top of page

IsaiThene - 2

2 - தித்தித்த தோதித் திதி!


தாம்பரம் இரயில் நிலையத்தில் அவர்களிருவரும் வந்து இறங்கும்போது, நள்ளிரவு மணி இரண்டரை. அவர்களுக்கு வாடிக்கையாக இருக்கும் ஆட்டோ ஓட்டுநர் ஜனாவை அழைத்து, சில நிமிடங்களுக்கு முன்னமே தகவல் சொல்லியிருந்தாள்.


இரயிலிலிருந்து இறங்கி, நடக்க முடியாமல் தள்ளாடும் அம்மாவை ஒரு கையிலும், பயணப் பையை மற்றொரு கையிலுமாக பிடித்து தள்ளிக்கொண்டு வெளியில் வரவும் , அவர்களை பார்த்துவிட்டு ஓடி வந்த ஜனா, "என்னம்மா, பங்க்ஷன் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா" என விசாரித்தபடி பையை அவளிடமிருந்து பிடுங்கினான்.


"ஐயோ... பரவல்லண்ணா, ஏற்கனவே லேட் ஹவர்ஸ்ல உங்க தூக்கத்த கெடுத்து இங்க வரவெச்சிட்டோம், இது வேறயா" என அவள் பையை இழுக்க, "அட விடும்மா, எங்க தொழில்ல இதெல்லாம் சகஜம்" என்றவன் பையை பிடுங்கிக்கொண்டு ஆட்டோவை நோக்கி நடந்தபடி, "பங்க்ஷன் நல்ல படியா முடிஞ்சுதா, அத சொல்லு மொதல்ல" என்றான் உரிமையுடன்.


"நல்ல படியா முடிஞ்சுதுண்ணா, என்ன அந்த பங்ஷன இங்கயே வெச்சிருந்தா உங்க எல்லாரையும் அழைச்சிருப்போம். அதுக்கு கனி வீட்டுல ஒத்துக்கல" என குறைபட்டுக் கொண்டாள் தேனு.


அதற்கு என்ன பதில் சொல்வது என புரியாத பாவத்துடன், "அம்மா ஏன் ஒரு மாதிரியா இருக்காங்க?" எனக் கேட்டான்.


"கனிக்கு டெலிவரி ஆனதுல இருந்தே, பிள்ளையை கவனிச்சிக்க போய் அம்மாவுக்கு சரியான தூக்கம் இல்ல. அவளயும் பிள்ளைகளையும் அவங்க வீட்டுக்கு கொண்டு போய் விடும்போது கொண்டுவைக்க, சீர் பலகாரம் செய்ய, துணிமணி நகை எல்லாம் எடுக்கன்னு ஒரு வாரமாவே சரியான வேல. பலகாரத்த கடைல வாங்கிக்கலாம்னா, வேணாம் அவங்க தப்பா பேசுவாங்க! துணி நகைலாம் நானே வாங்கிட்டு வரேன்னா, நான் நேர்ல வந்து பார்த்து வாங்கினாதான் எனக்கு திருப்தியா இருக்கும்னு பிடிவாதம்! சொல்ல சொல்ல கேக்காம எல்லாத்தையும் இழுத்து விட்டுட்டு, ட்ராவலிங், அங்கபோய் பங்ஷன் வேலன்னு மொத்தமா ஆளையே தூக்கிடுச்சுண்ணா! நாளைக்கு காலைலதான் நம்ம சாரதா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்" என்றாள்.


