லோருமே வந்திருந்தார்கள் ஒரு விருந்தினராக மட்டுமே.
இந்த விழாவுக்கு வந்திருந்த பிரபலங்களைப் பார்த்து வியந்தபடி எல்லோருமே ஒரு பக்கமாக ஒன்றாக அமர்ந்து விட, தேனுவும் அவர்களுடனே இருந்து கொண்டாள்.
சரியாக விழா தொடங்கும் நேரத்திற்குதான் பாலா அங்கே வந்தான். கூடவே நடிகை ஜானவியும்.
நேராக அலுவலக அறையில் இருந்த அவனுடைய அம்மா அப்பாவை நோக்கிப் போனவன், தனபாலன் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு விழா நடக்கும் இடத்திற்கு வந்தான்.
அவனுடன் வந்திருந்த ஜானவியை வரவேற்று பேசியபடி தேவாவும் மைத்ரியும் வர, கூடவே சீதாவும் வந்தார். சில நிமிடங்களில் அவனுடைய தாத்தாவுடன் சேர்ந்து அவனுடைய மொத்த குடும்பமும் வந்துவிட, அவரை நேராக அழைத்துப்போய் ரிப்பன் வெட்ட வைத்து, சம்பிரதாயமாக அந்தப்பள்ளியை திறந்துவைத்தான்.
அனைவரும் கை தட்டி ஆர்பரிக்க, உள்ளே திரையினால் மூடப்பட்டிருந்த இசைப்பள்ளியின் பெயர்பலகையை தனபாலனும் தேவாவுமாக சேர்ந்து திறந்துவைத்தனர்.
அதன் பின் சீதாவையும் அவரது கணவர் ரங்கசாமியையும் முன்னிறுத்தி மலர்ச்செண்டு கொடுத்து பொன்னாடை போர்த்தி, சிறப்பாக அவர்களை கௌரவித்தான்.
தொடர்து, பிரபல பக்கவாத்திய கலைஞர்களுடன் அவனுடைய மாமா ஸ்ரீரஞ்சனின் கர்நாடக இசைக் கச்சேரி களைகட்ட, வந்திருந்த விருந்தினரை கவனிக்கவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது.
பாலாவைத் தவிர மற்ற யாருமே தேனுவின் கண்களுக்குத் தெரியாமல் போக, தேன்மொழி என்கிற ஒருத்தி அங்கே இருக்கிறாள் என்கிற நினைவே இல்லாதவன் போல, அவன் சுழன்று கொண்டிருந்தான்.
கண்களால் அவனைக் காணாமல், அருகில் அவனை உணராமல், எண்ணங்களில் மட்டும் அவனை நிறைத்தபடி வாழ்வது ஒன்றும் அவளுக்குக் கடினமாக இல்லை, ஆனால் இப்படி பத்தோடு பதினொன்றாக ஏதோ ஒரு மூலையில் விலகி அமர்ந்திருப்பதும், அவனது பார்வை வட்டத்துக்குள் இருந்தும்கூட அவன் தன்னை உணராமல் இருப்பதும் அதிகம் வலிக்க, நெருப்பின் மீது அமர்ந்திருப்பதுபோல அவஸ்தையை அவளுக்குக் கொடுத்தது.
இதே போல எவ்வளவு நாட்கள் இங்கே தொடர இயலும் என்கிற பயம் அவளது மனம் முழுவதும் பரவியது.
எப்போதடா இந்த விழா முடியும், இங்கிருந்து கிளம்பலாம் என அவள் தவித்துக் கொண்டிருக்க, அவளை நோக்கி வந்தார் ரங்கசாமி.
அவர்களது இசைப்பள்ளி விலை பேசப்பட்டவுடன், இங்கே வருவதையே அவர் குறைத்துக் கொண்டிருந்தார். இந்த விழாவுக்குக்கூட அவர் தாமதமாகத்தான் வந்திருந்தார்.
அவரைப் பார்த்ததும், "வணக்கம் சார் எப்படி இருக்கீங்க?" என்று புன்னகைத்தாள்.
"நான் ரொம்ப நல்லா இருக்கேன்மா! நீ ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க"
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார்! பங்ஷன் நேரத்தோட முடிஞ்சிடும்னு பார்த்தேன். லேட் ஆயிட்டே போகுது. அம்மா வேற வீட்டுல தனியா இருக்காங்க இல்ல!"
"வாஸ்தவம் தாம்மா… அம்மாவுக்கு மறுபடியும் உடம்புக்கு ஏதோ சரி இல்லன்னு சீதா சொன்னா! இப்ப எப்படி இருக்காங்க?"
"பரவாயில்ல சார், மாத்தர மருந்து புண்ணியத்துல நார்மலா நடமாடிட்டு இருக்காங்க!"
"சரிம்மா, முடியுற வரைக்கும் வெயிட் பண்ணனும்னு பார்த்தா வேலைக்கே ஆகாது! வா, ஒரு வாய் சாப்பிட்டு கிளம்புவியாம்" என அவளை அழைத்தவர் அவளுடன் அமர்ந்திருந்த மற்ற ஆசிரியர்களையும் விசாரித்துவிட்டு கையுடன் அனைவரையும் சாப்பிட அழைத்துச் சென்றார்.
சைவ அசைவ உணவுகள் மற்றும் மதுபான வகைகளுடன் இரவு விருந்து படு ஆடம்பரமாக ஏற்பாடாகியிருந்தது.
அவளைப் பொறுத்தவரை இந்த இசை பள்ளி என்பது கோவிலை போன்றது. அவளால் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பாலாவை நினைத்து அவளது முகம் கன்றியது.
"என்ன சார் இதெல்லாம்"
"ஏம்மா இதெல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்றியா?"

"அப்படி இல்ல சார், ஆனா இந்த அக்கேஷன்ல இது தேவையான்னுதான் தோணுச்சு?
"இதுல என்னம்மா தப்பு இருக்கு? இன்னைக்கு இங்க வந்திருக்கிற கிரவுட் அந்த மாதிரி? இப்படி ஒரு அரேஞ்ச்மெண்ட் பண்ணலன்னாதான் அது தப்பாகும். ஆனா ஒரு விதத்துல பாலா இத நல்ல விதமா ஹேண்டில் பண்ணி இருக்காருன்னுதான் சொல்லணும்"
அவர் சொல்வதும் சரிதான் என்று பட்டது தேன்மொழிக்கு. அவளுடன் வேலை செய்பவர்கள் எல்லோருமே அதீத உற்சாகத்துடன் சாப்பிடத் தொடங்கி இருக்க அவளுக்குத்தான் உணவு தொண்டைக்குழிக்குள்ளேயே இறங்க மறுத்தது.
பெயருக்கு ஏதோ கொஞ்சம் கொறித்து விட்டு நடராஜனிடமும் மற்றவரிடமும் சொல்லிக்கொண்டு அப்படியே வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள்.
அடுத்த நாள் அதிகாலை சீதாவும் நடராஜனும் ஆஸ்த்ரேலியா கிளம்புவதாக இருக்க, அவர்களை வழி அனுப்ப விமானநிலையம் செல்லும் முடிவில் இருக்கவே, காலை சீதாவிடம் சொல்லிகொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.
வீடு வந்து சேரும் பொழுது இரவு பதினொன்றை தொட்டிருந்தது. தன்னிடம் இருக்கும் சாவியை வைத்து கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்து பார்க்க, செல்வி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
அவரை தொந்தரவு செய்யாமல் போய் உடை மாற்றி வந்து, பாய் விரித்துப் படுத்தாள். பாலாவின் நினைவில் உறங்கா இரவாகிப்போக, நேரம் நான்கானதும் எழுந்து, காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, காபி கலந்து குடித்துவிட்டு, குளித்து, ஒரு காட்டன் சுடிதாரை அணிந்து நிதானமாகக் கிளம்பியவள், அம்மாவை எழுப்பிச் சொல்லிவிட்டு, கதவைப் பூட்டிக்கொண்டு விமான நிலையம் நோக்கிப் போனாள்.