மகள் அடுக்கிய குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் எந்த பதிலும் சொல்ல முடியாத நிலையில் இருந்த செல்வியோ, 'ஊர்ல உலகத்துல, பிரசவிச்சு பச்ச பிள்ளையை கூட்டிட்டு வராங்கன்னா வீட்ட சுத்தம் பண்ணி, ஜிகுஜிகுன்னு டெக்கரேஷன் எல்லாம் செஞ்சு எப்படி வரவேற்கிறாங்க? இந்த செல்போன்லதான் எவ்வளவோ பாக்கறோமே! தங்கச்சில மாதிரி பெண் குழந்தையை பெத்து மொத மொதல்ல வீட்டுக்கு கூட்டிட்டு வறோம், வீடாவா வச்சிருந்தது அந்த மகராசி. வீடு மொத்தம் அடப்பாசாரம். அதுவும் அவங்க ரூமுக்குள்ள குவிஞ்சு கிடந்த அழுக்கு துணியும்… ஒட்டடையும்…‌ கருமம்… கருமம்… வயசாயி போச்சு அவங்ளால செய்ய முடியலன்னா கூட துட்டு குடுத்து ஆள் வெச்சு செய்ய மாட்டாங்க? கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து அந்த வீட்டை கட்டினவங்களுக்கு தானே தெரியும் அதோட அரும! இங்கிருந்து போய் மொத ரெண்டு நாளு வீட்ட சுத்தம் செய்யறதுலயே போயிடுச்சு! என் வயித்துல வந்து பொறந்த பாவத்துக்கு இந்த பொண்ணும் என் கூட கடந்து சீரழியுது' என மனதிற்குள் எக்கச்சக்கமாக ஆதங்கப்பட்டுக் கொண்டார்.


"காலைல எத்தனை மணிக்கும்மா வந்து பிக்கப் பண்ணிக்க?" என ஜனா கேட்டதில் கலைந்தவர், "ஸ்கூல் சவாரி எல்லாம் முடிச்சிட்டு ஒரு பத்து மணிக்கா வாங்கண்ணா?" என்று தேனு பதில் சொல்லவும் கண் மூடி சீட்டில் சாய்ந்து கொண்டார்.


“சரிம்மா” என்று அதற்கு ஒப்புக் கொண்டவன், அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வாயிலில் ஆட்டோவை நிறுத்தினான்.


அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, தன் கைப்பையை திறந்து பணத்தை எடுத்து அவள் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு அவன் வாகனத்தை கிளப்பிச் செல்ல, படபடவென்ற சத்தத்துடன் அங்கிருத்து சென்று மறைந்தது அந்த அட்டோ.


பீர்கங்கரனையில், ஜீ.எஸ்.டி ரோடின் அருகிலேயே இருக்கும் வீதியில் அமைந்திருந்தது, அவர்கள் வாடகைக்கு குடியிருக்கும் ஒற்றை படுக்கையறை கொண்ட பிளாட்டை உள்ளடக்கிய அந்த அடுக்குமாடி குடியிருப்பு.


நல்லவேளையாக அவர்கள் வீடு தரைதளத்திலேயே அமைந்திருக்க, படி ஏறிச் செல்ல வேண்டிய அவதி இல்லாமல் போனது செல்விக்கு. கனி கட்டிக் கொடுத்திருந்த புளி சாதத்தை இரயிலில் வரும்போதே சாப்பிட்டிருக்க, வீட்டின் உள்ளே நுழைந்ததுமே அடக்கி வைத்திருந்த இயற்கை உபாதைகளுக்கு விடை கொடுத்துவிட்டு தள்ளாடியபடியே வந்து படுக்கையில் சரிந்தார் செல்வி. அவரை பார்க்கவே அவ்வளவு பரிதாபமாக இருந்தது தேனுவுக்கு. என்னதான் இவரை இவள் நல்லபடியாக பார்த்துக் கொண்டாலும், கனி மூலமாக வரும் பொறுப்புகளால் எல்லாமே காலாவதியாகிப் போய்விடுகிறது.


மனம் சலித்தபடி போய் தன்னை சுத்தம் செய்துகொண்டு நைட்டிக்கு மாறி வந்து, அம்மா படுத்திருந்த ஒற்றைக் கட்டிலுக்கு அருகில் பாய் விரித்து படுத்தாள் கனி. அசதியில் கண்களை சொருகியது. உறக்கமும் இல்லாத விழிப்பும் இல்லாத ஒரு நிலைக்கு அவள் சென்றிருக்க,


பூவாய் நீ பூத்தாலும்...