***
தன் திறமையை அங்கீகரித்து, தூய்மையான மனதுடன் அன்பு பாராட்டிய சீதாவையும் ரங்கசாமியையும் பிரிவது பெரும் வலியைக் கொடுத்தாலும், வயோதிக காலத்தில் பெற்றோர்கள் பிள்ளையுடன் இருக்க வேண்டிய அவசியம் புரிந்ததால் நிதரிசனத்தை ஒப்புக்கொண்டு ஒருவாறு தன் மனதைத் தயார் படுத்தி வைத்திருந்தாள்.
இருந்தாலும் இந்த ஒரு சந்தர்ப்பத்தை கடப்பது அவ்வளவு கடினமாகத்தான் இருந்தது.
அவர்களை இப்படி நேரில் வந்து வழியனுப்பிவைக்க கொஞ்சம் கூட மனம் இடங்கொடுக்கவில்லை என்றாலும் அவர்கள் மீது இருந்த நன்றி உணர்வு அவளை உந்தித் தள்ளியது.
விமான நிலையத்தில் அவர்கள் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு வந்து சேர, பயணப்பொதிகள் அடங்கிய ட்ராலியுடன் இருவரும் அங்கே நின்றிருந்தனர்.
அவர்களைப் பார்த்த நொடி உள்ளுக்குள் இருந்து ஏதோ ஒரு உணர்வு பொங்க, ஓடி வந்து சீதாவை அணைத்துக் கொண்டாள்.
அந்தத் தருணம் அவளது விழிகள் கலங்கிவிட, சீதா, ரங்கசாமி இருவருமே உணர்ச்சிப் பிழம்பாகிப் போயினர்.
“சரியான சூழ்நிலை அமைஞ்சிருந்தா நாங்க இங்க இருந்து போகவே மாட்டோம். இருந்தாலும் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்தான். இதுக்கெல்லாம் வருத்தப்படக்கூடாது. அடுத்து என்ன அடுத்து என்னன்னு போயிட்டே இருக்கணும்” என்றார் சீதா.
“உண்மைதான் மேம். இருந்தாலும் மனசு நாம சொல்றத கேட்க மாட்டேங்குது” என்றபடி தன் கைப்பைக்குள் கைவிட்டு ஒரு சிறு பெட்டியை எடுத்து அவரிடம் நீட்டினாள்.
“என்ன தேனு இதெல்லாம்” என்றபடி சீதா அதை வாங்கிக்கொள்ள, “உங்களுக்கும் சாருக்கும் என்னால முடிஞ்ச சின்ன கிஃப்ட் மேம்” என்றாள் சிறு புன்னகையுடன்.
ஆர்வமுடன் அவர் அதைப் பிரித்துப் பார்க்க, வெள்ளியால் செய்யப்பட்ட, அவருக்கு மிகவும் பிடித்த காளிங்க நர்த்தன கிருஷ்ண விக்ரகம்தான் அது. அதிக விலை இருக்கும் என்பது பார்க்கும்போது புரிந்தது. நடராஜனுக்கு கற்கள் பதித்த அலங்கார குர்த்தி பட்டன்களை கொடுத்திருந்தாள்.
மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார் சீதா. “உண்மையிலேயே, என் டேபிள் மேல இருந்த காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலையை எடுத்துட்டு வரணும்னு தோணுச்சு. ஆனா அப்படி செஞ்சா அது நல்லா இருக்காதுன்னு சொல்லி, விட்டுட்டு வந்துட்டேன். என் மனச புரிஞ்சா மாதிரி என் கண்ணனை என் கூடவே அனுப்பி வைக்கிற. அதே மாதிரி சாருக்கும் என்ன பிடிக்கும்னு உனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. உன்ன மாதிரி இன்னொரு பொண்ணு எனக்கு கிடைக்க மாட்டா, தேனு” என்று தழுதழுத்தார் சீதா.
“உன் அளவுக்கு உங்க மேடம நான் கூட புரிஞ்சு வெச்சிருக்கனான்னு தெரியல, தேனு. வாழ்க்கையில நீ பெரிய இடத்துக்கு வருவ” என அவளது தலை மேல் கை வைத்து ஆசீர்வதிப்பது போல அழுத்தினார் ரங்கசாமி.
சரியாக அதே நேரம் அங்கே வந்தான் பாலா, அவனுடைய அம்மாவுடன்.
ஏற்கனவே மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்த வேதனை, அவனைப் பார்த்த நொடி அதிகமாகிப் போனது. அதுவரை தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அடக்கி வைத்திருந்த கண்ணீர் உடைப்பெடுத்து அவளது கண்ணங்களில் வழிய, துப்பட்டாவால் சட்டென துடைத்துக்கொண்டாள்.
“ச்சீ பைத்தியம், எதுக்கு இப்ப இவ்வளவு வருத்தப்படற? எப்ப வேணும்னாலும் நீ எனக்கு கால் பண்ணு, வீடியோ கால்லயும் வரேன். எங்க போனாலும் உனக்காக நான் இருப்பேன். உனக்கு எப்ப தோணினாலும் நீ நேரா ஆஸ்திரேலியா வந்து அங்க நான் ஆரம்பிக்கப் போற மியூசிக் ஸ்கூல்ல ஜாயின் பண்ணிக்கலாம். இப்ப உன் சூழ்நிலை சரியில்ல, அம்மாவை விட்டுட்டு வர முடியாதுன்னு நீ சொன்னதுனாலதான் உன்னை இங்க விட்டுட்டு போறேன். இல்லன்னா, இப்பவே என் கூடவே உன்னை கூட்டிட்டு போயிருப்பேன்" என்றபடி அவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டார் சீதா.
அவரது பேச்சில் அவளுக்கு இன்னும் அழுகை வர, அது அடக்க அவன் செய்யும் பிரயத்தனங்களை பார்த்துக் கொண்டேதான் அவளுக்கு அருகில் வந்து நின்றான் பாலா.
"வாப்பா பாலா, இவ்வளவு வேலைக்கு நடுவுலயும் நீங்க ரெண்டு பேரும் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்ற சீதா நெகிழ்ச்சியுடன் தேவாவின் கையை பிடித்துக்கொண்டார்.
சட்டென சுதாரித்து தன் முகத்தை நன்றாகத் துடைத்துக் கொண்டவள், தேவாவை பார்த்து கடமையாக புன்னகைத்துவிட்டு, "சேஃப் ஜெர்னி, மேம். அங்க போய் ரீச் ஆகிட்டு எனக்கு மெசேஜ் பண்ணுங்க" என்று அவள் சொன்ன விதத்திலேயே அவள் அங்கிருந்து கிளம்புகிறாள் என்பது புரிய, தன் கைப்பையில் இருந்து கிஃப்ட் விராப் செய்யப்பட்ட சிறிய பெட்டி ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினார் சீதா.
"இப்ப எனக்கு எதுக்கு மேம் இதெல்லாம்" என்று அவள் தயங்க, "ஆக்சுவலி இது நான் கொடுக்கிற கிஃப்ட் கிடையாது, தேனு. நேத்து ஃபங்ஷன்ல, நம்ம ஸ்டாப்ஸ ஹானர் பண்ண பாலாதான் எல்லாருக்கும் கிஃப்ட் வாங்கியிருந்தார். அதையும் என் கையாலயே எல்லாருக்கும் கொடுக்க வெச்சார். எனக்கே அது அப்பதான் தெரியும். பங்க்ஷன் முடியறதுக்கு முன்னாலயே நீ கிளம்பிடவே, நீ இன்னைக்கு இங்க வரும்போது கொடுக்கலாம்னு சொல்லிட்டு உன்னோடத நானே எடுத்து வெச்சிருந்தேன். இப்ப இவங்கள பார்த்ததும்தான் ஞாபகம் வந்தது" என்று அதை அவளுடைய கைகளில் திணித்தார்.
மறுக்க வழி இல்லாமல் "தேங்க்யூ" என்று அதை வாங்கி தன்னுடைய கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.