தீயாகி தகித்தாலும்...


தென்றலாய் தழுவி முத்தமிட்டாலும்...


புயலாய் சுருட்டி எனை வேரோடு சாய்த்தாலும்...


நீ தந்த நினைவில் மட்டும் உயிர்த்தேனே நானடி...


என் ஜீவனின் பாடலாக இசைத்தேனே உனைத்தானடி...


காதலே! என் காதலின் தேடலே!


பாடல் வரிகள் மனதுக்குள் சுழன்றது. திரையில் பார்த்த அந்தப் பாடலின் கட்சிகள் தெளிவில்லாமல் மனதிற்குள் நிழலாட, அந்த பாடலில் நடித்த நடிகனின் முகம் மறைந்து, அங்கே தோன்றியவனை மனக்கண்ணில் கண்டதும், அவளது உடலில் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச ஜீவனும் மொத்தமாக வடிந்து போனது. ஆனால் அவளது இதழ்களோ, செல்வா! ! செல்வா! ! செல்வா! என அவனது பெயரை மட்டுமே மந்திரம் போல உச்சரித்துக் கொண்டே இருந்தன.


*****


தாம்பரத்தை அடுத்த ஆலப்பாக்கத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீமதி சாந்தம்மாள் அகாடமி எனும் கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியப் பள்ளி.


முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக சாந்தா ரங்கசாமி எனும் கர்நாடக இசை கலைஞரால் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த இசைப்பள்ளி இப்பொழுது ஐந்து ஏக்கர் பரப்பளவில், கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பயிலும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.


ஒரு மணி நேர வகுப்புகள், இரண்டு மணி நேர வகுப்புகள் என மாணவர்களின் பாட நிலைக்கேற்ப, வழக்கமாக காலை எட்டு மணி போல தொடங்கும் வகுப்புகள் இடைவிடாமல் இரவு எட்டு மணி வரை நடக்கும். பள்ளி செல்லும் பிள்ளைகள் எல்லாம் காலையும் மாலையும் நடக்கும் வகுப்புகளுக்கு வந்துவிட்டுப் போவார்கள். மற்றபடி முழு நேரமாக இசையோ நடனமும் பயிலுபவர்களுக்கு எட்டுமணிநேர வகுப்புகளும் இருக்கும்.


கர்நாடக சங்கீதத்திற்கும் பரதநாட்டியத்திற்கும் என தனித்தனி பிரிவுகள் உண்டு. இங்கேதான் கர்நாடக இசைப் பிரிவின் துணை முதல்வராக வேலை செய்கிறாள் தேன்மொழி.


அம்மாவை மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போய் காண்பித்துவிட்டு வரும் வழியிலேயே ஒரு மருந்துக் கடையில் ஆட்டோவை நிறுத்தி அவருக்கான மருந்துகளையும் வாங்கிக் கொண்டாள். அதன்பின் அவரை பத்திரமாக வீட்டில் விட்டுவிட்டு அந்த நேரத்திற்கு அவர் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை தனியாக எடுத்து வைத்துவிட்டு, "ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்து சாப்பிடுமா. அப்புறமா இந்த மாத்திரை எல்லாம் போட்டுட்டு தூங்கி ரெஸ்ட் எடு. நான் சாயங்காலம் சீக்கிரம் வந்துட ட்ரை பண்றேன்" என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டு, வந்த அதே ஆட்டோவில் கிளம்பி இசைப் பள்ளிக்கு வந்திருந்தாள்.


கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேலாகவே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறாள். அதுவும் முந்தைய தினம் நள்ளிரவில் வீடு திரும்பியதோடில்லாமல் காலை சீக்கிரமே எழுந்து அம்மாவுக்கும் இவளுக்குமான உணவை தயார் செய்துவிட்டு உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து போய் வந்ததால் கொஞ்சம் கூட ஓய்வெடுக்க நேரமே கிடைக்கவில்லை. போதும் போதாததற்கு இடமாற்றத்தில் லேசாக ஜலதோஷம் பிடித்து தொண்டை வேறு கரகரப்பாக இருந்தது.