"நேத்து ஃபங்ஷன் உண்மையிலேயே ரொம்ப பிரமாதமா இருந்துது. சாப்பாடு அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் வேற லெவல்" என ரங்கசாமி பாலாவிடம் பேசத்தொடங்கிவிட அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல், 'நான் கிளம்பட்டுமா?' என சீதா விடம் ஜாடை செய்தாள் தேன்மொழி.
“இன்னும் ஒரு பத்து நிமிஷம்தான், தேனு! நாங்க கிளம்பிடுவோம். அதுவரைக்கும் என் கூட இரேன்?” என்று சீதா அவளது கையைப் பிடித்துக் கொள்ளவும், மறுக்கத் தோன்றாமல் அப்படியே நின்றாள்.
“முன்னலாம், நமக்கு ஒரு பொண்ணு இல்லையேன்னு அடிகடி தோணும். தேனு எப்ப நம்ம அகாடமில ஜாயின் பண்ணாளோ, அப்பவே அந்தக் குறை போச்சு. அந்த அளவுக்கு என்கிட்டே இவளுக்கு அட்டாச்மென்ட்” என்றார் சீதா தேவாவிடம்.
“உண்மைதான் சிஸ்டர், அதுவும் எங்க பரத் ஆஸ்ட்ரேலியா போனப்ப, ரொம்பவே லோன்லியா பீல் பண்ணி, ஒரு மாதிரி டிப்ரஸ்ட் ஆயிட்டா. அகாடமிய சரியா நடத்த முடியாம, பிரச்சனை ஆயிடுச்சு. அப்பத்தான், ஒரு பொறுப்பான ஆள வேலைக்கு வெக்கலாம்னு முடிவு பண்ணோம். ராஜாமணின்னு என் ப்ரெண்டு, மியூசிக் காலேஜ் ப்ரஃபசர், அவன்தான் இவள அந்த வேலைக்கு ரெகமன்ட் பண்ணான். உடனே அப்பாயின்ட் பண்ணோம்.”
”தேனு அங்க ஜாயின் பண்ண பிறகுதான் நம்ம அகாடமியும் பழைய நிலைமைக்கு வந்துது, இவளும் கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆனா! உண்மைய சொல்லனும்னா, நம்ம அகடமி இன்னைக்கு இந்த அளவுக்கு நல்லபடியா நடக்க தேனுவோட டெடிகேஷன்தான் காரணம்” என ரங்கசாமியும் தன் பங்குக்கு அவளை பாராட்டித் தள்ளினார்.
மற்ற நேரமாக இருந்தால் பெருமையாக உணர்ந்திருப்பாளோ என்னவோ! பாலாவுக்கு எதிரில் இப்படிப் பேசவும் தருமசங்கடமாக இருந்தது தேனுவுக்கு.
“இருக்கற கொஞ்ச நேரமும் என்ன பத்தி பேசணுமா சார்? நம்ம நகுணா பத்தி சொன்னாலாவது கேக்கறவங்களுக்கு பிளசன்ட்டா இருக்கும்” என பேச்சை மாற்றினாள்.
“நகுணா, உங்க பேத்தி இல்ல” என தேவா ஆர்வமாகக் கேட்கப் போக, பேச்சு அவர்களது ஆறு வயது பேத்தியை நோக்கித் திரும்ப, அப்படா என்றிருந்தது தேனுவுக்கு.
அதற்குள் அவர்களை உள்ளே அழைத்துச் சென்று தேவையான உதவிகளை செய்ய ஒருவர் வர, மற்றவரிடம் விடைப்பெற்று கிளம்பினர் சீதா, ரங்கசாமி இருவரும்.
அவர்களுடைய பிரிவைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை தேன்மொழியால். அவர்கள் சென்ற திசையையே பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தாள். சில நிமிடங்களுக்குப் பின் சுயநினைவு வந்துத் திரும்பிப் பார்க்க, கல்லூரி மாணர்வர்கள் சிலர் பாலாவை சூழ்ந்துகொண்டு, செல்பி எடுக்கப் போட்டி போட, அவனுடைய பாதுகாவலர்கள் அவர்களை விலக்கப் போராடிக் கொண்டிருந்தனர்.
தேவாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என அவள் அவரைத் தேட, பாலாவின் ஓட்டுனர் அவரை பத்திரமாக அழைத்துச் செல்வது தெரிந்தது.
அவரிடம் சொல்லிவிட்டு கிளம்புவதெல்லாம் வேலைக்கே ஆகாது என்பது புரிய, நேராக வாகன நிறுத்தத்தை நோக்கிப் போனாள்.
தலைக் கவசத்தை அணிந்துகொண்டு ஸ்கூட்டியில் சாவியைப் போட்டுத் திருப்பி அதை ஸ்டார்ட் செய்து வாகனத்தை கிளப்ப, உடல் துவண்டு, கை நடுங்கியது.
தன்னால் வாகனத்தை ஓட்டவே இயலாதோ என்கிற அளவுக்கு பயம் தோன்ற, அப்படியே அணைத்துவிட்டு, வண்டியில் சொருகி வைத்திருந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் அருந்திவிட்டு, முன்பக்க ஷீல்டின் மீது தலை சாய்த்து சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.
அதில் கொஞ்சம் தெம்பு வர, மீண்டும் வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு, ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தாள்.
மும்முரமாக சமையற்கட்டில் காலை உணவை சமைத்துக் கொண்டிருந்தார் செல்வி. "ஏம்மா, இன்னைக்கு லீவுதான, இதெல்லாம் நான் வந்து பார்த்துக்க மாட்டனா?" என்றபடியே உள்ளே நுழைந்தாள் தேனு.
"தூக்கம் வரலடி, எவ்வளவு நேரம் சும்மாவே படுத்து கிடக்கிறது? எழுந்து குளிச்சிட்டு, இதோ இப்பதான் சமையல் கட்டுக்குள்ளயே நுழைஞ்சேன். வெங்காய சட்னிக்கு வதக்கி வச்சிருக்கேன். தோசை ஊத்தணும் அவ்வளவுதான். நீ போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா, ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம்"
"சரிம்மா, டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்" என படுக்கையறை நோக்கி போனவள், முகம் கழுவி நைட்டியை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தாள்.
சமீபமாக செல்விக்கு தரையில் உட்கார்ந்து எழுவதில் சிரமம் உண்டாகி இருக்க, சாப்பிட வசதியாக சிறியதாக ஒரு மேசையை வாங்கிப் போட்டிருந்தாள். இருவருக்கும் தோசை வார்த்து தயாராக அதன்மீது எடுத்து வைத்திருந்தார் செல்வி.
"ம்மா… பரபரன்னு செஞ்சு முடிச்சிட்டியேன்னு பார்த்தேன். வேலைய காமிச்சிட்ட பார்த்தியா? உன் டயட்டுக்கு இவ்வளவு எண்ணையெல்லாம் சேர்க்கக்கூடாது, சட்டினியா வேற நல்ல காரசாரமா செஞ்சிருக்க"
"எனக்காக செய்யல தேனு, உனக்காகத்தான். பாவம் நீயும் என்னோட சேர்ந்துட்டு உப்பு சப்பு இல்லாம சாப்பிட்றத பார்த்தா, எனக்கே பாவமா இருக்கு"
"அம்மா அந்த கவலை எல்லாம் நீ படாத… எனக்கு ஏதாவது வாய்க்கு வக்கணையா சாப்பிடணும்னு தோணிச்சுன்னா, கண்டிப்பா செஞ்சு சாப்டுப்பேன். ஆனா உன்னோட உடம்புக்கு ஏதாவது வந்துதுன்னா அதை ஹேண்டில் பண்றதுதான் எனக்கு கஷ்டமா இருக்கும்"
மகள் கண்டனமாகச் சொல்லவும், பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டார் செல்வி. அவரைப் பார்க்க அவளுக்கே பாவமாகத்தான் இருந்தது.
இப்படியே பேசியபடி இருவருமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடித்தனர். செல்வி தொலைக்காட்சியை பார்த்தபடி உட்கார்ந்து விட, கைபேசி ஒலிக்கவும், எடுத்துப் பேச படுக்கை அறைக்குள் நுழைந்தாள் தேனு.