எப்படியும் இலகுவாகப் பாட முடியாது, அப்படியே வருத்திக்கொண்டு பாடினாலும் தொண்டையின் நிலைமை இன்னும் மோசமாக போய்விடும் என்கிற எண்ணத்துடன் அன்றைய பொழுதுக்கு மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய பாடத்தை திட்டமிட்டபடி நேராகத் தன் வகுப்பறைக்குள் நுழைந்தாள்.


முப்பது பேர் அடங்கிய அந்த பேட்ச், முழுக்க முழுக்க பெண்களுக்காக ஆனது. அதுவும் அவர்கள் முழு நேர பயிற்சி மாணவிகள் வேறு.


"ஹாய் கேர்ள்ஸ், இன்னைக்கு பேசிக்ஸ்ல கொஞ்சம் கொஸ்டின் ஆன்சர் செஷன் மாதிரி வச்சுக்கலாம்” என்று சொல்ல, "மேம் நோஓஓஓஓ" எனக் கோரஸ் பாடினார்கள் பெண்கள் எல்லோருமாக.


"நோ… நோ… தியரி கிளாஸஸ் ஆல்சோ வெரி இம்பார்டன்ட்… ஸோ, தியரி பார்ட்ல ஸ்ட்ராங்கா கான்சென்ட்ரேட் பண்ண சொல்லி சாந்தா மேம் ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்காங்க" என்று அப்பட்டமாக அவர்களுடைய முதல்வரின் மேல் பழியைத் தூக்கிப் போட்டவள், கடைசி வரிசையில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்து, "அபர்ணா முதல்ல நீ சொல்லு, “தாளத்தின் மூன்று வகை அங்கங்கள் என்ன?”


“லகு, த்ருதம், அனுத்ருதம்” என பட்டென பதில் வந்தது.


“சூரத்… தமிழ் இசையில் சப்தஸ்வரங்களின் பெயர்களை சொல்லு!”


“மேம், டூ பேட், அப்புக்கு மட்டும் ஷார்ட் ஃபார்ம்ல கேட்டுட்டு எனக்கு மட்டும் பெரிய கேள்வியா கேக்கறீங்க. இருங்க யோசிச்சு சொல்றேன்” என அவள் சொன்ன விதத்தில் வகுப்பில் கொல்லென சிரிப்பலை பரவியது.


அதைப் பார்த்து மூண்ட சிரிப்பை அடக்கியபடி, "இதையே பெரிய கேள்வின்னு சொல்றியா, உன்னை எல்லாம் சங்கராபரணத்துக்கு ஆரோகணம் அவரோகணப் பாடி எக்ஸ்பிளைன் பண்ண சொல்லணும்" என்று கிண்டலாக மொழிந்தாள்.


"நோ நோ மேம், நான் இதுக்கு ஆன்சர் சொல்றேன்" என்று சொல்லிவிட்டு, "ஸ - குரல், ரி - உழை, க - கைகளை, ம - துத்தம், ப - இளி, த - விளரி, நி - தாரம்” என அவசராவசரமாக சொல்லி முடித்தாள்.


“பர்ஃபெக்ட், இவ்வளவு தெளிவா தெரிஞ்சு வச்சுட்டுதான் சொல்ல மூக்கால அழற இல்ல" என மென்மையாக அவளை கடிந்து கொண்டாள் தேனு. அப்பொழுது அந்த வகுப்பறை கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்த சாந்தாவின் அலுவலக சிப்பந்தி, "மேடம், பிரின்ஸ்பல் மேடம் உங்கள உடனே வரச் சொன்னாங்க" என்று தகவல் சொல்லிவிட்டுச் சென்றாள்.


"ஓகே கேர்ள்ஸ், லெசன் செவன் ஃபுல்லா படிச்சு வைங்க, நான் வந்து அதுல இருந்து கேள்வி கேப்பேன்" என்று சொல்லிவிட்டு சாந்தாவின் அலுவலக அறை நோக்கிச் சென்றாள்.


கதவைத் தட்டி முறையாக அனுமதி கேட்டுவிட்டு உள்ளே செல்லவும், மென் புன்னகையுடன் அவரை எதிர்கொண்ட சாந்தா எதிரிலிருந்த இருக்கையை கை காண்பித்து அமரும்படி ஜாடை செய்தார்.


ஆனாலும் கூட அவரது அந்த புன்னகையில் சிறு தயக்கமும் கலந்தே இருக்க, ஏதோ பிரச்சனை என்பது அவளுடைய உள்ளுணர்வுக்கு புரிந்தது.


கடந்து போன ஐந்து ஆண்டுகளாக இவருடன் நெருக்கமாக இருக்கிறாள். எனவே நன்றாக அவரைப் புரிந்து வைத்திருப்பவளாக, எதுவாக இருந்தாலும் அவராகவே சொல்வார் என தானும் பதிலுக்கு புன்னகைத்தபடி, "சாரி மேம், கிளாஸ்க்கு டைம் ஆயிட்டதுனால உங்கள பாக்காம நேரா போயிட்டேன்" என வருத்தம் தெரிவித்தாள்.


"இட்ஸ் ஓகே மா, இதெல்லாம் நீ சொல்லனுமா" என்ன வாஞ்சையுடன் சொன்னவர், "தொட்டில் போடற பங்ஷன்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?" என அக்கறையாய் விசாரித்தார்.


அவர் நேரடியாக விஷயத்துக்கு வராமல் போகவும், "நல்லபடியா முடிஞ்சது மேம், சார் இன்னைக்கு வரலையா? நீங்க ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க?" என்று சுற்றி வளைத்து கேள்வி கேட்டாள்.


"ஒரு முக்கியமான விஷயம்… கண்டிப்பா உனக்கு ஷாக்கிங்கா கூட இருக்கலாம்" என்ற பீடிகையுடன் அவர் தொடங்கியதுமே அவளுடைய முகம் இருண்டு போனது.


அவளது முகத்தைப் பார்க்கத் தயங்கியவராக, "நம்ம அகாடமிய வாங்க சரியான பார்ட்டிய தேடிட்டு இருந்தோம் இல்லையா, ரொம்ப பர்ஃபெக்ட்டா ஒருத்தங்க கிடைச்சிருக்காங்க! நாளைக்கு நம்ம அகாடமி சுத்தி பார்க்க வரேன்னு சொல்லி இருக்காங்க. ஒருவேளை அவங்களுக்கு புடிச்சு போச்சுன்னா நம்ம சொல்ற ரேட்டுக்கு பைனலைஸ் பண்ண ரெடியா இருக்காங்க" என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் தன் மேசை மேலே இருந்த, சிறிய காளிங்க நர்த்தன கண்ணன் சிலையைப் பார்த்தபடி.


ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தன்னுடைய மகனுடனேயே போய் குடியேறி விடும் முடிவுடன் இந்த இசைப்பள்ளியை பொருத்தமான ஒரு நபருக்கு விற்றுவிட முடிவு செய்திருந்தனர் சாந்தா ரங்கசாமி தம்பதியர்.


சரியான விலையை கொடுத்து இந்த இசைப் பள்ளியை வாங்கி நல்லபடியாக நிர்வகிக்கும் திறமையுள்ள நபரை இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இவர்களுடைய மனதிற்கு திருப்தியாக ஒருவர் வாய்த்திருக்கும் பட்சத்தில் இவளால் என்ன சொல்ல முடியும்?