தன் கைப்பையிலிருந்து செல்போனை எடுத்து பார்க்க, தேவா அழைத்திருந்தார். ஏற்கனவே அவரிடமிருந்து இரண்டு மிஸ்டு கால்கள் வேறு வந்திருந்தன. அவசரமாக அழைப்பை ஏற்று, "சாரி மேம், ஃபோன ஹேண்ட் பேக்ல வச்சிருந்தேன். அதுதான் ரிங்கானது கேட்கல" என்றாள் சங்கடத்துடன்.
"பரவாயில்லம்மா, எனக்கு ஒரு சின்ன உதவி வேணும்"
"சொல்லுங்க மேம்"
"வண்டி ஓட்டிட்டு இருக்கியா?"
"இல்ல மேம். வீட்டுக்கு வந்துட்டேன். ஏதாவது முக்கியமான விஷயமா?"
"நம்ம அகாடமிலதான் இருக்கேன். போன வருஷத்தோட ஐடி ரிட்டன் ஃபைல் பார்க்கணும்னு சொல்லி பாலா கேக்கறான்! எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா"
"உங்க டேபிளுக்கு பின்னாடி இருக்கிற பீரோல, ஃபர்ஸ்ட் ரோல ரெண்டாவது பைல்… வேற ஏதாவது டீட்டைல்ஸ் வேணுமா? நான் வேணா நேர்ல வந்து எடுத்துக் கொடுக்கட்டுமா"
அந்த அழைப்பு ஸ்பீக்கரில் போடப்பட்டிருக்க எதிரில் அமர்ந்திருந்த பாலாவிடம் கண்களால் ஜாடை செய்தார் தேவா. பதிலுக்கு அவனும் ஜாடை செய்ய, "இல்ல வேண்டாம்மா, ஏதாவது டீட்டைல்ஸ் வேணும்னா நான் போன் பண்றேன், பை, டேக் கேர்" என அழைப்பை துண்டித்துவிட்டார்.
மாத்திரை எடுக்க உள்ளே வந்த செல்வி அவளுடைய கைப்பையில் இருந்த அன்பளிப்பு பெட்டியை பார்த்துவிட்டு, "என்னடி இது, சீதா மேடம் கொடுத்தாங்களா?" என்றபடி அதை எடுத்துப் பிரித்தார்.
ஒரு சிறிய வட்டவடிவ நகைப் பெட்டியில் தங்கக் காசு ஒன்று இருந்தது.
"அடேயப்பா ஒரு பவுனாவது தேறும் போல இருக்கே!" எனத வியந்தபடி அதைக் கையில் எடுத்து இப்படியும் அப்படியுமாகத் திருப்பிப் பார்த்தார்.
"என்ன… ஒரு பவுனா?!" என வியந்தபடி தானும் அதைக் கையில் வாங்கிப் பார்க்க, அதன் இரண்டுபக்கமும் தேவபாலன் அகாடமியின் லோகோ பொரிக்கப்பட்டிருந்தது
"பத்திரமா எடுத்து வெய்டீ… கனியோட பாப்பாக்கு முதல் பிறந்தநாளுக்கு ஏதாவது நகை போட வேண்டி வரும். அப்ப இத போட்டுட்டு செயினோ, பிரேஸ்லெட்டோ வாங்கிக்கலாம்" என்றார் செல்வி.
அம்மா இப்படி சொன்னதில் அதீத எரிச்சல் உண்டானது தேன்மொழிக்கு.
வேறு யாராவது கொடுத்ததாக இருந்திருந்தால் இவளே இதைச் சொல்லி இருப்பாள். பாலா கொடுத்தது என்கிற ஒரே காரணத்தினால் அதை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம்தான் அவளுக்குள் தோன்றியது.
அவர் சொன்னதை காதலியே வாங்காதவள் போல அந்தத் தங்கக்காசை பீரோவின் லாக்கருக்குள் வைத்துப் பூட்டினாள் தேன்மொழி, எப்படி பாலாவின் நினைப்பை தன் நெஞ்சமெனும் பேழைக்குள் பத்திரமாக பூட்டி வைத்திருக்கிறாளோ அதேபோல!
Comments