"தேங்க் காட், இனிமே நீங்க உங்க பிள்ள மருமகள் பேரன் பேத்திகளோட நிம்மதியா செட்டில் ஆகலாம். கங்கிராஜுலேஷன்ஸ் மேம்" என்றாள் மனதிலிருந்து.


இருந்தாலும் அவளுடைய சங்கடம் புரிந்தவராக, "ஆனா, மேனேஜ்மென்ட் யார் கைக்கு மாறினாலும் உன்னோட இந்த பொசிஷன் இப்படியே தான் இருக்கும். இன்னும் மேல மேல வளரவும் உனக்கு ஸ்கோப் கிடைக்கும். அதுக்கு நான் கேரண்டி. ஸோ, அத நெனச்சு நீ கவலையே படாத" என்றார் அவளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக.


அதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்பதால் அவரிடம் சொல்லிக் கொண்டு தன் வகுப்பறைக்கு திரும்பினாள் தேன்மொழி. மனம் முழுவதும் பாரம் ஏறிப் போயிருக்க, என்ன முயன்றும் அன்றைய வேலைகளை முழு ஈடுபாட்டுடன் அவளால் தொடர முடியாமல் போனது.


******


அடுத்த நாள் ஒரு செவ்வாய்கிழமை என்பதால் முழு நேர வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. கூடவே இந்த இசைப்பள்ளி வாங்கத் தயாராக இருப்பவர்கள் இங்கே வந்து சுற்றி பார்க்க இருப்பதால், மற்ற பகுதி நேர வகுப்புகளையும் தள்ளி வைத்து விட, தேன்மொழிக்கு முக்கிய வேலை எதுவும் இல்லாமல் போனது.


ஒருவேளை அவர்கள் வந்தால், சாந்தா இவளை விட்டு சுற்றிக் காண்பிக்க சொல்லுவாரோ என்னவோ! ஆனாலும் எந்த நேரத்திற்கு அவர்கள் வருவார்கள் என்று எந்த தகவலும் இவளிடம் சொல்லப்படவில்லை. வெட்டியாக உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் இசைப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் சிறிய கோவில் போன்ற அமைப்புடனான இசை அரங்கத்திற்குள் வந்தவள், ஓரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்த தம்புராவை எடுத்து வந்து, அங்கு நடு நாயகமாக அமைக்கப்பட்டிருந்த, வெங்கலத்தினால் ஆன நடராஜர் சிலைக்கு அருகில் அமர்ந்து மீட்டியபடி, தன் மனதில் வெண்மையை தணிக்கும் பொருட்டு,பாரதியின், ஏக்கம் ததும்பும் இனிமையான பாடல் ஒன்றை மெய்யுருகிப் பாடத் தொடங்கினாள்.


சொல்ல வல்லாயோ?-கிளியே!


சொல்லநீ வல்லாயோ?-வல்ல வேல் முருகன் தனை யிங்கு


வந்து கலந்து மகிழ்ந்து குலா வென்று (சொல்ல)தில்லை யம்பலத்தே-நடனம்


செய்யும் அமரர்பிரான்-அவன்


செல்வத் திருமகனை- இங்கு வந்து


சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)அல்லிக் குளத்தருகே-ஒரு நாள்


அந்திப் பொழுதினிலே-அங்கொர்


முல்லைச் செடியதன்பாற்-செய்த வினை


முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல)பாலை வனத்திடையே-தனைக் கைப்


பற்றி நடக்கையிலே-தன் கை


வேலின் மிசையாணை-வைத்துச் சொன்ன


விந்தை மொழிகளைச் சிந்தைசெய் வாயென்று (சொல்ல)


அவள் பாடி முடித்த நொடி யாரோ தொண்டையை செருமும் ஒலி கேட்க, பட்டென திரும்பினாள். அங்கிருந்த தூணில் ஒய்யாரமாக சாய்ந்தபடி சிலை போல நின்றவனைப் பார்த்ததும் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.


'தான் காணும் காட்சி உண்மைதானா அல்லது ஏதும் மாய பிம்பமா?


உண்மையென்றால்… இவன்… இவன்… இந்த நேரத்தில் இவன் எப்படி இங்கே வந்தான்?


இது இவன்தானா? அல்லது இவனைப் போன்ற தோற்றத்தில் வேறு யாருமா?' என்கிற கேள்விகள் அணிவகுக்க, ஒரு கையால் தன் கண்களை கசக்கி, அவனைப் உற்றுப் பார்த்தாள். பதற்றத்தில் அவளது மற்றொரு கையின் பிடிமானம் தளர்ந்து, பற்றியிருந்த தம்புரா ஒரு பக்கமாக சரிய, ஓடிவந்து அதை தாங்கிப் பிடித்தவன், "தேவி, தங்கள் சிந்தனை எங்கோ உள்ளது" என மந்தகசப் புன்னகையுடன் சொல்ல, "ஆக, சந்தேகத்திற்கு இடமே இல்லை. இது அவனேதான்' என அவனை அழுத்தமான கண்டனப் பார்வை பார்த்து வைத்தாள்.


அதை கண்டுகொள்ளாத பாவத்தில், அந்தத் தம்புராவை அதற்குரிய இடத்தில கொண்டுபோய் அவன் வைத்துவிட்டு வர, அந்த வாத்தியத்தை அவன் கையாண்ட விதத்திலேயே அவனுக்கு இசைமேல் இருக்கும் அபரிமிதமான காதலை உணர்ந்தாள்.


"என்ன, மூச்சு பேச்சே இல்லாம என்ன இப்படி பார்த்துட்டு இருக்கீங்க? நான் யார்னு இன்னும் கூட அடையாளம் தெரியலையா?" என அவன் கேட்ட விதத்திலேயே சுதாரித்தவள், "சென்சேஷன் ஆஃப் த சவுத் , ஒன் அமங் த பெஸ்ட் மியூசிக் டைரக்டர்ஸ் ஆஃப் இண்டியா , தி கிரேட் மிஸ்டர் வசந்தபாலன யருக்காவது தெரியாம இருக்குமா?" என்றாள் அமர்த்தலாக.


அதில் புருவங்கள் மேலே உயர, அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கியபடி, "இஸ் இட்" என வியந்து, "ஆனா இவ்வளவு தெளிவா இருக்கற உங்களுக்கு 'தத்தைத்தூ தோதாது'ன்னு புரியலியே" என்று சொன்னவனை கேள்வியாகப் பார்த்தாள்.


"இல்ல, இந்த ஃபாஸ்டஸ்ட் கம்யூனிகேஷன்ஸ் நிறைஞ்ச டிகேட்ல இருந்துட்டு பாரதியார் பேச்ச கேட்டுட்டு, அந்த சோ கால்ட் செல்வத்திருமகனுக்கு கிளிய போய் தூது அனுப்பறீங்களே, அதான் காமெடியா இருக்கு!


அதான் எனக்கு, காதலுக்கு தூது விடறது தப்புனு சொன்ன காளமேகப் புலவர் நியாபகம் வந்துது. இந்தத் துயரத்துக்கு ஒரே சொல்யூஷனா அவர் என்ன சொல்லியிருக்கார்தெரியுமா?" என்று கேட்டு அவளை ஆழ்ந்து பார்த்தவன், அவனது அத்துமீறலான பேச்சில் உண்டான கோபத்தில்தான் என்றாலும், முகம் சிவந்திருந்தவளை ரசித்தபடி, "தித்தித்த தோதித் திதி... அதாவது காதலனோட சுவீட்டான பேர மந்திரம் மாதிரி ஓதிட்டே இருக்கணுமாம்!" என்று முடித்தான்.


கோபத்தில் நெஞ்சுக் கூடு படபடக்க, புசுபுசுவென பொங்கிய அவளது பெருமூச்சில் அந்த சூழ்நிலையே உஷ்ணமாகிப் போனது.0 comments

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
© KPN NOVELS COPY PROTECT
bottom of page